Friday, October 9, 2020

பெயர்ப்பும் ஆக்கமும்

 பெயர்ப்பும் ஆக்கமும் 


பேராசிரியர் தெய்வ சுந்தரம் நயினார் அவர்கள் முகநூலில் , கணினிவழி மொழி பெயர்ப்பிற்கு உதவும் வகையில் மனித மூளைத் திறனைக் கணினி பெறுவதை நோக்கி மேலைக் கணினி மொழியியல் முன்னேறி வருவதையும், மொழிபெயர்ப்பில் அது சாதித்திருப்பதையும் மனித மூளையின் மொழித் திறனைக் கணினி எட்ட இயலாதெனும் ஒருசார் மொழியியலறிஞர் கருதுவதையும் இவை ஒருபுறமிருக்க இத்துறையில் தமிழின் அவலநிலை பற்றியும் எழுதி வருகிறார்கள்.

இவை பற்றிக் கருத்துச் சொல்லும் தகுதி எனக்குக் கிஞ்சித்தும் இல்லை


ஒரு முன்கதைச் சுருக்கம் :

தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை , மேலைச் சிவபுரிக் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியுடன் இணைந்து 1997 இல் பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றிய கருத்தரங்கொன்றை நடத்தியது. எனக்குப்  ' பண்டிதமணியின் மொழி பெயர்ப்புத் திறன் '  என்னும் தலைப்பில் உரையாற்ற அழைப்பு வந்தது. குறைந்த பட்சச் சங்கத(சமற்கிருத)  அறிவாவது இல்லாமல் எப்படி ? என்றெண்ணி மறுக்க எண்ணினேன். அருகிலிருந்த பேரா.அரங்க சுப்பையா அவர்களிடம் சொன்னேன். அவர், 'நாமே முயன்றுபார்க்கலாம்' என்று நம்பிக்கையூட்டினார்.

அன்று மாலையே சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் (டி. என்.ஆர்.)அவர்கள் இல்லம் சென்றேன். அவர், மிருச்சகடிகத்தின் சில ஆங்கில , தமிழ் மொழி பெயர்ப்புகளைத் தந்தார். அவற்றுள் ஒன்று வடமொழி மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு, தேவையான குறிப்புகள் ஆகியன கொண்டது. இப்போது மறந்து விட்டேன்; கருத்தரங்க உரைக்காக எடுத்த குறிப்புகளைத் தேடினேன்; கிடைக்கவில்லை. போகட்டும்.

                                                           ***********

தலைப்பு உறுதியாகிவிட்டது. 'பண்டிதமணியின் மொழிபெயர்ப்புத் திறம் - மண்ணியல் சிறுதேரை முன்வைத்து ...' (கருத்தரங்க உரைக்கான பாவனை தலைப்பிலேயே தொடங்குகிறது)

என் உரை நூலின் பெயரிலேயே தொடங்கியது.

ம்ர்த் சகடிகா >  ம்ருச்சகடிகா [ मृच्छकटिका (mṛcchakaṭikā)] > மிருச்சகடிகம்

ம்ர்த் = மண் ;  சகடிகம் = சிறுவண்டி.

ஆங்கில மொழிபெயர்ப்புகள்  பெரும்பாலும் The Little Clay Cart என்றன;

தமிழில் எழுத்துப் பெயர்ப்பாக மிருச்சகடி, மிருச்சகடிகம் என்றமைந்தன.

திரு. பாலகிர்ஷ்ண ஐயர் உள்ளே தொடக்கத்தில் துணைத் தலைப்பாக மண்வண்டி என்னும் மொழிபெயர்ப்பையும் தந்திருந்தார்(வேறு சில தமிழ்ப் பெயர்ப்புகளையும் பார்த்தேன்.மறந்து விட்டது)


மாறாகப் பண்டிதமணியவர்கள் 'மண்ணியல் சிறுதேர்' என்று தமிழாக்கம் செய்தார். சூத்திரகரின் நாடகத்தில் இடம்பெறும் களிமண்ணாலான நடைவண்டியே மிருச்சகடிகம் என்பது.

பாட்டும் தொகையுமாகிய தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் ஆங்காங்குச் சிறார்க்கான  வண்டிகள் தென்படுகின்றன; சற்றே வேறுபட்ட தொடர்களால் குறிக்கப்படுகின்றன. அவற்றுள் செறிவானது  ' சிறுதேர் ' ; இரு இடங்களில் மட்டுமே காணப்படுகிறது:

" பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்

   முக்காற் சிறுதேர்" (பட்டினப்பாலை,24-25)

"   ...    ...   தந்தை பெயரன்

  சிறுதே ருருட்டும் தளர்நடை"(ஐங்.403:4 - 5).

சிறுமா வையம் (குறு. 61 : 1 ), ஊரா நற்றேர் (பெரும்பாண் , 249), கால்வல்தேர் கையின் இயக்கி நடைபயிற்றா (கலி.81 : 8 ) தேரொடு தளர்நடை ... ... ... புதல்வனை (ஐங்.66 : 2 -3) ஆகிய இடங்களில் அடையடுத்தும் தனித்தும் தேர்கள் வருகின்றன.

பட்டினப்பாலையின் முக்காற் சிறுதேர் , கலித்தொகையின் நடைபயிற்றுகிற சிறுதேர் ஆகியன நடை வண்டியைக் குறிப்பன. 

சிறுதேர் என்பது பெருந்தேர் போன்ற வடிவில் சிறார் ஈர்த்து விளையாடும் சப்பரத்தை ஒத்த தேரைக் குறித்தும் வழங்கியது.

பிற்காலத்திய புறப்பொருள் வெண்பாமாலையின்(43) பூங்கட் புதல்வர் நடைத்தேர் - என்னும் தொடர் தற்கால நடைவண்டியை நெருங்குகிறது.

இத் தொடர்களுள் வழங்க வாய்ப்பானதும் செறிவானதும் சிறுதேரே.

பண்டிதமணி நூற் பெயரில் செய்திருப்பதைத் தமிழ் மொழிபெயர்ப்பு என்பதை விடத் தமிழாக்கம் என்றே சொல்ல வேண்டும். அதுவும் செவ்வியல் தமிழாக்கம். வடமொழிச் செவ்வியல் நாடகமொன்றைப் பிறிதொரு செவ்வியல் மொழியாகிய தமிழுக்குக் கொணரும் உணர்வுடன் மொழியாக்கம் செய்துள்ளார் பண்டிதமணி. அதற்கு அவரது செவ்வியல் தமிழ்ப் புலமை ( பாண்டித்தியம்) கைகொடுத்திருக்கிறது.

ஒரு வேளை இப்பெயருடைய நவீன இலக்கியமாயின் தற்காலத் தமிழில் மண்வண்டி / களிமண்வண்டி என்று பெயர்ப்பது சரி.

திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தியவர்கள் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் 'சிறுதேர் உருட்ட'லை நினைவுபடுத்தியிருக்கிறார்¹(இது நான் தவறவிட்டது).நன்றி.

சிற்றிலக்கியங்கள் பற்றித்தனியே பேச வேண்டும். ஒன்று மட்டும் இப்போது. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் கணிசமானவற்றை ஓரளவு புதுச் செவ்வியல் (Neo classical) இலக்கியங்கள் எனலாம்.  நடைவண்டியும் சப்பரமும்   சிற்றிலக்கியக் காலத்தும் சமுதாயத்தில் நடைமுறையாக இருந்திருக்கும் ; 21 ஆம்  நூற்றாண்டிலும் தொடர்கிறதே (அமேசானில் கிடைக்கிறது!)ஆனாலும்   'சிறுதேர் உருட்டல்'  இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே  பிள்ளைத்தமிழில் இடம்பெற்றிருக்கவேண்டும்.  

                                          



பண்டிதமணி காலத்திலும் நடைவண்டியும் சப்பரமும் இருந்தன. அவற்றைச் சிறுதேர் என்னும் வழக்கு இல்லை. பண்டிதமணியின் தமிழாக்கத்திற்குச்  செவ்வியல் வழக்கின் செல்வாக்கே காரணம்.

இதில் ஓர் ஓசை நயத்தையும் பண்டிதமணி கருதியிருக்கிறார். மண் சிறுதேர் என்றால் விட்டிசைக்கும். மண்ணியல் சிறுதேர் என்பது இசைந்து நிற்கிறது². இதில்தான் அவரது கூர்மை புலனாகிறது. எனவேதான் அவர் வெறும் பண்டிதராகவன்றிப் பண்டிதமணியாகிறார்.

                                                  (அக்டோபர் 16, 1881 - அக்டோபர் 24, 1953) 

இவற்றை அந்தக் கருத்தரங்கில் முன்வைத்து, என் அறிவுக்கு எட்டிய அளவில் , பண்டிதமணி வேறு சில சொற்களை மொழிபெயர்த்துள்ள திறத்தையும் சுட்டிக்காட்டி முடித்தேன். இலக்கிய மொழிபெயர்ப்பில் / மொழியாக்கத்தில் புலமை சான்ற நுண்ணுணர்வைக் கணினி எட்டிப் பிடிக்குமா!

----------------------------------------------------------------------------

கலந்துரையாடல்:

¹Kannaiyan Dakshnamurthy: ஆண்பால் பிள்ளைத் தமிழில் சிறுதேர் உருட்டல் ஒரு பருவம்...

²Marudur Arangarasan Shanmugam:

மண்ணியல் சிறுதேர் - இரண்டு ஈரசைச்சீர்கள். கூவிளம் புளிமா; ஒலிக்க எளிமை; காதுக்கு இனிமை; நினைவில் கொள்ள ஓசை ஒழுங்கு; இதையெல்லாம் எட்டிப்பிடித்து மொழிபெயர்க்குமா கணினி. 

இப்போதைக்கு முடியாதென்றே தோன்றுகிறது.  எப்போதைக்குமே முடியாது என்று சொல்ல அறிவியல் இடந்தராது.

மதிவாணன்: மேலும் தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

Ramasamy Kandasamy: மாந்த மூளையின் பயன்பாடுகளுள் ஒரு சிறு கூறுதான் கணினி.கணினி மொழிபெயர்ப்பு இதுகாறும் வெற்றிபெற்றதாகக் கூற இயலாது.சிறுசிறு முயற்சிகள் இயலக் கூடும்.மொழித் திறத்தின் முட்டறுத்த நற்சான்றோராலன்றி இலக்கிய மொழிபெயர்ப்போ மொழியாக்கமோ இயலாதவொன்று.கணினி மாந்தனுக்காக மாந்தனே உருவாக்கிக்கொண்ட ஒரு புதுமையான வேலைக்காரன் என்பதை என்றுமே மறந்துவிடக் கூடாது.

மதிவாணன் : முயன்றால், பொதுவான பெரிதும் பிழையற்ற மொழிபெயர்ப்பைக் கணினி வழி, செய்து விட முடியும் என்று நம்பலாம்.

பேரா. தெய்வசுந்தரம் 'பெரிதும் பிழையற்ற'  என்ற சொற்றொடரே இங்கு முக்கியமானது. பேராசிரியர் மிகத் தெளிவாகவும்  எச்சரிக்கையாகவும் இருக்கிறார். ஆனால் அதற்குக்கூட  மிகக் கடுமையான ஆய்வுகளைத் தமிழில் மேற்கொள்ளவேண்டும். அதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்படவேண்டும்.

Ramasamy Kandasamy: Mathivanan Balasundaram எந்திர மொழிபெயர்ப்பு என்னும் சிந்தனையும் அதற்கான அருமுயற்சிகளும் அறுபதாண்டுகள் பழைமையானவை.வளர்ச்சி என்பது பத்து விழுக்காட்டினைத் தாண்டவில்லை.சிறு அளவு உரைநடை மொழிபெயர்ப்பில் முன்னேற்றம் கிட்டியுள்ளது.நம்புவோம் முயல்வோம் என்பதில் தவறில்லை.கணினி வழி இலக்கிய மொழிபெயர்ப்போ மொழியாக்கமோ கானல் நீராகிவிட வாய்ப்புள்ளது என்பதை மட்டும் நினைவிற்கொள்வோம்.

மதிவாணன் : சில அன்றாடத் தேவைகளுக்கு உரைநடைமொழிபெயர்ப்பு வசதி தேவைப்படுகிறது. இயன்றவரை செம்மையான எந்திர மொழிபெயர்ப்புக்கு முயலலாம் என்பது என் கருத்து .

Ramasamy Kandasamy:  முயலலாம்.நன்று.

பேரா. தெய்வசுந்தரம் : பேரா. க. இராமசாமி அவர்களின் கருத்தில் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு. பேராசிரியர் அவர்கள் உளவியல்மொழியியல், சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு ஆகியவற்றில் மிகச் சிறந்த ஒரு அறிஞர். அவற்றின் அடிப்படையில் மிகச் சுருக்கமாக, ஒரு  மிகப் பெரிய உண்மையைக் கூறுகிறார்.

- 27 சூலை 2018 முகநூல் இடுகை, சில சேர்க்கை நீக்கங்களுடன்...



2 comments:

  1. இலக்கிய மொழிபெயர்ப்பில்/மொழியாக்கத்தில் புலமை சான்ற நுண்ணுணர்வைக் கணினி எட்டிப் பிடிக்க வாய்ப்பு இல்லை என்பது என் கருத்து ஐயா. தற்போது நான் செய்து வருகின்ற மொழிபெயர்ப்புகளுக்கு எவ்வித கருவியையும் அணுகுவதில்லை. நேரடியாக அப்படியே மொழிபெயர்க்கிறேன். ஐயமிருப்பின் அகராதியின் துணையை நாடுகிறேன். அவ்வாறாக செய்யும்போது பல புதிய சொற்களைத் தெரிந்துகொள்ளவும், மனதில் இருத்திக்கொள்ளவும், உரிய நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளவும் முடிகிறது. எங்கோ எப்போதோ படித்த சொல் இயல்பாக வந்து விழுவதைப் பார்க்கிறேன். இந்த உத்தி நினைவாற்றலை மேம்படுத்துகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழ், தமிழிலிருந்து ஆங்கிலம் என்ற இருவகை மொழிபெயர்ப்பிலும் இந்த அனுபவம் துணைநிற்கிறது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோர் நிறைய அனுபவங்களை எழுத முடியும்.
      அத்தொகுப்பே நல்ல மொழிெயர்ப்பியல் நூலாக விளங்கும்.

      Delete

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...