Thursday, April 1, 2021

இல்லமும் இல்லாளும் அல்லது அம்பியும் ஹெர்மன் டீக்கனும்

 


இல்லமும் இல்லாளும்
அல்லது
அம்பியும் ஹெர்மன் டீக்கனும்

முள்முடித் தொற்று (கோவிட் 19) பரவாதிருக்க இல்லொடுங்கியிருத்தல் இன்றியமையாதது என்னும் நிலையில் , 'தம் இல் இருந்து தமது உண்க' என்று இல்லிருந்து உண்டலின் இனிமை கூறும் தொடரை முகநூலில்இட்டேன்.

இது குறுந்தொகை,  குறள் இரண்டிலிருந்தும் எடுத்துக் கோத்த தொடர் . இத்தொடரை எண்ணித் துணிந்து எழுதினேன். எண்ணியதைச் சற்றே விளக்கலாம் என்று தோன்றுகிறது.

தமிழ் மரபில் பாட்டுந் தொகையுமாகிய சான்றோர் செய்யுட்கள், - சிறப்பாக அகப்பாடல்கள்- பின் வந்தோரால் நெஞ்சறிந்த நிலையில் செவ்வியல் இலக்கியங்களாகப் போற்றப்பட்டன. "புவியினுக் கணியாய்..." என்னும் பாட்டில் 'சான்றோர் கவி ' யின் இயல்புகளை அடுக்கியிருப்பது கம்பமேதைமை காட்டுவதாகும். கம்பனின் இரட்டுற மொழியும்  கவித்திறம் சான்ற விளக்கம், மேலை நூலோர் செவ்வியல் இலக்கியத்திற்குத் தரும் விளக்கத்தோடு மிகப் பெரிதும் - முற்றிலும் என்று சொல்லுமளவுக்கு - ஒத்துப் போவது வியப்பு ( எனது மதிப்பூ - mathipuu.blogspot.com- காண்க )

அறவுணர்வுடன் அகப்பாடல் மரபை  இயைத்துத் தமிழ்க் காமத்துப்பாலாகப் புதுப்பித்துப் பேணிய மேதை வள்ளுவன். வள்ளுவத்தின் தமிழ் அடையாளம் காமத்துப்பாலில்தான் நன்கு துலங்குகிறது எனலாம்.

தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு(குறள் , 1107)

என்னும் குறள் அற அக இயைபின் உச்சம்..காளிங்கர் உரையின் இன்றியமையாச் சொற்கள் கொண்டு பொருள் தருகிறேன். 'தமக்கு உரிமையுடைய இல்லின்கண் இருந்து தமது பொருள் கொண்டு பலர்க்கும் பகுத்துண்டு வாழ்தலின் இனிமையை ஒத்தது இந்த அரிவையை முயங்கும் [தழுவும்]இனிமை'  என்பது பொருள்.
இங்கு வள்ளுவனுக்குக் கை கொடுத்தது குறுந்தொகை (மாறாக, 'வெண்பூதனார்க்குக் கை கொடுத்தது குறள் ' என்பதற்கு வாய்ப்பில்லை)

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர்  உலகம்  பெறீஇயரோ  அன்னை
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே
(வெண்பூதனார், குறுந்தொகை 83)

குறுந்தொகைக்குப் பழைய உரை கிடைக்கவில்லை; துறைக் குறிப்புக்  கிடைக்கிறது.                     " தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திச் (உணர்த்திய) செவிலியைத் தோழி வாழ்த்தியது " என்பது இப்பாட்டின் துறைக் குறிப்பு.'காதலன்/தலைவன் / மலைநாடன்  மணம் செய்துகொள்ள வருவான் என்று கூறிய அன்னை சுவர்க்கத்தைப் பெறுவாளாக ' என்று தோழி செவிலியை வாழ்த்துகிறாள் . இப்பாட்டில் அன்னை என்றது செவிலியை .

இங்கு நமக்கு வேண்டியது "தம் இல் தமது உண்டன்ன " /" தம் இல் இருந்து தமது பாத்து உண்டற்றால் " என்னும் உவமைதான்.

- இருந்து, - பாத்து என்னும் இரு சொற்கள் திருக்குறளில் கூடுதலாகவுள்ளன.

தம் இல் இருந்து தமது உண்க - என்பதற்கு நம் கால நேர்ப் பொருள் அவரவர் இல்லத்தில் இருந்து அவரவர்க்குரியதை உண்க என்பது . இந்தப் பொருளில்
ஒரு சாதாரண அறிவிப்பாக/அறிவுறுத்தலாக அமைந்ததுதான் என் இடுகை.  ஆனால்,  அதைச் செறிவாகவும் நயமாகவும் சொல்லச் செவ்வியல் தொடர் கை கொடுத்தது. அவ்வளவுதான்.

குறளில் உள்ள '- இருந்து ' என்பதை இன்றைய நிலையில் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு என்கிற வலியுறுத்தலை உணர்த்தப் பயன்படுத்திக் கொண்டேன் ;         'பாத்து' என்பது நல்லதுதான் என்றாலும் சுருக்கம் கருதித் தேவையில்லை என்று விட்டு விட்டேன். எனவே குறுந்தொகைத் தொடர் போதுமானதாயிற்று. ஆனால், குறுந்தொகை உரையாசிரியர்கள் திருக்குறளைக் கருத்தில் கொண்டு' தமது உண்டன்ன ' என்னும் தொடருக்குப் பாத்து என்பதையும் சேர்த்துப் பொருள் கண்டுள்ளனர்.

இக் குறுந்தொகை, திருக்குறள் ஆகியவற்றில் உள்ள உவமைகளை உரையாசிரியர்கள் பலவாறு விரித்து விளக்குகின்றனர். குறுந்தொகையின் உவமையொடு பொருந்தும் பொருள் பற்றியே வேறுபாடுகள் உள்ளன.விரிப்பின் அகலும்.

நிறைவாக ஒன்று. திருக்குறள் உவமையை மனத்தான் அறியப்படும் உவமை என்பார் இளம்பூரணர் . மேதை!(- 26 மார்ச் 2020)

எங்கள் தஞ்சை மேலவீதி வீட்டிற்குத் துணைவியாரும் நானும் மாதம் ஒரு முறையாவது சென்றாக வேண்டும். இயன்றவரை வீட்டைப் பெருக்கித் துடைப்பது, புத்தகங்களைப் பார்வையிடுவது, சிலவற்றை வைத்து விட்டு வேறு சிலவற்றைத் திருச்சி எடுத்து வருவது என்பன பணிகள் . பெரும்பாலும் திருச்சியில் காலை 10.00 மணி சோழன் தொடர்வண்டியில் ஏறினால் 11.00 மணியளவில் இறங்கி 11.30 க்குள் தஞ்சை வீடடைய இயலும். கையில் மதிய உணவை எடுத்துச் சென்று விடுவோம்.

பிற்பகல்01.30 மணியளவில் சாப்பிடுவோம்.  அப்போது தோன்றும் உள நிறைவைச் சொல்லில் வடிக்க இயலாது. 'தம்மில் இருந்து தமது பாத்துண்ணல் ' என்னும் குறளடி ஒவ்வொரு முறையும் உணர்ச்சிவயப்படுத்தும். என் துணைவியாரிடம் ஒரு முறை இதைச் சொன்னேன். அவரும் அந்த உணர்வை எய்தியதாகக் கூறினார். அவர் கால் நூற்றாண்டுக் காலம் குடித்தனம் நடத்திய வீடு அது. இத்தனைக்கும் அந்த வீடு என் உடல், உள நிலைகளில் ஒவ்வாமைக்குரியதாகிவிட்டது.

பெண்களுக்குப் புகுந்த வீட்டில் மிகச் சில நாட்களிலேயே உரிமையுணர்ச்சி தோன்றிவிடும். அவர்களுக்கு வீடும் புழங்கு பொருட்களும் சடப்பொருள்களல்ல.

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (நற்றிணை, 110 )

வளமான வீட்டில்  பிறந்த பெண் அவள் . புகுந்த வீட்டில் மூன்று வேளை உண்ணவும் முடியாத வறுமை.ஆனாலும் பிறந்த வீட்டில் வளமாக உண்டதை நினைக்கக்கூட மாட்டாளாம். இதனைக் கண்டு வியந்த செவிலி இந்த அறிவையும் ஒழுக்கத்தையும் பிறந்த வீட்டில் சொல்லித்தரவில்லையே எப்படி உணர்ந்தாள் இவள் என்று வியந்து, பெற்ற தாயிடம் சொல்லி மகிழ்கிறாள். சமூகம் மாறும்போது பண்பாடும் மாறுவது இயல்புதான். என்றாலும் பெண்கள் புகுந்த வீட்டின் வயப்படும் இப்பண்பாடு இப்போதும் - ஓரளவாவது -தொடரத்தான் செய்கிறது .



ஆனால், இந்த நற்றிணைப் பாட்டையும் , இதனையொத்த வேறு சில அகப்பாடல்களையும் சுட்டி, அவை பணக்கார அப்பாவிப் பெண்ணைக் காதலித்து  ஏமாற்றி விடும் வழிப்போக்கர்களைக் காட்டுகின்றன என்கிறார் ஹெர்மன் டீக்கன்('நாடக'க் காதலுக்கு எதிரான ஆதிக்கச் சாதி அப்பாக்கள், அண்ணன்கள், 'தலைவர்'கள் நினைவுக்கு வருகிறார்கள் !) :

From these few examples it is clear that in matters of love and marriage the inhabitants of the manor are not happier or more successful than their poorer counterparts . Their daughter elopes with a stranger , " causing a great grief to the inhabitants of the rich house " The girl in turn , is bound to be unhappy ( Herman Tieken, Kāvya in South India, 2001,p.27.)

தலைவியரின் அப்பாவி / முட்டாள் தனத்திற்கு அவர் தரும் எடுத்துக் காட்டைப் பார்த்தால், இலக்கியத்தையும் அதன் பின்னுள்ள பண்பாட்டையும் உள்வாங்குவதில் அவருக்குள்ள முட்டாள்தனம் புலப்படுகிறது.

....the protoganists  are depicted as suffering from various forms of delusions.
The wife in Kuruntokai 66, for instance , refuses to believe that the rains have started. They cannot have started because her husband , who had promised to return before the beginning of the rainy season had not yet returned ! The kondrai trees, which have started to blossom , must be mistaken. According to the woman it is , thus , not she who is deluded but the konrai trees (ibid. p. 50)

'தலைவர் வருவேனென்று சொன்ன கார்ப் பருவம் இன்னும் வரவில்லை[அதற்குள்]
பருவமல்லாக் காலத்தில் பெய்யும் மழையைக் கார் காலத்து மழை என மதித்து உரிய பருவம் வரும் முன்பே கொன்றை மலர்கள் மலரத் தொடங்கிவிட்டன. இவை மடத்தனமானவை. ' என்பது பாட்டின் கருத்து .
இதனைப் போலி நம்பிக்கை ( delusion) என்பது  ஆழ்ந்திருக்கும் கவித்துவம் காணாப்பிறழ்வு. உளத்தியல் நோக்கில் விளக்குவதாயின் ஒரு வகைத் தற்காப்பு உத்தி (defence mechanism) என்றாவது சொல்லலாம். தலைவி தலைவன் மீது கொண்ட நம்பிக்கையை அல்லது தனக்குத்தானே கூறிக் கொள்ளும் சமாதானத்தை நயமுறக் காட்டுகிறது பாட்டு.

சுந்தர ராமசாமியின் ' ஒன்றும் புரியவில்லை ' என்னும் கதை வழியாக மீண்டும் புகுந்த வீட்டுக்குப் போவோம். அருமையான கதை !

புதுமணப்பெண் பங்கஜம்  களக்காட்டிலுள்ள பிறந்த வீட்டிலிருந்து நாங்குநேரியிலுள்ள கணவன் வீட்டுக்கு முதன் முதலாகச் செல்கிறாள் - மாட்டு வண்டியில். உடன் அவள் தம்பி அம்பியையும் அனுப்பி வைக்கிறார்கள். மூன்று நாளில் பிறந்த வீட்டிற்குத் திரும்புமாறு ஏற்பாடு . அம்பி முன்புறம் அமர்ந்து உற்சாகமாகப் பயணிக்கிறான்.இடையில்தான் அக்காவைத் திரும்பிப் பார்க்கிறான்.

" அக்கா, அழாதே " என்று அவன் அக்காவைத் தேற்றுவதில்தான் கதை தொடங்குகிறது.
வண்டியோட்டும் தேவரும் சமாதானப்படுத்துகிறார். ஒரு வழியாக நாங்குநேரியை அடைகிறார்கள். அங்கும் உற்சாகமான விளையாட்டுடன் பொழுது கழிக்கிறான் அம்பி. ஆனாலும் சம்பந்தி வீட்டில் அக்கா நடந்து கொள்ளும் முறை அவனுக்குப் பிடிபடவில்லை.

விடியற்காலையிலே எழுந்து குளித்து விடுகிறாள் ; தனியே சிரித்துக் கொள்கிறாள்;
பாவம், கண்ணில் நீர் வழிய ஈர விறகைப் பற்ற வைக்கிறாள் ; இரைக்க இரைக்கத் தண்ணீர் இழுக்கிறாள் ; குனிந்து பெருக்குகிறாள்;தங்கள் வீட்டில் செய்யாத பல கடின வேலைகளைச் செய்கிறாள்; சம்பந்தியம்மாவை அம்மா என்கிறாள்.

'இப்படி வந்து அகப்பட்டுக் கொண்டு இடுப்பு முறிய வேலை செய்ய நேரும் என்பது தெரிந்தால் யார்தான் அழமாட்டார்கள்? நான் கூட அழுவேன்' என்று சொல்லிக்கொண்டான் அம்பி.

பாவம், அக்கா !

மீண்டும் களக்காடு நோக்கிய பயணம். அவனுக்கும் மகிழ்ச்சி, அக்காவுக்கும் மகிழ்ச்சி. தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான் அம்பி. பங்கஜத்தின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

" இப்பொ எதுக்கு அக்கா அழறே "
" அழலியே "
" அழுதாய் , நான் பார்த்தேன் "

வண்டியோட்டும் தேவருக்குத் தெரிய வேண்டாம் என்று சைகையால் உணர்த்துகிறாள்.
...                          ...                   ...

அம்பிக்கு ஒன்றும் புரியவில்லை.
(ஹெர்மன் டீக்கனுக்கும்...)
-01.04.2020

நீதான் என் இல்லம்



'தப்பட் '* இந்தித் திரைப்படம்.

அமிர்தா  செவ்வியல் நடனத்தில் தேர்ந்தவள். கணவன் விக்ரம் டெல்லியிலுள்ள கார்ப்பரேட் கம்பெனியில் பணியாற்றுகிறான். இயல்பாய் , இனிதாய்த் தொடங்கி நகர்கிறது இல்லறம். அவன் கனவு கண்டவாறே -  நடுத்தர வர்க்கக்  கார்ப்பரேட் குழுமப் பணியாளர்களின் கனவுதான் - மேல் அலுவலர் பதவிக்கு உயர்கிறான். பணி இலண்டனில். மனைவியோடு இலண்டனில் நடத்தும் வாழ்க்கை, குறிப்பாக இலண்டன் இல்லம் பற்றி மகிழ்ச்சி அலையடிக்கிறது. அதனைக் கொண்டாடச் சிறு கூடுகை (பார்ட்டி). 

 இலண்டன் போய்ப் பணியாற்றலாம் ஆனால் பதவி உயர்வு இல்லை என்று கூடுகையின்போது தெரிகிறது. காரணம் அலுவலக உள்ளரசியல். கூடுகையிலேயே உடன் பணியாளனுடன் சச்சரவு. தடுக்கப்போகிறாள் அமிர்தா. கனவு சிதைந்ததால் உணர்ச்சிவயப்பட்டிருந்த விக்ரம் சுற்றமும் நட்பும் சூழ்த்திருந்த கூடுகையில்  அவளை அறைந்துவிடுகிறான்(* தப்பட்= அறை) . அவள் ஒரு மனிதப் பிறவியாக, தன்மான இழப்பில்  நிலைகுலைந்துபோகிறாள். ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவளது முரண் மெல்ல மெல்ல முற்றுகிறது.

மணவிலக்குக் கேட்டு வழக்குமன்றத்தில் முறையிடுகிறாள். அவள் கருவுற்றிருப்பது தெரியவருகிறது. விக்ரம் அவளைச் சமாதானப்படுத்த முயன்று தோற்கிறான்.

மாமியார் தன் மருமகளின் உணர்வைப் புரிந்துகொள்கிறாள். அவர்களிடையே முரணில்லை. 

விக்ரம் தனியே இலண்டன் செல்கிறான். 

மண விலக்குக் கிடைக்கிறது. தன் தவறுணர்ந்த விக்ரம் அன்று வழக்குமன்றத்தில் அமிர்தாவிடம் மனம்விட்டுப் பேசுகிறான். அது, உள்ளார்ந்தது என்று அமிர்தாவும் உணர்கிறாள். மீண்டும் புதிதாக நட்பிலிருந்து தொடங்கலாம் என்கிறான்.

கதையையோ உணர்ச்சிப் பன்மைகளை, மோதல்களை  அடக்கமான நடிப்பாற்றலால் புலப்படுத்தியிருக்கும் நடிகர்களின் திறனையோ பிறவற்றையோ விவரிக்கப்போவதில்லை.ஆனால், பார்க்க வேண்டிய படம் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். 

வேறு ஒன்றைச் சொல்லத்தான் இத்தனை முன்கதை . 

நிறைவுக் காட்சியில் விக்ரம் அமிர்தாவிடம் பேசும்போது, " இலண்டன் வாழ்க்கை, பணி எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். நீலக் கதவுடைய கனவு இல்லம் , இல்லமாகவே இல்லை. உண்மையில் நீதான் என் இல்லம்" என்கிறான். 

கார்ப்பரேட் காலத்து இந்தியாவிலும் மனைவிதான் இல்லம்.


No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...