Tuesday, October 20, 2020

'உண்மைத் தன்மைை'யை உரைக்காத நச்சினார்க்கினியர்

 ‘உண்மைத் தன்மை’ யை உரைக்காத நச்சர்!


தமிழ் உயர்கல்விப் பாடத் திட்டங்களில் தொல்காப்பியம் முதலிய மரபிலக்கணங்களின் உரைகள் கைவிடப்பட்ட காலம் போய், இப்போது மூலமும் கைவிடப்பட்டுச் சாரமான கருத்துப் போதும் என்கிற நிலை வந்துவிட்டது;மரபிலக்கண உரைக் கூறுகளை எடுத்துக் காட்டுவதே ஆராய்ச்சி எனும் நிலையை எட்டிவிட்டது.  இக்கட்டுரையும் ஓர் உரைக் குறிப்பை எடுத்துக் காட்டி விளக்குவதுதான்; ஆராய்ச்சியன்று. ஆனால் ஆராய்ச்சியைத் தூண்டும் வினாக்கள் உண்டு.

மரபிலக்கண மூலம் போலவே மரபுரைகளும் செவ்வியல் இலக்கணப் பயிற்சிக்குரியவை என்பதை ஆய்வறிஞர்கள் சொல்லிவருகிறார்கள். எடுத்துக்காட்டுகளும்கூட கருத்தூன்றிப் பயிலப்படவேண்டும்

தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்குக் கிடைத்துள்ள மரபுரைகள் இரண்டேயாகும்.  அவை இளம்பூரணமும் நச்சினார்க்கினியமும்.

“இளம்பூரணருரையே…. பல ஆண்டுகள் சான்றோரிடையே போற்றப்பட்டு வந்தது.  போதகாசிரியர் பலரும் அவ்வுரையையே மாணாக்கர்க்குப் பயிற்றி வந்தனர்.  மதுரையாசிரியர் நச்சினார்க்கினியரும் தாம் தொடக்கத்தில் பயின்றதும் தம் மாணாக்கர்க்குப் பயிற்றியதும் இளம்பூரணர் வரைந்த தொல்காப்பிய எழுத்துப்படல உரையே என்பதில் ஐயமில்லை

“சில நுட்பமான இடங்கள் தவிரப் பிறாண்டெல்லாம் இளம்பூரணர் உரைத்தவற்றையே தாமும் கொண்டு உரை வரையும் நச்சினார்க்கினியர் சில இடங்களில் மாத்திரம் மிகுதியான எடுத்துக்காட்டுத் தந்துள்ளார்” என்கிறார் T.S. கங்காதரன் ( பக்.35 & 36).

ஒருவேளை எழுத்து, சொல்லதிகார உரையில் பேராசிரியரும் இளம்பூரணரையே பெரிதும் பின்பற்றியிருக்கலாம்; நச்சரும் தொடர்ந்திருக்கலாம். 

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் உரையில் அதிகாரம் நுதலியது கூறித்தொடங்கும் இளம்பூரணரை அப்படியே பின்பற்றி, எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கும் நச்சினார்க்கினியர் வேறுபடும் ஓர் இடத்தை மட்டும் துலக்கிக் காட்ட முயல்கிறது இக்கட்டுரை.

தொல்காப்பியர் எழுத்தை எட்டு வகையானும் எட்டிறந்த பல வகையானும் உணர்த்தினாரென்கிறார் இளம்பூரணர்.

நச்சினார்க்கினியர் அதே எட்டுவகையை ஏற்று விளக்கி “இனி, எட்டிறந்த பலவகைய என்பார் கூறுமாறு…” எனப் பிறவற்றைப் பிறிதொருசாரார் கொள்கைபோல் கூறுதல் நச்சினார்க்கினியரிடம் காணப்படும் சிறிய வேறுபாடு.

1. எழுத்து இனைய 

2. இன்ன பெயரின

3. இன்ன முறையின

4. இன்ன அளவின

5. இன்ன பிறப்பின

6. இன்ன புணர்ச்சிய 

7. இன்ன வடிவின

8. இன்ன தன்மைய

எனும் எட்டனுள் தன்மையும் வடிவும் ஆசிரியர் உணர்ந்திருப்பினும் நமக்கு உணர்த்தல் அருமையின் ஆசிரியர் உரைத்திலர் என்பதில் இருவர்க்கும் உடன்பாடே.

இனி, எட்டிறந்த பல வகை என்பதற்கு மேலும் பதினைந்தைக் கூறி இளம்பூரணர் “இன்னோரன்னவும் என இவை” என்று முடிக்கிறார்;   " இவையெல்லாம் ஆமாறு மேல் வந்த வழிக் கண்டுகொள்க" என்கிறார்; எட்டு, பதினைந்து ஆகிய எதனையும் விளக்கவில்லை.

இளம்பூரணர் கூறும் இப்பதினைந்தனுள் முதலாவதாகக் கூறும் ‘உண்மைத் தன்மை’ எனும் ஒன்று தவிரப் பிற பதினான்கையும் அதே வரிசையில் கூறி “இன்னோரன்ன பலவும் ஆம்” என்று முடிக்கிறார் நச்சர். 

இளம்பூரணர் கூறும் பதினைந்தாவன:

1. உண்மைத் தன்மை

2. குறைவு

3. கூட்டம்

4. பிரிவு

5. மயக்கம்

6. மொழியாக்கம்

7. நிலை

8. இனம்

9. ஒன்று பலவாதல்

10. திரிந்ததன் திரிபு அது என்றல்

11. திரிந்ததன் திரிபு பிறிது என்றல்

12. திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதும் என்றல்

13. நிலையிற்று என்றல்

14. நிலையாது என்றல்

15. நிலையிற்று நிலையாது என்றல்

(இன்னோரன்னவுமாம்)

ஒருவேளை நச்சர் உரைப்படிகளில் ஏடு எழுதியோர் ‘உண்மைத் தன்மை’ என்பதைத் தவற விட்டுவிட்டனர் என்று கருதலாமெனின் அதற்கு வாய்ப்பில்லை.  ஏனெனில், அனைத்திற்கும் எடுத்துக்காட்டுத் தந்து விளக்கும் நச்சர் உண்மைத் தன்மை பற்றி ஏதும் கூறவில்லை. எனவே, நச்சர் உண்மைத் தன்மையை இங்குக் கொள்ளவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

ஆனால் அவர் உண்மைத் தன்மை பற்றிப் பேசாமலுமில்லை.

தொல்காப்பிய உரைவளப் பதிப்பாசிரியர் ஆ. சிவலிங்கனார் ‘நூன்மரபு’க்குப் பின்னிணைப்பாகத் தந்த ‘உரைச்சொற்றொடர் விளக்கம்’ எனும் பகுதியில்

உண்மைத்தன்மை: எழுத்துக்களின் குறுமை, நெடுமை, வன்மை, மென்மை, இடைமைகளும், பிறப்புத்தன்மைகளும் 'மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்' என்றாற்போன்ற இயக்கத் தன்மைகளும் பிறவுமாம்" என்று விளக்கம் தந்துள்ளார்(ப.149)

இவ்விளக்கத்திற்கான சான்றெதுவும் தராவிடினும் நச்சினார்க்கினியர் கருத்தையும் வாங்கி எழுதியுள்ளார் என்பது வெளிப்படை.

 'மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்' (தொல். எழுத்து. 46) எனும் நூற்பாவுரையில் நச்சினார்க்கினியர் “ஒருவன் தனிமெய்களை நாவால் கருத்துப் பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கமும், கையால் காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தொடு பொருந்தி நடக்கும்” என நூற்பாக் கருத்தைத் தருகிறார்.  நச்சினார்க்கினியர் ஒலியுருவிலும் மெய்கள் அகரத்தொடு பொருந்தி நிற்கும் என்று உரைப்பது நோக்கத்தக்கதாகும்.  

மேலும் இதனை விளக்கும் போது, 

" மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு போலப் பதினொருயிர்க் கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறாறாயினார். அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு என்று உணர்த்துதல் அரிதாகலானும் என்றுணர்க.  இறைவன் இயங்குதிணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது.  இதனால் உண்மைத்தன்மையும் சிறிது கூறினாராயிற்று "என்கிறார் நச்சினார்க்கினியர்.   

இங்கும் 'உண்மைத்தன்மை' சிறிது கூறப்பட்டதாகத்தான் சொல்கிறாரர். அப்படியானால் முழு உண்மைத்தன்மை எது?

“உண்டென் கிளவி உண்மை செப்பின்” (தொல்.430) எனும் நூற்பாவின் பதவுரையில் உண்மை என்பதற்கு “ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற தன்மையாகிய பண்பு…” என நச்சர் பொருள்தருதலும் ஈண்டு இயைத்து நோக்கற்குரியது.

உண்மை எனும் சொல்லமைப்பைச் சற்றே காணுதல் தகும்.  இச்சொல்லை உள் + மை என மேலும் பகுக்க இயலும்.  இஃதொரு பண்புப் பெயர்.  அஃதாவது உள்ளார்ந்த தன்மை என்பதைக் குறிக்கும்.  தன்மை என்பது ஒவ்வொன்றின் தனித்த பண்பையும் (இச்சொல்லும் தன் + மை என நிற்றல் காண்க) உண்மை என்பது தன்மையினும் உள்ளார்ந்த அதி நுண்பண்பையும் குறிப்பதாக இங்குக் கொண்டு நச்சினார்க்கினியர் விளக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

 ——— ———————— ———————— ———————— ————

' எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து ...'  என்னும் பிறப்பியல்  நூற்பாவை விளக்கும் வே.வேங்கடராஜுலு ரெட்டியார்,  ' அந்தணர் மறைத்து ' என்பதற்கு " துரீயம் வாசம் மனுஷ்யா வதந்தி " என்னும் வேத வாக்கியத்தைக் காட்டி, 'அகத்தெழுவளியிசை ...எழுந்து புறத்திசைக்கும் மெய்தெரிவளியிசை ' என்பவற்றை

 விளக்க,  " நாம் பேசுஞ்  சப்தத்தின்  உருவம் நான்காவதாகும் என்பது அறியப்படும் . அதற்கு முன் மூன்று உருவம் உண்டு. இந்நான்கும்  பரா,  பஶ்யந்தீ , மத்யமா , வைகரீ என்னும் பெயரன. நாம் பேசுஞ் சப்தம் (எழுந்து புறத்திசைப்பது) வைகரீ எனப்படும் " என்கிறார் ( ப.86.)

 இக்கருத்தை இளம்பூரணர் முன்பே  , " புறத்திசைப்பதன் முன்னர் அகத்திசைக்கும் வளியிசையை அம் மறைக்கண் ஓர் எழுத்திற்கு மூன்று நிலையுளதாகக் கூறுமஃது ஆமாறு அறிந்து கொள்க " எனத் தமக்கேயுரிய முறையில் செறிவாகக் கூறியுள்ளார்.



ச.பாலசுந்தரம் ," தமிழ் மறையினை நவிலும், அந்தணர் தாம் யோகநிலையில் அமர்ந்து ... மூலாதாரத்தினின்று எழும் நாதத்தை உதானனென்னும் காற்றான் உந்தி ,

ஆறு ஆதாரங்களிலும் ஏற்றி அவ்வவ் இடங்களில் உள்ள ஆற்றல்களை அட்சர உருவான் அசபையாக உருவேற்றுவர் . அங்ஙனம் உருவேற்றப்பெறும் மந்திர ஒலிகள் இடத்திற்கேற்ப அளவை வேறுபடுமென்பர். அவைதாமும் அவர்தம் அகச்செவிக்கே புலனாம் என்ப. அஃது ஈண்டு வேண்டப்படாமையின் 'அஃதிவண் நுவலாது ' என்றார் "என விளக்கி , அந்தணர் மறைக்கண் " சூக்குமை முதலாக அகத்தெழும் தன்மைகளையன்றி மாத்திரையளவு பற்றிக் கூறப்படாமையின் அது பொருந்தா தென்க " என்கிறார் ( ப. 127)

இத்தகு வேறுபட்ட விளக்கங்களில் ஒரு பொதுத் தன்மை உள்ளது. அது தொல்காப்பியம் சொல்வதுதான்- அகத்தெழு வளியிசை . அகம் என்பது உள்ளார்ந்தது.அஃதாவது , உள்+மை என்னும் உண்மை. 

இது ஒரு வகையில் எழுத்தின்  உள்-மைத் தன்மையும் ஆகும் எனலாமோ?

தொல்காப்பியர் பிறப்பியல் நிறைவில் கூறுவது இதைத்தானோ? 

 ஆமெனில் , இந்த உண்மைத்தன்மை தொல்காப்பியர்க்கும் உடன்பாடெனலாமோ?

இங்கு ஒன்றைக் கருதுதல் வேண்டும்.

 அதையும் தொல்காப்பியரிடமிருந்தே தொடங்க வேண்டும். அந்தணர் மறைத்தாகிய அகத்தெழுவளியிசையை ஆய்வறிவு நேர்மையுடன் குறிப்பிடும் தொல்காப்பியர் அதனைக் கொள்ளவில்லை. ஏன்?

இங்கு இளம்பூரணர் கூறும் பொருளொன்றைப் பார்த்து வைத்துக்கொள்வோம்: "வளி என்னாது 'வளியிசை' என்றது, அவ்வாறு நெஞ்சின்கண் நிலைபெறுமளவே வளியெனப்படும் ; பின்னர் நெஞ்சினின்றும் எழுவுழியெல்லாம் வளித்தன்மை திரிந்து எழுத்தாந் தன்மையதாம் என்பது விளக்கி நின்றது " . இது தனியே நோக்குதற்குரியது.


உத்தி வகைகளை விளக்கும் பேராசிரியர் , 'பிறன் கோட் கூறல்' என்னும் உத்திக்குத்  "தன்னூலே பற்றாகப் பிற நூற்கு வருவதோர் இலக்கணம் கூறல்" எனப்பொருள் தந்து,

'அரையளபு  குறுகும் மகரம்...' , '... இசையொடு சிவணிய நரம்பின் மறைய' , 'பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருள்...' ஆகிய மூன்றையும் காட்டி, " இவை அவ்வந்நூலுட் கொள்ளுமாற்றான் அமையும் என்றவாறு ஆயின " என்று காட்டியுள்ளார் ( ப.531)

அதனொடு நிறுத்தாமல் மேலும் , "  ' அளபிற் கோடல் அந்தணர் மறைத்து ' என்பது அதற்கு இனமெனப்படும். என்னை? அவர் மதம்[கொள்கை] பற்றி இவர் கொள்வதொரு பயனின்றாகலின் " (பக். 531 - 532)என்று முடிக்கிறார்.

வழக்கம்போல் பேராசிரியரின் கருத்தை , பிறப்பியல் இறுதி நூற்பாவுரையில் வழிமொழிந்தாண்டுள்ளார் நச்சர் . 'அகத்தெழு வளியிசை - மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசை'  என்பது நச்சர் தரும் பொருள்.

தொல்காப்பியர் அகத்தெழுவளியிசை கொள்ளாமைக்குச் சமயவுணர்ச்சியும் காரணமாகலாம். 

'மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி ...' என்னும் நன்னூல் எழுத்தியல் நூற்பா (3) உரையில்  சங்கர நமச்சிவாயர் , 

" சிதலது நீர் வாய்ச் சிறுதுகளால் பெரும்புற்று அமைந்த பெற்றியதென்ன ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்து அணுவால் இம்பரிற் சமைவது யாவரும் அறிதலின் அநாதி காரணமாகிய மாயையினை ஈண்டுக் கூறாது , ஆதிகாரணமாகிய செவிப்புலன் ஆம் அணுத்திரளை எழுத்திற்கு முதற்காரணம் என்றார். இவ்வாசிரியர்க்கு [பவணந்தி முனிவர்க்கு] மாயை உடன்பாடு அன்று ; அணுத்திரள் ஒன்றுமே துணிவு எனின் பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல் என்னும் மதம்படக் கூறினார் என்று உணர்க. ஈண்டு அணு என்றது ஒலியினது நுட்பத்தை " என்கிறார்.

வைதிகச் சைவரான சங்கர நமச்சிவாயர் தமக்கு உடன்பாடன்றெனினும்  , சமண மெய்யியல் சார்ந்த பவணந்தியாரின் அணுக்கொள்கையை நேர்மையாகச் சுட்டுகிறார்; ஆதிகாரணம் என்கிற அளவில் ஏற்கிறார்.

அவ்வாறே தொல்காப்பியரும் உடன்பாடன்றாயினும் 'அந்தணர் மறைத்தாகிய அகத்தெழுவளியிசையை' நூற்பாவிலேயே காட்டுகிறார் எனக் கொள்ள வாய்ப்புண்டு. இவ்வாறாயின் தொல்காப்பியர் சமணர் என்னும் கருத்து வலியுறும். 

இவ்வளவும் 'உண்மைத்தன்மை' பற்றிய தேடலில் கிடைத்தவை. புறத்தே ஒலிவடிவாகப் புலனாகும் நிலைமையன்றி அதற்கு முன்பான அக நிலை இயல்பினைத் தன்மை எனவும் அதனினும் உள்ளார்ந்த நுண்ணிலையை  உண்மைத்தன்மை எனவும் கொள்ளலாம். 'உண்மைத் தன்மை'யைத் தொல் காப்பியர் விதந்து சுட்டவில்லை. உரையாசிரியன் மார் கூற்றைக் கொண்டே தேடல் நிகழ்த்தப் பட்டது. 

உண்மைத் தன்மை வேத வழிப் பட்டதெனில், அதனைச் சமணரான இளம்பூரண அடிகள் கூறியதற்குச் சமாதானம்  தேடியாக வேண்டும்.

வாய்மொழி வழியாக ஒலி மாறாமல் கேள்வி (சுருதி)யாக வேதங்களைப் பேணிய மரபில் அன்றாட , புறவயப்பட்ட மொழிக்கும் மந்திர உருவேறிய அகநிலை மொழிக்குமான இடை வெளி மிகுந்திருக்கும் என்பதும் அகத்தெழு மொழி புனிதச் செறிவுடன் மூடுண்ட நிலையில் பேணப்படும் என்பதும் வெளிப்படை. அதிலும் வருணப் படிநிலை கருதிய ஒரு மரபில் அதன் மூடுண்ட தன்மை உச்சத்தைத தொட்டது வரலாறு கண்ட உண்மை.

மாறாக ஏடும் எழுத்தும் கல்வியும் சமயப் பணிகளில் ஒன்றாகக் கொண்ட அவைதிக மரபில் மொழி அந்த அளவு மூடுண்டதாக இருக்க இயலாது.

ஒருவேளை அந்த 'உண்மைத் தன்மை' அவரவர் சமயஞ்சார்ந்த விளக்கம் கொண்டிருக்கலாம். சமயஞ்சாராத இலக்கண மரபொன்றைச்  சார்ந்ததாதகவும் இருக்கலாம். 

எழுத்தை எட்டு வகையானும் எட்டிறந்த பல வகையானும் உணர்த்துவதாகக் கூறும் வகைமை எந்த மரபின் வழி வந்தது ? எட்டும் பதினைந்தும் பிறவும் என்பது ஏன்? என்னும் வினாக்களுக்கும் விடை தேட வேண்டும்.

" எட்டு வகையும் எட்டிறந்த பல்வகையும் என்ன வேண்டுவாருமுளராக , இந்நூலுடையார்[நேமிநாத ஆசிரியர்] எழுவகைய என்று சொல்ல வேண்டிற்று என்னையோ எனின் , அவையெல்லாம் இவ்வேழினுள்ளே அடங்கும் ஆகலான் என்பது, அன்றியும்

'எண்பெயர் முறைபிறப் பளவியல் வடிவு

புணர்தலோ டேழும் பொருந்திய வழக்கே ' என்றார் அவிநயனார் " என்கிறார் நேமிநாத உரையாசிரியர்.  இது பூரணரும் நச்சரும் கூறும் எட்டனுள் தன்மை நீங்கலாக ஏழினைக் கூறுகிறது. 

" எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை

முதலீ றிடைநிலை போலி யென்றா

பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே "  எனத் தொகுத்துச் சுட்டும் நூற்பாவை (எழுத்தியல் 2) வடித்துத் தொடர்ந்து வகுத்துக்காட்டுவனவாக நன்னூல் நூற்பாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

'பதவியலின் ஊற்றிடம் புத்த மித்திரனாரின் வீரசோழியமும் அதன் பெருந்தேவனார் உரையும்' எனினும் , " நன்னூலுக்கு முன்பு உள்ள இலக்கண மூலநூல் எதிலும் இல்லாத  புதிய இயலமைப்பு பதவியல் " என்கிறார் க. வீரகத்தி (பக்.212 - 13)

பவணந்தியார் மரபை ஏற்றுத் தாம் புதிதாகச் செய்தவற்றையும் - பதம் முதலியவற்றை - இணைத்து உள்ளடக்க அட்டவணை போல்  ௸ நூற்பாவை யாத்துள்ளார். 

பூரணரும் நச்சரும் கொள்ளும் எழுத்துணர்த்து வகை எட்டனோடு அவிநயமும்  நன்னூலும் கூறுவன பேரளவு ஒத்துப்போகின்றன .

'எட்டும் எட்டிறந்த பல்வையும்' என்னும் எழுத்துணர்த்து வகை மரபின் தோற்றம் , தொடர்ச்சி தேடினால் 'உண்மைத்தன்மை'யின் உண்மைையை நெருங்கலாம்.


துணை நூல்கள்

1. கங்காதரன் ,T.S.(பதிப்பாசிரியர்),  தொல்காப்பியம் எழுத்ததிகாரம் -

  உரைக்கொத்து (முதற்பகுதி), சரசுவதி மகால், தஞ்சாவூர், 2007.

2. கங்காதரன், திருவையாறு சாமி, (பதிப்பாசிரியர்), , தொல்காப்பியம் எழுத்ததிகாரம் -

  உரைக்கொத்து (இரண்டாம் பாகம்), சரசுவதி மகால், தஞ்சாவூர்,2009.

3. குணவீர பண்டிதர், (பதிப்பாசிரியர் கா.ர. கோவிந்தசாமி முதலியார்), நேமிநாதம் - உரையுடன் , தி.தெ.சை. சி. நூ. கழகம், சென்னை, 1964.

4.சங்கர நமச்சிவாயர், ( பதிப்பாசிரியர் அ. தாமோதரன் ) நன்னூல் - விருத்தியுரை,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1999.

 5. சிவலிங்கனார், ஆ.,(பதிப்பாசிரியர்),  தொல்காப்பியம் - நூன்மரபு, 

 உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1980.

6.பாலசுந்தரம் ,ச., தொல்காப்பியம்- எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக்காண்டிகையுரை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்,2012.

7.பேராசிரியர் (உரை. ) ,  தொல்காப்பியம் பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல்,   உவமவியல், செய்யுளியல் , மரபியல் , தி.தெ.சை.சி. நூ. கழகம், சென்னை, 1972.

8.க. வீரகத்தி , பிற்கால இலக்கண மாற்றங்கள் (எழுத்து), குமரன் புத்தக இல்லம் , சென்னை,2011.

 



1 comment:

  1. தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்குக் கிடைத்துள்ள மரபுரைகளைப் பற்றி அறிந்தேன்.

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...