Friday, January 1, 2021

ஆய்வுத் தரம்

 

ஆய்வுத் திருட்டும்   சேயிழைச் செறிவும்
🙄💘🙄💘🙄💘🙄💘🙄💘🙄💘🙄💘🙄💘

"சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்"



அழகைப் பெண்ணாக உருவகித்து, அந்த அழகு சிரிக்கும் இடங்களைக் கவிதையாய்க் கோத்த பாவேந்தர் , சிறு குழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்    எனச் சிறு குழந்தை விழியின் ஒளியில் மலரும் அழகையும் பதிவு செய்கிறார்.

சிறு குழந்தைகளின் விழிகள்  தட்டுப்பட்ட எல்லாவற்றையும்  அறிந்துணர  முயலும் ஆர்வத்தின் பரபரப்பில் மின்னுவதைப் பாருங்கள் . அந்த மின்னொளியாய் அழகு நிற்பதாய் உணர்கிறேன். பாவேந்தர் கவி வரியை அப்படித்தான் உணர்கிறேன்.

அறிந்துணரும் ஆர்வம்; தேடி அறியும் முயற்சி இவையெல்லாம் மக்களினத்தின் உள்ளார்ந்த இயல்பு. இது என்ன? இது எதற்கு? இது எப்படி? என்று நமக்குச் சலிப்பூட்டுமளவுக்குக் குழந்தைகள் வினவிக்கொண்டே இருக்கும்.

கல்வியின் பேரால் நாம் விடைகளைத் திணித்து வினாக்களைத் தொடுக்கிறோம். குழந்தைகள் வினாத் தொடுத்தது போய், திணிக்கப்பட்ட விடைகளைப் பிடுங்கி எடுக்கச் செய்கிறோம்.

மொழி, இலக்கியக் கல்விக்குள் வருவோம்.

எல்லாக் குழந்தைகளுக்கும் அம்மை உளங்கனிந்து அறிவுப்பாலூட்ட முடியுமா? எனக்குத் தெரிந்து ஒருவரைத் தவிரப் பதின்மூன்று நூற்றாண்டாய் அவ்வாறு ஞானத்தோடு சம்பந்தமுடைய வேறொருவரை அறியேன்.

மழலையர் கல்வி தொட்டு மொழிகளையும் மொழிவழிக் கலையாகிய இலக்கியங்களையும் ஆர்வமூட்டுமாறு பயிற்ற வேண்டும்; பயிற்ற முடியும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்கிறார் தெய்வப்புலவர்.

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

என நம்முடைய தெய்வப்புலவர்  எதை எங்கே கொண்டுவருகிறார் பாருங்கள்!

இந்தக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல். காதலன் 'புணர்ச்சியை மகிழ்ந்து கூறியது' என்பது பண்டைய உரையாசிரியர்தம் ஒரு மித்த கருத்து.
இக்குறளில் புணர்ச்சி இன்பத்திற்கு உவமை அறிவின்பம்.அறிய அறிய முந்தைய அறியாமை கடந்து புதிய அறிவு புலப்படுகிறது.காதலியோடு கூடுந்தோறும் முன்னறியாப் புதுமை புலப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இரண்டுமே இன்பம்.

யாம் பலவகைப்பட்ட நூல்களையும் கற்று அவற்றின் கருத்து அறியுந்தோறும் அறியுந்தோறும் மற்று அது ஒழிந்த நன்னூலும் அவ்வாறு கற்று இனிது அறியப்பெறாமையாகிய விரும்புதலை நெஞ்சில் கண்டு செல்கின்ற அதுவே போலும் ; இந்தச் சேயிழையாளை யாம் செறியுந்தோறும் செறியுந்தோறும் இவள் திறத்து நமது உள்ளம் செல்கின்ற காமச்சுவையும்

என்று காதலன் கூற்றாக உரை வரைந்துள்ளார் காளிங்கர். பண்டை உரையாசிரியர் பிறரிடம் காணா நுட்பம் இது.

'முன்பு நல்ல நூல்களைப் பயின்று அறியுந்தோறும் அத்தகைய பிற நல்ல நூல்களையும் அவ்வாறு கற்று அறியவில்லையே என விரும்பித் தேடுதல் போல இவளிடம் இன்னும் இன்னும் நல்லின்பம் நாடுகிறது உள்ளம்' என்கிறானாம் காதலன்.

நல்ல நூல்களை ஒன்றிலிருந்து மற்றொன்றாய்த் தேடிப் பயின்றோர் காளிங்கரின் உரையை உணரமுடியும்.

நமது உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பட்டத்திற்கு  முதலில் தற்காலிகப் பதிவு செய்தல், அப்புறம் ஆய்வறிஞர் குழு அமைத்தல் , குழு ஆய்வாளரை ஆய்ந்து நிறைவடைந்தபின் பதிவு உறுதியாதல் , ஆய்வின் பரந்த களம் சுட்டல், அடுத்த ஆய்வறிஞர் கூட்டத்தில் ஆய்வாளர் திரட்டிய தரவுகள், அவற்றின் அடிப்படையில் ஆய்வைத் தொடரும் வாய்ப்பு ஆகியவற்றைச் சீர்தூக்கித் தலைப்பை வரையறுத்தல், தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வறிஞர் குழுவிற்கு ஆய்வு முன்னேற்ற அறிக்கையளித்தல், இந்த அறிக்கைகளை ஏற்று ஆய்வறிஞர் குழுவின் சார்பில் நெறியாளர் அவற்றைப் பல்கலைக் கழகத்திற்கு மேலனுப்புதல், ஆய்வு நிறைவுக்கட்டத்தை எட்டும் நிலையில் எழுத்தாக்கல், குறைந்தது மூன்று படிநிலைகளில் ஆய்வுரையை மேம்படுத்துதல், ஆய்வுரைச் சுருக்கம் ஆயத்தப்படுத்துதல்,ஆய்வுச் சுருக்கத்தை ஆய்வறிஞர் குழு முன்னிலையில் அரங்கில் முன்வைத்தல் * விவாதித்தல் , விவாத அடிப்படையில் சுருக்கத்தைச் செம்மைப்படுத்திப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புதல், பின்னர் ஆய்வேட்டினையும் செம்மைப்படுத்தி ஆய்வுக்காலத்தில் ஆய்வாளர் எழுதி, பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தால் ஏற்பளிக்கப்பெற்ற ஆய்விதழ்களில் வந்த இரண்டு கட்டுரைகள்* , ஆய்வுக்களவின்மைச் சான்றிதழ்*, களவின்மையைச் சரிபார்த்ததற்கான ஆதாரம்* முதலியவற்றோடு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புதல், அந்த ஆய்வேடு அறிஞர் மூவரால் மதிப்பிடப் பெறல் , மதிப்பிட்டு ஏற்கப்பெற்றால் பொது அரங்கில் வாய்மொழித் தேர்வு நடத்துதல் , வாய் மொழித் தேர்வுக்கு முன் குறைந்தது 15 நாட்களாவது எவரும் படித்துப்பார்க்க வாய்ப்பாக நூலகத்தில் ஆய்வேட்டைப் பொதுவாக வைத்தல், தலைப்பு முதலியவற்றோடு வாய்மொழித் தேர்வைப் பலரும் அறியச்செய்தல், எனப் பல கட்டங்கள் கடந்து ஆய்வாளர் வாய்மொழித் தேர்விலும் தேர்ச்சியடைந்தால்தான் அவர் பட்டம் பெறமுடியும்.

ஓர் ஆய்வு, முறையாகவும் தரமாகவும் நிகழ மேற்குறித்த படிநிலைகளே போதுமானவை. அவற்றுள்ளும் சில * 1990 கள் வரை இல்லாமல் பிற்காலத்தில் ஒவ்வொன்றாகச் சேர்க்கப்பட்டவை.

அண்மையில் எதைக்கேட்பது எதை விடுவது எனத் திக்குமுக்காடுமளவுக்கு வலையரங்குகள் நிகழ்ந்து வருகின்றன. ஆய்வியல் சார்ந்த சில உரைகளைக் கேட்டேன்.அவற்றில் பரவலாக ஆய்வுத் திருட்டு (plagiarism) தொடர்பான அங்கலாய்ப்புகள் வெளிப்படுகின்றன.

திருட்டு மட்டுமன்றி வேறு பல முறைகேடுகளையும் தடுக்க ஆய்வேட்டை வாய்மொழித் தேர்வுக்கு முன் இணையத்தளத்தில் போடுதல்,   காணொலி மூலம் அரங்கில் இல்லாதோரும் வாய்மொழித் தேர்வில்  கலந்துகொள்ள வாய்ப்பளித்தல் முதலியனவாக நடைமுறைகளை மேலும் இறுக்க வேண்டுமென்கிறார்கள். 

கோவிட் 19 ஒட்டுமொத்த வாய்மொழித் தேர்வையும் காணொலியில் நடத்த வேண்டிய நெருக்கடியை உண்டாக்கிவிட்டது. இந்தத் தேர்வு நடவடிக்கை முழுவதையும் ஒளிப்பதிவு செய்து பல்கலைக் கழகத்திற்குத் தரவேண்டும் என்னும் விதியும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தத் தேர்வுகளிலும் முறைகேடுகள் நிகழாமலில்லை.


* தேடத்தேடக் கிடைக்கும் புதுப்புதுத்  தரவுகள்,

 
* தொடர்பற்றவை போலத் தோன்றுகிற வெவ்வேறு தரவுகளினூடாகத் தோன்றும்        தொடர்புகளின்  மின்னல் கீற்றுகள்,

*  ஆய்விற்குள் செல்லச்செல்லப் புலப்பட்டு நீளும் பாதை 

 
என ஒவ்வொரு கட்டத்தில் செறிதோறும் ஆய்வுப் பேரின்பக் கணங்களில் திளைக்க இயலுமெனில் , ஆய்வுத் திருட்டைப் பற்றிய எண்ணமே எழாது.

ஆனால், ஆராய்ச்சி உணர்வு என்பது முதுநிலைப் பட்டம் பெற்றதும் வரும் திடீர் ஞானோதயமன்று.

மழலைப்பருவந் தொட்டு அறிவுத்தேட்டத்தை இயல்பாகக் கொண்ட மக்கட் பண்பை மலரச் செய்வதாக ஆராய்ச்சிக் கல்வி அமையவேண்டும்.

தமிழ் உயராய்வுத் துறைகளுக்கு வரும் பெரும்பாலான தமிழக மாணவர்களின் (சிறு பான்மை ஆசிரியர்களின்?) மொழித்திறன்  இரங்கத்தக்கதாயிருப்பது வெளிப்படை; அன்றாடத் தொடர்பிற்குக் கூட இலாயக்கற்றது எனலாம்.



* தொடக்கப் பள்ளி தொட்டே தமிழ்ப் பயிற்சியின் தரம் உயர்த்தப் படவேண்டும் (முதல் குறிப்புரை- comment - காண்க)
* உயர்கல்வி நிலையில் தமிழ் மொழி & இலக்கியப் பாடப்பிரிவுகளின் தரமும் மதிப்பும் உயர    வேண்டும்.

எப்படி?



No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...