Friday, October 17, 2025

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்*

————————————---



காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப்பு நடத்தினால் இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் வெல்லும். 


காமத்துப்பாலுக்கு உரை கண்ட பண்டையோர்,   கூற்று கேட்போர் என்னும் அகப்பொருள் மரபு பேணுவர். இங்கு இலக்கியச் சுவைக்கு இடையூறின்றிப் பொதுப் பொருள் கொண்டால் போதும்.


காலம் சார்ந்து மரபு பேணும் குறள் , காலங்கடந்தும் வென்று நிற்பதற்கு இவ்வாறு பொதுமைக்கு இடந்தருவதும் காரணம்.


தமிழ்ச் சமூக வரலாற்றில் வள்ளுவர் காலத்தில் நேர்ந்த மாறுதலைத் தெரிந்துகொண்டு நகர்வோம்.


பழந்தமிழ்ச் சமூகத்தில் பரத்தமை புறத்தொழுக்கம் என்று சற்றே ஒதுக்கிவைக்கப்பட்டாலும் , சமூகத்திற்கு முரணானதென்று விலக்கிவைக்கப்படவில்லை. 


அகப்பொருள் மரபில் பரத்தையிற் பிரிவுக்கு இலக்கண ஏற்பு உண்டு. அகப் பாடல்களில் பரத்தமையே  ஊடலுக்குக் காரணமாயிருந்தது.


அவ்வாறே பழந்தமிழ்ச் சமூகத்தில் கள் ஒழுக்கக்கேடாகக் கருதப்படாதது மட்டுமன்று ; வளத்தின் அடையாளமாகவே கொள்ளப்பட்டது.


மாறாக வள்ளுவர் கள்ளையும் பரத்தமையையும் கடுமையாகக் கண்டித்தார்.


அகப்பொருள் மரபின் தொடர்ச்சியைப் பேணிய வள்ளுவர் காதல் இன்பத்தில் ஊடலுக்கு இன்றியமையா இடமுண்டு என ஏற்றார் ;  ஆனால்,  காரணத்தை மாற்றினார் ; இல்லாத புறத்தொழுக்கம் இருப்பது போன்ற புனைவுகளால் ஊடலை உருவாக்கி இலக்கிய நயத்தை மிகுவித்தார்.


நாடக வழக்காக - வெறும் மரபாகக் கூட - பரத்தமையை அவர் அனுமதிக்கவில்லை.


ஆனால் கள்ளும் களிப்பும் உவமை என்கிற சாக்கில் உள்ளே நுழைந்துவிட்டன.


 ' உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை ' (தொல். உவமையியல், 3)என்னும் உவம இலக்கண மரபு பிறழாமல் ,  ' தம்மில் இருந்து தமதுபாத் துண்ணல் ' (1107), ' அறிதோ றறியாமை காணல் ' (1110)  முதலிய மேன்மைகளைக் காதல் இன்பத்திற்கு , உவமையாக்கிய வள்ளுவரா இவர் !  மதுவின் இழிவுகளை வகைவகையாகக் கூறி மதுவிலக்கை வலியுறுத்திய வள்ளுவரா இப்படி! என்று நாம் கருதும்படியான உவமைகளை அவரிடம் காணமுடிகிறது.


           இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

           கள்ளற்றே கள்வநின் மார்பு (1288)


பிறர் இகழ்வார்கள்  என்று தெரிந்தும்  குடிகாரர்கள் மதுவை மீண்டும் மீண்டும் அருந்த விரும்புகிறார்கள். தன் நாணம் முதலியவற்றை நெகிழச்செய்து, காதலன் மார்பு  மீண்டும் மீண்டும் தழுவத் தூண்டுகிறது என்கிறாள் காதலி.


             உண்டார்கண் அல்லது அடுநறா, காமம்போல்

             கண்டார் மகிழ் செய்தல் இன்று (1090)

      

அடு நறா  – வடித்தெடுத்த மது.  அந்த மது உண்டால் போதை தரும். காதல் கண்டாலே போதை தரும் என்கிறார் ; ஒருபடி மேலேபோய்,


               உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்

               கள்ளினும் காமம் இனிது ( 1201)

         

கள் உண்டால்தான் களிப்பை – போதையைத் தரும் . ஆனால் காதலில் நினைவே களிப்பைத் தரும். எனவே கள்ளை விடவும் காதல் இனியது என்கிறார் (கள் இனிது என்று ஏற்றால்தான் கள்ளினும் இனிது என்று கூறமுடியும் ! )


இந்தக் குறள் இரண்டையும் இணைத்து ஒரு குறளாக்குகிறார்.


                உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

                கள்ளுக்கில் காமத்திற் குண்டு (1281)

  

நினைத்தால் களிப்பு, கண்டால் மகிழ்ச்சி. இரண்டும் காதலில் உண்டு; கள்ளுக்கு இல்லை என்கிறார்.


          'களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

          வெளிப்படுந் தோறும் இனிது  ( அலர் அறிவுறுத்தல் 1145)


களிப்பு (போதை) ஏற ஏற மதுவை விரும்புதல் போலக் காதல் இருவரிடத்தும் புலப்படப் புலப்பட இனிமை தரும்[ பண்டை உரையாசிரியர்கள் அலர் வெளிப்படுதலோடு தொடர்பு படுத்துவார்கள். அது மரபு ]


வள்ளுவர் கள்ளை , களிப்பைக் கடிதலில் கண்டிப்புடையவர்தான்  என்றாலும் 

காதல் மயக்கத்தைத் துல்லியமாக உணர்த்த ,  கள் தரும் இன்பத்தை, மகிழ்ச்சியை ஒப்புக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை போலும்.


இங்குதான் அவர் முற்றிலும் இலக்கியப் படைப்பாளராக மிளிர்கிறார். காமத்துப்பால் காதற் பொருளால் மட்டுமன்றிக் காதலைக் காட்டும் முறையாலும் இலக்கியமாகிறது.


ஆம். திருக்குறள் ஓர் அற இலக்கியம் ; வெறும் அறநூல் மட்டுமன்று . 


* தலைப்புக்கு நன்றி கவிஞர் சேரன் !


( எழுத்தாக்கத்திற்காகச் சில மாறுதல்கள் செய்யப்பட்ட , வானொலி உரையின் பகுதி)

இருபதாம் நூற்றாண்டின் ஒரு தனிக் ' கோவை '

 இருபதாம் நூற்றாண்டின் 

ஒரு தனிக் ' கோவை '


சிலம்பு நா. செல்வராசு அவர்களின் 'இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்' - என்னும் நூலைப் படித்தபோது, அப்பாவின் ' கரந்தைக் கோவை ' தான் இருபதாம் நூற்றாண்டின் ஒரே கோவை இலக்கியம் என அறிந்தேன்.


செல்வராசு , இருபதாம் நூற்றாண்டில் கோவை நூல் இயற்றப்படவில்லை என்கிறார்.அவர்பார்வையில் அப்பாவின் கோவை படாததற்கு அவரைக் குறை சொல்ல முடியாது.


அதிலிருந்துதான் அப்பாவின் கோவை ஒன்று மட்டுமே இருபதாம் நூற்றாண்டின் கோவை என்னும் முடிவுக்கு வந்தேன். இருபதாம் நூற்றாண்டில் 400க்கு மேற்பட்ட துறைகளமைத்துக் கோவை பாடுதல் எளிதன்று. எனவே பிறர் யாரும் பாடியிருக்க இயலாதென்று உறுதியாக நம்புகிறேன்.


கோவை ஒரு சிற்றிலக்கிய வகை.

சிற்றிலக்கியங்களின் பொதுத்தன்மை , அவை ஒரு பாட்டுடைத்தலைவர் அல்லது தலம் முதலியவற்றைப் பலபடப் போற்றிப் புகழும் நோக்கின என்பதே . இந்த ஒற்றை மையம் காரணமாகச் சிற்றிலக்கியம் எனல் பொருந்தும். 


பாராட்டுக்குரியவருக்கு மாலை, பூச்செண்டு, பொன்னாடை முதலியன அணிவித்துப் போற்றும் மரபில் பாமாலையால் போற்றுவதும் அடங்கும்.


மாலை முதலியவற்றின் வேலைப்பாடு போன்றதுகோவை முதலியவற்றின் புலமைசான்ற செய்திறம்.இந்தச் செய்திறம் சார்ந்து அவற்றின் இலகிய மதிப்பு அமையும்.


நவீனக் கவிதை நோக்கில் அவற்றை மதிப்பிடக் கூடாது.சிற்றிலக்கியங்கள் கவித்துவத்தை விடவும் புலமைசால் செய்திறனுக்கே முதன்மை தந்தன.


தமிழ் நவீனக் கவிதை முன்னோடி பாரதிதானும் சிற்றிலக்கியம் புனைவதினின்றும் தப்பி விடவில்லை என்பதை உளங்கொள்ள வேண்டும்.


இந்தப் பின்னணியில் அப்பாவின் கரந்தைக் கோவையை மதிப்பிட்டால் ,  முதலிடத்தில் நிற்பது அதன் தங்கு தடையற்ற ஓட்டம் . மரபில் ஊறித் திளைத்தால் மட்டுமே இது வாய்க்கும்.


யாப்பு மரபிலமைந்த பா வடிவங்களின் உள்ளார்ந்த ஓசை உணராமல், புறநிலைப் பட்ட வெற்றுவிதிகளைக் கொண்டு சொற்களைக் கோக்கும்போது உரைநடையாகவே நின்று வற்றும்.


கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைப் பாட்டுடைத் தலமாகக் கொண்டு , தம் நன்றியறிதலைப் புலப்படுத்திப் போற்றும் வண்ணம் 469 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் - தலைவன் தலைவியின் காதல் நிகழ்ட்சிகளின் தொகுப்பாக - ஆனது இக்கோவை. அத்தனை பாடல்களும் மரபார்ந்த ஓசையும் ஓட்டமும் குன்றாதவை.


கரந்தைத் தமிழ்ச் சங்கம், கல்லூரி, சங்கத்தின் தமிழுணர்வு, தமிழ்ப் பணிகள்,  சங்கத்தோடு தொடர்புடைய சான்றோர் , தம் தமிழ்ப் புலமை, தமிழ் மொழி, இலக்கிய, இலக்கணங்கள் பற்றிய பார்வை,  தமிழ் உணர்வு யாவற்றையும் இடைமிடைந்து யாப்பின்வரம்பு பிறழாமலும் கோவை மரபு இகவாமலும் இலக்கியச் சுவை குன்றாமலும் புனைந்திருக்கிறார்; புகுந்து விளையாடியிருக்கிறார்.

(இக் கோவை பற்றிய மதிப்பீட்டினை - நூல் நிறை, தென் மொழி - கட்டளைக் கலித்துறையிலேயே பாடியளித்தவர் பாவலர் ம .இலெ.தங்கப்பா என்பதைப் புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன்


 மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன்


" மலரினும் மெல்லிது காமம் " என்றார் வள்ளுவர்.


இறையனார் களவியல் உரையாசிரியர் "  மென்சுவை " என்கிறார் 


               ஓதல் காவல் பகைதணி வினையே

               வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்று

               ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே (௩௫)

               

எனக் கற்புக்காலத்தில் (இல்லறத்தில்) தலைவனின் அறுவகைப் பிரிவை (தலைவியைப் பிரிந்து செல்லலை) வரையறுக்கிறது இறையனார் களவியல்.


பரத்தையிற் பிரிவு பற்றிய நூற்பா (௪௦)வுரையில்


" மற்றைப் பிரிவெல்லாம் வேண்டுக ஆள்வினை மிகுதி உடைமையான் ; இப்பிரிவு எற்றிற்கோ எனின் , மற்றைப் பரத்தையிற் பிரிந்தான் தலைமகன் என்றால், ஊடலே புலவியே துனியே என்றிவை நிகழும். நிகழ்ந்தால், அவை நீக்கிக் கூடின விடத்துப் பெரியதோர் இன்பமாம்; அவ்வின்பத் தன்மையை வெளிப்படுப்பன அவை எனக்கொள்க. இவன் மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியனாகலான் இப்பிரிவு வேண்டினான் என்பது." என்கிறார் நக்கீரர்.


ஆள்வினை x மென்சுவை  என எதிர்வுகளைக் கொள்கிறார்.


" பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய " சேக்கிழாரும் நினைவுக்கு வருகிறார்.

பத்திச்சுவை மட்டுமன்று இலக்கியச் சுவையும் நனி சொட்டச் சொட்டப் பாடியவர் அவர். இறையற்புத நம்பிக்கைகளோடு கூடிய அண்மைக்கால வாழ்க்கை  வரலாறு சார்ந்த கதைகளைப் பாடிய சேக்கிழாருக்கு வரம்புகள் மிகுதி ; உரிமை குறைவு. 


இந்தக் குறைந்த உரிமையைக் கொண்டே நடப்பியச் சாயலும் உணர்வு நுட்பமும் பொதுளக் கதை வடித்தார் சேக்கிழார். ஓர் இடம் :


            அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி

            வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்

            உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்

            இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்

(பெரியபுராணம்,தில்லைவாழந்தணர் சருக்கம்,திருநீலகண்ட நாயனார் புராணம் 03)


" இளமை மீதூர இன்பத் துறையினில் எளியரானார் " -  இந்த ஒற்றைத் தொடரில்  சொட்டும் நாகரிகமும் நயமும்  சேக்கிழார்தம்  இலக்கியப் பேராற்றலின் மின்னற்கீற்று !


" எளியரானார் - அது வலிமைபெறத் தாம் அதன் ஆட்சிக்குட்பட்டு

எளியராக ஆயினார் " என்பார் சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்.


எளிமை x அருமை எனல் பெரும்பான்மை. ௸ பாட்டில், எளிமை x வலிமை எனக் கொள்கிறார் சிவக்கவிமணி.


" எளியார் வலியாம் இறைவா சிவதா " எனச் சிவகாமி ஆண்டார் கூற்றில் எளிமை x வலிமை எனச் சேக்கிழாரே ஆண்டுள்ளார் (இலை மலிந்த சருக்கம்,எறிபத்த நாயனார் புராணம் 16)


திருநீலகண்டர் எளியரானார் என்பதை மெலியரானார் என்று கொண்டாலும் இழுக்கில்லை.


"இந்நூல்[ களவியல்] செய்தார் யாரோ எனின், மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள்" அஃதாவது சிவபெருமான். அந்தச் சிவபெருமான்தான்  " மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன் "

கல்கியால் கேட்ட மன்னிப்பு


 கல்கியால் கேட்ட மன்னிப்பு


வந்துவிட்டது ; வணிகத்தில் வென்றுவிட்டது(?) ; என் மாணவப் பருவ நினைவைத் தூண்டிவிட்டது.


முதுகலை  மாணவர்கள் சுழல் முறையில் வகுப்புக் கருத்தரங்கில் கட்டுரை படிக்க வேண்டும். ஓர் ஆண்டில் இரண்டு முறைக்குக் குறையாமல் ஒவ்வொரு மாணவரும்

படிக்க நேரும். அதை வெறும் சடங்காக அன்றி உயிரோட்டத்துடன் நடத்தினார் எங்கள் பேராசிரியர் அ.மா.பரிமணம் ஐயா . வினா எழுப்புதல் , விடையிறுத்தல் ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி மதிப்பெண் தருவார். அது, அகமதிப்பீட்டில் பதிவாகும்.


நான் ஒருமுறை கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இதழியல் பங்களிப்புப் பற்றிக் கட்டுரை படித்தேன் :


1928 பிப்ரவரியில் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.வாசனின் இதழாக வெளிவந்தது. முதல் இதழிலேயே உள்ளடக்கத்தில் பல  மாறுதல்கள் செய்தார்; மொழி நடையைக் சரளமான பொதுநடையாக்கினார்;ஆண்டுக் கையொப்பத் தொகையை உருபா இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைத்தார்: போட்டிப் பந்தயமொன்றை அறிவித்து அடுத்தடுத்த இதழ்களில் பரிசுத் தொகையை உயர்த்திக் கொண்டே போனார். போட்டி முடிவுகளை அறிவிக்கவே 'நாரதர்'எனும் இதழை 1933இல் தொடங்குமளவுக்கு அப்போட்டிகள் செல்வாக்குப் பெற்றன.   


வாசன் ஆனந்த விகடனைத் தொடங்கியபோது கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி திரு.வி.க.வின்  'நவசக்தி'யில் துணையாசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போதே, அவர் ஆனந்த விகடனுக்கு 'ஏட்டிக்குப் போட்டி', 'பூரியாத்திரை' முதலிய நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியனுப்பினார். கல்கியின் நகைச்சுவை எழுத்தாற்றலை இனங்கண்ட வாசன்  கல்கியைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து அழைப்பு விடுத்தார்.


கல்கியும் அழைப்பையேற்று, 'நவசக்தி' யிலிருந்து விலகினார். இடையில் ராஜாஜியின் ஆணைக்கிணங்கத் திருச்செங்கோடு ஆசிரமம் சென்று 'விமோசனம் ' என்னும் மதுவிலக்குப் பரப்புரை இதழில் பொறுப்பேற்க நேர்ந்தது. எனினும் விகடனின் ஒவ்வோரிதழுக்கும்  கதை  கட்டுரை அல்லது தலையங்கம் ஆகியவற்றுள் ஒன்றைத் தொகை செலுத்திப் பெறும் அஞ்சவில் (வி.பி.பி.) அனுப்பக் கோரினார் வாசன். கல்கியும் அவ்வாறே அனுப்பி வந்தார். இது , ஒருவகை வணிக உறவுதான்.


வாசனுக்கு இந்த வி.பி.பி. உத்தி புதிதன்று. அவர் ஏற்கெனவே சென்னையில் புதுமையாக விற்பனைக்கு வரும் பொருள்களின் பட்டியல் (கேட்டலாக்கு)களை , அக்காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலில் பொருளாதார நிலையில் மேல்தட்டிலிருந்த  அரசு அலுவலர்கள் , சுக சீவனம் நடத்திய நிலவுடைமையாளர்கள் போன்றோருக்கு அனுப்பிவந்தார் . அவர்கள் தேவையான பொருளைக் குறிப்பிட்டு எழுதுவார்கள். அவர்களுக்கு வி. பி.பி.யில் அவற்றை அனுப்பிவிப்பார் வாசன் ( இன்றைய இணையவழி வணிகத்தின் முன்னோடியான அஞ்சல் வழி வணிகம்!)


வி. பி.பி.  வழி விற்பனைக்கும் விகடன் இதழுக்கும் அடிப்படை ஒன்றுதான் : வணிகம்.


ஆனந்த விகடனுக்கு முன் தமிழில் இதழியல் வணிகமயமாகவில்லை. வாசன் இதழியலை வெற்றிகரமான வணிகமாக்கினார். அதற்கேற்ப வெகுமக்களைக் கவருமாறு  பொதுச் சுவைபட எழுதும் திறன் கல்கியிடமிருந்தது. அது வணிக இதழியல் எழுத்து.


- என்று தொடங்கிக்  கல்கியின் புனைகதை , அரசியல் எழுத்துகள் யாவும் வணிக இதழியல் கூறுகளுடன் இயன்றவை என்று தொடர்ந்தேன். நான் ஆராய்ந்து எழுதியவை என்று சொல்லமுடியாது;  எனக்கு உடன்பாடான நிலை நின்று தொகுத்து எழுதியவை.


விவாதத்தின்போது, நான் மிக மதிக்கும் , பாடத்தைக் கலையாக நிகழ்த்தும் ஓர் ஆசிரியர் , ' கல்கி இதழாளராக இருந்த அதேவேளையில் , தலைசிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் திகழ்ந்தார் என்பதற்குப் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவையே சான்று ' என்றார் .


நான் , ' அவை தொடர்கதைகள் ; புதினங்கள் அல்ல. அவற்றையும் இதழியல் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் ' என்றேன். 


அவர்  மறுத்தார். 


கல்கி  மிகுந்த தன்னடக்கத்துடன் பொன்னியின் செல்வனுக்கு எழுதிய முடிவுரையில்  முதலில் தொடர்கதை என்றுதான் குறிப்பிடுகிறார்; இறுதியில் ,

" பொதுவாக நாவல்கள்எழுதுவதற்கும், முக்கியமாகச் சரித்திர நவீனங்கள் எழுதுவதற்கும் சட்ட திட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. (அப்படி ஏற்பட்டிருந்தாலும் அவற்றை நான் படித்ததில்லை.) ஒவ்வொரு ஆசிரியரும் தமக்குரிய முறையை வகுத்துக் கொண்டு எழுதுகிறார்கள் "என்கிறார். இது, படைப்புக்கும் இதழியல் எழுத்துக்குமிடையிலான அவரது ஊசலாட்டம் என்றேன்.


பேராசிரியர் முகம் வாடியது . அவர் விவாதத்தைத் தொடர விரும்பவில்லை. நானும் வருந்தினேன். 


அவர் இல்லம் கடந்துதான் எங்கள் இல்லத்திற்குச் செல்லவேண்டும். கல்லூரியிலிருந்து நேராக அவரது இல்லத்திற்குச் சென்று மன்னிக்குமாறு வேண்டினேன். அவர் பொருட்படுத்தாதுபோல் , சுவையான காப்பி  தந்தார். அருந்தி இல்லம் திரும்பினேன்.


இப்போது கல்கிக்கு ஆதரவாக வாதாட மிகப்பெரிய இலக்கியக் கோட்பாட்டாசான் வழக்கறிஞராக வாய்த்திருப்பது கல்கியின் உம்மைப் பயன்.

வள்ளுவன் கள்வன்*

 வள்ளுவன் கள்வன்* ————————————--- காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப...