Friday, February 10, 2023

திருக்குறள் அற இலக்கியம்

 



வெவ்வேறு கட்டுரைகளில் இடுகைகளில் 'திருக்குறள் அற நூல் மட்டுமன்று; அற இலக்கியமுமாகும்' என்று வாய்பாடு போல் எழுதி வந்திருக்கிறேன். ஆனால் எங்கும் விளக்கியதில்லை.

அண்மையில் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு வானொலியில் உரையாற்றும் வாய்ப்புக்கிடைத்தது.  '  வள்ளுவம் : பின்னல் உவமைகள் ' என்னும் வரம்பினுள் உரை நிகழ்த்த வரையறுத்துக்கொண்டேன் ( வானொலியில் ' உலகினுக்கே தந்து ...' என்னும் தலைப்பில் ஒலிபரப்பானது) வள்ளுவத்தில் இலக்கிய உணர்வின்  இழையை இனங்கண்ட பகுதியை மட்டும் தருகிறேன்.

தமிழில் அறநூல் திருக்குறள் மட்டும்தானா? 

இல்லை. திருக்குறள் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கில் , 11 நூல்கள் அற நூல்கள் ; இடைக்காலத்தில் எழுந்த ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியனவும் அறநூல்கள்தாம்.  ஆனால்,திருக்குறள் அற இலக்கியம்.

அறநூல் என்பது அறக்கருத்துகளை நல்லன இவை , அல்லன இவை என வகைப்படுத்தியும் நல்லன விதித்தும் அல்லன விலக்கியும் கூறும்.

அற இலக்கியம் அறத்தை அழகியல் அனுபவமாக்கும்.

' திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதி

தமிழச்சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிகொண்டிருந்ததாக ' , பாரதி பாடினார். 

கம்பனையும், இளங்கோவையும் தம் கவிதைகளில்  போற்றி அடையாளப்படுத்திய பாரதி , அவர்களுடைய படைப்புகளுக்கு இத்தனை தகுதிகளை அடுக்கவில்லை.

அவர் அடுக்கியுள்ள தகுதிகளில் அழகும் ஒன்று.

நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என நட்புக்கு மட்டும் வள்ளுவர் ஐந்து அதிகாரங்களை ஒதுக்கியிருக்கிறார்.   இந்த அளவு வேறு எதற்கும் அவர் ஒதுக்கியதில்லை. இந்த அதிகாரங்களின் 50 குறள்களில் பல்வேறு உவமைகளை அமைத்துள்ளார். அவற்றுள் பலரும் அறிந்த ஒன்று :


             நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

             பண்புடை யாளர் தொடர்பு (783 )

பண்புடையவர்களின் நட்புப் பழகப் பழகப் புதுப்புது இனிமைகளால் சிறந்தோங்கும்   என்பதற்குப் பயிலப் பயில நயந்தரும் நூலை உவமையாக்குகிறார்.


              நுண்ணிய நூல்  ( குறள் 373)

              நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல் (குறள் 401)

              இலங்கு நூல்   ( குறள் 410)

              அறு_தொழிலோர் நூல் (குறள் 560)

              அந்தணர் நூல் ( குறள் 543)

              நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் (குறள் 683)

              அவையகத்து  அஞ்சுமவன் கற்ற நூல்  (குறள் 727)

             அரண் என்று உரைக்கும் நூல் (குறள் 743)

              உரை சான்ற நூல் (குறள் 581)

              மதிநுட்பம் நூலொடு உடையார் ( குறள் 64:6)

              நூலொடு என்  நுண் அவை அஞ்சுபவர் ( குறள் 726)

               நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

               நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று (குறள் 941)

               எப்பால் நூலோர்க்கும் துணிவு ( குறள் 533)

                (நன்றி :http://tamilconcordance.in/)


எனத் திருக்குறளில் நூல், நூலோர் போன்ற  சொற்களைப் பல இடங்களில் சுட்டியுள்ளார் வள்ளுவர்.

இவற்றில் குறிப்பிடப்படும் நூல்கள் வெவ்வேறு  அறிவுத்துறை நூல்கள் .

ஏடறிந்த தமிழ் வரலாற்றில் நூல் என்பது பெரும்பாலும் மொழிக்குரிய இலக்கண நூலைக் குறிக்கத் தொடங்கி வேறுபல அறிவுத்துறை நூல்களுக்கும் விரிந்தது எனலாம்.

அறிவுத்துறை நூல்கள் அறிவை விரிவுபடுத்தும் ; ஆழப்படுத்தும். அறிவுத்துறை நூல்களால் அறிதோறறியாமை காணும் இன்பம் எய்தலாம்.

திருக்குறளில் பெரும்பாலான இடங்களில் நயம் என்னும் சொல் விரும்புதல் என்னும் பொருள் குறித்து நிற்கிறது. ஒப்புரவு என்னும் பொருள் குறித்தலும் உண்டு.

அரிதாக நீதி / அறம் என்னும் பொருளிலும் இடம்பெற்றுள்ளது. எங்கும் அறிவு/அறிதல் என்னும் பொருளைக் குறித்து வரவில்லை.

நவில்தொறும் இனிமையால் முன்னிலும் தன்னை விரும்பச் செய்கிற (நயம் தருகிற) நோக்கில் அறிவுத்துறை நூல்களைப் பயிலவியலாது.

திருக்குறள் இலக்கியமாகுமா ? - என நவீன எழுத்தாளர் சிலர் ஐய வினா எழுப்ப,  தமிழ்ப்புலமை மரபினர் வரிந்துகட்டிக்கொண்டு - வசை மிடைய - வாதிட்டனர்.

திருக்குறளில் அறம் பொருளின்ப இலக்கணமும் உண்டு , நவில்தொறும் நயந்தரும் இலக்கியமும் உண்டு என்கிறார் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர்.

          வனப்பியல் தானே வகுக்குங் காலைச்

          சின்மென் மொழியால்  தாய பனுவ லோ(டு)

          அம்மை  தானே அடிநிமிர்(பு) இன்றே"(தொல். செய். 313) என்னும் நூற்பாவிற்குப் பேராசிரியர் எழுதிய உரையில் இங்கு நமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வோம்.

" அறம் பொருளின்பம் மூன்றற்கும் இலக்கணம் கூறுதலும் வேறிடையிடை அவையன்றியும் தாய்ச் (தாவிச்) செல்வதும் " எனப் பொருள் காண்கிறார் பேராசிரியர்(சுவடிகளில்/பதிப்புகளில் சொல், தொடர்க்குழப்பங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது ).

          பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து

          மிருடீர வெண்ணிச் செயல் (குறள். 675)

        என்பது இலக்கணங் கூறியதாகலிற் பனுவலோடென்றான்.

          மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்

          பலர்காணும் பூவொக்கு மென்று (குறள். 1112)

         என இஃது இலக்கியமாகலாற் றாயபனுவலெனப்பட்டது.


பேராசிரியர் உரையில்  எடுத்துக்காட்டுகளை அடுத்து முறையே " இலக்கணங் கூறியதாகலின் பனுவல் ...." , " இலக்கியமாகலான் தாய பனுவல் ..." என்றுள்ளன.

எடுத்துக்காட்டுகள் உட்பட , ஏறத்தாழப் பேராசிரியரை அப்படியே பின்பற்றும் நச்சினார்க்கினியர் உரையில் , " இலக்கணங் கூறலின் பனுவலின்...",     "இலக்கியமாதலில் தாய என்றார் " என்றுள்ளன.

இலக்கணப் பனுவல் = இலக்கணம் கூறும் பனுவல்

தாய பனுவல் = இலக்கணம் கூறாத , இலக்கணத்தினின்றும் தாய(இடையிட்ட) பனுவல் எனக் கொள்ளலாம்.

நச்சர் பனுவல் என்பதையே  இலக்கணம் என்று கொண்டிருக்கலாம். பார்க்க வேண்டும்.

எவ்வாறாயினும் , வரையறுத்தும் விதித்தும் விலக்கியும் கூறுவன இலக்கணமென்றும்  இன்புறுத்துவன இலக்கியமென்றும் வேறுபடுத்திக் கண்டுள்ளனர். எனவே, இலக்கணங்கூறுவது இலக்கியமாகாது.

இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக மிக நுட்பமான குறளைக் காட்டுகிறார் பேராசிரியர்.

             மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

             பலர்காணும் பூவொக்கும் என்று(நலம்புனைந்துரைத்தல்:1112) 

பூக்களைக் காணும்போதெல்லாம்  அவள் கண்களை ஒத்தவை என்று காதலன் நெஞ்சம் நினைத்தது . ஆனால்,அவளை நெருங்கியபோது அக்கண்கள் பலரும் காணும் பூக்கள் அல்ல ; தனியழகுகொண்ட பூக்கள் என உணர்ந்தது.நெஞ்சே ! அவள் கண்கள் உலகத்துப் பூக்களை ஒத்தவை என்று குழம்பியிருக்கிறாய்  !  என்று தன் நெஞ்சத்தைக் கடிந்துகொள்கிறான். 

இல்பொருள் உவமையா ? இல்லை. பூக்கள் உள்பொருள்தாமே ! ஆனால் , பலரும் காணும் உலகத்துப் பூக்கள் அல்லாதவை . அல்பொருள் உவமை !

பேராசிரியர்  நச்சினார்க்கினியர் ஆகியோர் வழிநின்று,

                திருக்குறளிலே அறத்துப்பாலும் பொருட்பாலும் இன்பப்பொருள்                                      நுதலுவன அல்ல, அவ்விரண்டுபாலும் இலக்கியங்களுமேயுமல்ல. அவை                    தெய்வப் புலவர் வகுத்துள்ள     வாழ்க்கை இலக்கணங்களேயாம்


என்கிறார் பழந்தமிழ் இலக்கண  இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையுடைய அறிஞர் பொ.வே. சோமசுந்தரனார் (‘அணிந்துரை’, கலித்தொகை – நச்சினார்க்கினியர் உரை)

காமத்துப் பாலின் இலக்கியத் தகுதி பற்றி எவரும் வினா எழுப்பியதில்லை.

வள்ளுவர் ' நவில்தொறும் நூல் நயம் ‘ என்பதில் சுட்டுவது அறிவுத்துறை நூல்களை அல்ல ; இலக்கிய நூல்களை. வள்ளுவத்துக்குள் இது விதிவிலக்காக இலக்கிய நூலைக் குறிக்கிறது . தமிழ்ச் சொற்பொருள் வரலாற்றில் கருதிப்பார்க்கவேண்டிய பொருள் விரிவு !

நவில்தொறும் நயம் காணும் தம் இலக்கியவுணர்வை இக்குறளில் பொதிந்து வைத்த வள்ளுவர் திருக்குறள் அறத்துப் பால் , பொருட்பால்களையும்  கூட ,  கருத்துச் செறிவு குன்றாமல்  இலக்கியமாக்க முயன்றிருக்கிறார்.

No comments:

Post a Comment

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...