Thursday, December 29, 2022

இன்பத்துள் கலந்து மயங்கிய அறமும் பொருளும்

 

திருக்குறள் நீதி நூலன்று; நீதி இலக்கியம். இலக்கியமல்லாதனவாய்ச் சில இடையிடையே கிடப்பது இழுக்குமன்று. தம் காலத்தமிழ் நூல்களையும் முந்து நூல்களையும் கண்டு முறைப்பட எண்ணி வடமொழி வழி வந்த கருத்துக்களைச் சொந்தச் சிந்தனையில் தோய்த்துத் தம் வயப்படுத்தி தந்தவர் வள்ளுவர்.

செல்வாக்கும் (influence) தாக்கமும் (impact) ஒப்பிலக்கியத் துறை கண்ட உலக இலக்கியப் பொதுப்போக்குகள். 

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும் (தொல். மரபியல் 96)

என்பது தமிழ் மரபு; இந்திய மரபுமாம்.  மக்கள் படைத்த நூல்கள் யாவும் வழிநூல்களே; தாக்கமற்ற தூய ஆக்கம் இருக்கவியலாதென்பதும் இதன் உட்கிடை.

கம்பனும் சேக்சுபியரும் கதைகளை இரவல் வாங்கினார்களாயினும், காவியமும் நாடகமும் அவரவர் தனித்தன்மை சான்ற – அவரவர்க்கே உரிய - படைப்புகளேயாம்.

வள்ளுவனிடம் வந்த கருத்துகளும் உண்டென்பாரை உருத்து நோக்க வேண்டியதில்லை. எப்பொருள் யார் வாய்க் கேட்டாலென்ன? மெய்ப்பொருள் காண்பதறிவு என்பது தானே வள்ளுவ நெறியும் (குறள். 423)

இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிக்களுக்கிடையே ஊடாட்டங்கள் இருத்தல் இயல்பானதேயாகும். ஒவ்வொரு பகுதிக்கும் அவ்வவற்றுக்குரிய சில கலை இலக்கியச் சிந்தனை மரபுகளை இனங்காண இயலும்.

இவற்றுள் தமிழின் தனித்தன்மைகள் காலப்பழமையுடையனவாய்ப் பதிவு பெற்றுள்ளன. இந்தியத் துணைக்கண்ட அளவிலான பல்வேறு வட்டாரங்களின் பதிவைச் சமற்கிருதத்தில் காண இயலும்.

யாப்பு சொல்லாட்சிகள், கருத்து ஆகியன, திருக்குறள் சங்க சான்றோர் செய்யுட்கள் பெரும்பாலானவற்றுக்குப் பிற்பட்டமை காட்டும். தமிழ்ச் சிந்தனை மரபின் தொடர்ச்சியையும், மாற்றத்தையும் திருக்குறளில் காணலாம்.

தமிழ் அறநூல்களில் சமணம், பௌத்தம் முதலிய அவைதிகச் சமயங்களின் செல்வாக்கு மறுக்க இயலாதது. நாலடியார் சமணநூல் என்பது வெளிப்படை. திருக்குறளையும் சமண நூலாகவே கொள்ளும் போக்கும் உண்டு.

அர்த்தசாத்திரம் பொ.கா.மு.(B.C.E) 4ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படினும் பொ.கா.(C.E.) 2ஆம் நூற்றாண்டின் இறுதியில் முழுமை பெற்றிருக்க வேண்டும். காம சூத்திரம் பொ.கா. 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதாகலாம். மனுதர்மம் பொ.கா.முதலாம் நூற்றாண்டிறுதியானதாகலாம் என்பர்( Wendy Doniger, On Hinduism – P.23)



இந்தியத் துணைக்கண்ட அளவில் போற்றப்பட்ட மேற்குறித்த தர்மார்த்தகாம நூல்களின் செல்வாக்கினைத் திருக்குறளில் காணும் முயற்சிக்கு வாய்ப்பிருக்கலாம். அல்லது திருக்குறள் இந்நூல்களுக்கு முற்பட்டதெனவும் காணப்படலாம்.

மனுதர்மமும் அர்த்தசாத்திரமும் இலக்கியங்களல்ல. அவை முறையே நடைமுறைச் சமூக ஒழுங்குகளையும், அரசியல் பொருளாதாரத்தையும் கூறும் கொள்கை நூல்களாகும். காமசூத்திரம் பெரிதும் மேட்டுக்குடி மக்களின் பகட்டான பாலியல் நடைமுறைகளை  இலக்கிய நயம்படக் கூறும் கையேடெனலாம். தொகுத்துக் கூறுவதாயின் இந்நூல்கள் மூன்றும் படைப்பிலக்கிய வகையிலடங்குவன அல்ல. 


பேராசிரியரின் பார்வையில் ....:


 வனப்பியல் தானே வகுக்குங் காலைச்

சின்மென் மொழியால்  தாய பனுவ லோ(டு)

அம்மை  தானே அடிநிமிர்(பு) இன்றே"(தொல். செய். 313) 

அறம் பொருளின்பம் மூன்றற்கும் இலக்கணம் கூறுதலும் வேறிடையிடை அவையன்றியும் தாய்ச் (தாவிச்) செல்வதும் எனப் பொருள் காண்கிறார் பேராசிரியர்(பதிப்புகளில் சொல், தொடர்க்குழப்பங்கள் உள).

பேராசிரியர் உரையில்  எடுத்துக்காட்டுகளை அடுத்து முறையே " இலக்கணங் கூறியதாகலின் பனுவல் ...." , " இலக்கியமாகலான் தாய பனுவல் ..." என்றுள்ளன.

நச்சர் உரையில் , " இலக்கணங் கூறலின் பனுவலின்...", இலக்கியமாதலில் தாய என்றார்." என்றுள்ளன.

இலக்கணப் பனுவல் = இலக்கணம் கூறும் பனுவல்

தாய பனுவல் = இலக்கணம் கூறாத , இலக்கணத்தினின்றும் தாய(இடையிட்ட) பனுவல் எனக் கொள்ளலாம்.

நச்சர் பனுவல் என்பதையே இங்கு இலக்கணம் என்று கொண்டிருக்கலாம்.



பேராசிரியர் உரையில்,

         பொருள்கருவி காலம்  வினையிடனோ டைந்தும்

இருள்தீர  எண்ணிச்  செயல் ( குறள் . 675) 

 - என்பது இலக்கணம் கூறியதாகலின் பனுவலோடென்றான்.


மலர்காணின் மையாத்தி  நெஞ்சே இவள்கண்

பலர்காணும்  பூவொக்கு மென்று ( குறள். 1112) 

- என இது இலக்கியமாகலான் தாய பனுவல் எனப்பட்டது."


என எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.


'நெஞ்சே! எந்த மலரைக் கண்டாலும்  பலரும் காணும் அப்பூக்களை ஒக்கும்

இவள் கண் என்று மயங்குகின்றாயே!' - என்று செறிவாகப் பொருள் காணலாம்.

அவளைக் காண ஏங்கிய காலத்தில் , நெஞ்சம் எந்தப் பூவைக் கண்டாலும் அவள் கண் இப்பூ ஒக்கும் எனக் கருதியது. அவள் கண்கள் அவனுக்கு மட்டுமே புலனாகும் தனியழகுடைய மலர்கள் அல்லவா? அவளை நேரிற் கண்டபோது , முன்பு எல்லா மலர்களோடும் ஒப்பிட்டது பிழையெனவுணர்ந்து,  " நெஞ்சே மயங்கி விட்டாயே ! " என்று இடித்துரைக்கிறான். 

இக்குறளுக்கு உரையாசிரியர்கள் வெவ்வேறுபட்ட பொருளும் நயமும் கண்டுள்ளார்கள். இலக்கியமாயிற்றே!

பொருள் கருவி காலம் என எண்ணி வினைசெயல் வகை இன்னதென வரையறுப்பது இலக்கணம்.

ஆனால், 'மலர்காணின் மையாத்தி' என்னும் காதலன் காதலியின் ' நலம் புனைந்துரை'க்கும் குறள் எதனையும் இன்னதென வரையறுக்க வில்லை. காதலுணர்வைக் காட்டுகிறது.இது இலக்கியம்.

இவ்வுரைப்பகுதி அவரது இலக்கிய உணர்திறனைப் புலப்படுத்துகிறது.

நச்சினார்க்கினியரும் இந்த எடுத்துக்காட்டுகளையே தந்து பேராசிரியர் பார்வையை வழிமொழிகிறார்.

குறளில் இலக்கியமும் உண்டு; இலக்கியம் அல்லாதனவும் உண்டு என்பது அவர்கள் பார்வை.

திருக்குறளிலே அறத்துப்பாலும் பொருட்பாலும் இன்பப்பொருள் நுதலுவன அல்ல, அவ்விரண்டுபாலும் இலக்கியங்களுமேயுமல்ல. அவை தெய்வப் புலவர் வகுத்துள்ள     வாழ்க்கை இலக்கணங்களேயாம்” 

என்கிறார் பொ.வே. சோமசுந்தரனார் (‘அணிந்துரை’, கலித்தொகை – நச்சினார்க்கினியர் உரை, ப.6). 

இவை ஒரு வகையில் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய பார்வைகளே எனினும், வடமொழித் தர்மார்த்த காம நூல்களை நோக்கத் திருக்குறள் அறம் பொருளின்பங்களை இயன்றவரை இலக்கியமாக்க முயன்றது; வென்றது என்றே கொள்ளலாம்.

திருக்குறளை அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கான நூலாகக் கொள்வது அரிது. அது குறிக்கோள் நிலையில் அடிப்படையான கொள்கைகளையும் நடைமுறைகளையும் பொதுப்படக் கூறும் இலக்கியம். “எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு” என்று திருக்குறளில் இழையோடும் பண்பை இனங்காட்டும் பரிமேலழகர் (குறள்.322-இன் வரை) கருத்து ஏற்புடையதேயாகும்.

வள்ளுவரின் அடிப்படை நோக்கம் அற இலக்கியம். தம் காலத்தின் செல்வாக்குமிக்க அக இலக்கியங்களை – தமிழ்மரபின் இலக்கிய ஊற்றுக்கண்களைத் - தவிர்க்காமல் தக்கவாறு புதுமை செய்ய முனைகிறது அவர் உள்ளம். அக இலக்கியப் பரத்தமை தவிர்த்துப் பழமரபு போற்றும் வள்ளுவர், மரபு பிறழாப் புதுமையாய் அகத்துள் அஃதாவது இன்பத்துள் அறமும் பொருளும் பொதிந்துள்ளார்.

திருக்குறளில் மட்டுமன்று பதினெண் கீழ்க்கணக்கு நூல் எதிலும் தமிழ், தமிழகம், தமிழர் பற்றிய குறிப்பில்லை. தமிழைப் பெயரளவில் சுட்டாமல் தமிழின் செவ்வியல் மரபை, பண்பை, அம்மரபில் கனிந்த அக இலக்கியங்களைக் கால மாறுதல்களினூடாகப் போற்றியிருப்பதே வள்ளுவத்தில் காணும் தலையாய தமிழ் அடையாளமாகும்.

புணர்ச்சி மகிழ்தல்” எனும் காமத்துப் பால் அதிகார முதற்குறட்பா

      கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் 

ஒண்டொடி கண்ணே யுள” (குறள். 1101)

என்பது. இக்குறளுரையிறுதியல் “வட நூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன” என்றார் பரிமேலழகர். வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் “வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்கள் - பயோதரம் வருடல், நகக்குறியமைத்தல், இதழ் சுவைத்தல், அல்குல்பானம் முதலியன. இவற்றின் விவரங்களை வாத்ஸ்யாயநம் முதலியவற்றுள் காணலாம்” என்று விளக்குகிறார். அவற்றுள் சிலவற்றைத் தணிக்கை செய்து ச. தண்டபாணி தேசிகர் தம் திருக்குறள் உரைக் களஞ்சியத்தில் தருகிறார்.

வள்ளுவர் மெய்யுறு புணர்ச்சி கடந்த தெய்வீகக் காதலைப் புனைந்தவரல்லர். “பாலொடு தேன் கலந்தற்றே” (குறள். 1121) எனும் குறள் ஆழ்முத்த அனுபவத்தின்  நயம் புலப்படுத்துவது. ஆனால் காமசூத்திரம் போன்ற கையேட்டு விளக்கமன்று. 

அகப்பா நயம் குன்றாமல் அதனூடாக அறமும் பொருளும் கூறும் ஆர்வமும் வள்ளுவர்க்கிருந்தது.

       தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு” (குறள். 1107)

என்பது காமத் தழுவலின் இன்பம் கூறுவது. 

அறத்துப்பாலின் ஒப்புரவறிதல், ஈகை எனும் இரண்டதிகாரங்களும் பகுத்துண்ணலை வலியுறுத்துவனவாகும். “பாத்தூண்”(227) எனும் செறிதொடரையும் காணலாம். அந்த அறவுணர்வை அகவாழ்வின் முயக்க இன்பத்திற்கு உவமையாக்குகிறார் வள்ளுவர்.

இந்த உவமையைப் பண்டைய உரையாசிரியர்கள், அகத்திணைக் கிளவி, மரபு முதலியன கொண்டு பலவாறு விளக்கவும் அமைதி காணவும் முற்பட்டுள்ளமையை உரைக் களஞ்சியம் காட்டுகிறது.

தொல்காப்பிய உவமையியல் முதல் நூற்பாவுரையின் நிறைவில் இவ்வுவமை நுட்பமுணர்ந்த இளம்பூரணர் ‘மனத்திற்குப் புலனாகும்’ உவமை என்கிறார். ஆம். பகுத்துண்டு மகிழும் அறவுணர்வைப் பாலுணர்வின்பத்திற்கு ஈடாக்குவது மனத்தளவில் உணரும் நுட்பம்.

“புணர்ச்சி மகிழ்தலின்” நிறைவாக வைக்கப்பட்டுள்ள குறள்,

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்

           செறிதோறும் சேயிழை மாட்டு (1110)

என்பதாகும்.

கல்வி, கல்லாமை, கேள்வி அறிவுடைமை ஆகிய அதிகாரங்கள் கண்டும், கேட்டும், கற்று அறிவு பெறுதலின் இன்றியமையாமையை வலியுறுத்தும் பொருட்பாலின் அதிகாரங்களாகும்.

      தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றணைத் தூறு மறிவு                     (396)

என்னும் குறள் இருகருத்துகளை முன் வைக்கிறது. ஒன்று, தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணி போல் மேன்மேலும் பயிலுதல் வேண்டுமென்பது. மற்றொன்று இவ்வாறு பயிலும் கல்வியே அறிவின் வாயில் என்பதாகும். அஃதாவது கல்வியின் வழியே எய்தப்பெறுவது அறிவு.

பண்டைய உரையாசிரியர் பலரும் நூல்களாலும் நுண்ணுணர்வாலும் அறிவு பெறுதல் கொண்டு புணர்ச்சி மகிழ்தலதிகார நிறைவுக் குறளுவமையை விளக்குவது பொருத்தமானதே.

மணக்குடவர் “இஃது அமையாமையின் கூற்று” என்றும்,

பரிப்பெருமாள் “இஃது அமைவின்மை கூறியது” என்றும்

பரிமேலழகர் “(தலைவன்) தன் ஆராமை” கூறியவாறு என்றும் நுட்பம் சுட்டுவர்.

கல்வியைப் ‘பருகுவன்’ அன்ன ஆர்வத் தனாகக் கற்க வேண்டுமென்கிறது நன்னூல் பொதுப்பாயிரம்(5). நீர்வேட்கையைப் பருகித் தீர்க்கும் ஆர்வம் கற்றலுக்கு உவமையாகிறது. வள்ளுவர் தீரா வேட்கையைக் காமத்திற்கு உவமையாக்குகிறார். இது வள்ளுவர் காட்டும் காமத்தின் மேன்மையை உணர்த்துகிறது.

புணர்ச்சி மகிழ்தலின் மேற்காட்டிய இரண்டு குறட்பாக்களும் (1107 & 1110) முறையே அறத்துப்பால், பொருட்பால், கருத்துகளை உவமையாக்கி மெய்யுறு புணர்ச்சியினது மேலான, நுட்பமான இன்பம் உணர்த்துகின்றன. எனவேதான் ‘மலரினும் மெல்லிது காமம்’ (குறள். 1289) என்றார் அவர்.

இக்குறட்பாக்களில் உவமையைப் பொருளாகவும், பொருளை உவமையாகவும் ஒன்றுக்கொன்று மாற்றாய் இருவயினிலையும் நிறுத்திக் காணலாம்.

       நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகம்…” 

என்னும் தொல்காப்பிய மரபியல் (91) நூற்பாவுரையில் இளம்பூரணர் “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கியொன்றாதல் போறல்” என்பார். மேலே விளக்கிய இரு குறட்பாக்களிலும் உவமையும் பொருளும் ஒன்றோடொன்று பிணைந்து – ஒன்று மற்றொன்றாய் ஒருங்கு மாறிக் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து – கலந்து நிற்கின்றன. இவ்வாறு உவமையும் பொருளும் கலந்து, இன்பத்துள் அறமும் பொருளும் மயங்கி நிற்பதே இக்குறட்பாக்களின் நயமாகும்.


முதன்மைச் சான்றாதாரங்கள்

1. கோபால கிருஷ்ணமாச்சாரியார், வை.மு.(ஆராய்ச்சிக் குறிப்புரையாளர்)  , 2009, திருக்குறள்,  உமா பதிப்பகம், சென்னை.

2. தண்டபாணி தேசிகர், ச. (உரைக்களஞ்சிய ஆசிரியர்), 1990,  திருக்குறள்

  உரைக்களஞ்சியம் - காமத்துப்பால், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

  

துணைச் சான்றாதாரங்கள்

1. இளம்பூரணர் (உரையாசிரியர்), அடிகளாசிரியர் (பதிப்பாசிரியர்), 2008, தொல்காப்பியம்

  இளம்பூரணர் உரை, (செய்யுளியல் நீங்கலாக) தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

2. சோமசுந்தரனார், பொ.வே (உரை விளக்க ஆசிரியர்), 1969, கலித்தொகை – 

  நச்சினார்க்கினியர் உரை, தி.தெ.சை.சி.நூ.ப. கழகம், சென்னை

3. Doniger, Wendy, 2013, On Hinduism, Aleph Book Company, New Delhi.


- 10.01.2016 அன்று எழுதிப் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.


No comments:

Post a Comment

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...