Monday, July 26, 2021

புணரியல்பு

 




புணரியல்பு - 1: புணர்ச்சி பழகுதல் வேண்டா


         புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
         நட்பாங் கிழமை தரும் (குறள் 785, அதிகாரம்: நட்பு)

சற்றே தட்டிக்கொட்டிச் சிலசொற் பெய்து மொழிப் புணர்ச்சிக்கும் வளைத்துக்கொள்ளலாம்: புணர்ச்சி விதிகைளப் பயில்தல் ( பழகுதல்) வேண்டா; மொழி உணர்ச்சிதான் மொழியோடு நட்புரிமை நல்கும்.

பயிலுதல் வேண்டா எனில் , பயிலவே கூடாது என்பது கருத்தன்று. மொழியை உணர்தல் அதனினும் இன்றியமையாதது என்பதே கருத்து. இலக்கணத்தை நயங் கருதியே பயிலலாம்.

நட்புக் குறித்த வள்ளுவர் கருத்தும் அதுவே.நட்பில் உணர்வு இன்றியமையாதது என அழுத்தம் தருவதே அவர் நோக்கம். பயில்தொறும் பண்புடையாளர் நட்பு நயம் நல்கும் (783) என்ற வள்ளுவர், நட்பில் பயிலுதற்குரிய இடத்தை மறுப்பாரோ?

சரி.

இலக்கணக் கொத்து & உரையாசிரியராகிய சாமிநாத தேசிகரின் அவையடக்கத்தை - அவர் புலமையின் ஒரு தூசுக்கும் ஈடாகாத - நான் அப்படியே இரவல் வாங்கிக்  கொள்கிறேன் (தேசிகர் மன்னிப்பாராக!). அவையடக்கத்தைப் பொறுமையாகப் படித்தால் வியந்து சுவைக்கலாம். 

"பத்தொடு ஒன்பது பாடை நூல்களுள்
மாறு படுதல் வழக்கே, அன்றியும்
ஒவ்வொரு பாடையின் உள்ளே ஓரின்
பலநூல் மாறு படுமே அன்றியும்
ஒவ்வொரு நூற்கடல் உள்ளே ஓரின்
எழுத்துச் சொல்பொருள் யாப்புஅணி ஐந்தனுள்
ஒன்றனை ஒன்றே ஒழிக்கும்,அன்றியும்
ஓர்அதி காரத்து உள்ளே ஓரின்
ஓர்இயல் விதியினை ஓர்இயல் ஒழிக்கும்
ஓர்இயல் அதனின் உள்ளே ஓரின்
ஒருசூத் திரவிதி ஒருசூத் திரவிதி
தன்னைத் தடுத்துத் தள்ளும்,அன்றியும்
ஒருசூத் திரத்தின் உள்ளே ஓரின்
ஒருவிதி அதனை ஒருவிதி ஒழிக்கும்,
நூல்ஆ சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொர்ஆ சிரியர்
ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே,
அவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு
அவர்கருத்து அறியாது அவர்அவர் கருத்தினுள்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே,
ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே,
ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே,
நூல்உரை போதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தான் முறைமறந்து அறைவரே,
இம்முறை எல்லாம் எவர்பகுத்து அறியினும்
அவத்தை வசத்தால் அலைகுவர் திடனே,
அதிமதி நுட்பமோடு அதிகலை கற்பினும்
விதியது வசத்தால் விதிவிலக்கு அயர்ப்பாம்,
ஆகையால் அளவிடல் அரிதே, அன்றியும்
சொல்லின் கூட்டமும் பொருளின் கூட்டமும்
அவ்விரண் டனையும் அளவிடப் படாவே,
இந்நால் வகையினுள் என்னால் இயன்றது
சிறப்பாய் உள்ளன சிலதே டினன், அவை
மறப்பு என்னும் பகைவன் வாரிக் கொண்டனன்,
அவன்கையில் அகப்படாது அடங்கின வற்றுளும்
சிறிதினைச் சிறியேன் சிறிது சிறார்தமக்கு
உரைத்தனன்; அன்றிஈது ஒருநூல் அன்றே"

                              ***

எதிர்வினை ௧

பேராசிரியர் மு.முத்துவேலு அவர்கள்  ' சாமிநாத தேசிகரின் இலக்கணக்கணக் கொத்தில் ஐந்து எழுத்தால் ஒரு பாடை என்று அறையவும் நாணவர் அறிவுடையோரே  என்ற   அவரது கூற்றை எப்படிப் பார்ப்பது ?' என்று வினவியுள்ளார்கள்.

ஒரே வாக்கியத்தில் சொல்வதெனில் , சாமிநாத தேசிகர் கூற்று மொழிகளின் - குறிப்பாக எழுத்துகளின்- இயல்பை உணராத மூடத்தனத்தின் வெளிப்பாடு. அவர் காலச்சூழல் அப்படி.ஆனால், அவரது புலமையைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை.

களப்பிரர், பல்லவர் காலங்களிலிருந்தே - பொதுக் காலம் [கி.பி.] ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே -  தமிழகத்தில் அரசியல், சமய ஆதிக்க மொழிகளாகப் பாகத(பிராகிருத), சங்கத(சமற்கிருத ) மொழிகள் தலையெடுத்துவிட்டன. பொதுக் காலம் 11 ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் வடநூல் வழித் தமிழாசிரியர் என ஒரு பிரிவினரைச் சுட்டுமளவுக்குத் தமிழ்ப் பயில்வில் சங்கதம் செல்வாக்குப் பெற்றுவிட்டது. அதே நூற்றாண்டில் வடநூல் வழித் தமிழ் இலக்கணமாக வீரசோழியம் எழுந்தது.

தொடர்ந்தும் வடமொழி மேலாதிக்கம் குன்றாமல் தொடர்ந்ததன் விளைவுகள் பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து முதலியன. இவற்றின் வரலாற்றுப் பின்புலம், கோட்பாட்டு அடிப்படை முதலியவற்றைப் பேராசிரியர் சு.இராசாராம் (இலக்கணவியல் - மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்) நிதானமாக ஆய்ந்தெழுதியுள்ளார்.

எல்லீசனார் (F.W.Ellis) தென்னிந்திய மொழிகள் தனிக்குடும்பம் சார்த்தவை; வடமொழியின் வேறானவை எனச் சான்றுகளுடன் முன்மொழிந்து (1816) இரு நூறாண்டுகளாகிவிட்டன. கால்டுவெல் அந்தக் குடும்ப மொழிகளை ஒப்பிலக்கண நோக்கில் மிக விரிவாக ஆராய்ந்து நிறுவி (1856) நூற்றைம்பது ஆண்டுகளாகிவிட்டன. இருநூறாண்டுகளுக்கு மேலான திராவிட மொழிக்குடும்ப ஆய்வுகள் கால்டுவெல்லைப் பன்மடங்கு கடந்து சென்று திராவிட மொழிக்குடும்ப இருப்பை ஐயந்திரிபற நிறுவிவிட்டன.

ஆனால், இருபத்தோராம் நூற்றாண்டின் இருபதுகளிலும் சங்கதமே (சமற்கிருதமே) உலக மொழிகளின் தாய் எனப் பாரதீய  அரசு சங்கதத்திற்கு  வரிப்பணத்தை கொட்டிக்கொடுக்கிறது. இந்திய அறிஞர்களை விடுங்கள் தமிழக அறிஞர்தாமும் இதற்கு எதிராக , வன்மையாகக் கூட வேண்டாம், அறிவியல் அடிப்படையிலான உண்மையாகவாவது சொல்லலாம். ஆனால் சொல்வதில்லை.

பாவம் பதினேழாம் நூற்றாண்டுத் தேசிகர் !

----------------------------------------------------------------------------------

எதிர்வினை ௨

பேரா. முனைவர் மருதூர் அரங்கராசன் அவர்கள் கருத்து:

ஒலியன் (phoneme) பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லை.

ஒரே ஒலியன்கள் பலமொழிகளிலும் வழங்கும் என்றதெளிவு இல்லை.சம்ஸ்கிருதமொழியைத் தேவபாஷை என்று நம்பிவிட்டார்.

சம்ஸ்கிருதத்தில் இல்லாமல்,
தமிழில் உள்ள ஒலியன்களான
எ,ஒ,ழ,ற,ன -
என்னும் ஐந்து மட்டுமே தமிழுக்குரியதாகக் கருதிவிட்டார்.

சம்ஸ்கிருத இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழுக்கு இலக்கணம் படைக்க முன்வந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை:
வீரசோழியம்,
இலக்கணக்கொத்து,
பிரயோகவிவேகம்,
குவலயானந்தம்,
ஆரணச்சைலர்
அலங்கார பஞ்சகம்,
அரங்கரலங்கார மாலை ......

எனவேதான்,
சாமிநாத தேசிகர்,

"ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று
அறையவே நாணுவர் அறிவுடை யோரே!"

என்று பாயிரத்தில் அறியாமையால் குறிப்பிட்டுவிட்டார். இதைத்தான்

"தமிழ்நாட்டுப் பருப்பையும் நெய்யையும் சாப்பிட்டுவிட்டு, தமிழின் சிறப்பைக்
குறைத்துக்கூறஇவருக்கு எப்படி மனம் வந்தது?" என்று கேட்கிறார்அறிஞர் மு.வ.

இலக்கணக்கொத்து தந்த ஒரே நன்கொடை: சம்ஸ்கிருத இலக்கணக் கலைச்சொற்களுக்குத் தூயதமிழில் கலைச்சொற்களை உருவாக்கியமை.

புணரியல்பு - 2 :௧.  நிறுத்த சொல் , ௨. நிறுத்தச் சொல்

எது சரி?

இரண்டும் சரிதான்.

ஆனால் பொருள் வேறு.  ஒன்றைக் குறிக்க மற்றொன்றைப் பயன்படுத்தினால் பிழையாகிவிடும்.

'நிறுத்த சொல்' என்பது வழக்கற்றுப்போய்விட்டது. ஆனால் அது தொல்காப்பியப் புகழ்வாய்ந்தது.

௧.நிறுத்த சொல் = நிறுத்திய சொல் ( நிறுத்த - செய்த என்னும் வாய்பாட்டில் அமைந்த, பெயரெச்ச வினை. சொல் - பெயர்ச்சொல்)

௨.நிறுத்தச் சொல் = நிறுத்துமாறு சொல் (நிறுத்த - செய என்னும் வாய்பாட்டில் அமைந்த, வினையெச்ச வினை. சொல் - வினைச்சொல்)

                / பெயரெச்சம்
நிறுத்த
                 \ வினையெச்சம்
              

             / பெயர்ச்சொல்
சொல்
             \ வினைச்சொல்

நம் காலத்தில் நிறுத்த என்னும் வினையெச்சம் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.

நிறுத்த சொல், குறித்துவரு கிளவி என்னும் தொல்காப்பியக் கலைச்சொற்களை  முறையே நிலைமொழி, வருமொழி என்பது பெருவழக்காகிவிட்டது.

கொஞ்சம் தொல்காப்பியம் ( இலக்கணக் கலைச் சொற்களைத் தவிர்க்க முடியவில்லை. சலிப்பூட்டலாம். வேறு வழியில்லை)


உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்,
உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்,
மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்,
மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும், என்று
இவ் என அறியக் கிளக்கும் காலை-
நிறுத்த சொல்லே, குறித்து வரு கிளவி, என்று
ஆயீர் இயல-புணர் நிலைச் சுட்டே (புணரியல் 5)

என்னும் , எழுத்து அடிப்படையிலான புணரியல் நூற்பாவுக்குத் தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரையாசிரியர் ச.பாலசுந்தரம் அவர்கள் தரும் உரைவிளக்கம்:

"புணர்ச்சி என்பது நின்ற சொல்லின் ஈற்றெழுத்தும் அதன்   எதிர்வரும்சொல்லின்     முதலெழுத்தும்      இயையும்     நிலைமைத்தெனினும், நிறுத்த சொல்லின்     திணைபால்வகை    முதலியவற்றானும்     குறித்துவருகிளவியின் திணைபால் வகை முதலியவற்றானும்  அல்வழி,  வேற்றுமைஎன்னும் பொருள் நோக்கினானும், அவை இயல்பும் திரிபுமாகிய நிலைகளை எய்துதலான், புணர்ச்சி இலக்கணம் சொற்களை அடிப்படையாகக் கொண்டே நிகழும் என்பதனை உணர்த்த 'நிறுத்த சொல்லே குறித்து வருகிளவி என்று ஆயீ ரியல ' என்றார்

" ஒருவர்    ஒருகருத்தைத்    தொடர்மொழியாற்     கூறமுற்படுங்கால் அடுத்தடுத்து   வரும்   சொல்லின்  பொருள்நிலைக்கேற்ப முதற்சொல்லை
அமைத்துக் கூறுவராதலின் நின்றசொல் என்னாது ‘‘நிறுத்தசொல்’’ என்றும், அவ்வாற்றானே எதிர்வரும் சொல்லையும்   "குறித்து வருகிளவி "  என்றும்
குறியீடு   செய்தார்.   இக்குறியீடுகளின்   நுண்மையை       இடைக்காலஇலக்கணநூலார் ஓராராயினர்"
                                      ___________
                                     
நிறுத்த சொல், குறித்து வருகிளவி என்பன நுட்பமானவை எனினும் கையாள எளிதாயிருப்பதால் நிலைமொழி, வருமொழி என்னும் வழக்கு நிலைத்துவிட்டது.  அது, இயல்பானது; சரியானது. மேலும்,

அ, ஆ,  உ, ஊ,  ஏ, ஒள என்னும்
அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர்,
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை.

எனத் தொல்காப்பியத்திலேயே உருபியல் முதல் நூற்பா வில் ' நிலைமொழி ' என்பது ஆளப்பட்டுள்ளது ( ஆராய்ச்சிக் காண்டிகையுரையாசிரியர் பாலசுந்தரனார் கருத்தூன்றியிருந்திருந்தால், ௸  நூற்பாவின் இரண்டாமடியை, ' அப்பால் ஆறன் நிறுத்த சொல்முன் ' என்று மாற்றிக்,  கொண்டிருப்பார்😀) நிற்க.

அவற்றுள்,
நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு
குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய,
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்,
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்,
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்,
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்,
மூன்றே திரிபு இடன், ஒன்றே இயல்பு என
ஆங்கு அந் நான்கே-மொழி புணர் இயல்பே(புணரியல் 6)

அவைதாம்,
மெய் பிறிது ஆதல், மிகுதல், குன்றல், என்று
இவ்' என மொழிப-திரியும் ஆறே (புணரியல் 7)

வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்,
வேற்றுமை-அல்வழிப் புணர்மொழி நிலையும்,-
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்,
ஒழுக்கல் வலிய-புணரும் காலை(புணரியல் 10)

என்னும் இவை புணர்ச்சியின் பொருள் அடிப்படைகளை வரையறுக்கிறது.


                                               ௧
நிலை, வருமொழிகளின் ஈறும் முதலுமாகிய உயிர், மெய்
(1)ஒலிகள் மட்டுமன்றிப் (புணரியல் 5)
(2)பொருளும் புணர்ச்சிக்கு இன்றியமையாதது என்று தொல்காப்பியம் தெளிவுபடுத்துகிறது (புணரியல் 6, 7, 10)

                                                 ௨
தொல்காப்பியம் அகப் புணர்ச்சியை(Internal sandhi), அதாவது ஒரு சொல்லின் உள்ளுறுப்புகள் சேர்வது பற்றிய பகுபத உறுப்பிலக்கணத்தைக் கருதவில்லை.

தொடரியல் நோக்கிலான புறப்புணர்ச்சியையும்(External sandhi) அதற்கு இன்றியமையாதனவற்றையுமே அது பெரிதும் விவரிக்கிறது.

மீண்டும் நிறுத்த + சொல்.
எழுத்து/ ஒலி மட்டும் புணர்ச்சிக்கு அடிப்படையாயிருந்தால் நிறுத்த சொல் என்றோ,
நிறுத்தச் சொல் என்றோ இரண்டில் ஒன்று மட்டுமே அமைந்திருக்கும்.ஆனால்,
இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்ட தொடர்கள். அவற்றை நாம் மேலே பார்த்தோம்.

இயல்பு புணர்ச்சி
நிறுத்த ( நிலைமொழி)+ சொல் (வருமொழி) =நிறுத்த சொல் (எந்த மாறுதலும் இன்றி இரண்டும் இயல்பாக அமைந்துள்ளன) இதனை இயல்பு புணர்ச்சி என்பர்.

திரிபு புணர்ச்சி
நிறுத்த+சொல்=நிறுத்தச் சொல் - மிகுதல்¹ (நிலைமொழி வருமொழிகளுக்கிடையில் - ச் - என்பது புதிதாக மிகுகிறது  )

தொழில் + சாலை = தொழிற்சாலை     - மெய் பிறிதாதல்² ( நிலைமொழியின் இறுதியில் உள்ள ல் - என்னும் மெய் , ற் - என்னும் பிறிதொரு (மற்றொரு) மெய்யாகியிருக்கிறது)

மாநிலம்+ வருவாய்= மாநில வருவாய் - குன்றல்³ (நிலைமொழி இறுதியில் உள்ள - ம் மறைந்துவிட்டது)

தமிழிலக்கணக் கல்வியில்  நன்னூல் செல்வாக்குச் செலுத்துவதாலும் சுருக்கம் கருதியும் ௸ மூன்றையும் 1.தோன்றல், 2. திரிதல், 3. கெடுதல் என்பது பயிற்சியில் உள்ளது
கலைச்சொற்களும் சலிப்பூட்டுபவைதாம். அதிலும், ஒன்றைக் குறிக்க வெவ்வேறு சொற்கள் என்றால் மாறிமாறித் தலைசுற்றும். இப்போதைக்கு வெறுமனே தெரிந்துகொள்வோம். மல்லுக்கட்ட வேண்டாம்.

இந்தப் பகுதியை முடிப்பதற்கு முன் ...

நிறுத்த சொல் - என இயல்பாக இணைந்தால் ஒரு பொருள்; ஒருவகைத் தொடர்.

நிறுத்தச் சொல் - எனத் திரிந்து இணைந்தால் வேறு பொருள்; வேறு வகைத் தொடர்.

அப்படித்தானே?

ஒரு புதிர்: பத்துமணி+செய்திகள் = பத்துமணிச்செய்திகள் - என்றால் என்ன பொருள்?

புணரியல்பு 3 : பத்துமணிச் செய்திகள்

இத்தொடரில் பத்து, மணி, செய்திகள் ஆகிய மூன்று சொற்கள் உள்ளன.

௧.பத்து மணி  செய்திகள்
     I            I                l  
     ------------                l         
              I                    l   
              ------------------

௨. பத்து  மணி செய்திகள்
           I          I              I
           I            ------------
           |                  |
            ---------------                   
          
௧. பத்துமணிக்குரிய செய்திகள் (பத்துமணிக்கு ஒலி / ஒளி பரப்பாகும் செய்திகள். இது வேற்றுமைத் தொடர்)

௨. பத்து   மணியான / மணி போன்ற செய்திகள்
(மணியான செய்திகள் எனில் மணி பெயரடை .
மணி போன்ற செய்திகள் எனில் மணி உவமை.
இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இரண்டும் பொதுவாக 'முக்கியமான' / 'சிறந்த' (செய்திகள்)
என்பதையே குறிக்கின்றன. நுட்ப வேறுபாடு விடுத்து வசதி கருதி அடைத்தொடர் என்றே கொள்வோம். இது, அல்வழித் தொடர்)

வலி மிகல், மிகாமைகளால் இவற்றின் பொருளை வேறுபடுத்த இயலாது.
அப்படி வேறுபடுத்தலாம் என்று சிலர் சொல்லக் கேட்டதுண்டு.

இரண்டு தொடர்களிலும் மரபிலக்கணப்படி
மணிச் செய்திகள் என்றே வலி மிகுதல் வேண்டும்.


1.முருகன் காப்பான் (தமிழை என்னிடமிருந்து😀) -எழுவாய்த் தொடர்/முதலாம் வேற்றுமை
8.முருகா! காப்பாற்று(                            ௸                  ) - விளித் தொடர்/எட்டாம் வேற்றுமை
இவ்விரண்டும் வேற்றுமைகள்தாம் என்றாலும், புணர்ச்சி இலக்கணப்படி (வேற்றுமை அல்லாத) அல்வழித் தொடர்கள் எனப்படும். பின் வரும் வேற்றுமைத்தொடர்கள் அல்லாத வேறு பலவும் அல்வழித் தொடர்கள் எனப்படும். நன்னூல் அவை 14 என்று வரிசைப்படுத்தும்.

2.முருகனைக் கண்டேன் (முருகன்+ஐ)                       - இரண்டாம் வேற்றுமை                                
3. முருகனொடு வந்தவள்ளி (முருகன் + ஒடு)          - மூன்றாம் வேற்றுமை
4. முருகனுக்குப் படையல் (முருகன் + கு)                  - நான்காம் வேற்றுமை
5. முருகனின் (முருகனை விட) அழகன் இல்லை    - ஐந்தாம் வேற்றுமை
                                                          (முருகன் + இன்)
6. முருகனது திருமலை(முருகன் + அது)                    - ஆறாம் வேற்றுமை
7. முருகனிடம் ஆசை வைத்தேன் (முருகன் + இடம்) - ஏழாம் வேற்றுமை

  ஐ, ஒடு,கு, இன், அது, கண் ஆகியன வேற்றுமை உருபுகள். முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை (எடுத்துக்காட்டில் இடம் என உள்ளதும் ஏழாம் வேற்றுமை உருபுதான்)
தமிழ் மரபில் எழுவாய்க்கு உருபு இல்லை. முருகன் ஆனவன், முருகன் ஆகப்பட்டவன் என்பன போன்றவை பிற்காலத்தன; வடமொழிச் செல்வாக்கின் விளைவாகலாம். உருபு இல்லா முதல் வேற்றுமையில் வேற்றுமைத்தன்மை என்ன இருக்கிறது?

பெயர்ச் சொல்லாயினும் , ஒரு தொடரின் பயனிலைக்குரியதாகத் தோன்றி நிற்கும் போதுதான்  முருகன் எழுவாய். அதனால்தான் தொல்காப்பியம்,

"எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே" ( வேற்றுமையியல் 4) என்கிறது.

"அஃதேல், பெயர் என அமையும், தோன்றும் நிலை என்றதனான் பயன் என்னை எனின், பெயர் கண்டுழி எல்லாம் வேற்றுமை என்று கொள்ளற்க என்பது அறிவித்தற்கு எனக் கொள்க" எனத் தெளிவுபடுத்துவார் தெய்வச்சிலையார்.

எழு(தல்) + வாய் = எழுவாய் . இங்கு '-வாய்' என்பது ஒருவகைத் தொழிற்பெயர் விகுதி.
கழு(வுதல்) + வாய் = கழுவாய், இறு(தல்) + வாய் = இறுவாய், தோற்று (தல்) + வாய் = தோற்றுவாய் முதலியன காண்க.

எட்டே வேற்றுமை என்பது மரபு. இது, அறிமுகம்தான். இவற்றில் வேறு பல விவகாரங்கள் உள்ளன. ஒரு விவகாரம் இங்கேயே இருக்கிறது.

பத்துமணிச் செய்திகள்- பத்துமணிக்கு உரிய செய்திகள் / பத்துமணிக்கு ஒலி/ஒளி பரப்பாகும் செய்திகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.  - கு என்பது நான்காம் வேற்றுமை உருபு.  பத்துமணிக்கு ஒலி/ஒளிபரப்பும் பொருட்டுத்தொகுக்கப்படும் செய்திகள் எனில்,

"அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின்
அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின்
அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாதலின்
நட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென்
றன்ன பிறவும் அதன்பால என்மனார்" ( வேற்றுமையியல்12)

என்னும் நான்காம் வேற்றுமைப் பொருள்களுள் அதற் பொருட்டு என்பதில் அடங்கும்.

ஆனால், இத்தொடரை ஏழாம் வேற்றுமைத்தொடர் என்றும் சொல்லலாம். பத்துமணியின் கண் - பத்துமணி என்கிற நேரத்தில்- ஒலி/ஒளிபரப்பப்படும் செய்தி என்று கொண்டால்,

"ஏழாகுவதே,
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே "
                                              (வேற்றுமையியல் 15)
என்னும் நூற்பா காலத்தின் என்பதனால் அது, ஏழாம் வேற்றுமைத் தொடராகும்.

                                                           *******************

வேற்றுமைத் தொடரில் இகர இறுதிப் பெயர்ச் சொல்(மணி=  ம் +அ+ண் + இ) வல்லெழுத்தை முதலாகவுடைய சொல்லோடு (ச் + எ +ய்+த்+ இ) புணரும்போது வல்லெழுத்து மிகும் என்பது விதி (- இ+ச்- > - இ+ச் +ச்-).

"இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே "(தொல். உயிர் மயங்கியல் 33)

இகர ஐகார ஈற்றுச் சொற்கள் அல்வழியில் இயல்பாகவும், மிகுந்தும், இரண்டும் உறழ்ந்தும் புணரும் என்கிறது விதி (தொல்.தொகைமரபு 16).

" எழுவாய்த் தொடர்கள் பெரும்பான்மையும் இயல்பாயும் [மணி பெரியது]¹சிறுபான்மை உறழ்ந்தும் [கிளி குறிது√, கிளிக் குறிது√]² வரும். உவமத்தொகை[மணிச் செய்திகள்- ௨]³ , இரு பெயரொட்டுப்பண்புத்தொகை [மார்கழித் திங்கள் ]⁴ இவை பெரும்பான்மையும் மிக்கு வரும் " என்று தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரையாசிரியர் ச.பாலசுந்தரம்.

1,3,4- நான் தந்த எடுத்துக்காட்டுகள்
2- இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தந்தவை. கிளிக் குறிது என எழுவாய்த்தொடரில் வலி மிகுதல் தமிழ் இயல்பிற்கு மாறானது. 'இரண்டும் சரி' என்னும் உறழ்ச்சி பற்றி ஆராய வேண்டும்; ஆராய்ந்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

'பத்துமணிச் செய்திகள்' போலப் புணர்ச்சியில் ஒத்திருந்து பொருள் வேறுபட்டால் உணர்வது எப்படி?

அதையும் தொல்காப்பியம் சொல்லியிருக்கிறது


புணரியல்பு 4 : ஊக்கமது கைவிடேல்

ஒளவையாரின்.,"ஊக்கமது கைவிடேல் " என்பதற்கு 'ஊக்கத்தைக் கைவிட்டுவிடாதே' என்பது பொருள். ஊக்கம் + அது + கைவிடேல் என்று பிரிக்கலாம். கைவிடேல் என்பது (எதிர்மறை) வியங்கோள். ' ஊக்தக்  கைவிடாதே என்று கொள்வதில் தவறில்லை. இது, நல்ல அறிவுரைதானே!

"நான் நாள் தோறும் ஒளவையார் வாக்கைக் கடைப்பிடிக்கிறேன். ஆம். ஒளவையார் 'ஊக்க  மது கைவிடேல்' என்றாரே! " என்றாராம் மதுப்'பிரியர்' ஒருவர் .

                                                1.ஊக்கம் + அது கைவிடேல்
                                              / 
ஊக்கமது கைவிடேல்
                                              \
                                                 2. ஊக்க + மது கைவிடேல்

திருமுருக கிருபானந்தவாரியார்  நல்ல அறவுரைகளை அல்லனவாகப் பொருள் கொள்வோர் பற்றிச் சொல்லும்போது இவ்வாறு வேடிக்கையாகக் குறிப்பிடுவார்.    (1. ஊக்கமது - என்பதில் உள்ள அது பகுதிப் பொருள் விகுதி. ஊக்கம் என்பதன் பொருளையே 'அது' வும் கொண்டிருக்கிறது. 2. ஊக்க  மது = ஊக்கம் மது. ஊக்கத்தைத் தருகிற மது.)

செம்பொன்பதின்றொடி¹

குன்றேறாமா²

1. செம்பொன் +பதின் தொடி,     செம்பு     +ஒன்பதின் தொடி
2. குன்று + ஏறு + ஆமா,  குன்று + ஏறா+ மா

இவையெல்லாம் பிரிமொழிச் சிலேடைத் தொடர்கள். இத்தொடர்களிலுள்ள  சொற்களைப் பிரிப்பதற்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.

1.1.செம்பொன்பதின்றொடி என்பதை ,செம்பொன் (தங்கம்)  பதின் ( பத்துத்) தொடி (எடையளவு)= தங்கம் பத்துத் தொடி

1.2.செம்பு ஒன்பதின் (ஒன்பது) தொடி= செம்பு ஒன்பது தொடி என இரு பொருள்படப் பிரிக்கலாம்.

2.1.குன்று  ஏறு  ஆமா =குன்றில் ஏறும் காட்டுப்பசு
2.2.குன்று  ஏறா மா =குன்றில் ஏறாத விலங்கு என இரு பொருள் படப்பிரிக்கலாம்.

சரி. இவை ஏன் இங்கு ?

மேலே கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரைகளிலிருந்து எடுத்தவை. எதற்குரிய எடுத்துக்காட்டுகள் இவை?

" எழுத்து ஓரன்ன பொருள்தெரி புணர்ச்சி
  இசையின்  திரிதல் நிலைஇய பண்பே "
                                              (புணரியல்  39 )
" எழுத்து ஒரு தன்மையான, பொருள்விளங்க நிற்கும் புணர்மொழிகள் ஓசைவேற்றுமையான் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற பண்பு" என்பார் இளம்பூரணர். நச்சினார்க்கினியரும் ஏறத்தாழ இவ்வாறே உரைப்பார்.

நூற்பாவில் புணர்ச்சி என்னும் சொல் உள்ளது ; புணர்மொழிகள் என்பது வெளிப்பட இடம்பெறவில்லை. உரையாசிரியர் இருவரும் 'புணர் மொழிகள்' (பூரணர்)/பொருள் மொழிகள் (நச்சர்)என்பதை எவ்வாறு கொண்டனர் என்பது விளங்கவில்லை.

எழுத்தால் முழுதத்த, பொருள் வேறுபட்ட,  புணர்ச்சி ஓசையால் திரிதல் நிலைத்த பண்பு  - என நூற்பாக் கிடந்தாங்குச் சொல்லுக்குச் சொல்பொருள் காணலாம்.

இதற்குப் பிரிமொழிச் சிலேடைகளை மட்டுமே எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டியதில்லை.

பத்துமணிச்செய்திகள்- போன்றவையும் எடுத்துக் காட்டுகள்தாம்.

சொற்களை இடம்விட்டு எழுதுவதன் மூலம், தொல்காப்பியர் கூறும் இசைத் திரிபை எழுத்தில் காட்டலாம்.

பத்துமணிச்   செய்திகள் (பத்துமணிக்குரிய...)
பத்து  மணிச்செய்திகள் (பத்து மணியான...)

இத் தொடர்களில் 'மணி' என்பது எழுத்தால் முழுதொத்த, ஆனால் வெவ்வேறு பொருள்தரும் சொல்லாகும். அகராதியில் இருவேறு சொற்களாகவே பதிவுறும். சொற்பொருள் வேறுபாடு காரணமாகவே இரு தொடர்களிலும் பொருள் வேறுபடுகிறது.

மற்றொரு தொடரைப் பார்ப்போம்.

பழைய புத்தகக் கடை-  இது, ஒரு மயங்குநிலைத் (ambiguous) தொடர். இதில் எந்தச் சொல்லும் இருவேறு பொருள் குறிக்காத நிலையிலும், தொடராகும்போது இருவேறு பொருள் தருகின்றன. இடம்விட்டு எழுதுவதன் மூலம் இத்தகு தொடர்களின் பொருள் வேறுபாட்டையும் காட்டலாம்.

௧.பழைய   புத்தகக்கடை (பழமையான  புத்தகக்கடை)
௨.பழையபுத்தகக்  கடை (பழைய புத்தகங்கள் விற்கும் கடை)

அண்மையுறுப்புப் பகுப்பாய்வு (Immediate Constituent Analysis) முறையில் பின் வருமாறு இரு தொடர்களையும் அமைத்துக்  காட்டலாம்.

௧.பழைய புத்தகக்கடை
        |            |             |
        |            ------|-----
        -----------------|

௨.பழைய புத்தகக்  கடை
         |           |                 |
           --------                  |
                 |------------------           

சரி. முடிவுக்கு வருவோம்.

புணர்ச்சி வேறுபாடுகளால் மட்டுமே பொருள் வேறுபாடுகளைக் காட்ட இயலாது.

எனவேதான்,புணரியல்பை உணராமலோ, பொருட்படுத்தாமலோ நேரும் புணர்ச்சிப் பிழைகள் பெரும்பாலும் பொருளைப் புரிந்துகொள்வதற்கு இடையூறாக இருப்பதில்லை.




29.05.2020 இந்து தமிழ்[த்]திசை யின் திருச்சிப் பதிப்பில் முதற்பக்க முக்கியச்செய்தித் தலைப்பிலேயே மிக வேண்டிய இடத்தில் வலி மிகவில்லை. ஆனால், செய்திப்பத்தியில் அதே தொடர் பிழையின்றி அமைந்துள்ளது. முதல் களத்தில் (column) மட்டும் எட்டு இடங்களில் வலிமிகாப் பிழைகள் காணப்படுகின்றன. ஏடு நடந்துகொண்டுதானே இருக்கிறது!

கோவிட் 19 அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போதே பொறுப்பின்றி நடந்துகொள்ளும் நாம் , உடல் துன்பத்திற்கோ உயிர் இறுதிக்கோ காரணமாகாத மொழியிடம் பொறுப்பாக நடந்துகொள்வோமா ? நடந்துகொள்ள வேண்டுமா என்ன!

புணரியல்பு 4 இன் எதிர்வினை ௧: பேராசிரியர் சத்தியநாராயணன்.

பழைய புத்தகக் கடை, பத்து மணிச் செய்திகள் ஆகியவற்றிற்கும் செம்பொன்பதின்றொடிக்கும் வேறுபாடு உள்ளதே. ஒலியழுத்தம் நுவன்முறையால் வேறுபடலாம். ஆனால் பழைய (1) புத்தகம் (2) கடை (3) ஆகியன முழுவடிவச் சொற்கள். அவற்றை முற் சொல்லுடனோ பிற்சொல்லுடனோ இயைத்துக் கூறுதலில் பொருள் வேறுபடும். மொழியியல் கூறும் மயக்கத் தொடர்கள். 

ஆனால் செம்பொன்பதின்றொடி அவ்வாறன்றே. செம்பு என்றும் செம்பொன் என்றும் ஒன்பதின் என்றும் பதின் என்றும் வேறுபடுமே;புணர்ச்சியுற்ற தொடரைப் பிரித்திசைக்கும் விதத்தில்தான் சொல் எதுவென்றே புலனாகும்.

பொன்னாழி> பொன்+ ஆழி , பொன்+ நாழி என்பன போல் வேறுபடும்.  
எழுத்தோரன்ன என்று தொடங்கும் நூற்பா தோற்றத்தால் ஒரு வடிவின என்று சொல்லும்போதும் இசையில் திரிதல் என்பது கருத்துணர்த்தலில் நேரும் ஒலியழுத்தம் ஆகாது என்று கருதுகின்றேன். புணர்ச்சியில் ஒரு வடிவமுற்ற ஒலிகளால் அமைந்த புணர் தொடரைப் பகுக்கும்போது ஒலிகள் வேறு வேறு (எழுத்து) ஒலிகளாகத் திரிதல் என்று கொள்ளவேண்டும் என்பது என் எண்ணம். இதில் பிழையிருப்பின் சுட்டிக் காட்டுக.
-- --- --- --- --- -----
என் விளக்கம்:
தொல்காப்பியர் என்ன கருதினாரோ தெரியவில்லை.

சற்றுக் கூர்ந்து நோக்கினால் , ௧.செம்பு+ஒன்பதின் தொடி, செம்பொன் + பதின்றொடி என்பனவும்,  ௨.பத்துமணி+செய்திகள், பத்து + மணிச் செய்திகள் என்பனவும் ஒருங்கே இடைவெளியின்றிச் சொல்லுதல் , பொருள் வேறுபாட்டிற்கேற்ப முன் பின் சொற்களுடன் இயைதல் என்பதில் பொதுத்தன்மையவே.

இங்கும், பத்துமணி என்பதில் 'மணி' நேரத்தையும், மணிச் செய்திகள் என்பதில் 'மணி' அணியும் மணியையும் குறித்து வேறுபடுகின்றன.அப்புறம், முற்சொல்லுடனோ, பிற் சொல்லுடனோ இயைதல்தானே புணர்ச்சி?
என் விளக்கத்தில் பிரிமொழிச்சிலேடைகளை ஏற்று, பிறவும் இசையில் திரிவனவுள என்னும் வகையில் இவற்றைத் தந்துள்ளேன்.


௧,௨ - ஆகிய இரண்டும் , தொடராகும்போது,எழுத்தோரன்னவைதாமே !

மேலும், புணரியல் என்பது, நிலை  வரு மொழிகள் புணர்தல் பற்றியதேயன்றிப் புணர்ந்து நிற்கும் தொடர்களைப் பிரித்துப் பொருள் கொள்ளும் பொருள்கோள் பற்றியதில்லையே? இங்குப் புணர்ச்சியில் நிலைபெற்ற (நிலைஇய )ஒரு பண்பு கூறப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.  தடுமாறு தொழிற்பெயர் சற்று வேறுபட்டது.

இதனோடு தொடர்புடைய வேறு சிலவற்றையும் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி 
இசையின் திரிதல்¹ நிலைஇய பண்பே

என்பதை  அடுத்துவரும் நூற்பா:

அவைதாம்,
முன்னப் பொருள* புணர்ச்சிவாயின்
இன்ன என்னும் எழுத்துக் கடன் இல²வே

(*முன்னப்பொருள= குறிப்பால் உணரும் பொருண்மையை உடையன )

செம்பொன்பதின்றொடி  முதலிய உதாரணங்களைத் தரும் பூரணரும் நச்சரும்  இவற்றைப் பிரித்துக்காட்டி  விளக்கவில்லை(1)'இசையின் திரிதல் ' என்றது ஒலியெழுத்திற்கு எனவும் (2)'எழுத்துக் கடன் இல'  என்றது வரி வடிவிற்கு எனவும் , பூரணரும் நச்சரும் கொள்வர்[பொதுவாகவே பண்டை உரையாசிரியர்கள் சொற்களைப் பிரித்து எழுதி விளக்கும் வழக்கம் இல்லை. இட நெருக்கடி காரணமாகச் சுவடிகளில் அதற்கு வாய்ப்பில்லை போலும். நேரிற் பாடஞ்சொல்லுங்கால் விளக்கியிருப்பர் எனலாம். முனைவர் கி. செம்பியன் அவர்கள் தொல்காப்பிய எழுத்ததிகார எடுத்துக்காட்டுகளைப் பிரித்து விளக்கும், பயனுள்ள, கருவிநூலொன்றை ஆக்கியுள்ளார்].

பின்னுள்ள நூற்பா உரைவிளக்கத்தில், " ஒலியெழுத்தின் செல்வுழிப்பொன் ஆராய்ச்சி உள்வழிப் பொன் எனவும், செம்பு ஆராய்ச்சி உள்வழிக் செம்பு எனவும் குறிப்பான் உணரப்பட்டது " என்பர் பூரணர். நச்சரும் வழிமொழிவர்.

" முன்னருள்ள சூத்திரத்தில் பல பொருளுள்ள ஒரு தொகைமொழி ஓசை வேற்றுமையால் மாறுபடுமெனக் கூறப்பட்டமையான் , அப்பொருள் வேற்றுமை எதனாற் புலப்படுமென ஐயந் தோன்ற, குறிப்பான் உணரப்படும் என இச்சூத்திரம் ஐயம் அகற்றிற்று எனக் கூறின் , குற்றமென்னை? " என வினா எழுப்புகிறார் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - குறிப்புரை, 1937)

ஓசையால் பொருள் வேறுபடுமெனின்  முன்னம் எதற்கு?

ஓலைச் சுவடியெழுத்துக் காலத்தில் சொற்களைப் பிரித்தெழுதும் வழக்கமில்லை (மேலும், பிரித்தெழுதல் பாவோசையமைதிக்கு மாறானதுமாகும்) எனவே, 'இசையின் திரி'ந்து , வேறுபடும் பொருள்களைக் காட்டும் வரி வடிவ எழுத்துமுறைமைகள் இல்லை;இடைவெளியின்றி எழுதப்படும் ஓலைச்சுவடிகளில் காணும் , எழுத்தோரன்ன புணர்ச்சியில் பொருள் வேறுபடுமாயின் , உணர முன்னம் தேவை என்பது பின்னுள்ள நூற்பாவின் பொருளாகலாம்

அச்செழுத்துக் காலத்தில் பிரித்து அச்சிடும் வசதி வந்து, கையழுத்திலும் செல்வாக்குச் செலுத்துகிறது.ஒலியெழுத்தாலோ, வரி வடிவ எழுத்தாலோ காட்ட முடியாத எழுத்தோரன்ன பொருள்தெரி புணர்ச்சிகளும் உள்ளன.

அமரர் மருத்துவர் வ.பொன்முடி நினைவிற்கு வருகிறார். முகநூலில் பொன்முடி வடிவேல் என்னும் பெயரில் [வடிவேல் அவருடைய தந்தையார் பெயர்] இயங்கிவந்தார்.அவரது கடும் பிடிவாதம் காரணமாக அவரோடு கருத்துவேறுபட்டு , முகநூல் வழி உரையாடலை முறித்துக்கொண்டேனாயினும் , அவரது மிகைநுட்ப இலக்கண ஆர்வத்தை நான் மதித்தேன்.அவரிடம் கொண்டிருந்த மதிப்பைச் சுட்டியே உரையாடலை முறித்தேன். ஆனால், அவரது  அகாலமரணம் எதிர்பாராத அவலம்.
இலக்கண ஆய்வாளர்கள் அவரது (ஒரே)நூல்,  முகநூல் இடுகைகள் வழி அவரது கொள்கையை ஆராயலாம்; ஆராய வேண்டும்.
சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுவதன் வழி, பொருள் வேறுபடுதலுக்கும் , அவ்வேறு பாட்டிற்கேற்ற - வலிமிகுதல், மிகாமை முதலிய- புணர்ச்சி வேறுபடுதலுக்கும் மிகைநுட்ப முதன்மை தந்தார் அவர். ஒரு முறை முகநூல் வழி உரையாடலின்போது,

௧. வடிவேல் - வடித்த வேல் (வினைத்தொகை)
௨. வடிவேல் - அழகிய வேல் (அடைத்தொடர்)
௩. வடிவேல் - முருகனைக் குறிப்பது (ஆகுபெயர்/அன்மொழித்தொகை? )
௪. வடிவேல் - இறைவன் பெயரால் ஒருவற்கு இடப்பெறும் இயற்பெயர்
௫. வடி! வேல் - ஏவல் வினைத்தொடர்
௬. வடிவு + ஏல் - ('வடிவு ஏற்றிடுக ' என்னும் ) வியங்கோள்

இவற்றை எவ்வாறு பொருள் வேறுபட, சேர்த்தும் இடம்விட்டும் எழுதிக் காட்டுவது? என்று கேட்டேன். அவரது மிகைநுட்ப இலக்கணக் குதர்க்கத்திற்கு எதிரான எனது குதர்க்கம் x குதர்க்கம் = குதர்க்கம்² வாதம் இது. 'வடிவு ஏல்' தவிர்ந்த பிற யாவும் செம்மொழிச் சிலேடையொத்தவை.
போகட்டும்.
வடிவு ஏல்  என்பதைப் பிரித்தெழுதிவிடலாம். இக்காலத்தில் நிறுத்தற்குறிகளால் சிலவற்றை வேறுபடுத்தி உணர்த்தலாம். எல்லாவற்றையும் ஒலியாலோ , எழுத்தாலோ, நிறுத்தற்குறியாலோ வேறுபடுத்த இயலாது; முன்னம்தான் வழி.

பொருள் தெரிதல்
இசையின் திரிதல் -  ஆகியன பற்றியும் சில சொல்லவேண்டும். இப்போது வேண்டாம்.

நான் இலக்கண ஆய்வாளனல்லென். ஆய்வாளர்கள் மெய்ப்பொருள் காண்பாராக.

புணரியல்பு 4 இன் எதிர்வினை க.௨(தொடர்ச்சி)

அவர் வழி தனி வழி!

எந்தச் சொல்லுக்கும் பொருள் இல்லை
ஆனால்,
எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறிக்கும் !

தொல்காப்பியப் பெயரியலின் முதல் நூற்பா:
'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே'

இதற்கு, " உலகத்தாரான் வழங்கப்பட்ட எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன, என்றவாறு " என்று பொருள் கூறுவார் தெய்வச்சிலையார் ; சொற்பொருள் பற்றிய உலகப் பொதுவான வரைவிலக்கணமாக இதனைக் கொள்வார்.

நிறைவாக, " எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன'  என்பதற்குப் பொருள், 'எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும்' என்றவாறு. எனவே, இச் சொல் இப்பொருள் உணர்த்தும் உரிமையில என்றவாறாம் .
என்னை உரிமையிலவாகியவாறு எனின், உலகத்துப்பொருள் எல்லாவற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மையுணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்ப முடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க.
எனவே பொருள் பற்றி வரும் பெயரெல்லாம் இடுகுறி என்பது பெறப்பட்டது. இவ்விடு குறியால் அடிப்பட்ட சொல்லோடு ஒட்டி மற்றொரு பொருட்கும் பெயராகி வருவது காரணக்குறியாம்" - என்பார் தெய்வச்சிலையார்.

வூ¹ , இயெ² ,மேய்சன்³, சிலோய் தொம்⁴ இவையெல்லாம் என்ன? ஒரே பொருளைக் குறிக்கிற வெல்வேறு மொழிச்சொற்கள் . இவை முறையே  1.சீனம்,  2.யப்பானியம், 3.பிரெஞ்சு,  4.உருசிய மொழிகளில் வீடு என்பதைக் குறிப்பன (கூகுள் மொழிபெயர்ப்புத் துணை). ஒரு பொருள் குறிப்பினும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. அப்படியானால் சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் தொடர்பில்லை.
இதைத்தான் தெய்வச்சிலையார், " பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மையுணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்ப முடிந்ததோர் இலக்கணம் இன்மை " என்கிறார்.

சொல் , பொருளைக் குறிக்குமேயன்றி, பொருளைக் கொண்டிருப்பதில்லை. சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தன்னிச்சையானது (arbitrary) ;   ஒரு சொல், பொருளைக் குறிப்பது அவ்வம்மொழி மரபுசார்ந்தது; காரணமற்றது. எனவேதான், " எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும்' என்றவாறு. எனவே, இச் சொல் இப்பொருள் உணர்த்தும் உரிமையில "  என்றார் தெய்வச்சிலையார்.

சொல்லுக்கும் குறிக்கும் பொருளுக்குமான தொடர்பின்மையைப் புதிது புதிதான குழுஉக் குறிகள், குறுமொழிகள்  முதலியன காட்டும்.
'டுபாக்கூர்' என்பது ஏமாற்றுவோரைக் குறிக்கும் சென்னை வட்டாரக் குறுமொழி. இதன் வேர் பற்றிய சில கருத்துகள் உள்ளன. திரைப்படத்தின் வழியாக இது, அறிமுகமாகி விட்டது. இதன் பரவலைப் பொறுத்துத் தற்காலத் தமிழ் அகராதியில் சேர்க்க வேண்டியிருக்கலாம்.

சொற்பொருள் மாற்றப் போக்கில் , முன்பு குறித்த பொருளன்றி அதற்கு மாறான பொருளைக்கூட ஒரு சொல் குறிக்கலாம். 'நாற்றம்' ஒரு காலத்தில் நல்ல மணத்தைக் குறித்தது. இப்போது தலைகீழாக மாறிவிட்டது. சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் தொடர்பிருந்தால் இப்படி மாறாது.

நிற்க.

பெயரியலின் அடுத்த நூற்பா வருமாறு:

'பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்' (பெயரியல் 2)

இளம்பூரணர், சேனாவரையர், கல்லாடர் ஆகியோர் , ' சொல்லின் வேறாகிய பொருள் அறியப்படுதல், சொல்தானே அறியப்படுதல் இரண்டும் சொல்லால் ஆகும்' என்னும் கருத்துப்பட உரை கூறுவர்.

"சொல்லினாற் குறிக்கப்பட்ட பொருளின் தன்மை ஆராய்தலும், சொல்லின் தன்மை ஆராய்தலும் சொல் தன்னானே ஆகும் "என்பார் தெய்வச்சிலையார்.

இவர் இரண்டு நிலைகளில் வேறுபடுகிறார்.
க. பொருண்மை , சொன்மை என்பவற்றுக்கு நூற்பாவைப் பின்பற்றிப் பொருளின் தன்மை, சொல்லின் தன்மை என்கிறார்.
௨. தெரிதல் என்பதற்கு ஆராய்தல் என்று பொருள் காண்கிறார்.

நச்சினார்க்கினியரும் பொருள் தன்மை, சொல் தன்மை
என்கிறார். ஆனால், தெரிதல் என்பதற்கு அறியப்படுதல் என இளம்பூரணர் முதலியோர் கொள்ளுமாறு பொருள் கூறியுள்ளார்.

இனி, மூன்றாவது நூற்பாவுக்குப் போவோம்.

தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே (பெயரியல் 3)

"பொருண்மை நிலையானது இச் சொற்குப் பொருள் இதுவென உணரப் பலபொருளிலும் தெரிந்து வேறாகி நிற்றலும், சொற்படு பொருளன்றிச் சொல்லுவான் குறிப்பினாற் பிறிது பொருள்பட நிற்றலும் என இருபகுதியை உடைத்து என்று சொல்லுவர்" என்பார் தெய்வச்சிலையார்.

'தெரிபுவேறு நிலையல்' என்பதற்குச் சிலையார் கொள்ளும், " பலபொருளிலும் தெரிந்து வேறாகி நிற்றல்" என்பது பிறர் கூறாதது.

இதனை விளக்கும் தொல்காப்பிய உரைவளப் பதிப்பாசிரியர் ஆ.சிவலிங்கனார் கருத்தைப் பார்ப்போம்.

" கனி என்பது ஒரு சொல்; ஒருவனிடம் கனி எடுத்துவா என்றால் அவன் காய், இலை, பூ , கனி ஆகியவை உள்ள இடம் சென்று காய், இலை, பூ, ஆகியவற்றின் வேறாகி உள்ள கனியை எடுத்துவருவான் . எனவே கனி என்ற சொல் காய் முதலிய பல பொருளின் வேறான பழத்தை உணர்த்துவதே தெரிபு வேறு நிலையல் ஆம் "

சிலையார் கருத்து அத்துணைச் சிறப்புடையதன்று என்பது சிவலிங்கனார் கருத்து.

சிலையார் காட்டும் எடுத்துக்காட்டுகளைப் பார்த்துவிடுவோம்.

"தெரிபு வேறு நின்றன’ நிலம், நீர், தீ, வளி எனப் பொருள் உணர்த்துவனவும்; உண்டான், தின்றான் எனத் தொழில் உணர்த்துவனவும். குறிப்பிற் றோன்றின--இவன் நெருப்பு, இவன் பசு எனக் குணம் பற்றியும், தீமை செய்தாரை 'நன்மை செய்தீர்'எனவும்; கொடுமை செய்தாரை 'வாழ்வீராக' எனவும் அப்பொருள் பயவாது பிற பொருள் பயப்ப வருவன "

வியப்புக்குரிய ஒன்று, தெய்வச்சிலையார் பார்வை, பெர்டிணாண்ட் த சசுயூரின் அமைப்பியப் பார்வையை ஒத்திருப்பது.

சசுயூர் மொழியைக் குறிகளின்(sign)ஒருங்கமைவாகக் கண்டார், குறிப்பான்(signifier) , குறிப்பீடு (signified) என்பன குறிப்பிட்ட சொல்லையும் அதன் பொருண்மையை (அர்த்தத்தை)யும் ஒத்தவை. சசுயூர் சொல்லின் பொருண்மை தன்னிச்சையானது என்றார். தெய்வச்சிலையார் இடுகுறி என்றதும் அதனை ஒத்ததேயாம்.

இவை எல்லாவற்றையும்விட , சசுயூர் கருத்துப்படி, சொல்லின் பொருண்மை என்பது உறவு நிலைசார்ந்தது (relational) ; தொடர்புறவுடைய சொற்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வதால் அமைவது . தெரிபு வேறு நிலையல் என்பதைத் தெய்வச்சிலையாரும் ஏறத்தாழ அவ்வாறே விளக்கியுள்ளார்.

இது, எப்படி முடிந்தது? இந்தியத் தத்துவ மரபுக்கும் இலக்கண மரபிற்குமான உறவிலிருந்து தெய்வச்சிலையார் பார்வைக்கான பின்னணியை நாம் விளங்கிக்கொள்ள முயலலாம்.

இந்தியத் தத்துவ மரபு, தமிழிலக்கண மரபு, உரை மரபு, அமைப்பியம் முதலிய இயங்கள் ஆகியன பற்றிய பொது அறிவு மட்டுமே கொண்ட என்னால் மேலும் நுட்பம் காட்ட இயலாது.

ஆனால், புணரியலில் " எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி " என்பதற்கும், பெயரியலின் " பொருண்மை    தெரிதல் ", " தெரிபு வேறு நிலையல்" ஆகியவற்றுக்கும் தொடர்புண்டு என்று தோன்றுகிறது.

புணரியல் 4 எதிர்வினை ௧.௩(தொடர்ச்சி)

புணர்ச்சியும் பொருள்கோளும்*

எழுத்ததிகாரம்
—————————
எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே (புணரியல் 39)

அவைதாம்,
முன்னப் பொருள புணர்ச்சிவாயின்
இன்ன என்னும் எழுத்துக் கடன் இலவே (௸ 40)

சொல்லதிகாரம்
——————————
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (பெயரியல் 1)

பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும்,
சொல்லின் ஆகும்' என்மனார் புலவர்(௸ 2)

தெரிபு வேறு நிலையலும், குறிப்பின் தோன்றலும்,
இரு பாற்று' என்ப 'பொருண்மை நிலையே(௸ 3)

பொருளதிகாரம்
——————————
இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே;
அசை திரிந்து இசையா' என்மனார் புலவர்(பொருளியல் 1)

பொருள் தெரி(எழுத்து) , பொருண்மை தெரிதல் , தெரிபு வேறு நிலையல் (சொல்)

இசையின் திரிதல் (எழுத்து) , இசை திரிந்து இசைத்தல் (பொருள்)

ஆகிய ஒத்த தொடர்களைக் காணும்போது  எழுத்து, சொல், பொருளதிகாரத் தொடர்பை உணரமுடியும்.
                                                                 *******

'இசைதிரிந் திசைப்பினும்' என்னும் பொருளியல் நூற்பாவிற்கு இளம்பூரணர்,

" இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், தொடர் மொழிக்கட்பொருள் இயையுமாறு உணர்த்திற்று.

இசைதிரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய அசை திரிந்தொலியா என்றவாறு.

என்றது சொல்லொடுசொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடராது பிறிதோ ர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும்வழி அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படுமா றாயிற்று " என உரை காண்பர்.

[நச்சினார்க்கினியர் முற்றிலும் வேறான பொருள் காண்பார் ( 'இசை திரிந்து இசைப்பினும் , அசை திரிந்து இயலா இசைப்பினும் மன் பொருள் இயையும் என்மனார் புலவர்' என்று நூற்பாத் தொடர்களைத் தமக்கேயுரிய வழக்கப் படி  சிக்கலான ஆசனம் போடவைத்து விளக்கம் சொல்வார்)]
                                                                  *******

இளம்பூரணர் கருதும், ' தொடர்மொழிக்கண் பொருள் இயைதல்' என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது. தொடர்மொழி இலக்கணம் சொல்லதிகாரத்தில் இடம்பெறவேண்டியதன்றோ?  பொருளதிகாரத்தில் அதற்கென்ன வேலை? என்ற தடை எழலாம்.

பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியன யாவும் அன்றாடப் பேச்சின் வேறான யாப்புள் அடங்குவன (செய்யுளியல் 77). யாப்பு என்பது கட்டமைக்கப்பட்டது. செய்யுள் என்பதன் ' - உள் ' தொழிற்பெயர் விகுதி. செய்யுள் = செய்யப்பட்டது .
தொல்காப்பியத்தை - பிற மரபிலக்கணங்களையும் - பொறுத்த அளவில் ' வழக்கு ' என்பதும் அன்றாடப் பேச்சுவழக்கன்று. 'வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே'(மரபியல் 94) என்கிறது தொல்காப்பியம்.

பொருளதிகாரத்தில் தொடர்மொழி பற்றிப் பேசுவது , சொல்லதிகாரத்தில் தொடரமைதியின் பொது இலக்கணம் போலன்றி, கூடுதலாகச் செய்யுளுக்கேயுரிய  தொடரமைதி பற்றிப் பேசுவது எனலாம்.

இக்காலத் தமிழிலும் புணரியல்பு பற்றிப் பேசும்போது  தரநிலைப்பட்ட மொழி கருதியே பேசுகிறோம். தரநிலைப்பாடு என்னும்போதே யாப்பு / செய்யுள் தன்மை அதில் மேலோங்கியிருக்கும். அதிலும் எழுத்து மொழி சற்றுக் கூடுதல் இறுக்கமுடையதாதல் இயல்பு. புணரியல்பு 5 இல் 'இடர்ப்பட்டுக் கற்க வேண்டியதில்லை.சொல்லிப் பார்த்தால் போதும்' என்கிற வாதம் தவறானது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அன்றாடப் பேச்சைப் புணரியல்புக்குச் சான்றாகக் கொள்ளக்கூடாது.

                                                                     *******
சொற்கு அங்கமாகிய அசை என இளம்பூரணர் கூறுவது பற்றி அறிஞர் க.வெள்ளைவாரணனார், " சொல்லுக்கு அங்கமாகிய அசையாவன சொல்லின் கூறுகளாகிய பகுதி விகுதி இடைநிலை முதலிய சொல்லுறுப்புக்கள்" என்கிறார்  (தொல்காப்பியம் - பொருளியல் - உரைவளம், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 2005)

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை நோக்கப் பெயரும் வினையும் தவிர்ந்த இடை, உரிச்சொற்களைச் சொற்கு அங்கமாகிய அசையுள் அடக்கலாம்.

பத்துமணிச்செய்திகள் - என்பது நேரங் குறித்ததாயின் பத்துமணிக்கு ஒலி/ஒளி பரப்படும் செய்திகள் என வேற்றுமைத்தொடராக , அதற்குரிய உருபை (அசையை)த் தந்து விரிக்கவேண்டும்;
தன்மை குறித்ததாயின் பத்து மணியான செய்திகள் என அடைத்தொடராக விரிக்க வேண்டும்.

"புணரியல் என்பது நிலை வரு மொழிகள் புணர்தல் பற்றியதேயன்றி, புணர்ந்து நிற்கும் தொடர்களைப் பிரித்துப் பொருள் கொள்ளும் பொருள்கோள் பற்றியதில்லையே?
இங்குப்[புணரியலில்] புணர்ச்சியில் நிலைபெற்ற (நிலைஇய )ஒரு பண்பு கூறப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்" என்று (புணரியல்பு 4 எதிர்வினை ௧ இல்) எழுதியிருந்தேன்.

பொருளியல் முதல் நூற்பா அத்தகு பல்வேறு தொடர்களைப் பிரித்துப் பொருள் கொள்வது பற்றியது .

புணர்ச்சிக்கும் பொருள்கோளுக்குமான வேறுபாடு இங்குப் புலப்படுவதாக நான் கருதுகிறேன்.

* பொருள்கோளை மொழிபுணரியல்பு (எச்சவியல் 8) என்கிறது தொல்காப்பியம். இன்னும் பரந்த பொருளில் இங்குப் 'பொருள்கோள்' என்பது ஆளப்பட்டுள்ளது..



புணரியல்பு 5 : சொல்லிப் பார்த்தால்...

பேச்சுமொழி, கிளைமொழி முதலியவற்றின் உயிரோட்டத்தை நான் மறுக்கவில்லை.
" பேசுற மாதிரியே எளுதணும்" என்று சொல்லிவருகிற, அதற்கு இப்போதைய தமிழ் எழுத்துகள் போதுமானவையல்ல என்று அங்கலாய்க்கிற முதுபெரும் எழுத்தாளர் ஒருவர் வெகுசன இதழில் தொடர் எழுதினார். அவர் அதில் தம் வட்டாரவழக்குச் சாயலைக் கொணரத் தவறவில்லை என்றாலும், தரநிலைப்பட்ட தற்கால எழுத்துத் தமிழ்ப் பாங்கையும் கைக்கொண்டார்.

பொதுத் தமிழின் தேவையை மறுக்க இயலாது. பேச்சில் புழங்கும் எல்லா ஒலிகளையும் எழுத்தில் காட்டும் இயற்கை மொழி எதுவுமில்லை.

தமிழின் சிறப்புகளுள் ஒன்று - தலையாயது என்று கூட, சொல்லலாம் - அதன் தொடர்ச்சி.

உயிர்ப்போடு கூடிய நெடுந்தொடர்ச்சியின் தவிர்க்கவியலாத் தலைவிதி ,
மாற்றம். கால, சூழல் மாற்றங்களுக்கேற்பத் தமிழ் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது.

ஒலி, வரிவடிவம் (எழுத்து), சொல் வடிவம், தொடரமைப்பு,சொற்பொருள் முதலிய பலவும் மாறியுள்ளன. அப்படியெனில் இலக்கணத்திலும் மாற்றம் நிகழும்தானே. இந்த மாற்றத்தையும் நடை வேறுபாடுகளையும் கருதாமல் வழக்கிறந்த விதிகளையும் மரபுகளையும் பிடித்துக் கொண்டு தொங்குவதில் பயனில்லை.

நடைமுறைத் தேவைகருதிய சில நெகிழ்வுகள், மாற்றங்களைக் குற்றமாகப் பார்க்கக் கூடாது.
பிழைகளைப் பெரிதுபடுத்தவும் வேண்டியதில்லை.

புறநானூற்றில் அறம் , குறுந்தொகை நறுஞ்சுவை , குறளின் இறையியல்  என்றெல்லாம் மொழிப்பிழையின்றி மாவரைக்கலாம். சிந்தனையும் படைப்புணர்வும் மிக்குப் புதிது புதிதாக எழுதும்போதும், தமிழில் முன்னில்லாத துறைகளில் எழுதும்போதும் மொழி நெகிழும். இலக்கணப்பிழையற்ற அரைத்த மாவை விட , பிழைகள் சில பல இருப்பினும் இப் புதிய எழுத்துகளே தமிழுக்கு வளம்.

1980களில் வானொலி நேர்காணலொன்றில் எழுத்தாளர் சிவசங்கரி கேட்டார், " தமிழ்'ல எழுதறவாளுக்கு, தமிழ் இலக்கணம் தெரிஞ்சிருக்கணுமா என்ன?" என்று.
"ஏன் தெரித்திருக்கக் கூடாதா என்ன?" என்று எதிர் வினாவை விடையாகத் தந்தார் ஜெயகாந்தன்.

1990களின் பிற்பகுதி என்று நினைவு. சுந்தர ராமசாமி அவர்களின் இல்லம் சென்றிருந்தேன்; அவரது மேசையில் ஒற்றுப் பிழையின்றி எழுதுவது பற்றிய நூலைக் கண்டேன். நூலை எழுதியவர் , கல்லூரியில் உடன்பணியாற்றும் நண்பர் பேரா.அரங்கசுப்பையா அவர்கள்.
சு.ரா. விடம், " சார், இது அன்பளிப்பாக வந்ததா?" என்று கேட்டேன். " இல்லை வரவழைத்தேன்"
என்றார்.அவர் தமிழ் உலகில் தம்மை நடை நுட்பங்களால் நிறுவி நிறைந்த காலம் அது. ஆனாலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவரிடம் இருந்தது.

'நாங்கள் இதுவரை தமிழில் இல்லாததைக் கொண்டுவருகிறோம், இதில் -க்- இல்லை -ச்- இல்லை, ஒருமை இல்லை பன்மை இல்லை என்றால் எப்படி? ' என்னும் மேட்டிமை வாதமும் முறையற்றது. எந்த மொழியானாலும் , அவ்வக்காலம் சார்ந்து, இலக்கண வரம்பொன்று இருப்பதை இவர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

நடைமுறை மொழியறிந்து எழுதுகிற ஒருவருக்கு இக்கால இலக்கணத்தைக் கூட, கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போகலாம். கற்றுக்கொள்ளவே மாட்டேன் என்பது பொறுப்பின்மை. கல்லாமையை நியாயப்படுத்துவது __ தனம்.

இரண்டுக்கும் இடைப்பட்ட நழுவல் வாதம் ஒன்று உள்ளது. அதுதான் 'சொல்லிப்பார்த்தால் போதும் ; இடர்ப்பட்டுக் கற்கவேண்டியதில்லை ' என்பது.

போட + சொன்னால் = போடச் சொன்னால்
நிறுத்த+சொல் = நிறுத்தச் சொல்
போட -  , நிறுத்த- இரண்டுமே , செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள்தாம். வருமொழிமுதல் வல்லெழுத்தாயின் வலி மிக வேண்டும்.

ஒரு திரைப்பாடல் பகுதி, ஒரு திரை உரையாடல் பகுதி ஆகியவற்றை இணைத்துள்ளேன்.



https://www.facebook.com/balasundaram.mathivanan.3/videos/1463334270517427/



பாட்டில் போடச் சொன்னால் என்பது சரியாக ஒலிக்கப்படுகிறது. உரையாடலில் நிறுத்த சொல் என்றே ஒலிக்கப்படுகிறது. உரையாடலில் தவறாக ஒலிக்கப் படுகிறது என்று சொல்லமாட்டேன். 
நானே பேசும்போது, " அவர் எழுதுற தொடர நிறுத்த சொல்லுப்பா" என்றுதான் சொல்வேன்.
(நம் காலத் தமிழில் சகரம் வல்லெழுத்தாக அன்றி ஸகரமாக ஒலிக்கப்படுவது முதல் மைக் காரணம். படத்தில் வேலு நாயக்கர் வெற்றிலைக்குதப்பலுடன் பேசுவதும் காரணமாகலாம்! ) தற்காலத் தமிழில் எழுதுவதானாலும்  பேச்சை  எழுத்துக்கு விதியாக்க இயலாது.

புணரியல்பு 6 : பருப்பு + கடை ?

Ramasamy Selvaraj அவர்கள் ஒரு சிக்கலைப் போனவாரம் எழுப்பியிருந்தார்.

"பழைய புத்தகக் கடை நல்ல காட்டு. புணர்ச்சியால் மட்டும் பொருள்வேறுபாடுகளைக் காட்ட முடியாது என நன்கு விளக்கியிருக்கிறீர்கள். அந்த எடுத்துக்காட்டைச் சற்றே நீட்டித்து, 'பழைய பருப்புக் கடை' என்று எண்ணிப் பார்த்தேன். கடை என்பது வினை, பெயர் என்று பொருள் மாறுபட்டு வேறு செய்திக்குக் காட்டாக இருக்கிறது. இதை நீங்கள் முன்பே சுட்டியிருக்கிறீர்கள்.  இங்கே இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று வலிமிகாதென்றாலும் வன்றொடர்க்குற்றுகரம் என்று மிகுந்தே வருமன்றோ? மீண்டும் ஒரே எழுத்துக்கூட்டல் கொண்ட இருவேறு பொருள் தரும் சொற்றொடரை வேறுபடுத்துவதும் சிக்கல் தானே. (இந்த இ.வே.தொகை .எதிர். வன்றொடர்க்குற்றுகரம் பற்றிப் பலர் கண்டுகொள்வதில்லை)"

வன்றொடர்க்குற்றியலுகர ஈறு நின்று வருமொழியில் வல்லெழுத்து வரும்போது
௧. நிலைமொழி உயர்திணைப் பெயராகவோ ( நல்லமுத்து சென்றார்)
௨. வினைத்தொகையில் நிலைமொழியாகவோ (அரங்கேற்று காதை)
௩. சில வினைமுற்றுத் தொடர்ககளில் நிலைமொழியாகவோ ( நடத்து தமிழ்/ நடத்து தலைவா!)இன்ன பிறவாறோ அமைந்தால்  வலி மிகுவதில்லை. பிற இடங்கள் யாவற்றிலும் வலி மிக வேண்டும் என்பார்கள்.

மேற்காட்டியவை அல்வழித் தொடர்கள். அல்வழியில் 14 வகைத் தொடர்களை நன்னூல் தொகுத்துத் தருகிறது. புணர்ச்சியில் இவை பதினான்கும் ஒத்து இயங்குவதில்லை; இயங்க இயலாது.

வேற்றுமையிலும் எல்லாவற்றுக்கும் பொதுவான புணர்ச்சிவிதி கொள்ள முடியாது.

மற்றொரு சிக்கல் யாப்பில், குறிப்பாகப் பா யாப்பில் இடம்பெறும் ஓசையும் மரபும் சார்ந்த புணர்ச்சிகளை இக்காலத் தமிழுக்குக் கொள்ள இயலாது; அல்லது கொள்ள இயலாமலிருக்கிறது.

உயர்திணையோ அஃறிணையோ எந்த ஈறாயினும் எழுவாயாக நிற்கும்போது வல்லெழுத்தை முதலாகவுடைய சொல் வந்தால் வலி மிகாதிருத்தலே தமிழ்ப் பண்பாக நான் உணர்கிறேன். 

கொக்கு பறக்கும் - என்றெழுதுவதையே இயல்பானது என உணர்கிறேன். பிடிவாதமாக மரபு பேணுவோர்  கொக்குப் பறக்கும் என்பதே சரியெனச் சாதிப்பார்கள். நானும் கூட ஓரளவு அப்படி எழுதிவருகிறேன் (துறை அழுத்தம்!)
வன்றொடர்க்குற்றுகர ஈற்றுச்சொற்களில் மட்டுமன்று; வேறு பல ஈற்று எழுவாய் நிலைமொழிகளிலும் இச்சிக்கல் உள்ளது. 

எனவேதான் எனது தொடரைப் 'புணரியல்' என்று இலக்கணமாகச் சொல்லாமல் 'புணரியல்பு' என இயல்பு கருதிச் சொன்னேன்.

இப்போது 'பருப்பு + கடை'க்கு வருவோம்.
  i. பருப்பு +(ஐ) + (விற்கும்) + கடை . 
  இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  பெயர்த்தொடர்;  ஒரு வாக்கியத்தில் பெயராக இயங்கும்.
  ii. பருப்பு +(ஐ) + கடை .
   இரண்டாம் வேற்றுமைத் தொகை.
   வாக்கியம்.  [ (நீ) பருப்பைக் கடை . நீ (தோன்றா) எழுவாய்] 
 
நிலைமொழியாகிய பருப்பு என்பதன் பொருள் ஒன்றே. வருமொழியில் i. முன்னது பெயர்ச்சொல் ii. அடுத்தது (ஏவல்) வினைச்சொல்.

இரண்டும் வேற்றுமைத்தொடர்கள்தாம்.

மரபிலக்கணப்படி இரண்டிலும் வலி மிகும். பின்வருமாறு எழுத்தில் சமாளிக்கலாம். நான் இவ்வாறுதான் எழுதுவேன்.
i. பருப்புக்கடை    (பெயர்த்தொடர்)
ii. பருப்புக்  கடை ( ஏவல் வாக்கியம்)

அவ்வாறன்றி, i. பருப்புக்கடை,  ii. பருப்பு கடை என்றெழுதிப் புணர்ச்சியிலேயே வேறுபடுத்தலாமே!எனில், பிழையென்றோ குற்றமென்றோ நான் சொல்லமாட்டேன். இவற்றில் மொழிப்பண்பு பற்றிய ஓர் உணர்வு காணப்படுகிறது.

ஆனால்,

i. பருப்பு விற்கும் கடையைப்  பருப்புகடை× எனில் பிழை. ஏனெனில், இத்தொடரின் சொற்கள் இரண்டும்  ஒரு பெயர்த்தொடராக இயைந்து நிற்கின்றன. வலிமிகுதலால்தான் அந்த இயைபு நேர்கிறது.

புணரியல்பு 7  'தடுமாறு தொழிற்பெயர்'
(4 இன் எதிர்வினை ௧.௩. இன் தொடர்ச்சியுமாம்)

தொல்காப்பியர் கூறும் 'எழுத்தோரன்ன பொருள்தெரி புணர்ச்சி'க்கு (புணரியல் 39), குன்றேறாமா (குன்று + ஏறு + ஆமா/ குன்று + ஏறா+மா) , செம்பொன்பதின்றொடி ( செம்பொன் + பதின்+தொடி/ செம்பு+ஒன்பதின் + தொடி) முதலிய பிரிமொழிச் சிலேடைகளை உதாரணங்காட்டுவர். பத்துமணிச்செய்திகள் (பத்துமணிச்    செய்திகள்/ பத்து   மணிச்செய்திகள்) முதலிய மயங்குநிலைத் (ambiguous) தொடர்களையும் காட்டலாம் என்பது என் கருத்து.

இது குறித்து எழுந்த விவாதத்தில்,

பொருள்தெரி(எழுத்து,புணரியல்39),பொருண்மை தெரிதல்,தெரிபுவேறு நிலையல்(சொல்2&3)
இசையின் திரிதல் (எழுத்து, ௸) , இசை திரிந்து இசைத்தல் (பொருள், பொருளியல் 1)
ஆகிய ஒத்த தொடர்களைக் காணும்போது  எழுத்து, சொல், பொருளதிகாரத் தொடர்பை உணரமுடியும் - என்று காட்டிப் புணர்ச்சியும் பொருள்கோளும் வெவ்வேறானவை என்ற கருத்தை விளக்க முயன்றேன்.

அவற்றை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்க.

விவாதத் தொடர்ச்சியில், பேராசிரியர் இராஜா ,"இவற்றுடன் தடுமாறு தொழிற்பெயர்க்கு உள்ள தொடர்பையும் விளக்கினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்" என்று  எழுதியிருந்தார். 

'புலி கொல் யானை' , அல்லது 'புலி கொன்ற யானை' என்னும் தொடரை

௧.'புலியைக் கொன்ற யானை' ( புலி + ஐ + கொன்ற யானை:யானை - வினை முதல்  ; புலி -  செயப்படுபொருள் = கொன்றது யானை; செத்தது புலி)

௨.'புலியால் கொல்லப்பட்ட யானை' (புலி + ஆல்+கொல்லப்பட்ட யானை:புலி - வினைமுதல்  ; யானை - செயப்படுபொருள் = கொன்றது புலி ; செத்தது யானை)

என இரண்டாம் (ஐ) வேற்றுமைத்தொடராகவும், மூன்றாம் (ஆல்) வேற்றுமைத்தொடராகவும் விரிக்கலாம்.

தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடிவரை இலவே பொருள்வயி னான
என்னும் நூற்பாவில் இந்தத் தடுமாற்றத்தைச் சொல்கிறது தொல்காப்பியம் (வேற்றுமை மயங்கியல், 12 ). பழைய உரையாசிரியர்களின் உதாரணத்தையே மேலே தந்துள்ளேன்.

புதைநிலையில் இருவேறு தொடர்களான இவை புறநிலையில் ஒன்றாகத் தோன்றுகின்றன என மாற்றிலக்கணவியலார் விளக்கலாம். வல்லார் வாய்க் கேட்டறிக.

புணரியல்பு நோக்கில் பார்ப்போம்.
புலிகொல்   யானை
புலி    கொல்யானை
புலி  கொல்  யானை

என இடைவெளி வேறுபாடுகளாலோ, நிறுத்தற் குறிகளாலோ முற்றாகத் தடுமாற்றம் தீர்க்க இயலாது.

ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப உணரு மோரே (௸ , 13 )

என்னும் அடுத்த நூற்பா பொருள் வேறுபாடுணரும் வாய்ப்பைச் சுட்டுகிறது.

'புலி கொல் யானைக் கோடு வந்தது' எனில் புலியால் கொல்லப்பட்ட யானையினது கோடு (தந்தம்) வந்தது எனப் பொருள் தெளிவுறும்.

'புலி கொல் யானை ஓடுகின்றது' எனில் புலியைக் கொன்ற யானை ஓடுகின்றது எனப்பொருள் தெளிவுறும்.

புலி கொல்யானை - எனும் தொடரில் ஈற்றுப்பெயர் யானை. அந்த யானை என்னும் சொல்லை அடுத்து (அடுத்து வருவதை "முன்னர்" எனல். இதனை இடமுன் என்பர்) வரும் சொல்/தொடரால் (மெய்யறி பனுவல்) பொருள் வேற்றுமை உணரவியலும் என்று உரையாசிரியர்கள் மேற்குறித்த உதாரணங்கள் தந்து விளக்கியுள்ளனர்.

இதனால் மீண்டும் வலியுறுவது புறத்தே புலனாக நிற்கும் புணர்ச்சியால் மட்டுமே பொருள் வேறுபாடுணர்த்த இயலாதென்பதாம்.

அடுத்து வரும் மெய்யறி பனுவலாலும் பொருள் வேறுபாடறிய வாய்ப்பின்றிப் போகலாம் என்கின்றனர் உரையாசிரியர்கள்.

'புலி கொல் யானை கிடந்தது' எனில் புலியைக் கொன்ற யானை கிடந்தது, புலியாற் கொல்லப்பட்ட யானை (செத்துக்) கிடந்தது என அவர்களே உதாரணமும் ஓதியுள்ளனர்.
இங்கு ஒட்டுமொத்தச் சூழலால்தான் பொருள் வேறுபாடுணர முடியும்.

தடுமாறு தொழிற்பெயர்'களும் மயங்குநிலைத் ( ambiguous ) தொடர்களே. ஆனால், சற்று வேறுபட்டவை; சூழலால் அன்றிப் பொருள் வேறுபாடு விளங்க வாய்ப்பே அற்றவை.
எனவே,தடுமாறு தொழிற்பெயரின் இலக்கணம் பொருள்கோள் பற்றியது; புணர்ச்சி பற்றியதன்று.

எனினும்   நிலைமொழி வருமொழிகளாய்ச் சொல்லொடு சொல் தொடருமிடத்துப் புணரியல்பு நோக்கிலும் காணலாம்.


இனி சற்றே இலக்கணம் சார்வோம்.

மேற்குறித்த வேற்றுமை மயங்கியல் நூற்பாக்களின் 'தொழிற்பெயர்' , 'மெய்யறி பனுவல்' ஆகியன பற்றி முதலில் பார்ப்போம்.

தொல்காப்பியம் தொழிற்பெயர் என்னும் ஒற்றைக் குறியைத் தொழிலின் பெயர் ( நடை), தொழில் நிகழ் பெயர் (நடத்தல்), வினையாலணையும் பெயர் (நடந்தவர்) மூன்றற்கும் உரியதாக ஆள்கிறது.

புள்ளி மயங்கியலில் தொழிற்பெயர் என்பது முதனிலைத் தொழிற்பெயரைக் குறித்தே வழங்கப்பட்டுள்ளது; விளிமரபில் ஓரிடத்தில் மட்டும் வினையாலணையும் பெயரைக் குறிக்கிறது.

தடுமாறு தொழிற்பெயர் என்பதற்குப் பொருள் கொள்வதில் பழைய உரையாசியர்களிடையே சற்று வேறுபாடு காணப்படுகிறது.

இளம்பூரணர் : தடுமாறுதல் என்பது இரண்டற்கு[ம்] உரித்தாய்ச் சென்று வருதல்; கோறல் தொழில் இரண்டற்கும் ஒக்கும் ( வேற்றுமை மயங்கியல், 12 இன் உரை)

கல்லாடர்: கொல்லுதல் தொழில் இரண்டிற்கும் சென்று வருதலின் தடுமாறு தொழிற்பெயர் எனப்பட்டது.

'ஒருவர்' : தடுமாறு தொழிற்கு ஒத்த தொழில் இரண்டற்கும் சேறல். (ஒத்த= ஏற்ற)

இம் முவரும் தடுமாறுதற்கு வாய்ப்பான வினைச் சொற்களைக் குறிக்கும் பொதுக்குறியாக இவ்விடத்தில் தொழிற்பெயர் என்பதைக் கருதுகின்றனர் (போலும்!).

சேனாவரையர் : தனக்கே உரித்தாய் நில்லாது ஒருகால் ஈற்றுப்பெயரோடும் சென்று தடுமாறு தொழிலொடு தொடர்ந்த பெயர்
நச்சினர்க்கினியர்: [சேனாவரையரை அப்படியே வழிமொழிந்துள்ளார்]
தெய்வச்சிலையார் : இரண்டு பொருட்கண் தடுமாறிவரும் தொழிலையுடைய பெயர்

இவ்விருவரும் சொல்லளவில் சிற்சில வேறுபாடிருப்பினும் ஏறத்தாழச் சேனாவரையர் கருத்துடையராய்த் தடுமாறு தொழிலொடு தொடர்புடைய பெயரைக் குறிப்பது தடுமாறு தொழிற்பெயர் என்கின்றனர்.

'புலி கொல் யானை' என்னும் தொடரில் புலி என்பது கொன்ற என்பதனைத் தழுவுகின்றமையான் தடுமாறு தொழிற்பெயர் புலி என்ற சொல்லேயாகும் - என்று பி.சா.சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கிச் சொல்கிறார்.

இந்நூற்பாவின் பொருள்நோக்கச் சேனாவரையர் முதலியோர் கருத்தே பொருத்தமாகத் தோன்றுகிறது. இளம்பூரணர் முதலியோர் தொழிற்பெயர் என்பதைப் பொதுவான இலக்கணக் குறியாகக் கொண்டு, இங்கும் அப்பொருள் குறிப்பதாகவே விளக்க முயல்கின்றனர்.

அடுத்தது மெய்யறி பனுவல்.

இளம்பூரணர் : பொருளறிய வருஞ்சொல்
கல்லாடர்:[இளம்பூரணரை வழிமொழிந்துள்ளார்]

சேனாவரையர்: பொருள் வேறுபாடுணர்த்தும் சொல்
நச்சினார்க்கினியர்:[சேனாவரையரை வழிமொழிந்துள்ளார்]
'ஒருவர்': [சேனாவரையரை வழிமொழிந்துள்ளார்]

தெய்வச்சிலையார் : பொருள் அறியவரும் உரை

தொல்காப்பியத்தில் 'மெய்' என்பது பற்பல பொருள் குறித்து வந்துள்ளது. திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனத் 'தொல்காப்பியச் சிறப்பகராதி' ,  மெய்யெழுத்து, சொற்பொருள், பொருள், வடிவம், உண்மை, நிலை, இயல்பு, வழக்கு, உருபு, உடல் முதலிய பொருள்களில் அச்சொல் பயன்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

உரையாசிரியர் அனைவரும் மெய் என்பதற்குப் 'பொருள்' எனப்பொருள் கொண்டுள்ளது ஏற்புடைத்தே.

பனுவல் என்னும் சொல்லை இவ்வோரிடத்தில் மட்டுமே பாடமாகக் கொள்கிறார் இளம்பூரணர்.

சின்மென் மொழியான் சீர் புனைந்து யாப்பின்
அம்மை தானே அடி நிமிர்வு இன்றே

என்பது 'அம்மை'யின் இலக்கணம் கூறும் நூற்பாவிற்கு இளம்பூரணர் கொள்ளும் பாடம்.

பேராசிரியரும் அவரை அடியொற்றி நடந்த நச்சினார்க்கினியரும் முறையே

சின்மென் மொழியான் தாய பனுவலோ(டு)
அம்மை தானே அடி நிமிர்வு இன்றே

சின்மென் மொழியான் தாய பனுவலின்
அம்மை தானே அடிநிமிர்வு இன்றே

என்று 'அம்மை' இலக்கணம் கூறும் நூற்பாவிற்குப் பாடம் கொண்டுள்ளனர்.

"தாய பனுவலோடு என்றது, அறம் பொருள் இன்பமென்னும் மூன்றற்கும் இலக்கணம் சொல்லுப[போன்று]* வேறு இடையிடை அவை அன்றியும் தாய்[தாவி]ச் செல்வதென்றவாறு " என்பார் பேராசிரியர்.[* புன்னாலைக் கட்டுவன் வித்துவான்  சி.கணேசையர் கருத்து]

பனுவல் என்பதற்கு 'இலக்கணம்' எனப்பொருள் கூறியுள்ளார். அவர் தரும் எடுத்துக்காட்டை (குறள். 675) நோக்க ஒன்றன் தன்மையை  வரையறுத்துக் கூறுவனவற்றை இலக்கணம் எனக் கொண்டுள்ளமை புலனாகிறது.

அவ்வாறன்றி நயம் பொதிந்தவற்றை - அவர் தரும் எடுத்துக்காட்டு குறள்.1112 - இலக்கியம் எனச் சுட்டி அவற்றைத் தாய பனுவல் என்கின்கிறார்.

நச்சினார்க்கினியர் பேராசிரியரை வழிமொழிந்துள்ளார்.

தடுமாறு தொழிற்பெயர்ப் பொருளின் தெளிவு பற்றிய 'மெய்யறி பனுவல்' என்பதில் பனுவல் = சொல் என்று நச்சர் சேனாவரையரை வழிமொழிந்துவிடுவது ஆய்வுக்குரியது.

வேற்றுமை மயங்கியலின் பனுவல் என்பது எதைக் குறிக்கிறது? தெய்வச்சிலையார் பனுவல் = உரை என்கிறார். இது சொல் என்பதைக் கடந்த ஒன்றை - ஒட்டுமொத்தச் சூழலை -கருதுகிறதா?

குறிப்பிட்ட தடுமாறு தொழிற்பெயர்த் தொடருக்கு முந்தைய சூழலாலும் பொருள் தெளிவுறலாம்.
1.அந்தக் கொம்பன் யானையின் வலிமைக்கு எல்லையில்லை. அது புலி கொல் யானை.
2.கூர்ங்கோட்டதாயினும் புலி தாக்குறின் என்ன ஆகும். பாவம்! இது புலி கொல் யானை.இது

1. புலியைக் கொல்லும் யானை
2. புலியால் கொல்லப்பட்ட யானை.

எனவே ஈற்றுப்பெயரை அடுத்துத்தான் ( "முன்னர் " -இதனை இடமுன் என்பார்கள்) மெய்யறி பனுவல் வரவேண்டுமா? அல்லது அது பெரும்பான்மைப் புழக்கம் கருதிய இலக்கணமா?

இன்னொன்றையும் பார்ப்போம். புலி கொல் யானை (வினைத் தொகை),
                                                                          
                                                              புலி கொன்ற யானை (பெயரெச்சம்)

ஆகியவற்றில் ஈற்றுப்பெயர் யானை. (தடுமாறு தொழிற்பெயர் புலி எனலாம்)
                                                                          
'இப்புலி யானை கொன்றது' என வினைமுற்றில் முடியும் தொடரிலும் தடுமாறு தொழிற்பெயர் காணமுடியும். இங்கு ஈற்றில் உள்ளது வினைமுற்று. 

உரையாசிரியர்கள் சொல்வதுதான் இந்த வேற்றுமை மயங்கியல் நூற்பாக்களின் பொருளா?

-------------------




Tuesday, June 22, 2021

சிலப்பதிகாரம் காப்பியமா?

 




சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பொதுவாகக் காப்பியம் என்னும் வகையினவாகக் கருதப்படுகின்றன; வழங்கப்படுகின்றன. ஆனால், அவை தமிழ்ச் செவ்வியல் செய்யுள் மரபின் தொடர்ச்சியில் உருவானவை.


தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் தனிச் செய்யுள்களால் ஆனவை ; தமக்கென்று அகம், புறம் என்னும் மரபு கொண்டவை. வரலாற்றுச் செய்திகளுள் பெரும்பாலானவை புறத்திணைச் செய்யுள்களில் பதிவு செய்யப்பட்டன. மறுபுறம் மரபு காரணமாக - அந்த மரபை மீறாமல் அதனை உத்தி போலக் கொண்டு -  உவமை முதலியனவாக அகத்திணைச் செய்யுள்களிலேயே வரலாற்றுச் செய்திகளை சார்த்திப் பதிவிடும் போக்கும் உள்ளது.


அதன் உச்சம் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின்  'பட்டினப்பாலை'.  பட்டினப்பாலையின்  301 அடிகளில் நான்கில் மட்டுமே அகத்திணைச் செய்தி; பிற 297 அடிகளில்-  99% - பாடாண் செய்திகள்தாம். என்றாலும் அதனை  அகத்திணைப் பாட்டு எனல் மரபு¹.

 

பத்துத் தனித்தனி  நெடுஞ்செய்யுள்களின் தொகை பத்துப்பாட்டு.


அதன் அடுத்தகட்டப் பரிணாமமாகத் தமிழ்ச் செவ்வியல் மரபுகளை உள்ளடக்கத்திலும் இடைமிடைந்து புனைந்த ,  கதை தழுவிய முப்பது பாட்டுகளால் ஆனது சிலப்பதிகாரம் . எனவே இதனைக் காப்பியம் என்பதினும் தொடர்நிலைச் செய்யுள் என்பதே பொருத்தமானது. கதையின் தொடர்ச்சி தொடர்நிலைக்குக் காரணமாகிறது. தொடர்நிலைச் செய்யுளுக்கும் (பெருங்)காப்பியத்துக்கும் பொதுவான கூறு கதை. 


சிலம்பு , மேகலைகளில் வடமொழிச் செல்வாக்கு இல்லாமலில்லை.ஆனால், வடிவத்தில் அவை தமிழ் மரபைப் புதுப்பித்துப் பேணிக்கொண்டன.


மணிமேகலை வடிவத்தில் மட்டும் தொடர்நிலைச் செய்யுள் மரபு பேணியது.


தன்னேரில்லாத் தலைவனைக் கொண்ட , வடமொழிவழிக் காப்பியப் போக்கிற்கு இயைந்த ,  சீவகசிந்தாமணியே கூட, தொடர்நிலைச் செய்யுள்தான் என்பது நச்சினார்க்கினியர் கருத்து².


சிலம்பைத் தொடர்நிலைச் செய்யுள் எனல்  முற்றிலும் என் கண்டுபிடிப்பு என்று சொல்லமுடியாது. முன்பே இதனை ஒத்த கருத்து வந்துள்ளது.³


--------------------------------

குறிப்புகள்


1.[முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்]

    வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,

    வாரேன்; வாழிய, நெஞ்சே!( பட்டினப்பாலை 218-220)


    [திருமாவளவன்தெவ்வர்க்கு ஓக்கிய]

    வேலினும் வெய்ய, கானம்; அவன்

     கோலினும் தண்ணிய, தட மென் தோளே!( ௸,299 - 301)

   - என்னும் நான்கு அடிகளால் மட்டுமே பட்டினப்பாலை அகத்திணைப்பாட்டாகிறது.


2.  " இவ் ஆறு-ஐந்தும்

        உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்" ( சிலப்பதிகாரம், பதிகம், 86-87)

    " மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு

      ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என் " (மணிமேகலை, பதிகம், 97 - 98)

-எனச் சிலம்பும் மேகலையும் ஆறைம் (6x5=30 முப்பது) பாட்டுகள்தாம்  என்று அவற்றின் பதிகங்கள் கூறுகின்றன (காதை = பாட்டு. பாகதச் சிதைவு).


சீவகசிந்தாமணிதானும் காப்பியமன்று என்று சுட்டி மறுக்கும் நச்சினார்க்கினியர் , அது  தொடர் நிலைச் செய்யுள் - அதனுள்ளும் 'தோல்' - என்கிறார்:


இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்து நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும், ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி‘ (தொல் - சிறப்பு) என்றதனால், அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும் , பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கண மென்றுணர்க.

 

   அவ்விலக்கணத்திற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான்கென்றும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறுகின்றுழி, ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்‘ (தொல். செய். 238) என்பதனால் , மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பப் பழையதொரு கதைமேற் கொச்சகத்தாற் கூறின், அது தோல் என்று கூறினமையின், இச் செய்யுள் அங்ஙனங் கூறிய தோலா மென்றுணர்க.

 

   இச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம்; (தொல் - புறத்- 27). இதனானே, ‘யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது‘ (தொல் - செய். 149) என்பதற்குத் தேவபாணியும் காமமுமே யன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.

 

   முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழியால் தொடர்நிலைச் செய்யுட்குப் பெயரின்மையும் இதற்குப் பிறகு கூறிய நூல்கள் இதற்கு விதியன்மையும் உணர்க( சீவக சிந்தாமணி, கடவுள் வாழ்த்து, உரைப்பகுதி).


3.At some point beyond the Sangam period proper, two closely linked, large - scale lyrical narrative — usually wrongly called epics — were created: The Tale of Anklet, Cilapptikāram, by Ilankovatikal, and twin masterpiece , Manimekalai, by Cāttanār.

_ David Shulman, Tamil a Biography, The Belknap Press of Harvard university Press, London,2016, p.98.  (சுல்மனுக்கு முன்பே இக்கருத்து உண்டு)

Tuesday, June 15, 2021

தனிநாயக அடிகளாரின் நோக்கில் இயற்கைவளமும் இலக்கியவளமும்

 

தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் எனத் தற்கால நோக்கில்- ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக - இனங்கண்டு நிலைநாட்டப் பெற்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன பொதுக்காலம்(பொ.கா.) பதினோராம் நூற்றாண்டு தொட்டுச் சில காலம் தொடர்ந்த பண்டைத் தமிழ் உரையாசிரியன் மரபில் சான்றோர் செய்யுட்கள் என வழங்கப் பெற்றன. அஃது அக்கால மரபென்பதைக் கம்பனின் வாக்கும் உறுதி செய்கிறது. ‘புவியனுக் கணியாய்…’ என்னும் அக் கம்பன்கவி செவ்வியக் கூறுகளையும் அடுக்கிப் போற்றுவது கம்பனின் மேதைமை காட்டும். (பா. மதிவாணன், ‘தமிழ்மரபில் செவ்வியல் இலக்கிய உணர்திறனும் உலகப் பொதுமையும்’, தொல்காப்பியம் பால.பாடம், அய்யா நிலையும், தஞ்சாவூர், ஆகஸ்ட் 2014, பக்.73-74)

தமிழ்ச் சான்றோர் செய்யுட்களின் தோற்றம் கால இடையீடு மறு செம்மையாக்கம், தொகுப்பு, செல்வாக்குக் குன்றல், உரையாசிரியர் கால மீட்சியியக்கம், மீண்டும் பொ.கா. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இன்னொரு மீட்சியியக்கம் எனும் வரலாற்றுப் போக்கில் (காண்க மேற்படி நூல்…) பத்தொன்பதாம் நூற்றாண்டின மீட்சி ஒருபுறம் தமிழினத் தனித்தன்மையின் பெருமிதமாகவும், மறுபுறம் உலகளாவிய பார்வையின் புதுத் துலக்கமாகவும் வெளிப்பட்டது.

உலகளாவிய பார்வையில் துலக்கிக் காட்டிய முன்னோடிகளுள் ஒருவர் சேவியர் நிக்கொலஸ் என்னும் இயற்பெயரும் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் எனும் பிற்காலப் பெயரும் கொண்ட,  தனிநாயக அடிகள் (02.08.1913 – 01.09.1980) ஆவார்.

தமிழ்ச் சான்றோரிலக்கியங்கள் பல்வேறு நோக்குகளுக்கு இடம்தரும் கூறுகள் கொண்டவையெனினும், அவற்றில் பதிவுற்றிருக்கும் இயற்கைக் கூறுகள் தமக்கெனத் தனித்த இருப்புடன் இயைந்தவை. இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளில் இரு தமிழறிஞர்கள் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் காணும் இயற்கையைத் தத்தம் நோக்கில் ஆராயத் தலைப்பட்டனர். 

ஒருவர் மு. வரதராசனார் (1948- முனைவர் பட்டம்), மற்றொருவர் தனிநாயக அடிகள்(1949 – எம்.லிட்.) மு.வ. பெரிதும் விளக்கமுறையிலும், அடிகள்  ஒப்பியல் நோக்கிலும் ஆய்வு நிகழ்த்தினர்.

அடிகள் தொடர்ந்து செழுமைப்படுத்தி ' A Study of Nature in Classical Tamil Poetry ’  என்னும் தலைப்பில் நூலாக்கினார்.

மு.வ.வின் ஆய்வு சற்றே முந்தையது எனினும் அடிகள் அதனை அறிந்திருக்கவில்லை. மு.வ. நூல் 1957இல் அச்சான பின்னரே அடிகள் கண்ணுற்றதாகத் தெரிகிறது (தனிநாயக அடிகள், நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், மொ.பெ.: க. பூரணச் சந்திரன், என்.சி.பி.எச்., சென்னை, 2014, ப. xvii இல் உள்ள 11ஆம் குறிப்புக் காண்க).

சங்கப் பனுவலை விரிவாகவும் செறிவாகவும் மு.வ. அலசி ஆய்நதிருப்பதாகவும் தாம் அயலகவாசகரை உளங்கொண்டு ஆய்ந்திருப்பதாகவும் அடிகள் குறிப்பிடுகிறார். (மேற்படி நூல், ப.xvi)

இந்த ஆய்வுக்குத் தூண்டுகோல் அடிகளின் ஆதங்கமே. மேலைப்புலமையாளர்கள் தமிழுக்கு அவ்வப்போது புகழாரம் சூட்டியிருப்பினும் தமிழுக்கு மேக்ஸ்முல்லர்களோ, மெக்டொனால்களோ, கீத்துகளோ , விண்டர் நீட்சுகளோ இல்லை என்கிறார். (மேற்படி நூல், ப.xvi)

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நூலில் இந்த அங்கலாய்ப்பு வெளிப்படுகிறது. பழந்தமிழர் நிலப்பகுப்பு இன்றைய இனவரைவியலாளர்க்கும் பழங்குடிப் பண்பாட்டாய்வாளர்களுக்கும் மலைப்பூட்டக்கூடியது (ஏனோ மேலை ஆய்வாளர் கவனம் செலுத்தவில்லை) என்கிறார் (மேற்படி, ப.38)

பேராசிரியர் ரைடரின் காளிதாசன் படைப்புப் பற்றிய ஆய்வைக் குறிப்பிடும்போதும் ரைடரின் பழந்தமிழ்ப் பரிச்சயமின்மை பற்றி வருந்துகிறார். (மேற்படி நூல், ப.42)

இந்த ஆதங்கம் அடிகளை ‘ஒப்பிலக்கியம்’ என்கிற பார்வையை நோக்கி உந்துகிறது. இத்தகு ஒப்பியலக்கிய ஆய்வை நிகழத்துவதற்கு, பன்மொழிப்புலமையும் இலக்கிய உணர்திறனும் இயற்கை ஈடுபாடும் கொண்ட அடிகள் முற்றிலும் தகுதியுடையவர் என்பது வெளிப்படை.

அடிகள் 1934 – 38ஆம் ஆண்டுகளில் உரோமானிய இறையியல் கல்லூரிகளில் பயில்வதற்கு முன்பே ஆங்கிலம் இலத்தின் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார். உரோமில் எபிரேயம், கிரேக்கம், இத்தாலி, ஸ்பானிசு, போர்த்துக்கீசு,பிரஞ்ச், செருமன் ஆகிய மொழிகளைக் கற்றார் ; பிற்காலத்தில் உருசியத்தையும் கற்றார்.

1949இல்  ' A Study of Nature in Classical Tamil Poetry ’ என்னும் தலைப்பில் எம்.லிட். ஆய்வேடு அளித்தார்.

1949-51ஆம் ஆண்டுகளில் மலேயா, சீனம், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென்னமெரிக்க நாடுகளான பனாமா, ஈக்வடார், பெரு, சிலி, அர்ஜென்டீனா, உருகுவே, பிரேசில், மெக்சிகோ, மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த டிரினிடாட், ஜமைக்கா, மார்த்தினீக், நடு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் இத்தாலி பாலத்தீனம், எகிப்து முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்து அறிவுத் தேடலோடு – குறிப்பாகத் தமிழியல் தேடலோடு - கூடிய வளமான அனுபவம் பெற்றார்.

இப்பயணங்களுக்குப் பின் தம் எம்.லிட். ஆய்வேட்டைச் செழுமைப் படுத்தி , ' Nature Poetry in Tamil: The Classical Period '   என்றும் அடுத்து, ' Landscape and Poetry: A Study of Nature in Classical Tamil Poetry '  என்றும் தலைப்பினையும் செம்மைப் படுத்தினார். 


அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்பெருமக்களால் செய்யப் பெற்ற செறுத்த செய்யுட்களாலாகிய சங்க இலக்கியப் பரப்பு ஒருபுறமும் பன்மொழிப் புலமையும் பன்னாட்டறியும் இயைந்த அடிகளின் திறம் மறுபுறமும்  இணைந்தமைந்து தொட்ட இடமெல்லாம் ஆய்வு நுட்பமும் அழகியலுணர்வும் புலப்படுமாறமைந்த ஒரு நூலை மதிப்பிடுதல் என்னளவைத்தன்று என்பதை நான் சொல் வேண்டியதில்லை. 


அடிகள் ஓர் அறிமுகத்தோடு, தொடங்கி ‘பின்னணி(The Background)’ முதலிய எட்டு இயல்கள் கொண்டதாக இந்நூலை யாத்துள்ளார்கள்

இலக்கியவில், வரலாறு, நிலத்தியல், அறிவியல், சமயவியல், மெய்யியல், சமூக அறிவியல் முதலிய பலதுறைகளிலும் அவருக்குள்ள பயிற்சி இந்நூலில் ஏற்றபெற்றி இழையோடுவதைக் காண முடிகிறது. ‘விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்’ ஆதலின் வசதி கருதி,


நடுவுநிலை

ஒப்பு

உறழ்வு

தனித்தன்மை

ஆய்வுத்தூண்டல்


என்கிற ஐந்தனுள் அடக்கிப் பிறவற்றையும் சற்றே தொட்டுக்காட்டுமாறு இக்கட்டுரையை அமைத்துள்ளேன்.


நடுவுநிலை

நூலைத் தொடங்கும்போதே அடிகளின் நடுவுநிலை முன்னிற்கிறது. பழந்தமிழிலக்கியங்கள் கிரேக்க இலக்கியங்களை – அளவாலோ வீச்சாலோ பன்முகத் தன்மையாலோ – ஒத்தவையல்ல என்கிறார்; தமிழிலக்கியத்தின் இன்றியமையாமையையும் தெளிவுறுத்துகிறார்(மேற்படி நூல், ப.v).


இவ்வாறே, பழந்தமிழிலக்கிய வரலாற்றுணர்வுக் குறைபாட்டை அவர் ஒப்புக் கொள்கிறார் (மேற்படி நூல், ப.42); தியோக்ரிடஸ் அல்லது வர்ஜில் தீட்டியது போன்ற இடையர் வாழ்க்கை பற்றிய மிகவிரிந்த காட்சிகள் தமிழில் இல்லை என்கிறார் (மேற்படி நூல், ப.141).

சங்கக் கவிதையியல் மிகச்சிறந்த தனித்தன்மையுள்ள இயற்கைக் கவிதைகளைத் தந்திருப்பினும் கவிஞரின் அகத்தெழுச்சியைக் கட்டுப்படுத்திவிட்டது போலவும் தோன்றுகிறது என்கிறார் அடிகள் (மேற்படி நூல், ப.159).

‘சுட்டி யொருவர்ப் பெயர்கொளப் பெறார்’ என்கிறது தொல்காப்பியம்( ). அடிகள் “பெயர் கூறாத்தன்மை, பொதுமைப்பட்ட வெளிப்பாட்டிற்கான ஆர்வம் ஆகியவை பழைய இந்தியக் கவிதைகளின் சிறப்பியல்பு” (மேற்படி நூல், ப.40-41) என்கிறார்.

இந்த நடுவுநிலை அவரது நூலின் நம்பகத்தன்மையை மிகுவிப்பதாக அமைந்து ஆய்வு நலஞ் சான்றதாகிறது. பிறநாட்டார் இந்நூலை எதிர்கொண்ட விதம் காணத் தனித்த தேடல் தேவை.


ஒப்பு

மரஞ்செடிகொடிகள் பூக்கள் முதலியவற்றை அடைகளால் செறிவாக வருணிக்கும் பாங்கில் மேலைப்பாக்களோடு தமிழ்ப்பாக்கள் ஒத்துள்ளமை காட்டுகிறார் அடிகள் (மேற்படி நூல், ப.6-7).

பழங்காலத் தமிழ் சமற்கிருதக் கவிதைகள் நிலத்தைப் பெண்ணாகவும் மலை மூங்கில் முதலியவற்றை முறையே முலைகளாகவும் தோள்களாகவும் கண்டதை அடிகள் ஒப்புநோக்கியுள்ளார் (மேற்படி நூல், ப.13)

பண்டைத் தமிழ் வேந்தர் முதலியோர் அடையாளப் பூக்கள் கொண்டிருந்தமை போல மேலை அரசர்களும் லில்லி, ரோஜா முதலியவற்றைக் கொண்டதுண்டு (மேற்படி நூல், பக்.30-31).

இயற்கை உலகு மனித இயற்கை இரண்டும் இயையும் தன்மையால் சிறக்கும் கவிதை இயல்பு பற்றி ஸ்டாஃபோர் புரூக்ஸ் என்பவரது கருத்தை மேற்கோள் காடடித் தமிழ்க் கவிதை அதற்கு முற்றிலும் பொருந்துகிறது என்கிறார் அடிகள் (மேற்படி நூல், பக்.41-42)

 Humani nihil a me alienuk puto என்னும், ரோமானிய நாடகத்தின் ஆசிரியர் டெரென்சின்(பொ.கா.மு. ஏறத்தாழ 195/185 – 159-?) இத்தொடரைப்போல் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”(புறம்.192) என்பதும் புகழ்பெற வேண்டிய கவித்தொடர் என்கிறார் அடிகள்( (மேற்படி நூல், ப.46).

இயற்கைக் கவிதைகளில் வரலாற்றை இணைக்கும் போக்கு – தமிழ்போலவே – வர்ஜில் முதலியோர் கவிதைகளிலும் உண்டு (மேற்படி நூல், ப.50).

சகுனம் பார்த்ல் - குறிப்பாகப் பறவை பறத்தல், ஒலித்தல் ஆகியன கொண்டு பார்த்தல் - உரோமானியர் கிரேக்கர்களிடமும் தமிழரைப் போலவே காணப்பட்டது(மேற்படி நூல், ப.79)

பிரிவாற்றாமையை மிகுவிக்கும் பொழுதாக மாலைப் பொழுது உலகம் முழுவதும் கருதப்பட்டதை செல்லி, கிரே, தாந்தே முதலியோரைக் கொண்டு உணர்த்துகிறார் அடிகள் (மேற்படி நூல், பக்.89-90).

கபில, பரணர் பாடல்களை “ஓர் ஐரோப்பியத் திறனாய்வாளன் வர்ஜிலுடனோ டென்னிசனுடனோ மிக எளிதில் ஒப்பிட இயலும்” (ப.111) என்கிறார்.

எட்டாம் இயல் முழுதும் தமிழ்க்கவிதைகளைச் சமற்கிருத , ஐரோப்பியக் கவிதைகளுடன் ஒப்புநோக்குவதாகும்.

ஒப்புநோக்குக்கு ஆங்காங்குச் சில காட்டுகள் தரப்பட்டுள்ளன. நூல் முழுவதுமே வெளிப்படையான இடங்களன்றி ஒப்புமை இழையோடும் இடங்கள் பலவுள்ளன. விரிப்பிற் பெருகும்.


உறழ்வு

நூலைத் தொடங்கும்போதே பாலைவனப் பகுதி, மிதமிஞ்சிய வளம் கொண்ட வட இந்தியா, இயற்கை தெளிவாக எல்லை வகுக்கும் தென்னிந்தியா ஆகியவற்றின் நிலப் பரப்புக்கும் பண்பாட்டிற்குமுரிய இயைபையும், இதனால் அவை தம்முள் வேறுபடுமாற்றையும் அடிகள்தம் பன்மொழி நூலறிவும், மொழித்திறமும் கொண்டு விளக்குகிறார் (மேற்படி நூல், பக்.2-3).

தொடக்கத்தில் முன்வைத்து உணர்த்தப்படும் இந்த உறழ்நிலை நூல் முழுமைக்கும் அடித்தளமாக அமைந்து தாங்குகிறது.

ஐரோப்பிய அமெரிக்க இலக்கியங்களில் அன்புக்கும் பக்திக்கும் மிதவெப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழ்மரபில் தாள் நிழலின் திளைப்புக் காணப்படுகிறது(மேற்படி நூல், பக்.9-10).

மேலைக் காதல் கவிதைகளில் பெயர் சுட்டுவது போல், தமிழ் அகக்கவிதைகளில் சுட்டப்படாமையையும், இஃதோர் இந்திய மரபென்பதையும் அடிகள் சுட்டுகிறார் (மேற்படி நூல், பக்.40-41).

வர்ஜிலுக்கோ இலத்தீன் கவிஞர்களுக்கோ மலைப்பகுதிகளின் மீது அவ்வளவாக ஆர்வமில்லை என்னும் கருத்தைச் சுட்டிக் காட்டி சில விதிவிலக்குகள் இருப்பினும் இது பொதுவான உண்மையே என ஏற்கும் அடிகள், சங்கக் கவிஞர்கள் இயற்கையின் எந்த ஒரு நிலப்பகுதியையோ தோற்றத்தையோ விட்டுவிடமாட்டார்கள் என்கிறார் (மேற்படி நூல், பக்.44-45).

கவிதைகளை ஒப்புநோக்கும் எட்டாமியல் இயல்பாகவே உறழ்ச்சிகளுக்கு இடம் தருவதாக அமைந்துள்ளது.

மேலை நிலக்கிடக்கை, தமிழக நிலக் கிடக்கைகளின் வேறுபாட்டை விவரித்து, கவிதைகளில் அவை வெளிப்படுவதைச் சொல்வதோடு, இலக்கிய மரபின் வேறுபாட்டையும் - அதாவது நிலப்பரப்பின் பிரதிபலிப்பினால் மட்டுமன்றி மரபாலும், பாங்காலும் வேறுபடுவதையும் - அடிகள் விளக்குகிறார் (மேற்படி நூல், பக்.143-145).

தொடக்க கால ரிக்வேதப்பாடல்களை நோக்கத் தமிழில் தொன்மங்களின் செல்வாக்குப் பொருட்படுத்தத்தக்க அளவிற்கு இல்லாமையையும் சமற்கிருதக் கவிதைகளில் பூக்கள், மாலைகள் முதலியவற்றுக்குப் பரவலான இடமிருப்பினும் சங்க காலத்தில் பூக்களும் மாலைகளும் பயன்பட்ட அளவையும், முக்கியத்துவத்தையும் கவிதைகளில் குறியீட்டுத் தன்மையுடன் இடம் பெறுவதையும் ஒப்பிடவே இயலாதென்கிறார் (மேற்படி நூல், பக்.146-147).

உரோமானிய நாகரிகத்தின் நாட்டுப்புறநேசம் பழந்தமிழர்தம் நகர நேசம் ஆகியவற்றை உறழ்ந்து காட்டி இலக்கியப் பதிவுகள் பற்றியும் அலசியுள்ளார் அடிகள் (மேற்படி நூல், ப.155).

இத்தகு உறழ்ச்சிக் கூறுகளும் நூலில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.


தமிழ்த்தன்மை

தமிழ் மண்ணுக்கேற்ப விளைந்த இந்நிலப்பண்பாட்டின் எல்லா அடையாளங்களையும் தமிழ்க்கவிதை கொண்டுள்ளது. அதாவது, தமிழர்கள் ஏதோ ஒரு வெளிநாட்டிலிருந்து, ஏற்கனவே வளர்ச்சியடைந்த மொழியோடும் இலக்கியத்தோடும் தமிழ் மண்ணுக்கு வந்தவர்கள் என்பதற்கான எந்த அடையாளமும் தமிழ்க்கவிதையில் இல்லை.(ப.3)

எனத் தமிழின் மண்ணுக்கேயுரிய (indigenous) தன்மையைத் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தும் அடிகள், மேலும் விரித்து

நாம் இங்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இலக்கியத்தின் காலத்தைவிட முற்பட்டதொரு காலத்திலேயே உருவாக்கப்பட்ட மரபு, தமிழ் நிலத்தை ஐந்துகூறுகளாகப் பகுத்தது; அல்லது தமிழ்நிலம் ஐந்து விதமான நிலத்தோற்றங்களைக் கொண்டிருப்பதாகத் தமிழ்மரபு கருதியது என்றும் சொல்லலாம். பூமி முழுவதுமே இந்த ஐவகை நிலங்களாகப் பகுக்கப்படலாம் என்றாலும், பூமியின் பல்வேறு நிலக்கூறுகளையும், தட்பவெப்ப நிலைகளையும் தனது சொந்த நாட்டின் எல்லைகளுக்குள்ளாகவே சிறிய அளவில் காணமுடிந்த தமிழரின் நல்லூழ் என்றே சொல்லத்தகும். (ப.36-37)

என்று போற்றுகிறார்.

சிக்கனமான மொழியில் மிகச்சிறந்த சொல்லோவியங்களைச் செறிவாகச் சித்தரிப்பது சங்கத்தமிழின் பண்பு ("Cankam Tamil has the characteristic of being extremely concise and curt and of delineating magnificient word – pictures with great economy of language" - Complete works of Thaninayaga Adigalr, Vol.I, Poompuhar Pathippagam, Chennai, 2013, P.17) 

  என்கிறார் அடிகள்.

இயற்கைக் கவிதையின் பின்னணி பற்றிய இந்த இயலை முடிக்கும்போது, தமிழ்நாட்டைவிட இயற்கையின் வளத்தை மிகுதியாகப் பெற்ற பல நாடுகள் உள்ளன என்பதையும் குறிக்க வெண்டும். ஆனால் சங்ககாலத்தின் கவிதை மூலவளம், மிகச் சாதாரணமான, எவ்வித ஆர்வத்தையும் எழுப்பாத நிலத்திலும் அழகினைக் கண்டது. பின்னர் நாம் பார்க்கப்போவது போல, பாலைநிலத்திலும் கூட தமிழ்க் கவிஞர்கள் மிகச் சிறந்த கவிதையைக் கண்டனர் என்ற உண்மை, அவர்களின் கவிதை வளத்தையும், கற்பனைத் திறனையும் மிக உயர்வாகக் காட்டுகிறது.(ப.14)

இயற்கை வளம் சற்றே குன்றியிருப்பினும் கவிதை வளம் தமிழில் விஞ்சிநிற்பதை இப்பகுதி காட்டுகிறது.

சங்கக் கவிஞர்கள் இயற்கையிலிருந்து பெற்ற உவமைகளின் நுட்பமும் அசலான தன்மையும் பற்றி எடுத்துக் காட்டுகளால் விளக்கும் அடிகள் “சங்க இலக்கியம் ஓர் இயற்கைவாதியின் சொர்க்கமாகவே காட்சியளிக்கிறது”(ப.44) என்கிறார்.

உள்ளுறை, இறைச்சி ஆகியன – குறிப்பாக உள்ளுறை – தமிழ்க்கவிதையின் சிறப்பியல்புகளுள் ஒன்று என்பதை அடிகள் வலியுறுத்துகிறார் (ப.46).

தமிழ்க்கவிதை மரபின் கட்டுப்பாடு பற்றி,

கவிதை மரபு, கவிதை விதிகளின்படி, ஒரு முழுமையான, துல்லியமான இயற்கை பற்றிய ஆய்வு தமிழ்க்கவிஞர்கள் மீது சுமத்தப்பட்டது. இத்தகைய நிலவியல் - தாவரத்தொகுப்பு – விலங்குத்தொகுப்பு – ஆய்வை மேற்கொள்ள வேண்டிய நிலை பிறமொழிகளில் எக்கவிஞருக்கும் இல்லை.(ப.39)

எனக் கூறும் அடிகள் பிறிதோரிடத்தில் “கவிஞரின் அகத்தெழுச்சியைக் கட்டுப்படுத்திவிட்டது போலவும் உள்ளது”(ப.159)என்று சற்றே குறைப்பட்டுக் கொள்வது முன்னர்ச் சுட்டிக்காட்டப்பட்டது.

வேறெந்த இலக்கியத்திலும் ஒரு பெண்ணின் அழகுக்கு ஒரு நகரத்தின் அழகை ஒப்பிடுவது காணப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய ஒப்புமை, பழந்தமிழ் இலக்கியத்தில் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது(ப.155) எனக்கூறும் அடிகள், “ஆனால், அவர்களது நகரநேயம் எவ்வகையிலும் இயற்கை மீதான அன்பில் குறுக்கிடவில்லை” (ப.156) என்றும் தெளிவுபடுத்துகிறார்.


ஆய்வுத்தூண்டல்

அடிகள் ஆங்காங்கே மேன்மேலும் ஆய்வதற்கான தூண்டல்களை இந்நூலில் விட்டுச் சென்றிருக்கிறார்.

சங்க இலக்கியத்தில் குலக்குறி வழிபாடு, இயற்கைப் பொருள்களில் இறை வழிபாடு, பல கடவுள் வழிபாடு, ஒரு கடவுள் வழிபாடு ஆகிய அனைத்திற்கும் சான்று உண்டு என்று கூறி, இவை படிப்படியே மாறி ஒரு கடவுள் கோட்பாடாக ஆயிற்று என்னும் சிந்தனைக் குழுவின் கருத்துக்கு மாறாக ஒரு கடவுள் வழிபாட்டுக்குப் பின்னர் பிறமுறைகள் தோன்றின என்பதற்குத் தமிழ் இலக்கியம் ஆதரவு தருவதாகத் தோன்றுகிறது என்கிறார் (ப.62)

தொடர்ந்து, “தமிழரின் இயற்கை பற்றிய கருத்தாக்கத்தோடு மிக நெருக்கமாக இணைந்ததுதான் தமிழர் மதம் என்பது புலனாகிறது”(ப.73) என்கிறார் அவர்.

‘எற்பாடு’ என்பதற்கு உரையாசிரியரிடையே நிகழும் விவாதம், நெய்தல், மருதத் திணைகளுக்குத் தனித்த பெரும்பொழுது இன்மைக்கு உரையாசிரியர்கள் தரும்  விளக்கம் ஆகியன குறித்து அடிகள் ஆராய்ந்துள்ளார்(பக்.92-93)

பாலைத் திணையும் அதற்குப் புறமான வாகைத் திணையும் தொடக்க வகைப்பாட்டில் இல்லாமல்,பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்னும் அடிகளின் ஊகம்(பக.100-101) இன்றளவும் போதிய அளவு ஆராயப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கைக்கிளை, பெருந்திணை அவற்றின் புறத்தவாகிய காஞ்சி, பாடாண்திணைகள், செய்யுள் தொகுப்புமுறை ஆகியன பற்றிய அவர் கருத்துகளும்(பக்.101-102) ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியனவாகும்.

உள்ளுறையில் இயற்கை, தாவர விலங்குத் தொகுதிகள் ஆகியன பயன்படுத்தப்படும் முறையை ஆய்ந்து விளக்க வேண்டுமென்கிறார் அடிகள் (ப.132). அடிகளைச் சுட்டியும் சுட்டாமலும் உள்ளுறை, இறைச்சி பற்றிய தொடர் ஆய்வுகள் நிகழந்துள்ளன எனலாம்.


பிற

ஆங்காங்குப் பல்வேறு துறைகள் இரசனைகள் சார்ந்த பல பதிவுகள் அடிகளின் நூல்முழுதும் இழையோடுகின்றன. இவற்றுள்ளும் சிலவற்றையே இங்குக் காட்ட இயலும்.

தமிழ்க் கவிஞர்கள் கையாளலில் மரங்கள், பூக்கள், செடிகளின் பெயர்கள் இசையோடு விளக்குவதாகக் கூறி முல்லைப்பாட்டு(93-96) சிறுபாணாற்றுப்படை (146-149) ஆகியவற்றின் சில பகுதிகளைக் காட்டுகிறார் ஆடிகள்(ப.7). இப்பகுதிகளின் இசைமை நுண்ணுணர்வுடையார்க்கே புலப்படும் என்பதன்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் பழந்தமிழ்ப் பாக்களில் சொல்லிலும் பொருளிலும் மட்டுமன்றி ஓசையமைதியிலும் அவர் தோய்ந்துணர்ந்திருப்பதை அறிய முடிகிறது.

தென்னிந்தியாவில் இயற்கை அழகுறுத்துவதாகவும், அலங்காரத் தன்மை உடையதாகவும் உள்ளதுபோலவே தென்னிந்தியக் கலையும் - இசை ஆயினும், இலக்கியமாயினும், கட்டடக்கலை ஆயினும், ஓவியமாயினும் - அழகுறுத்தவும் நுட்பமாகவும் அலங்கரிக்கப்படுகின்றன; கடைசிக் கூறுவரை ஆய்வுக்கு உள்ளாகின்றன. தமிழ்க்கவிதைகளைப் போலவே தென்னிந்தியக் கோயில்களும் உள்ளன. தென்னகக் கோயில்களில், செதுக்கப்பட்ட பாறைகள் ஒன்றின் மேலொன்று அடுக்கு அடுக்காக அமைகின்றன. அவற்றின் ஒருங்கிணைவு, பெரிய முழுமையான கோபுரத்தை உருவாக்குகிறது. இதுபோலவே தமிழ்க்கவிதையும் செதுக்கி இணைக்கப்பட்டதோர் முழுமைதான். பழந்தமிழ்க்கவிதைகளில் மிக நீண்ட முழுக்கவிதையும்  இலக்கணத்தின்படி ஒரே ஒருகூற்றாக அமையும் வாக்கியம்தான். கோபுரத்தின் அடுக்குகள் போலப் பல்வேறு கிளவிகளையும் தழுவுதொடர்களையும் கொண்டு, முத்தாய்ப்பாக ஒரு முக்கியக் கிளவியைக் கொண்டு அக்கவிதைகள் அமைகின்றன.(ப.143-144)எனத் தென்னிந்தியக் கலைகளுக்கும் கவிதையமைப்பிற்குமான நுட்பமான இயைபை அடிகள் இனங்கண்டுள்ளார்.

பழைய பழக்கவழக்கங்கள் நடைமுறைகளின் எச்சங்கள் பிந்தைய இலக்கியங்களில் பதிவாயிருப்பதாகக் கருதிச் சங்க இலக்கியப் பகுதிகளை அடிகள் காட்டுகிறார்(ப.20).

தமிழ்க் கவிதை,  வரலாற்றுப் போக்கில் மாற்றமுற்றிருப்பதைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் (ப.43).

“துன்பம், ஆசை, புலம்பல் இவற்றைத் துயரத் தொனியில் வெளியிடுகின்ற கவிதைகளுக்கு உலகம் முழுவதிலுமுள்ள கவிஞர்கள் ஞாயிற்றின் மறைவை, குறிப்பாகக் கடலின் ஓலத்துடன் கூடிய ஞாயிற்றின் மறைவை இயற்கைப் பின்னணியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்”(ப.125) என உலகளாவிய கூறுகளைத் தம் பரந்த இலக்கியப் பயில்வால் கண்டு காட்டுகிறார்.

இன்னும் பற்பலவற்றை எடுத்துக்காட்டிக் கொண்டே போகலாமெனினும் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.

ஒட்டுமொத்த நூலிலும் இழையோடுவதாக நான் கண்டது: ஒரு நிலப்பரப்பின் இயற்கைவளம் அப்பரப்பில் உருவாகும்  கவிதையில் இடம்பெறுவது இயல்பே எனினும் அவ்வியற்கை வளத்தோடு கவிதை நேர்விகிதத் தொடர்பு கொண்டிருக்க வேண்டியதில்லை; கவிதை தனக்கெனத் தனித்த வளத்தைக் கொண்டிருக்கவியலும் என்பதைப் பழந்தமிழ்ச் சான்றோர் செய்யுட்களின் அகச்சான்றுகளாலும் கிரேக்க, வடமொழிக் கவிதைகளின் ஒப்பீட்டாலும் அடிகள் நிறுவியிருக்கிறார் என்பதுதான்.

- காலச்சுவடு & இலயோலா கல்லூரித் தமிழ்த் துறை இணைந்து நடத்திய கருத்தரங்கில்   05.12.2014 அன்று படிக்கப்பெற்றது.


Saturday, June 12, 2021

'குநவும்' என்றால் என்ன? (அல்லது) பாடத்தை நடத்தி முடிக்காதது ஏன்?




 பின்னணி: 

03.06.2019 அன்று தஞ்சையில் கவிஞர் தங்க. செந்தில்குமார் பொன் விழா . அதில் பேசும் போது, 'நான் எனது 34 ஆண்டு ஆசிரியப் பணிக் காலத்தில் கறாரான ஆசிரியனாக இருந்ததில்லை;பாடம் நடத்தியதில்லை; பாடப் பகுதிமேலான உரையாடலையே நிகழ்த்தினேன்; எனக்கு ஒதுக்கப் பட்ட பாடப் பகுதியை முழுமையாக முடித்ததும் இல்லை , அதாவது போர்ஷனைக் கவர் செய்ததே இல்லை' என்றேன்.

நேற்றுப் பேரா. மு.இளமுருகன் " என்ன மதி, அப்படி பேசிட்ட. ஒன்னப் பத்தி என்ன நெனப்பாங்க. எங்கிட்ட யே ... லாம் வருத்தப்பட்டாங்க " என்றார்.

சில செய்திகள்:

இன்னும் சிலவற்றையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்நான் பதிவு செய்திருக்கிறேன்.

என் வகுப்பளவில் மாணவர் வருகையைப் பதிவு செய்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்; பல வகுப்புகளில் வருகையைக் குறிக்க மறந்துவிடுவேன். வகுப்பறையிலோ வெளியிலோ மாணவர்கள் சற்றும் அச்சமின்றி என்னை அணுகலாம்; பேசலாம் என்பது இயல்பாக இருந்தது.

வகுப்பறைக்குள் நான் நுழையும் போதோ அறையிலிருந்து வெளியேறும் போதோ மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டியதில்லை என்பதை -முதன்முதலாகவகுப்பறைக்குச் சென்ற அன்றுதொட்டு - சொல்லிவந்திருக்கிறேன். என் வகுப்புக்குக் காலம் தாழ்ந்து வரலாம்; இடையில் என் இசைவு பெறாமலேயே எழுந்து செல்லலாம் (ஆனால், மிக மிக அரிதாகவே காலந்தாழ்ந்த வருகையும் இடையில் வெளியேறுதலும் நிகழ்ந்தன). 

இந்தப் போக்குக் குறித்து - சட்டம் ஒழுங்கைப் பேணும் பொறுப்புக்காரணமாக - கல்லூரி முதல்வர், பல்கலைக் கழகத் துறைத் தலைவர் ஆகியோர் தம் கருத்து வேறுபாட்டைச் சொல்லியதுண்டு. நல்ல வேளை குறிப்பாணை முதலிய எல்லைக்குக் கொண்டு செல்லவில்லை. அவர்களுக்கு நன்றி.

இத்தகைய நடைமுறைகள் என்றுமே எனக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தியதில்லை . 

இவை என் வழக்கங்களே அன்றிப் பரிந்துரைகள் அல்ல.

நான் வாங்கும் புதிய புத்தகங்களையும் மாணவர்கள் படித்தால் நல்லதென்று கருதும் - பாடத்திட் டத்தில் இல்லாத - பழைய புத்தகங்களையும் மொழி இலக்கியம் சார்ந்த அண்மைச் செய்திகளையும் வகுப்பறையில் முதல் 5 - 10 மணித்துளிகள் அவ்வப்போது அறிமுகப்படுத்துவேன்.

 தேர்வு, மதிப்பெண் இவற்றை மட்டுமே கருதும் வினா - விடை, பாடத் துணை (Notes) நூல்களை அறிமுகப்படுத்தவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். 

பாடப்பகுதியை நடத்தி முடிக்காவிட்டாலும் தேர்வு நெருங்கும் கட்டத்தில் மதிப்பெண் நோக்கில் எஞ்சியவற்றை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதற்கான சில வழிகளைச் சொல்வேன்.

பாடம் நடத்தும்போது , 'இப்படியும் ஐயமா?' என்று தோன்றும் வகையில் எதிர்பாராதவாறு மாணவர்கள் வினவுவதுண்டு. இவற்றை எதிர்கொண்டு நிறைவடையுமாறு விளக்கிக் கடந்து செல்ல வேண்டுமெனில் காலமும் கடந்துதானே போகும்!

                                                xxxxxxxxxxxxxxxxxx

எதிர்பாரா ஐயத்திற்கு ஓர் எடுத்துக் காட்டு : 

" குநவும் என்றால் என்ன?" (எச்சரிக்கை : இலக்கணம்.பொறுமை இருந்தால் தொடரலாம் அல்லது *** க்குப் பிறகு உள்ளவற்றை மட்டும் படிக்கலாம்)


1)எறி கொற்றா (எறி = எ, ற்+ இ. இ-உயிர் எழுத்து)

2)கொணா கொற்றா (கொணா=க் + ஒ, ண் + ஆ.ஆ -உயிர்)


எறி (தல் ) -ஏதேனும் ஒன்றைத் தூக்கி வீசு(தல்)

கொணா = கொண்டு வா


முன்னே இருக்கும் கொற்றனிடம் , எறி/ கொணா - என்று கூறும்போது,  எறி,கொணா இரண்டும் முன்னிலை வினைகள்; உயிர் எழுத்தை இறுதியாகக் கொண்டவை.

இவற்றை உயிர் ஈறு என்பார்கள். இன்னும் துல்லியமாகச் சொன்னால் இவை உயிர்ஈற்று முன்னிலை வினைச்சொற்கள் .

[(நான் )எறிந்தேன் - தன்மை வினை

(கொற்றன்) எறிந்தான் - படர்க்கை வினை]

3)உண் கொற்றா ( உண் - என்பதில் ண் புள்ளியீறு)

4) தின் கொற்றா ( தின் - என்பதில் ன் புள்ளியீறு)

உண்= உண்பாயாக, தின் = தின்பாயாக.

இவை புள்ளியீற்று/ புள்ளியிறுதி முன்னிலை வினைச் சொற்கள் என்று உணர்ந்திருப்பீர்கள்.

கொற்றா - என்பதன் முதல் எழுத்து கொ. அதாவது க்+ஒ.

துல்லியமாகச் சொன்னால் க் - தான் முதல் எழுத்து .

க்- என்பது வல்லெழுத்து ( ச், ட், த், ப், ற் - என்பனவும் வல்லெழுத்துகள்தாம் ; வல்லினம் என்றும் சொல்வார்கள்) 

எறி, கொணா - போன்ற உயிர் ஈற்று முன்னிலை வினைகளும்

உண், தின் முதலிய புள்ளியீற்று முன்னிலை வினைகளும் நிற்க (நிலை மொழி என்பார்கள்) அடுத்து,

வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்தால் (வருமொழி என்பார்கள் ) எந்த மாற்றமும் ஏற்படாது.

இவ்வாறு மாறாமல் இருப்பது இயல்பு புணர்ச்சியாகும்; சுருக்கமாக இயல்புஎன்பார்கள்.

5)நட+ கொற்றா = நட கொற்றா✓/ நடக்கொற்றா✓ 

6) ஈர்+ கொற்றா = ஈர் கொற்றா✓  / ஈர்க்கொற்றா✓

     ஈர்(த்தல்)= இழு(த்தல்)/ பிள(த்தல்)

நட கொற்றா, ஈர் கொற்றா என்பவை இயல்பு.

நடக் கொற்றா, ஈர்க் கொற்றா என்பவற்றில் வருமொழிக்கேற்ப ஒரு வல்லெழுத்து / வல்லின எழுத்து மிகுந்திருக்கிறது / தோன்றியிருக்கிறது. இத்தகைய இடங்களில் இரண்டும் சரி என்கிறது தொல்காப்பியம்.

இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்டவாறு புணர்ந்தாலும் பிழையில்லை என்றால் உறழ்ச்சி என்பார்கள்.

மேலே உள்ள எடுத்துக் காட்டுகள் (1-6) இளம்பூரணர் உரையில் உள்ளவை. நச்சினார்க்கினியரும் இவற்றையே பின்பற்றி மேற்செல்கிறார் .மேலும் சில விளக்கங்களும் உள்ளன. இப்போதைக்கு இவை போதும்.

சூத்திரத்தைப் பார்ப்போம்.

உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்

புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்

இயல்பா குநவும் உறழா குநவுமென்

றாயீ ரியல வல்லெழுத்து வரினே

( தொல்காப்பியம், எழுத்ததிகாரம், தொகைமரபு - 9)

புணர்ச்சி இலக்கணத்தை எடுத்துக் காட்டு , விளக்கம், விதி, சூத்திரம் என்ற வரிசையில் நடத்துவது

என் வழக்கம். இதனை விதிவரு முறை என்பார்கள்


                                                             ***

இதை நடத்தி முடிக்க ஏறத்தாழ இருபது மணித்துளியாயிற்று. 

மாணவர் இரா... எழுந்து, " ஐயா, குநவும் என்றால் என்ன?" என்றார். 

எனக்குப் புரியவில்லை.

"என்ன ? " என்றேன். 

" ஐயா, குநவும் " என்று சற்றுத் தெளிவாக அழுத்தமாகச் சொன்னார்.

"குணமுமா?" என்றேன்.

"இல்லை" என்று என்னை நெருங்கிப் புத்தகத்தில் விரல் வைத்துச் சுட்டிக்காட்டினார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இப்படியும் ஐயம் எழும் என்கிற தெளிவும் கிடைத்தது. 

" இரா ... நீங்கள் தொடர்ந்து தயங்காமல் சந்தேகம் கேளுங்கள்" என்று வேண்டி, பிறகுதான் விளக்கம் சொன்னேன். அவரும் இரண்டாண்டுகள் தொடர்ந்து கேட்டார்.

இயல்பு + ஆகுநவும் = இயல்பாகுநவும்

யாப்புநோக்கி,  'இயல்பா'  'குநவும்' என்று இரண்டு சீர்களாக அச்சிடப்பட்டுள்ளன.

இளங்கலை (B.A) தமிழ் பயின்ற ஒருவருக்கு இந்த ஐயம் எழக்கூடாது. ஆனால் பட்டத்திற்கும் தகுதிக்குமான இடைவெளிக்குத் தனிப்பட்ட மாணவரைக் குறைசொல்லக் கூடாது.

ஆசிரியத் தொழிலின் சங்கடங்களுள் ஒன்று, ஆசிரியருக்கு இயல்பாகப் பழகிப்போன ஒன்று , மாணவர் பழகாததாக இருக்கும். மாணவருக்கு எளிதாகப் புரியக்கூடியதுதானே என்று கருதி நகர்ந்துவிடக் கூடாது.

இது கூடவா தெரியாது என்று ஆசிரியர் நினைக்கிற மிகச் சாதாரணமான ஒன்றுகூட ஏதோ காரணத்தால் மாணவர் சிலருக்குத் தெரியாமலிருக்கலாம்.

மாணவரோடு நிகழ்த்தும் சுதந்திரமான உரையாடல் மூலமே இதனைக் கடக்க இயலும் என்பது என் அனுபவம்.

வெறும் போர்ஷன் முடித்தல், தேர்வு, மதிப்பெண் என்பவை உயர்கல்வியல்ல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'குநவும்' என்றால் என்ன? - 2

                 (அல்லது)

சந்திப்பேயும்  விகார வெறியும்*

(* புலவர் வேங்கடாசல முதலியார், சந்தி பிரித்து அச்சிட்ட,  கம்பராமாயணம் , அயோத்தியா காண்டப் பதிப்பில் எழுதிய தொடர்)

குநவும் பற்றிய எனது இடுகையைப் படித்த பேராசிரியர் தமிழ் சிவாSiva Krishnan, " முதலில் குநவும் என்றால் புரியவில்லை. எங்கள் வகுப்பில் கொக்கு கொக்க (கொக்கு ஒக்க....) என்று நண்பர்  ஒருவர் படித்தார். புணர்ச்சியைப் படிக்கச் சொல்லித் தராததன் விளைவு இது " என்று கருத்துரைத்தார். அப்போது , அது பற்றிச் சற்று விரிவாக எழுதப் போவதாகக் குறிப்பிட்டிருந்தேன்;இப்போது எழுதுகிறேன்.

                                                            ----------------

பேராசிரியர் பீ.மு.மன்சூர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்ற காலத்து நிகழ்ச்சியொன்றைச் சொன்னது நினைவுக்கு வருகிறது:


பேராசிரியர் சோ.ந.க. அவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, மாணவர்களுக்குரிய முதல் வரிசை நீள் மேசையில் சந்தி பிரித்த மர்ரே ராஜம் பதிப்பு ஒன்று இருந்ததாம். அதைத் தூக்கி வீசி எறிந்து விட்டு, எதுவும் நடக்காதது போல், இயல்பாகப் பாடம் நடத்தத் தொடங்கி விட்டாராம்.

                                                                   ----------------

நவீனத்திற்கு முந்தைய காலத்துப் பா இலக்கியங்களைத் தொடர்ச்சி குன்றாமல் இயன்றவரை முழுமையாகவும் தனித்தனியாகவும் சொற்கள் தெளிவுறுமாறு படித்துக் காட்டி,இரசனை சுட்டி,வாய்ப்பு இருப்பின் சமகாலப் போக்கோடு ஒப்புமை தேடி , அருஞ்சொற்பொருள், உள்ளடக்கம் சார்ந்த விளக்கம் என்று நடத்திப் பிறகு மொழியமைப்பைத் தேவைக்கேற்ப விளக்குவது என் வழக்கம்.


மொழியமைப்பை விளக்குவதில் முதற்படி சந்தி பிரித்தல்தான். படித்துக் காட்டும் போதே பேரளவு சந்தி பிரித்தல் நிகழ்ந்துவிட்டாலும், இன்றியமையாதவற்றைக்

கரும்பலகையில் எழுதுவேன் ( சாக் கட்டி கையில் இல்லாமல் என்னால் பாடம் நடத்தவே இயலாது) . இந்தக் கட்டத்தில் மாணவர்களிடையே ஒரு சலிப்புத் தலை தூக்கும். 


என் வகுப்பில் மாணவர்கள் அச்சமின்றி உரையாட இயலும் என்பதால்,  'ஐயா, இலக்கிய வகுப்பிலும் பாதி இலக்கணமா? ' என வெளிப்பட வினவவும் செய்வார்கள்.  

                                       _______________

இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களின் இலக்கியச் சொற்பொழிவை முதன் முதலாகக்கேட்டுச் சொக்கிய வட்டத்தொட்டி அன்பர் ஒருவர், ' ஐயா, தமிழ் இலக்கியங்கள் இவ்வளவு சுவையானவை என்று இன்று வரை தெரியாதையா. தமிழாசிரியர் எவரும் இப்படிச் சொன்னதே இல்லையே ஐயா! ' என்றாராம்.


அதற்கு டி.கே.சி., தமிழ்ப் பண்டிதரிடம் கம்பராமாயணம் பாடம் கேட்டால், அவர் ' கம்பராமாயணம், கம்பரது ராமாயணம் அல்லது கம்பரால் இயற்றப்பட்ட ராமாயணம், ஆறாம் வேற்றுமைத் தொகை அல்லது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை ' என்பார். கேட்பவர் கொட்டாவி விடத் தொடங்கிவிடுவார். தமிழ் இலக்கிய இரசனையின் முதல் எதிரிகள் தமிழ்ப் பண்டிதர்கள்தாம்- என்பாராம்.


நான் இதைச் சொல்லிவிட்டு ,  "பேருந்தில் பயணம் செய்பவருக்குப் பேருந்தை ஓட்டும் பயிற்சியோ தொழில்நுட்ப அறிவோ வேண்டியதில்லை. ஆனால் ஓட்டுநருக்கு அவை இன்றியமையாதவை. ஆனால், ஓட்டுநரும் ஒரு வகைப் பயணிதான்.


"இலக்கியச் சொற்பொழிவை இரசிக்கும் பொதுமக்களுக்கு இலக்கண நுட்பம் தேவையில்லை. இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகப் பயில்வோருக்கு இலக்கண அறிவு நுட்பமும் தேவை.


"நமக்குள்ள பாடப்பகுதிகள் மாதிரிக் காட்டுகள்தாம். இவற்றின் இலக்கண அமைதியை விளங்கிக் கொண்டால், பிற பிற பாக்களை நீங்களே அணுகிப் பயில்வது எளிது. 


"வெறும் இரசனை முறையில் பாடங்கேட்டால் , கேட்பதற்கு இனிமையாக இருக்குமே தவிர நீங்களாகவே பிறவற்றை அணுகுவது சிரமம்; பிறருக்குச் சுவைபடச் சொல்வதும் சிரமம்" என்பேன்.

                                                        xxxxxxx

பழம் பா இலக்கியங்களைச் சந்தி பிரித்து அச்சிற் பதிப்பிக்கும் வரலாற்றுத் தொடக்கம் ஆராய்தற்குரியது.

தமிழ்ப் பேரறிஞர் , பள்ளியகரம் நீ.கந்தசாமிப் பிள்ளையவர்கள் இடப்புறம் ஓசை கெடாதவாறு சீர் பிரித்து அடி வரையறுத்தும் வலப்புறம் பொருளுணர்ச்சி கருதிச் சந்தி பிரித்து அருஞ்சொற்பொருளுடனும் பதிப்பித்த திருவாசகம் முதற் பகுதி முன்னுரையில், சந்தி பிரித்துப் பதிப்பித்தல் பற்றிய 

முந்தையோர் கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து முழுமையான மேற்கோள்களாக முன் வைத்துள்ளார்.

                                                            xxxxxxx


சந்தி பிரிப்பதிலும் சில முறைமைகள் தேவை. 

தேர்ந்த தமிழறிஞர்களின் புலமையையும் உழைப்பையும் கொண்டு தமிழ் நூல்கள் பலவற்றைச் சந்தி பிரித்துப் பதிப்பித்துப் புகழ் பெற்ற மர்ரே & ராஜம் கம்பெனியார்

'சந்தி குறியீட்டு விளக்கம்' என்னும் கையேடொன்றை வெளியிட நேர்ந்தது . இதனை  ஒரு வகையில் சந்திபிரித்தலின் இலக்கணம் என்று சொல்லலாம். 

ஏதேனும் ஒரு வடிவில் இலக்கணம் வந்துவிடும்.

                                                         xxxxxxxxxx

 உயர் கல்வி நிலையில் இலக்கியம் பயில்வோர் , சந்தி பிரிக்காத வடிவத்தை முதலாகக் கொண்டு, இலக்கண அமைதியுணர்ந்து சந்தி பிரிக்கப் பயில வேண்டும்.

எனவேதான் பேரா.சோ.ந.க. அவர்கள் முதுகலை வகுப்பில்  சந்தி பிரித்த நூலைத் தூக்கி வீசினார்.

(வேண்டுமானால் சந்தி பிரித்த நூலைத் துணையாகக் கொள்ளும் சலுகையைத் தரலாம்)

                                                  °°°°°°°°°°°°°°°°°°°

சந்தி பிரித்து அருஞ்சொற்பொருள் தந்துவிட்டால் போதுமா? பொருளுணர முடியுமா?

அவ்வாறு அமைந்த, நீ.கந்தசாமிப் பிள்ளையவர்களின் திருவாசகப் பதிப்பிலிருக்கும் திருவண்டப்பகுதியிலிருந்து மாதிரிக்குச் சிலவற்றைப் பார்ப்போம்( இந்தப் பக்கத்தின் நகலைப் பகிர்ந்துள்ளேன்) :




1. 1. உண்டைப் பிறக்கம்        உண்டைப் பிறக்கம்

1. 2. தூலத்துச் சூறை                      தூலத்து, சூறை


1.1.சந்தி பிரிக்காத இடப்புறம்,    சந்தி பிரித்தவலப்புறம் இரண்டிலும் புணர்ச்சியில் தோன்றிய  ' ப் '  உள்ளது.


1.2.இல் இடப்புறம்  த்  உள்ளது, வலப்புறம் த் கைவிடப்பட்டுக் காற்புள்ளி இடப்பட்டுள்ளது. ஏன், 

வலப்புறமும் ' தூலத்துச் சூறை ' என்றே போடலாமே?    


'திருவண்டப் பகுதி' யின் 13-15 ஆம் அடிகளைப் பார்ப்போம்.

2.1. படைப்போற் படைக்கும்        படைப்போன் படைக்கும்

        காப்போற் காக்குங்                காப்போன் காக்கும்

2.2. கரப்போன் கரப்பவை           கரப்போன் ; கரப்பவை


2.1. இன் இரு தொடர்களிலும் புணர்ச்சியில் -ன் > ற் ஆகத் திரிந்திருக்கிறது.

2.2.இல் ஏன் கரப்போற் கரப்பவை என்று - ன் > ற் ஆகத் திரிய வில்லை?

படைப்போன் படைக்கும்

காப்போன் காக்கும்         

என்று சந்தி பிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், சந்தியை மட்டும் பிரித்துக்காட்டுவது போதாது.


3. நின்றெழில்       நின்ற எழில்


     ' நின்று எழில் ' என்றுதானே பிரிக்கவேண்டும்?


இவை போன்ற இடங்களில் இலக்கணக் குறிப்புத் தேவை.


1.1. உண்டைப் பிறக்கம் = உண்டைகளின் பிறக்கம்

       [உண்டை = உருண்டை; பிறக்கம் = இயக்கம்(எனலாம் என்பது என் கருத்து)] உருண்டை வடிவில் அண்டத்தில் இயங்கும் கோள் முதலியவற்றைச் சொல்கிறார் மாணிக்க வாசகர் . இஃது ஆறாம் வேற்றுமைத் தொகைத் தொடர்.

1. 2.' சூக்கமொடு தூலத்து' - என்னும் இரண்டும் முரண்காரணமாக ஒருங்கு நிற்கின்றன. 

       ' சூறை மாருதத்து' = சூறைக்காற்று என ஒருங்கு நிற்கின்றன.

       'தூலத்துச் சூறை' - எனில் பொருள் இயைபில்லை.

ஓசை காரணமாக 'ச்' என்னும் வல்லெழுத்து மிகுந்துள்ளது; அவ்வளவுதான்.

இவற்றிடையே பொருள் இயைபு காணலாமெனில் சந்தி பிரிக்கும்போதும் 'ச்' இடம்பெறலாம்.


2.1.படைப்போற்படைக்கும் = படைப்போனைப் படைக்கும்.

       காப்போற்காக்கும் = காப்போனைக் காக்கும்

சிவபெருமானை முழு முதற் கடவுள் என்பர் சைவர். அம் முழு முதற் கடவுளே படைப்போனாகிய பிரமனைப் படைத்தவன்; காப்போனாகிய திருமாலைக் காப்பவன் என்பது பொருள்.

       

      படைப்போன் (+ஐ )

      காப்போன் (+ ஐ  )

      என இரண்டாம் வேற்றுமை உருபு

      மறைந்து - தொகையாக - நிற்பதால்தான்  - ன் > ற் ஆகத் திரிந்துள்ளது.

      2.2. இல் ' காப்பவை கரப்போன் ' என்பது ஒரு தொடர், ' கரப்பவை ... கடவுள் ' என்பது மற்றொரு தொடர்.

எனவேதான் இடப்புறத்திலேயே திரிபின்றி இயல்பாக உள்ளது.


3. நின்ற எழில் > நின்றெழில் ஆவதைத் தொகுத்தல் விகாரம் என்பார்கள்.


இவற்றையெல்லாம் பயிற்றுவிக்காமல் போர்ஷனை முடித்தால் , இரா .... போன்ற மாணவர்கள் முதுகலை வகுப்பில் "குநவும் என்றால் என்ன?" என்றுதானே கேட்பார்கள்? (பயிற்றுவித்த பின்னும் மறந்து போய்க் கேட்பதுண்டு. குற்றமில்லை. நினைவூட்டினால் பிடித்துக் கொள்வார்கள். தொடர்ந்து பயில்வதன் மூலம்தான் மொழியமைப்பை நினைவில் தக்கவைத்துக் கொள்ள இயலும். இவற்றைச் சற்றும் பயிற்றுவிக்காமல் போனால்?)

(6 & 13 சூன் 2019 முகநூல் இடுகைகள்)


Thursday, June 10, 2021

ಠ_ಠ) 'தேவலாம்' : சமாளிப்பியம் (ಠ_ಠ)





மூன்று மாதத்திற்குள் , மீண்டும் மூக்குக் கண்ணாடி உடைந்துவிட்டது.

"கொஞ்சம் உறுதியாயிருந்தால் தேவலாம் " என்றேன்.

என் பையன் " வலைவழி வாங்கலாம் "என்றான்.


- என்று தொடங்கியது என் முகநூல் இடுகையொன்று .


அதனைப் படித்த  திரு. அற்புதராஜ் சுந்தரம் அவர்கள் , 

" அன்புள்ள நண்பர் மதி! தேவலாம் என்ற சொல்   எப்படி பயன்பாட்டிற்கு வந்தது ,எங்கிருந்து வந்தது..அதற்கு சமமான பண்பாட்டுச் சொல் என்ன?அகராதியில் தேவலாம் என்ற சொல் இல்லை.அகராதியில் பரவா என்று ஒரு சொல் இருக்கிறது.அதன் பொருள் கவலை,குற்றம் என்று   இருக்கிறது. நாம் பரவா இல்லை என்று சொல்லுததற்கு பதிலாக  பரவாயில்லை என்று எழுதுகிறோம். அப்படி எழுதுவது தவறு என்று தோன்றுகிறது. விளக்கமாக சொல்லுங்களேன்..." என்றார்.


என் விளக்கம்:

தாழ்வி(ல்)லை > தாவிலை > தேவலை ( குறிப்பு வினை முற்று) ¹


 இதிலிருந்து - வரலாம் , போகலாம் என்பன போல் - தேவலாம் என்பது வழக்கில் வந்துவிட்டது. இது , எதிர்பார்ப்புக் குறிப்புடைய நோக்கு வினைச்சொல் (Modal Verb).²


பரவா/ பர்வா - பாரசீகத்திலிருந்து உருது, இந்தி, தமிழ் , கன்னடம் முதலிய மொழிகளுக்கு வந்த சொல். பரவா + இல்லை = பரவாயில்லை (வருமொழி முதல் காரணமாக யகரம் உடம்படுமெய்யாயிற்று)


                           —————————


தேவலாம் பற்றி மட்டும் பார்ப்போம்.


¹. தேவலை  tēvalai , n. < தாழ்வு + இல்லை. cf. தாவிலை. 1. Better condition, as in health ; அனுகூலமான நிலை. இப்போது அவனுக்கு உடம்பு தேவலை. 2. That which is preferable ; விசேடமானது . அதைவிட இது தேவலை - TAMIL LEXICON ( University of Madras)

இப்பேரகராதி n.[noun] என்கிறது. எனக்கு உடன்பாடில்லை.


க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி , ' தேவலாம் வி.மு.* (பே.வ.)^  காண்க: தேவலை

- எனச் சுட்டித் 'தேவலை' என்பதற்கு ஏறத்தாழ ஒத்த மூவேறு பொருள் தருகிறது.

[ * வினை முற்று.  ^ பேச்சு வழக்கு] 


தேவலை , தேவலாம் என்பன வழக்கில் ஒரு பொருட் பன்மொழிகளாகவே இயங்குகின்றன. தரவுத்தளமொன்றை அடிப்படையாகக் கொண்டு புழக்கத்தில் குறிக்கும் பொருள்களைத் தருவதே புறநிலையிலான ஓர் அகராதி ஆக்கத்தின் நியாயமுமாகும்.


தேவலை , தாழ்வில்லை என்பதன் மருவிய வடிவம் எனப் பேரகராதி [ LEXICON ] தெளிவுபடுத்திவிட்டது. தேவலாம் என்பதை அது தரவில்லை.


தேவலாம் - 

நான் வேறு அதைப் பயன்படுத்தித் தொலைத்துவிட்டேன்.

திரு.அற்புதராஜ் சுந்தரம் ," எப்படிப் பயன்பாட்டிற்கு வந்தது?எங்கிருந்து வந்தது? " என்று கிடுக்கிப் பிடி போடுகிறார். 


என்ன செய்வது ? சமாளிப்பியம் தவிர வேறு வழி?


². டாக்டர் பொற்கோ அவர்களின் தற்காலத் தமிழ் இலக்கணம் கைகொடுத்தது. அவரது 'இக்காலத் தமிழ் இலக்கணம்'° வினை நோக்குத்(MODALS) துணைவினைகளை விவரித்துள்ளது. அவற்றுள் ஒன்று செய்யலாம் என்னும் வாய்பாட்டு வினைமுற்று.

" செய்யலாம் என்ற வாய்பாட்டு வினைமுற்றுகள் அனுமதி அளிப்பது போலவும் எதிர்பார்ப்புக்குறிப்பை வெளிப்படுத்துவது போலவும் அமைகின்றன " (ப. 73)

ஆனால்,

தேவலாம் என்பது வரலாம் , போகலாம் , எழுதலாம் , பேசலாம், பாடலாம், ஆடலாம் ... முதலிய பிற செய்யலாம் வாய்பாட்டு வினைகள் போல செய- என்னும் வினையெச்ச வடிவத்திலிருந்து வரவில்லை( 'செயல் - ஆம் ' என்னும் வாய்பாடாகவும் கொள்ளலாமோ!). அவற்றின் பிறழ் ஒப்புமையாக்கமாகத் தேவலாம் உருவாகியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. 


தேவலாம் என்பதில் அனுமதிக்குறிப்பு இல்லை ; எதிர்பார்ப்புக்குறிப்பு மட்டுமே உண்டு.


எதிலிருந்து வந்தது?

தேவலை என்பதிலிருந்து  வந்தது.


எப்படி வந்தது?

பிறழ் ஒப்புமையாக்கமாக வந்தது.


 'தேவலாம்' என்பதை எதிர்பார்ப்புக்குறிப்புடையதாக நான்  பயன்படுத்தியிருக்கிறேன்,

 தற்செயலாகத்தான் எனினும் அது மிகப் பொருத்தமான பயன்பாடு என்று தோன்றுகிறது.

 

 அப்பாடா!

-------------------

° பூம்பொழில் வெளியீடு, சென்னை, 2002 .

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...