Saturday, October 24, 2020

சொல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

 

சொல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
தொல்காப்பியத்தில் 'சுழி' - ஒரு தேடல்*





தொல்காப்பியம் காலப்பழமையுடையது; தமிழ்கூறு நல்லுலகில் பண்பாட்டு மதிப்புடையது; காலந்தோறும் தோன்றும் புதுப்புதுத் துறைகளின் உரைகல்லில் உரசித் தன்னை நிறுவிக் கொண்டது.

தொல்காப்பியத்தை இக்கால உரைகல்லான மொழியியலோடு உரசும் முயற்சி தொடங்கி ஏறத்தாழ அரைநூற்றாண்டாகிவிட்டது. விளக்க மொழியியல், ஒப்புமொழியியல், வரலாற்று மொழியியல், மாற்றிலக்கணம், சொல்லாடற் பகுப்பாய்வு , மொழிப் பொருண்மையியல் முதலிய பல்வேறு நிலைநின்று தொல்காப்பியத்தை நோக்கும்போதும் தொல்காப்பியம் அவற்றுக்கு ஈடுகொடுக்கிறது.


இதன் பொருள் தொல்காப்பியத்தில் எல்லாப் பொருளும் உள என்பதன்று. தமிழ் என்னும் ஒருமொழி இலக்கணத்தினூடாகப் பொதுவான மொழிக்கூறுகள் பலவற்றைத் தம் கால எல்லைக்குள் நின்றே தொல்காப்பியர் சிந்தித்ததற்கான, சற்றுக் கூடுதல் குறைவான அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதே கருதத் தக்கது .

அந்த வகையில் தொல்காப்பியத்தை உருபனியற் கோட்பாட்டின் ஒருபகுதியான சுழியுருபு பற்றிய நோக்கில் காண முற்பட்டதன் விளைவு இக்கட்டுரை.

கட்டுரைக்குள் நுழையுமுன் தொல்காப்பியம் என்னும் பனுவலையும், தொல்காப்பியப்பனுவலின் ‘கோட்பாட்டை’யும் சற்றே அறிமுகப்படுத்திக் கொள்வது நல்லது.

தொல்காப்பியப் பனுவல்  ஒரு காலத்தில் ஒருவரால் இயற்றப்பெற்றதென்றும் சிலரால் வெவ்வேறு காலத்தில் இயற்றப்பெற்றதென்றும் இருவேறு கருத்துகளிருப்பினும் மொழிநடையாலும் கருத்து இழையாலும் பேரளவு ஒருநிலைப்படுத்தப்பட்ட வடிவமுடைய பனுவலாகவே காணப்படுகிறது¹; பொதுக்காலம்(CE) பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பே ஒற்றைப்பனுவலாக நிலைபெற்றுப்², பயிலவும்பட்டதைத் தொல்காப்பியத்தின் பழையவுரைகளால் அறியமுடிகிறது.




தொல்காப்பிய எழுத்து, சொல்லதிகாரங்கள் மொழி இலக்கணம் கூறுவன; பொருளதிகாரம் இலக்கியக் கொள்கை கூறுவது எனப் பெரும்பாலாரால் கொள்ளப் படுகிறது.வேறுபட்ட பார்வைகளும் உள்ளன. தொல்காப்பியம் கூறும் மொழி இலக்கணத்தில் இழையோடும் சரடு தொடரிலக்கணம்.

எழுத்ததிகாரத்தின் பின்ஆறுஇயல்களும் பெரிதும் வேற்றுமை, அல்வழி எனப் புணர்ச்சியிலக்கணம் கூறுவன; தொடரிலக்கணம் சார்ந்தன என்பது வெளிப்படை. சொல்லதிகாரத்திலும் கிளவியாக்கமும் வேற்றுமை பற்றிய இயல்களும் எச்சவியலின் சில பகுதிகளும் தொடரிலக்கணம் சார்ந்தவை.

அல்வழித்தொடர் கிளவியாக்கத்துள்ளும் வேற்றுமைத்தொடர் வேற்றுமையோத்துகளுள்ளும் உணர்த்தியதாகவும் பொருளுணர்த்துதற்குச் சிறப்புடையன தொடர்மொழியேயென்றும், தொடர்மொழியைப் பிரித்துப் பெயர், வினை, இடை, உரி எனக் குறியிட வேண்டுதலின் அவை பிற்கூறப்பட்டனவென்றும் எழுவாய், விளிவேற்றுமைகள் எழுத்ததிகார அல்வழிக்கண் முடித்ததாகவும் தெய்வச்சிலையார் கூறுவன³ தொல்காப்பியம் தொடரிலக்கணம் சார்ந்ததென்பதற்கு வலிமை சேர்க்கின்றன.

தெய்வச்சிலையாரோடு உடன்பட்டுத் தம் மொழியியலறிவு நுட்பத்தால், க. பாலசுப்பிரமணியன் மேலும் ஆழ்ந்து நோக்கித் தொல்காப்பிய எழுத்ததிகார ‘ஒலியனியல்’, மாற்றிலக்கண ஒலியனியலோடு பெரிதும் ஒத்துள்ளதாகக் காட்டுகிறார்; தொடரியல் மட்டுமன்றிக் கருத்தாடல்(Discourse) கூறுகளும் காணப்படுதலைக் காட்டியுள்ளார்⁴  இவ்வடிப்படையில் ,தொல்காப்பிய உருபனியற் ‘கோட்பாட்’டை, அதனுள் சுழியுருபு பற்றிய சிந்தனையைக் காண இயலும்.

மொழியும் சுழியும்
--------------------------------



“தொடர்புடைய வடிவங்களின் வரிசைக் கட்டமைப்பில் சில இடங்களில் குறிப்பிடத்தக்க வகையில் வடிவக் கூறு இல்லாமற் காணப்படுமாயின் அதனைச் 'சுழி' என்று விளக்கலாம்” எனக் கூறும் நைடா sheep, trout முதலிய சொற்களை எடுத்துக்காட்டி இவற்றில் பலவின்பால் விகுதிகள்(Plural suffix) இன்மையைச் சுட்டி, இவை பிற பலவின்பால் சொல் வடிவ வரிசையமைப்பினின்றும் வேறுபட்டிருப்பதால் இந்த இன்மையை மாற்றுருபியற் சுழி (allomorphic zero) என வழங்கலாம் என்கிறார்.

டோட்டனாக்(Totonac) என்னும் மொழியில் மூவிடப் பெயர் ஒருமை பன்மை வடிவங்களுள் படர்க்கை ஒருமைப் பெயருக்குப் புலப்படத்தக்க வடிவம் இல்லை. இதனை உருபனியற் சுழி(Morphic Zero) என்கிறார் நைடா.

அதேவேளையில் கண்டவாறெல்லாம் சுழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் இல்லையெனில் மொழி விளக்கமென்பது தேவையற்ற இடங்களிலெல்லாம் சுழிகளை அள்ளித் தெளிக்கும் அலங்கோலமாகிவிடும் எனவும் எச்சரித்துள்ளார்⁵

எழுவாயும் சுழியும்
--------------------------------
எழுவாய்/முதல் வேற்றுமை, அண்மைவிளி ஆகியவற்றை உணர்த்தத் தனி இடைச்சொல்(உருபு) இல்லாமையைத் தொல்காப்பியம் சுட்டும்.

“எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே” (தொல்.சொல்.வேற்.4)
என்னும் நூற்பாவுரையில் “பெயர் என அமையும்; தோன்றுநிலை என்றதனாற் பயன் என்னை எனின், பெயர் கண்டுழி யெல்லாம் வேற்றுமையென்று கொள்ளற்க என்பது அறிவித்தற்கெனக் கொள்க” என்பார் தெய்வச்சிலையார். பெயர்வேறு; எழுவாய்/முதல் வேற்றுமை வேறு⁶ எனவே எழுவாய்/ முதல் வேற்றுமைக்குரிய உருபனியற் சுழியைக் கொள்ள வாய்ப்புண்டா என ஆய்தல் வேண்டும்⁷.

விளியும் சுழியும்
-----------------------------
“அண்மைச் சொல்லே யியற்கை யாகும்” (தொல்.சொல்.விளி.10)
“ஆனென் னிறுதி யியற்கை யாகும்” (மேற்படி, 15)
லகர, ளகர ஈற்றுப் பெயர்கள் விளியேற்றல் பற்றிய “அயல் நெடிதாயின் இயற்கையாகும்” (மேற்படி, 18) எனும் நூற்பாக்களில் பெயர்கள் இயல்பாகவே நின்று விளயேற்குமென்கிறது தொல்காப்பியம்.
நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி - என்பனவற்றில் பெயர்கள் இயல்பாய் நின்று அண்மை விளி ஏற்றன.
சேரமான், மலையமான் - என விளிக்கண்ணும் னகர ஈற்றுப் பெயர்கள் அவ்வாறே நிற்கும்.
பெண்பால், ஆண்பால், எம்மாள், கோமாள் - என்பன ஈற்றயல் நீண்ட லகர, ளகர, ஈறுகள் அவ்வவ்வாறே நின்று விளியேற்றமைக்குச் சான்றுகள்.
“தொழிலிற் கூறு மானென் னிறுதி
யாயா கும்மே விளிவயி னான” (மேற்படி, 16)
என்னும் போது, உண்டான் என்னும் தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்) உண்டாய் என விளியேற்கும். இந்நூற்பாவிற்கான தெய்வச்சிலையார் விளக்கத்தை ஒப்பு நோக்கிற்காகக் காணலாம் :
" ஈண்டு ‘விளிவயினான’ என விதந்தோதினமையான் தொழிலால் வருஞ்சொல் முன்னிலை வினையாகிய வழியும், உண்டாய் என வரும்; அஃதன்று இது என்பதூஉம், அதனொடு இதனிடை ஓசை வேறுபாடு உளது என்பதூஉம் அறிவித்தற்கெனக் கொள்க."

எழுத்தோரன்ன பொருள் தெரிபுணர்ச்சி இசையிற்றிரிதலாகிய  (தொல்.எழுத்து.புணரியல் 39) மேல்நிலை இயல்பு (suprasegmental feature) பற்றித் தொல்காப்பியம் கருதியுள்ளது; ஆனால் எழுவாய்/முதல் வேற்றுமை, இயல்புவிளி ஆகியவற்றின் பெயரையும் சொல்வகைகளுள் ஒன்றாகிய பெயர்ச் சொல்லையும் இசைத்திரிபு வேறுபடுத்தும் எனக் கூறவில்லை.

முன்னிலை வினை, விளியேற்கும் பெயர் என இருவேறு சொல்வகை காரணமாகத் தெய்வச்சிலையார் ஓசைவேறுபாடு கருதினரேயன்றிப் பண்டை உரையாசிரியர் எவரும் எழுவாய், இயல்பு விளிவேற்றுமை ஏற்கும் பெயர்களுக்கு ஓசை வேறுபாடு கூறவில்லை.

இடையாறு வேற்றுமைகளுக்கு வெளிப்படையான உருபுகள் இருத்தல்போல் இவற்றுக்கு உருபுகள் இல்லாமை கொண்டு இவ்விடங்களில் உருபனியற் சுழியைக் கருதிப் பார்க்கலாம். ஆனால் தொடரிலக்கண நோக்கில் எழுவாயும் விளியும் வேற்றுமைத்தொடருள் வைத்து எண்ணப்படாமையும் கருத்திற் கொள்ளத்தக்கதாகும்.

தொகையும் சுழியும்
----------------------------------
தொல்காப்பிய எழுத்ததிகாரத் தொகைமரபில் ஐகார வேற்றுமைத் திரிபுகளைத் தொகுத்துக் கூறும் நூற்பா(15) “உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் / அஃறிணை விரவுப் பெயர்க் கவ்வியல் நிலையலும்” என்னும்போது உயர்திணை, விரவுத் திணைப் பெயர்கள் இரண்டாம் வேற்றுமையுருபை ஏற்றே வருதல் வேண்டும் என விதிக்கிறது⁸.இதனால் அஃறிணைப் பெயர்களில் ஐகாரவுருபு இடம்பெறுதல் விருப்பு நிலைசார்ந்ததாக அமைகிறது.
சான்றோர் செய்யுளுள் ‘மழவ ரோட்டிய’(அகம்.1:2)என்பன போல உயர்திணையில் ஐகாரம் தொக்கு நிற்றலை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுவர்.
'மழவர் ஓட்டிய' என்பது இங்கு மழவரை ஓட்டிய என்னும் பொருளில் இடம்பெற்றுள்ளது.
- ஐ உருபு தொக்கி நிற்பதால், 'மழவர் பிறரை ஓட்டிய' என்றும் கொள்ள வாய்ப்பாக,  பொருள் மயக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு உருபு விரிந்து நிற்பதே இயல்பானதும் பொருள் மயக்கம் அற்றதுமாகும் . எனவேதான் உயர்திணை மருங்கின் ஒழியாது வருதல் விதிக்கப்பட்டது.

செய்யுளின்பம் கருதி மேற்குறித்த பாவில் உருபு ஒழிந்ததுபோலும்.

எவ்வாறாயினும் ஒரு சில பெயர்களோடு ஒழியாது வருதல் வேண்டும் என விதித்தமையால் ஒழிந்து வருநிலையில் மாற்றுருபியற் சுழி பற்றிக் கருதலாம்.

‘-கள்’ளும் சுழியும்
------------------------------
“கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே
கொள்வழி யுடைய பலவறி சொற்கே” (தொல்.சொல்.பெயர்.15)
“தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெய
ரொருமையும் பன்மையும் வினையொடு வரினே”(மேற்படி, 17)
என்னும் நூற்பாக்கள் அஃறிணையியற் பெயர்கள் பன்மை விகுதியொடும் இன்றியும் வருதலைக் கூறுகிறது. இஃதொரு மொழி வரலாற்று மாறுதற் கட்டத்தைக் காட்டுகிறது.
1. ஆ வந்தது, குதிரை வந்தது - ஒருமை
2. 1.ஆ∅ வந்தன, குதிரை∅ வந்தன - பன்மை
2.2.ஆக்கள் வந்தன, குதிரைகள் வந்தன - பன்மை
2.1.ஆம் காட்டுகளில் பலவின்பால் விகுதி மாற்றுருபியற் சுழி நிலையின எனலாம்⁹.
கள், ∅ எனும் இரண்டும் உளவாகலின். 




நைடா ஆங்கிலத்தில் காட்டும் Sheep, trout முதலியவற்றை இவை ஒத்திருத்தல் காணலாம். வேறுபாட்டையும் கருதுதல் வேண்டும். ஆங்கிலத்தில் சில சொற்களோடு பன்மை விகுதி முற்றிலும் வருதலில்லை. பெரும்பான்மையின் வரிசைச் சீர்மையமைப்புக் கருதிச் சில சொற்களுக்கு மாற்றுருபியற் சுழி கொள்ளப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் புறநிலை வரலாறு கொண்டு அதனைக் காண இடமிருக்கிறது¹⁰

வினையும் சுழியும்
--------------------------------
செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே (தொல். சொல். எச்ச.          )
" இந்நாள் எம்மில்லத்து  உண்ணாய் என்பது . அது செய்யாய் என்பது; அது செய் இனி என்றுமாம் " என்னும் இளம்பூரணர் எடுத்துக்காட்டை நோக்கச் செய்யாய் என்னும் முன்னிலை எதிர்மறை வினைமுற்று உண்ணுவாய் என்னும்  உடன்பாட்டிற்கும் ஆகும் என்று அவர் கொள்வது புலனாகிறது. நச்சினார்க்கினியர் , தெய்வச் சிலையார் ஆகியோரும் இக்கருத்தினரே.

தெய்வச்சிலையார் " இவ்வாறு வருவதும் இசையெச்சம் " என்று இறந்தது தழீஇய எச்சவும்மையால்  விளிமரபில் செய்யாய் என்னும் வினை முற்றுக்கும் விளிக்கும் ஓசை வேறுபாடு உளது என்ற தம் கருத்தை நினைவூட்டுகிறார்.

செய்யாய் என்னும் வாய்பாட்டு முன்னிலை முற்று - ஆய் என்னும் ஈறுகெடச் செய் என்னும் [ஏவல் வடிவச்] சொல்லாய் நிற்றலுடைத்து என்பது சேனாவரையர் கருத்து.
சேனாவரையர்  பிறர் கருத்தை மறுத்துத் தம் கருத்தை வலியுறுத்தவும் செய்கிறார்.

" தன்னின முடித்தல் என்பதனால் வம்மின் , தம்மின் என்பன   -மின் கெட வம் , தம் என நிற்றலும் ; அழியலை , அலையலை என்னும் முன்னிலை எதிர்மறை - ஐகாரங்கெட்டு அழியல் , அலையல் என நிற்றலும் கொள்க " என்கிறார்.

உண்ø / உண்ணாய்
நடø / நடவாய்
தாø / தாராய்
போø / போவாய்

வம்ø / வம்மின்
தம்ø / தம்மின்

அழியல்ø / அழியலை
அலையல்ø / அலையலை - என்பன சேனாவரையர் கருத்தின்படி மாற்றுருபியற் சுழி கொள்ள வாய்ப்புடையன. இனி,

செய் + ஆய் - முன்னிலை
செய்+ø+ஆய் - எதிர்மறை என எதிர்மறையில் சுழி கொள்ள வாய்ப்புண்டு. முயன்றால் இவை போல்வன பிறவும் சில காண இயலும்.

‘வினை… காலமொடு தோன்றும்’ (தொல்.சொல்.வினை.1) என்பதும், வினையைக் ‘காலக்கிளவி’ (தொல்.சொல்.வினை.10;17;22) என்பதுமாகிய நூற்பாக்களிலிருந்து தொல்காப்பியர் கால இடைநிலை பற்றி நன்கறிந்தவர் என்பது தெளிவாகிறது. ஆனால், தொல்காப்பியம் தொடரிலக்கணத்தை முதன்மைப்படுத்தி இலக்கணங்கூறும் நூல் என்பது முன்னரே கூறப்பட்டது.

‘வினையின் தோன்றும் பாலறி கிளவியும் பெயரின் தோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா’ (தொல்.சொல்.கிளவி.11) என்னும் மரபைத் தனித்தன்மையாகக் கொண்டது தமிழ்த் தொடரமைப்பு. இவ்வியைபுக்குக் கால இடைநிலைகளையோ, அவற்றின் அகப்புணர்ச்சி நிலைகளையோ விளக்க வேண்டியதில்லையாதலின் தொல்காப்பியம் அவற்றைக் கருதவில்லை.

இதனால் விதி வினை, மறைவினைஆகியவற்றின் கால இடைநிலைகளிற் காணும் சுழிகள் பற்றிக் கூறும் தேவையும் எழாமற் போயிற்று.

தொகுப்புரை
1. தனி உருபில்லாத எழுவாய் / முதல் வேற்றுமை நிலையிலும்
2. அண்மை விளி, -ஆன் என் இறுதிப் பெயர்கள், ஈற்றயல் நெடிதாகிய பெயர்கள் ஆகியன ஏற்கும் விளிநிலையிலும் உருபனியற் சுழியைக் கருதலாம்.
3. உயர்திணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் தவிர்ந்த அஃறிணைப் பெயர்களில் ஐகார உருபு ஒழிந்து வரும் நிலையிலும்
4. -கள்ளொடு சிவணாத அஃறிணை இயற்பெயர் நிலையிலும்
5. செய்யாய் வாய்பாட்டு  முன்னிலை வினைமுற்றுகள் , செய் என்னும் [ஏவலையொத்த] வடிவில் வழங்கும்போதும்  மாற்றுருபியற் சுழியைக் கருதலாம்.

இவையேயன்றித் தொல்காப்பியம் கூறும் வேறு சில சொல்லமைதிகளிலும் சொல்லாச் சொல் பொருள் குறிக்குமாறமைந்த சுழிகளைத் தேடலாமாயினும், தொல்காப்பியர் நெஞ்சறிந்த நிலையில் 'சுழி' என்னும் கருத்தைக் கொண்டிருந்ததாகத் துணிந்து கூறவியலாது.
தமிழில் வெளிப்படையாக உருபு(morph)கள் இடம்பெறாமலும் பொருள் குறிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், தொல்காப்பியம் அவற்றையும் தமிழின் இயல்பாகக் கருதித்தொகுத்து விதித்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

நூல் தோன்றி நெடுங் காலத்திற்குப் பின் தொல்காப்பியத்திற்கு உரை கண்ட ஆசிரியர்கள் - பெரும்பாலும் சங்கத இலக்கண மாதிரிகளின் செல்வாக்கால் என்று கருதலாம் -  சில இடங்களில் 'சுழி' யை ஒத்த அமைப்பு நிலையில்
தொல்காப்பியத்தைக் காண முற்பட்டுள்ளனர்.
தமக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பினும் வடமொழி வழித் தமிழிலக்கண ஆசிரியர்கள் பிரத்தியம் போன்றவற்றைத் தமிழுக்கும் பொருத்த முற்பட்டபோது 'சுழி'யமைப்புகளின் முன்னோடிக் கூறுகளைத் தத்தம் நூலுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டனர்.
'சுழி' குறித்து மேலும் பல  நுட்பங்கள் அண்மைக் காலத்தில் உருவாகியுள்ளன. அவற்றில் எனக்குப் புலமையில்லை. எனது அடிப்படை மொழியியல் அறிவையும் முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய கோட்பாட்டையும் கொண்டு  முயன்றிருக்கிறேன். ஆழ்ந்த மொழியியலறிவினோர் மேலும் இற்றைப்படுத்த இயலும்.


குறிப்புகள்
———————
1. Balasubramanian, Studies in Tolkappiyam, p.16.
2. பா.மதிவாணன், ' தொல்காப்பியத்தில் பாடம் இல்லை ' தொல்காப்பியம் பால.பாடம், பக்.
3.  தெய்வச்சிலையார் (உரை), தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - கிளவியாக்கம்,  நூ.
4. க. பாலசுப்பிரமணியன், தொல்காப்பிய இலக்கணமரபு, பக்.76-77 & 116-117.
5.    When the structure of a series of related forms is such that there is a significant absence of a formal feature at some point or points in the series, we may describe such a significant absence as "zero." For example, with the words sheep, trout, elk, salmon, and grouse, there is a significant (meaningful) absence of a plural suffix. We determine that there is an absence because the total structure is such as to make us "expect" to find a suffix. This absence is meaningful, since the form with the absence (i.e. with zero) has a meaning which is different from the singular form, which has no such absence. A signif-icant absence in an allomorphic series may be called an allomorphic zero.

Sometimes the general structure suggests a zero element.
  For example, in Totonac the subject pronouns are as follows:
 
k- first person singular              --wi  first person plural
 
-ti second person singular        -tit second person plural
    
— third person singular.                 --qù. third person plural

The third person singular is never indicated overtly, i.e. it has no obvious form. The absence of some other form is what actually indicates the third singular. Structurally, this is a type of significant absence; it is not, however, an allomorphic. zero, but, rather, a morphemic zero. That is to say, this significant absence does not occur in a series of allomorphs, but in a series of morphemes. Both types of. zeros are structurally and descriptively pertinent, but should be carefully distinguished.^
-----------------------------
^It is possible to say that in English the nouns have a zero morpheme for singular and [ -ez] for plural. This would mean that sheep in the singular would have a morphemic zero and in the plural an allomorphic zero. One should, however, avoid the indiscriminate use of morphemic zeros. Otherwise, the description of a language becomes unduly sprinkled with zeros merely for the sake of structural congruence and balance.

Eugene A.Nida, Morphology: The Descriptive Analysis of words, p.46.
6. விரிப்பின் பெருகுமாதலின்தெய்வச்சிலையார் முதலியோர் கூறும் விளக்கங்களை அவரவர் உரைகளிற் கண்டுகொள்க.
7. வீரசோழியம் சங்கத(சமற்கிருத) மரபைப் பின்பற்றி ஒருவன், ஒருத்தி, ஒன்று, கள் விகுதி பெறாப் பலவின்பால் ஆகியவற்றில் சுப்பிரத்தியம் [ - சு] இட்டழித்தல் வேண்டும் என்கிறது.
கொற்றன் சு
கொற்றி சு
யானை சு
என, சுப்பிரத்தியம் இட்டு, பின்னர் அழித்து முறையே
கொற்றன் வந்தான்
கொற்றி வந்தாள்
யானை வந்தது
யானை வந்தன
எனத் தொடராக்க வேண்டும் என்கிறது. வேறு சில இடங்களிலும் சுப்பிரத்தியம் நின்று அழியும் என்கிறது வீரசோழியம்.

" இப்போக்கு பிற்கால உரையாசிரியர்களில் வேறு விதமாகப் புகுந்து கொண்டது. செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் ஆய்விகுதி குன்றி , செய் என நிற்கும் என, சேனாவரையர் நின்று கெடுதல் அல்லது புணர்ந்து கெடுதலைத் துவக்கி வைத்தார். சிவஞான முனிவர் இப்போக்கை உறுதிப்படுத்தினார் . பிரயோக விவேக ஆசிரியர் இது வடமொழி மதம் பற்றியது என உவகை பூத்தார். நச்சினார்க்கினியர் ஒருவரே இதனை நிராகரித்துத் தமிழ் இயல்பை நிலைநிறுத்தியவர் " க.வீரகத்தி, பிற்கால இலக்கண மாற்றங்கள்(எழுத்து), பக். 36 - 37.

இலக்கணக் கொத்து ஆயவன், ஆனவன் முதலிய ஐம்பாற் சொல்லும் பெயர்ப்பின் அடைதலைப் பலர் உரைத்ததாகக் கூறுகிறது. இது தொல்காப்பியர் காலத் தமிழ் மொழியமைப்பில் இல்லையாதலின் தொல்காப்பிய நோக்கில் எழுவாய் மாற்றுருபுசுழியைக் கருதியதெனக் கூறவியலாது.
8. மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்கள் இச்சிந்தனையைத் தூண்டினார்கள். அவருக்கு நன்றி.
9. இராதா செல்லப்பன், மொழியியல், ப.109 (தொல்காப்பியக் கருத்தாகச் சுட்டாவிடினும் எடுத்துக்காட்டுகள் தொல்காப்பியக் கருத்தடிப்படையிலேயே அமைந்துள்ளன)
10. ஆங்கிலத்தில் ஏன் சில பெயர்கள் மட்டும் பன்மை விகுதி பெறவில்லை என்று தேடத் தொடங்கியபோது விளக்க மொழியியலிலிருந்து வரலாற்று மொழியியலுக்குப் போகும் நெருக்கடி நேர்ந்துவிட்டது. ஆங்கிலத்தில் Sheep பற்றி வலையுலகில் புகுந்து தேடினேன். ஆக்ஸ்போர்ட் அகராதி வலைப்பூவில் (blog.oxforddictionaries.com) ஒரு சிறு வரலாறு கிடைத்தது. ஆங்கிலத்தில் கடனாளப் பெற்ற சில சொற்கள் வழக்கில் ஆங்கில இலக்கண மரபுக்குள் உள்வாங்கப்பட்டாலும் வேறு சில, தம் மூல மொழி இலக்கண மரபைத் தொடர்கின்றன. இவ்வகையில் சில சொற்கள் - swine, Sheep, deer, folk முதலியன - தொல்பழஞ் செருமானியத்திலிருந்து (earliest Germanic) வந்தவை; பெரும்பாலானவை நீளடிப் (long-stem) பெயர்கள். சில, காலப்போக்கில் ஆங்கிலத்தில் ஒப்புமையாக்கமாக - s போன்ற பன்மை விகுதிகள் பெற்றன (thing என்பதன் பன்மை விகுதியற்ற நிலைமாறி இப்போது things எனப்படுகிறது). தமிழில் இதனையொத்த ஓர் உள்ளார்ந்த மாறுதல் நிகழ்ந்ததென்று கருத இடமுண்டு. சில வடிவங்களுக்கு மட்டும் பன்மை விகுதியில்லாத ஆங்கிலம் போலன்றித் தமிழில் உறழ்ச்சியாக - விகுதியின்மை, விகுதி சேர்த்தல் ஆகிய இரண்டும் சரி என - கொள்ளப்படுகிறது. அஃறிணை இயற்பெயர்களுக்கு ஒருமை வடிவமே பன்மைக்கும் வழங்கியது பெரும்பான்மை. - கள் சேர்க்கும் புதிய வழக்கத்தைத் தொல்காப்பியம் பதிவு செய்கிறது. காலப்போக்கில் பன்மை விகுதி சேர்ப்பது இயல்பான விதி போல ஆகிவிட்டது.பிற்கால இலக்கணிகள் பால்பகா அஃறிணைப் பெயரென்று கூறிய, அஃறிணை இயற்பெயர்கள் மிகப் பெரும் பாலானவை - அதுவும் தொல்காப்பிய, செவ்வியல் இலக்கியக் காலத்தில் - தமிழுக்கேயுரிய வேரும் அடியும் கொண்டவை; கடனாளப்பட்டவையல்ல. தொல்காப்பியத்தில் ‘மக்கள்’ என்னும் பிரிப்பப்பிரியாச் சொல்லாட்சியில் மட்டும் உயர்திணையில் ‘-கள்’ளைக் காணமுடிகிறது. மக, மகவு, மகன், மகள், மகார் முதலியன ‘மக்-‘ என்னும் வேரில் (root) கிளைத்தவை. தமிழுக்குள்ளேயே அரிதான வடிவமான மாக்கள் என்பது மக்களையும் குறிக்க வழங்கியது. மக்- வேர், மக - அடி எனில், -கள் இணையும்போது, மககள் என்பதைவிட மக்கள் எளிதாகவும் இயல்பாகவும் இருந்திருக்கலாம்; மாக்கள் என்று நீண்டது ஒரு வகை ஈடுசெய் நீட்டமாக இருக்கலாம். அந்தக் -கள், அஃறிணை இயற்பெயர்களிலும் விகுதியாக நுழையத் தொடங்கிய ஒரு கட்டத்தைத் தொல்காப்பியம் சொல்கிறது போலும்.
அப்புறம் உயர்திணையில் உயர்வின்மேல் உயர்வின் அடையாளமாய்க் -கள் பரிணமித்ததை மு.வ. தம் ‘கள் பெற்ற பெருவாழ்வு’ என்னும் கட்டுரையில் விவரித்திருப்பார். மன்னன் - உயர்திணை ஆண்பால் ஒருமை (இலக்கணம்) மன்னர் - உயர்வின் அடையாளமாக ஒருமையைப்  பன்மையாக்கல் (வழக்கு) மன்னர்கள் - உயர்வில் பன்மை (வழக்கு) மன்னரவர்கள் - மிகுஉயர்வு (வழக்கு) இப்பெயர்கள் வினைமுற்றிலும் இயைபு (concord) கொண்டன: மன்னர் வந்தார் மன்னரவர்கள் வந்தார்கள்.
ஆங்கிலம் கடனாட்சிகளைத் தன்வயப்படுத்தியதெனில், தமிழ் தெளிவும் உயர்வும் கருதித் தனக்குள்ளேயே மாறுதல்களைச் செய்து கொண்டது. அஃறிணை இயற்பெயர்கள் பன்மை விகுதி கொள்ளாத நிலை தொல்பழஞ் செருமானியத்தை ஒத்தது. இது பழைமையான மொழிகளின் இயல்புபோலும். விளக்க மொழியியல் , வரலாற்றைக் கருதுவதில்லை. அவ்வகையில்தான் பன்மையில் சுழியமாற்றுருபைக் (zero allomorph) கொள்கிறது ஆங்கிலம்.

————

*  தஞ்சை, மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி(தன்னாட்சி)த் தமிழாய்வுத் துறை(செம்மொழித் தமிழாய்வு நிறுவன
நல்கையுடன்) ' தொல்காப்பியரின் உருபனியற் கோட்பாடு' என்னும் பொருளில் நிகழ்த்திய தேசியக் கருத்தரங்கில்    06.12.2017 அன்று படிக்கப்பட்டது. இப்போது விரிசுபடுத்தப்பட்டுள்ளது.
கருத்தரங்க அமைப்பாளர்  பேரா.மா.கோவிந்தராசு அவர்களுக்கு நன்றி.

   - 

No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...