Thursday, September 23, 2021

ஆய்வாசிரியர் ஏன் இல்லை?

 



இணையவழி இலக்கணக் 'கச்சேரி'. அதுவும் பிற்பகலில்.  

ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சியில்  பிற்பகல் வகுப்பு  அவர்களுக்குச் சலிப்புத்தட்டும்தான்.

எனக்கும் தனிப்பட்ட முறையில் மதியச் சொக்கம்¹ பறிபோய்விடும்.

ஆசிரியர் பற்றிப் புதிதாக  -  அல்லது புதிது போல் தென்படுகிற - எதையாவதுசொல்லித் தொடங்கலாமே! என்று உரை ஆயத்தத்தினூடாகத் துழாவிக்கொண்டிருந்தேன்.

" இலக்கணக் கொத்துடையார் , நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனாசிரியரென இன்னுமொன்று கூட்டி, இவர் தொழில் முன் மூவர் தொழிலிலினும் பார்க்க மிகக் கடியதென்றும் அவர் அறிவு முழுவதும் இவர்க்கு வேண்டியதென்றும் வற்புறுத்திச்சொல்கிறேன்." என்பார் சி.வை.தாமோதரம்பிள்ளை (கலித்தொகைப் பதிப்புரை). 

பரிசோதனாசிரியர் என்று அவர் சொன்னதை இன்று பதிப்பாசிரியர் என்கிறோம்.

தொகுத்தோர் தொகுப்பித்தோர் என்போர் தமிழிலக்கிய வரலாற்றில் புதியவரல்லர்.

தொகுத்தோர் இப்போது தொகுப்பாசிரியர் எனப்படுகின்றனர்.

ஆக, நூலாசிரியர்/கட்டுரையாசிரியர்

            உரையாசிரியர்

            போதனாசிரியர் (பயிற்றாசிரியர்)

            தொகுப்பாசிரியர்

            பதிப்பாசிரியர்  - என்றெல்லாம் வழங்குகிறோம்;

            சிறுகதையாசிரியர்

             நாவலாசியர்  - எனவும் பொதுவாகக் கதாசிரியர் எனவும்  குறிப்பிடுகிறோம் ;

              காப்பிய ஆசிரியர் என்பதுண்டு. கவிதையாசிரியர் அரிய வழக்கு. இவர்களை   நூலாசிரியர் என்பதற்குள் அடக்கிவிடலாம்.

பயிற்றாசிரியரை  மட்டுமே அடையின்றி ஆசிரியர் என்பது பெருவழக்கு.

மற்றவர்களையும் ஆசிரியர் என்கிறோமே ஏன்?

ஆனால், ஆய்வாளரை ஆய்வாசிரியர் என்பதில்லையே ஏன்?  

ஒரு மொழியில் சொற்சேர்க்கைகள் தற்செயலாக - பொருட் பொருத்தமின்றிக் கூட - அமைந்துவிடலாம். சில பிழையான சேர்க்கைகள் ஒப்புமையாக்கத்தின் விளைவாக நேர்ந்துவிடலாம் (எ.கா: எதிர்மறை  × நேர்மறை²)

'ஆய்வாசிரியர் '  இன்மைக்குச் சில காரணங்களை உய்த்துணர முயலலாம்.

தாம் பயிற்றும் பாடப்பொருளில் தேர்ந்தவர் என்பதால் போதனாசிரியர் இயல்பாகவே ஆசிரியர்.

நூலின் மீது அதனை ஆக்கியவருக்கு ஓர் அதிகாரப் பொறுப்பு  உண்டு என்கிற அடிப்படையில் நூலாசிரியரை ஆங்கிலத்தில் Author என்கிறோம்.  நூலாசிரியர் முதலியோர் நூல், உரை, போதனை, தொகுப்பு, பதிப்பு ஆகியவற்றின் மீதுள்ள அதிகாரப் பொறுப்புக்காரணமாக ஆசிரியராகின்றனர்³.

ஆனால் ஆய்வாளர் எந்தக் கட்டத்திலும் முடிந்த முடிபான நிலையை எட்டுவதில்லை; எட்ட இயலாது; கூடாது. ஆய்வாளருக்கு இலக்கு விடையை எட்டுவதன்று ,எட்டிய ஒவ்வொரு விடையின் மீதும் வினாக்களைத் தேடுவதும் தொடுப்பதும்தான்.

ஆனால், ஒரு விடையை/முடிபை எட்டாததும் ஆய்வாகாது. விடையொன்றை எட்டிய நிலையில் அதனை முறைப்பட எழுதி ஆய்வு நூலாசிரியராகலாம். இங்கும் அடை நூலுக்குத்தான்.

ஆகவே ஆய்வாசிரியர் இருக்கவே இயலாது.

-------

1. சொக்கம் - உறக்கம் , சொர்க்கம் (மதியத்தில் எனக்கு இரண்டும் ஒன்றுதான்)

2.மறை = மறுத்தல் . 

கொடை = கொடுத்தல், நிறை = நிறுத்தல் முதலியன காண்க.  

'எதிர்' என்பதன் மறுதலை (opposite) ஆகிய 'நேர்' என்பது கொண்டு , நேர்மறை (Positive) × எதிர்மறை (Negative) என்று கையாளும் வழக்கம் பெருகிவிட்டது.நேர்மறை என்பது பிழையான சொல்லாக்கம் ; வழக்கில் பரவி நிலைத்துவிட்டது ; தற்காலத் தமிழ் அகராதியிலும் இடம் பிடித்துவிட்டது. இனி, நேர்மறையை எதிர்மறையாகப் பார்த்துப் பயனில்லை.

3. ஆசிரியனின் சாவு பற்றிய ரோலண்ட் பார்த் ( Roland Barthes ) விவகாரம் இப்போதைக்கு இங்கு வேண்டாம். அது என்ன? என்று அறிய விரும்புவோர் வல்லார் வாய்க்கேட்டுணர்க.



No comments:

Post a Comment

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...