Friday, October 16, 2020

இறை மறையும் பிற மறையும்

 

இறை மறையும்   பிற மறையும்
--------------------------------------------------------

இறைமறை - என்னும் தமிழ்த் தொகையை ஒன்றுக்கொன்று முரணான இருவேறு பொருள்களில் விரிக்கலாம்.
1. இறையால் அருளப்பட்ட மறை அல்லது  இறையினது மறை . அதாவது இறைவனால் அருளப்பட்ட வேதம் அல்லது இறைவனது வேதம் எனலாம். இறையால், இறையினது - என வேறு வேறு வேற்றுமை உருபுகளைக் கொடுத்து விரித்தாாலும் அடிப்படைப் பொருள் ஒன்றுதான்.

( மறை - முதனிலைத் தொழிற்பெயர். மறை(ந்திருத்தல்), மறை(த்தல்) . இங்கு ஆகு பெயராக வேதம் என்னும் ஒலி/வரிவடிவப் பனுவலைக் குறிக்கும்)

2. இறையை மறுத்தல்( மறு + ஐ . மறு - வினையடி ; ஐ - தொழிற்பெயர் விகுதி. கொடை, தடை என்பன போல)

1. மறை(பகுதி) 2. மறு(பகுதி); இரண்டும் வெவ்வேறு சொற்கள்.

திரு.மணிமணிவண்ணன் அவர்கள் ,  A bible for atheists என்னும் நூல் கிண்டில் பதிப்பாகக் கிடைப்பது பற்றித் தகவல் தந்திருந்தார். சற்றே வலையில் உலவியபோது The Atheist Bible என்றொரு நூலும் தட்டுப்பட்டது.


இவ்விரு நூல் தலைப்புகளையும்  இறையிலார்க்கான மறை , இறையிலார் மறை ! (இறையிலார் =இறை இல்லை என்பார்) என்று தமிழாக்கலாம்.

பேராசிரியர் இராம.சுந்தரம் அவர்கள் வார்சா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில்,    அவரும் நண்பர்கள் சிலரும் ஒரு முறை மகிழுந்தில் பக்கத்து நாட்டுக்கு (பெயர் மறந்துவிட்டேன்) சிற்றுலா சென்றது பற்றிச் சொன்னார் (நினைவில் உள்ள படி): போலத்தில் எரிபொருள் விலை குறைவு என்பதால் , வண்டியில் நிரப்பியது போக மேலும் சில கலன்களில் இருப்பு வைத்துக் கொண்டனர்.  போலந்து எல்லையில் அந்நாட்டுப் படையினரின் சோதனையகத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. இவர்கள் எதையும் மறைக்கவில்லை. படை வீரர் மேல் அலுவலரிடம் அழைத்துச் சென்றார். பேராசிரியரின் பெயரைக் கேட்டதும் மேல் அலுவலர் முகத்தில் படைக் கடுமை குன்றியது. மேசை இழுப்பறையைத் திறந்து ஒரு நூலை எடுத்தார். அது போக்டன் கெபார்ஸ்கி  (Bohdan Gębarski) செய்த திருக்குறளின்போலந்து மொழிபெயர்ப்பு ;  பேரா.இராமசுந்தரம் அவர்கள் சற்றேசெவ்விதாக்கம் செய்தது; வந்த சில வாரங்களில் எல்லையை எட்டி விட்டது. போலந்து மக்களின் படிப்பார்வம் அப்படி! அதன் மேலட்டையிலிருந்த பேராசிரியரின் பெயரைச் சுட்டி "நீங்களா?" என்றார் அலுவலர்  "ஆமாம்" என்றார் பேராசிரியர். " மிக்க மகிழ்ச்சி .நன்றி" என்று முகம் மலரக் கை கொடுத்து அனுப்பி வைத்தார். அந்த மொழிபெயர்ப்புக்கு Bible of South India என்பது தலைப்பு என்றார் பேராசிரியர்.



திருக்குறள் தமிழ் மறை/தமிழ் வேதம்எனவும்  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் திராவிட வேதம் எனவும் வழங்குவது தெரிந்ததுதான்.

திருக்குறளை வேதம் என்றோ Bible என்றோ சொல்வதில் பெரிய கருத்து மாறுபாடு,  ஏன் கருத்து வேறுபாடு கூட இருக்க இயலாது. விவிலியம் கிறித்தவ மறைநூலைக் குறிப்பதால், நாலாயிரத்தை Bible of Vaishnavites என்று சுட்டுவதை வைணவர் மறுக்கலாம். போகட்டும்.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் கிரிக்கெட் பார்வை நூலான  Wisden Cricketers' Almanack   என்பது  பேச்சு வழக்கில் The Bible of Cricket எனப்படுகிறதாம். The Cricket Pocket Bible என்னும் நூலும் கண்ணில்பட்டது.




இறையின்மைக் கொள்கை விளக்க நூலை Bible/வேதம் / மறை எனலாமா என்றால், எனலாம்.ஆங்கிலத்தில் இயல்பாக ஏற்கப்படுகிறது.Bible என்னும் சொல்லின் வேரைத் தேடினால் அது நூல் என்கிற பொதுப் பொருள் குறித்ததாகவே தென்படுகிறது.

வேதம் என்னும் சொல் அறிவு/கல்வி முதலியன குறித்த - வித் என்பதன் அடியாகப் பிறந்தது என்கின்றனர் ( வித்யை, வித்வான் முதலியன காண்க). இதுவும் பொதுப்பொருள்தான்; வேரில் எந்தப் புனிதப் பூச்சும் இல்லை.

எழுதாக் கிளவியாகிய நான்மறை அறிவு எனவும் எழுதிய கிளவியாகிய விவிலியம்(Bible) நூல் எனவும் குறிக்கப்பட்டிருப்பது பொருத்தமாகத் தோன்றுகிறது.

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய              ...                     ...          (நூன்மரபு 33)

என்னும் நூற்பாவில்மறை என்பதை நூல்/இலக்கணம் என்னும் பொருளில் தொல்காப்பியர் கையாண்டுள்ளார்.இது விதிவிலக்கான ஆட்சி.


" குரல் முதலிய ஏழிசையொடு பெருந்திய நரம்பினையுடைய யாழினது இசைநூற்கண்ணும்..." என்று தம் வழக்கத்திற்கு மாறாகப் பொருளை விரித்து விளக்கியுள்ளார் இளம்பூரணர்.இதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது.


நச்சினார்க்கினியர் 'இசையொடு சிவணிய' என்பது செய்யுளைக் குறித்தது என , அதனைத் தனித் தொடராகக் கொள்கிறார்; 'நரம்பின் மறைய' என்பதற்கு "யாழ்நூலிடத்தன" எனப்பொருள் கூறி," நரம்பு என்றது ஆகுபெயராய் யாழினை உணர்த்திற்று. மறை என்றது நூலை " என விளக்குகிறார். இது இவர் வழி.

பேராசிரியர்,  மரபியல் உரையில் வேறு சிலவற்றோடு இதனையும் 'பிறன்கோட் கூறல்' என்பதற்குரியதாகக் காட்டி,  " இவை அவ்வந் நூலுட் கொள்ளுமாற்றான் அமையும் என்றவாறாயின " என்கிறார்.

தொல்காப்பியர் கால இசையியல் எழுத்துப் பனுவலாக அன்றி வழிவழியாக இசைத்தும் கேட்டும் பயின்று பேணப்பட்டதாற் போலும்  'நரம்பின் மறை' என்றார் .  செவிவழி (சுருதி = கேள்வி),  வேதம் பேணப்பட்டது கொண்டு , செவிவழி பயின்ற இசையியலை மறை எனத் தமிழாக்கியிருக்கலாம். இசையைச் செவிவழி பயில்தல் அதன் இயல்புக்கு இயைந்ததுமாகும்.

" இசையொடு சிவணிய யாழின் நூலும் "  என்னும் 'பெருங்கதை' அடி   (உஞ்ஞை 32/5)தொல்காப்பியச் செல்வாக்கின் விளைவு என்பது வெளிப்படை. ஆசிரியர் கொங்குவேளிர்  நரம்பு எனத் தொல்காப்பியர் சுட்டியதை' யாழ் 'என்றும், மறை என்பதை 'நூல்' என்றும்  வெளிப்படையாக விரித்துச் சொல்லிவிடுகிறார்.

இப்போது நமக்குக் கிடைப்பவை சுவாமி விபுலானந்தரின் 'யாழ் நூலு'ம் கருணாமிர்த சாகரம்' என்னும் இசைத்தமிழ்ப் பெருநூலை இயற்றிய மு. ஆபிரகாம் பண்டிதரின் மூன்றாவது மைந்தர் திரு.ஆ.அ.வரகுண பாண்டியன் அவர்களின்,            ' பாணர் கைவழி எனப்படும் யாழ் நூலு'ம்தாம் (1950).






 மறை - மறைக்கும் (hiding ), பிறர் அறியாத பொருள் , இரகசியம்( secret) ;மறைக்கும் - மறைத்துச் சொல்லும் ( which will be hidden, concealed) , மறைத்தல் - மறைத்தல்(hiding), மறைத்தனர் - மறைத்தனராய் ( having hidden, they) , மறைந்த - பிறர் அறியாத களவு (which was hidden ) , மறைந்தவை- பிறர் அறியாதவை - களவு ( hidden they [neut.] - secret love) , மறைந்து - மறைந்திருந்து ( having hidden - oneself), மறைப்பின் - மறைத்தால் ( if hidden) , மறைப்பு - மறைத்தல் (hiding ), மறைய - நூலிடத்தன ( of the treatise - they[neut.]) - என்கிற பொருள்களில்தான், மறை என்னும் சொல் தொல்காப்பியத்தில்  மிகுதியாக வழங்குகிறது ( மொத்தம் 18 இடங்கள்).

மறைத்து - வேதத்தில் உள்ளது ( of the Vedas - it), மறையோர் - வேதம் அறிவோர் - அந்தணர் ( they of the Vedas-Brahmins) - என வேதம் என்னும் பொருளில் மொத்தம் 2 இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.

அடையடுத்து (எதிர்- மறை)வரும் போது மட்டும் எதிர்மறை (negation) என்னும் பொருள் குறிக்கிறது.

பாட்டும் தொகையுமாகிய சான்றோர் செய்யுட்களுள் பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு,புறநானூறு ஆகியவற்றில்தான்  இருக்கு முதலிய நால் வேதங்களையோ உபநிடதங்களையோ  குறிக்க மறை என்னும் சொல் பரவலாக ஆளப்பட்டுள்ளது.

மந்திரம் என்பதைக் குறித்தும் இச் சொல் வழங்கியிருக்கிறது. மந்திரம் முற்றிலும் வேதத்தோடு மட்டுமே தொடர்புடையது என்று சொல்லமுடியாது.

பதிற்றுப்பத்தில் மறை என்னும் சொல் நால்வேதம் சார்ந்த பொருள்களில் ஆளப்படவில்லை; கேள்வி என்னும் சொல்லே வேதம் எனும் பொருளில் இடம்பெற்றுள்ளது.

காப்பு/கவசம் என்னும் பொருளில் 'மெய்ம்மறை' என்பது பதிற்றுப்பத்தில் மட்டும் உள்ளது.

இது தவிர மறைத்தல், சூழ்ச்சி, களவுக் கூட்டம், மறைவுறுப்பு, மறு, வஞ்சனை ஆகிய பொருள் குறித்தே மறை என்னும் சொல் பாட்டுந் தொகையுமாகிய நூல்களில் பரவலாக ஆளப்பட்டுள்ளது.

இனிக், 'கேள்வி'க்கு வருவோம். பதிற்றுப் பத்து, பத்துப்பாட்டு, புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகியவற்றில் கேள்வி என்னும் சொல் வேதம், ஆகமம், மந்திரம் ஆகியவற்றைக் குறிப்பதோடு  கேள்வியறிவு, இசை, யாழ், செவி, கேட்டல் ஆகியவற்றையும் குறிக்கிறது.

இவற்றை  யாரும் முன்பே பார்த்து  விதந்து சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

கேள்வி என்னும் சொல் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய நூல்களில் இல்லை; தொல்காப்பியத்திலும் இல்லை.

1.வேய்வை போகிய விரலுளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல் (பொருநராற்றுப்படை, 17 - 18)

2.                                                     நரம்பின்
பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்வி (சிறுபாணாற்றுப்படை , 227 - 228)

3.                            புரியடங்கு நரம்பின்
தொடையமை கேள்வி இடவயின் தழீஇ ( பெரும்பாணாற்றுப்படை , 15 - 16)

1 & 2 ஆகிய தொடர்களில்  'நரம்பின் கேள்வி' என இயைக்கலாம்.  நச்சினார்க்கினியர் இரண்டிடத்திலும் "நரம்பினையுடைய... இசை" (கேள்வி=இசை) என்று பொருள் தருகிறார். "கேள்வி-இசைக்கு ஆகுபெயர் " என்கிறார் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.

3ஆம் தொடரின் கேள்வி என்பதற்கு யாழ் என்று பொருள் தருகிறார் நச்சர்.  "கேள்வி: யாழிற்கு ஆகுபெயர் என்க" என்கிறார் பெருமழைப் புலவர்.

ஒருவேளை,  நரம்பின் கேள்வி என்பது 'நரம்பின் மறை' என்னும் தொல்காப்பியத் தொடருக்குத் திறவுகோலாகலாம்.

மேன்மேலும் பார்க்க எவ்வளவோ இருக்கின்றன.

கொசுறு:
Bible என்பதன் பிறப்பை அறிய, இணையத்திலுள்ள சொற்பிறப்பியல் அகராதிகள் சிலவற்றைப் புரட்டினேன். அதில் ஒன்றில் (etymonline) தற்செயலாக  இடம்பெற்றிருந்த விளம்பரம் 'முகமறை'யை நினைவூட்டியது.¶


பேராசிரியர் வ.ஜெயதேவன்( Varadarajan Jayadevan ) அவர்கள் face mask என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் பற்றித் தம் முகநூல் பக்கத்தில் அலசியிருக்கிறார்.

அவர் முகமூடி, முகத்திரை, முகக் கவசம், முகவணி, முகமி ஆகிய சொற்களைப் பரிசீலனைக்கு முன்வைத்திருந்தார்.

பலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

முகக்காப்பு, முகமறைப்பு, முக வட்டு, முகவுறை, முகழி, மூக்கு மூடி, சுவாசக் கவசம், சுவாசக் காப்பு, எச்சில் சளிக் கவசம், எச்சில் சளித் தொற்றுக் காப்பான் ஆகிய சொற்களும் வந்துள்ளன.

பேரா. ரேணுகாதேவி (Renuga Devi) அவர்கள் முகமறைப்பு என்பதைப் பரிந்துரைத்திருந்தார்கள்.

எனக்குப் பதிற்றுப்பத்தின் மெய்ம்மறை நினைவுக்கு வந்தது. சான்றோர் மெய்ம் மறை ( 14 :12   , 58 : 11), மழவர் மெய்ம்மறை (21:24  ,  55:08), வில்லோர் மெய்ம்மறை ( 59:09  , 65 : 05) என ஆறு இடங்களில் மெய்ம்மறை வந்துள்ளது.

இப் பாட்டுகளில்  சேர வேந்தன் மெய்ம்மறை போல் பாதுகாப்பவன் என்னும் கருத்தில் மெய்ம்மறை உருவகமாகச் சேர வேந்தனையே சுட்டுகிறது.

" ஈண்டுச் சான்றோர் என்பது போரில் அமைதியுடைய வீரரை. மெய்ம்மறை - மெய்புகு கருவி ; மெய்ம்மறை என்றது அச் சான்றோர்க்கு மெய்புகு கருவி போலப் போரிற் புக்கால் வலியாய் முன்னிற்றலின் " எனச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது பதிற்றுப்பத்தின் (14) பழையவுரை (புக்கால் = புகுந்தால்; வலி = வலிமை)

மறை என்பது வினைப் பகுதி (முதல் நிலை). இதுவே மறைத்தல் என்னும் பொருள் குறிக்குமாயின் முதனிலைத் தொழிற்பெயர் . அந்தத் தொழிற்பெயர் கருவியைக் குறித்தால் - அதாவது, கருவிக்குப் பெயர் ஆக வந்தால் - ஆகுபெயர் . மறை என்பது இங்குத் தொழிலாகுபெயர் .

இதனைப் பின்பற்றி முகத்தில் அணியும் மறையை  முகமறை    எனலாம் (முகம் + மறை = முகமறை என்றாகும்).

மெய்ம்மறை  மெய்யைக் காக்கிறது. முகமறையின் நோக்கம் முகத்தைக் காப்பதா? என்று வினவலாம் . முகமறை முகம் முழுதும் மறைக்கவில்லையே என்கிற தடையை எழுப்பலாம்.

மரபிலிருந்து இணக்கமான தொடரை எடுத்துப் பயன்படுத்தினால் அது மொழியில் இயல்பாக இயைந்து செல்லும். சற்றே மொழிப்பெருமிதமும் கொள்ளலாம். நூற்றுக்கு நூறு  குறிக்கும் பொருளனைத்தையும் உள்ளடக்க வேண்டுமெனில் அது நெடுந்தொடராகிவிடும் ; கையாள இயலாது. உண்மையில் நெடுந்தொடரைத் தவிர்ப்பதே கலைச்சொல்லாக்கத்தின் முதன்மை நோக்கம்.


துணை:

1)முனைவர் ப.பாண்டியராஜா அவர்களின் ' தமிழ் இலக்கியத் தொடரடைவு ' தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கு அள்ளக் குறையாத சுரங்கம் . அவருக்கு  நன்றி சொல்லித் தீராது. பார்க்க :  http://tamilconcordance.in
2) முனைவர் க. பாலசுப்பிரமணியன், தொல்காப்பியச் சொற்பொருளடைவு , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2016.
3.) சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் தொகுதி 2 & 5, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
                                                              

1 comment:

  1. தொல்காப்பியத்தில் மறை என்ற சொல்லுக்கான வகைவகையான பயன்பாடுகள்.. வியப்பைத் தந்தன.

    ReplyDelete

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...