Sunday, October 18, 2020

அட , தமிழில் இவற்றின் தடம் !

 அட, தமிழில் இவற்றின் தடம் !

சால்பியம் (classicism)

—————————————

தமிழ் முதுகலை மாணவர் களுக்குப் பாடத்திட்டப்படி, இலக்கிய இயக்கங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்த வேண்டியதாயிற்று. நான் அறிமுகப்படுத்திக் கொள்ள , கிடைத்த நூல்களைப் படித்தேன். 


"When used to refer to an aesthetic attitude classicism invokes those characteristics normally associated with the art of antiquity, harmony, clarity, restraint, universality,and idealism" - என்கிற சால்பியத்துக்கான பிரித்தானியக் கலைக்களஞ்சிய வரையறையைப் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்த போது, கம்பனின் ,


புவியினுக் கணியாய் ஆன்ற

         பொருள் தந்து புலத்திற்றாகி

அவியகத்  துறைகள் தாங்கி

          ஐந்திணை நெறியளாவிச்

சவியுறத் தெளிந்து தண்ணென்

          றொழுக்கமும் தழுவிச் சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா

          வரியினை வீரர்கண்டார்

          (கம்பராமாயணம், மூன்றாவது ஆரணிய காண்டம், சூரப்பனகைப் படலம், 1., வை.மு.கோ. பதிப்பு, 1936)

- என்னும் பாட்டு நினைவில் மின்னியது. இதனைக் கவிதைக்கான பொது வரையறை தருவது என்றே பலரும் கருதியும் சொல்லியும் வந்தனர். மேற்படி, சால்பிய வரையறை கண்ட பின்புதான் நான் கம்பனின் மேதைமை கண்டுணர்ந்தேன். 

இதனை விளங்கிக் கொள்ளக் கம்பனின் தமிழ் ஊற்றம் இராமாவதாரத்தில் ஆங்காங்குப் புலப்படுவதைக் கருத வேண்டும்.தமிழை, தமிழ்த் தன்மைகளை, தமிழ்க் கலைகளை, தமிழ்நாட்டை வாய்ப்பு நேருமிடமெல்லாம் போற்றுவது ( ச. சிவகாமி, கம்பன் களஞ்சியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2009, பக். 132 - 133)வெற்றுப் புகழ்ச்சியன்று கம்பன் உற்றுணர்ந்த உண்மை


யுத்தகாண்டத்தில் வரும் ஒரு பாட்டைப் பார்ப்போம்


குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான்

தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச் சிலை வழங்கச் சாய்ந்தார் 

அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி

உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான்

[ கவிச்சக்கர வர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம், யுத்த காண்டம் ( ஐந்தாம் பாகம்)     இராவணன் களங்காண் படலம், 24(9779),    அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1970 ]*

என்பது , இராவணனின் படைவீரர்கள் செத்து மாய்தலை இராவணன் துன்பமும் சினமுமாகக் கண்டு சோரும் காட்சிகளுள் ஒன்று. இதில், 'தமிழ் நெறி வழக்கம்' என்னும் தொடர் ஊன்றி நோக்கத்தக்கது. ' தமிழ் மொழியில் மரபாகவுள்ள வழக்குகள்' எனப் பொத்தாம் பொதுவாகப் பொருள் கூறியுள்ளார் வை.மு.கோபாலகிருஷ்ணமாசார்யார் [கம்பராமாயணம் ஆறாவது யுத்தகாண்டம் (பிற்பகுதி), இராவணன் களங் காண் படலம் 25 ( 3602) மூர்த்தி பிரிண்டிங் ஒர்க்ஸ், 1948]

*௸ அண்ணாமலைப் பல்கலை.ப் பதிப்பில் இப்பகுதிக்கு உரை எழுதிய வித்துவான் செ.வேங்கடராமச் செட்டியார், ' தமிழ்க்குரிய அகப்பொருளில் வரும் நெறிமுறைகள் '

என்பார். குறிப்புரையில் , ' தமிழ்நெறி என்றது அகப்பொருள் நெறியை . தமிழ் நெறி விளக்கம் என ஓர் அகப்பொருள் நூல் உண்மையும் இங்கு நினையலாம் ' என்பார்.

ஆம். அது அகப்பொருள் நெறியே என்பதைப் , ' புவியினுக் கணியாய்...'.  முன்னறிவிக்கிறது.அது தமிழுக்கேயுரிய, வகைமை வளம் சான்ற, தனிநெறி என உணர்ந்து, " தமிழ்நெறி வழக்கம் அன்ன தனிச் சிலை " என இராமபிரானின் ஒருதனி  வில்லுக்கு உவமையாக்குகிறான் கம்பன்.

அன்பொடு புணர்ந்த ஐந்திணை நெறி , வன்பொடு புணர்ந்த விற்படைக்கு உவமையாகிறது.

வன்பொருளுக்கு நுண்பொருள் உவமை. இப்போதைக்கு இந்தக் கம்ப நயத்தை விளக்குறுத்துநர்களிடம் - வியாக்கியான கர்த்தாக்களிடம் - விட்டுவிடுவோம்.

அகப்பொருள் நெறி தமிழ்நெறி என்பதை வெறும் மரபாக , வழிவழி வந்த வாய்பாடாக அன்றி ,  அவ்விலக்கியங்களில் திளைத்து , உள்ளார்ந்த இயல்புகளை  உணர்ந்து தன் காலக் காப்பியச் செய்யுள் மரபிற்கியைய- இரட்டுற மொழியும் கவித்துவத் திறம் தோன்ற - அகப்பொருளியல்புக் கூறுகளைத் தொகுத்துப் பதிவு செய்திருக்கிறான் கம்பன்.

புவியினுக்கணி             Universality       

ஆன்ற பொருள்              Idealism         

அவி (யகத்துறை)          Restraint

தெளிந்து                          Clarity

ஒழுக்க(மு)ம் (ஒழுங்கு) Harmony

சான்றோர் (கவி)             Antiquity


என்று ஏறத்தாழப் பிரித்தானியக் கலைக்களஞ்சிய வரையறை ஒத்துப் போவதைக் கண்டு மெய்சிலிர்த்தது. 

கம்பன் முதலிற் குறிப்பது 'புவியினுக்கு அணி'யாதலையே.'பூமிக்கு அலங்காரமாய் '

என்பது வை.மு.கோ.வின் பதவுரை. இப்பாட்டில் அகப்பொருள் முதன்மைப்படுத்துவது பற்றிச் சற்று விரிவாகவே ஆசார்யார் உரைவரைந்துள்ளார். விரிப்பிற் பெருகும்.

ஒன்று மட்டும். ' புலத்திற்றாதல் - தன்னைக் கற்பேர்க்கு நுண்ணறிவை விளைப்பது' . இது பிரித்தானியக் கலைக்களஞ்சிய வரையறையில் விதந்தோதப் படாதது.

பண்டை உரையாசிரியர்கள் சங்கப் பாக்களைச் சான்றோர் செய்யுள் என்றே பரவலாகக் குறிப்பிடுவார்கள்.

கம்பன், சான்றோர் கவி எனக் குறித்தது சங்கச் சான்றோரைத்தாம் என்பது தெளிவு.

எனவே , தமிழ் மரபில் classicism என்பதைச் சால்பியம் எனல்  பொருந்தும். வழக்கின் வன்மை கருதிச் செவ்வியம் எனலும் சாலும்.

சால்பியல்/செவ்வியல் என்பதைக் classic/classical என்பதைக் குறிக்க வழங்கலாம்.



பழந்தமிழர் வாழ்வியலை விளக்கும் தம் நூலுக்குத் தமிழறிஞர் சு.வித்தியானந்தன்

'தமிழர் சால்பு'(1954) என்று பெயரிட்டது எவ்வளவு பொருத்தம்!

மேலைச் செல்வாக்குக் கம்பனிடமோ , கம்பனின் செல்வாக்கு மேலையரிடமோ இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி!

பிறகு எப்படி, இவ்வளவு துல்லியமான ஒற்றுமை?

ஒன்றின் மீது ஒன்று செல்வாக்கு/தாக்கம் செலுத்தாமலேயே உலகப்பொதுவான  உணர்திறன் சில நிலவலாம் என்பதற்கு இது வன்மையான சான்று.


 

                                                                        -x-


பனுவலின்பம் ( The Pleasure of the Text)

————————————————————————

திரு. வே.மு.பொதியவெற்பன் அவர்கள், " வாசிப்பு என்பதே உரையாடல்தான் " (இந்து தமிழ், 28.07.2018) என்றதைப் படித்தவுடன் பாரதிதாசன் நினைவுக்கு வந்தார். 

அவர் வாசிப்பை எப்படிச் சொல்கிறார் பாருங்கள் :

தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்

     சையோகம் புரிந்ததொரு வேளை     தன்னில் 

இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;

      இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள்

                                                                             உண்டேன்! 

மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்

     மகாசோதி யிற் கலந்த தெனது நெஞ்சும்

சனித்ததங்கே புத்துணர்வு! புத்த கங்கள்

      தருமுதவி பெரிது!மிகப்பெரிது கண்டீர்!(புத்தக சாலை)

சையோகம் = கலக்கை, இரு பொருள்களின் கூடல், புணர்ச்சி - எனப் பொருள்கள் தருகிறது சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (LEXICON). 

பாரதிதாசன் எப்பொருளில் கையாண்டுள்ளார்? 

" மங்கை ஒருத்தி தரும் சுகமும்-எங்கள் 

மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப் போம் " 

என்று பாடியவராயிற்றே!அவர் பாடல்களில் தோய்ந்தவர்கள் சையோகம் என்பதைப் 'புணர்ச்சி' என்னும் பொருளில்  கையாண்டிருக்க வாய்ப்பு மிகுதி என்பதை உணர்வர்.

வாசிப்பை இப்படியா சொல்வது!

அமைப்பியம், குறியியல், பின் அமைப்பியம் முதலியவற்றில் செல்வாக்குச் செலுத்திய ரோலண்ட் பார்த்-திடம் போவோம்.


பனுவலின்பம் ( பிரஞ்சில் Le plaisir du texte ; ஆங்கில மொழிபெயர்ப்பில் The Pleasure of the Text) என்பது அவரது நூல் (1973)




அவர்,பனுவலின் விளைவுகளை , இன்பம் (plaisir - pleasure) , பேரின்பம்/கலவி உச்சம் ( jouissance- bliss\orgasm) - என இரண்டாகப் பகுக்கிறார்.

பனுவலை  படிப்பாளப் பனுவல் / படிப்புறு பனுவல்(texte lisible- readerly text/ readable text)  எழுத்தாளப் பனுவல்/ எழுத்துறு பனுவல்(texte scriptible- writerly text/writable text) என்று வகைப்படுத்துகிறார்.

பனுவலின்பம் படிப்பாளப் பனுவலோடு தொடர்புடையது.

பனுவல் பேரின்பம் எழுத்தாளப் பனுவலோடு தொடர்புடையது; இலக்கிய மரபுகளைத் தகர்த்து படிக்குநரின் தன்னிலை நோக்கை முறித்து வெளியேறச் செய்வது (நன்றி : Wikipedia)

பார்த்து-க்கு முன்பே பாரதிதாசன் பனுவலின்பக் கோட்பாட்டைக் கண்டு விட்டார் என்றோ , பாரதிதாசன் பார்த்-துக்குக் கோட்பாட்டுப் பாதை போட்ட முன்னோடி என்றோ  -தாழ்வு மனப்பான்மையால் -  வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டியதில்லை.

பிரஞ்சுப் புதுவையில் வாழ்ந்த பாரதி தாசன் பனுவலின்பத்தைக் கலவியின்பமாகக் கண்டிருக்கிறார் என்பது கருத வேண்டியதாகும்.

பழகிய பாரதிதாசன் வழியாக, ரோலண்ட் பார்த்-தின் புதிய கொள்கை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்வது எளிது என்பது என் ஆசிரியப் 'பனுவல்' .

   

கொசுறு:

பாரதிதாசன் புத்தகத்தைப் பெண்ணாக உருவகித்துச் சையோகம் புரிந்தார்.

பெண்ணைப் புத்தகமாக உருவகித்து  " புத்தம் புதிய புத்தகமே ! உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் " என்று வாலி பாட்டெழுதினார். 

இவை கருத்துநிலையிலும் ஒன்றுக்கொன்று மறுதலையாவை.

                                           -x-



நகைக் கருங்கூத்து (Black Humor)

————————————————————

2018இல் வந்த 'கோல மாவு கோகிலா' என்னும் திரைப்படத்தைச் சிலர் Black Comedy வகையினதாகக் கண்டு மதிப்புரைத்திருந்தனர். அதன் தூண்டலால் இக்கட்டுரை இயன்றது.



Black Comedy/Dark Comedy/Gallows Humor-எனப்படுவது இடக்கர், அமங்கலம், அருவருப்பு முதலிய இழி சூழல் சார்ந்த நகை .

Black Humor (பிரஞ்ச்: humour noir ) என்பது மீநடப்பியக் கொள்கையாளர் ஆந்திரே பிரத்தான் (1896-1996) 1935 இல் ஆக்கிய தொடர் . இவ்வகைப் போக்குக் கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபனிஸ் (ஏறத்தாழப் பொ.கா.மு. 446 - 386) காலத்திலிருந்தே காணப்படுவதாகத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர்.


ஏறத்தாழ 1500 ஆண்டு களுக்கு முந்தைய கலித்தொகையில் (பா.65) இழி சூழல் சார்ந்த நகைக்கூத்தொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைக் குறிக்கக் கருங்கூத்து என்னும் தொடரும் இடம் பெற்றிருப்பது வியப்புக்குரியது.

நச்சினார்க்கினியர் அப்பாட்டைத் தோழி  தலைவியிடம் (காதலியிடம் ) கூறுவதாகவும் , ஆனால், இரவில் தன் காதலியைச் சந்திக்க வந்து, காதலியின் வீட்டிற்கு வெளிப்புறத்தில் நிற்கிற தலைவன் (காதலன்) பற்றித் தெரியாதது போல் அவன் காதில் விழுமாறு கூறியதாகவும் கொள்கிறார்; தோழி கூறுவதும் நிகழ்ந்ததன்று , கற்பனை என்கிறார்; இவற்றைத் தொல்காப்பிய விதிகள் கொண்டு நிறுவ முற்படுகிறார்.

 நச்சினார்க்கினியரின் இந்த நோக்கிற்குப் பாட்டில் அகச் சான்று ஏதுமில்லை. 

தலைவி கூறும் உண்மை நிகழ்ச்சி என்று கொள்ளும்படியாகப் பாடல் அமைந்துள்ளது.

நள்ளிருளில் தன் வருகையைத் தெரிவிக்கத் தலைவன் எழுப்பும் ஒலிக்குறிப்புகளை உற்றுக் கேட்கத் தலைவி நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே சென்றாள். அப்போதுதான் அந்தக் கூத்து நடந்தது. அதைத்தோழியிடம் விவரிக்கிறாள்.

வழுக்கைத் தலையும் கருங்குட்டத்தால் குறைந்த கை கால்களும் கொண்ட முடவனாகிய கிழட்டுப் பார்ப்பனன் காமச் சீண்டலையே கடமையாகக் கொண்டு தெருவில் ஒளிந்து திரிவதைப் பற்றிய எச்சரிக்கையைக் கேளாமல் நள்ளிரவில் போனதால் ஊரே சிரிக்க வாய்ப்பான அந்த நகைக்கூத்து நடந்ததென்கிறாள்  தலைவி.

"பெண்கள் வரும் நேரமல்லாத இந் நள்ளிரவில் இங்கு நிற்கும் நீ யார்?" என்று குனிந்து பார்த்தவாறு வினவி,

 " சிறு பெண்ணே, என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய்" என்று வைக்கோலைக் கண்ட மாடு போல நகராமல் நின்று, "இந்தா வெற்றிலை போடு" என்று தன் சுருக்குப் பையைத் திறந்து, " எடுத்துக் கொள்" என்று தந்தான்.

 அவள் எதுவும் பேசவில்லை. அவள் பிசாசோ என்று அஞ்சிய கிழவன், " பெண் பிசாசே, நான் ஆண் பிசாசு, என்னை வருத்தினால் உன் பலியை (உணவை) நான் பிடுங்கிக் கொள்வேன்" என்று உளறிக் கொட்டினான். அவள் மணலை அள்ளி அவன் மேல் எறிந்தாள். தனியாக நிற்கும் பெண்களிடம் காமச் சீண்டல் புரிவதையே கடமையாகக் கொண்ட அவன் அலறிக் கூச்சலிட்டவாறு ஓடினான்.

" பெரு நகை அல்கல் நிகழ்ந்தது " ( கலி. 65 : 2 ) என்று தொடங்கும் பாட்டு "முது பார்ப்பான்/ வீழ்க்கைப் பெருங்கருங்கூத்து " (கலி. 65 : 28 - 29) என்று முடிகிறது.

பெரு நகை , பெருங்கருங்கூத்து - என்னும் இரு தொடர்களையும் இயைத்துக் காண வேண்டும். (பெரு)  நகைக் கருங்கூத்து என்பது கருத்து .

நகைக் கருங்கூத்து என்பதிலிருந்துதான், Black Comedy உருவாக்கப்பட்டதென்று கருத இடமேயில்லை. என்றாலும் சிந்தனை ஒத்திருப்பது விந்தைதான்.


- கம்பன் கண்ட சால்பியம்(25 சூலை 2018),பனுவலின்பம்: பாரதிதாசனும் பார்த்-தும் (29சூலை2018),நகைக் கருங்கூத்து (செப்.8, 2018) என்னும் முகநூல் இடுகைகளின் தொகுப்பு. 'கம்பன் கண்டசால்பியம்' இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


 

1 comment:

  1. கம்பன் கண்ட சால்பியம் மூலமாக பல புதிய செய்திகளை அறிந்தேன்.

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...