Friday, February 10, 2023

வள்ளுவம் : கள்ளும் காமமும்

 வள்ளுவம் : கள்ளும் காமமும்



- திருக்குறள் ஓர் அற இலக்கியம் ; வெறும் அறநூல் மட்டுமன்று . 


காமம் என்பது பழந்தமிழில் காதலைக் குறித்தது. திருக்குறள் மூன்றாம் பாலின் சொல்லாட்சி எண்ணிக்கையில் வாக்கெடுப்பு நடத்தினால் இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் வெல்லும். 

காமத்துப்பாலுக்கு உரை கண்ட பண்டையோர்,   கூற்று கேட்போர் என்னும் அகப்பொருள் மரபு பேணுவர். இங்கு இலக்கியச் சுவைக்கு இடையூறின்றிப் பொதுப் பொருள் கொண்டால் போதும்.

காலம் சார்ந்து மரபு பேணும் குறள் , காலங்கடந்தும் வென்று நிற்பதற்கு இவ்வாறு பொதுமைக்கு இடந்தருவதும் காரணம்.

தமிழ்ச் சமூக வரலாற்றில் வள்ளுவர் காலத்தில் நேர்ந்த மாறுதலைத் தெரிந்துகொண்டு நகர்வோம்.

பழந்தமிழ்ச் சமூகத்தில் பரத்தமை புறத்தொழுக்கம் என்று சற்றே ஒதுக்கிவைக்கப்பட்டாலும் , சமூகத்திற்கு முரணானதென்று விலக்கிவைக்கப்படவில்லை. 

அகப்பொருள் மரபில் பரத்தையிற் பிரிவுக்கு இலக்கண ஏற்பு உண்டு. அகப் பாடல்களில் பரத்தமையே  ஊடலுக்குக் காரணமாயிருந்தது.

அவ்வாறே பழந்தமிழ்ச் சமூகத்தில் கள் ஒழுக்கக்கேடாகக் கருதப்படாதது மட்டுமன்று ; வளத்தின் அடையாளமாகவே கொள்ளப்பட்டது.

மாறாக வள்ளுவர் கள்ளையும் பரத்தமையையும் கடுமையாகக் கண்டித்தார்.

அகப்பொருள் மரபின் தொடர்ச்சியைப் பேணிய வள்ளுவர் காதல் இன்பத்தில் ஊடலுக்கு இன்றியமையா இடமுண்டு என ஏற்றார் ;  ஆனால்,  காரணத்தை மாற்றினார் ; இல்லாத புறத்தொழுக்கம் இருப்பது போன்ற புனைவுகளால் ஊடலை உருவாக்கி இலக்கிய நயத்தை மிகுவித்தார்.

நாடக வழக்காக - வெறும் மரபாகக் கூட - பரத்தமையை அவர் அனுமதிக்கவில்லை.

ஆனால் கள்ளும் களிப்பும் உவமை என்கிற சாக்கில் உள்ளே நுழைந்துவிட்டன.

' உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை ' (தொல். உவமையியல், 3)என்னும் உவம இலக்கண மரபு பிறழாமல் ,  ' தம்மில் இருந்து தமதுபாத் துண்ணல் ' (1107), ' அறிதோ றறியாமை காணல் ' (1110)  முதலிய மேன்மைகளைக் காதல் இன்பத்திற்கு , உவமையாக்கிய வள்ளுவரா இவர் !  மதுவின் இழிவுகளை வகைவகையாகக் கூறி மதுவிலக்கை வலியுறுத்திய வள்ளுவரா இப்படி! என்று நாம் கருதும்படியான உவமைகளை அவரிடம் காணமுடிகிறது.


           இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

           கள்ளற்றே கள்வநின் மார்பு (1288)

பிறர் இகழ்வார்கள்  என்று தெரிந்தும்  குடிகாரர்கள் மதுவை மீண்டும் மீண்டும் அருந்த விரும்புகிறார்கள். தன் நாணம் முதலியவற்றை நெகிழச்செய்து, காதலன் மார்பு  மீண்டும் மீண்டும் தழுவத் தூண்டுகிறது என்கிறாள் காதலி.


             உண்டார்கண் அல்லது அடுநறா, காமம்போல்

             கண்டார் மகிழ் செய்தல் இன்று (1090)

அடு நறா  – வடித்தெடுத்த மது.  அந்த மது உண்டால் போதை தரும். காதல் கண்டாலே போதை தரும் என்கிறார் ; ஒருபடி மேலேபோய்,


               உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்

               கள்ளினும் காமம் இனிது ( 1201)

         கள் உண்டால்தான் களிப்பை – போதையைத் தரும் . ஆனால் காதலில் நினைவே களிப்பைத் தரும். எனவே கள்ளை விடவும் காதல் இனியது என்கிறார் (கள் இனிது என்று ஏற்றால்தான் கள்ளினும் இனிது என்று கூறமுடியும்)

இந்தக் குறள் இரண்டையும் இணைத்து ஒரு குறளாக்குகிறார்.


                உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

                கள்ளுக்கில் காமத்திற் குண்டு (1281)

  

நினைத்தால் களிப்பு, கண்டால் மகிழ்ச்சி. இரண்டும் காதலில் உண்டு; கள்ளுக்கு இல்லை என்கிறார்.


          'களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

          வெளிப்படுந் தோறும் இனிது  ( அலர் அறிவுறுத்தல் 1145)


களிப்பு (போதை) ஏற ஏற மதுவை விரும்புதல் போலக் காதல் இருவரிடத்தும் புலப்படப் புலப்பட இனிமை தரும்[ பண்டை உரையாசிரியர்கள் அலர் வெளிப்படுதலோடு தொடர்பு படுத்துவார்கள். அது மரபு ]

வள்ளுவர் கள்ளை , களிப்பைக் கடிதலில் கண்டிப்புடையவர்தான்  என்றாலும் 

காதல் மயக்கத்தைத் துல்லியமாக உணர்த்த ,  கள் தரும் இன்பத்தை, மகிழ்ச்சியை ஒப்புக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை போலும்.

இங்குதான் அவர் முற்றிலும் இலக்கியப் படைப்பாளராக மிளிர்கிறார். காமத்துப்பால் காதற் பொருளால் மட்டுமன்றிக் காதலைக் காட்டும் முறையாலும் இலக்கியமாகிறது.

ஆம். திருக்குறள் ஓர் அற இலக்கியம் ; வெறும் அறநூல் மட்டுமன்று . 

( எழுத்தாக்கத்திற்காகச் சில மாறுதல்கள் செய்யப்பட்ட , வானொலி உரையின் பகுதி)

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...