Friday, October 9, 2020

" நீங்களே இப்படிச் சொல்லலாமா? "

 "நீங்களே இப்படிச் சொல்லலாமா?" 


கால் நூற்றாண்டுக்கு முன்...

தொலைநிலைக் கல்வி வகுப்பொன்றில் சிலவற்றை எழுதிக் கொள்ளச் சொன்னேன். இடையில் "குரவர் - சின்ன  ர" என்றேன்.

தொடக்கப் பள்ளி ஆசிரியை ஒருவர் - என்னை விட அகவையில் மூத்தவர் - " நீங்க கல்லூரிப் பேராசிரியர். நீங்களே இப்படிச் சொல்லலாமா? இடையின  ர கரம்  என்றுதானே சொல்ல வேண்டும்" என்றார்.

"ஒரு தமிழாசிரியருக்கு இடையின ர கரம், வல்லின ற கரம் என்பவை எவை என்று தெரிந்திருக்க வேண்டும். எனக்குத் தெரியும் . உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால் சின்ன ர , பெரிய ற என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தெளிவுக்காக அப்படிச் சொன்னேன் " என்றேன்.

கல்லூரிப் பேராசிரியரை மடக்கிய பெருமிதம் நீங்காத முகத்தினராகிய அவர் - டீச்சர் ! - சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. ஏறத்தாழ எண்பது பேர்  கொண்ட வகுப்பின் சிறு சலசலப்புக் கூட இரைச்சலாகி விடுமல்லவா!

"பயன்' என்னும் சொல்லைக் கூறி , வல்லினப் பகரம் இடையின யகரம் மெல்லின னகரம்'னு யாரும் விளக்குவதில்லையே ஏன் ? " என்று கேட்டேன்.

" இடையின, வல்லின ரகர, றகரங்களில் குழப்பம் வருங்கிறதாலே இன்னதுன்னு சொல்ல வேண்டியிருக்கு " என்றார் டீச்சர்.

"சரி. குழப்பம் என்ன தெரியுமா?"

வரி வடிவில் வல்லின ற கரம் இருந்தாலும் நாம் இடையின ர கரம் போலவே ஒலிக்கிறோம்; இரட்டிக்கும் போது (-ற்ற்-) - ட்ர்- என்பது போல ஒலிக்கிறோம். 

வல்லின ற கரம் என்று சொல்கிறோமே தவிர வல்லினமாக ஒலிப்பதில்லை.

வல்லின ற கரம் என்பது பழைய நிலையின் எச்சமான வெற்று அடையாளம்தான்.

மக்கள் சின்ன ர, பெரிய ற என்கிறார்கள். இவை மற்றொரு வகை அடையாளம்; குற்றமில்லை" என்றேன்.

தமிழாசிரியர் சிலர் இக்கால ஒலிப்பையே வைத்துக் கொண்டு ரகர , றகர வேறுபாட்டை ஒலித்துக் காட்டிப் பயிற்றுவிக்க முயல்வது பரிதாபம்.

பிழைகள் நேர்வதைத் தடுப்பதும் கடினம். எடுத்துக்காட்டாக ஒன்று:



வறுகடலை வருகடலையாகிவிட்டது. புலமை வழியில் வல்லின றகரம் வருவது தான் சரி என்றும் மக்கள் தமிழில்  பெரிய றதான் சரி என்றும் சொல்லலாம். எப்படிச் சொன்னாலும் குற்றமில்லை.

 அடிப்படைத் தமிழ்ப் பயிற்சிக்குச் சில உத்திகளை நான் கையாள்வதுண்டு. அவற்றுள் ஒன்று ரகர றகரச் சிக்கலை உணர்த்துதல்.மாணவருள் , நன்கு உச்சரிக்கத் தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் செய்து , அவரிடம் சொற்பட்டியலொன்றைத் தருவேன். அவர் - முகத்தில், சைகைகளில் - எந்த மெய்ப்பாடுமின்றி பட்டியலைப் படிக்க வேண்டும். மற்றவர்கள் கேட்டெழுத வேண்டும். மாதிரிப் பட்டியல் :

1. குரவர்

2. நிரை குரை

3. பரவை


4. இறவு

5. சேறி

6 . திறை


7.* கர்க்க

8.* நூர்ப்பா

9.* பயிர்ச்சி


10.* கட்ரார்

11.* சுட்ரம்

12 .*வெட்ரி


- எல்லோரும் மாற்றித்தான் எழுதி யிருப்பார்கள். விலக்குகள் அரிதினும் அரிது.

முதல் மூன்றில் வல்லின றகரச் சொற்களும் அடுத்த மூன்றில் இடையின ரகரச் சொற்களும்தாம் பயிற்சியில் மிகுதி. கேட்பவர்கள் பெரும்பாலும் அவற்றையே கருதி எழுதுவார்கள்.

7, 8 , 9 ஆம் சொற்கள் - ற கரம் பிற வல்லின எழுத்துகளோடு வேற்று நிலை மெய்ம் மயக்கமாக -எழுத்து வடிவில் பிழையாயிருப்பினும் , பிழையற்ற வடிவப் பயிற்சியால் சரியாக எழுதிவிடுவார்கள்.

அவ்வாறே 10 , 11 , 12 ஆம் சொற்களில் றகரம் தன்னோடு தான் உடனிலை மெய்ம் மயக்கமாக - ஆனால் எழுத்து வடிவில் பிழையாயிருப்பினும் - சரியாக எழுதி விடுவார்கள்.

ஆனால், மதிப்பெண் (0/12) மொத்தத்தில் சுழிதான்! நான் கொடுத்த சொற் பட்டியலில் உள்ளவாறு எழுதவில்லையல்லவா?

படித்தவர் மீதோ எழுதியோர் மீதோ குற்றமில்லை. ஏறத்தாழ இக்கால ரகர, றகர ஒலிப்பு - அதாவது றகரமும் ரகரத்தைப் போலவே - மாறிவிட்டதுதான் காரணம்.

ஓரளவு பிரக்கினையோடு ஒலிக்கும்போது சற்றே வேறுபாடு காட்ட முயலலாம்.



இக்காலத் தமிழில் நுனி நாவை ஒரு முறை உயர்த்தி விழச் செய்வதன் மூலம் பிறக்கும் அடியொலி (tap) யாக ரகரமும் , நுனி நாவை உயர்த்தித் தொடர்ந்தாடச்  செய்வதன் மூலம் பிறக்கும் ஆடொலி (Trill) யாக றகரமும் ஒலிப்பதாக முனைவர் கு.பரமசிவம் (இக்கால மொழியியல் அறிமுகம் , 2011, பக்.30-31) குறிப்பிட்டுள்ளார். ஒரு நுட்பமான வேறுபாடு இக்கால உச்சரிப்பிலும் இருப்பதாகக் கூறும் அவர் இயல்பான பேச்சு வழக்கில் இரண்டும் ரகரமாகவே இருப்பதாகவும் ( இக்காலத் தமிழ் மரபு, 2011, பக்.58- 59) குறிப்பிட்டுள்ளார்.

இக்காலத் தமிழில் றகரம் வல்லினமாக ஒலிக்கப்படுவதில்லை;மரபு கருதி  வல்லின ற கரம் என்று சுட்டப்படுகிறது.

௸ பயிற்சி சிக்கலை உணர்த்துவதேயன்றித் தீர்ப்பதற்கான வழியன்று.

ண,ந,ன ; ர, ற ; ல, ழ, ள    ஆகியவற்றின் வேறுபாட்டை விளக்கத் தமிழ்ப் பாடநூலில் ஒரு படம் இடம்பெற்றுள்ளது. அதைக் கொண்டு மாணவர்கள் விளங்கிக் கொள்வது கிடக்கட்டும், ஆசிரியர்களாவது விளங்கிக் கொள்ள முடியுமா? வேறுபடுத்தி ஒலிக்க முடியுமா?




சரி. றகரம் இரட்டிப்பதைப் பார்ப்போம்.


திருச்சி, கான்வெண்ட்/ன்ற்(?) சாலையில் உள்ள நிதி நிறுவனப் பலகையில் -tt- ,-ற்ற்- என்று பெயர்க்கப்பட்டுள்ளது.


அதே நிறுவனத்தின் , கோவை,கவுண்டம்பாளையத்தில் உள்ளபலகையில் -tt- என்பது தமிழில் -ட்ட்- என்று எழுத்துப்பெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது( முனைவர் மோ.செந்தில் குமார் என் நச்சரிப்பைப் பொறுத்துக் கொண்டு படமெடுத்தனுப்பினார்.நன்றி).


மலையாளம் பயின்ற முனைவர் மோ.செந்தில்குமார், மலையாளத்தில் கொசமற்றம் என்றே எழுதப்பட்டிருப்பதைப் படமாக்கி அனுப்பியிருக்கிறார்.   

மலையாளத்திலிருந்து நேரே  தமிழில் எழுத்துப் பெயர்த்தால் கொசமற்றம் என்றாகும். ஆங்கிலத்திலிருந்து தற்காலத் தமிழ் வழக்குப்படி கொசமட்டம் என்றுதான் பெயர்க்க இயலும். 

         வரிவடிவங்கள் இருந்தும் தமிழர்கள் ரகர , றகரங்களை வேறுபடுத்தாமல் ஒலிப்பது பிழை என்றும் மலையாளிகள் இவற்றை  வேறுபடுத்தி ஒலிப்பது சரியானதென்றும் கேரள பாணினீயம் என்கிற மலையாள இலக்கணம் சொல்கிறதாம். அறிஞர் வே.வேங்கட ராஜுலு ரெட்டியார் எடுத்துக் காட்டுகிறார் ( தொல்காப்பியம் எழுத்ததிகாரவாராய்ச்சி, சென்னைப் பல்கலைக்கழகம், 1944, ப.81)

இலங்கைத் தமிழர்களும் றகரத்தை வன்மையாக ஒலிக்கின்றனர் (சுட்டிக்காட்டிய பேரா. ந. முருகேசன் ஐயா அவர்களுக்கு நன்றி). 

        ற கரத்தை, இலங்கைத்தமிழ் , மலையாளம் ஆகியவற்றைக் கொண்டு தமிழிலும் வல்லினமாகவே மீட்டெடுத்து ஒலிக்கப் பழகலாம்; பழக்கலாம் என்று தோன்றுகிறது.ஒலியை எழுத்தாக்கும் தொழில்நுட்பத்திற்கு இம்மீட்பு இசைவாயிருக்கும்.

இருக்கிற ண , ன ; ல ,ழ , ள க்களைத் தக்க வைப்பதே பெரும்பாடு. இதில் மீட்பதெங்கே ?

சரி. புணர்ச்சியில் திரிபாக வரும் றகரத்தையும் பார்த்துவிடுவோம்

சொல்+ பொருள் = சொற்பொருள்

பொன் + குடம்      = பொற்குடம் 

-ல் + ப்- > -ற்ப்-    }  ஏன் இப்படி ?

-ன் + க்-> -ற்க்-    }  ல் , ன் , ற் - என்ன உறவு ?

சொல் பொருள், பொன் குடம் என்றே இருக்கலாமே!

இவையெல்லாம் மாணாக்கரிடம் நான் எதிர்கொண்ட வினாக்கள் (வேறு பல புணர்ச்சி விதிகள் அல்லது இயல்புகள் பற்றியும் இத்தகு வினாக்கள் உண்டு)

சொற்பொருள் - சொல்லினது பொருள்

பொற்குடம்        - பொன்னாலான குடம்

இவை வேற்றுமைத் தொடர்கள்

சொல் பொருள் - சொல்லும் பொருளும்

பொன் குடம்       - பொன்னும் குடமும்

இவை உம்மைத் தொடர்கள்; பொருள் வேறுபாடுடையன (சொற்றொடரில் அமைவதைப் பொறுத்து வேறு வகைகளிலும் விரிக்கலாம். எவ்வாறாயினும் கருத வேண்டியது பொருள் வேறுபடுதலையே)

எளிமையாக்கப் போக்கில் மரபிலக்கண விதிகள் நெகிழ நேர்ந்தது தனிக்கதை.

ல், ன், ற் றுக்கு வருவோம். இவற்றின் பிறப்பிடம் ஒன்றே; பிறப்பு முறை வேறு. இவை நுனியண்ண ஒலிகள்.

ல் - பிரிவளியொலி (Lateral). நுனி நா பல்லும் அண்ணமும் சேருமிடத்தில் ஒற்றும். நாவின்  இருபுறமும் ஒலி வெளிப்படும்.

ற் - பழந்தமிழில் நுனி நா அண்ணத் தடை (Stop) ஒலி. நுனி நாப் பகுதி முழுதும் மேலண்ண நுனி வளைபரப்பை முழுவதும் அடைத்து உடன் திறந்து ஒலிக்கும். இதனை வெடிப்பொலி (Plosive) என்றும் சொல்வார்கள்.

ன் - நுனி நா அண்ண மூக்கொலி (Nasal).வாய் உறுப்புகள் (பழைய) றகரத்திற்கு ஒப்பவே அமைய ஒலி மூக்கின் வழி வெளிப்படுவதொன்றே வேறுபாடு.

எனவே  -ல் +ப் -> -ற்ப்-

                  - ன்+க் -> -ற்க்- 

அதனால்தான் தொல்காப்பியம் பிறப்பியலுக்குப் பின் புணரியல்களை வைத்தது.

க், ச், ட், த், ப், ற் ஆகியவற்றைத் தமிழின் வெடிப்பொலிகள் என்று பொதுவாகச் சொல்லலாம். எனவேதான் இவை மரபிலக்கணிகளால் வல்லெழுத்துகள் என்று இனங்காணப்பட்டன. இவை வாய்வழியேதான் ஒலிக்கப் பெறும்.

முறையே அவ் வல்லின எழுத்துகளுக்கு இயைந்த மெல்லின எழுத்துகளாகிய ங், ஞ் , ண் , ந் , ம், ன் என்பன அவ்வவற்றுக்கு இயைந்த வல்லினம் பிறக்கும் இடத்தையே தமக்கு இடமாகக் கொண்டு மூக்கின் வழியே (யும்) ஒலிக்கும்.

சான்றுக்கு எளிய ஒன்றைப் பார்ப்போம்.

ப்- மேல் , கீழ் இதழ்கள் (உதடுகள்) முற்றாக அடைத்து ஒலிப்பது வெளிப்படை.

ம்- அவ்வாறே மேல், கீழ் இதழ்கள் அடைத்து மூக்கின் வழி ஒலிப்பதை உணரலாம்.


ப- என மூக்கைப் பிடித்துக் கொண்டு சொல்லிப் பாருங்கள். ஒலிப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

ம - என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு சொல்லிப் பாருங்கள். ம இயல்பாக ஒலிக்காது; மாறும்;ஆட்டுக்குட்டி கத்துவது போல் இருக்கும்.

இவற்றையெல்லாம் மேலும் தெளிவாகவும் நுட்பமாகவும் இலக்கண, மொழியியல் வல்லார் வாய்க் கேட்டுணர்க.

சரி. இப்போது ற கரத்திற்கு வருவோம். 

இக்காலத் தமிழகத்தில் ற கரம் உயிர்மெய்யாக வரும் போது தடை/வெடிப்பொலியாக இல்லை;அதாவது வல்லினமாக இல்லை. 

-ற்ற் - (கற்றல், விற்றார், வெற்றி ...) என இரட்டிக்கும் போது வல்லொலித் தன்மை இருப்பினும் பழந்தமிழ் ஒலிப்பாக இல்லை.


- ற்க் - , - ற்ச்- (கற்க, முயற்சி...) எனப் பிற மெய்களோடு வரும் போது ஏறத்தாழ     - ர்க் - , - ர்ச் - முதலியனவாகவே ஒலிக்கப் படுகின்றன.

 வரிவடிவில் மட்டுமே ற கரம் பேணப்படுகிறது.

எனவேதான்  *கற்க்கள், * பயிற்ச்சி முதலிய பிழைகள் நேர்கின்றன.

ற கர ஒலி மாறியிருப்பதையும், பழந்தமிழில் அதன் இயல்பையும் உணர்த்தினால்தான் மாணவர்களுக்குப் புரியும். இல்லையென்றால் இலக்கணம் இரும்புக் கடலை தான்.

ரகர றகர வேறுபாடறிந்து பிழையின்றி எழுதுவது எப்படி?

ஏட்டுத் தமிழைப் பொருள் வேறுபாடறிந்து விழிப்பாகப் பயில்வதுதான் வழி.

றகரத்தை விட்டுவிட்டால் என்ன?

அதிதீவிரப் 'பகுத்தறிவு' வாத , அதிதீவிர மொழியில் வாதப் பரிந்துரை இது.

றகரத்தோடு மூவாயிரமாண்டுத் தமிழ் வரலாற்றையும் தூக்கி எறிந்துவிடலாம். எளிய வழி தமிழைத் தூக்கி எறிவது.


- 28 டிச.2015  , 4 சன. 2016  , 18 செப்.2018,    19 செப். 2018  ,  20 செப்.2018 , 17 சூலை 2019

(இவை முகநூலில் இதே வரிசையில் வரவில்லை. சேர்க்கை நீக்கங்களுடன் மாற்றி வைத்திருக்கிறேன். சில கூறியது கூறல்களைத் தவிர்க்க முடியவில்லை)



2 comments:

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...