பாவேந்தரின் பரப்புரைப் புதுமைகள்
தமிழ்க் கவிதை வரலாற்றில் கனக. சுப்புரத்தினம்(1891-1964) என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன் - பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்றெல்லாம் பற்றாளர்களால் போற்றப்பட்டார். அவருக்குரிய இடத்தைக் காலம் உறுதி செய்திருக்கிறது.
அவருடை ‘கவிதை’களின் இலக்கிய மதிப்பு, கருத்து நிலைகளில் நேர்ந்த மாற்றங்கள், கட்சி அரசியலின் உணர்ச்சிமேலீடு முதலியன பற்றிய அழுத்த வேறுபாடு கொண்ட விமரிசனங்கள், ஏற்பு மறுப்புகள்(மறைப்புகளும் உண்டு) எவ்வாறிருப்பினும், தம் வாழ்நாளின் அரசியல் சமூக இயக்கங்கள், போக்குகளின் மாறுதல்களுக்கு ஈடுகொடுத்து , அவற்றில் பங்கேற்றார்;எதிர்வினைகளைப் பதிவு செய்தார். அப்பதிவுகள் பல்வேறு வடிவங்களில் அமைந்தன.
தமிழின் நவீன, ‘தூய’ இலக்கிய முயற்சிகளின் குறியீடான ‘மணிக்கொடி’ இதழில் பாரதிதாசனின் கவிதைகள் இடம் பெற்றன. தமிழில் புதிய விமரிசன வளர்ச்சி நோக்கில் தொடங்கப்பட்ட ‘எழுத்து’ இதழ், புதுக்கவிதைகயின் இரண்டாம் எழுச்சிக்குக் களம் அமைத்ததுக்கொண்டது. அத்தகு எழுத்து இதழைத் தொடங்கிய, அலசல்முறை விமரிசகர் சி.சு. செல்லப்பா பாரதிதாசன் கவிதைப் படிமங்களைச் சிலாகித்துக் காட்டியிருக்கிறார்.
பாரதிதாசன் ஆய்வாளர் பட்டியலும் ஆய்வுகளின் பட்டியலும் விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்.
பாரதிதாசன் யாப்புப் புதுமைகளை யாப்பியலறிஞர் ய.மணிகண்டன் விரிவாகவும் நுட்பமாகவும் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.
பாரதிதாசனிடம் காணப்படும் நாட்டுப்புற வழக்காற்றுத் தாக்கங்களை மணிகோ. பன்னீர்செல்வம் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
முனைவர் செ.மகேசுவரி பாரதிதாசனின் திரைத்துறைப் பங்களிப்பை முழுமையாக ஆராய்ந்துள்ளார்.
இவை குறிப்பிடத்தக்க அண்மைக்கால ஆய்வுகள். பெரியார் பேருரையாளர் ந. இராமநாதனின் 'கவிஞரும் காதலும்' முதலான முந்தைய தலைமுறையினரின் ஆய்வுகள் பல.
அரசியல், சமூகம் சாராத, இயற்கையழகின் ஈர்ப்பும் அவற்றைத் ‘தூய’ கவிதையாக்கும் ஆர்வமும் - ஏக்கமும் கூட – பாரதிதாசனிடம் இருந்தன. அவற்றை ‘அழகின் சிரிப்பு’ எனக் கவிதையாக்கித் தந்துமிருக்கிறார். என்றாலும் காலத்தின் குரலுக்கு ஈடுககொடுக்க வேண்டிய நெருக்கடியும் பதிவு செய்திருக்கிறார்.
ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
'என்னை எழு தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக. என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம்
உயிர் அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!
... ... ... ....இவற்றிடையே,
இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள
என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே
என்று தம் கவித்துவ ஈர்ப்புக்கும் சமூக உணர்வுக்குமிடையிலான இழுபறியையும் கவிதையாக்கியிருக்கிறார் பாரதிதாசன்.
பாரதி விட்டுச் சென்ற சொத்துகளாக ஞானரதம், படைப்புக்களோடு பாரதிதாசனையும் சேர்ந்திருக்கிறார் புதுமைப்பித்தன்
ஒருநிலையில் பாரதியிடம் கவிதையினூடாக ஆவேசம் வெளிப்படுமெனில் பாரதிதாசனிடம் ஆவேசத்தினூடாகக் கவிதை வெளிப்படும். வாழ்த்தாயினும் வசையாயினும் பாரதிதாசனிடம் உணர்ச்சி மேலிட்டு நிற்கும்.
மறுபுறம் கவிதைப் பண்பாகப் பாரதியிடம் பெருமிதம் வெளிப்பட, பாரதிதாசனிடம் எளிமை தலைகாட்டும்.
ஓர் ஒப்பீடு:
விம்மி யழுதாள். - " விதியோ, கணவரே
அம்மி மிதித்தே யருந்ததியைக் காட்டியெனை
வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து
பாதகர்மு னிந்நாட் பரிசழிதல் காண்பீரோ?
என்றாள். விஜயனுட னேறுதிறல் வீமனுமே
குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்.
தருமனுமற் றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்.
பொருமியவள் பின்னும் புலம்புவாள். - "வான்சபையில்
கேள்வி பலவுடையோர் கேடிலாநல்லிசையோர்.
வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள்
மேலோ ரிருக்கின்றார். வெஞ்சினமேன் கொள்கிலரோ?
மேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார்.
இங்கிவர்மேற் குற்ற மியம்ப வழியில்லை.
மங்கியதோர் புன்மதியாய்! மன்னர் சபைதனிலே
என்னைப் பிடித்திழுத்தே யேச்சுக்கள் சொல்லுகிறாய்.
நின்னை யெவரும் "நிறுத்தடா" என்பதிலர்.
என்செய்கேன்!" என்றே யிரைந்தழுதாள்.'
- துரியோதனன் அவையில் துகிலுரியும் சூழலில் பாஞசாலி நீதிகேட்டுப் புலம்புகிறாள்.இது பாரதி பாடிய பகுதி.
ஆவி இழக்கலாம்
ஆடை இழப்பதுண்டோ
கூவிக் குரல் இழக்கும்
வீரர்களும் மன்னர்களும்
மீட்கக் கருதீரோ!
காரிகை என் மானமுங்கள்
கண்முன் இழப்ப துண்டோ?
என்பன பாரதிதாசன் வரிகள். இவற்றில் செறிவும் எளிமையும் மிளிர்கின்றன.
பெரிதும் வியாசபாரத மொழிபெயர்ப்பாக, தமிழ்நடை தந்து பாடிய பாரதியின் வரிகளைச் சுதந்திரமாகப் பாடிய பாரதிதாசனுடன் முற்று முழுதாக ஒப்பிட்டு முடிவுகாண்பது நியாயமாகாதெனினும் இருவர்தம் கவிதைப் பண்பின் போக்குகளை ஓரளவு உணர உதவும் என்றே தோன்றுகிறது.
பாரதிதாசனின் கவிதைப் புதுமை அவரது எளிமையில் தங்கியுள்ளது ; எளிமை எல்லைமீறும் போது கவிதை சற்று நகர்ந்து கொள்வது இயல்புதானே!
பாரதிதாசனின் சமகாலத்தில் எளிமை மீதூரப் பாடிய சிலரின் - பெயர் சுட்டலைத் தவிர்க்கிறேன் - பாக்களை நோக்கப் பாரதிதாசனிடம் கவிதை விஞ்சி நிற்கிறது.
பாரதிதாசனிடம் காணும் எளிமை சான்ற புதுமைள் சிலவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் காந்தியடிகளின் இயக்கத்திற்கு இணக்கமான, பாரதிதாசனின் கருத்துப் பரப்பல் புதுமைகளை விதந்து கூறலாம் .
பாரதிதாசன் தமிழ் பயின்றவர்; பண்டித மரபினர் ; இசையறிவுடையவர்; பள்ளித் தமிழாசிரியர். இந்தப் பின்னணியில் அவருடைய தொடக்ககாலப் பாடல்கள், படைப்புகள் அமைந்தது இயல்பானதே.
கருத்துப் பரப்பல் பாடல்களின் பரவலான பொதுப் போக்கிலொன்று முந்தைய சனரஞ்சக மெட்டுகளில், பரப்பவேண்டிய கருத்துகளை அமைத்துப் பாடுவது. இப்போக்குப் பாரதிதாசனிடமும் காணப்படுவதில் புதுமையில்லை. 1930இல் வெளிவந்த ‘கதர் இராட்டினப் பாட்டு’த் தொகுதியில் இவ்வாறு மெட்டுக்குப் பாடிய பாடல்கள் சிலவுள்ளன.
‘ஜன்ம பூமியின் சிறப்பு’ என்ற பாடலில் ‘பறைமுழக்கம்’ எனும் ஓசையமையப்பாடும் பாரதிதாசன் ‘சுற்றும் சுற்றும் சுற்றும்’, ‘கொட்டு, கொட்டு, கொட்டு’, ‘வெல்லும் வெல்லும் வெல்லும்’, ‘சிங்கம் சிங்கம் சிங்கம்’, ‘உண்டு உண்டு உண்டு’, ‘கொண்டோம் கொண்டோம் கொண்டோம்’ என அடுக்கும்போது பறைமுழக்கச் சாயல் புலனாகிறது. உள்ளடக்கத்திற்கேற்ற ஓசையில் புனைதலும் புதுமையன்று.
‘அன்னைக்கு ஆடை வளர்க' எனும் பாடல், பாஞ்சாலியின் அவலத்தோடு பாரத மாதாவின் அவலத்தை ஒப்பிட்டு உணர்வூட்டுகிறது .
பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ வியாசரைப் பின்பற்றியதென்று பாரதியே கூறினும், அப்பகுதியைத் தேர்ந்ததன் பின்னுள்ள உட்பொருளை – பாரதமாதா விடுதலை, பெண்விடுதலை, முதலியனவாக - ஆய்வாளர்கள் காண அஃது இடந்தருகிறது.
பாரதிதாசன் வெளிப்படையாகவே பாஞ்சாலியின் அவலத்தை உருவகமாக்கிவிடுகிறார். இங்கே ஆடை வளர்தலைக் கதராடையின் வளர்ச்சியாகவும் கண்ணபிரானைக் காந்தியடிகளாகவும் தோன்றச் செய்கிறார் பாரதிதாசன்.
“தீயர் துகில் பறித்துத்
தீர்க்கின்றார் என் மானம்
மாயா மலர்க் கண்ணா
வந்து துயர் தீர்த்திடுவாய்”
என்றுரைத் திட்டாள்.
இதனைச் செவியுற்றுச்
சென்று கண்ணக் காந்தி
சித்திரஞ்சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன் -
வளர்க வளர்கநம் வாழ்வு
என்று பாட்டு நிறைகிறது. அன்றைய காந்திய இயக்கத்தின் பின்புலத்தில் பாமரரும் உணர்வெழுச்சி கொள்ளுமாறும் காவியத்திற்குள்ள நயங்கள் குறையாமலும் சின்னஞ்சிறு பாட்டில் பாரதிதாசன் பரப்புரைப் புதுமை செய்து காட்டியுள்ளார்.
தாலாட்டு, மரபுவழிப்பட்டதே. பாரதிதாசன் ‘தேசீயத் தாலாட்டுக்கள்’ பாடியுள்ளார்.
ஆனால், திருமணம் சார்ந்த வடிவங்களாகிய நலங்கு, மங்களம், சோபனம், வாழ்த்து ஆகிய வடிவங்களையும் - புகழ்வாய்ந்த மெட்டுகளில்- பாரதிதாசன் பாடியிருப்பது புதுமை.
மணமக்களுக்குச் சந்தனம் பூசுதல் முதலிய வேடிக்கை விளையாட்டு நிகழ்த்திப் பாடப்பெறுவது நலங்குப் பாடல்.
மணமகள் நலங்குப் பல்லவியாக “சுபநலங் கியற்று வீரே தோ கையர் நீரே” என்பதை அமைக்கிறார்.
அபசாரமின்றித் தாய்நாட்டத்தர் கலவைபூசி
உபகாரிக்கு நல்லாசி உரைப்பீர் மலர்வீசிச் (சுப)
என்று சரணம் தொடங்குகிறது. மாவீர மக்கட்பேறு, நூலிழைக்கும் நோன்பு, கதராடை பூணல் எனத் தேசிய இயக்கக் கருத்துகளை இடைமிடைந்து
தாழ்வென்று தமைமற்றோர் சகத்திற்சொல் வதை வீழ்த்தி
வாழ்வென்ற ‘சுதந்திரம்’ வாய்த்திட்ட தென வாழ்த்திச்
சுப நலங்கியற்றுவீரே…
என்று நிறைவு செய்கிறார். மணமகன் நலங்கில்,
நிசியினும் பகலினும் நெடுநிலம் காத்திடும் வில்
விசயனின் வழித்தோன்றல்
கசிந்திடும் பனிநீர்க் கலசம் கையேந்திக்
காளை யுளங்குளிரக் கவிழ்ப்பீரே
என்று நாடு காக்கும் மக்கட்பேற்றை வலியுறுத்துகிறார்.
இவ்வாறு ‘மங்களம்’, ‘சோபனம்’, ‘வாழ்த்து’ ஆகிய திருமணந் தொடர்பான சடங்குகள் சாரந்து தேசியப்பாடல்களை அவர் இயற்றியுள்ளார்.
பள்ளித் தமிழாசிரியரான பாரதிதாசன், சிறுவர் சிறுமியர் இயல்புணர்ந்து விளையாட்டுப் போக்கில் அவர்கள் பயிலவும் பாடவும் தக்க சிலவற்றைப் புனைந்துள்ளார்.இவை அக்காலப் பள்ளிச் சிறாரிடம் கொண்டு செல்லப் பட்டமை பற்றித் தனியே ஆராய்தல் வேண்டுமெனினும் அவை எளிய புதுமுயற்சிகள் என்பதில் ஐயமில்லை.
காந்தியடிகளின் வெகுமக்கள் இயக்கம் வெறும் அரசியல் இயக்கமாகவன்றி, வெகு மக்கள் பண்பாடு சார்ந்த இயக்கமாயிருந்தது. அவருக்கு முந்தைய மிதவாத, தீவிரவாத இயக்கங்களிலிருந்து வேறுபட்ட காந்தியடிகளின் இயக்கம் - மரபு வழிப் பண்பாட்டுக் கூறுகளோடு புதியதொரு நெறியை அடிப்படையாகக் கொண்டதாகும். இதில் சிறாருக்கும் இடம்தர இயலும் என்று உணர்ந்து பாட்டியற்றியவர் பாரதிதாசன்.
கதைப்பாட்டு, இயற்கை சார் பாட்டு, விளையாட்டுப் பாட்டு, விடுகவிகள் எனப் பல்வேறு வடிவங்களில் நாட்டுணர்ச்சியூட்டினார் அவர். இவையாவும் புதுமைகள்.
மெத்தைவீட்டு வெள்ளைநாய் ஒரு வளர்ப்பு நாய். தெருவில் திரியும் கறுப்பு நாய் சுதந்திரமானது. வெள்ளை நாய் தன் சுகபோகம் பற்றிக் கூறிக் கறுப்பு நாயையையும் தன்னோடிருக்க அழைக்கிறது. அதன் கழுத்து வடுவைப் பற்றிக் கறுப்புநாய் கேட்கிறது. அது கட்டி வைத்ததால் வந்தது என்கிறது வெள்ளைநாய். கறுப்புநாய் ஓடிவிடுகிறது. கதை பழையதெனினும் குழந்தைகளிடம் சுதந்திரவுணர்வூட்டும் நோக்கில் பாரதிதாசன் பாட்டாக்கியுள்ளார்.
‘நிலாப்பாட்டு’ என்பது நிலவை வினவுவதும் அது விடையிறுப்பதும் அந்த விடையிலிருந்து பிறிதொரு வினாத் தொடுப்பதுமாகத் தொடர்வது. சிறுவர்க்கேற்ற சுவையும் எளிமையும் கொண்டது.
நிலவே நிலவே எங்கெங்குப் போனாய்
உலகம் முற்றும் உலாவப் போனேன்
உலாவல் எதற்கு விலாசத் தீபமே
காடும் மலையும் மனிதரும் காண
என்று தொடரும் பாட்டின் முத்தாய்ப்பாக,
பதந்தனில் அமர வாழ்வுதான் எதற்கு?
சுதந்தர முடிவின் சுகநிலை காணவே
என்கிறார் பாரதிதாசன்.
‘தேசிய விளையாட்டு’, ‘நியாய சபை விளையாட்டு’, ‘ஓடிப் பிடிக்கும் புறா விளையாட்டு’ ஆகியவற்றில் விளையாட்டு விதிமுறைகளோடு பாடல்களைப் புனைந்து தந்திருக்கிறார்.
ஆறுவிடுகவிகளை இயற்றியுள்ளார் பாரதிதாசன். ஆறும் வெவ்வேறு வகையின. சிறுவர்க்கான விடுகவியினூடாகத் தேசிய விடுதலைக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் முற்றிலும் புதியதாகும்.
கதைப்பாட்டு , இயற்கைசார் பாட்டு , விளையாட்டுப் பாட்டு , விடுகவிகள் எனப் பல்வேறு வடிவங்களில் நாட்டுணர்ச்சியூட்டினார் அவர் . இவை யாவும் புதுமைகள்.
ஒன்று சேர்ந்த 'தரை' ஆக்க
ஒன்று சேர்ந்த 'வலை' கொண்டார்
ஒன்று சேர்ந்த 'படம்' அறியார்
உடனே தமது கண் முன்னே
இன்று பாரதம் விடுபட்டால்
இரண்டு சேர்ந்த 'வகை' கொள்வார்.
என்றேன் இதனை விவரித்தால்
எட்டுச்சேர்ந்த 'வலை' அளிப்பேன்
எனும் விடுகதை தமிழ் எண்களின் வரிவடிவை உட்கொண்டது. (ஒன்று = க; இரண்டு = உ; எட்டு = அ)
உலகிற் பிறந்துநான் கண்டபயன் ஒன்றில்லை
உற்றஇள வயது தூண்ட
ஒருத்தியை மணந்தவுடன் அவளோடு தொடர்ந்தவைகள்
ஒருகோடி யாம் விசாரம்
என ‘மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்’ எனும் நூலைத் தொடங்குகிறார் பாரதிதாசன். இதில் இல்வாழ்க்கையை ‘விசாரம்’ என்பது மரபின் தொடர்ச்சியேயன்றிப் பாரதிதாசனின் உள்ளார்ந்த உணர்வன்று. இஃது அவரது தொடக்ககாலப் போக்கு. பிற்காலத்தில் காதற்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவர் அவர். அவை தமிழ் அகப்பொருள் தோய்வும் அவர்தம் அகத்து இயல்பும் இரண்டறக் கலந்து முகிழ்த்தவை.
கூடத்திலே மனப்பாடத்திலே - விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி தனில்
பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் – இவன்
ஆயிரம் ஏடு திருப்புகிறான்
என்பது போன்ற காட்சியும், உணர்வும். மெய்ப்பாடும், அணிநயமும், ஓசையமைதியும் ஒருங்கிணைந்த காதற் கவிதைகள் பாரதிதாச முத்திரைக் கவிதைகள் என்றே சொல்லலாம்.
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்
எனச் செறிவாகவும் காதலைப் பாடுவார் அவர்.பாவேந்தருக்கேயுரிய இந்த 'காதல் கவி' முத்திரையைத் தொடங்க காலத்திலேயே, அதுவும்தேசியப் பரப்புரைப் பாடலிலேயே அவர் பதித்திருக்கிறார்.
ஆளை மயக்கிடும் மாதொருத்தி -உடல்
அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் - அவள்
பாளை பிளந்த சிரிப்பினிலே என்னைப்
பார்த்துரைத்தாள் “எந்த நாளையிலே - உன்றன்
தோளைத் தழுவிடக் கூடும் என்றே - "அடி
சுந்தரி உன்பெயர் ஊர் எதெ"ன்றேன்
அவள் "காளி யனுப்பிய கன்னி"யென்றாள்- என்றன்
காதற் சுதந்தர மங்கையன்றோ
எனும் போது - 'சுதந்தர மங்கை' எனும் உருவகக் குறிப்புத்தவிர இதனைக் காதல் பாட்டாகவே கொள்ளத் தடையில்லை.முழுப்பாட்டையும் பயிலும்போது காதற்சுவை சுதந்தரவேட்கை இரண்டும் பின்னிப் பிணைத்த அனுபவத்தைப் பெற முடியம். இஃ தொரு கவிதைச் சாதனை; புதுமை.
துணை நூற்பட்டியல்
1. கல்லாடன், சுரதா (தொகுப்பாசிரியர்). 2011 பாரதிதாசன் கவிதைகள் மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.
2 குருசாமி. ம.ரா.போ., 2001, பாரதி பாடல்கள்(ஆய்வுப் பதிப்பு), தமிழ்ப்
பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்.
3. சதீஷ் , அ.,(பதிப்பாசிரியர்),குபரா. கட்டுரைகள், அடையாளம், புத்தாநத்தம்.
4. வேங்கடாசலபதி, ஆ.இரா. (பதிப்பாசிரியர்), புதுமைப்பித்தன் கட்டுரைகள்
காலச்சுவடு நாகர்கோவில்,
No comments:
Post a Comment