Friday, October 17, 2025

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்*

————————————---



காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப்பு நடத்தினால் இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் வெல்லும். 


காமத்துப்பாலுக்கு உரை கண்ட பண்டையோர்,   கூற்று கேட்போர் என்னும் அகப்பொருள் மரபு பேணுவர். இங்கு இலக்கியச் சுவைக்கு இடையூறின்றிப் பொதுப் பொருள் கொண்டால் போதும்.


காலம் சார்ந்து மரபு பேணும் குறள் , காலங்கடந்தும் வென்று நிற்பதற்கு இவ்வாறு பொதுமைக்கு இடந்தருவதும் காரணம்.


தமிழ்ச் சமூக வரலாற்றில் வள்ளுவர் காலத்தில் நேர்ந்த மாறுதலைத் தெரிந்துகொண்டு நகர்வோம்.


பழந்தமிழ்ச் சமூகத்தில் பரத்தமை புறத்தொழுக்கம் என்று சற்றே ஒதுக்கிவைக்கப்பட்டாலும் , சமூகத்திற்கு முரணானதென்று விலக்கிவைக்கப்படவில்லை. 


அகப்பொருள் மரபில் பரத்தையிற் பிரிவுக்கு இலக்கண ஏற்பு உண்டு. அகப் பாடல்களில் பரத்தமையே  ஊடலுக்குக் காரணமாயிருந்தது.


அவ்வாறே பழந்தமிழ்ச் சமூகத்தில் கள் ஒழுக்கக்கேடாகக் கருதப்படாதது மட்டுமன்று ; வளத்தின் அடையாளமாகவே கொள்ளப்பட்டது.


மாறாக வள்ளுவர் கள்ளையும் பரத்தமையையும் கடுமையாகக் கண்டித்தார்.


அகப்பொருள் மரபின் தொடர்ச்சியைப் பேணிய வள்ளுவர் காதல் இன்பத்தில் ஊடலுக்கு இன்றியமையா இடமுண்டு என ஏற்றார் ;  ஆனால்,  காரணத்தை மாற்றினார் ; இல்லாத புறத்தொழுக்கம் இருப்பது போன்ற புனைவுகளால் ஊடலை உருவாக்கி இலக்கிய நயத்தை மிகுவித்தார்.


நாடக வழக்காக - வெறும் மரபாகக் கூட - பரத்தமையை அவர் அனுமதிக்கவில்லை.


ஆனால் கள்ளும் களிப்பும் உவமை என்கிற சாக்கில் உள்ளே நுழைந்துவிட்டன.


 ' உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை ' (தொல். உவமையியல், 3)என்னும் உவம இலக்கண மரபு பிறழாமல் ,  ' தம்மில் இருந்து தமதுபாத் துண்ணல் ' (1107), ' அறிதோ றறியாமை காணல் ' (1110)  முதலிய மேன்மைகளைக் காதல் இன்பத்திற்கு , உவமையாக்கிய வள்ளுவரா இவர் !  மதுவின் இழிவுகளை வகைவகையாகக் கூறி மதுவிலக்கை வலியுறுத்திய வள்ளுவரா இப்படி! என்று நாம் கருதும்படியான உவமைகளை அவரிடம் காணமுடிகிறது.


           இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

           கள்ளற்றே கள்வநின் மார்பு (1288)


பிறர் இகழ்வார்கள்  என்று தெரிந்தும்  குடிகாரர்கள் மதுவை மீண்டும் மீண்டும் அருந்த விரும்புகிறார்கள். தன் நாணம் முதலியவற்றை நெகிழச்செய்து, காதலன் மார்பு  மீண்டும் மீண்டும் தழுவத் தூண்டுகிறது என்கிறாள் காதலி.


             உண்டார்கண் அல்லது அடுநறா, காமம்போல்

             கண்டார் மகிழ் செய்தல் இன்று (1090)

      

அடு நறா  – வடித்தெடுத்த மது.  அந்த மது உண்டால் போதை தரும். காதல் கண்டாலே போதை தரும் என்கிறார் ; ஒருபடி மேலேபோய்,


               உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்

               கள்ளினும் காமம் இனிது ( 1201)

         

கள் உண்டால்தான் களிப்பை – போதையைத் தரும் . ஆனால் காதலில் நினைவே களிப்பைத் தரும். எனவே கள்ளை விடவும் காதல் இனியது என்கிறார் (கள் இனிது என்று ஏற்றால்தான் கள்ளினும் இனிது என்று கூறமுடியும் ! )


இந்தக் குறள் இரண்டையும் இணைத்து ஒரு குறளாக்குகிறார்.


                உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

                கள்ளுக்கில் காமத்திற் குண்டு (1281)

  

நினைத்தால் களிப்பு, கண்டால் மகிழ்ச்சி. இரண்டும் காதலில் உண்டு; கள்ளுக்கு இல்லை என்கிறார்.


          'களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

          வெளிப்படுந் தோறும் இனிது  ( அலர் அறிவுறுத்தல் 1145)


களிப்பு (போதை) ஏற ஏற மதுவை விரும்புதல் போலக் காதல் இருவரிடத்தும் புலப்படப் புலப்பட இனிமை தரும்[ பண்டை உரையாசிரியர்கள் அலர் வெளிப்படுதலோடு தொடர்பு படுத்துவார்கள். அது மரபு ]


வள்ளுவர் கள்ளை , களிப்பைக் கடிதலில் கண்டிப்புடையவர்தான்  என்றாலும் 

காதல் மயக்கத்தைத் துல்லியமாக உணர்த்த ,  கள் தரும் இன்பத்தை, மகிழ்ச்சியை ஒப்புக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை போலும்.


இங்குதான் அவர் முற்றிலும் இலக்கியப் படைப்பாளராக மிளிர்கிறார். காமத்துப்பால் காதற் பொருளால் மட்டுமன்றிக் காதலைக் காட்டும் முறையாலும் இலக்கியமாகிறது.


ஆம். திருக்குறள் ஓர் அற இலக்கியம் ; வெறும் அறநூல் மட்டுமன்று . 


* தலைப்புக்கு நன்றி கவிஞர் சேரன் !


( எழுத்தாக்கத்திற்காகச் சில மாறுதல்கள் செய்யப்பட்ட , வானொலி உரையின் பகுதி)

இருபதாம் நூற்றாண்டின் ஒரு தனிக் ' கோவை '

 இருபதாம் நூற்றாண்டின் 

ஒரு தனிக் ' கோவை '


சிலம்பு நா. செல்வராசு அவர்களின் 'இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்' - என்னும் நூலைப் படித்தபோது, அப்பாவின் ' கரந்தைக் கோவை ' தான் இருபதாம் நூற்றாண்டின் ஒரே கோவை இலக்கியம் என அறிந்தேன்.


செல்வராசு , இருபதாம் நூற்றாண்டில் கோவை நூல் இயற்றப்படவில்லை என்கிறார்.அவர்பார்வையில் அப்பாவின் கோவை படாததற்கு அவரைக் குறை சொல்ல முடியாது.


அதிலிருந்துதான் அப்பாவின் கோவை ஒன்று மட்டுமே இருபதாம் நூற்றாண்டின் கோவை என்னும் முடிவுக்கு வந்தேன். இருபதாம் நூற்றாண்டில் 400க்கு மேற்பட்ட துறைகளமைத்துக் கோவை பாடுதல் எளிதன்று. எனவே பிறர் யாரும் பாடியிருக்க இயலாதென்று உறுதியாக நம்புகிறேன்.


கோவை ஒரு சிற்றிலக்கிய வகை.

சிற்றிலக்கியங்களின் பொதுத்தன்மை , அவை ஒரு பாட்டுடைத்தலைவர் அல்லது தலம் முதலியவற்றைப் பலபடப் போற்றிப் புகழும் நோக்கின என்பதே . இந்த ஒற்றை மையம் காரணமாகச் சிற்றிலக்கியம் எனல் பொருந்தும். 


பாராட்டுக்குரியவருக்கு மாலை, பூச்செண்டு, பொன்னாடை முதலியன அணிவித்துப் போற்றும் மரபில் பாமாலையால் போற்றுவதும் அடங்கும்.


மாலை முதலியவற்றின் வேலைப்பாடு போன்றதுகோவை முதலியவற்றின் புலமைசான்ற செய்திறம்.இந்தச் செய்திறம் சார்ந்து அவற்றின் இலகிய மதிப்பு அமையும்.


நவீனக் கவிதை நோக்கில் அவற்றை மதிப்பிடக் கூடாது.சிற்றிலக்கியங்கள் கவித்துவத்தை விடவும் புலமைசால் செய்திறனுக்கே முதன்மை தந்தன.


தமிழ் நவீனக் கவிதை முன்னோடி பாரதிதானும் சிற்றிலக்கியம் புனைவதினின்றும் தப்பி விடவில்லை என்பதை உளங்கொள்ள வேண்டும்.


இந்தப் பின்னணியில் அப்பாவின் கரந்தைக் கோவையை மதிப்பிட்டால் ,  முதலிடத்தில் நிற்பது அதன் தங்கு தடையற்ற ஓட்டம் . மரபில் ஊறித் திளைத்தால் மட்டுமே இது வாய்க்கும்.


யாப்பு மரபிலமைந்த பா வடிவங்களின் உள்ளார்ந்த ஓசை உணராமல், புறநிலைப் பட்ட வெற்றுவிதிகளைக் கொண்டு சொற்களைக் கோக்கும்போது உரைநடையாகவே நின்று வற்றும்.


கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைப் பாட்டுடைத் தலமாகக் கொண்டு , தம் நன்றியறிதலைப் புலப்படுத்திப் போற்றும் வண்ணம் 469 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் - தலைவன் தலைவியின் காதல் நிகழ்ட்சிகளின் தொகுப்பாக - ஆனது இக்கோவை. அத்தனை பாடல்களும் மரபார்ந்த ஓசையும் ஓட்டமும் குன்றாதவை.


கரந்தைத் தமிழ்ச் சங்கம், கல்லூரி, சங்கத்தின் தமிழுணர்வு, தமிழ்ப் பணிகள்,  சங்கத்தோடு தொடர்புடைய சான்றோர் , தம் தமிழ்ப் புலமை, தமிழ் மொழி, இலக்கிய, இலக்கணங்கள் பற்றிய பார்வை,  தமிழ் உணர்வு யாவற்றையும் இடைமிடைந்து யாப்பின்வரம்பு பிறழாமலும் கோவை மரபு இகவாமலும் இலக்கியச் சுவை குன்றாமலும் புனைந்திருக்கிறார்; புகுந்து விளையாடியிருக்கிறார்.

(இக் கோவை பற்றிய மதிப்பீட்டினை - நூல் நிறை, தென் மொழி - கட்டளைக் கலித்துறையிலேயே பாடியளித்தவர் பாவலர் ம .இலெ.தங்கப்பா என்பதைப் புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன்


 மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன்


" மலரினும் மெல்லிது காமம் " என்றார் வள்ளுவர்.


இறையனார் களவியல் உரையாசிரியர் "  மென்சுவை " என்கிறார் 


               ஓதல் காவல் பகைதணி வினையே

               வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்று

               ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே (௩௫)

               

எனக் கற்புக்காலத்தில் (இல்லறத்தில்) தலைவனின் அறுவகைப் பிரிவை (தலைவியைப் பிரிந்து செல்லலை) வரையறுக்கிறது இறையனார் களவியல்.


பரத்தையிற் பிரிவு பற்றிய நூற்பா (௪௦)வுரையில்


" மற்றைப் பிரிவெல்லாம் வேண்டுக ஆள்வினை மிகுதி உடைமையான் ; இப்பிரிவு எற்றிற்கோ எனின் , மற்றைப் பரத்தையிற் பிரிந்தான் தலைமகன் என்றால், ஊடலே புலவியே துனியே என்றிவை நிகழும். நிகழ்ந்தால், அவை நீக்கிக் கூடின விடத்துப் பெரியதோர் இன்பமாம்; அவ்வின்பத் தன்மையை வெளிப்படுப்பன அவை எனக்கொள்க. இவன் மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியனாகலான் இப்பிரிவு வேண்டினான் என்பது." என்கிறார் நக்கீரர்.


ஆள்வினை x மென்சுவை  என எதிர்வுகளைக் கொள்கிறார்.


" பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய " சேக்கிழாரும் நினைவுக்கு வருகிறார்.

பத்திச்சுவை மட்டுமன்று இலக்கியச் சுவையும் நனி சொட்டச் சொட்டப் பாடியவர் அவர். இறையற்புத நம்பிக்கைகளோடு கூடிய அண்மைக்கால வாழ்க்கை  வரலாறு சார்ந்த கதைகளைப் பாடிய சேக்கிழாருக்கு வரம்புகள் மிகுதி ; உரிமை குறைவு. 


இந்தக் குறைந்த உரிமையைக் கொண்டே நடப்பியச் சாயலும் உணர்வு நுட்பமும் பொதுளக் கதை வடித்தார் சேக்கிழார். ஓர் இடம் :


            அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி

            வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்

            உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்

            இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்

(பெரியபுராணம்,தில்லைவாழந்தணர் சருக்கம்,திருநீலகண்ட நாயனார் புராணம் 03)


" இளமை மீதூர இன்பத் துறையினில் எளியரானார் " -  இந்த ஒற்றைத் தொடரில்  சொட்டும் நாகரிகமும் நயமும்  சேக்கிழார்தம்  இலக்கியப் பேராற்றலின் மின்னற்கீற்று !


" எளியரானார் - அது வலிமைபெறத் தாம் அதன் ஆட்சிக்குட்பட்டு

எளியராக ஆயினார் " என்பார் சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்.


எளிமை x அருமை எனல் பெரும்பான்மை. ௸ பாட்டில், எளிமை x வலிமை எனக் கொள்கிறார் சிவக்கவிமணி.


" எளியார் வலியாம் இறைவா சிவதா " எனச் சிவகாமி ஆண்டார் கூற்றில் எளிமை x வலிமை எனச் சேக்கிழாரே ஆண்டுள்ளார் (இலை மலிந்த சருக்கம்,எறிபத்த நாயனார் புராணம் 16)


திருநீலகண்டர் எளியரானார் என்பதை மெலியரானார் என்று கொண்டாலும் இழுக்கில்லை.


"இந்நூல்[ களவியல்] செய்தார் யாரோ எனின், மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள்" அஃதாவது சிவபெருமான். அந்தச் சிவபெருமான்தான்  " மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன் "

கல்கியால் கேட்ட மன்னிப்பு


 கல்கியால் கேட்ட மன்னிப்பு


வந்துவிட்டது ; வணிகத்தில் வென்றுவிட்டது(?) ; என் மாணவப் பருவ நினைவைத் தூண்டிவிட்டது.


முதுகலை  மாணவர்கள் சுழல் முறையில் வகுப்புக் கருத்தரங்கில் கட்டுரை படிக்க வேண்டும். ஓர் ஆண்டில் இரண்டு முறைக்குக் குறையாமல் ஒவ்வொரு மாணவரும்

படிக்க நேரும். அதை வெறும் சடங்காக அன்றி உயிரோட்டத்துடன் நடத்தினார் எங்கள் பேராசிரியர் அ.மா.பரிமணம் ஐயா . வினா எழுப்புதல் , விடையிறுத்தல் ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி மதிப்பெண் தருவார். அது, அகமதிப்பீட்டில் பதிவாகும்.


நான் ஒருமுறை கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இதழியல் பங்களிப்புப் பற்றிக் கட்டுரை படித்தேன் :


1928 பிப்ரவரியில் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.வாசனின் இதழாக வெளிவந்தது. முதல் இதழிலேயே உள்ளடக்கத்தில் பல  மாறுதல்கள் செய்தார்; மொழி நடையைக் சரளமான பொதுநடையாக்கினார்;ஆண்டுக் கையொப்பத் தொகையை உருபா இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைத்தார்: போட்டிப் பந்தயமொன்றை அறிவித்து அடுத்தடுத்த இதழ்களில் பரிசுத் தொகையை உயர்த்திக் கொண்டே போனார். போட்டி முடிவுகளை அறிவிக்கவே 'நாரதர்'எனும் இதழை 1933இல் தொடங்குமளவுக்கு அப்போட்டிகள் செல்வாக்குப் பெற்றன.   


வாசன் ஆனந்த விகடனைத் தொடங்கியபோது கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி திரு.வி.க.வின்  'நவசக்தி'யில் துணையாசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போதே, அவர் ஆனந்த விகடனுக்கு 'ஏட்டிக்குப் போட்டி', 'பூரியாத்திரை' முதலிய நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியனுப்பினார். கல்கியின் நகைச்சுவை எழுத்தாற்றலை இனங்கண்ட வாசன்  கல்கியைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து அழைப்பு விடுத்தார்.


கல்கியும் அழைப்பையேற்று, 'நவசக்தி' யிலிருந்து விலகினார். இடையில் ராஜாஜியின் ஆணைக்கிணங்கத் திருச்செங்கோடு ஆசிரமம் சென்று 'விமோசனம் ' என்னும் மதுவிலக்குப் பரப்புரை இதழில் பொறுப்பேற்க நேர்ந்தது. எனினும் விகடனின் ஒவ்வோரிதழுக்கும்  கதை  கட்டுரை அல்லது தலையங்கம் ஆகியவற்றுள் ஒன்றைத் தொகை செலுத்திப் பெறும் அஞ்சவில் (வி.பி.பி.) அனுப்பக் கோரினார் வாசன். கல்கியும் அவ்வாறே அனுப்பி வந்தார். இது , ஒருவகை வணிக உறவுதான்.


வாசனுக்கு இந்த வி.பி.பி. உத்தி புதிதன்று. அவர் ஏற்கெனவே சென்னையில் புதுமையாக விற்பனைக்கு வரும் பொருள்களின் பட்டியல் (கேட்டலாக்கு)களை , அக்காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலில் பொருளாதார நிலையில் மேல்தட்டிலிருந்த  அரசு அலுவலர்கள் , சுக சீவனம் நடத்திய நிலவுடைமையாளர்கள் போன்றோருக்கு அனுப்பிவந்தார் . அவர்கள் தேவையான பொருளைக் குறிப்பிட்டு எழுதுவார்கள். அவர்களுக்கு வி. பி.பி.யில் அவற்றை அனுப்பிவிப்பார் வாசன் ( இன்றைய இணையவழி வணிகத்தின் முன்னோடியான அஞ்சல் வழி வணிகம்!)


வி. பி.பி.  வழி விற்பனைக்கும் விகடன் இதழுக்கும் அடிப்படை ஒன்றுதான் : வணிகம்.


ஆனந்த விகடனுக்கு முன் தமிழில் இதழியல் வணிகமயமாகவில்லை. வாசன் இதழியலை வெற்றிகரமான வணிகமாக்கினார். அதற்கேற்ப வெகுமக்களைக் கவருமாறு  பொதுச் சுவைபட எழுதும் திறன் கல்கியிடமிருந்தது. அது வணிக இதழியல் எழுத்து.


- என்று தொடங்கிக்  கல்கியின் புனைகதை , அரசியல் எழுத்துகள் யாவும் வணிக இதழியல் கூறுகளுடன் இயன்றவை என்று தொடர்ந்தேன். நான் ஆராய்ந்து எழுதியவை என்று சொல்லமுடியாது;  எனக்கு உடன்பாடான நிலை நின்று தொகுத்து எழுதியவை.


விவாதத்தின்போது, நான் மிக மதிக்கும் , பாடத்தைக் கலையாக நிகழ்த்தும் ஓர் ஆசிரியர் , ' கல்கி இதழாளராக இருந்த அதேவேளையில் , தலைசிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் திகழ்ந்தார் என்பதற்குப் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவையே சான்று ' என்றார் .


நான் , ' அவை தொடர்கதைகள் ; புதினங்கள் அல்ல. அவற்றையும் இதழியல் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் ' என்றேன். 


அவர்  மறுத்தார். 


கல்கி  மிகுந்த தன்னடக்கத்துடன் பொன்னியின் செல்வனுக்கு எழுதிய முடிவுரையில்  முதலில் தொடர்கதை என்றுதான் குறிப்பிடுகிறார்; இறுதியில் ,

" பொதுவாக நாவல்கள்எழுதுவதற்கும், முக்கியமாகச் சரித்திர நவீனங்கள் எழுதுவதற்கும் சட்ட திட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. (அப்படி ஏற்பட்டிருந்தாலும் அவற்றை நான் படித்ததில்லை.) ஒவ்வொரு ஆசிரியரும் தமக்குரிய முறையை வகுத்துக் கொண்டு எழுதுகிறார்கள் "என்கிறார். இது, படைப்புக்கும் இதழியல் எழுத்துக்குமிடையிலான அவரது ஊசலாட்டம் என்றேன்.


பேராசிரியர் முகம் வாடியது . அவர் விவாதத்தைத் தொடர விரும்பவில்லை. நானும் வருந்தினேன். 


அவர் இல்லம் கடந்துதான் எங்கள் இல்லத்திற்குச் செல்லவேண்டும். கல்லூரியிலிருந்து நேராக அவரது இல்லத்திற்குச் சென்று மன்னிக்குமாறு வேண்டினேன். அவர் பொருட்படுத்தாதுபோல் , சுவையான காப்பி  தந்தார். அருந்தி இல்லம் திரும்பினேன்.


இப்போது கல்கிக்கு ஆதரவாக வாதாட மிகப்பெரிய இலக்கியக் கோட்பாட்டாசான் வழக்கறிஞராக வாய்த்திருப்பது கல்கியின் உம்மைப் பயன்.

Monday, December 23, 2024

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

 



எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்கு இலக்கணம் உருவாக்க வல்லது. விளக்கட்டும் ; இலக்கணம் வகுக்கட்டும். பிரச்சினையில்லை.


தமிழ்நாட்டில் மொழியியல் அறிமுகமானபின் அறிஞர் சிலர்   தற்காலத் தமிழில் தீட்டிக் கூர் பார்க்கத் தொடங்கியது இயல்புதானே ! தமிழின்  ஐ , ஒள- களை நீக்கலம் ழ  ற க்களை  நீக்கலாம்  க, ச, ட , த, ப  ஆகியவற்றுக்கு இனமான ஒலிப்புடைத் தடையொலிகளைச் சேர்க்கலாம் என்றெல்லாம்  பரிந்துரைக்கத் தொடங்கினார்கள்.

(மரபிலக்கணம் விதிக்கிறது . நாங்கள் விளக்குகிறோம் என்றவர்கள் விளக்கி  விதிக்கத் தொடங்கியது நகை முரண்.)


சோ ராமசாமி சில காலம்   ை Fல்  F̊ , F  , Fா , Fி (ஃப் , ஃப ,ஃபா , ஃபி ...) என்று அச்சிட்டார்(  இதுகளுக்குத் தமிழ் என்றால்  கிள்ளுக் கீரை. அது சரி! தமிழுக்குத் தகும் உயர்வளிக்கத் தோன்றிய பாரதியே தடுமாறியபோது,      இந்தத் தொகளக் அறிவுச் சீவி வகையறா பற்றிச் சொல்லவேண்டியதில்லை)


கிரந்த வரிவடிவங்கள் தமிழுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் (விவாதத்திற்குரியது); தற்காலத்தமிழில் பரவலாகக் கையாளப்படலாம்; கற்பிக்கவும் படலாம். ஆனால் அவை தமிழல்ல என்ற தெளிவு வேண்டும். 


' வட சொற் கிளவி ' பற்றிய தொல்காப்பிய விதியைக் கம்பன் போன்ற மேதைகள் - கிரந்தம் புகுந்ததற்குப் பின்னும் , வீரசோழியத்திற்குப் பின்னும் - கடைப்பிடித்தார்களே !    [கம்பன் ' என்றுமுள தென்றமிழ் ' என்றானே ! ] அவர்கள் மொழி மாற்றங்களை அறியாத மூடர்களா என்ன ?

   

                                                             ***


மொழி மாறவில்லை என்று யாரும் சொல்ல முடியாது . மாற்றம் வெளிப்படை . வட்டார வழக்குகளுக்குத் தமிழ் மரபிலேயே இடமிருக்கிறது. அவற்றின் உயிரோட்டத்திலும் எனக்குக் கருத்துவேறுபாடில்லை. வட்டார வழக்கை எழுத்தில் ஆள்வதையும் நான் மறுக்கவில்லை; ஏற்கிறேன். மொழியியல் அடிப்படையில் விளக்கமுறை இலக்கணம் வரைந்து அவற்றைக் காலந்தோறும்ஆவணப் படுத்தவேண்டும். ஆனால், இக்கால வழக்குத் தமிழ் மட்டுமே தமிழ் என்று சொல்ல முடியாது.


வரலாறும் மரபு வழி இலக்கிய இலக்கணமும் உடைய மொழிகளின் இக்கால வழக்கில் மரபுக்கும்  கணிசமான இடம் உண்டு. மரபும் சேர்ந்ததுதான் தற்காலத் தமிழ் ; எழுத்துத் தமிழ். மரபே ஒருங்கிணைக்கும் ஆற்றலாக இயங்குகிறது; இதில் வரி வடிவ மரபுக்கும் கணிசமான பங்குண்டு . இந்த  ஒருங்கிணைப்பாற்றலைச் சீர் திருத்த, சேர்திருத்தங்களால் சிதைப்பது மொழி என்னும் பண்பாட்டுத் தொடர்ச்சியைத் துண்டித்து அடையாளமழித்துவிடும் .


எனது பாமர மொழியியல் அறிவிலிருந்து ஓர் ஊகத்தை முன்வைக்கிறேன். மொழியியல் வல்லுநர்களின் தெளிவுறுத்தலைக் கோருகிறேன் .


Standard dialect: That dialect of a language which has gained literary cultural supremacy over other dialects and is accepted by the speakers of other dialects as the most proper form of that language[ Dictionary of Linguistics, M.A. Pei & B. Gaynor (Ed.) ] 


என்பதைக் காட்டி, அறிஞர்  செ.வை. சண்முகம் அவர்கள் ,

" தகுமொழி என்பது ஒரு மொழியில் வழங்கும் பல கிளை மொழிகளில் அரசியல் முக்கியத்துவம், வணிகச்சிறப்பு, கலாச்சார நடவடிக்கைகளின் மையம் போன்ற காரணங்களினால் சிறப்பு வாய்ந்த ஒரு கிளைமொழியே. அந்தக் கிளைமொழி பிற கிளை மொழி மக்களாலும் அறிந்து பயன்படுத்தப்படும் என்று மொழியியலார் தகுமொழிக்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள் " என உடன்பட்டுத் தமிழாக்கித் தந்துள்ளார்.(சொல்லிலக்கணக் கோட்பாடு - தொல்காப்பியம் - முதல் பகுதி , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை , 2008, பக். 60 - 61)


ஆனால் இக்காலத் தமிழின்  எந்தக் கிளைமொழியும் பொது எழுத்துமொழியாகவில்லை; அதாவது, தகுமொழியாகவில்லை. மரபு வழித் தமிழ்   இக்காலத்தில் எய்திய ஒரு கட்டமைப்பே தமிழின் தகுமொழி. 


எந்தக் கிளை மொழியிலிருந்தும்  உருவாகாததால் தமிழ் இரு நிலை வழக்கு மொழியாக - பேச்சுத் தமிழிலிருந்து எழுத்துத் தமிழ் வேறுபட்டு - காணப்படுகிறது.


ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரையில் செல்லும் நிலைதான் .  சமநிலை தடுமாறும்தான் . தடுமாறினாலும்  இரண்டையும் பேணியாக வேண்டும் . இது தமிழின் இயல்பு.ஒன்றைக் கொன்று மற்றொன்றைக் கொள்வது வசதியானதென்று  தமிழை ஊனப்படுத்தக்கூடாது.


மொழி பண்பாட்டுப் பொறுப்போடு கையாளவேண்டிய கருவி.

- முகநூல் இடுகை, 22 டிசம்பர் 2013

____ ____ ____ ____ ____ ____ ____ ____ 

* மொழியியலறிஞர் தெய்வ சுந்தரம் நயினார்   அவர்களின் ' கிரந்த எழுத்துக்களும் மொழியியலும்' என்னும் இடுகை பற்றிய என் கருத்தாக இதனை எழுதினேன். ஆனால் எழுத்தெண்ணிக்கை வரம்பு காரணமாக முகநூல் ஏற்க மறுத்துவிட்டது. தனி இடுகையாகத் தந்துள்ளேன்.

Thursday, June 27, 2024

அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும்


 

அகப்பொருள் உவமையும் அலங்கார உவமையும்

" சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும் " ( எனது முகநூல் இடுகை ,'பாடல் பெற்ற பறவை! ' 30 அக்டோபர் 2020) - என்று எழுதியிருந்தேன்.

இக்கருத்து வீரசோழியத்தாலும் வலிமையுறுகிறது.

தொல்காப்பியத்திற்குப்பின் தம் காலத்துப் பன்மொழி வரவையும் உலக வழக்கின் இயல்புகளையும் சங்கத இலக்கண மேலாதிக்கத்தையும் உளங்கொண்டு புத்த மித்திரர் வீரசோழியமியற்றினார். அவருடைய மாணாக்கராகிய பெருந்தேவனார் அந்நூலுக்கு இயற்றிய விரிவுரை நூலோடு இயைந்தது ; பிந்தைய இலக்கணப் போக்குகளில் செல்வாக்குச் செலுத்தியது.

இன்று கிடைக்கும் தமிழ் இலக்கண நூல்களுள் - எழுத்து , சொல், பொருள், யாப்பு, அணி எனும் -  ஐந்திலக்கணங் கூறும் முன்னோடி நூல் வீரசோழியம் .

வீரசோழியப் பொருட்படலத்தில் அகப்பொருளுக்கு உரை என 27 கூறுகள் சுட்டப்பட்டுள்ளன (காரிகை 90 ,  91). இவை தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியல் கூறும் திணை, கைகோள் முதலிய செய்யுள் உறுப்புகளையும் , நம்பியகப்பொருள் கூறும் அகப்பாட்டுறுப்புகளையும் ஒத்தவை.

அந்த 27 உரைகளில் ஒன்றாக உவமை இடம்பெற்றுள்ளது. இந்த உவமை பற்றிப் பெருந்தேவனார் தம் உரைச் சூத்திரங்களுடன் (?) விரிவாக விளக்கியுள்ளார்.

அலங்காரப் படலத்தில் " ... அலங் காரங்கள் தண்டிசொன்ன/ கரைமலி நூலின் படியே யுரைப்பன்"(காரிகை 143) என்கிறார் புத்தமித்திரனார். அந்த அலங்காரங்களுள் ஒன்று உவமை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை( அப்போது தமிழ்த் தண்டியலங்காரம் வரவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது)

உவமையணி பற்றி மிகச் சுருக்கமாகவே உரை வரைந்துள்ளார் பெருந்தேவனார்.

தொல்காப்பியத்திற்கும்  சான்றோர் செய்யுள்களுக்குமிடையிலான சில இடைவெளிகள் இயைபின்மைகள் ஏற்கெனவே அறியப்பட்டவைதாம்.

எட்டுத் தொகையின் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு (அகமும் புறமும்) ஆகியவற்றின் உவமை இயல்புகளுக்கும்  தொல்காப்பிய உவமையியலும் பிற இயல்களின் உவமை பற்றிய கருத்துகளும் காட்டும் உவமை இலக்கணத்திற்கும் இடைவெளிகள் இயைபின்மைகள் காணப்படலாம் என்று தோன்றுகிறது.

அவ்வாறெனில் சங்கதச் செல்வாக்கிற்குட்பட்ட , பிற்காலத்து வீரசோழியம் அதனை இட்டு நிரப்ப இயலுமா என்ன!

சான்றோர் செய்யுள் மரபில் - குறிப்பாக அகப்பொருளில் - வரும் உவமை வேறு ; சங்கத அலங்கார இலக்கண வழிவந்த உவமை வேறு எனப் புத்த மித்திரனாரும் பெருந்தேவனாரும் உணர்ந்திருக்கின்றனர். அந்த அளவில் வீரசோழியம் போற்றத்தக்கது.

Sunday, March 3, 2024

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத்துச் சீர்திருத்த, சேர்திருத்த, இலக்கண மறுப்புக் குழுக்களும். 

தமிழில் அரசாணை வழி எழுத்துச் சீரைத் திருத்தியது தவறான முன்னுதாரணம்.

தமிழில் கிரந்த வடிவங்கள் சில புழங்குகின்றன ; மிகுதியாகப் புழங்குகின்றன. ஆனாலும் அவை  அயல் வரவு என்கிற நிலையில்தான் கற்பிக்கப்படுகின்றன. அவற்றையும் வேறுபல கிரந்த வடிவங்களையும் தமிழில் சேர்க்க வேண்டுமென்கிறவர்கள் பேசாமல் தெலுங்கு அல்லது கன்னடத்தை வரித்துக்கொள்வதுதான் நேர்மை. குறைந்தது மலையாளத்தின் பக்கம் போய்விடலாம்.

சங்கத வருக்க எழுத்துகளையும் பிறவற்றையும் ஏற்றபின்னும் - மலையாளத்தை விட்டு விடுவோம் - தெலுங்கும் கன்னடமும் இருவேறு மொழிகளாக இயங்குவது ஏன் ? ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய தனித்தன்மை உண்டு.

மொழி என்பது பயன்படு கருவியாகவும் பண்பாட்டுச் சொத்தாகவும் ஒருசேர இயங்குவது. உள்ளார்ந்து நிகழும் மாற்றங்களையும் பிறமொழி ஆதிக்கத்தால் நேர்ந்த மாற்றங்களையும் காட்டி , வலிந்து மாற்றங்களைத் திணிக்கக் கூடாது. 

பயன்பாடு கருதி ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளை - அவ்வவற்றின் இலக்கணம் பிறழாமல் - கற்கும்போது ; கற்க முடியும்போது, தமிழுக்கு மட்டும் இலக்கணம் வேண்டாம் என்பது உள்நோக்கமுடையது.



இந்த உள்நோக்கத்துக்கு வரலாற்று, அறிவியல் முலாம் பூசி மருட்டும்போது தாழ்வு மனப்பான்மையுள்ள தமிழ்த் துறையினர் சிலர் ஆமாஞ்சாமி என்கின்றனர்.

இலக்கணம் தமிழ் மொழிக்கு மட்டுமன்று ; உலகத்து மொழி யாவற்றுக்கும் உண்டு. மரபார்ந்த மொழிகள் வெறும் தற்காலப் பேச்சு வழக்கை மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடாது. தமிழ் போன்ற இரு நிலை ( பேச்சு, எழுத்து) வழக்கு மொழிகளில் எழுத்து வழக்குக்கும் உயிர் உண்டு. 

விதிவிலக்குகள் இருக்கலாம் ; கருத்து வேறுபாடுகள் , விவாதங்கள் இருக்கலாம்,

'கல்த்தாரைக் கல்த்தாரே காமுறுவர் 'என்பது போன்ற - டி.கே.சி. வகையறாக் - குறுக்குச் சால்கள் இருக்கலாம்.

இவை இலக்கண மறுப்பிற்குரிய நியாயங்கள் அல்ல. இலக்கணம் இருப்பதால்தான் இவை உயிர்த்திருக்கின்றன.

இலக்கணம் தெரியாதிருப்பது குற்றமில்லை. மொழிப் பயிற்சி காரணமாக இலக்கணம் தெரியாமலே , மீறியே கூட, தம் நடையில் நுட்பங்களைக் கொணர்ந்த எழுத்தாளர் பலருண்டு.

வானொலி நேர்காணல் ஒன்றில், " தமிழ்'ல எழுதறவாளுக்குத் தமிழ் இலக்கணம் தெரிஞ்சிருக்கணுமா என்ன ?" என்று,போகிற போக்கில் , எதிர்மறையான விடைக்குக் கொக்கிபோடும்  உள் நோக்க வினாவைத் தொடுத்தார் அந்த எழுத்தாள அம்மையார்.

" தெரிந்திருக்கக் கூடாதா என்ன ?" என்று தாமொரு கொக்கியை விடையாக மாட்டினார் ஜெயகாந்தன்.

தமிழ்த் துறையாளர்கள் இலக்கணப் பெருமிதத்தை அணிந்து நின்றிடுக.

[ கொசுறு : சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு இலக்கணம் தெரியாது. அதனாலேயே இலக்கண மறுப்புக்குத் தலையாட்டுவது ... தனம்]

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...