இந்திய விடுதலைப் போரில் எவரும் எண்ணியும்பார்க்காத முறையில் ஆங்கிலேய ஆட்சியாளர் அதிரக் கப்பலோட்டிய தமிழன் , சிறைப்பட்டுச் செக்கிழுத்த செம்மல், தொழிற்சங்கம் முதலிய முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி, வாழ்நாள் தியாகி வ. உ.சிதம்பரனார் (செப்டம்பர் 5,1872 – நவம்பர் 18,1936)
தமிழ் வரலாற்றில் எழுத்தாளர், பாவலர்,மொழிபெயர்ப்பாளர்,பதிப்பாசிரியர், உரையாசிரியர் என இயங்கிய தமிழறிஞர் வ.உ.சி.
இந்திய விடுதலைப் போரில் திலகர் காலம் முடிந்து, காந்தியின் காலம் எழுச்சியுற்றபோது, தொடர்ந்து திலகர் நெறி நின்ற வ.உ.சியை ஒரு புறம் வரலாறு வஞ்சித்தது.
மறுபுறம் வ.உ.சி. யைத் திட்டமிட்டு மறைக்கும்வஞ்சகமும் நிகழ்ந்தது.
அவரது சமய சமரச நிலைப்பாட்டினைத் திலகர்வழித் தேசியர் ஏற்கவில்லை; சீர்திருத்தச் சைவ நிலைப்பாட்டைச் சைவ உலகம் ஏற்கவில்லை ; புலமைசார் தமிழ்ப்பணிகளைத் தமிழ்க் கல்வியுலகம் போதிய அளவு போற்றவில்லை.
இணையற்ற ஒரு பேராளுமை பெயரையும் புகழையும் கூடத் தியாகம் செய்ய நேர்ந்தது அவலத்தின் உச்சம்.
வ.உ.சி. 150 ஐத் தமிழக அரசு அரசு கொண்டாடும் முறை ஓர் ஆறுதல்.
வ.உ.சி. என்னும் பேராளுமைக் கடலின் ஒரு துளியை என் சிற்றறிவிற்கு எட்டிய அளவில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எண்ணி மகிழ்கின்றேன்.
தூண்டல்:
ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்த வ.உ.சி.யின் சிவஞானபோத உரை(1999) பற்றிய பெட்டிச் செய்தியொன்று சிற்றேடு இதழில் வந்திருந்தது.அது பதிப்பைப் புகழ்வதுபோல் தொடங்கிப் பழிப்புடன் முடிந்திருந்தது. பழி(ப்பு)க்குக் காரணம் ஓர் இலக்கணக் குறிப்பு:
இந்நூலின் பக். 79-இல் இரண்டு வரிகள் காணப்படுகின்றன,
"கடவுள் என்பது கடத்தல் என்று பொருள்படும். அஃது ஈண்டு தொழில் ஆகுபெயராய் கடந்து நிற்கும் பொருளுக்கு ஆயிற்று" என வருகிறது.
தொழில் ஆகுபெயரா? அது என்னடாது? ‘பம்பு அடித்தல்' என்பதில் அடிப்பவன் பிரதானமாகி அடிப்பவன் முக்கியமாகும் இலக்கணம் ஒன்று உண்டு. அதுதான் தொழிலாகுபெயர்...¹
பழிப்புக்குள்ளான வரிகள் இடம்பெற்ற மூலப் பகுதி வருமாறு* :
கடவுள் என்னும் சொல் கட என்னும் பகுதியும் உள் என்னும் விகுதியும் சேர்ந்தாயது. கட என்பதற்குக் கடப்பாய் என்பது பொருள். உள் என்பது தொழிற்பெயர் விகுதி. ஆகவே, கடவுள் என்பது கடத்தல் என்று பொருள்படும். அஃது ஈண்டு தொழிலாகுபெயராய்க் கடந்து நிற்கும் பொருளுக்கு ஆயிற்று. கடந்து நிற்கும் பொருள் என்னும்போது, 'எதனை அல்லது எவற்றைக் கடந்து நிற்கும் பொருள்' என்ற ஒரு வினா எழுகின்றது. அதற்குப் பொறிகளையும் சொற்களையும் உள்ளத்தையும் கடந்து நிற்கும் பொருள் என்று ஆன்றோர் விடையளிக்கின்றனர். அஃதாவது, பொறிகளாலேனும் சொற்களாலேனும் உள்ளத்தாலேனும் அறியமுடியாத பொருள் கடவுள் என்பதாம் (ப.91 )²
'கடவுள் - தொழிலாகுபெயர்' என்பது வ.உ.சி. குறிப்பு ; வேங்கடாசலபதி தருவதன்று. கடவுள் என்பது தொழிலாகுபெயர் என்பதை வ.உ.சி. விளக்கித் தெளிவுபடுத்தியிருக்கிறார். அந்த ஆகுபெயர்ப் பொருளை ஒருவாறு மறுத்துக் கடவுள் மனம் மொழி மெய்களுக்கு எட்டும் பொருள் ; கடந்து நிற்கும் பொருளன்று என்று நிறுவ முயல்கிறார்.
இந்தக் குறிப்பு அவரது சிவஞானபோத உரையினுள் இருப்பதாகவே கருதினேன். இலக்கணக் குறிப்புச் சரியானது என்பதற்குமேல் அப்போதைக்கு நான் அவரது சிவஞானபோத உரையின் பக்கம் போகவில்லை. என்றாலும் அவ்வுரையின் குறிப்புகளைப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. இந்தக் கருத்தரங்கம் அந்த எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பாக அமைந்துவிட்டது.
சிவஞானபோதமும் உரைகளும்
இந்நூல் மெய்கண்டாரால் இயற்றப்பெற்றது ; பொதுக் காலம் 13ஆம் நூற்றாண்டினது ;பொல்லாப் பிள்ளையார் வணக்கம், அவையடக்கம் நீங்கலாகப் பன்னிரண்டு நூற்பாக்கள் கொண்டது; 40 அடிகளால் ஆயது; மெய்கண்டார் செய்ததாகக் கருதுமாறு அமைந்த 39 அதிகரணங்கள் , 81 வெண்பாக்கள் ஆகியவற்றைக் கொண்டது ; மெய்கண்டசாத்திர மரபின் முதனூல் ³; வ.உ.சி. யும் சித்தாந்த நூல்களில் ஒப்புயர்வற்றது (ப.49) என்று கருதுகிறார்.
சிவஞானபோதத்திற்குப் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிப் பெருமாள் இயற்றிய உரையே பழைமையானது ; வேறு சிலவும் உண்டு;பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்த சிவஞான முனிவர் உரை புகழ்வாய்ந்தது ; இருபதாம் நூற்றாண்டில் - வேதாந்தம்,பிரம்ம ஞானம் முதலிய நோக்குடையவை உட்பட - உரைகளாகவும் உரைவிளக்கங்களாகவும் பல நூல்கள் எழுந்தன.
சிவஞானபோதம் - வ.உ.சி.உரை:
வ.உ.சி. ஏனைய உரைகளிற்காணும் பிறமதக் கண்டனங்கள், மூலம் தமிழா வடமொழியா என்னும் சர்ச்சை ஆகியன தவிர்த்து , சிவஞான போதத்தின் வழி, சித்தாந்தமும் வேதாந்தமும் ஒன்றே என்னும் சமரச நிலையெய்தி, எளிய நடையில் சிறிய அளவில் இவ்வுரையை எழுதியிருப்பதாக உரைப்பாயிரத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார். வ.உ.சி.யின் சமரச நிலைப்பாடு விடுதலைப் போராட்டக் காலத்தின் விளைவு எனலாம் :
மத வேற்றுமையைக் காண்பவர்களும் பேசுபவர்களும் “யான்”, "எனது" என்னும் மத வெறிபிடித்த மாக்களேயென்றும், நமது நாடு தற்காலம் இருக்கிற ஒற்றுமையற்ற நிலைமையில் மத வேற்றுமைகளையோ, சாதி வேற்றுமைகளையோ, வேறு வேற்றுமைகளையோ காண்பவர்களும் பேசுபவர்களும் தேசத்திற்குத் தீங்கிழைப்பவர்களே யென்றும் யான் கருதுகின்றேன். அதனாலும், இவ்வுரையில் யான் பல மதக் கோட்பாடுகளையும், அவற்றின் பொய்யான உயர்வு தாழ்வுகளையும் பற்றி ஒன்றும் பேசவில்லை(பக்.49 - 50).
சிவஞான போதத்தின் பொல்லாப்பிள்ளையார் காப்பு, பன்னிரண்டு நூற்பாக்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே வ.உ.சி. உரை வரைந்துள்ளார்.
சித்தாந்த -வேதாந்த சமரச நிலை காரணமாகவும் அளவுச் சிறுமை காரணமாகவும் முறையே சித்தாந்தசைவ மரபினரும் ஆய்வாளர்களும் வ.உ.சி.யின் இவ்வுரையைப் பொருட்படுத்தவில்லை⁴. அவர் உரையை ஏசியவர்களும் உண்டு. வ.உ.சி.யவர்களே ஏசியோர் பற்றி எழுதியுள்ளார் ; தம் தகுதியை நாட்டியுள்ளார்(இணைப்பு 2 காண்க).
தமிழ்ச் சிவஞான போதச் சூத்திரங்களின் சொற்களையும் எனது சொந்த மெய்ஞ்ஞானத்தையும் ஆதாரமாகக் கொண்டும், சிவஞான போதச் சூத்திரங்களுக்கு ஸ்ரீ சிவஞான சுவாமிகள் இயற்றியுள்ள சிற்றுரையின் பிண்டப் பொழிப்புரைகளையும் தமிழகராதியையும் துணையாகக் கொண்டும் இவ்வுரை இயற்றியுள்ளேன். நாள் ஒன்றுக்கு இரண்டு மணி வீதம் பன்னிரண்டு நாள்களுக்குள் யான் சிவஞான போதத்தை ஆராய்ச்சி செய்து இவ்வுரையை எழுதி முடித்தேன்.
- என்கிறார் வ.உ.சி. (ப.50).
சூத்திரத் தலைப்பு, சூத்திரம் , பொருள், அகலம், கருத்து - எனச் சீராக அமைத்து உரை வரைந்த வ.உ.சி. அகலம் என்னும் பகுதியில் இலக்கணக் குறிப்புகளைத் தந்துள்ளார்.
"முந்திய ... உரைகளுடைய கடின நடையும் பெரிய அளவும் அவற்றைத் தமிழ் மக்கள் கற்பதற்குக் கையில் எடுக்காதவாறு அச்சுறுத்துகின்றன" (ப.49) என்று வ.உ.சி.கூறுவதற்குச் சிவஞான முனிவரின் சிற்றுரையே சான்று . அதனை முழுமையாகக் கூட அன்று , அதன் பிண்டப் பொழிப்பைத்தானும் உரையின்றி அணுகவியலாது.
முறையும் வரம்பும்
ஆயினும் மரபாகப் போற்றப்படும் [சிவஞான ]முனிவர் உரையையே வ.உ.சி. துணையாகக் கொண்டார். எனவே, முனிவர் சிற்றுரையிற் காணும் இலக்கணக் குறிப்புகளோடு ஒத்தும் உறழ்ந்தும் நோக்குவதன் வழி வ.உ.சி. உரையின் இலக்கணக் குறிப்புகள் பற்றித் துலக்கவியலும். இம்முறையிலேயே இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
இக் கட்டுரை இலக்கணக் குறிப்புகளை மையமாகக் கொண்டது ; மெய்யியல் நோக்குக்கு இடமில்லை. மெய்யியல் பற்றிப் போதிய அறிவு எனக்கு இல்லை என்பது வெளிப்படை. எனினும் சிற்சில இடங்களில் இலக்கணக் குறிப்புகள் உரையாசிரியரின் மெய்யியல் நோக்குச் சார்ந்திருப்பதையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
பதச்சோறு : குறிப்புகளால் நிரம்பிய அகலம்
சிவஞான போதம் ஐந்தாம் நூற்பாவுக்குரிய வ.உ.சி.யின் அகலவுரையில் ' உள்ளம் - ஆன்ம புருடன் - உயிர் ' என்பதொன்றே சொற் பொருள் . பிற யாவும் ஏதேனும் ஒருவகைக் குறிப்பால் பொருள் கொள்ளுதல் சார்ந்தவையே.
அவற்றுள்ளும் இலக்கணக் குறிப்புகளே மிகுதி.ஓர் அத்துச் சாரியை , இரண்டு சொல்லெச்சங்கள் , ஒரு விகாரம்/தொகை , ஓர் அசை , ஓர் ஆகுபெயர் , ஓர் ஈற்றசை என நிரம்பியுள்ள வ.உ.சி.யின் இலக்கணக் குறிப்புகளுள் ஒன்று மட்டும்தான் முனிவரை வழிமொழிந்தது.
பொருளில் ஒத்திருந்தாலும் விளக்கங்களிலும் இலக்கணக் குறிப்புகளிலும் வ.உ.சி. தம் தனித்தன்மை நாட்டிக்கொள்கிறார். ஒத்தும் உறழ்ந்தும் உள்ள இடங்களைச் சற்றே காணலாம்.
பொருள்:
விளம்பிய -மேலைச் சூத்திரங்களின் அங்ஙனங் கூறிப் போந்த ... - முனிவர்
- (மேற்) கூறிய ... - வ.உ.சி.
அளந்தறிந்து - (தத்தம் விடயங்களை இஃதின்னதென்று) அளவிட்டறிந்தும்
முனிவர்
(தத்தம் புலன்களை) அளவிட்டு அறிந்தும் - வ.உ.சி.
[பொறிகள் அறிதல் தத்தம் புலன்களையே யாதலால், புலன்களை
என்று விதந்து கூறிற்றிலர் என்பது வ.உ.சி. தரும் விளக்கம்]
தாம் தம் உணர்வின் தமி அருள்- உயிர்களும் தமதறிவிற்கு வியஞ்சகமாகிய
முதல்வனது சிற்சத்தியான் (அளந்தறிந்தறியா)-
முனிவர்
உயிர்கள் தமது அறிவால் இறைவனது சிற்சத்தியை
அறியமாட்டா - வ.உ.சி. (இவற்றுள் மெய்யியல்
நோக்கில் சற்று வேறுபாடிருப்பதாகத்
தோன்றுகிறது.)
காந்தங் கண்ட பசாசத்தவையே - உயிர்கள் (அவ்வாறுணர்தல்)காந்தத்தைக் கண்ட
இரும்பு அதன் சந்நிதிமாத்திரையின் வலித்துக்கொள்ளப்
படுமாறுபோலக் (காரணத்தானன்றிச் சங்கற்பத்தான் அதிட்டிக்கு
முதல்வன் சந்நிதிமாத்திரையினாம்;ஆகலான்,அதுபற்றி முதல்வன்
விகாரியாதலின்று) - முனிவர்
காந்தத்தைக் கண்ட இரும்பின் (தன்மையைப் போல இறைவன்
சந்நிதானத்தில் பொறிகளை அறியும்) தன்மையை உடையன-
வ.உ.சி.
(முனிவர் ' அவை ' என்பதை எழுவாயாகக்கொள்கிறார்; வ.உ.சி.
குறிப்பு வினைமுற்று விகுதியாகக் கொள்கிறார்)
இலக்கணக் குறிப்புகள்:
மெய்வாய் கண்மூக்கு (செவி) அளந்தறிந்து (ம்) - [ஐம்பொறிகளும் ... தத்தம்
புலன்களை அளவிட்டறிந்தும்]- பொறிகள் அறிதல் தத்தம்
புலன்களையே யாதலால் புலன்களை என்று விதந்து கூறிற்றிலர் வ.உ.சி.
விடயங்களை எனக் கூறும் முனிவர் விளக்கம் எதுவும் தரவில்லை.
செவி என்பது சொல்லெச்சம் என்கிறார் முனிவர் ; வழிமொழிகிறார் வ.உ.சி.
ஆங்கவை - ஒரு சொல் நீர்மைத்து - முனிவர்
- ஆங்கு என்பது அசை - வ.உ.சி.
(இருவரும் ' ஆங்கவை 'என்பதற்கு அவை என்றே பொருள்
கொண்டனர்).
அளந்தறிந்து - அளவிட்டு அறிந்தும் என இருவரும் பொருள் கொண்டாலும் , வ.உ.சி. மட்டும் உம்மை விகாரத்தால் தொக்கது எனக் குறிப்புத் தருகிறார்.
தம்முணர்வின் தமி - தமது முதலென்னும் பொருள்பட வந்த ஆறாம் வேற்றுமைத்
தொகை - முனிவர் (தமது அறிவால் என விரிக்கும் வ.உ.சி. எந்தக்
குறிப்பும் தரவில்லை.
தமி - ஒப்பின்மை. அஃது ஈண்டு ஆகுபெயராய் ஒப்பில்லாத
இறைவனுக்கு ஆயிற்று - வ.உ.சி. (தமி - இறைவன் என்று பொருள்
கூறும் முனிவர் குறிப்பெதுவும் தரவில்லை)
தமி அருள் [அளந்தறியா ] - முனிவர் , "உவமைக்கோதிய வினையைப்
பொருளினுங் கொள்க " என்றார்
தமி அருள் [ அறியா ]- வ.உ.சி., " அறியா என்பது சொல்லெச்சம் " என்கிறார்.
( இருவரும் ஒத்த பொருள் கொண்டாலும் இலக்கணக் குறிப்பில்
வேறுபடுகின்றனர்.
[ காந்தம் தான் வேறுபடாமல் இரும்பை ஈர்ப்பது போல் ] " ஆகலான்,அதுபற்றி முதல்வன் விகாரியாதலின்றென்பது குறிப்பெச்சம்" என்று முனிவர் ஒரு மெய்யியல் கருத்தைக் குறிப்பெச்சத்தால் கொள்ளவைக்கிறார். வ.உ.சி. இவ்வாறு கொள்ளவில்லை
ஏகாரம் ஈற்றசை என்பது வ.உ.சி. மட்டும் தரும் குறிப்பு.
ஐந்தாம் நூற்பாவின் அகலம், இலக்கணக் குறிப்புகளில் எந்த அளவுக்கு முனிவரிடமிருந்து வ.உ.சி. வேறுபட்டுத் தனித்து நிற்கிறார் என்பதைக் காட்டும், பதச்சோறு .
அனைத்து நூற்பாவுரைகளிலும் காணும் வ.உ.சி.யின் இலக்கணக் குறிப்புகளை விரிவாகக் காணும்போது இந்நூற்பாவின் இலக்கணக் குறிப்பு ஒவ்வொன்றும் ஆங்காங்கு விளக்கப்பெறும்.
இலக்கணக் குறிப்பு - ஒரு குறிப்பு:
இலக்கணக் குறிப்புகளின் நோக்கம் புலமையைக் காட்டுவதன்று ; தேவையான இடங்களில், சொல் அல்லது தொடரின் மொழியமைதியையோ பொருளமைதியையோ புலப்படுத்துவதாகும். உரையாசிரியர்கள் தாம் கருதும் பொருளை வலியுறுத்த இலக்கணப் புலமையைக் கருவியாகக் கொள்வதுமுண்டு.
1. மொழியமைதிசார் குறிப்புகள்
2. பொருளமைதிசார் குறிப்புகள்
3. புலமைசார் குறிப்புகள் - என்று வகைப்படுத்திக்கொள்ளலாம்.இவற்றை மேலும் உட்பிரிவுகளாக்கலாம். இவை ஒன்றினொன்று ஊடாடுதலும் இயல்பே. இவ்வகைகளின் அடிப்படையில் வ.உ.சி.யின் சிவஞானபோத உரைக்குள். செல்லலாம்.
மொழியமைதி
மொழியமைதி என்பதனுள் செய்யுளமைதியும் கொள்ளப்பட்டுள்ளது.
அசைகள்
நிற்கு மன்றே (2), ஐந்தவத் தைத்தே (4), பசாசத் தவையே (5), இசைக்குமன் னுலகே (6), அரன்கழற் செலுமே (8 & 11), எண்ணுமஞ் செழுத்தே (9) , வல்வினை யின்றே (10), அரனெனத் தொழுமே (12) எனப் பன்னிரண்டில் ஒன்பது நூற்பாக்கள் ஏகாரத்தில் முடிகின்றன.
இரண்டாம் நூற்பா ஈற்றில் இரண்டு அசைகள் அமைந்திருப்பதால் -அன்று , ஏ என்பன அசைகள் என்று வ.உ.சி.குறிப்புத் தருகிறார். மற்ற எட்டு இடங்களிலும் ஏகாரம் ஈற்றசை என்றே தந்துள்ளார்.
முனிவர் ,‘அன்றே அசை ‘ என ஒன்றாகவே தருகிறார்." அநாதியே இவ்வாறு நிற்குமெனினும் அமையும்" [அன்றே = அன்றுதொட்டே =அநாதியே ] என முனிவர் பிறிதொரு பொருள் தருகிறார். இது புலமை நயஞ்சான்றது ; சைவசித்தாந்த மெய்யியலுக்கும் இசைவானது.
அன்றே என்னும் எதிர்மறை வினாவடிவத்தேற்றம் ஒன்றும் உண்டு⁵. எனவே அன்றே என்னும் முழுவடிவத்தையும் அசை எனச் சுட்டாமல் அன்று , ஏ என அசைகளைத் தனித்தனியே சுட்டுகின்றார் வ.உ.சி. இது தெளிவு கருதியது.
அன்றே (2) என்னும் ஓர் இடம் தவிர முனிவர் ஏகார ஈற்றசைகளுக்குக் குறிப்புத்தரவில்லை.
தத்தங் குறிப்பிற் பொருள் செய்யும் ஏகாரங்கள் சில ஆங்காங்கு இடம்பெறுதலின் தெளிவும் செய்யுளமைதியைப் புலப்படுத்தலும்கருதி ஈற்றசை ஏகாரங்களைத் தவிராமல் குறித்துள்ளார் வ.உ.சி.; ஆங்கு என்பது அசை (5),சத்தே என்பதன் ‘ஏகாரம்’ அசை(7) , தன்என்பது அசை (10) என ஈற்றசையல்லாத வேறு அசைகள் சிலவற்றையும் குறிப்பிடுகிறார்.
ஆங்கவை ஒரு சொல் நீர்மைத்து (5) எனவும் சத்தே என்னுமேகாரம் பிரிநிலைக்கண் வந்தது (7) எனவும் குறிப்பர் முனிவர். இவற்றுள் ஆங்கு என்பதற்குத்(5) தரும் குறிப்புகள் வேறுபடினும் , ‘ ஆங்கு ‘ பொருள் குறியாமல் நின்றதென்பதில் இருவர்க்கும் உடன்பாடே. ஏகாரத்தில் சற்றே வேறுபடுகின்றனர்.
மலமாயை தன்னொடு (10)என்னும் தொடரில் உள்ள தன் என்பதைச் சாரியையாக அன்றி அசை என வ.உ.சி. குறித்தது நுட்பமானது. இஃது இயைபு பற்றிய பகுதியில் விளக்கப்படும்.
ஒற்றுக் கெட்டு நிற்றல்⁶
என்னும் என்பது னகர வொற்றுக் கெட்டு[எனும் என]நின்றது (1), என்னின் என்பது னகர வொற்றுக் கெட்டு [எனின் என] நின்றது (6),உள்ளது என்பது ளகர வொற்றுக் கெட்டு[உளது என] நின்றது (7), செல்லும் என்பது லகர வொற்றுக் கெட்டு[செலும் என]நின்றது (8),உள்ளம் என்பது ளகர வொற்றுக் கெட்டு[உளம் என]நின்றது (11) - என்னும் இடங்களில் ஒற்றுக் கெட்டு நிற்றலைக் குறிக்கிறார்.
இவ்வாறு இடையில் கெடுவனவற்றுக்கு முனிவர் குறிப்பேதும் தரவில்லை ; சில இடங்களில் உரையிலும் எனின் (6), உளது (7) என்றே வழங்குகிறார்.
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் (நன்னூல், 205)தமிழ்ச் சொல்லமைதி கருதி இக்குறிப்புகளை வ.உ.சி. தருகிறார் எனலாம்.
உளதிலது (3) என்பதற்கு உரையில் உள்ளது , இலது என்றும் ‘அசத்திலது ‘ (7) என்பதற்கு ' இல்பொருள் இல்லாதது ‘ என்றும் கூறும் வ.உசி. இவ்விடங்களில் எந்தக் குறிப்பும் தரவில்லை (இணைப்பு 3 : 1காண்க)
ஈறுகெடல் (எதிர்மறைப்பெயரெச்சம்)
அல்லாத என்பது லகர வொற்றும் ஈறும் கெட்டு[அலா என] நின்றது (7)(இதில் லகரவொற்றுக்கேடு எழுத்துக் கேட்டுள் இடம்பெறத்தக்கது). உணராத என்பது ஈறு கெட்டு[உணரா என] நின்றது (9), 'அயராத' என்பது[அயரா என] ஈறுகெட்டு நின்றது (11) என ஈற்றின் தகரக் கேட்டினை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று குறிக்காமல் , எழுத்துக்கேடு மட்டுமே குறிக்கிறார் வ.உ.சி.
இவற்றுள் உணரா - உணரப்படாத (9) என்னுமிடத்தில் மட்டும் ஈறுகெட்ட எதிர்மறைப் பொருள் கொள்ளும் முனிவர் குறிப்பேதும் தரவில்லை. பிற இரண்டிடத்தும் (7 & 11) பெயரெச்சமாக அன்றி , அலா = அன்றி , அயரா = அயராமையான் ஆகிய எனவிரித்துப் பொருள் காண்கிறார்.
சாரியைகள்
[மலத்து என்பதன்] ‘அத்து'ச் சாரியை (1), தனுவினுள் என்பதில் இன் சாரியை (3),உள்ளத்து என்பதன் 'அத்து'ச் சாரியை (5), தவத்தினில் என்பதில் 'இன்' சாரியை (8) கண்ணினின் என்பதன் முதல் இன் சாரியை (9) எனச் சாரியை வருமிடங் குறிக்கிறார் வ.உ.சி. இவற்றுள் சிலவற்றுக்கு வேறு பொருள் காணும் முனிவர் பொதுவாகச் சாரியைகளுக்குக் குறிப்புத் தருவதில்லை.
பொருளமைதி
இடைச்சொற்குறிப்பு
தத்தம் குறிப்பிற் பொருள் செய்தனவாகச் சில இடைச்சொற்களுக்குக் குறிப்புத் தருகிறார் வ. உ.சி. :
[தோற்றிய திதியே என்பதன் ]ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது (1) எனப் பொருளமைதி காரணமாக முனிவர் குறிப்பை வழிமொழிகிறார் வ.உ.சி.
‘அவையே தானேயாய் ‘ என்னும் தொடரைத் தானே அவையேயாய் என்று கொண்டு கூட்டி, இறைவனன்றி வேறொன்றும் அவையாகத் தோன்றுதல் இல்லையென்பதையும், இறைவன் தோற்றுங்கால் அவையாகவே தோற்றுவனென்பதையும் குறிக்க வந்தமையால், “ஏகாரம்” இரண்டும் பிரிநிலை (2) என்பர் வ.உ.சி.
அவையே தானேயாய் – என்பதை அவையேயாய், தானேயாய், அவையே தானேயாய் என்று இரட்டுற மொழிந்து கொண்டு ஒன்றாய் (அவையேயாய்),
வேறுமாய், உடனுமாய் என முனிவர் பொருள் காண்பர்.
'யான்' என்னும் நினைப்பால், இறைவன் உயிரேயாவன்; வேறொன்றும் ஆகான். 'யான்' என்னும் நினைப்பைவிட, உயிர் இறைவனேயாகும்; வேறொன்றும் ஆகாது. இவ்வுண்மையை உணர்த்தவே இரண்டிடத்தும் ஏகாரம் சேர்க்கப்பட்டுள்ளது. அவனே தானே என்பவற்றின் “ஏகாரம்" இரண்டும் மற்றவற்றினின்றும் பிரித்தலால், பிரிநிலைக்கண் வந்தன (10) என்பார் வ.உ.சி.
சற்றே வேறுபடும் முனிவர் ஏகாரமிரண்டனுள் முன்னையது பிரிநிலை ; பின்னையது தேற்றம் என்பர்.
‘இசைக்குமன் னுலகே ‘என்பதற்கு உயர்ந்தோர் கூறுவர் எனப்பொருள் காணும் வ.உ.சி. மன் அசை. அஃது ஈண்டு ஒழியிசைக்கண் வந்தது (6) என்று குறிப்புத் தருவார். மெய்யுணர்வின் நிலைபெற்றுயர்ந்தோர் கூறுவர் என்பது முனிவர் காணும் பொருள் ( மன் = நிலைபெற்று ).
’ இசைக்குமன் னுலகே ‘ என்னும் தொடரிலுள்ள ' மன் ' என்பதை முனிவர் மன்னுலகே எனச் சேர்த்தும் வ. உ.சி. இசைக்குமன் எனச் சேர்த்தும் பொருள் கண்டுள்ளனர்.
சுட்டின் குறிப்பு
இறைவனைச் சேரவொட்டாமல் தடுத்தது ஆணவ மலமேயாகலான், அதனை அம்மலம் என்று சுட்டிக் கூறினார் (12) என்பது வ.உ.சி. குறிப்பு
.வ.உ.சி. ஆணவமலம் ஒன்றே கொள்ள, முனிவர் , ‘ அவ்வியல்பினையுடைய மும்மலம் ‘ என (அ = அவ்வியல்பு) மும்மலங்களையும் கொள்வர். வ.உ.சி குறிப்பு நுட்பமானது.
விதிவிலக்கான எழுத்துக்கேடு
உராது என்பது ஈறு கெட்டு[உரா என] நின்றது. உராவல் - பொருந்துதல். (9) என்று குறிபபும் பொருளும் தந்து உராத்துனைத் தேர்த்தென என்னும் தொடருக்கு, "(புவியில்) பொருந்தாது வேகமாகச் செல்கின்ற பேய்த்தேரின் தன்மையைப் போல" [துனை = விரைவு ; தேர்த்து = பேய்த்தேரின் தன்மைத்து (பேய்த்தேர் = கானல்நீர்)]என்று பொருள் காண்கிறார் வ.உ.சி. (இணைப்பு 3:2 காண்க)
உரா – என்பதன் வடிவம் எதிர்மறைப் பெயரெச்சமாகத் தென்பட்டாலும்
வ.உ.சி. எதிர்மறை வினையெச்சமாகக் கண்டு உராது என்பதன் ஈறு கெட்டதென்கிறார்.
மேற்குறித்த தொடருக்கு, "உராத்துனை - நின்றுழிநில்லாது பரந்து திரிதற்கண் அதிவேகமுடைய, தேர்த்தென -பேய்த்தேரினியல்பிற்றாய்" - என்று பொருள் கூறும் முனிவர் " உராத்துனை ஏழாம் வேற்றுமைத்தொகை " என்று குறிப்புத் தருகிறார் . உரா = பரந்து திரிதல் என்பது முனிவர் கொள்ளும் பொருள்; உராவென்பது முதனிலைத் தொழிற் பெயர் என்பார்.
வெளிப்படை⁷
தொடர்பு கருதிப் பிறிதொன்றையும் பார்க்கலாம்.
"பறவாக்குளவி" "பாயாவேங்கை" என்றாற்போல, ஒருவரானூரப் படாத வேகத்தையுடைய தேரெனச் செயப்படு பொருட்கண் வந்த பெயரெச்ச மறையாகக் கொண்டுரைத்து, "திருந்தார் நன்றென்றேன் றியேன்" என்றாற்போல உராவென்பது குறுக்கல் விகாரமென்பாரு முளர்
என்கிறார் முனிவர் .[ நன்றென்றேன் றீயேன் (தீயேன் ) என்பது பாட்டில் நன்றென்றேன் றியேன் (தியேன்) என (தீ > தி ), குறுகி நின்றது. இது குறுக்கல் விகாரம்)]
பல்பொருள் குறிக்கும் சொல்லை எதிர்மறையால் பிறவற்றினின்றும் பிரித்து ஒரு பொருட்குரியதாக வரையறுத்தலை வெளிப்படை எனச் சுட்டும் மரபொன்று உள்ளது.
" ஒருவர் ஊராததாகி விரைந்து செல்லும் கானற்றேரை ஒக்கும் ..." என்று பொருள் கண்டவர் பாண்டிப் பெருமாள். முனிவர் அவரது பெயர் சுட்டவில்லை. ஊராத்தேர் என்பதன் முதல் குறுகி (ஊ>உ) உராத் தேர் என்றாகி , ஊரப்படாத தேராகிய பேய்த்தேரைக் குறித்ததாகப் பாண்டிப்பெருமாள் கண்ட பொருள் இலக்கண நயமுடையது.
விகாரம்
" உணராது, அல்லது¶ என்பன முறையே உணராதது, அல்லாதது¶ என்னும் பொருள் தந்து நின்றன " (6) எனக் குறிப்பிடும் வ.உ.சி. இங்கு இடையில் தகரம் கெட்டதாகக் குறிப்பிடவில்லை. காரணம் , இங்குள்ள வடிவம் வேறு; பொருள் வேறு. இவ்வடிவங்கள் செய்யுள் கருதிய , ஒருவகைத் தொகுத்தல் விகாரங்கள்.
" இரண்டலா " என்னும் தொடருக்கு [சத்து, அசத்து ] ‘இரண்டும் அல்லாத ‘ என்று பொருள் கூறி இரண்டும் என்பதன் முற்றும்மை [இரண்டு என] விகாரத்தால் தொக்கது (7) என்பர் வ.உ.சி. இது முனிவர் குறிப்பை வழிமொழிந்ததாகும்.
எழுவாய் - பயனிலை
தமிழ்த் தொடரமைப்பில் வினை பெயரிடையே பாலறி கிளவி இயைபு அடிப்படையானது.⁸
"ஆன்மா என்னும் எழுவாய் அன்று, சந்தித்தது, உணராது, அவத்தைத்து என்னும் நான்கு பயனிலைகளைக் கொண்டு நின்றது (4) " என்னும் குறிப்பு மொழியமைதி சார்ந்ததெனினும் பொருள் தெளிவு கருதியது.
" திதி - நிலைபேறு. திதியையுடைய பொருள்களைத் திதி என்றார். "திதி" சாதியொருமை (1) " பொருள்கள் பலவும் ஒரு பிரிவுக்குள்/ சாதிக்குள் அடங்குவதால் திதி என்பது சாதியால் ஒருமை. முனிவர் சற்று வேறுபட்ட பொருள் கண்டுள்ளார். எனவே இலக்கணக் குறிப்பை ஒப்பிட இயலாது.
[அவன் ,அவள், அது என்னும்]அம் முப்பொருள்களில், ஒவ்வொன்றும் ஒடுங்கி உளதாம் என்பதை உணர்த்தவே உளதாம் என்று ஒருமையில் கூறினார் (1) என்பர் வ.உ.சி.
" மலமாயை தன்னொடு வல்வினை யின்றே " (10) என்பதற்கு ‘ மலமாயையென்னும் இரண்டனோடு வலிய கன்மமலமும் இல்லையா யொழியும்’ என்பது முனிவர் தரும் பொருள்.
‘ ஆணவ மலத்தோடும் மாயா மலத்தோடும் வலியதான கன்ம மலம் இல்லையாகும் ‘ என்பது வ.உ.சி.தரும் பொருள்.
‘ இன்றே ‘ என்பது ஒன்றன்பால் குறிப்பு வினை முற்று. எனவே ‘ மாயையோடு கூடிய வினை என்றாராகலின் இன்றே யென்றார் ‘ என வினை என்னும் ஒருமை எழுவாய்க்கு முற்றாகக்காட்டி அமைதி காண்கிறார் முனிவர்(இணைப்பு 3:3 காண்க)
சாரியை :ஒருமை பன்மை இயைபு
மலமாயை தன்னொடு என்பதில் தன் சாரியையாயின் மலமாயை தம்மொடு என்றிருத்தல் வேண்டும். தன், தம் என்பன முறையே எண்ணுணர்த்தும் சாரியைகள். பன்மையொடு தன் வருவதை நோக்கிய வ.உ.சி. தன் என்பதைச் சாரியையாக அன்றி அசையெனக் குறித்து அமைதி காண்கிறார். இது நுட்பமானது. முனிவர் இதனைக் கருதாமைக்குக் காரணம் புலப்படவில்லை.
தன் என்பதைச் சாரியையாகவே கொண்டு, உரை விளக்க ஆசிரியர் பொ.முத்தையா பிள்ளை , " மலமாயை தம்மொடு என்றுகூறாமல் தன்னொடு என்ற கருத்து என்னையெனின், தன் என்னும் ஒருமை தனித்தனி மலத்தோடும் மாயையோடுங் கூடி மலந்தன்னோடு மாயை தன்னோடு எனக்கொள்ளுமாறு அவ்வாறு கூறினார்" என்று அமைதி காண்கிறார்.
வேற்றுமை
வேற்றுமை :தொகை
மலத்துளதாம் என்னும் தொடருக்கு ' மலங்களால் உளதாகும் ‘ எனப்பொருள் கூறி, 'மலம் என்பது மூன்றாம் வேற்றுமைத்தொகை (1) என்று குறிப்புத் தருகிறார் வ.உ.சி. இதுவும் முனிவரை வழிமொழிந்ததாம். எனினும் வ.உ.சி. இன்ன வேற்றுமை எனச் சுட்டித் தெளிவுபடுத்தியுள்ளார்.
‘அவை சந்தித்தது ‘ என்னும் தொடருக்கு [ஆன்மா, அந்தக்கரணமாகிய மனம் முதலியவற்றுள் ஒன்றன்று ] அவற்றொடு கூடியது என்று பொருள் கூறி, அவை என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை (4) எனக் குறிப்புத் தருகிறார் வ.உ.சி. சற்றே வேறு சொற்களால் இவ்வாறே பொருள் கொண்ட முனிவர் , ஒடுவுருபு விகாரத்தாற் றொக்கது; இரண்டாவது விரிப்பினு மமையும் என மற்றொரு வாய்ப்பும் தருகிறார். எளியவுரையில் ஒன்றைக் குறித்தால் போதும் என்று வ.உ.சி.கருதியிருக்கலாம்.
வேற்றுமை: தொகை விரித்துப் பொருள் விளக்கல்
மலம் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை எனக் குறிப்புத் தந்ததோடு , ஆல் உருபை விரித்து , வறுமையால் இரந்தனன் என்பது வறுமையைப் போக்குவதற்காக இரந்தனன் எனப் பொருள் தருதல்போல், "மலத்தால் உளதாம்” என்பது "மலத்தைப் போக்குவதற்காக உளதாம்" எனப் பொருள் தந்து நின்றது (1) எனப் பொருள் விளக்கமும் தருகிறார் வ.உ.சி.
முனிவரும் இவ்வாறே பொருள் தரினும் இலக்கணக் குறிப்போ விளக்கமோ தரவில்லை.
வேற்றுமை : மயக்கம்
மூவினைமையின் என்னும் தொடருக்கு ,' (அவன் அவள் அது என்னும் முப்பொருளும் தோன்றல், நிற்றல், அழிதல் என்னும்) மூன்று வினையுடைமையோடு (தோன்றிய பொருள்களே)' என்று பொருள் கூறி,இன் என்பது ஒடு என்னும் பொருள் தந்து நின்றது(1) என்று குறிப்புத் தருகிறார் வ.உ..சி.
முத்தொழிலுடைமையால் என்று ஆல் உருபு கொள்ளும் முனிவர் இலக்கணக் குறிப்புத் தரவில்லை.
இவற்றிடையே மெய்யியல் அமிசத்தில் வேறுபாடிருக்கலாம்.
" ஞானக்கண்ணினின் " என்னும் தொடருக்கு ‘ (உயிர்)இறைவனை உணரும் அறிவால் ‘ எனப் பொருள் கூறி, கண்ணினின் என்பதன் ... இரண்டாம் ''இன்' ஆல் என்னும் பொருளில் வந்தது (9) என்று குறிப்புத் தருகிறார் வ.உ.சி. அத்தொடருக்கு ‘அவனது திருவடி ஞானத்தால் ‘ எனப் பொருள் கண்டார் முனிவர்.
முனிவர் இறைவனது ஞானம் எனக் கருத, வ.உ.சி. உயிர்களின் ஞானம் என்று கொள்கிறார். இது மெய்யியல் கருத்துவேறுபாடு. முனிவரும் ஆல் உருபு விரித்துக்கொள்ளினும் இலக்கணக் குறிப்புத் தரவில்லை.
ஆகுபெயர்
புலன் - விஷயம். புலன் என்பது ஈண்டு. ஆகுபெயராய் அதனைப் பற்றும் பொறிக்கு ஆயிற்று(3) என்கிறார் வ.உ.சி. ஐம்புலன் என்றே கொள்கிறார் முனிவர்.
புலம் என்பது ஆகுபெயர்; அவற்றைப் பற்றும் பொறிகளுக்கு ஆயினமையால் (8) எனப் பிறிதோரிடத்திலும் குறிப்புத் தரும் வ.உ .சி. இங்கு முனிவரை வழிமொழிகிறார் .
தமி- ஒப்பின்மை; அஃது ஈண்டு ஆகுபெயராய் ஒப்பில்லாத இறைவனுக்கு ஆயிற்று (5) என்பது வ.உ.சி.குறிப்பு. தமி – முதல்வன் என்று பொருள் தரும் முனிவர் விளக்கும்போது, '' தமியென்றது தமது முதலென்னும் பொருள்பட வந்த [து]" என்கிறார். இலக்கணக் குறிப்பேதும் தரவில்லை.
‘ பாசம் உணராப் பதி ‘ என்பதற்கு ‘ மல அறிவும் அறியாத இறைவன் ‘ என்று பொருள் காணும் வ.உ.சி." பாசம் என்பது ஆகுபெயர். அதனையுடைய அறிவிற்கு ஆயினமையால் (9) " என்று குறிப்புத் தருகிறார். முனிவர் பாசம் என்பதற்குப் பாச அறிவு என்று பொருள் கூறினாலும் குறிப்பேதும் தரவில்லை.
உபசார வழக்கு
அரனை அரன் கழல் என்றது உபசார வழக்கு (8),இறைவனை இறைவன் கழல்¶ என்றது உபசார வழக்கு (11),'செம்மலர் நோன்றாள்' என்பது இறைவனுக்குக் கூறப்பட்ட உபசாரம். '(12) ஆகியன வ.உ.சி. தரும் குறிப்புகள்.
முனிவர் இரண்டு இடங்களில் (8 & 12) நேர்ப்பொருள் கொண்டார் ; ஓரிடத்தில் (11) திருவடியாகிய சிவானந்தாநுபூதி – என உருவகப் பொருள் கொண்டார் .
முதல் நூற்பா விளக்கத்தில் முனிவர் , ‘ அந்தத்தைச் செய்யும் கடவுளை அந்தமென்றது உபசாரம் ‘ என்றார். மாறாக வ.உ.சி. தன்னினங் கோடல் என்னும் உத்தியால் வேறு பொருள் கொண்டார்.
தன்வினை - பிறவினை
அவனவ ளதுவெனு மவைமூ வினைமையிற்
றோற்றிய திதியே ... ...(1)
என்பது முனிவர், வ.உ.சி. இருவரும் கொள்ளும் பாடம். இருவர்க்கும் முந்தைய பாண்டிப் பெருமாள் இரண்டாமடியின் முதலில் ‘தோன்றிய ‘ என்று பாடங் கொண்டார்.
தோற்றிய திதியே என்பதற்கு 'ஒருவனால் தோற்றப்பட்டதாய உள்பொருளே ‘ என்று பொருள் கண்டார் முனிவர் ; " தோன்றிய வென்னாது தோற்றியவெனப் பிறவினை வாய்பாட்டானோதுதலின் , அதற்குரிய எழுவாய் அவாய்நிலையான் வந்தது என விளக்கமாக இலக்கணக் குறிப்பும் தந்தார் .
அதே பாடங் கொண்ட வ.உ.சி. அத்தொடருக்கு, ' தோன்றிய நிலைபேறுடைய பொருள்களே ‘ எனப் பொருள் கூறியுள்ளார் ; விளக்கமோ இலக்கணக் குறிப்போ தரவில்லை.
வினைத்தொகை
உணர் உரு = சுட்டி அறியும் சொரூபம் எனப் பொருளுரைத்து, உணர் என்பது வினைத்தொகை (6) என்று குறிப்புத் தருகிறார் வ.உ.சி. உணரும் உரு என்று விரித்துக்கொள்ள வேண்டும்.
வினையெச்சம்
காப்புச் செய்யுளின் அருளிய என்னும் சொல்லுக்கு அருளுதற்பொருட்டு என்று உரை வரைந்த வ.உ.சி. அருளிய என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் என்று குறிப்புத் தருகிறார். மேலும் , " அருளிய என்பதற்குப் பெற்றருளிய எனவும் உரைப்பினும் அமையும் “ என்கிறார். இரண்டு குறிப்புகளும் முனிவரை வழிமொழிந்தவை.
" அருளிய பொல்லாரெனப் பெயரெச்ச முடிபாகவைத்துரைப்பினு மமையும்... உலகத்துப் புதல்வர்கண்மாட்டுச் செய்யும் வழிபாடு தந்தையர்க்குக் கழிபேருவகை பயப்பிக்குமாகலின், அந்நயம்பற்றி அங்ஙனங் கூறியதூஉமாம்." என்பது முனிவர் காட்டும் நயம்.
"நாடி என்பது வினையெச்சம். மழைபெய்து பயிர் விளைந்தது என்புழிப் பெய்து என்னும் வினையெச்சம் பெய்ததால் என்னும் பொருள் தந்து நிற்றல் போல, நாடி என்னும் வினையெச்சம் நாடியதால் என்னும் பொருள் தந்து நின்றது...நாடி என்பதனை இகர வீற்றுமுன்னிலை ஏவல் என்று உரைப்பாரும் உளர். முன்னிலைப் பொருள் ஈண்டுப் பொருந்தாது (9) என்கிறார் வ.உ.சி.
‘நாடி – ஆராய்ந்தறிக ‘ என்று பொருள் கூறி, ‘நாடி என்பது இகரவீற்று முன்னிலை ஏவல் ‘ எனக் குறிப்பும் தந்துள்ள முனிவர் கருத்தைத்தான் அவர் பெயர் சுட்டாமல் மறுத்துள்ளார் வ.உ.சி. (இணைப்பு 3:4 காண்க)
பிறிதொரு வினையெச்சம் பற்றியும் இங்குக் காண்போம்.
தோற்றிய திதியே யொடுங்கி மலத்துளதாம் (1) என்பதற்கு ,’[திதி] தோன்றுங்கால் தானொடுங்குதற்கு ஏதுவாய் நின்ற கடவுளின்றும் ... மீளத்தோன்றுவதாம் ‘ என்று பொருள் கூறி , ' ஒடுங்கியென்பது பெயர் ‘ என்று குறிப்புத் தருகிறார் முனிவர்.
ஒடுங்கி என்ற சொல்லைச் சிவஞான முனிவர் கடவுள் என்ற பொருளில் பெயர்ச் சொல்லாகவே எடுத்துக் கொள்கின்றார். அவர்க்கு முன் தோன்றிய பாண்டிப் பெருமாள் விருத்தியிலும் சிந்தனை உரையிலும் "ஒடுங்கி" என்பதை ஆற்றொழுக்காக வினையெச்சமாகவே கொள்கின்றார்கள்... சிவஞான முனிவர் எவ்வளவு நுட்பமாகச் சில இடங்களில் வலிந்து பொருள் கொண்டாலும் சிறந்த சித்தாந்தக் கருத்துக்களைப் பெற வைத்திருக்கின்றார் என்பது தெளிவாகின்றது⁹.
என்கிறார் கொ.நீ.சிங்காரவேலு. இங்கு முனிவரின் இலக்கணக் குறிப்பு , புலமைசார் குறிப்பு வகை சார்ந்தது.
ஒடுங்கி என்பது குறிப்புத் தரவேண்டாத இயல்பான வினையெச்சம். எனவே, வ.உ.சி.யும் குறிப்புத் தரவில்லை. ஆனால், முனிவர் தாம் கொள்ளும் சித்தாந்தக் கருத்துக்களைப் பெறவைப்பதற்காக வலிந்து இலக்கணத்தைக் கருவியாகக் கொள்கிறார்.
சொல்லெச்சம்
மெய்வாய் கண்மூக் களந்தறியா (5) - என்னும் தொடரில் செவி விடுபட்டுள்ளது. எனவே " செவி என்பது சொல்லெச்சம். சொல்எச்சம் - சொல் எஞ்சி (குறைந்து)நிற்றல்." என்று இலக்கணக்குறிப்பும் அக்குறிப்பின் பொருளும் தருகிறார் வ.உ.சி. இக்குறிப்பு முனிவரை வழிமொழிந்தது.
அதே நூற்பாவிலுள்ள ,
' ... ... மெய் வாய் கண் மூக் (கு)/ அளந்து அறிந்தும் அறியா ஆங்கு அவை போலத்/ தாம்தம் உணர்வின் தமி அருள் ... ' என்னும் அடிகளுக்கு , " [ஐம்பொறிகளும்] (தத்தம் புலன்களை) அளவிட்டு அறிந்தும் (உயிரை) அறியமாட்டா. அப்பொறிகள் போல உயிர்கள் தமது அறிவால் இறைவனது சிற்சத்தியை அறியமாட்டா" எனப் பொருள் கூறும் வ.உ.சி. ,
' தாம் தம் உணர்வின் தமி அருள் ' என்பதன் பின் 'அறியா ' என ஒருசொல் எஞ்சி நிற்பதாகக் கொண்டு ' அறியா என்பது சொல்லெச்சம் ' என்று குறிப்புத் தருகிறார்.
உத்தி
அந்தமுறுதல் என்பதற்குத் 'தன்னினங்கோடல்’ என்னும் உத்தியால் தோன்றலும் நிற்றலும் என்பனவற்றைச் சேர்த்துப் பொருள் உரைக்கப்பட்டது (1) என்று, அந்தம் என்னும் ஒரு சொல் இருக்க அதனோடு தோன்றல், நிற்றல் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்கிறார்.
பொருள்கோள்
[அவையே தானேயாய் என்னும் தொடரை]பொருட் பொருத்தம் பற்றித் “தானே அவையேயாய்” என்று கொண்டுகூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது (2) என்கிறார் வ.உ..சி. இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால், அவையே யாய், வேறுமாய் , உடனுமாய் என்று பொருள் கொள்கிறார் சிவஞான முனிவர் .
‘இலது என்றல்’ முதலிய ஐந்து செயல்களால் மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா உளது என்று கொண்டு கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது (3) என்கிறார் வ.உ.சி. [‘உளது’ என்று தொடங்கி ‘ஆன்மா’ என முடியும்] ‘இது பூட்டுவிற் பொருள்கோள் ‘என்பர் முனிவர். இது பொருத்தமானது.
‘ தம்முதல் குருவுமாய் ‘ என்னும் தொடரைத் தம் முதல் , தம் குருவுமாய் எனக் கொண்டு , தமது இறைவன் தமது குருவுமாகி என்று பொருள் கூறித் ‘ தம் என்பது குருவுடனும் கூட்டி உரைக்கப்பட்டது (8)’ என்று குறிப்புத் தருகிறார் வ.உ.சி.
வழக்கு
அறிய முடியாத காரணத்தால் வந்ததனை மாயையால் வந்தது எனக்கூறுவது வழக்கு(1),அறிவினைக் கண் என்று கூறுவது வழக்கு. உதாரணம் – அகக்கண் (9) எனச் சிலவற்றுக்கு வழக்கு எனக் குறிப்புத் தந்துள்ளார் வ.உ.சி.
முடிபுகள்
o சிவஞான முனிவர் கொண்ட பொருளில் உடன்படும் இடங்களில் மட்டும் அவர் தரும் இலக்கணக் குறிப்புகள் சிலவற்றை வ.உ.சி. வழிமொழிந்து ஆண்டுள்ளார் ;
o தாம் கொண்ட கருத்திற்கேற்பவே பெரும்பாலான இலக்கணக் குறிப்புகளைத் தந்துள்ளார் ;
o ஓரிடத்தில் மட்டும் பெயர் சுட்டாமல் சிவஞான முனிவரின் இலக்கணக் குறிப்பைச் சற்றே வன்மையாக மறுத்துள்ளார் ;
o தமிழின் இயல்பையும் தாம் கொள்ளும் பொருளையும் தெளிவுபடுத்தும் பொருட்டு வ.உ.சி. சொல் , தொடர்ப் பொருளை மட்டுமன்றி மொழியமைதியையும் கருதி இலக்கணக் குறிப்புகள் தந்துள்ளார்.
o வ.உ.சி. உரையில், வலிந்து பொருள் கூற இலக்கணத்தைக் கருவியாகக் கொள்ளும் புலமைசார் இலக்கணக் குறிப்பு இல்லை.
o நுட்பமான குறிப்புகளால் தம் இலக்கணப் புலமையோடு தோய்வையும் புலப்படுத்தியிருக்கிறார் வ.உ.சி.
o வ.உ.சி.யின் இலக்கணக் குறிப்புகளுள் விவாதத்திற்கிடமானவை இல்லாமலில்லை.
o நூற்பாப் பொருள் தரும் வகையில் பாண்டிப் பெருமாள் உரை எளியவுரை . சிவஞான முனிவர் உரை மெய்யியல் கருத்துகளும் இலக்கணப் புலமையும் அடர்ந்த கடினவுரை. வ.உ.சி. உரை இலக்கணக் குறிப்புகள் இடைமிடைந்த எளியவுரை.
o எளியவுரை என்னும் நோக்கில் சிறிய அளவில் இயன்றதாயினும் பிற எவர் உரையினதும் சுருக்கமாகவன்றிச் சித்தாந்தக் கருத்துகள் இலக்கணக் குறிப்புகள் ஆகியவற்றின் தனித்தன்மைகளால் வ.உ.சி. உரை சிவஞான போத உரை வரலாற்றில் தனித்துச் சுட்ட வேண்டிய உரை.
குறிப்புகள்
* சிவஞான போத நூற்பாக்களையும் உரைப்பகுதிகளையும் காட்டுமிடங்களில் நூற்பா எண்கள் மட்டும்அடைப்பினுள் தரப்பட்டுள்ளன . பார்ப்பதற்கு வசதியாகச் சிவஞானபோத நூற்பாக்கள் இணைப்பு 1 இல் தரப்பட்டுள்ளன.ஆங்காங்கு அடைப்பினுள் தரப்பட்டுள்ள பக்க எண்கள் யாவும் ஆ. இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த வ.உ.சி.யின் சிவஞான போத உரை (2022) எனும் நூலில் உள்ளவை.
¶ வ.உ.சி. காலத்து முதற்பதிப்பிலேயே (கழல் என்பது நிழல் எனவும் அல்லாதது என்பது இல்லாதது எனவும்)நேர்ந்துவிட்ட அச்சுப்பிழைகள் திருத்திக்கொள்ளப்பட்டுள்ளன..
1.செ.ஜெயராஜ், 'ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்த வ.உ.சி.யின் சிவஞானபோத உரை', சிற்றேடு, சூலை - செப். 2019.
2 வ.உ.சி.,'கடவுளைக் காண்டல்' , தை , 1936. (வேங்கடாசலபதி பதிப்புக்குறிப்பு)
3.மு. அருணாசலம்,தமிழ் இலக்கிய வரலாறு -தமிழ்ப் புலவர் வரலாறு -பதின்மூன்றாம் நூற்றாண்டு,பக்.257 -258.
4.சி.சு.மணி, ‘சித்தாந்த மரபும் வ.உ.சி.யின் உரையும் ‘, வ.உ.சி.யின் சிவஞானபோத உரை (பதிப்பாசிரியர்: வேங்கடாசலபதி, ஆ.இரா.) பக்.37- 43. வேதாந்திகளும் இவ்வுரையைக் கண்டுகொள்ளவில்லை என்கிறார் சி.சு.மணி.
வ.தென்கோவன், சிவஞானபோத உரைகள் ஓர் ஆய்வு , பக்.69 - 70. இதில் 1897 முதல் 1996 வரை வந்த இருபத்தொருவர் உரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன ; வ.உ.சி. உரை இல்லை.
5.அன்றே aṉṟē , ind. < அன்மை-று + ஏ. Is it not so?, a neg. interrogative, equivalent to an emphatic affirmative; அல்லவா? (தொல். சொல். 282, சேனா.)] – TAMIL LEXICON
6.கெட்டுப்போ-தல் keṭṭu-p-pō- , v. intr. < கெடு¹- +. 5. To be lost, as goods; காணாமற்போதல். Colloq. எனச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (TAMIL LEXICON) , பேச்சுவழக்காக (Colloq.) இதனைத் தருகிறது. இலக்கண மரபிற் கூறப்படும் கெடுதல் இப்பொருளினதாகலாம்.
7.வெளிப்படை veḷippaṭai , n. < வெளிப்படு¹- 4. (Rhet.) A figure of speech in which the meaning of an ambiguous word is made clear by the use of a qualifying word, as pāyā- vēṅkai; பல்பொருள் குறிக்குஞ் சொல்லை ஒரு பொருட்கு நியமிக்கும்பொருட்டு ஏற்றதோர் அடை கொடுத்துக் கூறும் அணிவகை. (புறநா. 17, உரை.) - TAMIL LEXICON
8.பெரிதும் இதனை அடிக்கட்டுமானமாகக் கொண்டு தொல்காப்பியக் கிளவியாக்கம் எழுந்துள்ளது . இந்தக் கட்டுமானத்தினின்றும் விலகி வருவனவற்றுள் ஏற்புடையவற்றை வழுவமைதி என்பது மரபு.
9.சிங்காரவேலு,கொ.நீ., சிவஞானபோத முதல் சூத்திர விளக்கம், பக். 27 – 28.
துணை நூல்கள்
முதன்மைச் சான்றாதாரம்
வ.உ.சி.யின் சிவஞானபோத உரை (பதிப்பாசிரியர்: வேங்கடாசலபதி, ஆ.இரா.) காலச்சுவடு, நாகர்கோவில், 2022.
துணைமைச் சான்றுகள்
அருணாசலம், மு., தமிழ் இலக்கிய வரலாறு -தமிழ்ப் புலவர் வரலாறு -பதின்மூன்றாம் நூற்றாண்டு,காந்தி வித்தியாலயம் , மாயூரம் , தஞ்சை ஜில்லா, 1970
சிங்காரவேலு,கொ.நீ., சிவஞானபோத முதல் சூத்திர விளக்கம், சைவ சித்தாந்தப் பெருமன்றம்,சென்னை, 1992
தென்கோவன், வ.,சிவஞானபோத உரைகள் ஓர் ஆய்வு (அச்சிடப்பெறாத முனைவர் பட்ட ஆய்வேடு), புதுவைப் பல்கலைக்கழகம் , 2006.
பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும்,(பதிப்பாசிரியர்:அ. தாமோதரன் ), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1999.
பாண்டிப்பெருமாள் (விருத்தியுரையாசிரியர்), சிவஞானபோதம் , திருவாவடுதுறையாதீனம், திருவாவடுதுறை, 1955.
முத்தையா பிள்ளை, பொ. (உரைவிளக்க ஆசிரியர்), சிவஞானபோதச் சிற்றுரை விளக்கம் (மெய்கண்டாரின் சிவஞானபோத மூலமும் சிவஞான சுவாமிகள் உரையும்) சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை, 1989.
இதழ்
சிற்றேடு, பெங்களூர், ஜூலை - செப்.2019.
அகராதி
TAMIL LEXICON , University of Madras, 1982.
இணைப்பு 1
சிவஞானபோதம்
(வ.உ.சி. பாடம்)
காப்பு
கல்லா னிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.
முதல் சூத்திரம்
அவனவ ளதுவெனு மவைமூ வினைமையிற்
றோற்றிய திதியே யொடுங்கி மலத்துளதா
மந்த மாதி யென்மனார் புலவர் (1)
இரண்டாம் சூத்திரம்
அவையே தானே யாயிரு வினையிற்
போக்கு வரவு புரிய வாணையி
னீக்க மின்றி நிற்கு மன்றே (2)
மூன்றாம் சூத்திரம்
உளதில தென்றலி னெனதுட லென்றலி
னைம்புல னொடுக்க மறிதலிற் கண்படி
லுண்டிவினை இன்மையி னுணர்த்த உணர்தலின்
மாயா வியந்திர தனுவினு ளான்மா (3)
நான்காம் சூத்திரம்
அந்தக் கரண மவற்றினொன் றன்றவை
சந்தித்த தான்மா சகசமலத் துணரா
தமைச் சரசேய்ப்பநின் றைந்தவத் தைத்தே (4)
ஐந்தாம் சூத்திரம்
விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக்
களந்தறிந் தறியா வாங்கவை போலத்
தாந்த முணர்வின் றமியருள்
காந்தங் கண்ட பசாசத் தவையே (5)
ஆறாம் சூத்திரம்
உணருரு வசித்தெனி னுணரா தின்மையா மிருதிற னல்லது சிவசத் தாமென
விரண்டு வகையி னிசைக்குமன் னுலகே (6)
ஏழாம் சூத்திரம்
யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ராகலிற்
சத்தே யறியா தசத்தில தறியா
திருதிற னறிவுள திரண்டலா வான்மா (7)
எட்டாம் சூத்திரம்
ஐம்புல வேடரி னயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்
டந்நிய மின்மையி னரன்கழற் செலுமே (8)
ஒன்பதாம் சூத்திரம்
ஊக்கண் பாச முணராப் பதியை
ஞானக் கண்னினிற் சிந்தை நாடி
யுராத்துனைத் தேர்த்தெனப் பாச மொருவ
தண்ணிழலாம் பதிவிதி யெண்ணுமஞ் செழுத்தே (9)
பத்தாம் சூத்திரம்
அவனே தானே யாகிய வந்நெறி
யேக னாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே (10)
பதினொராம் சூத்திரம்
காணும் கண்ணுக்குக் காட்டு முளம்போற்
காண வுள்ளத்தைக் கண்டு காட்டலி
னயரா வன்பி னரன்கழற் செலுமே (11)
பன்னிரண்டாம் சூத்திரம்
செம்மலர் நோன்றாட் சேர லொட்டா
வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
மாலற நேய மலிந்தவர் வேடமு
மாலயந் தானு மரனெனத் தொழுமே (12)
- - - - - - - - - - - - - -
இணைப்பு 2
தீக்கை யாது? - வ.உ .சி
சிவஞான போதவுரை செப்புதற்குத் தீக்கை
தவஞானம் வேண்டுமெனச் சாற்றி - நவஞானம்
பேசுகின்றா ரவ்விரண்டும் பேரளவிற் கேட்டசிலர்
ஏசுகின்றா ரென்னையில் னென்று.
'தீக்கை' வடமொழியின் 'தீக்ஷா' வெனுஞ்சொல்லே
'தீ'க்கர்த்தம் 'ஞானநல்கல்' 'க்ஷா'க்கர்த்தம் - 'போக்கனமலம்'
"உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு."
ஞானமுறன் மாசறுத்த னண்ணுந் துயர்தாங்கல்
ஈனவுயிர்க் குந்தீங் கியற்றாமை - யானென்னின்
காலமெல்லாங் கொண்டுள்ளேன் கண்ணுடையார் கூறுவரோ
ஏலவுயர் தீக்கையிலே னென்று.
அன்றியுமிவ் வையமெலா மாக்கி யளித்தழித்து
மன்றுறைவா ரென்னுள்ளே வாழ்கின்றா - ரென்றறிவார்
தீக்கையிலே னென்றிகழ்ந்து செப்பாரென் னுள்வாழ்வார்
தீக்கைசெய்து வையாரோ சேர்த்து.
இச்செய்யுள்களின் அச்சுத்தாளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது சிவஞான பாடியம் 22-ம் பக்கத்திலிருந்து பின்வரும் வாக்கியங்கள் கிடைத்தன: "விஞ்ஞானகலர்க்கு முதல்வன் உண்ணின்றவாறே தீக்கை யென்னும் இயற்கைப் பெயருடைய தனது கிரியாசக்தி சங்கற்ப மாத்திரையானே மல நீக்குவதன்றி ஔத்திரி தீக்கையான் அன்றென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது”. “முதல்வனது கிரியாசக்தி சங்கற்பமொன்றே மல நீக்கத்திற்குக் காரணமெனவும், கிரியாசக்தியும் ஞானசக்தியுந் தம்முள் வேறன்மையான் உபசாரத்தாற் றீக்கை யெனப் பெயர் பெறும் ஒளத்திரி முதலியவை சஞ்சித வினையை நீக்கி உரிமைப்படுத்து முகத்தானே ஞானத்திற்கு அங்கமாவதன்றிச் சுதந்தர மாகாதெனவுந் தெற்றென உணர்க."
- வ.உ.சி.யின் சிவஞான போத உரை (ஆ. இரா.வேங்கடாசலபதி பதிப்பு) , ப. 69.
இணைப்பு 3
தி.மோகன்ராஜ்
(ஆய்வாளர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை) அவர்களின் கருத்து:
1
உளது - ஒற்றுக் கெட்டு நிற்றல்
வ.உ.சி. ஒற்றுக் கெட்டதாகச் சுட்டும் உளது என்னும் வடிவம் தொல்காப்பிய உரையாசிரியர்களால் அடிப்படை வடிவமாகக் கொள்ளப்பட்டதாகவே தோன்றுகிறது. உள என்பதன் ஒருமை இணையாக உளது என்பதையே சேனாவரையர், நச்சினார்க்கினியர் இருவரும் குறித்துள்ளனர் (தொல்.சொல்.220, சேனா.). செய்யவென் எச்சம் எனக் குறிப்பிடாமல் செயவென் எச்சம் எனக் குறிப்பதும் இங்குக் கருதத்தக்கது.
ஆனால், உள்ளது/உளது, என்னின்/எனின், என்னும்/எனும் என்பனவற்றில் எது அடிப்படை வடிவம் என்பது ஆய்விற்குரியதாகவே உள்ளது.
உளவென் கிளவி எனத் தொல்காப்பியம் அஃறிணைக் குறிப்பு வினையாக மேற்சுட்டிய நூற்பாவில் சுட்டியிருந்தாலும் பெயரியலில் உள்ள என்னும் சொல்லையும் சுட்டியுள்ளது(தொ.சொ.168, சேனா.). வினையையும் வினையாலணையும் பெயரையும் வேறுபடுத்திக் காட்ட இவ்வடிவ வேறுபாட்டைக் கருதியிருக்கலாம்.
என்னின் என்பதைக் காட்டிலும் எனின் என்பதே சங்க இலக்கியங்களில் அதிகம் பயின்று வந்துள்ளது.
பாண்டியராஜா அவர்களின் தொடரடைவின்படி எனின் -31 இடங்களில் வர என்னின் - 1 இடத்தில் மட்டுமே வந்துள்ளது.
ஆனால் இதற்கு மாறாக, எனும் என்ற வடிவம் 8 இடங்களில் மட்டுமே வர என்னும் என்ற வடிவம் 88 இடங்களில் வந்துள்ளது.
செய்யும்(32) செயும்(1) வரவிலும் செய்யும் என்பதே அதிகமாக வந்துள்ளது.
2
உரா-உராது என்னும் வினையெச்சம்
வ.உ.சி. உரா என்பதை உராது என்னும் செய்யாது வாய்பாட்டின் திரிந்த வடிவமாகக் கொள்கிறார். செய்யா என்னும் வினையெச்ச வடிவமும் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு பொருளிலும் வருகின்றது எனினும் அதைக் கொள்ளாமல் செய்யாது வாய்பாடு திரிந்ததாகவே கொண்டுள்ளார்.
மேலும், உரா என்பதை வினையெச்சமாகக் கொண்டால் அதன் முடிப்பு வினை பாட்டில் வெளிப்படையாக இல்லை. வ.உ.சி. செல்கின்ற என்ற சொல்லை வருவித்துக்கொண்டு 'பொருந்தாது... செல்கின்ற' என வினை முடிபைக் காட்டியுள்ளார். வினையெச்சம் தொடரில் இடம்பெற்று அதன் முடிப்பு வினை தொடரில் இடம்பெறாமல் உள்ளது எனக் கொள்வது இயல்பான விளக்கமாகக் கொள்ளப்படுமா என்பது ஐயமாக உள்ளது.
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே (ஐங்.106)
என்னும் ஐங்குறுநூற்றுப் பாடலின் உரையில் நினைந்து என்னும் வினையெச்சத்தின் முடிப்பு வினையாகப் பசந்து என்னும் வினையெச்சத்தை ஔவை வருவித்துள்ளார். ஆனால், பெருமழைப் புலவர் ஆற்றொழுக்காக நினைந்து என்பதன் முடிப்பு வினையாகக் கண்டிசின் என்பதைக் கொள்கிறார். இவர்களின் உரைக்கு ஏற்றவாறு வினையெச்ச, முடிப்பு வினையின் வினைமுதல்கள் மாற்றமடைகின்றன. எனினும், வினையெச்சத்தின் முடிப்பு வினை செய்யுளில் இடம்பெறாமல் இருக்குமா என்னும் கேள்வி எழுகிறது. (பெயரெச்சம் இடம்பெற்று அதன் முடிப்புப் பெயர் இடம்பெறாமல் இருக்கும் என்பதைப் போன்றது).
இத்துடன் உராவு என்பதற்குப் பரவுதல், இடம்பெயர்தல் போன்ற பொருள்களே தமிழ்ப் பேரகராதியில் உள்ளன. பொருந்துதல் என்னும் பொருள் இல்லை. (உறாது என்பதற்கு இப்பொருள் பொருந்தும்).
3
எழுவாய்-பயனிலை இயைபின்மை (அவை - உளது)
தமிழில் சில தொடர்கள் தலைமை பற்றிப் பன்மை எழுவாய்க்கு ஒருமை வினை வருகின்ற அமைப்பில் காணப்படுகின்றன.
சேனாவரையர்(தொல்.சொல்.51) கீழ்க்காணும் சான்றுகளை வழங்கியுள்ளார்.
தானும் தன் புரவியும் தோன்றினான்
தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்
பரிமேலழகர் சிறப்பொடு பூசனை செல்லாது என்னும் குறளின் உரையில்
விழாவும் பூசையும் நடவாது
என்றே குறித்துள்ளார். மாணிக்கவாசகர் பாடலிலும்
தானும் தன்தையலும் தாழ்சடையன் ஆண்டிலனேல்
என்னும் தொடர் காணப்படுகிறது. எனவே, எழுவாய்-பயனிலை இயைபு இலக்கண நிலையில் மட்டுமல்லாமல் பொருண்மை நிலையிலும் விளக்கப்பட வேண்டிய அமைப்பிலான சான்றுகள் தமிழ் மரபில் இடம்பெறுகின்றன.
4
நாடி - முன்னிலை ஏவல்
சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் விளக்குவது போல இகர ஈற்று முன்னிலை விகுதி இறப்பல்லாக் கால இடைநிலையுடன்தான் இடம்பெறும்(வருதி, கருதுதி, ஊக்குதி). கால இடைநிலை இன்றி நேரடியாக வினைப் பகுதியுடன் இணையாது. நாடு என்னும் வினைப்பகுதி நாடுதி என அமையுமே தவிர நாடி என அமையாது. இதைக் கொண்டும் சிவஞான முனிவர் கருத்தை மறுக்கலாம்.
நன்றி!
இன்றியமையா நூல்களை உடனுக்குடன் அனுப்பியுதவிய புலவர் பொ.வேல்சாமி, வ.உ.சி.யின் முதற்பதிப்பால் ஐயமகற்றிய பேரா. ஆ.இரா.வேங்கடாசலபதி, இன்றியமையா நூல்கள் அனுப்பியதோடு கட்டுரையை முழுவதும் படித்துத் திருத்தித் தெளிவுறுத்திச் செவ்விதாக்கியுதவிய திருச்சி, தேசியக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் இரா.இராஜா ஆகியோர்க்கும் கருத்தரங்கவுரை கேட்டு விரிவாகவும் நுட்பமாகவும் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட திரு. தி.மோகன்ராஜ் அவர்களுக்கும் நன்றி.
தமிழக அரசும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 150' இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் ( 07.04.2022 ) கலந்துகொள்ளவாய்ப்பு நல்கிய தமிழக அரசுக்கும் , தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் – சிறப்பாகத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை ஆகியோர்க்கும் நன்றி.
No comments:
Post a Comment