Saturday, January 2, 2021

தொல்காப்பியரின் அரசியல் நுண்ணுணர்வு !

 தொல்காப்பியரின் அரசியல் நுண்ணுணர்வு !

  

       பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே 

       அங்கதம் முதுசொ லவ்வேழ் நிலத்தும் 

       வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் 

        நாற்பே  ரெல்லை யகத்தவர் வழங்கும் 

        யாப்பின் வழியது என்மனார் புலவர் (செய்யுளியல் 77 )


என மூவேந்தர் ஆட்சிப்பரப்பைக் கொண்டு தொல்காப்பியர் தமிழக  எல்லையை வரையறுக்கிறார். இஃது அகச்சான்று என்பது குறிப்பிடத்தக்கது (பனம்பாரனார் பாயிரம் புறச்சான்று). செய்யுளியலில் உள்ள இந்த நூற்பாவில்  தொல்காப்பியர் மூவேந்தரை 'வண்புகழ்' என்னும் அடைகொடுத்துப் போற்றுவது உண்மைதான்; அவர்கள்பால் அவர் கொண்ட மதிப்புப் புலனாவதும் உண்மைதான். ஆனால் வேந்தரைப் போற்ற இஃது இடமில்லை; தொடக்கத்தில் போற்றியிருந்தாலும் பொருளுண்டு. அவ்வாறெனில் ஏன் செய்யுளியலின் இடையிலே - தொல்காப்பியத்தின் 1339 ஆவது நூற்பாவில் - இந்தப் போற்றல். 


இதற்கு முந்தைய நூற்பா:

        எழுத்து முதலா ஈண்டிய அடியின்

        குறித்த பொருளை முடிய நாட்டல் 

        யாப்பென மொழிப யாப்பறி புலவர் ( செய்யுளியல் 76)

        

யாப்பு என்பதன் பொதுப் பொருளை வரையறுத்து, அதன் வகைகளைக் கூறும் தொகைச் சூத்திரத்தில் அந்த வகைகள் இத்தனை எனச் சுட்டி , எண்ணிக்கையை வரையறுத்து, அவை வழங்கும் 'நாற்பேரெல்லை'களைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.


 பனம்பாரனார் பாயிரம் போல் நில எல்லையை மட்டும் தருவதுதான் ஓர் இலக்கண நூலின் தன்மைக்குப் பொருத்தமானது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை நிலப்பரப்பின் வழக்கும் செய்யுளும் முந்துநூலும் பற்றி அந்தக் காலத்தில் எவ்வளவு இயலுமோ அவ்வளவு முயன்று புலமையும் பட்டறிவும் எய்திய தொல்காப்பியரின் உள்ளுணர்வில் ஆட்சிப் பரப்பின் - அரசியல் தன்மையின் - முக்கியத்துவம் உறைந்துள்ளது என்றே தோன்றுகிறது. 

 

அவர் தமிழோடு  பாகதம் (பிராகிருதம்) , சங்கதம் (சமற்கிருதம்) ஆகியவற்றில் பயிற்சியும் வழக்கில் இருந்த வேறுபிற மொழிகள் பற்றிய அறிவும் உடையவராக இருந்திருக்கவேண்டும்; இவ்வறிவால் இலக்கண அறிஞராக மட்டுமன்றித் தம் காலச் சமூக அரசியல் வரலாறு பற்றிய நுண்ணறிவும் உடையவராக இருந்திருக்கவேண்டும் என்று உய்த்துணர முடிகிறது.


எனது இந்த உய்த்துணர்வுக்குக் காரணம் தொல்லெழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வு  நூல்.தமிழகத்தில் தமிழ் வழங்கிய அதே காலத்தில் (பொதுக் காலத்திற்கு முன் 3 ஆம் நூற்றாண்டு முதல் பொதுக் காலம் 6 ஆம் நூற்றாண்டு வரை என்பது மகாதேவன் கருத்து) கன்னடம் , தெலுங்கு ஆகியன மக்கள் மொழிகளாகப் புழக்கத்தில் இருந்ததற்கும் அவற்றில் இலக்கியங்கள் தோன்றியதற்கும்  சான்றுகள் உள்ளன. ஆனால் அத்தொல்லிலக்கியங்கள் கிட்டவில்லை.


 தமிழ்ப் பிராமிக் காலத்தில் [ 'தமிழி' எழுத்துக் காலத்தில்*]கன்னட, தெலுங்கு மொழிகள் பேச்சுவழக்கில் இருந்த பகுதிகளில் கல்லில் , செம்பில், காசில் , முத்திரையில் , பானையோட்டில் பிராகிருதமே இடம்பெற்றது என்கிறார் ஐராவதம் மகாதேவன் (ப.198). காரணம் அப்பகுதிகள் அயலவராகிய நந்தர்- மௌரியர் ஆளுகை எல்லைக்குள் இருந்தன. ஆளுவோர் மொழியே வரிவடிவில் செல்வாக்குச் செலுத்தியது. 

பொ.கா. முதலாம் நூற்றாண்டில் சாதவாகன மரபில் வந்த ஹாலா என்னும் மன்னன் தொகுத்த [மராத்திய] பிராகிருத நூலாகிய 'காதா சப்தசதி'யில் ஏறத்தாழ 30 தெலுங்குச் சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன (௸,ப.199)


ஆனால் தமிழகத்தில் எழுத்தறிவின் (literacy) நிலைமை வேறாக இருந்ததற்கு அரசியல்  சுதந்திரத்தை ( political independence) முதற்காரணமாகச் சொல்கிறார் ஐராவதம் மகாதேவன் (௸,ப. 199). தொல்காப்பியர் இதனை உணர்ந்திருப்பார் என்பதற்குச் சான்றோர் செய்யுளுள் உள்ள குறிப்புகள் சில இணக்கமாயிருக்கின்றன.

'மண்டிணி கிடக்கைத்  தண்டமிழ்க் கிழவர்

முரசு முழங்கு தானை மூவர்...' 

- என்கிறார் வெள்ளைக்குடி நாகனார் (புறநானூறு 35: 3 - 4) .இதற்கு  " மண் செறிந்த உலகத்தின்கண் குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு உரியராகிய முரசொலிக்கும் படையினையுடைய மூவேந்தர் ..." என்று உரை காண்கிறார் பழைய உரையாசிரியர்.ஏறத்தாழத் தொல்காப்பியர் கூறும் 'தண்பொழில் வரைப்பு'.


தமிழின் தனித்த மரபை  - ஒலி வடிவம், வரிவடிவம், சொல் வகைகள் , வழக்குகள் ,செய்யுளாக்கம் ஆகியவற்றின் மரபை - பேணுவதில் தன்னாட்சிக்குரிய பங்கை அவர் நுண்ணிதாக உணர்ந்திருக்கிறார். எனவேதான் இலக்கண நூலில் தமிழ் வேந்தரைக் குறிப்பிட்டுத் தமிழக எல்லையை வரையறுத்திருக்கிறார்

இஃது 'என்மனார் புலவர் ' என்னும் மேற்கோள் வாய்பாட்டு நூற்பா. இந்த வாய்பாடு யாப்பு வகைகளுக்கானதா? வகை எல்லை இரண்டுக்குமானதா? என்று தெரியவில்லை. 

மூவேந்தர் ஆட்சியைச் சுட்டித் தமிழக எல்லையை வரையறுக்கும் பார்வை தொல்காப்பியருக்கு முந்தையதாகவும் இருக்கலாம். 

இந்த மரபை மேற்காட்டிய புறப்பாட்டும் (35) உறுதிசெய்கிறது.

இவ்வாறாயின் , இதில் தொல்காப்பியர்க்கும் உடன்பாடு என்பதோடு இலக்கண நூலுக்கும் இஃது ஏற்புடையது என்று அவர் கருதியிருப்பது அவரது அரசியல் நுண்ணுணர்வைக் காட்டுவதாகவே அமைகிறது.





பட விளக்கம்:

நேகனூர்ப் பட்டித் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டில் 'தாயியரு' (தாயார்) , 'சேக்கந்தண்ணி' (சேக்கந்தி அண்ணி) ஆகியன கன்னட வழக்கு வழிப்பட்ட சொற்கள்  என்கிறார் ஐராவதம் மகாதேவன்; அண்ணி என்பது சமணப்பெண் துறவியைச் சுட்டும் பெண்பால் உயர் சொற்கிளவி என்கிறார்.


[எருமி நாடு  ( = தமிழ் - எருமை , கன்னடம் , துளு - எர்மெ , கோண்டி - எர்மி ),    பொசில்=வாயில் (கன்னடம் : ஹொசிலு)முதலிய கன்னட வழக்கு வழிப்பட்ட வேறு சில சொற்களையும் இனங்கண்டுள்ளார் மகாதேவன் (௸,பக். 452 - 53)  ]


துணை


1.தொல்காப்பிய மூலம் - பாடவேறுபாடுகள் : ஆழ்நோக்காய்வு ( பதிப்பாசிரியர்கள்: கே. எம். வேங்கடராமையா முதலியோர்), பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் , திருவனந்தபுரம் , 1996


2. Mahadevan ,Iravatham, Early Tamil Epigraphy - From the Earliest to the Sixth Century C.E., CICT , Chennai, 2014


3. Rajan K , Early Writing System - A Journey from Graffiti to Brāhmī , Panda Nadu Centre for Historical Research , Madurai, 2015 , 

கா.ராஜன் தமிழ்ப் பிராமியின் மேல் எல்லை பொ.கா. ஐந்தாம் நூற்றாண்டு என்கிறார்- ௸,ப. 397.


*பந்நவணா - ஸுத்த என்னும் சமண நூல் பொ.கா.மு. முதல் நூற்றாண்டிலேயே 64 வகை வரிவடிவங்களைச் சுட்டுகிறது ; அவற்றுள் ஒன்று தமிழி என்கிறது. எனவே இப்பெயர் நம் காலத் தமிழ்ப் பற்றின் விளைவன்று.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...