Tuesday, June 15, 2021

தனிநாயக அடிகளாரின் நோக்கில் இயற்கைவளமும் இலக்கியவளமும்

 

தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் எனத் தற்கால நோக்கில்- ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக - இனங்கண்டு நிலைநாட்டப் பெற்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன பொதுக்காலம்(பொ.கா.) பதினோராம் நூற்றாண்டு தொட்டுச் சில காலம் தொடர்ந்த பண்டைத் தமிழ் உரையாசிரியன் மரபில் சான்றோர் செய்யுட்கள் என வழங்கப் பெற்றன. அஃது அக்கால மரபென்பதைக் கம்பனின் வாக்கும் உறுதி செய்கிறது. ‘புவியனுக் கணியாய்…’ என்னும் அக் கம்பன்கவி செவ்வியக் கூறுகளையும் அடுக்கிப் போற்றுவது கம்பனின் மேதைமை காட்டும். (பா. மதிவாணன், ‘தமிழ்மரபில் செவ்வியல் இலக்கிய உணர்திறனும் உலகப் பொதுமையும்’, தொல்காப்பியம் பால.பாடம், அய்யா நிலையும், தஞ்சாவூர், ஆகஸ்ட் 2014, பக்.73-74)

தமிழ்ச் சான்றோர் செய்யுட்களின் தோற்றம் கால இடையீடு மறு செம்மையாக்கம், தொகுப்பு, செல்வாக்குக் குன்றல், உரையாசிரியர் கால மீட்சியியக்கம், மீண்டும் பொ.கா. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இன்னொரு மீட்சியியக்கம் எனும் வரலாற்றுப் போக்கில் (காண்க மேற்படி நூல்…) பத்தொன்பதாம் நூற்றாண்டின மீட்சி ஒருபுறம் தமிழினத் தனித்தன்மையின் பெருமிதமாகவும், மறுபுறம் உலகளாவிய பார்வையின் புதுத் துலக்கமாகவும் வெளிப்பட்டது.

உலகளாவிய பார்வையில் துலக்கிக் காட்டிய முன்னோடிகளுள் ஒருவர் சேவியர் நிக்கொலஸ் என்னும் இயற்பெயரும் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் எனும் பிற்காலப் பெயரும் கொண்ட,  தனிநாயக அடிகள் (02.08.1913 – 01.09.1980) ஆவார்.

தமிழ்ச் சான்றோரிலக்கியங்கள் பல்வேறு நோக்குகளுக்கு இடம்தரும் கூறுகள் கொண்டவையெனினும், அவற்றில் பதிவுற்றிருக்கும் இயற்கைக் கூறுகள் தமக்கெனத் தனித்த இருப்புடன் இயைந்தவை. இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளில் இரு தமிழறிஞர்கள் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் காணும் இயற்கையைத் தத்தம் நோக்கில் ஆராயத் தலைப்பட்டனர். 

ஒருவர் மு. வரதராசனார் (1948- முனைவர் பட்டம்), மற்றொருவர் தனிநாயக அடிகள்(1949 – எம்.லிட்.) மு.வ. பெரிதும் விளக்கமுறையிலும், அடிகள்  ஒப்பியல் நோக்கிலும் ஆய்வு நிகழ்த்தினர்.

அடிகள் தொடர்ந்து செழுமைப்படுத்தி ' A Study of Nature in Classical Tamil Poetry ’  என்னும் தலைப்பில் நூலாக்கினார்.

மு.வ.வின் ஆய்வு சற்றே முந்தையது எனினும் அடிகள் அதனை அறிந்திருக்கவில்லை. மு.வ. நூல் 1957இல் அச்சான பின்னரே அடிகள் கண்ணுற்றதாகத் தெரிகிறது (தனிநாயக அடிகள், நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், மொ.பெ.: க. பூரணச் சந்திரன், என்.சி.பி.எச்., சென்னை, 2014, ப. xvii இல் உள்ள 11ஆம் குறிப்புக் காண்க).

சங்கப் பனுவலை விரிவாகவும் செறிவாகவும் மு.வ. அலசி ஆய்நதிருப்பதாகவும் தாம் அயலகவாசகரை உளங்கொண்டு ஆய்ந்திருப்பதாகவும் அடிகள் குறிப்பிடுகிறார். (மேற்படி நூல், ப.xvi)

இந்த ஆய்வுக்குத் தூண்டுகோல் அடிகளின் ஆதங்கமே. மேலைப்புலமையாளர்கள் தமிழுக்கு அவ்வப்போது புகழாரம் சூட்டியிருப்பினும் தமிழுக்கு மேக்ஸ்முல்லர்களோ, மெக்டொனால்களோ, கீத்துகளோ , விண்டர் நீட்சுகளோ இல்லை என்கிறார். (மேற்படி நூல், ப.xvi)

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நூலில் இந்த அங்கலாய்ப்பு வெளிப்படுகிறது. பழந்தமிழர் நிலப்பகுப்பு இன்றைய இனவரைவியலாளர்க்கும் பழங்குடிப் பண்பாட்டாய்வாளர்களுக்கும் மலைப்பூட்டக்கூடியது (ஏனோ மேலை ஆய்வாளர் கவனம் செலுத்தவில்லை) என்கிறார் (மேற்படி, ப.38)

பேராசிரியர் ரைடரின் காளிதாசன் படைப்புப் பற்றிய ஆய்வைக் குறிப்பிடும்போதும் ரைடரின் பழந்தமிழ்ப் பரிச்சயமின்மை பற்றி வருந்துகிறார். (மேற்படி நூல், ப.42)

இந்த ஆதங்கம் அடிகளை ‘ஒப்பிலக்கியம்’ என்கிற பார்வையை நோக்கி உந்துகிறது. இத்தகு ஒப்பியலக்கிய ஆய்வை நிகழத்துவதற்கு, பன்மொழிப்புலமையும் இலக்கிய உணர்திறனும் இயற்கை ஈடுபாடும் கொண்ட அடிகள் முற்றிலும் தகுதியுடையவர் என்பது வெளிப்படை.

அடிகள் 1934 – 38ஆம் ஆண்டுகளில் உரோமானிய இறையியல் கல்லூரிகளில் பயில்வதற்கு முன்பே ஆங்கிலம் இலத்தின் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார். உரோமில் எபிரேயம், கிரேக்கம், இத்தாலி, ஸ்பானிசு, போர்த்துக்கீசு,பிரஞ்ச், செருமன் ஆகிய மொழிகளைக் கற்றார் ; பிற்காலத்தில் உருசியத்தையும் கற்றார்.

1949இல்  ' A Study of Nature in Classical Tamil Poetry ’ என்னும் தலைப்பில் எம்.லிட். ஆய்வேடு அளித்தார்.

1949-51ஆம் ஆண்டுகளில் மலேயா, சீனம், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென்னமெரிக்க நாடுகளான பனாமா, ஈக்வடார், பெரு, சிலி, அர்ஜென்டீனா, உருகுவே, பிரேசில், மெக்சிகோ, மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த டிரினிடாட், ஜமைக்கா, மார்த்தினீக், நடு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் இத்தாலி பாலத்தீனம், எகிப்து முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்து அறிவுத் தேடலோடு – குறிப்பாகத் தமிழியல் தேடலோடு - கூடிய வளமான அனுபவம் பெற்றார்.

இப்பயணங்களுக்குப் பின் தம் எம்.லிட். ஆய்வேட்டைச் செழுமைப் படுத்தி , ' Nature Poetry in Tamil: The Classical Period '   என்றும் அடுத்து, ' Landscape and Poetry: A Study of Nature in Classical Tamil Poetry '  என்றும் தலைப்பினையும் செம்மைப் படுத்தினார். 


அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்பெருமக்களால் செய்யப் பெற்ற செறுத்த செய்யுட்களாலாகிய சங்க இலக்கியப் பரப்பு ஒருபுறமும் பன்மொழிப் புலமையும் பன்னாட்டறியும் இயைந்த அடிகளின் திறம் மறுபுறமும்  இணைந்தமைந்து தொட்ட இடமெல்லாம் ஆய்வு நுட்பமும் அழகியலுணர்வும் புலப்படுமாறமைந்த ஒரு நூலை மதிப்பிடுதல் என்னளவைத்தன்று என்பதை நான் சொல் வேண்டியதில்லை. 


அடிகள் ஓர் அறிமுகத்தோடு, தொடங்கி ‘பின்னணி(The Background)’ முதலிய எட்டு இயல்கள் கொண்டதாக இந்நூலை யாத்துள்ளார்கள்

இலக்கியவில், வரலாறு, நிலத்தியல், அறிவியல், சமயவியல், மெய்யியல், சமூக அறிவியல் முதலிய பலதுறைகளிலும் அவருக்குள்ள பயிற்சி இந்நூலில் ஏற்றபெற்றி இழையோடுவதைக் காண முடிகிறது. ‘விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்’ ஆதலின் வசதி கருதி,


நடுவுநிலை

ஒப்பு

உறழ்வு

தனித்தன்மை

ஆய்வுத்தூண்டல்


என்கிற ஐந்தனுள் அடக்கிப் பிறவற்றையும் சற்றே தொட்டுக்காட்டுமாறு இக்கட்டுரையை அமைத்துள்ளேன்.


நடுவுநிலை

நூலைத் தொடங்கும்போதே அடிகளின் நடுவுநிலை முன்னிற்கிறது. பழந்தமிழிலக்கியங்கள் கிரேக்க இலக்கியங்களை – அளவாலோ வீச்சாலோ பன்முகத் தன்மையாலோ – ஒத்தவையல்ல என்கிறார்; தமிழிலக்கியத்தின் இன்றியமையாமையையும் தெளிவுறுத்துகிறார்(மேற்படி நூல், ப.v).


இவ்வாறே, பழந்தமிழிலக்கிய வரலாற்றுணர்வுக் குறைபாட்டை அவர் ஒப்புக் கொள்கிறார் (மேற்படி நூல், ப.42); தியோக்ரிடஸ் அல்லது வர்ஜில் தீட்டியது போன்ற இடையர் வாழ்க்கை பற்றிய மிகவிரிந்த காட்சிகள் தமிழில் இல்லை என்கிறார் (மேற்படி நூல், ப.141).

சங்கக் கவிதையியல் மிகச்சிறந்த தனித்தன்மையுள்ள இயற்கைக் கவிதைகளைத் தந்திருப்பினும் கவிஞரின் அகத்தெழுச்சியைக் கட்டுப்படுத்திவிட்டது போலவும் தோன்றுகிறது என்கிறார் அடிகள் (மேற்படி நூல், ப.159).

‘சுட்டி யொருவர்ப் பெயர்கொளப் பெறார்’ என்கிறது தொல்காப்பியம்( ). அடிகள் “பெயர் கூறாத்தன்மை, பொதுமைப்பட்ட வெளிப்பாட்டிற்கான ஆர்வம் ஆகியவை பழைய இந்தியக் கவிதைகளின் சிறப்பியல்பு” (மேற்படி நூல், ப.40-41) என்கிறார்.

இந்த நடுவுநிலை அவரது நூலின் நம்பகத்தன்மையை மிகுவிப்பதாக அமைந்து ஆய்வு நலஞ் சான்றதாகிறது. பிறநாட்டார் இந்நூலை எதிர்கொண்ட விதம் காணத் தனித்த தேடல் தேவை.


ஒப்பு

மரஞ்செடிகொடிகள் பூக்கள் முதலியவற்றை அடைகளால் செறிவாக வருணிக்கும் பாங்கில் மேலைப்பாக்களோடு தமிழ்ப்பாக்கள் ஒத்துள்ளமை காட்டுகிறார் அடிகள் (மேற்படி நூல், ப.6-7).

பழங்காலத் தமிழ் சமற்கிருதக் கவிதைகள் நிலத்தைப் பெண்ணாகவும் மலை மூங்கில் முதலியவற்றை முறையே முலைகளாகவும் தோள்களாகவும் கண்டதை அடிகள் ஒப்புநோக்கியுள்ளார் (மேற்படி நூல், ப.13)

பண்டைத் தமிழ் வேந்தர் முதலியோர் அடையாளப் பூக்கள் கொண்டிருந்தமை போல மேலை அரசர்களும் லில்லி, ரோஜா முதலியவற்றைக் கொண்டதுண்டு (மேற்படி நூல், பக்.30-31).

இயற்கை உலகு மனித இயற்கை இரண்டும் இயையும் தன்மையால் சிறக்கும் கவிதை இயல்பு பற்றி ஸ்டாஃபோர் புரூக்ஸ் என்பவரது கருத்தை மேற்கோள் காடடித் தமிழ்க் கவிதை அதற்கு முற்றிலும் பொருந்துகிறது என்கிறார் அடிகள் (மேற்படி நூல், பக்.41-42)

 Humani nihil a me alienuk puto என்னும், ரோமானிய நாடகத்தின் ஆசிரியர் டெரென்சின்(பொ.கா.மு. ஏறத்தாழ 195/185 – 159-?) இத்தொடரைப்போல் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”(புறம்.192) என்பதும் புகழ்பெற வேண்டிய கவித்தொடர் என்கிறார் அடிகள்( (மேற்படி நூல், ப.46).

இயற்கைக் கவிதைகளில் வரலாற்றை இணைக்கும் போக்கு – தமிழ்போலவே – வர்ஜில் முதலியோர் கவிதைகளிலும் உண்டு (மேற்படி நூல், ப.50).

சகுனம் பார்த்ல் - குறிப்பாகப் பறவை பறத்தல், ஒலித்தல் ஆகியன கொண்டு பார்த்தல் - உரோமானியர் கிரேக்கர்களிடமும் தமிழரைப் போலவே காணப்பட்டது(மேற்படி நூல், ப.79)

பிரிவாற்றாமையை மிகுவிக்கும் பொழுதாக மாலைப் பொழுது உலகம் முழுவதும் கருதப்பட்டதை செல்லி, கிரே, தாந்தே முதலியோரைக் கொண்டு உணர்த்துகிறார் அடிகள் (மேற்படி நூல், பக்.89-90).

கபில, பரணர் பாடல்களை “ஓர் ஐரோப்பியத் திறனாய்வாளன் வர்ஜிலுடனோ டென்னிசனுடனோ மிக எளிதில் ஒப்பிட இயலும்” (ப.111) என்கிறார்.

எட்டாம் இயல் முழுதும் தமிழ்க்கவிதைகளைச் சமற்கிருத , ஐரோப்பியக் கவிதைகளுடன் ஒப்புநோக்குவதாகும்.

ஒப்புநோக்குக்கு ஆங்காங்குச் சில காட்டுகள் தரப்பட்டுள்ளன. நூல் முழுவதுமே வெளிப்படையான இடங்களன்றி ஒப்புமை இழையோடும் இடங்கள் பலவுள்ளன. விரிப்பிற் பெருகும்.


உறழ்வு

நூலைத் தொடங்கும்போதே பாலைவனப் பகுதி, மிதமிஞ்சிய வளம் கொண்ட வட இந்தியா, இயற்கை தெளிவாக எல்லை வகுக்கும் தென்னிந்தியா ஆகியவற்றின் நிலப் பரப்புக்கும் பண்பாட்டிற்குமுரிய இயைபையும், இதனால் அவை தம்முள் வேறுபடுமாற்றையும் அடிகள்தம் பன்மொழி நூலறிவும், மொழித்திறமும் கொண்டு விளக்குகிறார் (மேற்படி நூல், பக்.2-3).

தொடக்கத்தில் முன்வைத்து உணர்த்தப்படும் இந்த உறழ்நிலை நூல் முழுமைக்கும் அடித்தளமாக அமைந்து தாங்குகிறது.

ஐரோப்பிய அமெரிக்க இலக்கியங்களில் அன்புக்கும் பக்திக்கும் மிதவெப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழ்மரபில் தாள் நிழலின் திளைப்புக் காணப்படுகிறது(மேற்படி நூல், பக்.9-10).

மேலைக் காதல் கவிதைகளில் பெயர் சுட்டுவது போல், தமிழ் அகக்கவிதைகளில் சுட்டப்படாமையையும், இஃதோர் இந்திய மரபென்பதையும் அடிகள் சுட்டுகிறார் (மேற்படி நூல், பக்.40-41).

வர்ஜிலுக்கோ இலத்தீன் கவிஞர்களுக்கோ மலைப்பகுதிகளின் மீது அவ்வளவாக ஆர்வமில்லை என்னும் கருத்தைச் சுட்டிக் காட்டி சில விதிவிலக்குகள் இருப்பினும் இது பொதுவான உண்மையே என ஏற்கும் அடிகள், சங்கக் கவிஞர்கள் இயற்கையின் எந்த ஒரு நிலப்பகுதியையோ தோற்றத்தையோ விட்டுவிடமாட்டார்கள் என்கிறார் (மேற்படி நூல், பக்.44-45).

கவிதைகளை ஒப்புநோக்கும் எட்டாமியல் இயல்பாகவே உறழ்ச்சிகளுக்கு இடம் தருவதாக அமைந்துள்ளது.

மேலை நிலக்கிடக்கை, தமிழக நிலக் கிடக்கைகளின் வேறுபாட்டை விவரித்து, கவிதைகளில் அவை வெளிப்படுவதைச் சொல்வதோடு, இலக்கிய மரபின் வேறுபாட்டையும் - அதாவது நிலப்பரப்பின் பிரதிபலிப்பினால் மட்டுமன்றி மரபாலும், பாங்காலும் வேறுபடுவதையும் - அடிகள் விளக்குகிறார் (மேற்படி நூல், பக்.143-145).

தொடக்க கால ரிக்வேதப்பாடல்களை நோக்கத் தமிழில் தொன்மங்களின் செல்வாக்குப் பொருட்படுத்தத்தக்க அளவிற்கு இல்லாமையையும் சமற்கிருதக் கவிதைகளில் பூக்கள், மாலைகள் முதலியவற்றுக்குப் பரவலான இடமிருப்பினும் சங்க காலத்தில் பூக்களும் மாலைகளும் பயன்பட்ட அளவையும், முக்கியத்துவத்தையும் கவிதைகளில் குறியீட்டுத் தன்மையுடன் இடம் பெறுவதையும் ஒப்பிடவே இயலாதென்கிறார் (மேற்படி நூல், பக்.146-147).

உரோமானிய நாகரிகத்தின் நாட்டுப்புறநேசம் பழந்தமிழர்தம் நகர நேசம் ஆகியவற்றை உறழ்ந்து காட்டி இலக்கியப் பதிவுகள் பற்றியும் அலசியுள்ளார் அடிகள் (மேற்படி நூல், ப.155).

இத்தகு உறழ்ச்சிக் கூறுகளும் நூலில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.


தமிழ்த்தன்மை

தமிழ் மண்ணுக்கேற்ப விளைந்த இந்நிலப்பண்பாட்டின் எல்லா அடையாளங்களையும் தமிழ்க்கவிதை கொண்டுள்ளது. அதாவது, தமிழர்கள் ஏதோ ஒரு வெளிநாட்டிலிருந்து, ஏற்கனவே வளர்ச்சியடைந்த மொழியோடும் இலக்கியத்தோடும் தமிழ் மண்ணுக்கு வந்தவர்கள் என்பதற்கான எந்த அடையாளமும் தமிழ்க்கவிதையில் இல்லை.(ப.3)

எனத் தமிழின் மண்ணுக்கேயுரிய (indigenous) தன்மையைத் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தும் அடிகள், மேலும் விரித்து

நாம் இங்குப் பார்த்துக் கொண்டிருக்கும் இலக்கியத்தின் காலத்தைவிட முற்பட்டதொரு காலத்திலேயே உருவாக்கப்பட்ட மரபு, தமிழ் நிலத்தை ஐந்துகூறுகளாகப் பகுத்தது; அல்லது தமிழ்நிலம் ஐந்து விதமான நிலத்தோற்றங்களைக் கொண்டிருப்பதாகத் தமிழ்மரபு கருதியது என்றும் சொல்லலாம். பூமி முழுவதுமே இந்த ஐவகை நிலங்களாகப் பகுக்கப்படலாம் என்றாலும், பூமியின் பல்வேறு நிலக்கூறுகளையும், தட்பவெப்ப நிலைகளையும் தனது சொந்த நாட்டின் எல்லைகளுக்குள்ளாகவே சிறிய அளவில் காணமுடிந்த தமிழரின் நல்லூழ் என்றே சொல்லத்தகும். (ப.36-37)

என்று போற்றுகிறார்.

சிக்கனமான மொழியில் மிகச்சிறந்த சொல்லோவியங்களைச் செறிவாகச் சித்தரிப்பது சங்கத்தமிழின் பண்பு ("Cankam Tamil has the characteristic of being extremely concise and curt and of delineating magnificient word – pictures with great economy of language" - Complete works of Thaninayaga Adigalr, Vol.I, Poompuhar Pathippagam, Chennai, 2013, P.17) 

  என்கிறார் அடிகள்.

இயற்கைக் கவிதையின் பின்னணி பற்றிய இந்த இயலை முடிக்கும்போது, தமிழ்நாட்டைவிட இயற்கையின் வளத்தை மிகுதியாகப் பெற்ற பல நாடுகள் உள்ளன என்பதையும் குறிக்க வெண்டும். ஆனால் சங்ககாலத்தின் கவிதை மூலவளம், மிகச் சாதாரணமான, எவ்வித ஆர்வத்தையும் எழுப்பாத நிலத்திலும் அழகினைக் கண்டது. பின்னர் நாம் பார்க்கப்போவது போல, பாலைநிலத்திலும் கூட தமிழ்க் கவிஞர்கள் மிகச் சிறந்த கவிதையைக் கண்டனர் என்ற உண்மை, அவர்களின் கவிதை வளத்தையும், கற்பனைத் திறனையும் மிக உயர்வாகக் காட்டுகிறது.(ப.14)

இயற்கை வளம் சற்றே குன்றியிருப்பினும் கவிதை வளம் தமிழில் விஞ்சிநிற்பதை இப்பகுதி காட்டுகிறது.

சங்கக் கவிஞர்கள் இயற்கையிலிருந்து பெற்ற உவமைகளின் நுட்பமும் அசலான தன்மையும் பற்றி எடுத்துக் காட்டுகளால் விளக்கும் அடிகள் “சங்க இலக்கியம் ஓர் இயற்கைவாதியின் சொர்க்கமாகவே காட்சியளிக்கிறது”(ப.44) என்கிறார்.

உள்ளுறை, இறைச்சி ஆகியன – குறிப்பாக உள்ளுறை – தமிழ்க்கவிதையின் சிறப்பியல்புகளுள் ஒன்று என்பதை அடிகள் வலியுறுத்துகிறார் (ப.46).

தமிழ்க்கவிதை மரபின் கட்டுப்பாடு பற்றி,

கவிதை மரபு, கவிதை விதிகளின்படி, ஒரு முழுமையான, துல்லியமான இயற்கை பற்றிய ஆய்வு தமிழ்க்கவிஞர்கள் மீது சுமத்தப்பட்டது. இத்தகைய நிலவியல் - தாவரத்தொகுப்பு – விலங்குத்தொகுப்பு – ஆய்வை மேற்கொள்ள வேண்டிய நிலை பிறமொழிகளில் எக்கவிஞருக்கும் இல்லை.(ப.39)

எனக் கூறும் அடிகள் பிறிதோரிடத்தில் “கவிஞரின் அகத்தெழுச்சியைக் கட்டுப்படுத்திவிட்டது போலவும் உள்ளது”(ப.159)என்று சற்றே குறைப்பட்டுக் கொள்வது முன்னர்ச் சுட்டிக்காட்டப்பட்டது.

வேறெந்த இலக்கியத்திலும் ஒரு பெண்ணின் அழகுக்கு ஒரு நகரத்தின் அழகை ஒப்பிடுவது காணப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய ஒப்புமை, பழந்தமிழ் இலக்கியத்தில் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது(ப.155) எனக்கூறும் அடிகள், “ஆனால், அவர்களது நகரநேயம் எவ்வகையிலும் இயற்கை மீதான அன்பில் குறுக்கிடவில்லை” (ப.156) என்றும் தெளிவுபடுத்துகிறார்.


ஆய்வுத்தூண்டல்

அடிகள் ஆங்காங்கே மேன்மேலும் ஆய்வதற்கான தூண்டல்களை இந்நூலில் விட்டுச் சென்றிருக்கிறார்.

சங்க இலக்கியத்தில் குலக்குறி வழிபாடு, இயற்கைப் பொருள்களில் இறை வழிபாடு, பல கடவுள் வழிபாடு, ஒரு கடவுள் வழிபாடு ஆகிய அனைத்திற்கும் சான்று உண்டு என்று கூறி, இவை படிப்படியே மாறி ஒரு கடவுள் கோட்பாடாக ஆயிற்று என்னும் சிந்தனைக் குழுவின் கருத்துக்கு மாறாக ஒரு கடவுள் வழிபாட்டுக்குப் பின்னர் பிறமுறைகள் தோன்றின என்பதற்குத் தமிழ் இலக்கியம் ஆதரவு தருவதாகத் தோன்றுகிறது என்கிறார் (ப.62)

தொடர்ந்து, “தமிழரின் இயற்கை பற்றிய கருத்தாக்கத்தோடு மிக நெருக்கமாக இணைந்ததுதான் தமிழர் மதம் என்பது புலனாகிறது”(ப.73) என்கிறார் அவர்.

‘எற்பாடு’ என்பதற்கு உரையாசிரியரிடையே நிகழும் விவாதம், நெய்தல், மருதத் திணைகளுக்குத் தனித்த பெரும்பொழுது இன்மைக்கு உரையாசிரியர்கள் தரும்  விளக்கம் ஆகியன குறித்து அடிகள் ஆராய்ந்துள்ளார்(பக்.92-93)

பாலைத் திணையும் அதற்குப் புறமான வாகைத் திணையும் தொடக்க வகைப்பாட்டில் இல்லாமல்,பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்னும் அடிகளின் ஊகம்(பக.100-101) இன்றளவும் போதிய அளவு ஆராயப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கைக்கிளை, பெருந்திணை அவற்றின் புறத்தவாகிய காஞ்சி, பாடாண்திணைகள், செய்யுள் தொகுப்புமுறை ஆகியன பற்றிய அவர் கருத்துகளும்(பக்.101-102) ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியனவாகும்.

உள்ளுறையில் இயற்கை, தாவர விலங்குத் தொகுதிகள் ஆகியன பயன்படுத்தப்படும் முறையை ஆய்ந்து விளக்க வேண்டுமென்கிறார் அடிகள் (ப.132). அடிகளைச் சுட்டியும் சுட்டாமலும் உள்ளுறை, இறைச்சி பற்றிய தொடர் ஆய்வுகள் நிகழந்துள்ளன எனலாம்.


பிற

ஆங்காங்குப் பல்வேறு துறைகள் இரசனைகள் சார்ந்த பல பதிவுகள் அடிகளின் நூல்முழுதும் இழையோடுகின்றன. இவற்றுள்ளும் சிலவற்றையே இங்குக் காட்ட இயலும்.

தமிழ்க் கவிஞர்கள் கையாளலில் மரங்கள், பூக்கள், செடிகளின் பெயர்கள் இசையோடு விளக்குவதாகக் கூறி முல்லைப்பாட்டு(93-96) சிறுபாணாற்றுப்படை (146-149) ஆகியவற்றின் சில பகுதிகளைக் காட்டுகிறார் ஆடிகள்(ப.7). இப்பகுதிகளின் இசைமை நுண்ணுணர்வுடையார்க்கே புலப்படும் என்பதன்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் பழந்தமிழ்ப் பாக்களில் சொல்லிலும் பொருளிலும் மட்டுமன்றி ஓசையமைதியிலும் அவர் தோய்ந்துணர்ந்திருப்பதை அறிய முடிகிறது.

தென்னிந்தியாவில் இயற்கை அழகுறுத்துவதாகவும், அலங்காரத் தன்மை உடையதாகவும் உள்ளதுபோலவே தென்னிந்தியக் கலையும் - இசை ஆயினும், இலக்கியமாயினும், கட்டடக்கலை ஆயினும், ஓவியமாயினும் - அழகுறுத்தவும் நுட்பமாகவும் அலங்கரிக்கப்படுகின்றன; கடைசிக் கூறுவரை ஆய்வுக்கு உள்ளாகின்றன. தமிழ்க்கவிதைகளைப் போலவே தென்னிந்தியக் கோயில்களும் உள்ளன. தென்னகக் கோயில்களில், செதுக்கப்பட்ட பாறைகள் ஒன்றின் மேலொன்று அடுக்கு அடுக்காக அமைகின்றன. அவற்றின் ஒருங்கிணைவு, பெரிய முழுமையான கோபுரத்தை உருவாக்குகிறது. இதுபோலவே தமிழ்க்கவிதையும் செதுக்கி இணைக்கப்பட்டதோர் முழுமைதான். பழந்தமிழ்க்கவிதைகளில் மிக நீண்ட முழுக்கவிதையும்  இலக்கணத்தின்படி ஒரே ஒருகூற்றாக அமையும் வாக்கியம்தான். கோபுரத்தின் அடுக்குகள் போலப் பல்வேறு கிளவிகளையும் தழுவுதொடர்களையும் கொண்டு, முத்தாய்ப்பாக ஒரு முக்கியக் கிளவியைக் கொண்டு அக்கவிதைகள் அமைகின்றன.(ப.143-144)எனத் தென்னிந்தியக் கலைகளுக்கும் கவிதையமைப்பிற்குமான நுட்பமான இயைபை அடிகள் இனங்கண்டுள்ளார்.

பழைய பழக்கவழக்கங்கள் நடைமுறைகளின் எச்சங்கள் பிந்தைய இலக்கியங்களில் பதிவாயிருப்பதாகக் கருதிச் சங்க இலக்கியப் பகுதிகளை அடிகள் காட்டுகிறார்(ப.20).

தமிழ்க் கவிதை,  வரலாற்றுப் போக்கில் மாற்றமுற்றிருப்பதைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் (ப.43).

“துன்பம், ஆசை, புலம்பல் இவற்றைத் துயரத் தொனியில் வெளியிடுகின்ற கவிதைகளுக்கு உலகம் முழுவதிலுமுள்ள கவிஞர்கள் ஞாயிற்றின் மறைவை, குறிப்பாகக் கடலின் ஓலத்துடன் கூடிய ஞாயிற்றின் மறைவை இயற்கைப் பின்னணியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்”(ப.125) என உலகளாவிய கூறுகளைத் தம் பரந்த இலக்கியப் பயில்வால் கண்டு காட்டுகிறார்.

இன்னும் பற்பலவற்றை எடுத்துக்காட்டிக் கொண்டே போகலாமெனினும் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.

ஒட்டுமொத்த நூலிலும் இழையோடுவதாக நான் கண்டது: ஒரு நிலப்பரப்பின் இயற்கைவளம் அப்பரப்பில் உருவாகும்  கவிதையில் இடம்பெறுவது இயல்பே எனினும் அவ்வியற்கை வளத்தோடு கவிதை நேர்விகிதத் தொடர்பு கொண்டிருக்க வேண்டியதில்லை; கவிதை தனக்கெனத் தனித்த வளத்தைக் கொண்டிருக்கவியலும் என்பதைப் பழந்தமிழ்ச் சான்றோர் செய்யுட்களின் அகச்சான்றுகளாலும் கிரேக்க, வடமொழிக் கவிதைகளின் ஒப்பீட்டாலும் அடிகள் நிறுவியிருக்கிறார் என்பதுதான்.

- காலச்சுவடு & இலயோலா கல்லூரித் தமிழ்த் துறை இணைந்து நடத்திய கருத்தரங்கில்   05.12.2014 அன்று படிக்கப்பெற்றது.


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...