Thursday, October 15, 2020

பாரதி கவிநயமும் காரிய வாசகமும்

 

பாரதி கவிநயமும்  காரிய வாசகமும்


"ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்;

             ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;

ஓயுதல் செய்யோம், தலைசாயுதல் செய்யோம்;

             உண்மைகள் சொல்வோம், பல வண்மைகள் செய்வோம்"

பொருளும் உணர்வும் பொங்கிவரும் இப்பாட்டில் இலக்கணத் திறமும் இயல்பாக இழைந்து நிற்பதைக் காணும்போது அடடா பாரதி்க்குள் தமிழ் மொழி மரபு என்னமாய்  ஊறித் ததும்புகிறது என்றுதான் தோன்றுகிறது.

கேட்டுக் கிறுகிறுத்த கவிமணி 'பாட்டுக்கொரு புலவன்' என்று சும்மாவா சொன்னார்!

தாசனார் 'சிந்துக்குத் தந்தை' என்றதும் சும்மா இல்லை! இந்தச் சிந்துப்பாவின் அமைப்பு நுட்பம் பாருங்களேன்.

ஆயுதம் என்று தொடங்கி ஓயுதல் என்று எதுகை விழுகிறது.

ஆயுதமும் காகிதமும் செய்வோம்; ஓயுதலும் சாயுதலும் செய்யோம் என எதுகைத் தொடர்களிலும் சீர்மை அமைகிறது.

ஆயுதமும் காகிதமும் பொருட்கள். அவற்றைச்செய்யலாம்.
ஓயுதலும் சாயுதலும் தொழிற்பெயர்கள். இவற்றைச் செய்ய முடியுமா என்ன?

நச்சினார்க்கினியரிடம் போவோம்.

"வனைந்தான்' என்பது 'குடத்தை வனைதலைச் செய்தான்' என்று பொருள் தந்துழிச் 'செய்தான்'என்ற தகரம் காலம் சுட்டித் தொழிலைத் தோற்றுவித்தவாறும், 'வனை' என்னும் வினை காலம் காட்டாமல் நின்றவாறும் , வனைதல் என விரிந்துழியும் புடைபெயர்ச்சி மாத்திரம் அன்றிக் காலம் காட்டாமல் நின்றவாறும் உணர்க. காரியத்திற்கு யாண்டும் காலம் காட்டும் 'செய்'என்பதே வாசகம் என்று உணர்க" ( 'வினையே செய்வது...' , சொல்.,வேற்றுமை மயங்கியல், 29) என்கிறார் நச்சர்.
வினை,  தொழில்நிகழ்நிலையை எய்தும்போது 'செய்' என்னும் காரிய வாசகம் உள்ளார்ந்து நிற்கிறது எனலாம்.

எனவே ஓயுதலும் சாயுதலும் செய்யலாம். பாரதி ஓய மாட்டோம், சாய மாட்டோம் என எதிர்மறையில் ,பா ஓசையும் சொல்லாட்சிச் சீர்மையும் கருதிக் காரிய வாசகத்தைக் கையாண்டிருக்கிறார்.

செய்வோம், செய்யோம் என்பனவற்றுள் வ், ய் மட்டுமே வேறுபாடு ( செய்+வ்+ஓம் , செய்+ய்+ஓம்). யகரமும், வகரமும் இடையின எழுத்துகள் ; தம்முள் மிக நெருக்கமானவை; அரையுயிர்கள்; ஒருவகையில் இன எதுகைகளாகக் கொள்ளத் தக்கவை.என்ன வகை என்பதை யாப்பியல் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

பாரதி இப்படியெல்லாம் எண்ணிப் பாட்டியற்றினாரா? தெரியவில்லை.
ஓசையும் சீர்மையும் இயல்பாக - அநாயாசமாக-அமைந்து விட்டன.

" கறைமிடறு அணியலும் அணிந்தன்று" (புறம்.1) என்னும் தொடருக்கு, " நஞ்சினது கறுப்பு [சிவபெருமானின்] திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது " என உரைகாணும் பழைய உரையாசிரியர், இது " உண்ணலும் உண்ணேன்  '  (கலி.23) என்பது போல நின்றது " என்பார்.
நம் இலக்கியங்களில் காணும் இன்னொரு காரிய வாசக வடிவமாக நச்சர் இத்தகு தொடர்களைக்  காட்டியுள்ளார் (ஆர்வமுள்ளோர் அடிக்குறிப்பில் விளக்கமாகக் காணலாம்)

'போகத்தான் போவேன்' , 'பேசத்தான் பேசுவேன்' என்பன போன்ற தொடர்களில்  'தான்' என்னும் அழுத்தம் குறிக்கும்  இடைச் சொல்லோடு போவேன் , பேசுவேன் என்பன[அடம் பிடிக்கும்] கூடுதல் அழுத்தம் தருகின்றன. இவை நம் காலத்துக் காரியவாசகப் பயன்பாடு.
--------------------------------------------------------------------------------X---------------------------------------------------------------------

" பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா
தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங்கடையே " (பெயரியல் 9) என்பது தொல்காப்பிய நூற்பா.
நச்சினார்க்கினியர் 'பெயர்நிலைக் கிளவி' என்பதை ,
'பெயர்க் கிளவி' = பொருட்பெயராகிய சொல் ,
'நிலைக்கிளவி' =  அப்பொருளது நிலையிலே நிற்றலையுடைய சொல்
என்று இரண்டாகக் கொள்கிறார். இவை காலந் தோன்றாவாய் நிற்கும் என்கிறார்;
தொழில்நிலை = காலம் என்கிறார். எனவே நச்சினார்க்கினியர்,  செயல் சார்ந்து
காலங்காட்டாதவற்றை வினைப்பெயர் என்றும்
காலங்காட்டுவனவற்றைத் தொழிற்பெயர் என்றும் குறியிட்டு ஆளுகிறார்.
அவர் தரும் எடுத்துக்காட்டுகளையும் பார்ப்போம்.

காலம் தோன்றாதன
——————————————
௧.சாத்தன் , கொற்றன்    - (இடுகுறி) பொருட்  பெயர்

௨.உண்டல், தின்றல்         - (புடைபெயர்ச்சி மாத்திரம் உணர்த்தும்) வினைப்பெயர்
௩.பூசல், வேட்டை                - (புடைபெயர்ச்சி விளக்காத) வினைப்பெயர்

காலம் தோன்றி நிற்கும் தொழிற்பெயர்
——————————————————————————
௪.உண்டவன், உண்ணுமது - (தானே பெயராய்க்காலந் தோன்றி வினை முதல் மேல்
                                                                 நிற்கும்) தொழிற்பெயர்
௫.கொடுமரந் தேய்த்தார் (கலி.12:2)* - (செயப்படுபொருட்கண் காலங் காட்டி நின்ற)
                                                                                      தொழிற்பெயர்.
[* " வில்லாலே கொல்லப்பட்டவர் " - என்பது நச்சர் கூறும் உரை.]

௬.யான் சொன்னவன் , உண்பது நாழி‡ (புறம்.18)(செயப்படுபொருள்மேல்பெயராய்க் காலம் தோன்றி நிற்கும்) தொழிற் 
                                                                                                                  பெயர்
                                                                                                            
[ ‡ " உண்ணப்படும் பொருள் " - பழையவுரை]

௭.பிறவாற்றான் வரும் பெயர்

இவ்வாறு குறியிட்டு ஆளுவதற்கான நியாயத்தைத் தொல்காப்பியம் கொண்டே நிறுவ முற்படுகிறார்.

" வினையே செய்வது ... ...
ஆயெட்டு என்ப தொழில்முதல் நிலையே " ( வேற்றுமை மயங்கியல் 29) என்னும் ஆறடி நூற்பாவுரையில் , " வினையும் தொழிலும் வேறு என்பது இச் சூத்திரத்தான் உணர்தற்கு வினை என்று எடுத்துத் தொழில் முதல் நிலையே என்று முடித்தார் " என்கிறார். இது நச்சினார்க்கினிய நயம்!

வனைந்தான் = வனைதலைச் செய்தான்.
செய்தான் [ செய் -த் - ஆன் ] என்ற தகரம் [-த்-]  காலம் சுட்டித் தொழிலைத் தோற்றுவித்தது.
'வனை' - வினை ; வனைதல் - புடைபெயர்ச்சி , இவை காலங்காட்டாமல் நின்றன.
" காரியத்திற்கு யாண்டும் காலம் காட்டும் எழுத்துக்களொடு தோன்றிய 'செய்' என்பதே வாசகம் என்று உணர்க " என்கிறார். தொடர்ந்து,
" இக் காரியவாசகம் இவ்வாறு அன்றி ஒரு சொல் முழுவதும் தாமாய் நிற்பனவும் உள. அவை,
" கறைமிடறு அணியலும் அணிந்தன்று " (புறம்.1)
என்புழிக் கறைமிடற்றை அழகு பெறுதலையும் செய்தது எனவும்
" இனி, யான் உண்ணலும் உண்ணேன் ' (கலி.23: 7) என்புழி இனி யான் சோற்றை உண்ணுதலையும் செய்யேன் எனவும் , ' வாழலும் வாழேன் '(௸) என்புழி இனி யான் உயிர்வாழுதலையும் செய்யேன் எனவும் வந்தவற்றுள் ' அணிந்தன்று , உண்ணேன் , வாழேன் ' என்பன முழுதும் காரியவாசகமாகவே நின்றவாறு காண்க " என்கிறார்.

தம் கலித்தொகை உரையிலும் இதனைக் குறிப்பதோடு , 'வினையே செய்வது' என்னும் நூற்பா உரையில் விளக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

" எல்லா வினையிலும் செய் என்கிற காரியவாசகம் உள்ளது என்பது காரகக் கொள்கையின் அடிப்படைகளில் ஒன்றாகும் " என்கிறார் பேரா.கி. நாச்சிமுத்து ( தொல்காப்பியக் கட்டுரைகள் - சொல் , பேராசிரியர் கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கோவை, 2007 , ப.49). வினை எச்ச வாய்பாடுகள் பற்றி விளக்கும்போதும் இக்கொள்கையை நச்சர் பேணுகிறார். [இதில் சேனாவரையர் வேறுபடுவது பற்றி, ' சேனாவரையர்: செய்தென் எச்சமும் நைடா விதியும் ' என்னும் கட்டுரையை  என் மதிப்பூ(mathipuu.blogspot.com) என்னும் வலைப்பூப் பக்கத்தில்  காண்க]

_________


Raveenthiran Venkatachalam:

ஓயோம், ஓய்தல் செய்யோம் - வேறுபாடு என்ன?

ஓயுதல் என்பதைப் பகுக்க ஓய்+உ+தல் என்றாகிறது. இதில் உ என்ன குறித்தது? அவ்வாறொரு சாரியை இலக்கண நூற்களில் இல்லையே!

மதிவாணன்:

I.  i.ஓயோம் , ii.ஓய்தல் செய்யோம் - அடிப்படையில் பொருள் வேறுபாடில்லை; தொனிப் பொருளில் சற்றே வேறுபடும்.பின்னதில்(ii)ஓர் அழுத்தம்( ஓயவேமாட்டோம்)

விழுகிறது.

" உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்

உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.

விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்

வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம் "

என்னும் பாரதியின் வேறொரு பாட்டில் 'மாய மாட்டோம்' 'ஓய மாட்டோம்' என்னும் எதிர்மறை வடிவங்கள் ஆளப்பட்டுள்ளன. இந்தப் பாட்டின் ஓசைக்கு இவை இசைவானவை.

பாட்டின் ஓசை கருதி 'ஓய்ந்திடோம்' என்பன போன்ற வடிவங்களும் உண்டு. [ ஓய்¹ - (த்²)ந்³ - இடு⁴ - ஓம்⁵]

1. (வினைப்)பகுதி , 2.( இறந்த)கால இடைநிலை( காலம் பொருட்படுத்தத் தக்கதன்று) 3. த் , ந் ஆனது விகாரம், 4. பகுதிப்பொருள் விகுதி, 5. தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி - என்று மரபிலக்கண(த்தின் ஒரு) முறைப்படி பகுக்கலாம்.

II. திருக்குறட் பாக்களில் ,  சொல்லல் ,    சொல்லுதல் , சொலல் - என்னும் மூன்று வடிவங்களும் யாப்புக் கருதி ஆளப்பட்டுள்ளன; பொருள் ஒன்றே.

' சொல்லுதல் ' என்பதன் இடையில்(சொல்-உ-தல்) வருவது போலவே ஓயுதல் என்பதன் இடை உகரமும்.

சொல்லல் (4)

பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல

 நட்டார்கண் செய்தலின் தீது - குறள் 192

பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசு அற்ற

 சில சொல்லல் தேற்றாதவர் - குறள் 649

அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்

வகை அறியார் வல்லதூஉம் இல் - குறள் 713

உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர் சொரிந்த அற்று - குறள் 718

 சொல்லுதல் (2)

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் - குறள் 648

சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்

சொல்லிய வண்ணம் செயல் - குறள் 664

சொலல் (4)

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல் - குறள் 139

வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்

தீமை இலாத சொலல் - குறள் 291

சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை

 இகல் வெல்லல் யார்க்கும் அரிது - குறள் 647

குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல

வேண்டுப வேட்பச் சொலல் - குறள் 696

-நன்றி: tamilconcordance.in

III.  உகரச் சாரியை மரபில் உண்டு.

எல்லாவற்றையும் கடந்து கவியுரிமம் (Poetic License) என்பதொன்றுண்டு. தமிழின் இலக்கண மரபும் இவ்வுரிமத்தை நல்குகிறது.



4 comments:

  1. நம் காலத்துக் காரியவாசகப் பயன்பாடு அறிந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. காரிய வாசகம் உள்ளது என்பது காரகக் கொள்கையின் அடிப்படைகளில் ஒன்றாகும்...என்ற கருத்தானது சைவ சித்தாந்தத்தை நினைவூட்டுகிறது.

    ReplyDelete
  3. ஆம். இலக்கண மரபில் தத்துவச் சிந்தனைகள் ஊடாடுகின்றன.

    ReplyDelete

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...