Thursday, June 27, 2024

அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும்


 

அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும்

" சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும் " ( எனது முகநூல் இடுகை ,'பாடல் பெற்ற பறவை! ' 30 அக்டோபர் 2020) - என்று எழுதியிருந்தேன்.

இக்கருத்து வீரசோழியத்தாலும் வலிமையுறுகிறது.

தொல்காப்பியத்திற்குப்பின் தம் காலத்துப் பன்மொழி வரவையும் உலக வழக்கின் இயல்புகளையும் சங்கத இலக்கண மேலாதிக்கத்தையும் உளங்கொண்டு புத்த மித்திரர் வீரசோழியமியற்றினார். அவருடைய மாணாக்கராகிய பெருந்தேவனார் அந்நூலுக்கு இயற்றிய விரிவுரை நூலோடு இயைந்தது ; பிந்தைய இலக்கணப் போக்குகளில் செல்வாக்குச் செலுத்தியது.

இன்று கிடைக்கும் தமிழ் இலக்கண நூல்களுள் - எழுத்து , சொல், பொருள், யாப்பு, அணி எனும் -  ஐந்திலக்கணங் கூறும் முன்னோடி நூல் வீரசோழியம் .

வீரசோழியப் பொருட்படலத்தில் அகப்பொருளுக்கு உரை என 27 கூறுகள் சுட்டப்பட்டுள்ளன (காரிகை 90 ,  91). இவை தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியல் கூறும் திணை, கைகோள் முதலிய செய்யுள் உறுப்புகளையும் , நம்பியகப்பொருள் கூறும் அகப்பாட்டுறுப்புகளையும் ஒத்தவை.

அந்த 27 உரைகளில் ஒன்றாக உவமை இடம்பெற்றுள்ளது. இந்த உவமை பற்றிப் பெருந்தேவனார் தம் உரைச் சூத்திரங்களுடன் (?) விரிவாக விளக்கியுள்ளார்.

அலங்காரப் படலத்தில் " ... அலங் காரங்கள் தண்டிசொன்ன/ கரைமலி நூலின் படியே யுரைப்பன்"(காரிகை 143) என்கிறார் புத்தமித்திரனார். அந்த அலங்காரங்களுள் ஒன்று உவமை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை( அப்போது தமிழ்த் தண்டியலங்காரம் வரவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது)

உவமையணி பற்றி மிகச் சுருக்கமாகவே உரை வரைந்துள்ளார் பெருந்தேவனார்.

தொல்காப்பியத்திற்கும்  சான்றோர் செய்யுள்களுக்குமிடையிலான சில இடைவெளிகள் இயைபின்மைகள் ஏற்கெனவே அறியப்பட்டவைதாம்.

எட்டுத் தொகையின் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு (அகமும் புறமும்) ஆகியவற்றின் உவமை இயல்புகளுக்கும்  தொல்காப்பிய உவமையியலும்

பிற இயல்களின் உவமை பற்றிய கருத்துகளும் காட்டும் உவமை இலக்கணத்திற்கும் இடைவெளிகள் இயைபின்மைகள் காணப்படலாம் என்று தோன்றுகிறது.

அவ்வாறெனில் சங்கதச் செல்வாக்கிற்குட்பட்ட , பிற்காலத்து வீரசோழியம் அதனை இட்டு நிரப்ப இயலுமா என்ன!

சான்றோர் செய்யுள் மரபில் - குறிப்பாக அகப்பொருளில் - வரும் உவமை வேறு ; சங்கத அலங்கார இலக்கண வழிவந்த உவமை வேறு எனப் புத்த மித்திரனாரும் பெருந்தேவனாரும் உணர்ந்திருக்கின்றனர். அந்த அளவில் வீரசோழியம் போற்றத்தக்கது.

No comments:

Post a Comment

அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும்

  அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும் " சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ   அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  ...