பள்ளியகரம் நீ.கந்தசாமிப்பிள்ளை (09.06.1898 - 18.06.1977) பெரிதும் அறியப்படாத பேரறிஞர் ; தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆழ் புலமையுடையவர் ; வேறுசில மொழிகளும் பயின்றவர்; அளவால் அன்றித் தரத்தால் தம்மை அறிஞராக நிறுவிக்கொண்டவர் .
சாமி வேலாயுதம் பிள்ளை தொகுத்துக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட 'மொழியரசி ' என்னும் நூலில் (1948) நீ.க. இயற்றிய தமிழ் வாழ்த்துப்பாக்கள் இடம்பெற்றன. அவற்றின் கீழ்,
இவர் தஞ்சையைச் சார்ந்த பள்ளியக்கிரகாரம் நீலமேகம்பிள்ளை புதல்வராய் 1898ல் பிறந்தவர் [தாயார் செளந்தரவல்லியம்மாள்]; தமிழ் ஆங்கிலக்கலை அறிஞர் ; கட்டிடக்கலை வல்லுநர்; கரந்தைத் தமிழ்ச்சங்க அமைச்சராய்ப் பல்லாண்டு சீர்பெற நடத்தியவர்; பள்ளியகரப் பழங்கதை முதலிய பல பாடலியற்றியவர். இது தமிழவள் நான்மணி மாலையின்யின் ஓர் பகுதியாகும்.
என்னும் குறிப்பைத் தந்திருந்தார் வேலாயுதம் பிள்ளை.
ஆனால் இதற்கு முப்பதாண்டுக்கு முன்பே அவர் புலமையுலகினுள் புகுந்துவிட்டார்; இதற்கு அடுத்த முப்பதாண்டுகளில் புலமைச் சாதனைகளால் தம்மைப் புலப்படுத்திக்கொண்டார்.நீ.க.வின் தந்தையார் கட்டிட ஒப்பந்தக்காரர். தந்தையார் வழியில் தாமும் அத்தொழிலில் ஈடுபட்டார் நீ.க.
தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சியப் பதிவு , நீ.க. ' எளிய குடும்பத்தில் பிறந்து முயற்சியால் உயர்ந்து நிலக்கிழாரானவர் ' என்கிறது. இது வறுமையிலிருந்து வளமை என்னும் விறுவிறுப்பான திரைக்கதைச் சட்டகம் ; உண்மையன்று.
மேலும் ,' தஞ்சைத் தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்;தம் சொந்த முயற்சியால் , தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று தெளிந்த புலமையாளராக விளங்கினர் ' என்றும் கூறுகிறது அவர் சொந்த முயற்சியால் பயில எளிய குடும்பப் பின்னணியல்ல ,அவரது இல்லத்தில் பன்னாட்கள் விருந்தாக வந்து தங்கும் வழக்கமுடைய , கல்வியாலும் செல்வத்தாலும் வளமான, சுற்றமும் நட்புமே காரணம்.
நீ.க.தமிழில் நிறுவன வழிப் படம் பெறாவிடினும், நேர வரம்பின்றி , ஆர்வம் உந்த, சுற்றமும் நட்பும் சூழ்ந்தளித்த பயிற்சியில் தேர்ந்தவர் .
' கம்பராமாயணப் பதிப்பும் நிலையும் ' என்னும் கட்டுரை அவரது கல்வி வரலாற்றுச் செய்திகளால் நிரம்பியது. இளமைக் காலத்தில் கேட்டுத் திளைத்த கம்பராமாயணப் பிரசங்கங்கள் பற்றி விவரித்து, பத்தாம் அகவையிலேயே தாமும் கம்பராமாயணப் பிரசங்கியாக விரும்பியதாகக் கூறியுள்ளார்.
நீ.க.வின் அம்மான் வகையினரும் திருவாவடுதுறை ஆதினம் பழனிமுத்துக்குமாரத் தம்பிரான், சாமிநாதக் கவிராயர் முதலியவர்கள் பால் தமிழ் பயின்றவருமான மல்லியம் துரைசாமிப்பிள்ளை நீக. இல்லத்திற்கு வந்திருந்தார். அவர் கம்பராமாயணத்தைப் புலமை நெறியில் கற்கும் இன்றியமையாமையை உணர்த்தி, கம்ப ராமாயணப் புலவர் என்றால் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பயின்ற திருவீழிமிழலைச் சாமிநாதக் கவிராயர்தாம் என்றார்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டவருள் தலையாய, பின்னர் அயல் நாடுகளுக்குச் சென்று வாணிகத்தால் செல்வம் பெருக்கிய, சாமிநாத பிள்ளை கம்பரிலிருந்து சில அரிய செய்திகளை எடுத்துக் கூறி எல்லோரையும் மகிழ்வித்ததாகவும் கூறுகிறார் நீ.க. அவர் சில நாட்கள் நீ.க. இல்லத்திலேயே தங்கிப் பல தமிழ் நூற் பகுதிகளைப் பாடம் நடத்தி அறிமுகப்படுத்தினார். பின்னர், புறப்படும்போது அவர் சொன்ன அறிவுரை :
இந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்ப்படிப்பு பலவாக மாறிவிட்டது. அறைகுறையெல்லாம் அம்பலம் ஏறிவிட்டது .ஊரைக்கெடுக்க உரை களும் புதிதாக எழுதி அச்சாகி வருகின்றன. தமிழுக்கும், உண்மையாகத் தமிழ் படித்தவர்களுக்கும் மதிப்பும் குறைந்துவிட்டது. அச்சிட்ட புத்தகங்களில் பாட்டு பாதி புத்தகமும் பிழைதிருத்தம் பாதியுமாகக் காணப்படுகிறது. சுத்தமான பதிப்புகள் குறைவாகவிருக்கின்றன. ஆகையால் நீ புத்தகங்களைப் படிக்கும்போது தானாகப் படித்துத் தடுமாறாமல் தகுந்தவர்களிடம் பாடம் கேட்டுக்கொள்... எந்தக் காலத்திலும் அச்சுப் புத்தகத்தில் காணுவதையும், ஆசிரியர் சொல்லுவதையும் ஆராய்ச்சி செய்து தெரிந்து மேலே படிப்பதுதான் நல்லது. காலம் மாறிவிட்டது; ஆகையினால் தமிழிலேயே பித்துக்கொண்டு ஆங்கிலப் படிப்பை அசட்டை செய்துவிடாதே.
இயல்பிலேயே கல்வியார்வம் கொண்டிருந்த நீ.க. ஆங்கிலத்தில் தேர்ச்சியடைந்து பிரஞ்சு, இலத்தின், சங்கதம் ஆகிய மொழிகளையும் பயின்றார்
அப்போது வீட்டிலிருந்தவர்களில் நீ.க.வின் பெரிய பாட்டனர் பெயரர்களில் இருவர் சென்னைக் கிருத்தவக் கல்லூரியில் பயின்று பி.ஏ.பட்டம் பெற்றவர்கள்.
ஒருவர் அக்காலத்து கிறிஸ்தவக் கல்லூரி ஆசிரியர்களில் ஒருவரான அறிஞர் லாசரஸ் (Dr. Lazarus) என்பவரின் முதல் மகளை மணந்து கிறித்தவ சமயத்தைத் தழுவியவர். இன்னொருவர் சூரியநாராயண சாத்திரியாருடன் ஒரு சாலை மாணாக்கராகப் பயின்றவர்.
அவர்கள் தங்களுக்கு ' மில்லர்(Dr. Millar) என்னும் தலைவர் சொல்லிக் கொடுத்த மொழி நூல்முறை, இலக்கிய ஆராய்ச்சி முறைகளை நீ.க. அறியும் அளவில் சொல்லி அம்முறைகளில் ஒரு சுவையை ஊட்டினர்.
திருவாளர்கள் வேங்கடசாமி நாயுடு, அவருடைய நண்பர் பட்டீச்சுரம் நாயுடு ஆகியோரிடம் பாடத் தேர்வு, ஓசை முதலியவற்றோடு கம்பராமாயணம் பயின்றார் நீ.க.
நீ.க.வின் தந்தையாரோடு பழக்கம் கொண்டிருந்த பாலசரசுவதி கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் கம்பராமாயணச் சொற்பொழிவாளர். அவர் 'எண் ணிலா வருந்தவத்தோன்" என்பதை "எண்ணில் +ஆ+வரும்+தவத்தோன்" , " எண் + நிலா +வரும்+தவத்தோன் ", "எள் + நிலா + அரும் + தவத்தோன் " என்று பல வழியாகச் சொற்களை உடைத்து இனிமையாகச் சொல்லித்தந்தார். நாயுடு நண்பர்கள் இம்முறையோடு உடன்படவில்லை.
நீ.க.வின் தந்தையாருக்கு நெருங்கிய கண்பராகிய அப்பாவு ஆசாரியார்
வாய்ப்பிருந்திருந்தால் இந்தியாவில் ஒரு எடிசினாக (Edison) விளங்கியிருக்கத் தக்க பேரறிஞர் என்கிறார் நீ.க. ஆசாரியார் மேல் நாடுகளிலும், அமரிக்காவிலும் வெளியாகும் அறிவு நூல், தொழிற் பயிற்சி முதலிய பகுதியவாய நூல்களையும், தாள்களையும், விடாது அவ்வப்போது பெற்றுப் படித்துத் தம் அறிவை மேம்படுத்திக் கொண்டவர்; நீ.க. இல்லத்தில் தங்கி , கொள்கை , செய்முறை ஆகிய இரு நிலைகளிலும் நீ.க.வுக்கு நவீன அறிவியலைக் கற்பித்தவர்.
இரவு, நீ.க. இராமாயணம் படிப்பதைப் பார்த்த ஆசாரியார் மிகவும் வருந்தி," அறிவு வளர்ந்து வன்மைபெறவேண்டிய இளமையில் பயனில்லாமல் இத்தகைய நூல்களை வைத்துக்கொண்டு காலத்தைக் கழிக்க விடலாமா?" என்று நீ.க.வின் தந்தையாரிடம் சண்டையிட்டார் ; நாயுடுவிடமும் கடிந்து கொண்டார் .
ஆசாரியாருடன் வந்திருந்த யாழ்ப்பாணத் துறவியொருவர் தமிழோடு ஆங்கிலம், கிரேக்கம் முதலிய மொழிகளிலும் வல்லவர்; ஆறுமுகநாவலர், சி.வை.தா. முதலியோரிடம் பழகியவர் ; மேல்நாட்டுப் பாதிரிமார்களிடமும் பயின்றவர். அவரிடமிருந்தே நீ.க. சங்க நூல்களின் பெருமை, சிந்தாமணி, நச்சினார்க்கினியர் உரை முதலியவற்றைப் பயில்வதன் இன்றியமையாமை ஆகியவற்றை உணர்ந்தார்.
இலக்கண அறிவு எவ்வளவு இன்றியமையாத தென்பதையும் , கருவிநூல் கருவியளவில் போற்றப்பட வேண்டுமென்பதை மறந்து, அதை முடிவாகக் கொண்டு பிதற்றல் பேதைமையின்பாற்படும் என்பதையும், தெரிந்து கொண்டார் நீ.க.
கம்பனைத் தெய்வமென உணர்த்திய வையை சுப்பிரமணிய ஐயர், உண்ணுஞ்சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையுமாகக் கம்பராமாயணத்தைக் கொண்ட சபாபதிபிள்ளை, பி.ஏ.முதலிய பலரைப் பற்றியும் விவரித்துள்ளார் நீ.க.
இவர்களிற்பலர் நீ.க. அவர்களின் தந்தையாருடைய விருந்தினராய் அவரது இல்லத்திலேயே நாட்கணக்கில் தங்கிச் செல்வரெனில் அக்குடும்பத்தின் செல்வ, கல்வி வளங்களை உணர்ந்து கொள்ளலாம்.
நீ.க.வின் பெரிய தந்தையாரும் , சிறுவராக உடன் சென்ற நீ.க.வின் தந்தையாரும் கால்டுவெலை நேரில் சந்திதித்த சுவையான நிகழ்ச்சியொன்றை,’கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும் ‘என்னும் கட்டுரையில் நீ.க. விவரித்திருக்கிறார்.
நீ.க. பிற்காலத்தில் அரும்பெரும் நூல்கள் பலவற்றை வரவழைத்துப் பயின்றார்; இல்ல நூலகம் ஒன்றை அமைத்தார்; தம் இல்லத்திற்கு அறிவகம் (House of Knowledge)என்று பெயர் சூட்டினார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் கரந்தைப் புலவர்கல்லூரி மாணவராயிருந்த காலத்தில் பல நாட்கள் நீ.க. இல்லத்திற்குச் சென்றுவந்தவர்; கட்டுரை முதலியவற்றை அவர் சொல்லச்சொல்லக் கேட்டு எழுதியவர் ; அவரது பன்மொழிப் புலமையை நேரிற் கண்டவர். நீ.க. இல்ல நூலகம் கவிஞரின் பார்வையில் :
மிகப்பெரிய வளமனை மாடியில் மிக நீண்ட அகன்ற கூடம் முழுக்க வரிசை வரிசையாக அணிவகுக்கும் புத்தகப்பேழைகள்: தமிழிலும் ஆங்கிலத்திலுமாக மிகப்பெரியனவும் இடைத்தரமானவும் சிறியனவும் சின்னஞ் சிறியனவுமாக எண்ணிலடங்காப் புத்தகங்கள்; எல்லாவற்றிலுமே அவரின் கண்கள் பட்டிருக்கின்றன என்பதற்குத் தடயங்கள் உண்டு. பருத்ததும் உயரம் குறைந்ததுமான உடலைக் கொண்ட நீ.க. அவர்கள் நினைத்த போதெல்லாம் மாடியேறுவதைக் குறைத்துக் கொள்வதற்காகவோ என்னவோ மாடியின் கீழேயும் மிகப்பெரிய அறையில் புத்தகப் பேழைகளும் அவர்க்குரிய மேசை நாற்காலிகள் முதலியனவும் உண்டு.
இயல்பாகவே தம் குடும்ப வழக்கத்தைப் பின்பற்றி விருந்து பேணலைத் தொடர்ந்த நீ.க. இல்லத்தில் தங்கிய பாவேந்தர் பாரதிதாசனும், "எத்தனை நூல் வாங்கிடுவான் எத்துணை நூல் கற்றிடுவான் !”என்று நீ.க.வின் நூல் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை நேரில் கண்டு பாட்டில் பதிவு செய்துள்ளார்.
புதுச்சேரி , பிரஞ்சு – இந்தியக் கலைக்கழகத்திற்கு இந்தியத் தலைமையமைச்சர் வருகை தந்தபோது , நீ.க.நிகழ்த்திய உரையாடல் பற்றியும் ஈரோடு தமிழன்பன் எழுதியுள்ளார்.
1910ஆம் ஆண்டு , ஆறுமுக நாவலரின் மாணவரான கரந்தை வித்துவான் சாமிநாதபிள்ளை வித்தியா நிகேதன சபை என்னும் தமிழ்ச் சங்கமொன்று தொடங்கினார். 1911 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றியது. அகவை காரணமாக இச்சங்கங்களில் நீ.க. உறுப்பினராக இயலவில்லை. ஆனாலும் தொண்டராயிருந்து பணிபுரிந்தார் ; புலவர் பெருமக்களின் உரைகளைக் கேட்டு இன்புற்றார்; அவர்களோடு பழகி நட்புப் பூண்டார். தம் பத்தொன்பதாம் அகவையிலேயே தயங்காமல் அரங்கேறினார் நீ.க.
முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ‘கம்பராமாயணம்' என்னும் தலைப்பில் ஒரு சொற்பொழிவு செய்தேன். அக்காலத்தில் கரந்தையில் சொற்பொழிவு செய்தல், தமிழறிஞர்களால் ஒரு பேறாகக் கருதப்பட்டது. தலை சிறந்த புலவர்களும் சங்கக்கூட்டத்தில் கேள்விகளுக்கு விடை கூற முடியாமல் தடுமாறியதுண்டு எடுத்துக் கொண்ட நூலில் அகரமுதல் னகர விறுவாய் கைவரப் பெற்றவரே அரங்கருகே செல்ல எண்ணுவர். அரை குறை யெல்லாம் அஞ்சும்.
பின்னர்க் கரந்தைத் தமிழ்ச் சங்க அறிஞர் குழாத்துள் ஒருவரானார் ; 1938இல் கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாப் பொறுப்பேற்று நடத்தினார் ;
தமிழ்ப் பொழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்; சங்க அமைச்சராகவும் (1941 - 44), தொடர்பாளராகவும் ( 1942 - 45)திகழ்ந்தார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,பிரெஞ்சு இந்தியக் கலைக்கழகம்,சரசுவதி மகால் நூலகம்,சித்த மருத்துவ ஆலோசனைக்குழு, கலாசேத்திரா, உ.வே.சா. நூலகம் எனப் பல்வேறு நிறுவனங்களில் பொறுப்பு வகித்து ஆக்கமிகு பணிகளை ஆற்றினார்.பிரகதி என்னும் பெயரில் திரைப்பட நிறுவனமொன்றை நடத்திப் பொருளிழப்புக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
படைப்புகள்
ஆய்வுக் கட்டுரைகள்
எனக்குக் கிடைத்தவற்றுள் காலத்தால் முந்திய கட்டுரை ’தொல்காப்பிய மரபியல் ‘.தொல்காப்பிய மரபியலுள் காணும் ஒட்டகம் ( நூ.௧௮ & ௫௨), ஞாபகம் (இறுதி) ஆகிய சொற்கள் சங்கவிலக்கியங்களில் காணப்பெறாமை கொண்டு அவை இடைச்செருகல்களாயிருக்கலாம் என்னும் ஐயத்தை முன்வைத்துள்ளார்.
உரையாசிரியர்கள்தாமும் பாடவேறுபாடுகள் , பாடத் திரிபுகள் பற்றியும், பண்டு வழக்கிலிருந்து பின்பு வழக்கொழிதல் பற்றியும் பேசியிருப்பதை எடுத்துக்காட்டி, மிகுந்த பணிவுடன் முடிவு காணும் பொறுப்பை அறிஞர் பெருமக்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்.
நீ.க.வின் இக்கட்டுரை ஒரு தகவற்பிழையைக் கொண்டுள்ளது. ஒட்டகம் என்னும் சொல் பாட்டும் தொகையுமாகிய பழந்தமிழ் நூல்களில் இல்லை என்கிறார் நீ.க. அரிதினும் அரிதாக அகநானூற்றிலும் (245:18),சிறுபாணாற்றுப்படையிலும் (154)அச்சொல் காணப்படுகிறது.
நீ.க. எழுப்பிய இடைச்செருகல் பற்றிய ஐயம் சரியானது. ஆய்வுகளும் நிகழ்ந்துள்ளன.
பிற்காலத்தில் நீ.க.தலைமையில் நிகழ்ந்த பெரும்பணியாகிய பழந்தமிழ் நூற் சொல்லடைவு இத்தகு தகவல் தடுமாற்றங்களைத் தவிர்க்க உதவியது.
மாணவர்களுக்காக எளிய நிலையில் ‘ ஊர் வாழ்க்கை ‘ , ‘ தமிழ்நாட்டு வரலாறு ‘ முதலிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
அவருடைய ஆய்வுக்கட்டுரைகளிலேயே – ஏன் தமிழில் இன்றளவும் வந்துள்ள ஆய்வுக்கட்டுரைகளிலேயே – உச்சியில் வைத்து மெச்சத் தக்கது , ' கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும் ‘.
வரலாறு என்பது வறட்டுத் தகவல் தொகுப்பன்று ; காலமும் மக்களும் சார்ந்த உயிர்ப்பு என்பதை நிறுவும் கட்டுரை அது.
வியத் (Rev.J.L.Wyatt), தானியேல் சாந்த் போர்த் ((Sir Daniel Sandford), அந்தர்சன் (Robert Anderson), இரேனியூஸ் (Rhenius), பிரவுன் (Charles Philip Brown ), எல்லீசு (Francis Whyte Ellis), காமெல் (A.D.Campell), துரு (Rev.W.H.Drew), பவர் (Rev.Henry Bower), அந்தர்சன் (John Anderson), தாம்ஸன் கிளார்க் (Thomson Clarke ), பவல் (Eyre Burton Powell), சுவார்த்(Rev.Schwartz), ஹாய்சிங்டன் (Hoisington), திரேசி (Rev.Dr.W.Tracy), அவர் மகன் திரேசி (Rev.J.E.Tracy), சாந்தலர் (Rev.Sandler), சத்தர் (Schudder M.D.), வித்னி (Wm.Dwight Whitney ), போப்பையர் (Rev.G.U.Pope), சச்சந்தர் (Edward Sargent ), மால்த்(Rev. Charles Mault), ரெனான் (Ernest Renan), பாப் (Franz Bopp), கிரிம் (Jacob Grimm), இராஸ்க் (Rasmus KristianRask), மாக்ஸ் மூலர் (Max Muller), கிரால் (Dr Graul), வால்ற்றர் ஜாயீஸ் (Walter Joyes), கால்டுவெல் குடும்பத்தினர், நைட் (Rev.Knight),ஸ்பால்டிங் (Spaulding ), வின்ஸ்லோ (Rev.M.Winslow), பர்சிவல் (Rev.P.Percval), பர்னல் (Dr A.C.Burnel), ஹாப்ஸன் ஜாப்ஸன் (Hobson Jobson), யூல் (Sir H.Yule), நெல்சன் (Nelson), லோகன் (Logan), பர்ஜஸ் (JamesBurgess), லெவிஞ்ச் (Vere Henry Levinge) என அவர் தரும் ஐரோப்பிய – சில அலுவலர் நீங்கலாக – அறிஞர் பெயர்களும் தொடர்புடைய விவரங்களும் மலைக்க வைப்பவை.
அறிவியலுக்குட்பட்ட வரையறைகளுடனும் முறையுடனும் நெறிப்படுத்தப்பெற்ற மொழி நூற்பயிற்சி தொடங்கிய காலத்தில் செருமானியரே முன்னேறி வந்தனர். ஆங்கிலப் பல்கலைக் கழகங்களில் இத்துறை வல்லார் அருகியே காணப்பட்டனர். அவருள் ஒருவர் ஒப்பியல் மொழி நூற் புலமையாளரும் கிளாஸ்கோ பல்கலைக்கழகக் கிரேக்கப் பேராசிரியருமான சாந்த் போர்த் என்று அறிமுகப்படுத்தி, அவரிடம் பயின்றவர் கால்டுவெல் என்பார் நீ.க.
அறிஞர் கிரால் தமிழ் வினைப்பகுதிகள் அடையும் விகாரங்களைப் பன்னிரு கணங்களாகப் பிரித்து விளக்கியிருப்பதையும் , சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியின் முதற்பதிப்பாசிரியர் சாந்தலர் அக்கணங்களை ஏற்று அவற்றுள்ளும் அடங்காதவற்றைப் பதின்மூன்றாவது கணமாக அமைத்ததையும்,
பேரா.மு.இராகவையங்கார் அவற்றைச் சூத்திரங்களாக்கி உரை வரைந்து வெளியிட ஆயத்தமாக வைத்துள்ளதையும் , பேரா.தெ.பொ.மீ.யின் ஆய்வு மாணவர் வினைத்திரிபுகளை அட்டவணை செய்திருப்பதையும் சொல்லிக்கொண்டு போவார் நீ.க.
மேலையர் மட்டுமன்றித் தமிழக, இலங்கை அறிஞர் பற்பலர் பற்றியும் இவ்வாறே அறிமுகப்படுத்துவார்.
தேவைக்கேற்ப ஒவ்வொருவர் பின்னணி, பணி, பங்களிப்பு எனச் செறிவாகவும் தெளிவாகவும் அவர் அறிமுகப்படுத்தும்போது , அறிஞர்களின் வெற்றுப் பெயர் உதிர்ப்பாக அன்றி , தொடர்புடைய யாவற்றையும் உற்றுணர்ந்து கற்றுப்பெற்ற அவரது புலமை புலனாகும்.
நயம் பாராட்டல்
உலகளாவிய இலக்கியப் பெரும் பரப்பையும் , காலத்தாலும் இடத்தாலும் அவைதம்முள் எண்ணற்ற வேறுபாடுகள் கொண்டிருத்தலையும் சுட்டி,
‘ஆழ்ந்து நோக்குவோமாயின், அவை யாவும் பொதுவான சில பொருள்களையே வேறுவேறு வகையாகக் கூறுகின்றனவோ என்ற எண்ணம் தோன்றாமற் போவதில்லை. அவ்வெண்ணந்தானும் உண்மைக்கு அண்மையதேயாம்.’
என்று விவாதப்போக்கில் தொடர்கிறது 'கம்பரும் மக்கள் உள்ளமும்,‘என்னும் கட்டுரை.
இலக்கியப் பொருள் யாவற்றையும் உள்ளத்தே நிகழ்வன, புறத்தே நிகழ்வன என்னும் இரண்டனுள் அடக்கிவிடலாம் என்கிறார்.
திருவாதவூரர், நம்மாழ்வார், தாயுமானவர் முதலிய அருளாளர் அகநிகழ்வுகளைச் சொல்லில் வடிப்போர் எனவும், கம்பர் முதலியோர் உலகப் பொருள்களையும் பல்வேறு மாந்தர்தம் உள்ள நிலைகளையும் பாடுவோர் எனவும் வகுத்துக்கொண்டு மாந்தரைப் படைத்து உலவவிடும் கம்பரின் திறத்தை இக்கட்டுரையில் காட்டுகிறார்.
மதிப்புரை
கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் என்னும் வடமொழி நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வந்தது. மொழிபெயர்த்துப் பதிப்பித்தவர் திரு. எஸ். திருவேங்கடாச்சாரி. இந்நூலுக்கு நீ.க. எழுதிய மதிப்புரை, ஒரு குறுநூல் என்னுமளவில் தமிழ்ப் பொழிலின் ஏழு இதழ்களில் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.
விசயநகரப் பேரரசின்அரச குடும்பத்துப் பெண்கள் பலர் கவிஞர்களாக விளங்கியுள்ளார்கள். அவர்களுள் கங்காதேவி என்பவர் முதலாவதாக வைத்து எண்ணக்கூடியவராவார். இவர், விசய நகரப் பேரரசைத் தோற்றுவித்த முதல் அரசர்களுள் இரண்டா வதான பொக்கணவுடையாரின் மகன், குமார கம்பண்ணவுடையாரின் மனைவி . இவர் எழுதிய வடமொழிக் காப்பியமான ‘மதுரா விஜயம் அல்லது கம்பண்ண ராய சரித்திரம்' என்பது, இவருடைய கணவனான குமார கம்பண்ணவுடையாரின் வாழ்க்கையைக் கூறும் வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கும் சுவைமிகுந்த இலக்கியம் என நீ.க. நூலை அறிமுகப்படுத்துகிறார். தொடர்ந்து,
இவ்வாசிரியை பொதுவாகக் கூறும் சில இலக்கியப் பண்புகள், இலக்கிய ஆராய்ச்சிக்கு அடிப்படையான குறிப்புகளாக இருக்கின் றன.
'நற்குணமுடையாளேனும் அழகில்லாதவள் தன் கணவன் உள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்காததுபோல, குற்றமில்லாத கவியாயினும் இனிய பண்புகள் இல்லாவிடில் கற்றோரை மகிழ்வியாது
"கானகத்திலுள்ள மாங்கனியை விரும்பாது வேம்பையே விரும்பும் காகம்போல, கயவர்கள், செய்யுளிலுள்ள குணங்கள் மதியாது குற்றங்களையே தேடுகின்றார்கள்".
"அளவை நூல்வல்லார் பலர்; இலக்கணப் புலவர் ஆயிரக் கணக்கினர்; இனிய கவிகளால் இன்பம் அளிக்கும் கவிகளோ?-- எங்கோ ஒருவர்" என்பன அக்குறிப்புகளுள் சிலவாம்.
இவ் ஆசிரியை பலவகை அணிகளுடன் இந்நூலைச் செய்துள்ளார்; எடுத்துக்காட்டாக ஒரு உவமையைப் பார்ப்போம் : குமார கம்பண்ணனின் காளைப்பருவத் திருமுகத்தில் அணல்[தாடி]அரும்பிய பொலிவை, "திங்களின் நடுவில் அமைந்த கறையை அவ்விடத்தினின்றும் விலக்கி விளிம்பில் ஒரு கோடாகச் செய் யக்கூடுமானால் அவ்வாறு நடுக்கறை நீங்கி விளிம்பளவே கறுமை தோன்றும் திங்கள், அவன் திருமுகச் செவ்விக்கு ஒப்பாகும்" என உவமிக்கின்றார். இது சிவப்பிரகாசர், அல்லமனின் திருமுகப் பொலிவை விளக்கும்
விளிம்புற நடுக்களங்கம் வீழ்ந்துசூழ்மதியொன்றுண்டேல்
வளங்கெழு மயிரொழுங்கு வள்ளல் வாண்முகம் நிகர்க்கும்
எனக்கூறும் பாடற் பகுதியோடு ஒப்ப நோக்கி மகிழக்கூடியதாகும். இவ்வாறே, அணல் விளங்கும் திருமுகச் செவ்வியை வியந்து இக்காலப் புலவரொருவர் பாடிய "மயிர்த்த முழுமதி'' என்னும் சொற்றொடரும் இடையே நினைவுக்கு வருகிறது என இலக்கிய ஒப்பு நயங்காட்டுகிறார்.
இலக்கிய நயம் மட்டுமா வடமொழி நூற் சுவடி விவரம், வடமொழி நூல் முதன்முதலில் அச்சேறிய விவரம், நூலிலுள்ள நிகழ்ச்சிகளின் வரலாற்றுப் பின்புலம், கல்வெட்டு - இலக்கியச் சான்றுகள்,இவற்றின் வழி மேலும் ஆராய்வதற்குரிய வினாக்கள் , கருதுகோள்கள் முதலிய பலவும் அணியணியாய்த் திரண்டு நிற்கும் இம்மதிப்புரை , நீ.க.வின் புலமைப் பரப்பால் ஓர் ஆய்வுக்கட்டுரையாகத் திகழ்ந்து நம்மை இடையறா வியப்பிலாழ்த்தும் .
மறுப்புரை
சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீஇராமகிருஷ்ணமடத்தின் திங்கள் வெளியீடாகிய ஸ்ரீஇராமகிருஷ்ண விஜயத்தின் பதினேழாம் தொகுதி ஐந்தாம் பகுதியில் அதன் ஆசிரியரால் எழுதப்பெற்று வெளிவந்த, 'திருக்குறளும் உபநிஷ தங்களும்' என்னும் கட்டுரைக்கு ' திருக்குறளும் உபநிஷதங்களும்(ஒரு மறுப்பு)’ என்றே தலைப்பிட்டு மறுப்புரை எழுதியுள்ளார் நீ.க.
விஜயவாசிரியர் தம் கட்டுரையை (I) எல்லார்க்கும் சொந்தம் (2) வேதவேதாந்தம் (3) கோணலான கூற்றுகள் (4) அறம் (5) பொருள் (6) இன்பம் (7) நூலமைப்பு என்று எழுவகை யாக வகுத்துக்கொண்டு, ... தமிழ் மக்களிடை வழங்கும் திருக்குறளை மட்டும் பொதுமறையெனக்கூறி, வடமொழிப் பயிற்சியின்மையான் நான்மறையின் முடிவாயிருக்கும் உபநிஷதங்களை அவ்வாறு கூறாதது பொருத்தமன்றனவும்; முடிவான தத்துவத்தை விளக்குவதில் திருக்குறள் உபநிடதங்களுக்கு ஒப்பாகாதென்பதை விளக்குவதே தம் நோக்கமெனவும், உலகின் தோற்றம், ஒடுக்கம், தொடர்பு, வெளிப்படையான மாறுபாடுகளின் அடிப்படையான மாறாவியற்கை முதலியவற்றை ஐயம் திரிபற விளக்குவன வேதமெனவும், திருக்குகள் அவ்வாறு விளக்காததோடு வீட்டைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையென்றும், உபநிடதங்களால் கடியப்பெற்ற 'காமம்' ஓர் பகுதியாகவமைந்துள்ளமையால் அப்பகுதி எவகும் படிப்பதற்குக் கூடா இழிவுடைய தென்றும், உபநிடதங்கள் எழுந்ததோருயர்ந்தவுள நிலையில் திருக்குறள் எழவில்லையென்றும் வீட்டின்பாலைக் கூறியிருப்பாரேல் திருக்குறள் உபநிடதங்களை வென்றிருக்கும் என்றும் எழுதுகிறார்.
என முதலில் பரபக்கத்தை முன்னிறுத்தித் தம் சுபக்கத்தை விளக்கும் முறையில் இம்மறுப்புரை அமைந்துள்ளது . குறிப்பாகத் திருக்குறள் வீடு பற்றியும் கூறியிருப்பதை அகச்சான்றுகளாலும் அருளாளர் மேற்கோள்களாலும் நிறுவுகிறார். அடுத்துக் காமத்துப்பால் என்பது வடமொழியிலுள்ள காமக்கலை நூல்களின் வேறானதென விளக்குகிறார்.
பட்டறிவுக்கட்டுரை
‘ கம்பராமாயணப் பதிப்பும் நிலைமையும் ‘ என்னும் கட்டுரை இளமை தொட்டுத் தொடர்ந்த கம்பராமாயண ஈடுபாட்டையும் , கல்விப் பின்புலத்தையும் பட்டறிவு தோய விளக்கும் கட்டுரையாகும். இஃது ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் கம்பராமாயணம் பயிலப்பட்ட முறைகள் பலவற்றையும் விவரிக்கிறது. யாழ்ப்பாணச் சைவர்தம் கந்தபுராணப் பயில்வுக்கு மாறாக, தஞ்சைச் சைவ வேளாள மரபினர் கம்பராமாயணத்தோடு இணக்கம் கண்டதை இக்கட்டுரை நன்கு புலப்படுத்துகிறது.
இத்தகு கட்டுரைகளில் காணப்படும் பல தகவல்களும் நிகழ்ச்சிகளும் சுவையானவை.
நான் பார்த்த காலத்தில் அச்சுப் புத்தகங்கள் வந்திருந்த போதிலும் அவற்றை வைத்துக்கொள்ளுவதில்லை. கடிதம், அட்டை, கட்டில் கலந்துள்ள தோற்றுண்டு, துணி முதலிய, வழிபாட்டுக்குப் புறம் பானவையென்பது அவர்கள் கருத்து. மேடையில், உயர்ந்த இடத்தில் ஒரு வேலைப்பாடமைந்த பலகையும், அதைச் சூழ்ந்து துளவமாலை மலர் மாலைகளும், அதற்கெதிரே பழத்தட்டுகளும், தீம்பாற்கலங்களும், கற்கண்டு குவியல்களும், ஆராதனைக்கான சுண்டல், கடலை, சில சமயங்களில் பண்ணியம் முதலியனவும் ஒரு உயர்ந்த இருக்கையும் காணப்பெறும்; இங்கு காணப்பெறும். இருக்கை, இராமகாதையில் பெருவிருப்பினராய சிறிய திருவடி அமர்ந்து கேட்பதற்கென்பது தோற்றம்.
எனத் தாம் சிறுவராயிருந்த காலத்திய கம்பராமாயணப் பிரசங்கம் சார்ந்த சடங்கு பற்றிக் கூறுகிறார்.
நீ.க. தம் ஒன்றுவிட்ட அண்ணன் பகிர்ந்துகொண்ட , கிருத்துவக் கல்லூரி ஆசிரியர் முனைவர் இலாசரஸ் அவர்களின் வேடிக்கையொன்றைப்பதிவு செய்துள்ளார்
[ ஒரு சமயம் ] சின்னசாமிபிள்ளை தன் புத்தகத்தில் எதோ அடித்துக்கொண்டிருந்ததைப்பார்த்து "ஏன் தங்கம் கலந்து விட்டதோ ?" என்று கேட்டார். பிள்ளை திகைத்தார். "அன்று வெள்ளி கலந்திருக்கிறது என்றார்களே, இன்று தங்கம் கலந்து விட்டதோ என்று எண்ணினேன்" என்று இயற்கையான பெருமிதப் புன்சிரிப்புடன் சொன்னார்.
இடைச் செருகல் பாடல்களை, வெள்ளியம்பலத் தம்பிரான் என்பவர் செருகினார் என்று கருதப்பட்டது. எனவே அவற்றை வெள்ளிப்பாடல்கள் என்பர். வெள்ளி என்பதன் நேர்ப்பொருளை வைத்து சொல் விளையாட்டு நிகழ்த்தியிருக்கிறார் இலாசரஸ்.
நூல்
தமிழில் அவர் எழுதிய ஆய்வு நூலாக எதுவும் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் அவரெழுதிய, History of Siddha Medicine நூல்வன்மைக்குச் சான்றாக நிலவுகிறது. அது 928 பக்கங்கள் கொண்டது.அதன் உள்ளடக்கப் பக்கத்தைப் பார்த்த அளவிலேயே அவரது உலகளாவிய பார்வையை உணரலாம்.
1.Introduction
2.Primitive Medicine
3. Egypt
4 Mesopotamia
5.Greece
6. Byzantine Medicine
7. Chinese Medicine
8. Persian and Arabian Medicine
9 .The Middle Ages (1096 1438)
10. The Renaissance
11 Seventeenth century
12.Eighteenth century
13. Nineteenth century
14. Twentieth century
15 Ayurvedha
16. Tamilnadu in ancient and historical times
17.Siddhas in General
18. Agasthiyar
19.Tiruvalluvar
20.Tirumoolar
21. Eighteen Siddhars
22.Siddha Medical works in Tamil
23. Siddha Medical works In other languages
24.Siddha Medicine through the ages.
25, Siddha Medicine through the ages Part - II
26 Siddha Medicine in Twentieth Century
27.Introduction to Siddha Science
28. Conclusion
இலக்கியம்
தனிப்பாக்கள்
நீ.க.வின் தனிப்பாக்கள் சிலவேயாயினும் அவை அவரது பாத்திறனை மதிப்பிடப்போதுமானவை. உணர்வும், நயமும் பொதிந்த அவரது தமிழ் வாழ்த்து பலராலும் எடுத்தாளப்படுவதாகும்.
பொதுவாக இரங்கற்பாக்கள் அவல உணர்ச்சி மீதூர்ந்தவை. ஆனால் பாத்திறமற்றோர் புனைந்தால் அஃது இலக்கியமாகவன்றி வெறும் செய்யுளாகவே எஞ்சும். மாறாக நீ. க. 22.06.1956 அன்று இறைவன் திருவருளிற் கலந்த தம் மகளின் நினைவாகப் பாடிய
ஆறத்துயர் ஆற்றும் அறம்வளர்த்தநாயகியே
மாறத்துயருற நான்காணா மறைந்தனையே
நீறாகவென்னை நெருப்பெரிக்கும் காலத்தும்
பேராதுநெஞ்சம் பிரியாது உன்நினைவே
என்னும் பாட்டின் ஈற்றடிகள் , கல்மனமும் கரைந்துருகச் செய்வன.
பொங்கும் அவரது அவல உணர்ச்சிக்கு இடையூறின்றி யாப்பும் இயைந்து நிற்கிறது.
மொழிபெயர்ப்பிலும் மூலத்தோடு முரணாமல் பாநயமும் மிளிர வேண்டும் என்பது அவர் கொள்கை.
தொடர்நிலைச் செய்யுள்
தொடர்நிலைச்செய்யுளியற்றும் திறமுடையவர் என்பதற்கு மாதிரிக்காட்டாகக் கிடைப்பது அவரது ‘ பள்ளியகரப் பழங்கதை ‘ யொன்றே. இதனைப் பகடி இலக்கியம் என இனங்கண்டு அலசி ஆய்ந்த ஆ.இரா.வேங்கடாசலபதி, " புராணப் பகடியின் உச்சம் என்பது பள்ளியகரப் பழங்கதையே " என்கிறார்.
நூலின் வரலாறு
இவ்வருள்நூல், மெய்யறியா முனிவர் என்னும் பெரியாரால் முதலூழியின் முதலிலேயாக்கப்பட்டதாகக்கூறுவர். இந்நூல், முதன்முதலாக, நான்முகன், மால், இந்திரன் முதலியோர் மறைந்துநின்ற வூழியின் முடிவிலே சிவபெருமான் தனித்து யாழ்வாசித்து இன்புற்றிருக்குங்கால் அவ்யாழொலியில் பிறந்ததெனக் கூறுவாருமுளர். இது பல்வகைப் பாக்களாலமைந்து எண்பத்திரண்டு நூறாயிரத் தெழுநூற்றுத் தொண் ணூற்று நான்கு செய்யுட்களையுடையது எனவுங் கூறுவர். போது நமக்குக் கிடைத்துள்ள பிரதியொன்றில் காணப்பெறுவன நூற்றெண்பத்து நான்கு முழுச்செய்யுட்களும், பலசெய்யுட் ளின் அடிகளும், தொடர்களுமேயாம்.
இவ்வருணூலுக்குக் கயவமாமுனிவர் என்னும் பெருந்தகை வகுத்துரைத்ததோர் சிற்றுரையுங் காணப்பெறுகின்றது. இச்சிற்றுரையை நோக்குங்கால் "கந்தமாபாடியம்" பெயரோடு பேருரையொன்றுங் காணப்படுகிறது. அவ்வுரை இதுபோது கிடைக்கப் பெற்றிலேம்.
என்று தொடங்கி,
நாய்முனிவன் நல்லுரை
கள்ளம் அறியா வுள்ளத் துறைவே
வள்வெள் வள்வெள் வெள்வள் வெள்வள்
உரை:- வள்வெள் என்னுத் தொடரை வள்ளெனவும் வெள்ளெனவும் பிரித்து உள்ளம் முதலிய சொற்களோடு கூட்டிப் பொருள் காண்க. வள் உள்ளம் வெள் அறியா என இவ்வாறு பன்னூறுகூட்டிப் பொருள் காண்பர். பின்னிரண்டி நாய்முனிவனது ஒலிக்குறிப்பு. இவை மறை. பிற்காலத்துப் பரிபாட்டுள்ளும் ஏ* எனுஞ் சொல் ஒளியாய் மறையெனும் பொருளதாயிற்று. நாய்முனிவன் இவ்வாறு கூறியதைக் குரைத்தலென்னுஞ் சொல்லானும் விளக்குவர். "குரையென் கிளவி மறையுமாகும்" என்றார் பிறரும். அறிவுமேம்பட்டோ மெனக்கருதி ஆராய்ச்சியெனும் பெயரால் தம்முளங்கொண்டதெல்லாம் பிதற்றும் அறிவிலிகளிற் சிலர் நாய்முனிவன் எம்பிரான்றிருவருளிற் றிளைத்துக் குரைத்தானல்லன் ஆண்டவன் திருமுடியின் திங்கள் கண்டே குரைத்தானெனக் கூறுவர். அந்தோ மடமை ! இதுகொள்ளற்க
என்று புராணத்தையும் உரையினையும் நிறைவு செய்கிறார் . இறுதியில் உண்மையுணர்த்தும் குறிப்புடைய இரு பாக்களுடன் நூல் நிறைகிறது. பகடிக்குப் புலமை இன்றியமையாதது. பகடி வெற்று எள்ளலன்று.
[* ஏ இனகிளத்தலி னினைமைநற் கறிந்தனம் (பரிபாடல்.3:62 ).பரிமேலழகர் தரும் பொருளும் குறிப்பும் : நின்னைச் சாமவேதம் இத்தன்மையெனச் சொல்லுதலின் இத்தன்மையை விளங்க அறிந்தனம்.உபசாரவழக்கால் ஏஏ என்னும் இசையுடையதனை ‘ஏஏ’ என்றார் ]
பணிகள்
மொழிபெயர்ப்பு
Thomas Gray என்பார் இயற்றிய Elegy Written in a Country Churchyard என்னும் 32 செய்யுள்கள் கொண்ட நெடும்பா அச்சில் ஏழு பக்க அளவினது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கியபோது அது தாமஸ் கிரேயின் வாழ்க்கை (68 பக்),சிறப்புப்பெயர் அகராதி (12பக்.),பாட்டின் பண்பு (20 பக்),இரங்கற்பா மொழிபெயர்ப்பு செய்யுள் குறிப்புரையுடன்(20பக்), ஆங்கிலமூலம்(07பக்), மொழிபெயர்ப்பு (60பக்) என ஏழு பகுதிகள் கொண்ட 185 பக்க நூலாயிற்று.
தாமஸ் கிரேயின் வாழ்க்கை என்னும் இயல் சான்றுகளின் அடித்தளத்தில் விரியும் சுவையான வாழ்க்கை வரலாறு. மொழி பெயர்ப்பு என்னும் இயல் அதுவரை தமிழில் வந்துள்ள மொழியெர்ப்புக்கொள்கை ஆக்கங்கள் அனைத்தையும் அலசும் ஆய்வுரை. மொழியாக்கப் பகுதியில் தரப்பட்டுள்ள குறிப்புகள் துல்லியத்தை நோக்கிப் படிப்போரை இட்டுச்செல்வன.
Beneath those rugged elms, that yew-tree's shade,
Where heaves the turf in many a mould'ring heap,
Each in his narrow cell for ever laid,
The rude Forefathers of the hamlet sleep(4) என்பதன் தமிழாக்கம் அடிக்குறிப்புகளுடன் ... :
அந்தமுருட் டெம்மடியில், ஆங்குள யூ மாநிழலில்,
அறமடிமட் குவைபலவா யலையெழுபைம் புற்றரையில்
தந்தமது சுருங்கறையி லிடப்பட்டே யென்றும்
தண்ணடையின் முந்தைமுழு மக்கள் துயில்கின்றார்(௪)
________________________
அந்தமுருட்டெம்மடியில் அந்த+முருட்டு+எம்+அடியில்.
எம் ஆங்கில நாட்டிலுள்ள ஒருவகை மரம்.
ஆங்குளயூ ஆங்கு + உள்ள +யூ.
யூ ஆங்கில நாட்டிலுள்ள ஒருவகை பசிய மரம்; கல்லறை களின் அருகில் அழகுக்காக
வைக்கப்பெறுவதால் சாக்காட்டுடன் இணைந்து நினைவுக்கு வருவது.
சுருங்கறை சுருங்கிய இடமுள்ள கல்லறை.
தண்ணடை சிறு ஊர்,
முழு மக்கள் செம்மைபெறாத மக்கள்
தண்ணடை என்பது சங்க இலக்கியங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. முழுமக்கள் என்பது செம்மைபெறாத மக்கள் என்னும் பொருளில் அறநூல்களில் அரிதாக இடம்பெற்றுள்ளது.இத்தகு அருஞ்சொல்லாட்சிகள் நீ.க.வின் புலமை புலப்படுத்துவன மட்டுமன்றித் தமிழாக்கத்துக்குச் செவ்வியல் மதிப்பைச் சேர்ப்பனவுமாகும்.
கட்டுரையில் மேற்கோள் காட்டும் விவிலியத் திருமொழியையும் பாவடிவில் தமிழாக்கியுள்ளார் நீ.க.’ கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும் ‘என்னும் கட்டுரையில் அவரது தமிழாக்கம்:
The night is far spent, the day is at hand; let us therefore cast off the works of darkness, and let us put on the armour of light.' - Romans 13:12
கங்குல் கழிந்தது காண்! காலையுங் கையது காண்
காரிருட் செயல்களெலாங் கழற்றி எறிவோமே;
பொங்கொளி போர்க்கவசம் போர்த்து செயல் புரிவோம்;
புண்ணியன் ஏசுவினை நண்ணிய வாழ்வீரே
அவர் மறைந்து பல்லாண்டுகள் கழிந்து(2008) அவரது நற்றிணை ஆங்கில மொழிபெயர்ப்பை , பிரஞ்சு-இந்தியக் கலைக்கழகம் வெளியிட்டது. அது உரைநடையிலமைந்தது.
பதிப்புத்திட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கருதிய அதிகாரப்பூர்வக் கம்பராமாயணப்பதிப்புக்குரிய ஆலோசனைகளை வரையறுத்து 1952 - 53இல் அப்போதைய துணைவேந்தர்களுக்குக் கடிதங்களாக எழுதியுள்ளார். தமிழாய்வுத் துறைக்கான உத்தேசச் செயல்திட்டத்தையும் வகுத்தளித்துள்ளார். இவை யாவற்றையும் ஒன்றாகத் தொகுத்து அந்த அறிக்கைகளை ஒற்றை முகப்புப் பக்கத்துடன் ஓர் ஆவணமாகத் தமிழ்ப் பொழில் (30:04 . 1954 சூலை)இதழில் வெளியிட்டுள்ளார்.
திட்டவரைவின் உள்ளடக்கம் :
1.AIM
2.PRELIMINARY
3.INTERMEDIATE
4.FINAL
PROBABLE SOURCES OF FURTHER MANUSCRIPTS
I.FOREIGN
II.PROBABLE CEYLONESE SOURCES
III. NORTH INDIAN SOURCES
IV. LOCAL SOURCES
a) MADRAS
b) CHOLA NADU
c) PANDIYA NADU
d) CCHERANAD
e) Miscellaneous
MATERIALS FOR CORROBORATION
METHOD OF RECORDING DIFFERENCES IN READINGS
CONCORDANCE
PRINTING
PERSONAL CONTACT
FIXING THE TEXT
Financial Estimate for the proposed Kambaramayanam Edition of the University to be completed within 24 months
The picture of the above work in five Volumes
The estimated progress
Specimen form for a Register of manuscripts
நோக்கம் (AIM) 14 வரிகளில் ஒரே வாக்கியமாக, சட்டவாசகச் செறிவுடன் அமைந்துள்ளது.
கம்பராமாயணப் புலமையும், உலகளாவிய நூலகங்கள் பற்றிய துல்லியமான அறிவும் , திரட்டுதல் வகைப்படுத்துதல் அலசி ஆராய்தல் கிடைக்கும் அச்சு நூலில் இடைத்தாள்கள் வைத்துப் பாடவேறுபாடு முதலியவற்றைக் குறித்தல் , அளவிலும் வகையிலும் வெவ்வேறு அச்செழுத்துகள் வார்த்தல் கட்டமைப்பு முதலிய- எதையும் விட்டுவிடாத – கூறுகள் அடங்கிய உறுதியான கச்சிதமான திட்டமிடலும் கொண்ட 18 பக்க அளவிலான விரிவான அறிக்கை இது.
நிதிமதிப்பீட்டுத் தலைப்பின்கீழ் விரிவுரையாளர் முதல் அலுவலக அடிப்படைப் பணியாளர் வரை எண்ணிக்கை, ஊதியம் , காலவரம்பு ஆகியவற்றுடன் மொத்தச் செலவையும் குறிப்பிட்டுள்ளார்.
The estimated progress என்னும் தலைப்பில் பணிகளைக் கட்டங்கட்டமாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் Progress , items , Completion என வகுத்திருக்கிறார்.
அறிமுகம் முதல் தொகுதி, கம்பராமாயணப் பனுவல் அடுத்த மூன்று தொகுதிகள் பின்னிணைப்புகள் ஒரு தொகுதி என ஐந்து தொகுதிகளையும் 1953 செப்டம்பரில் தொடங்கி 1955இல் வெளியிட்டு முடிப்பது அவர் திட்டம்.
திட்டமிடலில் கட்டட ஒப்பந்தப் பட்டறிவின் தாக்கம் இருப்பதைத் திட்ட நிறைவுக்கு அவர் தந்த கால வரம்பு உணர்த்துகிறது.
நடைமுறையில் தொகுதிகள் நீண்டன. 1955 இல் தொடங்கி 1970 முடிய 15 ஆண்டுகளில் 16 தொகுதிகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணம் வெளிவந்து நிறைவுபெற்றது.
நீ.க.வின் திட்ட வரைவு 70 ஆண்டுகளுக்குப் பின்னும் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது.
அடுத்து, தமிழாய்வுத்துறைக்குரிய அவரது திட்டத்தில், தொடக்கநிலையில் ஒரு தமிழாராய்ச்சித் துறை தனிப்பட்ட எழுத்தாளராலோ அறிஞராலோ தனியார் வெளியீட்டகங்களாலோ மேற்கொள்ளவியலாத அடிப்படைத் தொகுப்பு நூல்களை உருவாக்கவேண்டும் என்கிறார்; பத்துத் தலைப்புகளில் பணிகளை வரையறுத்துத் தருகிறார் :
1. CATALOGUS CATLOGARUM
2. SOUTH INDIAN INSCRIPTIONS
3. AN INDEX OF HISTORIC & SOCIAL INFORMATION
4. AN ETYMOLOGICAL DICTIONARY OF THE TAMIL LANGUAGE
5. CONCORDANCE OF THE SANGAM PERIOD
6. SANGAM ANTIQUlTIES
7. CONCORDANCE OF GRAMMATICAL TERMS
8. CONCORDANCE OF PHILOSOPHICAL TERMS
9. A DICTIONARY OF NON LITERARY CURRENT WORDS
10. TRANSLATIONS FROM THE CLASSICAL LANGUAGES
இவற்றுள் ஒன்றன் பகுதியாகிய பழந்தமிழ்நூற் சொல்லடைவை அவர் தலைமையில் தொகுக்கும் வாய்ப்பைக் காலம் அவருக்கு வழங்கியது.
பல்கலைக்கழக நிருவாகத்துடன் கருத்து மோதல்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேரவை (Senate) உறுப்பினராயிருந்த நீ.க. 22.09.1954 அன்று நடக்கவிருந்த பேரவைக்கூட்டத்தில் எழுப்ப, 19.08.1954 ஆம் நாளிட்ட முகப்புக் கடிதத்துடன் ஆறு பக்க அளவில் ஐந்து முதன்மை வினாக்களுடன், ஒவ்வொன்றுக்கும் பல்வேறு விவரங்களை வகைப்படுத்தி , பதிவாளருக்கு அனுப்பினார்.
பதிவாளர் 16.09.1954 ஆம் நாளிட்ட கடிதத்தில் அவற்றைப் பேரவையில் எழுப்ப இயலாதெனவும் எந்தெந்த விதியின் கீழ் அவை மறுக்கப்பட்டன எனவும் நீ. க.வுக்கு எழுதினார்.
நீ.க. மறுப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு மீண்டும் 20.09.1954 அன்று எழுதினார்[ ஒருவேளை இந்தக் கடிதம் பதிவாளர் பார்வைக்குப் போனபோது பேரவைக்கூட்டம் நடந்துகொண்டிருக்கும் அல்லது முடிந்துபோயிருக்கும். பொதுவாக நிறுவனங்களின் – குறிப்பாக உயர் கல்வி நிறுவனங்களின் – தந்திரவுத்தி (tactics) இது]
இதுபற்றித் தமிழ்ப் பொழில் விரிவாக விளக்கி, கடிதப்போக்கு வரத்தையும் இணைப்பாகத் தந்தது.
"பல்கலைக் கழகச் சட்டம் ஒன்பதாவது அதிகாரம் இருபத்தைந்தாவது கட்டனைப்படி நம் முறுப்பினர் கேள்விகள் சேர்க்கப்பெறாது விடப்பட்டன என்று குறிப் பிட்டுள்ளார். அக்கட்டளை கூறுவது என்னவென்றால், பல்கலைக்கழக "ஆட்சிக்குழு (Syndicate) ஒரு கேள்வியைச் சேர்த்துக்கொள்ளுவதைப் பற்றி முடிவு செய்யுமென்றும் அக்குழுவின் எண்ணத்தில் (A) எத்தக் கேள்வியாவது, கேன்வி கேட்கும் உரிமையை இழிவுபடுத்தியிருக்கின்ற சென்றாவது, (B) பல்கலைக் கழகத்தின் நன்மையும் கேள்விக்குக் கூற வேண்டிய விடையும் மாறுபட்டுன்ன தென்றவது தோன்றினாலும் கேன்வி களைச் சேர்க்காமல் விட்டுவிடலாமென்று இருக்கின்றது
" கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள கழகங்கள் மக்கள் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகத் திகழவேண்டாமா? பெரும்பான்மையோராக ஒன்று சேர்ந்து, நடுவுவிகந்த நடையை மேற்கொள்ளல் நாட்டுக்கு நன்மை விளைக் கக்கூடிய தொன்றா? சட்டம் கூறியுள்ள அரண்கள் எவ்வளவிடங் கொடுக்குமாயினும் நடுவுநிலை பிறழ்ந்தக்கால் அவ்வரண்களெல்லாம் மெல்ல மெல்ல நழுவுவனவாகும் என்பதை நாம் கூறவேண்டுமா?"
செயல்பாடு
நீ.க. சரசுவதி மகால் மதிப்பியல் செயலராக இருந்த கட்டத்தில் தமிழ்க் கடல் வித்துவான்.தி.வே.கோபாலையர் முதலியோரைக் கொண்டு இலக்கண நூல்கள் பலவற்றுக்குப் புலமைப் பதிப்புகளை வெளிக்கொணர்ந்தார்.
திருவாசகப் பதிப்பு
திருப்பனந்தாள் காசிமடத்தின் அறக்கட்டளை உதவியுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக, திருவாசகம் முதற்பகுதி வந்தது.
இடப்புறம் மரபின்படி சந்திபிரிக்காமலும் வலப்புறம் புதுமுறையில் சந்தி பிரித்தும், சந்தி பிரித்த பக்கத்தின் வலது ஓரத்தில் பொடி எழுத்துகளில் அருஞ்சொற்பொருள் தந்தும் அச்சிடப்பட்டது.
இதன் உள்ளடக்க முறைவைப்பும், வேறுபட்ட எழுத்தளவுகளும் வகைகளும், பக்க அமைப்பும் நீ.க.வின் பதிப்புத் திட்ட நிறைவேற்றத்தின் பேருழைப்பையும் காட்டும்.
ஒற்றை நூல் என்பதாற்போலும் இது பதிப்பு வரலாறுகளில் அதிகம் இடம்பெறுவதில்லை. இதன் முன்னுரையில் பதம் பிரித்துப் பதித்த நெறிமுறையோடு திருவாசகத்திற்குப் பிற சமயத்தாரும் உருகியது பற்றிய பட்டறிவுப் பதிவும் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக ஜி.யு.போப் அவர்கள் , அப்போதைய சென்னை உயர்நீதி மன்ற நடுவர் அறிஞர் சர்.எஸ். சுப்பிரமணிய ஐயருக்கு எழுதிய கடிதம் பற்றிய பகுதி விதந்து சுட்டத்தக்கது.
இதுவரை வெளிவந்துள்ள அச்சுப்புத்தகங்களையும், தமிழகத்தின் பல் வேறுபட்டஇடங்களில் கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் ஒப்பு நோக்கி, உண்மைப் பாடம் காணும் கட்டளைகளைப் பின்பற்றித் தெளிந்த பாடங்களே இப்பதிப்பில் தரப்பெற்றுள்ளன. ஒப்பு நோக்கிய அச்சுப்புத்தகங்கள், சுவடிகள் முதலிய வற்றின் விவரங்களும், பாடம் கண்ட முறையும், பல பாட வேறுபாடுகளும், தெளிவாக இந்நூல் இரண்டாம் பகுதியில் தரப்பெறும். பொருள் அகராதி, சொல் அகராதி, நூலில் வந்துள்ள கதைகள், பல இடங்களின் வரலாறு, யாப்பு அமைதி, புணரியல் விதிகள் முதலிய பல விளக்கங்களும் இரண்டாம் பகுதியில் வரஇருக்கின்றன.
என்று பதிப்பு முன்னுரையில் எழுதியுள்ளார். இரண்டாம் பகுதி வராதது பேரிழப்பு.
1954 - 55 ஆம் ஆண்டில் பள்ளியகரம் நீ.கந்தசாமிப் பிள்ளையவர்கள் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு இந்தியக் கலைக் கழகத்திற்காகச் சங்க இலக்கியங்களாகிய எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலம்பு, மணிமேகலை ஆகிய இலக்கிய இலக்கண நூல்களின் சொல்லடைவு அகராதி ஒன்றைத் தொகுத்து உருவாக்கும் பணியை மேற்கொண்டார். சில புலவர்களைத் திங்கள் ஊதியத்தில் அமைத்துத் தயாரித்து வந்தார். வெண்ணாற்றங்கரையில் ஒரு பெரிய வீட்டில் அலுவலகம். முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4½ மணி வரை அலுவலகம் செயற்படும். அவ் அகராதிப்பணியில் என்னையும் ஈடுபடுத்த விரும்பி என்னையழைத்தார். நான் கல்லூரியிற் பணியாற்றிக் கொண்டிருந்தமையால் எனக்காகக் கல்லூரி நாட்களில் மாலை ஐந்து மணி முதல் 7½ மணி வரையும் விடுமுறை நாட்களில் காலை 7½ முதல் பகல் 1½ மணி வரையும் பணியாற்றும்படி கூறினார் ... இரண்டு திங்களுக்குப்பின் அப்பணியினின்றும் மாற்றித் திருவாசகத்திற்குச் சொல்லடைவும் பொருளடைவும் தயாரிக்கும் பணியைத் தனியே என்னிடந் தந்து தயாரிக்கச் சொன்னார்.
என்கிறார் பாவலர் ச.பாலசுந்தரம். நினைவிலிருந்து எழுதியதால் ஆண்டு தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 64 – 65 இல் நிகழ்ந்திருக்கலாம். திருவாசகச் சொல்லடைவுப் பணி இரண்டாம் பகுதிக்குரியதாகலாம். அப்பா (பாவலர் ச.பாலசுந்தரம்.) நீ.க. பற்றிப் பலமுறை வியந்து பேசியிருக்கிறார்கள். அப்பாவிற்கு நீ.க. அன்பளிப்பாகத் தந்த திருவாசகப் பதிப்பின் வெற்று முகப்புத் தாளில்,
என் அன்பு நிறைந்த புலவர்
பேராசிரியர் கவிஞர் திருவாளர்
பாலசுந்தரம்பிள்ளைக்கு அன்புடன்
அளித்தது.
நீ.கந்தசாமி
12 - 11- 65
என்று கையொப்பமிட்டு அளித்துள்ளார்.
பழந் தமிழ் நூற் சொல்லடைவு
1920இலேயே வேதநூல்களுக்குச் சொல்லடைவுகள் வந்துவிட்டன. நீ.க.வின் முயற்சியால் பிரஞ்சு இந்தியக் கலைக்கழக வாயிலாகப் பழந்தமிழ் நூற் சொல்லடைவுப் பணி நிறைவேறிற்று.
நீ.க.1962இல் திட்டத்தை முன்மொழிந்தார். 1963இல் அவர் தலைமையில் அமைந்த குழு பணியைத் தொடங்கியது 1967, 1968, 1970 ஆம் ஆண்டுகளில் , மூன்று பகுதியாக மொத்தம் 1491 பக்கங்களில் பழந் தமிழ் நூற் சொல்லடைவு வெளிவந்தது.
தமிழ் செம்மொழியாக அரசால் ஏற்கப்பட்ட பொழுது, நீ.க. 1960களில் வரையறுத்துச் சுட்டிய 41 நூல்கள்தாம் தமிழின் செவ்வியல் இலக்கியங்களாக ஏற்கப்பட்டன. இஃது அவரது நெடுநோக்கிற்குச் சான்று.
இன்னும் தொகுக்கப்படாதனவும் பெயரளவில் கிடைப்பனவாகவும் சில பல படைப்புகள் உள்ளன. கிடைப்பவற்றையாவது இயன்றவரை முயன்று தொகுத்து வெளியிடுவது பயனுள்ளது.
துணை நின்றவை
நீ.க. படைப்புகளும் பணிகளும்
1. தொல்காப்பிய மரபியல் - தமிழ்ப்பொழில் - 2: 3 - 4, 1926
2. கம்பரும் மக்களுள்ளமும் - தமிழ்ப்பொழில் - 2: 5 - 6, 1927
3. தமிழ்நாட்டு வரலாறு - தமிழ்ப்பொழில் - 8: 1 - 2, 1932
4. முற்காலத்தில் நாட்டுப்புற ஊர் (கிராம) வாழ்க்கை - தமிழ்ப்பொழில் –
8: 1-2, 1932
5. பள்ளியகரப் பழங்கதை (மூலமும் பழையவுரையும்) தமிழ்ப்பொழில்
14:7, 1938
6. திருக்குறளும் உபநிடதங்களும் - தமிழ்ப்பொழில் - 14:10, 1938
7. SUGGESTIONS FOR THE PROPOSED KAMBARAMAYANAM EDITION AND
A TENTATIVE PROGRAMME FOR The Tamil Research Department,
தமிழ்ப்பொழில், 30: 5 - 6, 1954
8. கம்பராமாயணப் பதிப்பும் நிலைமையும்,தமிழ்ப்பொழில் ,௸
9. முகவுரை, நீ க., கம்பசித்திரம்- சுந்தரகாண்டம் (நூலாசிரியர் பி.ஸ்ரீ), ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, (திருத்திய இரண்டாம் பதிப்பு) 1957
10. மதிப்புரை :கங்காதேவி எழுதிய மதுரா விஜயம், தமிழ்ப்பொழில், (ஏழு
இதழ்கள் )33: 6-12,1957
11. கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும், தமிழ்ப்பொழில் , 34: 4 , 1958
12.தாமஸ்கிரேயின் இரங்கற்பா (தமிழாக்கம்) ,விற்பனை உரிமை: சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1961
13.திருவாசகம் (முதற்பகுதி, மூலம் - பதிப்பு) அண்ணாமலைப்
பல்கலைக்கழகம்,1964
14.பழந்தமிழ் நூற் சொல்லடைவு(மூன்று தொகுதிகள்), பிரஞ்சு
இந்தியக் கலைக்கழகம், பாண்டிச்சேரி ,, 1967 , 1968 , 1970
15. History of Siddha Medicine , Department of Indian Medicine&
Homoeopathy, Chennai , ( I Ed. 1979 , Il Ed. 1998) Reprint 2012
16. Nar̠r̠iṇai.Text and translation, Institut Français de Pondichéry, 2008.
பிற நூல்கள்
1.மொழியரசி (தொகுப்பு :சாமி வேலாயுதம் பிள்ளை), கரந்தைத் தமிழ்ச்
சங்கம்,தஞ்சாவூர், 1948
2. அந்தக் காலத்தில் காப்பி இல்லை, ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு, நாகர்
கோவில், 2000
3. நினைவலைகள், பாவலர் ச.பாலசுந்தரம், அய்யா நிலையம், தஞ்சாவூர், 2008.
4.அறியப்படாத தமிழ் உலகம் (தொகுப்பு: பா.இளமாறன் முதலியோர்), புதிய
புத்தகம் பேசுது, சென்னை, 2011
5. களஞ்சியம் - தொகுதி ஆறு , தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர், 2018
6.பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள், ஈரோடு தமிழன்பன், விழிகள் பதிப்பகம் ,
சென்னை, 2020
உரையாடலில் இடம் பெற வேண்டியவர்கள் நீ.கந்தசாமி எனும் புலமையாளன்,
வீ.அரசு https://www.keetru.com/kavithaasaran/aug08/v_arasu_1.php
நீ.கந்தசாமிப்பிள்ளை (09.06.1898 - 18.06.1977) , மு.இளங்கோவன்.
http://muelangovan.blogspot.com/2008/07/09061898-18061977.html
நன்றி!
அறிஞர் நீ.க.பற்றி உரையாற்ற, திருச்சிராப்பள்ளிப் பாவாணர் தமிழியக்கத்தார் (குறிப்பாக, பேராசிரியர்கள் முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன் ஆகியோர்) பணித்திராவிடில் இக்கட்டுரைக்கு வாய்ப்பில்லை.
அறிஞர் பொ.வேல்சாமி அவர்கள், தாம் முயன்று தொகுத்த, கிடைத்தற்கரிய நூல்களையும் கட்டுரைகளையும் தந்துதவியிராவிட்டால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கவியலாது.
No comments:
Post a Comment