Monday, July 10, 2023

தமிழ்த் திறனாய்வின் தொடக்கம் தேடி...*




ஆராய்ச்சிக்கும் திறனாய்வுக்குமிடையே ஊடாட்டங்கள் இருப்பினும் அவை வெவ்வேறு என்பது தெளிவு.

தமிழில் பலவற்றின் தொடக்கப் பதிவைத் தொல்காப்பியத்தில் காண்பது வழக்கம் (நம்பிக்கை?) திறனாய்வின் தொடக்கத்தையும் காண இயலுமா?

                                     ***

இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே

 திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே

 

  உவமப்   பொருளின் உற்ற துணருந்

  தெளிமருங் குளவே திறத்திய லான

என்னும் நூற்பாக்களின் (தொல்.பொருள். பொருளியல் 34 & உவமவியல் 207)" திறத்தியல் ' என்ற சொல் இலக்கியம் பற்றிய மதிப்பீட்டினைச் சுட்டிக்காட்டுவதுபோல உள்ளது" எனக் கருதும் துரை.சீனிச்சாமி அவர்கள் , இவற்றைத் திறனாய்வு பற்றிய குறிப்புகளாகக் கொள்கிறார் (தொல்காப்பியமும் இலக்கியவியலும், என்.சி.பி.எச்., சென்னை, 2013, ப. 16)

                                             ***

உரையாசிரியர்கள் 'நோக்கு' என்னும் செய்யுள் உறுப்பை விளக்குவது திறனாய்வுக்கு நெருக்கமாகிறது.

" யாதானும் ஒன்றைத் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை" என்பார் இளம்பூரணர். 

'கருதிய பொருளை முடிக்குங்காறும் ' என்பது "குறித்த பொருளை முடியநாட்டல் " என்னும் தொல்காப்பியத் தொடரை உளங்கொண்டெழுதியது. பாவலரேறு ச.பாலசுந்தரம் இந் நூற்பாவுரையை, " குறித்த பொருளை முடியநாட்டும் யாப்பமைந்த செய்யுளின்கண்... " என்றுதான் தொடங்குகிறார்.

பேராசிரியர் வழக்கின் வெள்ளைத் (நுட்பமற்ற வெளிப்படைத்) தன்மையிலிருந்து , - நோக்கென்னும் உறுப்பால்  - வேறுபட்டது செய்யுள் என்பது இந்நூற்பா நுதலிய பொருள் என்று சொல்லி உரையைத் தொடங்குகிறார்.

ஒரு பனுவல் (Text) இலக்கியமாதல் பற்றிய இந்தப் பார்வைதான் இலக்கியத்திறனாய்வின் தொடக்கப்புள்ளி.

நச்சினார்க்கினியர் - எடுத்துக்காட்டு உட்பட - ஏறத்தாழ அப்படியே பேராசிரியரைப் பின்பற்றுகிறார்.

இளம்பூரணர் 'நோக்'கை 1) ஒரு நோக்கான ஓட்டம் , 2) பலநோக்காகி வருதல், 3) இடையிட்டு நோக்கல் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாட்டாக மூன்று பாட்டுகளை எடுத்துக்காட்டுகிறார். 

பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் எடுத்துக்காட்டாக, 'முல்லை வைந்நுனை...' (அகநானூறு 4) என்னும் பாட்டை அலசல் முறையை ஒத்த நிலையில் பகுத்து நயம் பாராட்டுகின்றனர். 

பாலசுந்தரம், 'ஈதலுந் துய்த்தலும்...'(குறுந்தொகை 63) என்னும் நான்கே அடியால் அமைந்த பாட்டைக் காட்டி, அதன் பொருள் நுணுகி நோக்குப்பட அமைந்தவாற்றையும் சொற்கள் நோக்குப்பட அமைந்தவாற்றையும் குறிப்புப்பொருள் அமைந்தவாற்றையும் சொற்பொருள்நோக்குப்பட அமைந்தவாற்றையும் புலவனின் குறிக்கோளும் பயனும் தோன்ற யாப்பின் வழியதாய் நிற்குமாற்றையும் விவரித்துள்ளார். நிறைவாக, "மேலும் இதன் நயங்களை விரித்துணர்தற்கு ஏற்றவாறு அமைந்துள்ளமையும் காண்க. விரிக்கின் பெருகும்." என்கிறார். இதுவும் நயம் பாராட்டலே.

இந்நூற்பா உரை நிறைவில் பேராசிரியர் , இவ்வாறு பாட்டில் மாத்திரை முதலாகியவும் தத்தம் இலக்கணத்தில் திரியாது வந்தமையின் அவ்விலக்கணம் அறிவார்க்கு நோக்கிப் பயன்கொள்ளுதற்கு உரியவாயினவாறு கண்டு கொள்க... இவ்வாறு முழுவதும் வந்தன நோக்குதற்குச் சிறப்புடைய எனவும் இவை இடையிட்டு வந்தன சிறப்பில எனவும் கொள்ளப்படும்."

என்கிறார்.

சிறப்புடைய[ ன ] ,  சிறப்பில என்னும் தரமதிப்பீட்டுப்பார்வையும் திறனாய்வு சார்ந்ததே.

மற்றொன்று, 'அவ்விலக்கணம் அறிவார்க்கு...' என்று அவர் சொல்வது கோட்பாடு.


1) இலக்கியப் பனுவலை இனங்காணல்

2) தர மதிப்பீடு

3) கோட்பாட்டு அடிப்படை (யாப்பளவில்) - ஆகிய இவை திறனாய்வுசார்ந்தவை. 

                                                 ***

௧)நோக்கு என்பதைக் கருவி என்கின்றனர் உரையாசிரியர்கள். கருவி உறுப்பாகுமா?

௨)திறனாய்வுப் பார்வை தொல்காப்பியத்தில் இருக்கிறதா? அல்லது உரையாசிரியர்களிடத்தில் இருக்கிறதா?

௩) மேற்குறித்த பண்டை உரையாசிரியர்களிடம் (இக்கால உரையாசிரியர்களை விட்டுவிடலாம்)  தலைகாட்டியிருக்கிற திறனாய்வுப் பார்வை அவர்களுக்கு முன்போ பின்போ எந்த அளவு நடைமுறையில் இருந்தது?

௪) சமயச்சார்போடு கூடிய புலமையாளர்களின் ஈட்டு உரை முதலியவற்றைத் திறனாய்வுக்குள் அடக்கலாமா?

௫)சமயம் சார்த்த கண்டன நிராகரணப் போர்க்கால உரையாசிரியர்களின் வசைவளஞ் சான்ற புலமைச் சிலம்பாட்டங்கள் திறனாய்வுத் தகுதி பெறுமா?

௬)மரபுவழித் திறனாய்வு , நவீனத்திறனாய்வு என வேறுபடுத்த இயலுமா?( இயலும் என்பது என் கருத்து)


"மாத்திரை முதலா அடிநிலை காறும்

 நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே" (தொல்காப்பியம், செய்யுளியல், 100)

  'அடி நிறைகாறும்' என்பது பேராசிரியரும் நச்சரும் கொள்ளும் பாடம். பாட வேறுபாட்டால் சற்றுப் பொருள் வேறுபாடு உண்டு; அடிப்படை மாறுபாடு இல்லை.

" காரணமெனினும் கருவியெனினும் ஒக்கும். உண்டற்றொழில் என்றாற்போலக் கொள்க" என்கிறார் இளம்பூரணர் [உண்டற்றொழில் = உண்ணுதலாகிய தொழில். அவ்வாறே நோக்குதற்காரணம் = நோக்குதலாகிய காரணம்.] மேலும் "அஃதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை" என்கிறார். 

" மாத்திரையும் எழுத்தும் அசைநிலையும் சீரும் முதலாக அடிநிரம்புந் துணையும் நோக்குடைய வாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது என்றவாறு. கேட்டார் மறித்து நோக்கிப் பயன் கொள்ளுங் கருவியை நோக்குதற் காரணமென்றாமென்பது " எனப் பேராசிரியரும் கருவி என்கிறார். ஆனால், 'நோக்குதற்காரணம்' என்னும் தொடரமைதியை இளம்பூரணர் போல் விளக்கவில்லை;  'நோக்குதல் = நோக்குடையவாகச் செய்தல்' என்று கொண்டு 'நோக்குடையவாகச் செய்தல் வன்மையால் ' என மூன்றாம் வேற்றுமைத் தொடராக விரிக்கிறார்.

நச்சர் ஏறத்தாழப் பேராசிரியரையே பின்பற்றுவதால் தனித்து விவாதிக்க வேண்டியதில்லை.(நச்சர் தம் நகாசு வேலையைக் காட்டாமலிருப்பாரா? தனியே பார்ப்போம்)

செய்யுள் செய்வோன்  தான் நோக்கிச் செய்வதா? 

பயில்வோர் நோக்கிக் கொள்ளுமாறு செய்யுளுள் நிற்பதா? 

பயில்வோர்தம் நுண்ணோக்கால் கண்டுகொள்வதா?

(இவை ஒன்றோடொன்று தொடர்புடையனவுமாம்)

இளம்பூரணர் , 'தொடுக்கும் காலத்து ' என்றும் பேராசிரியர் , 'செய்தல் வன்மை' என்றும் வெவ்வேறு தொடர்களைக் கூறினாலும் செய்யுள் செய்வோனால் 'நோக்கு ' அமைக்கப்படுகிறது என்பது பெறப்படுகிறது.

'ஒரு நோக்காக ஓடிற்று ' , ' பலநோக்காகி வந்தது'  , 'இடையிட்டு நோக்கிற்று ' என்றெல்லாம் எடுத்துக் காட்டுகளையடுத்துத் தரும் குறிப்புகளால் 'நோக்கு' செய்யுளுள் அமைந்து கிடப்பது என்னும் பூரணர் கருத்தை உணர முடிகிறது.

"கேட்டார் ... கருவி" எனப் பேராசிரியர் கூறுவதால் பயில்வோர் கொள்வதென்னும் கருத்தும் புலப்படுகிறது. இவ்வுரையினுள் பின்னும் ' கொள்ளுதல் ' என்பதைப் பேணுகிறார் பேராசிரியர்.

பேராசிரியர், 'முல்லை வைந்நுனை ...' (அகம். 4) என்னும் பாட்டில் செறிந்துள்ள நயங்களை அலசிக் காட்டி யாப்பமைதியையும் சுட்டி, " இவ்வாறே பலவும் நோக்கியுணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா அடி நிறைகாறும் அடங்கக் கூறி நோக்குதற் காரணம் நோக்கென்றானென்பது." என்று நூற்பாவுரையின் நிறைவுப் பகுதியில் கூறுகிறார். 

'நோக்கியுணர்தற்குக் கருவி' என்பதை நோக்க நான்காம் வேற்றுமைத் தொடராகவும் பேராசிரியர் கருதியிருப்பதாகத் தோன்றுகிறது.

ச.பாலசுந்தரம் உரையில் பொருள் கூறும்போது , " ஓசையளவும் [ மாத்திரையும் ]... அடியும் ஆகிய கருவி உறுப்புகள் யாவும் அச்செய்யுளைக் கேட்போர் செவியின்பமுறுதலொடு அதன் பொருளையும் பயனையும் மீண்டும் மீண்டும் கருதி இன்புறுதற்குரியதாகச் செய்யப்படும் காரணம் நோக்கு ... " என்கிறார். நோக்கு,  கருவியா? காரணமா? என்பதும் நோக்குதற்காரணம்  என்னும் தொடருக்குப் பொருள் கொண்ட விதமும் பிடிபடவில்லை.உரை தொடரும் போது

 " மாத்திரை முதலியன அடியுள் அடங்குமேனும் அவை ஒவ்வொன்றும் நோக்குதற்குக் காரணமாக அமைதல் வேண்டும் ... " என்கிறார். இங்கு நான்காம் வேற்றுமைத் தொடராகக் கொண்டிருப்பது தெளிவாகிறது.

'நோக்குதற் காரணம்' இருபெயரொட்டாகவும், மூன்றாம் நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளப்பட்டிருப்பதற்குத் தொல்காப்பிய நூற்பாவிலேயே உள்ள தடுமாறு நிலைதான் காரணம்.

புலவன் வெள்ளை(வெளிப்படை)த்   தன்மையற்ற நுட்பமான செய்யுளைச் செய்யும் நோக்கில் மாத்திரை முதலியவற்றால் நோக்கமையச் செய்கிறான்.

பயில்வோர் நோக்குதற்குக் காரணமாகச் செய்யுளுள் நோக்கு அமைந்துள்ளது.

அது செய்யுளுள் அமைந்துள்ளமையால் நோக்கு என்பது உறுப்பாகிறது.

சொல், பொருள், அணி,குறிப்பு முதலியன மட்டுமன்றி மாத்திரை முதலாக அடிநிலை காறும் உள்ளார்ந்து நிகழ்வது நோக்கு.

"பாவிகம் என்பது காப்பியப் பண்பே" என்னும் தண்டியலங்கார நூற்பா நினைவுக்கு வருகிறது.

மாத்திரை முதலா அடிநிலை காறும் கருவியுள் அடங்கும். 'நோக்கு'க் கருவியாகாதென்றே படுகிறது.இங்கு நான்காம் வேற்றுமைத் தொடராக விரிப்பது பொருந்தும்.

" நவில்தொறும் நூல் நயம் " என்பார் வள்ளுவர். ஆனால் தொல்காப்பியர் நயம் முதலிய சொற்களை விடுத்து நோக்கு என்பதைக் கொள்கிறார்.

நோக்குதற்குக் காரணமான பிறிதொன்றை நோக்கு என்பது ஒருவகை (?) ஆகுபெயர் எனலாம்.

நச்சர், " நோக்கென்று பெயர் கூறப்படுமென்றவாறு "  என்பது இதனை உறுதி செய்யும். அஃதாவது நோக்கு என்பதை ஒரு கலைச்சொல்லாகக் கொள்ள வேண்டும். 

இதில் ஐயத்திற்கிடமின்றித் திறனாய்வு அடிப்படை அமைந்துள்ளது என்பது தெளிவு.

பேரா. தமிழண்ணல் அவர்களின் , 'நோக்கு' , பேரா.கா. சிவத்தம்பியவர்களின் 'தொல்காப்பியக் கவிதை இயல்' ஆகிய நூல்கள் தஞ்சையில் உள்ளன. பேரா. செ.வை. சண்முகம் அவர்களின் யாப்பும் நோக்கும் என்னும் நூலும் வந்துள்ளது.அவற்றைப் பார்க்க இயலாதது ஒரு குறை . வேறு நூல்களும் இருக்கலாம்.

நச்சினார்க்கினியரின் நகாசு வேலை 

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் செய்யுளியல் உரை ஏறத்தாழப் பேராசிரியரைப் பின்பற்றியே அமைந்திருப்பது வெளிப்படை.

நோக்கு என்னும் உறுப்பை வரையறுக்கும் 'மாத்திரை முதலா...' (தொல்.செய். 100) என்னும் நூற்பாவுரையும் விதிவிலக்கன்று.

நோக்கு என்னும் உறுப்பமைந்ததாகப் பேராசிரியர் காட்டும் ' முல்லை வைந்நுனை...' (அகம். 4) என்னும் பாட்டின் விளக்கத்திலும் பெரிதும் பேராசிரியரையே நச்சர் பின்பற்றியுள்ளார். 

ஆனால், அதில் நச்சினார்க்கினியத் தனி முத்திரையும் உண்டு. முதலில், தொல்காப்பியம்- செய்யுளியல்- உரைவளத்தின் பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்கள் காட்டிய பகுதியை அப்படியே தருகிறேன்:

" பூத்த பொங்கர்த் துணையொடு வதியும் தாதுண் பறவை பேதுறல் அஞ்சி' § என்ற தொடரில் பொங்கர்த் துணையொடு வதியும் பறவை, தாதுண் பறவை என  இயைத்து , 'பொங்கரிற் பசி தீர்ந்து துணையொடு வதியும் பறவையும் தாதையுண்கின்ற பறவையும் கலக்கமுறுதற்கு அஞ்சி மணியை விலக்கிய தேரன் என்றதனால் காதலும் அருளும் உடைமையின் அவற்றின் பிரிவிற்கும் பசிக்கும் இரங்கினான் ' என நோக்கின் நுட்பத்தை மேலும் விளக்கிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும்"[§’பூத்த சோலையில் பெடையொடு தங்கும் ,தேனை  உண்ணும் ,வண்டுகள் ' என்பது பொருள்.]

இத்தொடரைத் தம் வழக்கப்படி நச்சர் , " பொங்கரிற் பசி தீர்ந்து துணையொடு வதியும் பறவையும் தாதை உண்கிற பறவையும் " என்று இரண்டாக்கி நயஞ்சேர்க்கிறார். இதற்கு அரணாகத் திருத்தக்கதேவரை நிறுத்துகிறார். 

" வதியும் பறவை வண்டுந் தேனுமென்பதுந் தாதுண்பறவை சுரும்பென்பதும்,   'எங்குமோடி யிடறுஞ் சுரும்புகாள் வண்டுகாள் மகிழ் தேனினங்காள் ' (சீவகசிந்தாமணி, குணமாலையாரிலம்பகம், 42) எனப் பின்னுள்ளோர் கூறியவாற்றானு முணர்க " என்கிறார். இவை பேராசிரியர் கூறாதவை.  நச்சர் சிந்தாமணிக்கும் உரை வரைந்தவர் என்பது தெரிந்ததே.

திறனாய்வில் ஆய்வு ஊடாடுவதற்கு மரபு தரும் செவ்வியல் எடுத்துக்காட்டு இது.

''உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரெ"ன்றது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

ஒரு செய்முறைப் பயிற்சி




நான் இங்கிருக்கிறேன்.என் பெண்மைநலம் அடங்காத நோயுடன் கடற்கரைச் சோலையில் கிடக்கிறது. அவன் அவர்கள் ஊரில் இருக்கிறான். எங்கள் இரகசியக் காதல் பற்றி ஊரே பேசுகிறது.

" இதை ஒரு சிறுகதை என்று சொல்லமுடியுமா? "

" முடியாதென்றுதான் தோன்றுகிறது."

"சரி, இதைக் கவிதை என்றாவது சொல்ல முடியுமா?"

"கவிதையா? 'பெண்மை நலம் கடற்கரைச் சோலையில் கிடக்கிறது' என்பதில் கவிதைச் சாயல் இருக்கிறது.  ஆனால் மொத்தமாகப் பார்க்கும்போதுஉரைநடை மாதிரி இருக்கிறதே!"

"அப்புறம்?"

"சிறுகதைத் தொடக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்"

மேற்கண்ட தொடர்களின் மூவேறு மொழிபெயர்ப்புகளைப் பார்க்கலாம். நோக்கம், அவற்றில்  கவிதை காண முடியுமா என்று பார்ப்பதே ;  மொழிபெயர்ப்புப் பற்றிய மதிப்பீடன்று. 

____________________

I am here . My Virtue

lies in grief

in the groves near the sea .

                                 My lover

is back his home town . And our secret

is with the gossips

in public places

-----------------------------------

I am here 

My virtue lies in uncurable grief

in a grove by the sea .

My man is in his town,

and

our secret has become gossip

in public places

______________________

I am here.

I left my virtue in the

seashore grove, and my

deep pain does not end.

He is back in his town, and

our secret love has become

gossip in the public places.

_____________________________


சரி. இப்போது மூலத்தைப் பார்ப்போம்.அது குறுந்தொகை  97ஆம் பாட்டு. நான்கே அடிகள்.


தலைவி கூற்று

(வரைவு நீட்டித்த வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது)


யானே ஈண்டை யேனே என்நலனே

ஆனா  நோயொடு கான  லஃதே

துறைவன் தம்மூ  ரானே

மறையல  ராகி  மன்றத் தஃதே 

' என் நலன் கானலஃது ' என்பது இயற்கை கடந்தது. இதனை அணி வகையாகத் கருதலாம்.¹ 

யானே, ஆனா & துறைவன், மறை என்னும் எதுகைகளும்(-னே, -னா நெடில் எதுகைகள்) அடிதோறும் இறுதியில் ஏகாரம் வரும் இயைபும் முதலடியில் (வலமிருந்து இடமாக ) 1, 2, 4 ஆம் சீர்களில் வரும் கீழ்த்கதுவாய் இயைபும் தொடைகள்.²

யான் + ஏ, ஈண்டையேன் + ஏ,  நலன் + ஏ, கானலஃது + ஏ , ஊரான் + ஏ, மன்றத்தஃது + ஏ  என்கிற ஆறு ஏகாரங்களும் அசை ³ என்கிறார் உ.வே.சாமிநாதையர். அசைகளுக்குப் பொருளில்லை. 

கானலஃது, மன்றத்தஃது: ஆய்தங்கள் (ஃ) விரிக்கும் வழி விரித்தல் என்பார் உவே.சா. இதனைச் செய்யுள் விகாரம்⁴ என்பர்.தனிப்பொருள் ஏதுமில்லை.

'துறைவன் தன்னூரான்' என்றிருக்கவேண்டும்.  'தலைவனும் அவன் சுற்றத்தாரும் வாழுமிடமாதலின் அவரையும் உளப்படுத்தித் தம்மூரான் என்றாள் ' என்று

இலக்கணச் சமாதானம் செய்கிறார் உ.வே.சா.  இதில் நயங் காணவும் இடமுண்டு.

பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் இதனை மாட்டின்றி வந்த செய்யுள் என்பர். அதாவது, சொற்களை இடம்மாற்றிப் பொருள் கொள்ளத் தேவையில்லை.உரைநடை போலவே எழுவாய், வினைமுற்றுகள் கொண்ட நான்கு வாக்கியங்களில் பாட்டு அமைந்துள்ளது. 

இப்பாட்டிலுள்ள ¹அணி,  ²தொடைகள்,  ³அசைகள், ⁴விகாரம் ஆகியவை  செய்யுளுக்குரியன;கவிதைத் தோற்றம் காட்டுவன. மொழிபெயர்ப்பில் தொடை, அசை, விகாரம்    ஆகியவற்றைக்  கொண்டுவர இயலவில்லை;இயலாது. 

மேலோட்டமான இந்தக் கவித்தன்மை கடந்து ஆழ்ந்த கவித்துவத்தைக் காட்டுவன பொருளற்ற அசைகளும் விகாரங்களும் பிறவும். அவை ' மாத்திரை முதலா அடிநிலை காறும்'  பாட்டுக்குள் பாலிற்படு நெய்போல , பயில்வோன் கவிதையை நோக்குவதற்குக் காரணமாக,  கலந்துள்ளன. 

" நான்கலந்து பாடுங்கால் " என்பார் வள்ளலார்.

"ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணல் " என்பார் பாரதி.

"புத்தகமும் நானும் சையோகம் புரிந்ததொரு வேளை "  என்பார் பாரதிதாசன்.

எல்லா வாசகத்தையும் கலந்து பாட இயலாது. 

எல்லாக் காவியத்திலும் ஆழ்ந்த கவியுளம் காண முடியாது.

எல்லாப் புத்தகத்தோடும் சையோகம் (புணர்ச்சி) அமையாது.

அந்தப் பனுவல் அதற்கு இடந்தர வேண்டும்.

அப்படி பனுவலுள் கவிதை/இலக்கிய நயம் உள்ளார்ந்திருப்பதும் அதைக் கண்டுணர்வதும்தான் நோக்கு - என்று தோன்றுகிறது. 

இதை அலசிக் காட்டுவதில் பயனில்லை. மேற்காட்டிய குறுந்தொகைப் பாட்டில் அப்படியொன்றும் கவித்துவமோ நயமோ பெரிதாக இல்லை என்றும் ஒருவர் சொல்லக் கூடும்.

அறிஞர் சிலர் கருத்துகளைப் பார்க்க இயலாத குறையுடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்.

-------------------

*தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழித் தமிழாய்வு உரைத்தொடரின் தொடர்ச்சி இது. இதனைத் தூண்டியவர் சுட்டிப் பெயர் கொளப்படாத தமிழ் மாணவர் ஒருவர்.("ஒரு கேள்வி ஐயா"  என்னும் என் இடுகை காண்க)


தொடர்ந்தவர்கள் தோழர் வே.மு. பொதியவெற்பன்(Pothi), பேராசிரியர்கள் சாம் கிதியோன் ( Sam Sam Gideon ), இ. சூசை (Tamil Susai), தென்னவன் வெற்றிச்செல்வன் ஆகியோர்.


பேரா. இ. சூசை அவர்கள் தூண்டலின் துலங்கல் இது.


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...