Tuesday, June 22, 2021

சிலப்பதிகாரம் காப்பியமா?

 




சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பொதுவாகக் காப்பியம் என்னும் வகையினவாகக் கருதப்படுகின்றன; வழங்கப்படுகின்றன. ஆனால், அவை தமிழ்ச் செவ்வியல் செய்யுள் மரபின் தொடர்ச்சியில் உருவானவை.


தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் தனிச் செய்யுள்களால் ஆனவை ; தமக்கென்று அகம், புறம் என்னும் மரபு கொண்டவை. வரலாற்றுச் செய்திகளுள் பெரும்பாலானவை புறத்திணைச் செய்யுள்களில் பதிவு செய்யப்பட்டன. மறுபுறம் மரபு காரணமாக - அந்த மரபை மீறாமல் அதனை உத்தி போலக் கொண்டு -  உவமை முதலியனவாக அகத்திணைச் செய்யுள்களிலேயே வரலாற்றுச் செய்திகளை சார்த்திப் பதிவிடும் போக்கும் உள்ளது.


அதன் உச்சம் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின்  'பட்டினப்பாலை'.  பட்டினப்பாலையின்  301 அடிகளில் நான்கில் மட்டுமே அகத்திணைச் செய்தி; பிற 297 அடிகளில்-  99% - பாடாண் செய்திகள்தாம். என்றாலும் அதனை  அகத்திணைப் பாட்டு எனல் மரபு¹.

 

பத்துத் தனித்தனி  நெடுஞ்செய்யுள்களின் தொகை பத்துப்பாட்டு.


அதன் அடுத்தகட்டப் பரிணாமமாகத் தமிழ்ச் செவ்வியல் மரபுகளை உள்ளடக்கத்திலும் இடைமிடைந்து புனைந்த ,  கதை தழுவிய முப்பது பாட்டுகளால் ஆனது சிலப்பதிகாரம் . எனவே இதனைக் காப்பியம் என்பதினும் தொடர்நிலைச் செய்யுள் என்பதே பொருத்தமானது. கதையின் தொடர்ச்சி தொடர்நிலைக்குக் காரணமாகிறது. தொடர்நிலைச் செய்யுளுக்கும் (பெருங்)காப்பியத்துக்கும் பொதுவான கூறு கதை. 


சிலம்பு , மேகலைகளில் வடமொழிச் செல்வாக்கு இல்லாமலில்லை.ஆனால், வடிவத்தில் அவை தமிழ் மரபைப் புதுப்பித்துப் பேணிக்கொண்டன.


மணிமேகலை வடிவத்தில் மட்டும் தொடர்நிலைச் செய்யுள் மரபு பேணியது.


தன்னேரில்லாத் தலைவனைக் கொண்ட , வடமொழிவழிக் காப்பியப் போக்கிற்கு இயைந்த ,  சீவகசிந்தாமணியே கூட, தொடர்நிலைச் செய்யுள்தான் என்பது நச்சினார்க்கினியர் கருத்து².


சிலம்பைத் தொடர்நிலைச் செய்யுள் எனல்  முற்றிலும் என் கண்டுபிடிப்பு என்று சொல்லமுடியாது. முன்பே இதனை ஒத்த கருத்து வந்துள்ளது.³


--------------------------------

குறிப்புகள்


1.[முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்]

    வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,

    வாரேன்; வாழிய, நெஞ்சே!( பட்டினப்பாலை 218-220)


    [திருமாவளவன்தெவ்வர்க்கு ஓக்கிய]

    வேலினும் வெய்ய, கானம்; அவன்

     கோலினும் தண்ணிய, தட மென் தோளே!( ௸,299 - 301)

   - என்னும் நான்கு அடிகளால் மட்டுமே பட்டினப்பாலை அகத்திணைப்பாட்டாகிறது.


2.  " இவ் ஆறு-ஐந்தும்

        உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்" ( சிலப்பதிகாரம், பதிகம், 86-87)

    " மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு

      ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என் " (மணிமேகலை, பதிகம், 97 - 98)

-எனச் சிலம்பும் மேகலையும் ஆறைம் (6x5=30 முப்பது) பாட்டுகள்தாம்  என்று அவற்றின் பதிகங்கள் கூறுகின்றன (காதை = பாட்டு. பாகதச் சிதைவு).


சீவகசிந்தாமணிதானும் காப்பியமன்று என்று சுட்டி மறுக்கும் நச்சினார்க்கினியர் , அது  தொடர் நிலைச் செய்யுள் - அதனுள்ளும் 'தோல்' - என்கிறார்:


இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்து நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும், ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி‘ (தொல் - சிறப்பு) என்றதனால், அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும் , பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கண மென்றுணர்க.

 

   அவ்விலக்கணத்திற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான்கென்றும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறுகின்றுழி, ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்‘ (தொல். செய். 238) என்பதனால் , மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பப் பழையதொரு கதைமேற் கொச்சகத்தாற் கூறின், அது தோல் என்று கூறினமையின், இச் செய்யுள் அங்ஙனங் கூறிய தோலா மென்றுணர்க.

 

   இச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம்; (தொல் - புறத்- 27). இதனானே, ‘யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது‘ (தொல் - செய். 149) என்பதற்குத் தேவபாணியும் காமமுமே யன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.

 

   முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழியால் தொடர்நிலைச் செய்யுட்குப் பெயரின்மையும் இதற்குப் பிறகு கூறிய நூல்கள் இதற்கு விதியன்மையும் உணர்க( சீவக சிந்தாமணி, கடவுள் வாழ்த்து, உரைப்பகுதி).


3.At some point beyond the Sangam period proper, two closely linked, large - scale lyrical narrative — usually wrongly called epics — were created: The Tale of Anklet, Cilapptikāram, by Ilankovatikal, and twin masterpiece , Manimekalai, by Cāttanār.

_ David Shulman, Tamil a Biography, The Belknap Press of Harvard university Press, London,2016, p.98.  (சுல்மனுக்கு முன்பே இக்கருத்து உண்டு)

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...