Wednesday, October 14, 2020

சேனாவரையம்: செய்தென் எச்சமும் நைடா விதியும்

 

சேனாவரையம்:  செய்தென் எச்சமும் நைடா விதியும்



முதலில் எளிய அறிமுகம் :

         
விதிவினை × மறை¹வினை ( மறை = எதிர்மறை)
வினையெச்சம்
வாய்பாடு  - ஆகியன பற்றிச் சற்றே விளங்கிக் கொள்வது நல்லது.

விதிவினை x மறைவினை :

                               1)அவள் படிக்கிறாள் - என்னும் வாக்கியத்தில் படித்தலாகிய வினை நிகழ்கிறது.
                                2) அவள் படிக்கவில்லை - என்னும் வாக்கியத்தில் வினை நிகழவில்லை.

ஒரு செயல்/தொழில்/வினை நிகழாவிட்டாலும் சொற்களை வகைப்படுத்தும் இலக்கண மரபின்படி அது வினைதான்.நிகழ்தல், நிகழாமை என்னும் விதிவினை( Main verb) , மறைவினை( Negative verb) இரண்டையுமே வினைச்சொற்களில் அடக்குவது இலக்கண மரபு.

1 ) படிக்கிறாள் - விதிவினை
2 ) படிக்க வில்லை -மறைவினை
மேற் காட்டியவை வினைமுற்றுகள் / முற்று வினைகள்.

3) கற்று உயர்ந்தான் - விதிவினை
4) கல்லாது தாழ்ந்தான் - மறைவினை
கற்று, கல்லாது - இவை வினையெச்சங்கள்.

5) படித்த ஆசிரியர் - விதிவினை
6) படிக்காத ஆசிரியர் - மறைவினை
இவை பெயரெச்சங்கள் ( படித்த, படிக்காத - பெயரெச்ச வினைகள்)

7) படித்தவன் - விதிவினை
8) படிக்காதவன் - மறைவினை
இவை வினையாலணையும் பெயர்கள்.

இவ்வாறு ஏவல், வியங்கோள் , தொழிற்பெயர்கள் போன்றவற்றிலும் விதிவினை, மறைவினைகள் பல்வேறு வடிவமைப்புகளில் உள்ளன. இவற்றை விரிப்பின் பெருகும். இப்போதைக்கு இவை போதும்.

                                ************

வினையெச்சம் :

வந்து    _________ .

உண்டு  _________.

போய்    _________.

உறங்கி _________.

கோடிட்ட இடங்களை நிரப்ப வேண்டுமானால் எந்த வகைச் சொற்களால் நிரப்புவோம்?

(வந்து )அமர்ந்தார்/ நின்றாள்/ பார்த்தான்
(உண்டு )மகிழ்ந்தாள்/ களித்தான்
(போய்ப் )படுத்தான் / உரைத்தார்
(உறங்கி) எழுவார் / விழுகிறான் - என்றெல்லாம் சொற்களை இட்டு நிரப்பலாம்.
இந்த அமர்ந்தார், நின்றாள் முதலிய சொற்கள் யாவும் வினைச்சொற்கள்.

வந்து வேலன்.*
உண்டு வள்ளி.*
போய் (க்) கபிலர்.*
என்று பெயர்களை இட்டு நிரப்ப இயலாது. இவை பிழை.

எனவே வந்து , போய், உறங்கி முதலியவற்றை வினைச்சொற்களால்தான் நிரப்பமுடியும். அதாவது எஞ்சி நிற்கும் வினைகளால்தான் நிரப்ப முடியும் . எனவே இவற்றை வினையெச்சம் என்பர்.
( வந்த வேலன், உண்ட வள்ளி -என்பவை பிழையற்றவை.
வந்த, உண்ட முதலியவற்றை எஞ்சி நிற்கும் பெயர்களால் தான் நிரப்ப முடியும் . எனவே இவை பெயரெச்சங்கள் )

                               ******************
                          

வாய்பாடு :

நட , வா, படி, கொடு, வை, போ - என்பன எல்லாம் ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுகிற (ஆணையிடுகிற) சொற்கள். ஏவல் வினைகள்.
ஏவல்வினை என்பது இலக்கணக் கலைச்சொல்.

மேற்கூறிய நட, வா முதலிய யாவும் ஏதேனுமொன்றைச் 'செய்' என்று ஏவுகின்றன. எனவே இந்த வகையிலான
பல நூறு சொற்களும்  'செய்' என்னும் வாய்பாட்டுச் சொற்கள்.

வந்து, உண்டு, சென்று, கேட்டு, மகிழ்ந்து - முதலியவை
செய்து என்னும் வாய்பாட்டுச் சொற்கள். ஏதேனும் ஒன்றைச் செய்து ____ . என நிற்பவை.

வந்த, உண்ட, சென்ற முதலியவற்றின் வாய்பாடு?
'செய்த ' என்பதை நீங்கள் உய்த்துணர்ந்திருப்பீர்கள். சரி.

செய் , செய்து, செய்த போன்றவை வாய்பாடுகள்.

"உயரமானவங்க பின் வரிசைக்குப் போங்க
உயரங் கொறஞ்சவங்க முன்னாடி வாங்க" என்று ஆசிரியர் நிழற்படமெடுக்க மாணவர்களை ஆயத்தப் படுத்துவாரல்லவா, ஏறத்தாழ அது போலத்தான் வாய்பாடுகள்.(செய்-  பற்றித் தனியே எழுதவேண்டும்)
யார் யார் உயரம் யார் யார் உயரக்குறைவு என்று தனித்தனியே பெயர் சொல்லியும் அழைக்கலாம். ஆனால் , பொது அடிப்படையில் வகைப்படுத்திக் கூறுவது எளிதல்லவா. (அறிமுகம் முற்றும்).

                                                                -x-
       
'சொல்லுக்குச் சேனாவரையம்' என்று தொல்காப்பியச் சொல்லதிகார உரைகளுள் சிறந்ததாகச் சேனாவரையர் உரையைப் போற்றுவது வழக்கம். உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை. சேனாவரையர் உரைஅவரவர் பயின்றதற்கேற்ப நயம் நல்கும். எனக்கு எட்டிய ஒன்றை, நான் வியந்து சிலிர்த்த ஒன்றைக் காட்டுகிறேன்.

செய்து  செய்யூச்  செய்பு  செய்தென
செய்யியர்  செய்யிய செயின்செயச்  செயற்கென
அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி (தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையியல், 31)

என்பது நூற்பா . இதில் ஒன்பது வாய்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன. எல்லாவற்றையும்  விளக்குவது எனது நோக்கமன்று. விரும்புவோர் தொல்காப்பியத்திற்குள் செல்லலாம்.

'செய்து' -          என்னும் வாய்பாட்டை விளக்குவதில் சேனாவரைய நுட்பம் மிளிர்வதை மட்டும் சொல்லக் கருதுகிறேன். அந்த நுட்பமுணரும் அளவுக்கு மட்டுமே சேனாவரையர் உரையைக் காண்போம்.

அவர் தரும் எடுத்துக் காட்டுகள்:
I)
i. நக்கு (நகு- என்பது வினைப்பகுதி/வினையடி)
ii. உண்டு (உண்- பகுதி)
iii.வந்து (வா - பகுதி)
iv.சென்று (செல் - பகுதி)

இச்சொற்களில் நிற்கும் கு(க் +உ), டு ( ட் + உ), து(த் + உ) , று (ற்+உ)  என்பவற்றின் இறுதி - உ என்னும் உயிர் எழுத்து . இவை இயல்பாக உகர ஈற்றுச்'செய்து' என்னும் வாய்பாட்டில் அடங்கும் (செய் த் + உ ).

II)
v. எஞ்சி ( எஞ்சு - பகுதி)
vi. உரிஞி (உரிஞ் - பகுதி)
vii.ஓடி (ஓடு - பகுதி)
இவற்றின் இறுதி  -இ .

III)
viii. ஆய் ( ஆ - பகுதி)
ix.  போய் (போ - பகுதி)
இவற்றின் இறுதி - ய்.

சில சொற்களில் உகர ஈறே இகரமாகத் திரிந்தது (-உ> -இ) என்றும்,
சில சொற்களில் -உகரம் யகரம் (-ய்)  வரக் கெட்டது என்றும்
-இ, - ய் இறுதிச் சொற்களையும் செய்து என்னும்    வாய்பாட்டில்  அடக்குகிறார் சேனாவரையர்.

வினையெச்ச வாய்பாடு ஒவ்வொன்றும் கருத்துச்சார்போடு காலங்காட்டுவதில் வேறுபடுவதாக உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.

செய்து என்னும் வாய்பாட்டு எச்சம் இறந்த காலம்பற்றி வரும் என்கிறார் சேனாவரையர். - இ கர, - ய கர ஈற்று எச்சங்களும் அப்படியே  [ "இகர ஈறும் யகர ஈறும் செய்து என்னும் வாசகத்தைத் தந்தே நிற்றலின் பொருண்மையால் ஒன்றாக அடக்கப்பட்டன" என்று நச்சினார்க்கினியரும் ஏற்கிறார். ஆனால்  (-உ > - இ )திரிபு என்னும் சேனாவரையரின் விளக்கத்தை மறுக்கிறார் ]
எனவே,
பொருண்மையால் ஒன்றாக விளங்கும் இவற்றை ஒரு வாய்பாட்டில் அடக்கி, செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்ச வடிவமே  புழக்கத்தில் மிகுந்திருப்பதாலும் ( "பயின்று வருதலானும் " என்பது சேனாவரையரது தொடர் )
எதிர்மறை எச்சம் எல்லாம் பெரும்பாலும் உகர ஈறாக அல்லாமல் வராததாலும்
உகர ஈறே இயல்பு; இகர , யகர ஈறுகள் அதன் திரிபு என்கிறார்.

வந்து   (விதிவினை )  -     வாராது¶       (மறைவினை)
உண்டு (          "             ) -     உண்ணாது¶(          "           )

ஓடி         (          "           )  -      ஓடாது¶            (          "         )

போய்    (          "         )  -       போகாது¶         (          "       )

வாராது சென்றார்.
உண்ணாது உறங்கினான்.
ஓடாது நின்றாள்.
போகாது திரும்பியது .
(¶ இக்காலத் தமிழில்  வராமல், உண்ணாமல், ஓடாமல், போகாமல் என வழங்குகின்றன)

ஓடி, போய் என்ற இகர , யகர ஈற்று வினை எச்சங்களும் மறைவினையில் உகர ஈறு பெற்றுள்ளன. ஆக செய்து என்னும் வாய்பாடே இயல்பாகக் கொள்ளத் தக்கது என்கிறார் சேனாவரையர்.

இது குறித்த ஏற்பு மறுப்புகள் எவ்வாறிருந்தாலும்
இப்படி எதிர்மறையிலிருந்து விதிவினையை  விளக்கியிருப்பது எவருக்கும் எளிதில் தோன்றாதது என்றே சொல்ல வேண்டும். விதி வினையிலிருந்து மறைவினைக்குச் செல்வது இயல்பானது. மறைவினையிலிருந்து விதிவினையை நோக்குவது ஒரு சிரசாசனப் பார்வை!

"சேனாவரையர் மிக நுண்மையாக விளக்குகின்றார்" எனச் சேனாவரையப் பதிப்பாசிரியருள் ஒருவராகிய பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி இவ்விளக்கத்தை உணர்ந்தெழுதியுள்ளார்.
நானும் கலந்து பயின்று அதன் நுட்பத்தை உணர்ந்து உணர்ந்து வியந்து வியந்து உவந்தேன்.

சேனாவரையரின் அஃகியகன்ற மொழித் திறத்தாலும் வேறுபட்ட கோணத்திலான கூரிய நோக்காலும்  தனித்து நிற்கும் இடங்களுள் இது தலையாயது என்றே சொல்வேன்.

சேனாவரையரின் இந்த விளக்கம் பற்றி மொழியியலறிஞர்கள் கருத்துச் செலுத்த வேண்டும் என்பது எனது அவா - என்று 27 சூன் 2019 முகநூல் இடுகையை நிறைவு செய்திருந்தேன் (தலைப்பு: 'சேனாவரையரின் 'சிரசாசன'ப் பார்வை:
மறைவினையிலிருந்து விதிவினை ')
ஆனால்,
பேராசிரியர் கி.நாச்சிமுத்து[கி.நா.] அவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி எழுதியிருந்ததை அவரது ' தொல்காப்பியக்கட்டுரைகள் - சொல் '²என்னும் நூலில் அண்மையில்தான் பார்க்க நேர்ந்தது.



சேனாவரையப் பார்வை நைடா விதிக்கு இணக்கமாயிருப்பதாகப் பேரா.கி.நா.,                                      'சேனாவரையர்: சொல்லிலக்கணக் கொள்கைகளும் ஆய்வு முறைகளும் ' என்னும் ௸ நூலில் உள்ள கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

" ஓடி , போய் போன்ற வினையெச்சங்களில் இகரம் யகரம் [ஓடி என்பதன் ஈற்றில் உள்ள - இகரம்  போய் என்பதன்  ஈற்றில் உள்ள - யகரம் (-ய்)]  என்பனவற்றின் நிலை என்ன என்பதைப் பற்றி ஆராயும்போது சேனாவரையர் தரும் விளக்கம் இன்றைய உருபனியலார் கடைப்பிடிக்கும் கொள்கைகளையும் முறைகளையும் நினைவூட்டுகிறது (நைடாவின் மூன்றாம் விதி) ... சேனாவரையர் வினையெச்ச விகுதியின் மாற்றுருபுகளாக உகரம் இகரம் யகரம் ஆகியவற்றைக் கொள்கிறார்"  (௸, பக் . 48 - 49).
‡ (உருபனியல் பற்றிய அடிப்படை அறிமுகத்திற்கு அடிக்குறிப்புக் காண்க)

" இக்கால மொழியியலார் இந்த இகர யகரத்தைக்    கால இடைநிலைகளாகக் கொண்டு அவ்வடிவங்களில் வினையெச்ச விகுதி இன்மை மாற்றுருபு என்பர்.  சேனாவரையர் போன்றோர் இவ்வாறு கொள்ளாமைக்குக் காரணம் இவ்விடத்தில் வினையின் அமைப்புத் தொகுதிகள் (form class) பற்றிக் கணக்கில் எடுக்காமை காரணமாக இருக்கலாம். ஆனால் எதிர்மறை பற்றி விளக்கம் கொடுக்கும் போது சேனாவரையர் இக்கருத்தினடிப்படையைக் கணக்கில் எடுத்துள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (பார்க்க எதிர்மறை பற்றிக் கீழே காணும் விளக்கம்)" - ௸நூல், ப.49. - என்கிறார். ஆனால் எதிர்மறை பற்றிய அவரது விளக்கம் அச்சில் விடுபட்டுள்ளமையால் அவரது கருத்தை முழுமையாக உணர இயலவில்லை.


பேராசிரியர் நைடா (Eugene Albert Nida  1914 - 2011 )வின் Morphology : The Descriptive Analysis of Words என்னும் நூல் உருபனியல் பற்றிய செல்வாக்கான நூல் ( முதற்பதிப்பு 1946). இதில் உருபன்களைக் கண்டறிய - ஒன்றையொன்று சார்ந்த - ஆறு விதிகளைக் கூறியுள்ளார்.

உருபனியல் பற்றித் தமிழில் அறியச் சில நூல்கள் இருக்கின்றன. அவற்றுள் பேராசிரியர் கு.பரமசிவம் அவர்களின் 'இக்கால மொழியியல் அறிமுகம்' நல்ல நூல்.³
பேரா. கி.நா. அவர்களும் தமிழுக்குப் பேரா.பரமசிவம் நூலிலிருந்து எடுத்துக்கொண்டு ஆங்கில மூலத்தை அடைப்பினுள் சேர்த்துப் பின்னிணைப்பில் நைடாவின் விதிகளைத் தந்துள்ளார்.




-------------------------------------------------------------------

¹கொசுறு:  மறை என்பது இங்கு எதிர்மறையைக் குறிக்கும். மறை = மறுத்தல் . கொடை = கொடுத்தல், நிறை = நிறுத்தல் முதலியன காண்க.  'எதிர்' என்பதன் மறுதலை (opposite) ஆகிய 'நேர்' என்பது கொண்டு , நேர்மறை (Positive) x எதிர்மறை (Negative) என்று கையாளும் வழக்கம் பெருகிவிட்டது. நேர்மறை என்பது பிழையான சொல்லாக்கம் ; வழக்கில் பரவி நிலைத்துவிட்டது ; தற்காலத் தமிழ் அகராதியிலும் இடம் பிடித்துவிட்டது. இனி, நேர்மறையை எதிர்மறையாகப் பார்த்துப் பயனில்லை.

² பேராசிரியர் கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கோவை, 2007.

³ அடையாளம், புத்தாநத்தம், 2011.

‡   மொழியியலார் கூறும் உருபனியலை அறிமுகப்படுத்த என் மொழியியலறிவு போதாது. ஆதலின்,  அதனையொத்த பகுபத உறுப்பிலக்கணத்தின் வழி ஒப்புமை காட்ட முயல்கிறேன்.  .

1.உழைத்தார்               உழை + த் + ஆர்
2.உண்டார்                     உண் + ட் + ஆர்
3.சென்றார்                    செல்/ன் + ற் + ஆர்
4.உறங்கினார்             உறங்கு + இன் + ஆர்

5.கூறுகிறார்                 கூறு + கிறு + ஆர்
6.கூறுகின்றார்            கூறு + கின்று + ஆர்
7.கூறாநின்றார்          கூறு  + ஆநின்று + ஆர்

8. காண்பார்                     காண் + ப் + ஆர்
9.செல்வார்                      செல் + வ் + ஆர்

௧. பகுதி
இந்த ஒன்பதிலும் முதலில் நிற்கும் உழை, உண் முதலியன பகுதி;  வெவ்வேறு பொருண்மை யுடையவை. உருபனியல் நோக்கில் இவை ஒவ்வொன்றும் ஓர் உருபு (morph) எனலாம்; குறிப்பிட்ட பொருண்மையில் வருவதால் இவை உருபனும் (morpheme) ஆகும்( தமிழ் இலக்கண மரபில் வேற்றுமை உருபு மட்டுமே உருபு எனப்படுவது வழக்கம். உருபனியலில் சொல்லின் கூறு ஒவ்வொன்றும் உருபே)

௨. விகுதி
ஒன்பதிலும் இறுதியில் நிற்கும்  - ஆர் என்பது பலர்பால் விகுதி. ஆனால் ஒருவரைக் குறிக்கிறது. எனவே உயர்வு/மரியாதை ஒருமை விகுதி என்று கொள்வோம். -ஆர் என்பதும் ஒரே பொருண்மை கொண்ட உருபு.

௩. இடைநிலை
௩.க.1, 2 , 3 , 4 இல் உள்ள  த் , ட் , ற் , இன்  என்பன இறந்தகால இடை நிலைகள். இவை இறந்தகாலப்பொருண்மை குறித்து நிற்கின்றன. பொருண்மை ஒன்றுதான்; வடிவம் பல. இந்தப் பொருண்மைதான் உருபன் (morpheme). த் , ட் , ற் , இன் என்பன ஒவ்வொன்றும் உருபு ;  ஓர் உருபனின்  மாற்றுருபுகளும் (Allomorph) ஆகும்.

௩.௨.5, 6, 7 உள்ள கிறு , கின்று , ஆநின்று - என்பன நிகழ்கால இடைநிலைகள். மேற்குறித்தவாறு இவ்வுருபுகள் ஒவ்வொன்றும் நிகழ்காலம் குறிக்கும் உருபனின் மாற்றுருபுகள்.

௩.௩. .8, 9 இல் உள்ள ப் , வ் என்பன எதிர்கால இடை நிலைகள். இவை எதிர்காலம் குறிக்கும் உருபனின் மாற்றுருபுகள்.

உருபனியிலைப் புரிந்துகொள்வதற்காக , முன்பே அறிமுகமான மரபிலக்கணக் கூறுகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை அப்படியே உருபன், உருபு, மாற்றுருபுகள் என மாற்றீடு செய்ய முடியாது. குறிப்பாகக் காலம் காட்டும் இடை நிலைகளை உருபனியலார் வேறுபடக் காட்டுவர்.

பகுபத உறுப்பிலக்கணம்தான் உருபனியல் என்று மிகை எளிமைப்படுத்தி விடக்கூடாது

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...