Tuesday, October 27, 2020

மொழி - தோற்றம் - உடைமை - உரிமை - கடமை

 மொழி - தோற்றம் - உடைமை - உரிமை - கடமை*

----------------------------------------------------------------------------------------

பேராசிரியரும் பன்மொழி அறிஞரும் ஆய்வாளரும் பன்னூலாசிரியரும் பழங்குடி மக்களின் மொழிகள்  உட்படப் பன்மொழி பேணும் மொழியியக்கம் கண்டு இயங்கிக்கொண்டிருப்பவருமான கணேஷ் நாராயண் டேவி சொல்கிறார்:

'மற்ற உயிரினங்களிலிருந்து மக்களை மிகத் தனித் துயர்ந்து திகழச் செய்வது அவர்தம் மொழித் திறம்.மக்களின் மொழித்திறம் இயற்கையின் நன்கொடையன்று; மக்கட் சமூகங்களின் பல்லாயிரமாண்டு அளப்பரிய பரிசோதனைகளாலும் ஒப்பிலா உள்ள உழைப்பினாலும் பெறப்பட்டது.மொழி மக்களின் பண்பாட்டாக்கம்; கடவுளின் கொடையன்று.'¹

அதாவது , மொழி இயற்கையாக உருவானதோ கடவுளால் அருளப்பட்டதோ அன்று .



ஏங்கெல்ஸ்  'மனிதக்குரங்கிலிருந்து மனிதராக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பங்கு' என்னும் தம் ஆய்வுரையில்,கோட்பாட்டு ஒளியில் மொழித் தோற்றத்தை விளக்கியிருக்கிறார் (1876இல் செருமன் மொழியில் எழுதியது; 1895-96 இல் வெளிவந்தது). அவ்வுரையை,  'உழைப்புதான் எல்லாச் செல்வங்களுக்கும் ஆதாரம் என்று அரசியல் பொருளாதார வல்லுநர்கள் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றனர்'² என்று தொடங்குகிறார் எங்கெல்ஸ்.

இயற்கை→ மனிதக் குரங்கு →கை → உழைப்பு→மொழி → மூளை வளர்ச்சி → முழு மனிதநிலை என்று அவர் அன்றைய அறிவியலின் உச்ச அளவு சான்றுகள் கொண்டு விளக்குவது அறிவார்ந்த சுவை நல்குவதாகும்.

'முதலில் உழைப்பு அடுத்து அதனோடு  பேச்சு  இவ்விரண்டும் மிக முக்கியமான தூண்டுதல்களாக இருந்தன, இவற்றின் செல்வாக்கால் மனிதக்குரங்கின் மூளை படிப்படியாக மக்கள் மூளை என்னும் நிலையை எய்தியது...'³

அதாவது  உழைப்பும் மொழியும்தாம் மூளையை மேம்படச் செய்தன; மக்களினத்தை உருவாக்கின. இதை ஒத்ததுதான் டேவி 'மற்ற உயிரினங்களிலிருந்து மக்களினத்தை உயர்த்திக்காட்டுவது மொழி' என்று சொன்னதும்.

நான் சொல்லக் கருதுவது எங்கெல்ஸ் எழுதிவிட்டாதாலேயே அதை ஓர் அரசியல் கட்சியின் கருத்துப்போல் கருதவேண்டியதில்லை; கருதக் கூடாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின்  பல்வேறு அறிவுத்துறைகளின் வளர்ச்சியை உள்வாங்கி ஒரு கோட்பாட்டை உருவாக்கியவர்கள் மார்ச்சும் எங்கெல்சும். அவர்கள் அறிஞர்கள்.

சரி. இப்போது ஓர் அரசியல் தலைவர் கருத்துக்கே வருவோம்.

மார்க்சிய நோக்கில் , 'மொழி என்பது மேற்கட்டுமானத்தைச் சேர்ந்ததா? அடித்தளம் சார்ந்ததா' என்கிற வினா எழுப்பப்பட்டபோது தலைவர் ஜே.வி.ஸ்டாலின்  மொழியைக் குறிப்பிட்ட பொருளாதார உற்பத்தி முறை என்கிற அடித்தளத்தின் 

மேற்கட்டுமானமாகக் கொள்ள இயலாது என்பதை மிகத்தெளிவாக , எளிய நடையில் , விளக்கியுள்ளார்⁴. 

மக்கள் தலைவர் ஒருவர் மொழியைக் கையாளவேண்டிய முறைக்கு முன்னுதாரராணமான நடை ; கருத்துக்கு முதன்மை தருகிற  வேண்டா அணிநயமற்ற நடை; மொழிபெயர்ப்பிலும் சரளம் குன்றாத நடை.

'ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மொழி என்பது எந்த ஒரு அடித்தளத்தின் , குறிப்பிட்ட காலத்தின் உற்பத்தியுமல்ல ; மாறாக அச்சமூகத்தின் பல நூற்றாண்டுக்கால ஒட்டுமொத்த வரலாற்றுப் போக்காலும் பல்வேறு அடித்தளங்களாலும் உற்பத்தியானதாகும். அது ஒரு சில வர்க்கங்களால் அன்றி முழுச் சமூகத்தாலும் நூற்றுக்கணக்கான தலைமுறைகளின் அரு முயற்சியாலும் படைக்கப்பட்டது '⁵- என்கிறார் ஸ்டாலின். அதாவது அடித்தளம் மேற்கட்டுமானம் இரண்டையும் கடந்தது ; இரண்டிலும் ஊடாடுவது மொழி.

மார்க்சியக் கலைச்சொற்களை விட்டுவிட்டால் , டேவியின் கருத்தும் இதுதான்.

ஒரு கோட்பாட்டுப்பார்வையில் இயங்கிய அரசியல் கட்சி ஆட்சியதிகாரத்தை நெருங்கும் நிலையிலும்  ஏற்றபோதும் , பல்வேறு நடைமுறைச்சிக்கல்களுக்கும் கோட்பாட்டுக்கும் இடையிலான தொடர்பைத் தெளிவுறுத்த வேண்டிய நெருக்கடி நேர்ந்தது. அந்த நிலையில் தேசிய இனங்கள்  மொழிகள் பற்றிய மார்க்சிய நோக்கிலான ஆய்வை மேற்கொண்டார் ஸ்டாலின். இன்றைய நிலையில் சிலவற்றை மறுபரிசீலனை செய்யலாம்; செய்ய வேண்டும்.  ஆனால், காலப் பின்னணி கருதாமல் ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகள்- கடும் விமரிசனத்திற்குரியவைதாம் -  சார்ந்த பிம்பத்துடன்  ,அவரது ஆய்வை முற்றிலும் இணையாக வைத்துப் பார்ப்பது பிழை. அவரது மொழிப் பிரச்சினை பற்றிய கருத்துகள் , மார்க்சியம் சோவியத் அரசு ஆகியவற்றையும் கடந்து , பொது நிலையில் கணக்கில் கொள்ள வேண்டியவை .

எல்லாப் பொருளும் இவற்றின்பால் உள என்பதன்று. ஆனால்,இவற்றின்பால் எப்பொருளும் இல்லையால் என்பது கண்மூடித்தனமானது.

வளர்ந்த உருசிய மொழி வழங்கியபோதும் சோவியத் நிகரமை  ஒன்றியக் குடியரசு, அனைத்துத் தேசிய இன மொழிகளையும் ஏற்றது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்கும் எழுத்தை உருவாக்கிப் புழங்கச் செய்தது.இது  மக்களாட்சி நடைமுறை. ஜே.வி. ஸ்டாலினே ஒரு ஜார்ஜிய தேசிய இனத்தவர்தாம்.

இப்போது மீண்டும் கணேஷ் டேவியிடம் வருவோம்.

ஒவ்வொரு மொழியும் மரபு வழிப் பண்பாட்டுப் பொதிவு; நுண்ணுடைமை. இந்த உடைமையைப் பேணுவது  விவாதத்திற்கு அப்பாற்பட்ட உரிமை. விவாதத்திற்கப்பால் இவ்வுரிமையைப் பேணுவது அரசின் கடமை⁶ - என்கிறார்  க.நா.டேவி

------------------------------------------------

*தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி, கோவை மாவட்டக் குழுக்கள் நடத்திவரும் மெய்நிகர் சந்திப்புத்தொடரில் 22.10.2020 அன்று , 'இயற்சொல்லும் அயற்சொல்லும் ' என்னும் தலைப்பில் உரையாற்றியபோது இவற்றைக் குறிப்பிட்டேன். இங்குச் சற்று விரித்தும் தொனி வேறுபடுத்தியும் , அன்றைய பேச்சின் பொருளில்  பெரிய மாறுதல்  எதுவும் செய்யாமல் தந்துள்ளேன்.


1.Among the things that make humans a distinct species, the ability to use language made of verbal icons ranks very high. The ability to speak is not nature’s gift. Human communities had to spend several millennia to acquire it through an enormous amount of experimentation and an unparalleled amount of mental work. It would be entirely appropriate to view language as a cultural production and not god-given. 

 - G.N. Devy ,  Gain in translation , The Hindu, JULY 21, 2017 .


2.Labour is the source of all wealth, the political economists assert.   And it really is the source – next to nature, which supplies it with the material that it converts into wealth.    

- Frederick Engels (1876), The Part played by Labour in the Transition from Ape to Man, marxists.org


3.First labour, after it and then with it speech – these were the two most essential stimuli under the influence of which the brain of the ape gradually changed into that of man  which, for all its similarity is far larger and more perfect. - ibid.


4.Language is not a product of one or another base, old or new, within the given society, but of the whole course of the history of the society and of the history of the bases for many centuries      -J.V.Stalin(1950), Marxism and Problems of Linguistics, marxists.org


5.It was created not by some one class, but by the entire society, by all the classes of the society, by the efforts of hundreds of generations- ibid.


6.A given language...  needs to be seen as cultural heritage, an intangible possession.

From this perspective, the community’s right to its language becomes a non-negotiable right to cultural possession. Similarly, the state’s obligation to secure and protect this right too becomes a non-negotiable duty. - Devy, op.cit.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...