Monday, October 19, 2020

சாமி சொன்னிச்சு.

 சாமி சொன்னிச்சு.

-------------------------------------------




 "அப்பா எழுதிக்கிட்ருக்காங்க"

 [அப்பா எழுதிக் கொண்டிருக்கிறார்கள்]

 "மாமா பேசிக்கிட்ருக்காங்க"

  [மாமா பேசிக்கொண்டிருக்கிறார்கள்]

  

"அம்மா சமச்சிக்கிட்ருக்கு"

[அம்மா சமைத்துக்கொண்டிருக்கிறது]

"அக்கா படிச்சிக்கிட்ருக்கு"

[அக்கா படித்துக்கொண்டிருக்கிறது]


கணவைன் மனைவியை...

"அவ(ள்) சொல்லிக்கிட்டேயிருக்கா(ள்)"


மனைவி கணவனை...

"அவரு கேக்க மாட்டேங்குறாரு"/"அவுங்க ... ங்க" 

[...ர்/ ...ர்கள்]


நாங்கள்  இப்படித்தான் பேசிக்கொண்டிருந்தோம்.நாங்கள் என்றால்  தஞ்சை வட்டாரத்தின் பெரும்பான்மைச் 'சூத்திர'ச் சாதியினர்.

"அம்மா சொன்னாங்க" என்பது போல வழங்கும் சில விலக்குகள் உண்டு. "அப்பா தூங்குது" என்று அப்பா உட்பட எல்லாரையும் ஒன்றன் பால் விகுதியால் சுட்டுவாரும் மேற்படி சாதியாருள்  உண்டு. 


அகவையில் இளையோராயின் , "தம்பி விளையாடுறா(ன்)", "தங்கச்சி பாடுது " - என்று முறையே ஆண்பாலாகவும் ஒன்றன் பாலாகவும் சுட்டுவது வழக்கம்.


பிராமண வழக்கில் " அப்பா எழுதிண்டிருக்கார்", "மாமா பேசிண்டிருக்கார்"

"அண்ணா சாப்பிட்டுண்டிருக்கா(ன்)","அம்பி விளையாடிண்டிருக்கா(ன்)"

"அம்மா சமச்சிண்டிருக்கா(ள்)", "அக்கா படிச்சிண்டிருக்கா(ள்)" என்பன போலச் சுட்டுவார்கள்.                      


அப்பா/மாமா(தாத்தா/பெரியப்பா/சித்தப்பா முதலிய பெரியவர்களாயின்) ---- ---ஆர்கள்

[ பிராமண வழக்கில் ... ஆர்]


அம்மா( பாட்டி,அத்தை/ சின்னம்மா, பெரியம்மா/அக்கா,தங்கச்சி  முதலிய பெண் பாலாராயின்)--- --- து[பிராமண வழக்கில் ...ஆள்]


தங்கச்சி பாடுறா(ள்) - என்பது போல அகவையில் குறைந்த பெண்களைக் கூட ,  - ஆள் விகுதியால் சொல்வது, பிராமணரல்லாச் சாதியாரால், உறவு முறைக்குத் தகாதது என்று கருதப்பட்டது.  இவர்களை "என்னடி " , "ஏன்'டி'  " என '- டீ ' போடுவதும் இல்லாமலிருந்தது.


இப்போது இச்சாதியாரிடையே அகவையிற் குறைந்த பெண்களை மட்டும் - 'ஆள்' விகுதி கொண்டு சுட்டுவதும் 

' டீ ' போடுவதும் தலையெடுத்துவருகிறது.


நான் கள ஆய்வு ஏதும் செய்யவில்லை; பட்டறிவுதான். குடும்ப உறவு முறை சார்ந்தும் பிற சமூக உறவு நிலைகள் சார்ந்தும் தமிழகத்தின் வட்டார, சமூகக் கிளைமொழிகளுக்கேற்ப மேற்குறித்த வழக்குகளில் சில மாற்றங்கள் இருக்கலாம். அவற்றைத்தொகுத்துப் பதிவு செய்யலாம் .


பிராமண வழக்குதான்  பெரும்பாலும் மரபிலக்கண விதிக்கு இணக்கமாயிருக்கிறது. இவ்வழக்கில் உயர்திணையில் அஃறிணை விகுதி மயங்குவதில்லை.


அப்படியானால் , அம்மா சொன்னுச்சு, அக்கா கேட்டுச்சு முதலியனவாக உயர்திணைப் பெயர்களை அஃறிணை விகுதியால் முடிப்பது வழுவா?


இல்லை.வழுவமைதி எனலாம்.


ஏன் இந்த வழுவமைதிகள்?


 இவை குடும்ப, சமூக உறவு நிலைகளின் ஏற்றத் தாழ்வான மதிப்புகளை மட்டுமன்றி உணர்வுபூர்வமான தொடர்பின் தொலைவையும் உள்ளடக்கியிருக்கின்றன.

 ஒன்றன்பால் விகுதியால் சுட்டுவதில் ஒரு நெருக்கம் புலப்படும். மரியாதை ஒருமையில் (...ங்க /ர்கள்) தொலைவு புலப்படும்.


உயர்திணையில் ஒன்றன்பால் விகுதிப் புழக்கம் குறித்துத் தெ.பொ.மீ.அவர்கள் எழுதியுள்ளதாக நினைவு .இப்போது தேடி எடுக்க இயலவில்லை. இவ்வழக்குகள் பற்றி மொழியியலார் ஏற்கெனவே ஆராய்ந்துமிருக்கலாம். பார்க்க வேண்டும்.


இந்த வகையில்,  சமய - குறிப்பாகச் சைவ- நிறுவனங்களில் சுவையான மரபொன்று வழக்கத்தில் உள்ளது.



எடுத்துக் காட்டாக, குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்த சௌரிப் பெருமாள் அரங்கனார் அப்பதிப்பிற்கு எழுதிய உதவியுரையைப் பார்ப்போம்.


சோழவந்தான் கிண்ணி மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகளாகிய 

'ஸ்ரீமஹா ஸந்நிதாந'த்தை அடிகள் என்று குறிப்பிடும் அரங்கனார், " அடிகள் ...திருவாய் மலர்ந்தருளியது.", " அடிகள்...கையிற் கொடுத்திட்டது " என்று ஒன்றன் பாலால் வினை முற்றுவிக்கிறார்.




சாமி சொன்னிச்சு, சாமி குடுத்துச்சு - என்றெல்லாம் சைவ மடாதிபதிகளைச் சுட்டுவதை நானே கேட்டிருக்கிறேன்.


'- கள்' அஃறிணைப் பலவின்பால் விகுதிதான்.

அது, உயர்வினும் உயர்வு குறித்து வழங்குகிறது.

ஒன்றன்பால் விகுதி மீயுயர்வு- 'தெய்வீக' உயர்வு குறிக்கிறது.


இவை யாவும் மொழி  தேவை கருதித் தானே தனக்குள் அமைத்துக் கொள்ளும் நெகிழ்வுகள்.


வழுவமைதி.

                                                            ------×------


RengaiahMurugan:

துறவின் இலக்கணப் படி உறவாகக் கொள்ளாமல் பொதுவாக விளிக்கும் மரபு உள்ளது. தாங்கள் குறிப்பிடும் படி ஒன்றன்பால் விகுதிமீயுயர்வுவில் தான் பேசுவார்கள். கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் வரலாற்றில் முழுவதும் அது வருது இது போகுது எனவுள்ளது.


நந்தனார் மட நிறுவனர் சகஜானந்தர் தண்ணீர் தாகமெடுக்கையில் பானையில் உள்ள தண்ணீரைப் பருகி விடுவார். அதனைக் கண்ட ஆதிக்கச் சாதியைச் சார்ந்த ஒருவர் சகஜானந்தரைத் திட்ட அச்சமயம் 'சுவாமிகள் அப்படியா செய்தது சகஜானந்தம் அப்படியா செய்தது.இனிமேல் செய்யாது'. 


இது போன்று ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் விளிக்காமல் ஒன்றன்பாலாக விளிப்பதை சுவாமிகள் வரலாற்றில் பார்க்க முடிகிறது. 


தாங்கள் குறிப்பிடும் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகள் சமாதிக்கு அடிக்கடி சென்று வருபவன் நான். புலவர் அரசன் சண்முகனார் மற்றும் இராமசாமி கவிராயர் போன்றோர் இவரிடம் இலக்கணம் பயின்றவர்கள். இவரது மடத்தில் ஏராளமான இலக்கண மற்றும் மருத்துவ சுவடிகள் கொண்ட பழைய இரும்பு பெட்டி களவாடப்பட்டு அப்பெட்டியில் ஏதோ விலையுயர்ந்த சாமான் இருக்கிறது என்று எண்ணி அந்தப் பெட்டியை திறக்காமல் பல வருடங்கள் கழித்து பெட்டியை திறந்து பார்க்க எல்லா இலக்கண மருத்துவட் சுவடிகளும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு வீணாகப் போனது.பின்பு வைகைக் கரையில் தூக்கி எறிந்து விட்டார்கள். அதிலிருந்து ஒரு சில வைத்திய சுவடிகள் கிண்ணிமங்கலத்தைச் சார்ந்த ஒருவரால் காப்பாற்றப் பட்டு வருகிறது. மதுரை நாயக்க மன்னர்கள் வம்சாவளியினர் குறித்த ஏட்டுச் சுவடியை என்னிடம் காண்பித்தார். அதை நான் படியெடுத்தேன். அச்சமயம் என்னிடம் அவர் , காவல் கோட்டம் நாவலாசிரியர் அவர்களிடம் இச்சுவடியைக் காண்பித்ததாகவும்  ஆனால் அவர் பெயரை நன்றியுரையில் குறிப்பிடவில்லை என்றும் வருத்தப்பட்டார். அவர் மிகவும் சாதாரணமான ஆள்.நம்ம ஆராய்ச்சியாளர்கள் இயல்பு தெரியாது போலும். உண்மைத் துறவிகள் ஆண் பெண்பாற் கடந்து சமமாகப் பாவிப்பதால் ஒன்றன்பால் விகுதியாக முடித்துப் பேசுவதைக் காணமுடிகிறது. 


- 20 அக்.2019 முகநூல் இடுகை. தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

1 comment:

  1. மடாதிபதிகளைப்பற்றிப் பேசும்போது நண்பர்கள் சொன்னுச்சு என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...