மூன்று மாதத்திற்குள் , மீண்டும் மூக்குக் கண்ணாடி உடைந்துவிட்டது.
"கொஞ்சம் உறுதியாயிருந்தால் தேவலாம் " என்றேன்.
என் பையன் " வலைவழி வாங்கலாம் "என்றான்.
- என்று தொடங்கியது என் முகநூல் இடுகையொன்று .
அதனைப் படித்த திரு. அற்புதராஜ் சுந்தரம் அவர்கள் ,
" அன்புள்ள நண்பர் மதி! தேவலாம் என்ற சொல் எப்படி பயன்பாட்டிற்கு வந்தது ,எங்கிருந்து வந்தது..அதற்கு சமமான பண்பாட்டுச் சொல் என்ன?அகராதியில் தேவலாம் என்ற சொல் இல்லை.அகராதியில் பரவா என்று ஒரு சொல் இருக்கிறது.அதன் பொருள் கவலை,குற்றம் என்று இருக்கிறது. நாம் பரவா இல்லை என்று சொல்லுததற்கு பதிலாக பரவாயில்லை என்று எழுதுகிறோம். அப்படி எழுதுவது தவறு என்று தோன்றுகிறது. விளக்கமாக சொல்லுங்களேன்..." என்றார்.
என் விளக்கம்:
தாழ்வி(ல்)லை > தாவிலை > தேவலை ( குறிப்பு வினை முற்று) ¹
இதிலிருந்து - வரலாம் , போகலாம் என்பன போல் - தேவலாம் என்பது வழக்கில் வந்துவிட்டது. இது , எதிர்பார்ப்புக் குறிப்புடைய நோக்கு வினைச்சொல் (Modal Verb).²
பரவா/ பர்வா - பாரசீகத்திலிருந்து உருது, இந்தி, தமிழ் , கன்னடம் முதலிய மொழிகளுக்கு வந்த சொல். பரவா + இல்லை = பரவாயில்லை (வருமொழி முதல் காரணமாக யகரம் உடம்படுமெய்யாயிற்று)
—————————
தேவலாம் பற்றி மட்டும் பார்ப்போம்.
¹. தேவலை tēvalai , n. < தாழ்வு + இல்லை. cf. தாவிலை. 1. Better condition, as in health ; அனுகூலமான நிலை. இப்போது அவனுக்கு உடம்பு தேவலை. 2. That which is preferable ; விசேடமானது . அதைவிட இது தேவலை - TAMIL LEXICON ( University of Madras)
இப்பேரகராதி n.[noun] என்கிறது. எனக்கு உடன்பாடில்லை.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி , ' தேவலாம் வி.மு.* (பே.வ.)^ காண்க: தேவலை
- எனச் சுட்டித் 'தேவலை' என்பதற்கு ஏறத்தாழ ஒத்த மூவேறு பொருள் தருகிறது.
[ * வினை முற்று. ^ பேச்சு வழக்கு]
தேவலை , தேவலாம் என்பன வழக்கில் ஒரு பொருட் பன்மொழிகளாகவே இயங்குகின்றன. தரவுத்தளமொன்றை அடிப்படையாகக் கொண்டு புழக்கத்தில் குறிக்கும் பொருள்களைத் தருவதே புறநிலையிலான ஓர் அகராதி ஆக்கத்தின் நியாயமுமாகும்.
தேவலை , தாழ்வில்லை என்பதன் மருவிய வடிவம் எனப் பேரகராதி [ LEXICON ] தெளிவுபடுத்திவிட்டது. தேவலாம் என்பதை அது தரவில்லை.
தேவலாம் -
நான் வேறு அதைப் பயன்படுத்தித் தொலைத்துவிட்டேன்.
திரு.அற்புதராஜ் சுந்தரம் ," எப்படிப் பயன்பாட்டிற்கு வந்தது?எங்கிருந்து வந்தது? " என்று கிடுக்கிப் பிடி போடுகிறார்.
என்ன செய்வது ? சமாளிப்பியம் தவிர வேறு வழி?
². டாக்டர் பொற்கோ அவர்களின் தற்காலத் தமிழ் இலக்கணம் கைகொடுத்தது. அவரது 'இக்காலத் தமிழ் இலக்கணம்'° வினை நோக்குத்(MODALS) துணைவினைகளை விவரித்துள்ளது. அவற்றுள் ஒன்று செய்யலாம் என்னும் வாய்பாட்டு வினைமுற்று.
" செய்யலாம் என்ற வாய்பாட்டு வினைமுற்றுகள் அனுமதி அளிப்பது போலவும் எதிர்பார்ப்புக்குறிப்பை வெளிப்படுத்துவது போலவும் அமைகின்றன " (ப. 73)
ஆனால்,
தேவலாம் என்பது வரலாம் , போகலாம் , எழுதலாம் , பேசலாம், பாடலாம், ஆடலாம் ... முதலிய பிற செய்யலாம் வாய்பாட்டு வினைகள் போல செய- என்னும் வினையெச்ச வடிவத்திலிருந்து வரவில்லை( 'செயல் - ஆம் ' என்னும் வாய்பாடாகவும் கொள்ளலாமோ!). அவற்றின் பிறழ் ஒப்புமையாக்கமாகத் தேவலாம் உருவாகியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
தேவலாம் என்பதில் அனுமதிக்குறிப்பு இல்லை ; எதிர்பார்ப்புக்குறிப்பு மட்டுமே உண்டு.
எதிலிருந்து வந்தது?
தேவலை என்பதிலிருந்து வந்தது.
எப்படி வந்தது?
பிறழ் ஒப்புமையாக்கமாக வந்தது.
'தேவலாம்' என்பதை எதிர்பார்ப்புக்குறிப்புடையதாக நான் பயன்படுத்தியிருக்கிறேன்,
தற்செயலாகத்தான் எனினும் அது மிகப் பொருத்தமான பயன்பாடு என்று தோன்றுகிறது.
அப்பாடா!
-------------------
° பூம்பொழில் வெளியீடு, சென்னை, 2002 .

The moment of truth awaits! The Jackpot Lottery Result is the highlight of the gaming world, and KhelRaja delivers it instantly. We specialize in hosting massive jackpot games and ensuring winners receive their results and payouts without delay. Check the latest results for the biggest prizes in India and internationally. Our platform's secure environment guarantees that your winnings are safe, offering the best gaming experience from ticket purchase to the final cash-out. Your dream fortune is just a result check away with KhelRaja.
ReplyDelete