Sunday, October 11, 2020

நூன் மரபு- ஒரு கிரேக்கத் திறவுகோல்

 


தொல்காப்பியத்தின் முதல் அதிகாரம் எழுத்ததிகாரம் .அதன் முதல் இயல் நூன்மரபு (நூல் + மரபு). இவ்வியல்   தமிழ் எழுத்துகளின் எண் (ணிக்கை), (வரிசை)முறை, பெயர் (சுட்டும் கலைச்சொற்கள் ) முதலியவற்றைக் கூறுகிறது.


இவ்வியலுக்கு  நூன்மரபு (நூல் மரபு ) என்று பெயர்.

அதற்கு ஏன் நூல் மரபு என்று பெயரிடப்பட்டது?

"சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றான் தொகுத்து உணர்த்துதலின் நூல் மரபு என்னும் பெயர்த்து "  எனத் தமக்கேயுரிய செறிவோடு கூறுகிறார் இளம்பூரணர்.



" இத்தொல்காப்பியம் என்னும் நூற்கு மரபாம் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினமையின் நூன்மரபு என்னும் பெயர்த்தாயிற்று

" ஆயின், நூல் என்றது ஈண்டு மூன்று அதிகாரத்தினையும் அன்றே ? இவ்வோத்து மூன்று அதிகாரத்திற்கும் இலக்கணம் ஆயவாறு என்னை எனின், எழுத்துக்களின் பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்கும் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது ...

'அம்மூவாறும்'(22) என்னும் சூத்திரம் முதலியவற்றான் எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின் , சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று . இங்ஙனம் மூன்று அதிகாரத்திற்கும் இலக்கணம் கூறுதலின் , இவ்வோத்து நூலினது இலக்கணம் கூறியதாயிற்று " - எனநச்சினார்க்கினியர் விவரிக்கிறார்.


" ஈண்டுக் கூறப்படும் எழுத்து - குறில் - நெடில் - உயிர் -  மெய் - என்றல் தொடக்கத்துப்பெயர்கள் நூலின்கண் ஆளுதற்பொருட்டு முதனூல் ஆசிரியனால் செய்துகொள்ளப்பட்டமையின், இவை நூன்மரபு பற்றிய பெயர் ஆயின என அறிக " எனப் பொருள் கண்ட சிவஞான முனிவர் (முதற் சூத்திர விருத்தி) தம் வழக்கம்போல் பூரணர், நச்சர் விளக்கங்களை மறுக்கிறார்.


" நூற்கு இன்றியமையா மரபு பற்றிய குறிகளை விதிக்கும் இவ்வியலுக்கு 'நூன்மரபு' எனப் பெயரிட்டது மிகப் பொருந்தும் " - என முனிவர் கருத்தை வழிமொழிகிறார் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார்.



வே.வேங்கடராஜுலு ரெட்டியார் கருத்தைப் பிறகு பார்ப்போம்.

" நூன்மரபு : இசைப்பதும் ஒலிப்பதுமாகிய  ஒலி எழுத்துக்களின் மரபுகளை உணர்த்தும் பகுதி என்பது இதன் பொருள் " எனக் கூறும் பாவலரேறு ச.பாலசுந்தரம்,

நுவல்> நூல்; ஒல்> ஒலி என்னும் சொற்பிறப்பியல்பு காட்டி,  "சினையிற் கூறும் முதலறி கிளவி' என்னும் ஆகுபெயரிலக்கணத்தான் (புத்தகமாகிய)நூலினை உணர்த்தலாயிற்று. இதன் இயற்பொருள் 'ஒலியெழுத்து' என்பதாகும் " என்கிறார்; அதாவது  ஒலியெழுத்து,  நூல் என்னும் ஆகுபெயரால் சுட்டப்படுகிறது என்கிறார்


" முன்னுரையை நூன்முகம் என்று வழங்குவதுபோல , நூலின் தொடக்க இயல் என்று காட்டுவதற்கு எழுத்து மரபு எனற்பாலது நூன்மரபு என்று பெயர் வைக்கப்பட்டது." என் பார் வ.சுப. மாணிக்கனார்.



இவை இருக்கட்டும்.


grammar என்கிற ஆங்கிலச் சொல்லுக்கான சொற்பிறப்புப் பற்றிப் பொதுவாகத் தெரிந்து கொள்ளக் கூகுளில் நுழைந்தேன்.

யுரேகா ! யுரேகா !

தொல்காப்பியம் எழுவகைச் செய்யுளுள் / யாப்புள் ஒன்றாகக் கூறும் 'நூல்' என்பது இலக்கணத்தைக் குறிக்கிறது(பிற அறிவுத் துறை ஆக்கங்களையும் குறித்துப் பின்னர் விரிந்தது எனத் தோன்றுகிறது).

grammar  என்னும் சொல்லின் மூலக் கிரேக்கச் சொற்கள் ,  அகரவரிசை எழுத்துகள், எழுதப்படுவன, எழுத்து(க்கலை) என்னும் பொருள்களைக் குறித்துள்ளன.



தமிழ் எழுத்துகளின் எண் (ணிக்கை), (வரிசை)முறை, பெயர் (சுட்டும் கலைச்சொற்கள் ) முதலியவற்றைக் கூறும் இயலுக்குத் தொல்காப்பியம் நூன்மரபு (நூல் மரபு ) என்று பெயரிட்டிருப்பதை நோக்கத் தமிழிலும் நூல் என்பது எழுத்துக் கலையைக் குறித்துப் பின்னர் இலக்கணம் குறிப்பதாக விரிந்திருக்கலாம்.

எழுத்துக் கலையை நூன்மரபு என்றது பழைய மரபின் - பொருட்குறிப்பின் - எச்சமாகலாம்.

இப்போதுதான், முதன்முதலாக   - நூல் = எழுத்து என்னும் இத் தொடர்பை ஒப்பியல் நோக்கில் உணர்கிறேன். தொல்காப்பியருக்கு முந்தைய இலக்கணங்களில் ஒரு வேளை 'நூன்மரபு' என்றே இவ்வியல் வழங்கப்பட்டிருக்குமோ!

" இவ்வியலுக்கு எழுத்து மரபு எனப் பெயரிடாது, நூன்மரபு எனப் பெயரிட்டது என்னை யெனின், நூல் என்றது, ஈண்டு எழுத்தினையே குறித்துளது என்று கோடல் அமைவுடையதாகும்.இப்பொருட்குத் தக்க மேற்கோள் இப்போழ்தறியப்பட்டிலதாகலின் இன்னும் ஆராய வேண்டுவதாயுளது" (தொல்காப்பியம் எழுத்ததிகார வாராய்ச்சி, 1944, சென்னை சருவகலாசாலை, ப.4) என்கிறார் ரெட்டியார்.



ரெட்டியார் இயல் நுதலியது கொண்டு ஊகித்துள்ளார். ரெட்டியாரின் ஊகம்  கிரேக்க ஒப்புமையால்  சற்றுக் கூடுதல் வலிமை பெறுகிறது.

இளம்பூரணரின் செறிவான கருத்து இது கருதியா என்பது புலனாகவில்லை. 

தொல்காப்பியத்தில் இயல்/இயல்பு , இலக்கணம் , குறி, நூல் , மரபு - ஆகிய சொற்கள் அறிவுத்துறை நூலையோ மொழி வரையறை விதியையோ குறிக்க - ஒரு பொருட் பன்மொழிகளாக - பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை வேறு பொருள் சிலவற்றைச் சுட்டுவதன் வழி ஒவ்வொன்றும் பல பொருளொரு சொல்லாகவும் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பிய இலக்கணக் கலைச்சொற்களில் ஒரு நெகிழ்வு காணப்படுவது வெளிப்படை ( சுப. திண்ணப்பன், 'தொல்காப்பியத்தில் இலக்கணத் குறியீட்டுச் சொற்கள்' , தொல்காப்பிய மொழியியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1972 )



முனைவர் க.பாலசுப்பிரமணியனின் 'தொல்காப்பியச் சொற்பொருளடைவு' தரும், 

இலக்கணம் என்னும் பொருள் குறிக்குமிடங்களும் பிற பொருள் குறிக்குமிடங்களும் பின் வருமாறு



(எண்ணிக்கை: இலக்கணம் / பிற பொருள்)

இயல் (4 / 124)

இயல்பு (3 / 34)

இலக்கணம் (4 - வரையறை, பயன்பாட்டு விதி எனும் நிலையில் இலக்கணத்தை       மட்டுமே குறிக்கிறது)

குறி (1 / 10)

நூல் (10/1)- துறையறிவு நூல் . systematic or scientific treatise [ இலக்கணம்]

மரபு ( 19 / 50)

மரபின ( 4/ 8)

மேலே பிற பொருள் குறித்தனவாகக் குறிப்பிடப்பட்டவை பல தன்மை, இயல்பு, பண்பு முதலியனவாக இலக்கணம் சார்ந்த பொருள் குறிக்கின்றன.

இயல, இயலா, இயலாது, இயலான், இயலின், இயலும், இயற்கை, இயற்கைத்து, இயற்கைய- என்பன இலக்கணம் என்பதை உய்த்துணரத்தக்க வகையில் தன்மை முதலிய பொருள் குறித்து வரினும் இலக்கணமே என உறுதியாகக் கூற இயலாதன.

குறித்த, குறித்து, குறித்தல் , குறித்தன்று , குறித்தன , குறிப்பின , குறிப்பு - என்பனவும்

இலக்கணம் குறித்து ஆளப்படவில்லை.

இந்தப் புள்ளிவிவரத்தைக்காணும்போது இலக்கணம், நூல் ஆகிய இரண்டும் அறிவுத்துறை நூல்கள் குறித்து மட்டுமே வழங்கப்பட்டிருப்பதை அறியலாம்.

(தொல்காப்பியத்தில் ஓரிடத்தில் மட்டும் நூல் - முப்புரிநூலை(பூணூலைக்) குறிக்கிறது.இரண்டும்  தொடர்பற்ற வெவ்வேறு பொருட்பின்புலம்  உடையவை. எனவே முப்புரி நூலை அதாவது  பஞ்சு முதலியவற்றிலிருந்து எடுக்கும் நூலைத் தனி ஒரு சொல்லாகவே கொள்ள வேண்டும். 'பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாக...' என உருவகத் தொடர்பு காண்பது ஒரு நயம்.)

காலப்போக்கில் மிகப்பெரும்பாலும் இலக்கணம் என்னும் சொல்லே மொழி இலக்கணத்தைக் (grammar)குறிப்பதற்குரியதாக நிலைபெற்றுவிட்டது.

இவையெல்லாம் தனித்துத் தொகுத்தாராய வேண்டியவை. நிற்க.


நூல் (எழுத்து/ எழுத்தியல்)  >  நூல் (அறிவுத்துறைப் பனுவல்/ இலக்கணம்)  >  நூல் (அனைத்து வகைப் பனுவல்களும்) எனப்பொருள் நீட்சிபெற்றுவிட்டது எனலாம்.

அனைத்து வகைப் பனுவல்களையும் குறிக்கும் வழக்குச் செல்வாக்குற்ற நிலையில்

மொழியமைப்பை, விதிகளைக் கூறும் பனுவலை இலக்கணம் என்று குறிப்பது நிலைத்துவிட்டது. தொல்காப்பியம் இப்போக்கின் தொடக்கநிலையைக் காட்டுகிறது.

எழுத்துக் கலையைக் குறித்த 'நூல்' முற்றாக வழக்கொழிந்துவிட்டது. அதன் எச்சமாக

'நூன்மரபு' என்னும் தொல்காப்பிய இயலின் பெயரில் அடையாளம் காட்டிக்கொண்டு நிற்கிறது.

வழக்கமான பல்லவி : 'இதுவே முடிந்த முடிபன்று'.


                                                       ()()()()()()()()()

                                        

 'கிரேக்கத் திறவுகோலை'க் கண்டவுடன்  'யுரேகா யுரேகா' என்று ஓடினேன். 

 உரைகள் கைவசமிருந்தன எனினும் தொகுத்துத் தரத் தோன்றவில்லை.

 கண்டதை விண்டுரைக்கும் ஆசை! 


பேரா. இராஜா , ரெட்டியார் கருத்தைச் சுட்டினார்.


   Raja Rajendiran :  நூல் என்பதற்கு எழுத்து என்னும் பொருளை நான் திருவையாற்றில் முதுகலை பயிலும்போது பேராசிரியர்கள் ச. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ச. திருஞானசம்பந்தம் ஆகியோர் கூறக் கேட்டதுண்டு. அதற்கு முன்னரே இக்கருத்து திரு. வேங்கடராசலு ரெட்டியார் அவர்களிடம் நிலவியதைக் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் பதிப்பின் நூன்மரபு அவதாரிகைப் பகுதியால் அறியலாம். அவர்க்குச் சான்று கிட்டவில்லை. தாங்கள் ஒரு வலுவான தொடர்பைக் காட்டியுள்ளீர். 


- 27 செப்.2018 & 30 செப்.2018 முகநூல் இடுகைகள் சேர்க்கை நீக்கங்களுடன்.

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...