Thursday, October 15, 2020

இயங்களும் இயல்களும் - வந்த வழி அப்படி!

 

இயங்களும் இயல்களும்
- வந்த வழி அப்படி !

நடப்பியல், இயற்பண்பியல், குறியீட்டியல், படிமவியல்,மீநடப்பியல், அமைப்பியல், பின் அமைப்பியல் முதலியன முறையே Realism , Naturalism , Symbolism,Imagism ,Surrealism, Structuralism, Post Structuralism முதலியவற்றின் தமிழாக்கங்களாகத் தமிழ் உயர்கல்வியுலகில் உலவுகின்றன.


                                                     ( படத்திற்கு நன்றி : pinterest.com)


- ism கள் தமிழில்  - இயல்களாகியிருக்கின்றன.

தொல்காப்பியம், வீரசோழியம், நச்சினார்க்கினியம் முதலியவற்றின்             - இயங்களையும் இளம்பூரணம், சேனாவரையம், கல்லாடம் முதலியவற்றின் - அம் களையும் -அம் விகுதிகளாகவே கொள்ளலாம். சைவம், வைணவம், பெளத்தம் , சமணம் முதலியவற்றிலும் -அம் விகுதிகள் உள்ளன (அம் விகுதியின் சொற்பிறப்பியல் தனி ஆராய்ச்சிக்குரியது)

பிறப்பியல், புணரியல், வேற்றுமையியல், பெயரியல் , அகத்திணையியல் , புறத்திணையியல் என்று தொல்காப்பிய அதிகார உட்பிரிவுகளும் பரிமேலழகர் நோக்கில் இல்லறவியல், துறவறவியல், ஊழியல் , அரசியல், அங்கவியல் முதலியனவாகத் திருக்குறள் உட்பிரிவு களும் அமைத்துக் காட்டப்பட்டுள்ளன. இங்கு இயல் என்பது இயல்புகளின் தொகுதி என்னும் பொருள் குறித்து நிற்கிறது.

பெரிதும் மேலைச் செல்வாக்காக ஆங்கில வழி வந்த - ism கள் கலை, இலக்கிய வரலாற்றில் - பெரும்பாலும் இயக்கங்களாக இயங்கிய - சிந்தனைப் போக்கு, கொள்கை, கோட்பாடு, நடைமுறைகள் முதலியவற்றைக் குறித்தன.

தமிழில் எதார்த்த வாதம், இயற்பண்பு வாதம் முதலியனவாக - வாதம் என்னும் சொல்லைப் பின்னாகக் கொண்ட தமிழாக்கங்கள் பேரளவு பொருத்தமானவை.
தனித்தமிழியக்கச் செல்வாக்கால் நடப்பியல், இயற்பண்பியல் எனத் தமிழக வழக்குச் செல்வாக்குப் பெற்றது.

ஆனால்  மொழியியல், இயற்பியல், உளவியல், மானுடவியல் முதலியவற்றுக்கே - இயல் பொருத்தமானது; - ics/- logy என்னும் பின்னொட்டுக்கு இணையானது. இவை அறிவுத் துறைகள் அல்லது அறிவியல் துறைகள் .

எனவே, -ism இயம்  எனத் தமிழாக்கப்பட்டிருக்கலாம். நடப்பியம், இயற்பண்பியம், குறியீட்டியம் முதலியனவாகத் தமிழாக்கியிருக்க வேண்டும்.

ஆனால், ஏன் இந்தத் தடுமாற்றம்?

அவை வந்த வழி அப்படி.

அவை இங்கு இயக்கங்களாக உருவாகவுமில்லை; இயக்கங்களாகப் பரவவுமில்லை. பண்டைய அணி இயல்போல் கலை இலக்கிய உத்திகளை ஒத்தனவாகப் பார்க்கப்பட்டன; போலச் செய்யப்பட்டன.

காந்தியம், மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் போன்றவை இங்கு இயக்கங்களாக இருந்தமையால் அவற்றில் - இயம் என்னும் ஒட்டு இயல்பாக அமைந்து விட்டது.


'பின்நவீனத்துவம்' - என்பதில் இயல் இல்லை - துவம் இருக்கிறது. |

முதலில் நவீனவியத்திலிருந்து தொடங்கலாம் (இவற்றின் கருத்துப் போக்குப் பற்றி விவரிக்கப் போவதில்லை. காரணம்,  எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது)

Modern              நவீன /ம்     
Modernization  நவீனமயமாக்கம்
Modernity           நவீனத்தன்மை(நவீனத்துவம்)*
Modernism         நவீனவியம்     - என்று தமிழாக்கலாம்.

-ism - கருத்துநிலை , இயக்கப் போக்கு
-ity   - அமைவு , நிகழ்போக்கு

இனிப், பின் - என்னும் முன்னொட்டுக்கு வருவோம்.

பின் நவீனத்துவம், பின்னை நவீனத்துவம், பிந்தைய நவீனத்துவம், உத்தர நவீனத்துவம் என்றெல்லாம்  பின் நவீனவியம் தமிழில் குறிப்பிடப்பட்டது. நிலைத்தது பின் நவீனத்துவம்தான் என்று படுகிறது.

பின் நவீனவியம் என்பது நவீனவியத்திற்குப் பிந்தைய அதிலிருந்து (அவற்றிலிருந்து?) வேறு /மாறுபட்டு எழுந்த இயக்கப் போக்குகளைக் குறிப்பது (Premodernism என்கிற வழக்கும் உண்டு. அது நவீனவியத்திற்கு வேறான முந்தைய போக்கைக் குறிப்பது)

நவீனவியத்திற்குப் பிந்தைய இயம்/இயங்கள் என்று சொல்வது பேரளவு பொருந்தும். ஆனால் வழங்க வாய்ப்பாக இல்லை.

என்ன செய்வது?

தமிழின் மரபிலக்கணம் கை கொடுக்கிறது.
பின் நவீனவியம் - 'பின் முன்னாகத்  தொக்கது' என்று இலக்கணக் குறிப்புக் கொடுத்தால் போதும்.

பின் நவீனவியம் முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பின் - பின் நவீனவியம் ,உறழ்விகந்த நவீனவியம்( post- postmodernism, metamodernism) என்றெல்லாம் பேச்சுகள் எழுந்துவிட்டன.
-----------------------------
*   Post modernism என்பதைப்  பின் நவீனத்துவம் என வழங்குவதன் பொருந்தாமை பற்றிப் பேராசிரியர் கா.சிவத்தம்பியவர்கள் முன்பே விளக்கியுள்ளார்.

- 22 & 24 சூலை 2018 முகநூல் இடுகைகள்  இங்கு ஒன்றாக்கப்பட்டுள்ளன

2 comments:

  1. இவற்றில் விடுபட்ட modernly மற்றும் modernness இரண்டும்கூட Modernity நவீனத்தன்மை(நவீனத்துவம்) என்ற வரையறைக்குள் சேரும் என நினைக்கிறேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தங்கள் கருத்துகளால் கட்டுரை செம்மை பெறுகிறது. மகிழ்ச்சி.

      Delete

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...