Saturday, June 12, 2021

'குநவும்' என்றால் என்ன? (அல்லது) பாடத்தை நடத்தி முடிக்காதது ஏன்?




 பின்னணி: 

03.06.2019 அன்று தஞ்சையில் கவிஞர் தங்க. செந்தில்குமார் பொன் விழா . அதில் பேசும் போது, 'நான் எனது 34 ஆண்டு ஆசிரியப் பணிக் காலத்தில் கறாரான ஆசிரியனாக இருந்ததில்லை;பாடம் நடத்தியதில்லை; பாடப் பகுதிமேலான உரையாடலையே நிகழ்த்தினேன்; எனக்கு ஒதுக்கப் பட்ட பாடப் பகுதியை முழுமையாக முடித்ததும் இல்லை , அதாவது போர்ஷனைக் கவர் செய்ததே இல்லை' என்றேன்.

நேற்றுப் பேரா. மு.இளமுருகன் " என்ன மதி, அப்படி பேசிட்ட. ஒன்னப் பத்தி என்ன நெனப்பாங்க. எங்கிட்ட யே ... லாம் வருத்தப்பட்டாங்க " என்றார்.

சில செய்திகள்:

இன்னும் சிலவற்றையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்நான் பதிவு செய்திருக்கிறேன்.

என் வகுப்பளவில் மாணவர் வருகையைப் பதிவு செய்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்; பல வகுப்புகளில் வருகையைக் குறிக்க மறந்துவிடுவேன். வகுப்பறையிலோ வெளியிலோ மாணவர்கள் சற்றும் அச்சமின்றி என்னை அணுகலாம்; பேசலாம் என்பது இயல்பாக இருந்தது.

வகுப்பறைக்குள் நான் நுழையும் போதோ அறையிலிருந்து வெளியேறும் போதோ மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டியதில்லை என்பதை -முதன்முதலாகவகுப்பறைக்குச் சென்ற அன்றுதொட்டு - சொல்லிவந்திருக்கிறேன். என் வகுப்புக்குக் காலம் தாழ்ந்து வரலாம்; இடையில் என் இசைவு பெறாமலேயே எழுந்து செல்லலாம் (ஆனால், மிக மிக அரிதாகவே காலந்தாழ்ந்த வருகையும் இடையில் வெளியேறுதலும் நிகழ்ந்தன). 

இந்தப் போக்குக் குறித்து - சட்டம் ஒழுங்கைப் பேணும் பொறுப்புக்காரணமாக - கல்லூரி முதல்வர், பல்கலைக் கழகத் துறைத் தலைவர் ஆகியோர் தம் கருத்து வேறுபாட்டைச் சொல்லியதுண்டு. நல்ல வேளை குறிப்பாணை முதலிய எல்லைக்குக் கொண்டு செல்லவில்லை. அவர்களுக்கு நன்றி.

இத்தகைய நடைமுறைகள் என்றுமே எனக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தியதில்லை . 

இவை என் வழக்கங்களே அன்றிப் பரிந்துரைகள் அல்ல.

நான் வாங்கும் புதிய புத்தகங்களையும் மாணவர்கள் படித்தால் நல்லதென்று கருதும் - பாடத்திட் டத்தில் இல்லாத - பழைய புத்தகங்களையும் மொழி இலக்கியம் சார்ந்த அண்மைச் செய்திகளையும் வகுப்பறையில் முதல் 5 - 10 மணித்துளிகள் அவ்வப்போது அறிமுகப்படுத்துவேன்.

 தேர்வு, மதிப்பெண் இவற்றை மட்டுமே கருதும் வினா - விடை, பாடத் துணை (Notes) நூல்களை அறிமுகப்படுத்தவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். 

பாடப்பகுதியை நடத்தி முடிக்காவிட்டாலும் தேர்வு நெருங்கும் கட்டத்தில் மதிப்பெண் நோக்கில் எஞ்சியவற்றை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதற்கான சில வழிகளைச் சொல்வேன்.

பாடம் நடத்தும்போது , 'இப்படியும் ஐயமா?' என்று தோன்றும் வகையில் எதிர்பாராதவாறு மாணவர்கள் வினவுவதுண்டு. இவற்றை எதிர்கொண்டு நிறைவடையுமாறு விளக்கிக் கடந்து செல்ல வேண்டுமெனில் காலமும் கடந்துதானே போகும்!

                                                xxxxxxxxxxxxxxxxxx

எதிர்பாரா ஐயத்திற்கு ஓர் எடுத்துக் காட்டு : 

" குநவும் என்றால் என்ன?" (எச்சரிக்கை : இலக்கணம்.பொறுமை இருந்தால் தொடரலாம் அல்லது *** க்குப் பிறகு உள்ளவற்றை மட்டும் படிக்கலாம்)


1)எறி கொற்றா (எறி = எ, ற்+ இ. இ-உயிர் எழுத்து)

2)கொணா கொற்றா (கொணா=க் + ஒ, ண் + ஆ.ஆ -உயிர்)


எறி (தல் ) -ஏதேனும் ஒன்றைத் தூக்கி வீசு(தல்)

கொணா = கொண்டு வா


முன்னே இருக்கும் கொற்றனிடம் , எறி/ கொணா - என்று கூறும்போது,  எறி,கொணா இரண்டும் முன்னிலை வினைகள்; உயிர் எழுத்தை இறுதியாகக் கொண்டவை.

இவற்றை உயிர் ஈறு என்பார்கள். இன்னும் துல்லியமாகச் சொன்னால் இவை உயிர்ஈற்று முன்னிலை வினைச்சொற்கள் .

[(நான் )எறிந்தேன் - தன்மை வினை

(கொற்றன்) எறிந்தான் - படர்க்கை வினை]

3)உண் கொற்றா ( உண் - என்பதில் ண் புள்ளியீறு)

4) தின் கொற்றா ( தின் - என்பதில் ன் புள்ளியீறு)

உண்= உண்பாயாக, தின் = தின்பாயாக.

இவை புள்ளியீற்று/ புள்ளியிறுதி முன்னிலை வினைச் சொற்கள் என்று உணர்ந்திருப்பீர்கள்.

கொற்றா - என்பதன் முதல் எழுத்து கொ. அதாவது க்+ஒ.

துல்லியமாகச் சொன்னால் க் - தான் முதல் எழுத்து .

க்- என்பது வல்லெழுத்து ( ச், ட், த், ப், ற் - என்பனவும் வல்லெழுத்துகள்தாம் ; வல்லினம் என்றும் சொல்வார்கள்) 

எறி, கொணா - போன்ற உயிர் ஈற்று முன்னிலை வினைகளும்

உண், தின் முதலிய புள்ளியீற்று முன்னிலை வினைகளும் நிற்க (நிலை மொழி என்பார்கள்) அடுத்து,

வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்தால் (வருமொழி என்பார்கள் ) எந்த மாற்றமும் ஏற்படாது.

இவ்வாறு மாறாமல் இருப்பது இயல்பு புணர்ச்சியாகும்; சுருக்கமாக இயல்புஎன்பார்கள்.

5)நட+ கொற்றா = நட கொற்றா✓/ நடக்கொற்றா✓ 

6) ஈர்+ கொற்றா = ஈர் கொற்றா✓  / ஈர்க்கொற்றா✓

     ஈர்(த்தல்)= இழு(த்தல்)/ பிள(த்தல்)

நட கொற்றா, ஈர் கொற்றா என்பவை இயல்பு.

நடக் கொற்றா, ஈர்க் கொற்றா என்பவற்றில் வருமொழிக்கேற்ப ஒரு வல்லெழுத்து / வல்லின எழுத்து மிகுந்திருக்கிறது / தோன்றியிருக்கிறது. இத்தகைய இடங்களில் இரண்டும் சரி என்கிறது தொல்காப்பியம்.

இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்டவாறு புணர்ந்தாலும் பிழையில்லை என்றால் உறழ்ச்சி என்பார்கள்.

மேலே உள்ள எடுத்துக் காட்டுகள் (1-6) இளம்பூரணர் உரையில் உள்ளவை. நச்சினார்க்கினியரும் இவற்றையே பின்பற்றி மேற்செல்கிறார் .மேலும் சில விளக்கங்களும் உள்ளன. இப்போதைக்கு இவை போதும்.

சூத்திரத்தைப் பார்ப்போம்.

உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்

புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்

இயல்பா குநவும் உறழா குநவுமென்

றாயீ ரியல வல்லெழுத்து வரினே

( தொல்காப்பியம், எழுத்ததிகாரம், தொகைமரபு - 9)

புணர்ச்சி இலக்கணத்தை எடுத்துக் காட்டு , விளக்கம், விதி, சூத்திரம் என்ற வரிசையில் நடத்துவது

என் வழக்கம். இதனை விதிவரு முறை என்பார்கள்


                                                             ***

இதை நடத்தி முடிக்க ஏறத்தாழ இருபது மணித்துளியாயிற்று. 

மாணவர் இரா... எழுந்து, " ஐயா, குநவும் என்றால் என்ன?" என்றார். 

எனக்குப் புரியவில்லை.

"என்ன ? " என்றேன். 

" ஐயா, குநவும் " என்று சற்றுத் தெளிவாக அழுத்தமாகச் சொன்னார்.

"குணமுமா?" என்றேன்.

"இல்லை" என்று என்னை நெருங்கிப் புத்தகத்தில் விரல் வைத்துச் சுட்டிக்காட்டினார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இப்படியும் ஐயம் எழும் என்கிற தெளிவும் கிடைத்தது. 

" இரா ... நீங்கள் தொடர்ந்து தயங்காமல் சந்தேகம் கேளுங்கள்" என்று வேண்டி, பிறகுதான் விளக்கம் சொன்னேன். அவரும் இரண்டாண்டுகள் தொடர்ந்து கேட்டார்.

இயல்பு + ஆகுநவும் = இயல்பாகுநவும்

யாப்புநோக்கி,  'இயல்பா'  'குநவும்' என்று இரண்டு சீர்களாக அச்சிடப்பட்டுள்ளன.

இளங்கலை (B.A) தமிழ் பயின்ற ஒருவருக்கு இந்த ஐயம் எழக்கூடாது. ஆனால் பட்டத்திற்கும் தகுதிக்குமான இடைவெளிக்குத் தனிப்பட்ட மாணவரைக் குறைசொல்லக் கூடாது.

ஆசிரியத் தொழிலின் சங்கடங்களுள் ஒன்று, ஆசிரியருக்கு இயல்பாகப் பழகிப்போன ஒன்று , மாணவர் பழகாததாக இருக்கும். மாணவருக்கு எளிதாகப் புரியக்கூடியதுதானே என்று கருதி நகர்ந்துவிடக் கூடாது.

இது கூடவா தெரியாது என்று ஆசிரியர் நினைக்கிற மிகச் சாதாரணமான ஒன்றுகூட ஏதோ காரணத்தால் மாணவர் சிலருக்குத் தெரியாமலிருக்கலாம்.

மாணவரோடு நிகழ்த்தும் சுதந்திரமான உரையாடல் மூலமே இதனைக் கடக்க இயலும் என்பது என் அனுபவம்.

வெறும் போர்ஷன் முடித்தல், தேர்வு, மதிப்பெண் என்பவை உயர்கல்வியல்ல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'குநவும்' என்றால் என்ன? - 2

                 (அல்லது)

சந்திப்பேயும்  விகார வெறியும்*

(* புலவர் வேங்கடாசல முதலியார், சந்தி பிரித்து அச்சிட்ட,  கம்பராமாயணம் , அயோத்தியா காண்டப் பதிப்பில் எழுதிய தொடர்)

குநவும் பற்றிய எனது இடுகையைப் படித்த பேராசிரியர் தமிழ் சிவாSiva Krishnan, " முதலில் குநவும் என்றால் புரியவில்லை. எங்கள் வகுப்பில் கொக்கு கொக்க (கொக்கு ஒக்க....) என்று நண்பர்  ஒருவர் படித்தார். புணர்ச்சியைப் படிக்கச் சொல்லித் தராததன் விளைவு இது " என்று கருத்துரைத்தார். அப்போது , அது பற்றிச் சற்று விரிவாக எழுதப் போவதாகக் குறிப்பிட்டிருந்தேன்;இப்போது எழுதுகிறேன்.

                                                            ----------------

பேராசிரியர் பீ.மு.மன்சூர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்ற காலத்து நிகழ்ச்சியொன்றைச் சொன்னது நினைவுக்கு வருகிறது:


பேராசிரியர் சோ.ந.க. அவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, மாணவர்களுக்குரிய முதல் வரிசை நீள் மேசையில் சந்தி பிரித்த மர்ரே ராஜம் பதிப்பு ஒன்று இருந்ததாம். அதைத் தூக்கி வீசி எறிந்து விட்டு, எதுவும் நடக்காதது போல், இயல்பாகப் பாடம் நடத்தத் தொடங்கி விட்டாராம்.

                                                                   ----------------

நவீனத்திற்கு முந்தைய காலத்துப் பா இலக்கியங்களைத் தொடர்ச்சி குன்றாமல் இயன்றவரை முழுமையாகவும் தனித்தனியாகவும் சொற்கள் தெளிவுறுமாறு படித்துக் காட்டி,இரசனை சுட்டி,வாய்ப்பு இருப்பின் சமகாலப் போக்கோடு ஒப்புமை தேடி , அருஞ்சொற்பொருள், உள்ளடக்கம் சார்ந்த விளக்கம் என்று நடத்திப் பிறகு மொழியமைப்பைத் தேவைக்கேற்ப விளக்குவது என் வழக்கம்.


மொழியமைப்பை விளக்குவதில் முதற்படி சந்தி பிரித்தல்தான். படித்துக் காட்டும் போதே பேரளவு சந்தி பிரித்தல் நிகழ்ந்துவிட்டாலும், இன்றியமையாதவற்றைக்

கரும்பலகையில் எழுதுவேன் ( சாக் கட்டி கையில் இல்லாமல் என்னால் பாடம் நடத்தவே இயலாது) . இந்தக் கட்டத்தில் மாணவர்களிடையே ஒரு சலிப்புத் தலை தூக்கும். 


என் வகுப்பில் மாணவர்கள் அச்சமின்றி உரையாட இயலும் என்பதால்,  'ஐயா, இலக்கிய வகுப்பிலும் பாதி இலக்கணமா? ' என வெளிப்பட வினவவும் செய்வார்கள்.  

                                       _______________

இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களின் இலக்கியச் சொற்பொழிவை முதன் முதலாகக்கேட்டுச் சொக்கிய வட்டத்தொட்டி அன்பர் ஒருவர், ' ஐயா, தமிழ் இலக்கியங்கள் இவ்வளவு சுவையானவை என்று இன்று வரை தெரியாதையா. தமிழாசிரியர் எவரும் இப்படிச் சொன்னதே இல்லையே ஐயா! ' என்றாராம்.


அதற்கு டி.கே.சி., தமிழ்ப் பண்டிதரிடம் கம்பராமாயணம் பாடம் கேட்டால், அவர் ' கம்பராமாயணம், கம்பரது ராமாயணம் அல்லது கம்பரால் இயற்றப்பட்ட ராமாயணம், ஆறாம் வேற்றுமைத் தொகை அல்லது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை ' என்பார். கேட்பவர் கொட்டாவி விடத் தொடங்கிவிடுவார். தமிழ் இலக்கிய இரசனையின் முதல் எதிரிகள் தமிழ்ப் பண்டிதர்கள்தாம்- என்பாராம்.


நான் இதைச் சொல்லிவிட்டு ,  "பேருந்தில் பயணம் செய்பவருக்குப் பேருந்தை ஓட்டும் பயிற்சியோ தொழில்நுட்ப அறிவோ வேண்டியதில்லை. ஆனால் ஓட்டுநருக்கு அவை இன்றியமையாதவை. ஆனால், ஓட்டுநரும் ஒரு வகைப் பயணிதான்.


"இலக்கியச் சொற்பொழிவை இரசிக்கும் பொதுமக்களுக்கு இலக்கண நுட்பம் தேவையில்லை. இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகப் பயில்வோருக்கு இலக்கண அறிவு நுட்பமும் தேவை.


"நமக்குள்ள பாடப்பகுதிகள் மாதிரிக் காட்டுகள்தாம். இவற்றின் இலக்கண அமைதியை விளங்கிக் கொண்டால், பிற பிற பாக்களை நீங்களே அணுகிப் பயில்வது எளிது. 


"வெறும் இரசனை முறையில் பாடங்கேட்டால் , கேட்பதற்கு இனிமையாக இருக்குமே தவிர நீங்களாகவே பிறவற்றை அணுகுவது சிரமம்; பிறருக்குச் சுவைபடச் சொல்வதும் சிரமம்" என்பேன்.

                                                        xxxxxxx

பழம் பா இலக்கியங்களைச் சந்தி பிரித்து அச்சிற் பதிப்பிக்கும் வரலாற்றுத் தொடக்கம் ஆராய்தற்குரியது.

தமிழ்ப் பேரறிஞர் , பள்ளியகரம் நீ.கந்தசாமிப் பிள்ளையவர்கள் இடப்புறம் ஓசை கெடாதவாறு சீர் பிரித்து அடி வரையறுத்தும் வலப்புறம் பொருளுணர்ச்சி கருதிச் சந்தி பிரித்து அருஞ்சொற்பொருளுடனும் பதிப்பித்த திருவாசகம் முதற் பகுதி முன்னுரையில், சந்தி பிரித்துப் பதிப்பித்தல் பற்றிய 

முந்தையோர் கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து முழுமையான மேற்கோள்களாக முன் வைத்துள்ளார்.

                                                            xxxxxxx


சந்தி பிரிப்பதிலும் சில முறைமைகள் தேவை. 

தேர்ந்த தமிழறிஞர்களின் புலமையையும் உழைப்பையும் கொண்டு தமிழ் நூல்கள் பலவற்றைச் சந்தி பிரித்துப் பதிப்பித்துப் புகழ் பெற்ற மர்ரே & ராஜம் கம்பெனியார்

'சந்தி குறியீட்டு விளக்கம்' என்னும் கையேடொன்றை வெளியிட நேர்ந்தது . இதனை  ஒரு வகையில் சந்திபிரித்தலின் இலக்கணம் என்று சொல்லலாம். 

ஏதேனும் ஒரு வடிவில் இலக்கணம் வந்துவிடும்.

                                                         xxxxxxxxxx

 உயர் கல்வி நிலையில் இலக்கியம் பயில்வோர் , சந்தி பிரிக்காத வடிவத்தை முதலாகக் கொண்டு, இலக்கண அமைதியுணர்ந்து சந்தி பிரிக்கப் பயில வேண்டும்.

எனவேதான் பேரா.சோ.ந.க. அவர்கள் முதுகலை வகுப்பில்  சந்தி பிரித்த நூலைத் தூக்கி வீசினார்.

(வேண்டுமானால் சந்தி பிரித்த நூலைத் துணையாகக் கொள்ளும் சலுகையைத் தரலாம்)

                                                  °°°°°°°°°°°°°°°°°°°

சந்தி பிரித்து அருஞ்சொற்பொருள் தந்துவிட்டால் போதுமா? பொருளுணர முடியுமா?

அவ்வாறு அமைந்த, நீ.கந்தசாமிப் பிள்ளையவர்களின் திருவாசகப் பதிப்பிலிருக்கும் திருவண்டப்பகுதியிலிருந்து மாதிரிக்குச் சிலவற்றைப் பார்ப்போம்( இந்தப் பக்கத்தின் நகலைப் பகிர்ந்துள்ளேன்) :




1. 1. உண்டைப் பிறக்கம்        உண்டைப் பிறக்கம்

1. 2. தூலத்துச் சூறை                      தூலத்து, சூறை


1.1.சந்தி பிரிக்காத இடப்புறம்,    சந்தி பிரித்தவலப்புறம் இரண்டிலும் புணர்ச்சியில் தோன்றிய  ' ப் '  உள்ளது.


1.2.இல் இடப்புறம்  த்  உள்ளது, வலப்புறம் த் கைவிடப்பட்டுக் காற்புள்ளி இடப்பட்டுள்ளது. ஏன், 

வலப்புறமும் ' தூலத்துச் சூறை ' என்றே போடலாமே?    


'திருவண்டப் பகுதி' யின் 13-15 ஆம் அடிகளைப் பார்ப்போம்.

2.1. படைப்போற் படைக்கும்        படைப்போன் படைக்கும்

        காப்போற் காக்குங்                காப்போன் காக்கும்

2.2. கரப்போன் கரப்பவை           கரப்போன் ; கரப்பவை


2.1. இன் இரு தொடர்களிலும் புணர்ச்சியில் -ன் > ற் ஆகத் திரிந்திருக்கிறது.

2.2.இல் ஏன் கரப்போற் கரப்பவை என்று - ன் > ற் ஆகத் திரிய வில்லை?

படைப்போன் படைக்கும்

காப்போன் காக்கும்         

என்று சந்தி பிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், சந்தியை மட்டும் பிரித்துக்காட்டுவது போதாது.


3. நின்றெழில்       நின்ற எழில்


     ' நின்று எழில் ' என்றுதானே பிரிக்கவேண்டும்?


இவை போன்ற இடங்களில் இலக்கணக் குறிப்புத் தேவை.


1.1. உண்டைப் பிறக்கம் = உண்டைகளின் பிறக்கம்

       [உண்டை = உருண்டை; பிறக்கம் = இயக்கம்(எனலாம் என்பது என் கருத்து)] உருண்டை வடிவில் அண்டத்தில் இயங்கும் கோள் முதலியவற்றைச் சொல்கிறார் மாணிக்க வாசகர் . இஃது ஆறாம் வேற்றுமைத் தொகைத் தொடர்.

1. 2.' சூக்கமொடு தூலத்து' - என்னும் இரண்டும் முரண்காரணமாக ஒருங்கு நிற்கின்றன. 

       ' சூறை மாருதத்து' = சூறைக்காற்று என ஒருங்கு நிற்கின்றன.

       'தூலத்துச் சூறை' - எனில் பொருள் இயைபில்லை.

ஓசை காரணமாக 'ச்' என்னும் வல்லெழுத்து மிகுந்துள்ளது; அவ்வளவுதான்.

இவற்றிடையே பொருள் இயைபு காணலாமெனில் சந்தி பிரிக்கும்போதும் 'ச்' இடம்பெறலாம்.


2.1.படைப்போற்படைக்கும் = படைப்போனைப் படைக்கும்.

       காப்போற்காக்கும் = காப்போனைக் காக்கும்

சிவபெருமானை முழு முதற் கடவுள் என்பர் சைவர். அம் முழு முதற் கடவுளே படைப்போனாகிய பிரமனைப் படைத்தவன்; காப்போனாகிய திருமாலைக் காப்பவன் என்பது பொருள்.

       

      படைப்போன் (+ஐ )

      காப்போன் (+ ஐ  )

      என இரண்டாம் வேற்றுமை உருபு

      மறைந்து - தொகையாக - நிற்பதால்தான்  - ன் > ற் ஆகத் திரிந்துள்ளது.

      2.2. இல் ' காப்பவை கரப்போன் ' என்பது ஒரு தொடர், ' கரப்பவை ... கடவுள் ' என்பது மற்றொரு தொடர்.

எனவேதான் இடப்புறத்திலேயே திரிபின்றி இயல்பாக உள்ளது.


3. நின்ற எழில் > நின்றெழில் ஆவதைத் தொகுத்தல் விகாரம் என்பார்கள்.


இவற்றையெல்லாம் பயிற்றுவிக்காமல் போர்ஷனை முடித்தால் , இரா .... போன்ற மாணவர்கள் முதுகலை வகுப்பில் "குநவும் என்றால் என்ன?" என்றுதானே கேட்பார்கள்? (பயிற்றுவித்த பின்னும் மறந்து போய்க் கேட்பதுண்டு. குற்றமில்லை. நினைவூட்டினால் பிடித்துக் கொள்வார்கள். தொடர்ந்து பயில்வதன் மூலம்தான் மொழியமைப்பை நினைவில் தக்கவைத்துக் கொள்ள இயலும். இவற்றைச் சற்றும் பயிற்றுவிக்காமல் போனால்?)

(6 & 13 சூன் 2019 முகநூல் இடுகைகள்)


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...