Tuesday, September 22, 2020

சங்கர நமச்சிவாயரின் சனநாயக மனப்பாங்கு

 

பேராசிரியர் க.பாலசுப்பிரமணியன்    பேராசிரியர் ச.அகத்தியலிங்கனாருடன் இணைந்தெழுதிய 'தமிழ் இலக்கண மரபு' என்னும் கட்டுரையைத் தம் கட்டுரைத் தொகுப்பில் முதலாவதாக வைத்துள்ளார். அதில்,

ஹீபுரு மொழியாளரும் கிரேக்கரும் தத்தம் மொழிகளே நாகரிகம் வாய்ந்தனவாகவும் மற்றவர் மொழிகள் காட்டுமிராண்டி மொழிகள் எனவும் கருதினர். இத்தகைய மனப்போக்கு பிற மொழி பயிலும் ஆர்வத்தைத் தடை செய்துவிட்டதால்தான் மொழியியல் வளர்ச்சி தடைப்பட்டது

 ( தொல்காப்பிய இலக்கண மரபு, அரிமா நோக்கு வெளியீடு, சென்னை, 2017,பக்.17-18) என்கின்றனர்.

மாறாகத் தமிழ் இலக்கண மரபின் மொழிப் பொறையைச்  செய்யுளீட்டச் சொல் வகைகள் (இயல், திரி, திசை, வட சொற்கள்) காட்டுவதாக மகிழ்கின்றனர்(௸).





தண்டியலங்காரத்தின் பழைய உரையாசிரியர்  கௌட நெறி , வைதருப்ப நெறிகள் தமிழுக்கும் உரியன என்பதை  வலியுறுத்துவதற்காக முன்வைக்கும் காரணங்களைத் தொடர்பு கருதிக் காண்போம்.




இதன் [தண்டியலங்காரத்தின்] முதனூல் செய்த ஆசிரியர் உலகத்துச் சொல்லையெல்லாம் சமஸ்கிருதம் , பிராகிருதம் , அவப்பிரஞ்சம் என மூன்று வகைப்படுத்து , அவற்றுள் சமஸ்கிருதம் புத்தேளிர் மொழி எனவும் , அவப்பிரஞ்சம் இதர சாதிகளாகிய இழிசனர் மொழி எனவுங் கூறினார் , அதனால், பிராகிருதம் எல்லா நாட்டு மேலோர் மொழி எனப்படும் . அல்லதூஉம் பிரகிருதி என்பது இயல்பாகலான் , பிராகிருதம் இயல்பு மொழி.

அந்தப் பிராகிருதத்தைத் தற்பவம் , தற்சமம் , தேசியம் என மூன்றாக்கினார் . அவற்றுள் தற்பவம் என்பன ஆரியமொழி திரிந்து ஆவன ...   தற்சமம் என்பன ஆரியச்சொல்லும் தமிழ்ச் சொல்லும் பொதுவாய் வருவன... தேசியம் என்பன அவ்வந் நாட்டவர் ஆட்சிச் சொல்லேயாய்ப் பிற பாடை நோக்காதன... இவ்வாற்றான் தமிழ்ச் சொல்லெல்லாம் பிராகிருதம் எனப்படும் . அச்சொற்களால் இயற்றப்படும் எல்லாக் கவிக்கும் அவ்வலங்காரம் அனைத்தும் உரியவாகலின் , ஈண்டு மொழிபெயர்த்து உரைக்கப்பட்டன.

புத்தேளிர் மொழி, மேலோர் மொழி,இழிசனர் மொழி என்னும் படிநிலையின் ஏற்றத்தாழ்வு வெளிப்படையானது. 'இழி'சனர் மொழி என்னும் அவப்பிரஞ்ச மொழிகளிலிருந்துதான்  இக்கால நவீன இந்திய மொழிகள் பல உருவாகியிருக்கின்றன. மக்களாட்சி[சனநாயக]க் காலம் எனப்படும் இக்காலத்திலும் பாரதப் பண்பாட்டுக்குச்  சமற்கிருதமொன்றே மூலம் என்னும் கருத்து அதிகாரச் செல்வாக்குடன் திகழ்கிறது என்றால் அக்கால ஆதிக்கம் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

இந்தப் பின்னணியில் சங்கர நமச்சிவாயரைப் பார்க்கவேண்டும்.

சங்கர நமச்சிவாயர் விருத்தியுள் சிவஞான முனிவர் செய்த சிற்சில செருகல்கள், நீக்கல்கள், திருத்தங்களால்  சிவஞான முனிவர் விருத்தி எனத் தனியுரை போல வழங்குகிறது (விரிவுக்கு: அ.தாமோதரன், சங்கர நமச்சிவாயர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003 ¹ , பக்.52 - 62)





ஆனால், சில இடங்களில் செருகல்கள் சங்கர நமச்சிவாயர் உரையோடு மாறுபடுகின்றன என்கிறது என் சிற்றறிவு.  இது பதிப்புப் பிரச்சினையுமாகும்."சிவஞான முனிவர் தமது கைப்படத் திருத்திய சங்கர நமச்சிவாயர் உரையேட்டை மூல பாடத் திறனாய்வு நோக்கில் மேலும் ஆராய்ந்தால் நன்னூலுக்கு முனிவர் செய்த உரைப் பணியைத் துல்லியமாக மதிப்பிட முடியும். அதற்கு  [திருவாவடுதுறை]ஆதீன நூல் நிலையக் கதவு திறக்குமா? " என்கிறார் பேரா. அ. தாமோதரன்(௸ நூல், ப.62).

                                                           ---------------x---------------

சங்கர நமச்சிவாயருக்கு முன்பே நன்னூலுக்கு உரை வரைந்த மயிலைநாதர் ,

 இஃது[வட சொல்] ஒரு நிலத்திற்கேயுரிய தன்றிப் பதினெண் பூமிக்கும் விண்ணிற்கும் புவனாதிகட்கும் பொதுவாய்வருதலின், திசைச்சொல்லின் அடக்காது வேறோதினாரென்க. அஃதென்னை ? வடக்கண் மொழி என்றாராலோ எனின், ஆண்டு வழக்குப் பயிற்சியை நோக்கி அவ்வாறு கூறினாரென்க (269, உரை)

 என்கிறார். இப்போது சங்கர நமச்சிவாயர் உரைப்பகுதி:

வடக்கும் ஒரு திசை அன்றோ ? வட சொல் என வேறு கூறுவது என்னை எனின், தமிழ்நாட்டிற்கு வட திசைக்கண் பதினெண் மொழிகளுள் ஆரியம் முதலிய பல மொழியும் உளவேனும் தென்றமிழ்க்கு எதிரியது கடவுட்சொல்லாகிய ஆரியம் ஒன்றுமே என்பது தோன்ற அவற்றுள் தமிழ்நடை பெற்றதை வட சொல் என்றும் ஏனையவற்றுள் தமிழ்நடைபெற்றதைத் திசைச்சொல் என்றும் சான்றோரான் நியமிக்கப்பட்டன என்க" ( நன்னூல் 270)

இந்த இடத்தில்  " அன்றியும்,ஆரியச் சொல் எல்லாத் தேயத்திற்கும் விண்ணுலகம் முதலியவற்றிற்கும் பொது ஆகலான் அவ்வாரியச் சொல் தமிழ்நடை பெற்றதைத் திசைச்சொல் என்றல் கூடாது எனக் கோடலும் ஆம்" எனமயிலைநாதரின் கருத்தை , ஏறத்தாழ அவருடைய சொற்களையே  எடுத்தாண்டு, சங்கர நமச்சிவாயர் உரையின் இடையே செருகுகிறார் சிவஞான முனிவர்(?).

சங்கர நமச்சிவாயர் வடசொல் கடவுட்சொல் என்றாரேனும் ' விண்ணுக்கும் மண்ணுக்கும் புவனாதிகட்கும் பொது ' என்றாரிலர்.  மேலும் 'செந்தமிழ்க்கு எதிரியது' என்று அவர் கூறுவதையும் கருதவேண்டும்.'எதிரியது' என்பது பகை குறித்தன்று; தமிழ் தனக்கிணையாக 'எதிர்கொண்டது' என்னும் பொருட்டு.

  ஆன்ற மொழிகளுக்குள்ளே - உயர்

  ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் 

என்று பாரதி பாடியதும் அதுவே.

மயிலைநாதருக்கும் சங்கர நமச்சிவாயருக்குமிடையில் வடசொல் பற்றிய பார்வையில் நுட்பமான மாறுபாடு -  வேறுபாடு என்றாவது கொள்ள வேண்டும் - உள்ளது.முனிவர்  இரண்டையும் ஏற்கிறார் போலும்.

சங்கர நமச்சிவாயரின் பார்வை வேறுபாடு தற்செயலானதன்று; மொழிப் பன்மை குறித்த அவரது முழுமைப் பார்வையின் விளைவு என்று கருதலாம்.

   செந்தமிழ்  நிலஞ்சேர்  பன்னிரு   நிலத்தினும்

   ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினுந்

   தங்குறிப்  பினவே  திசைச்சொ  லென்ப (273)

எனும் நூற்பா விளக்கத்தில்,

செந்தமிழ்' என்றமையால் கொடுந்தமிழ் என்பதூஉம் ஆரியத்தின் காரியமாய வடசொல்லை வேறு கூறுதலின் தமிழ் ஒழிநிலம் பதினாறு என்பதூஉம் கற்றோரையும் மற்றோரையும் தழீஇத் , 'தங்குறிப்பின' எனப் பொதுமையின் கூறினமையின் இத்திசைச் சொற்கள் அந்நிலத்தோர்க்கு இயற்சொல்லாய்ச் செந்தமிழோர்க்கு அவ்வாறு குறிக்கப்படாத திரிசொல்லாய் நிற்கும் என்பதூஉம்  பெற்றாம்.

-எனச்  சங்கர நமச்சிவாயர் திசைச்சொல்லை விளக்குகிறார்.



செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்

தங்குறிப் பினவே² திசைச்சொற் கிளவி (தொல். எச்ச. 394)

என்னும்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி, ' ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத் ' தை இடைமிடைந்து நூற்பாவாக்கியுள்ளார் பவணந்தி. 

தொல்காப்பிய நூற்பாவிற்கு உரையெழுதிய இளம்பூரணர், 

தங்குறிப்பினவே’ என்றது அவை ஒரு வாய்பாட்டவேயல்ல; தத்தம் மரபினும் பின் வேறு வேறு வாய்பாட்ட என்றற்கும், அவர் எவ்வாறு குறித்து வழங்கினாரோ அஃதே அவற்றிற்கு இலக்கணம் என்றற்கும் என்பது 

 என்கிறார். இளம்பூரணர் கருத்தை  வழி மொழிந்து மேலும் விளக்கமாக,'கற்றோரையும் மற்றோரையும் தழீஇ ', 'அந்நிலத்தோர்க்கு இயற்சொல்' என்றெல்லாம் சங்கர நமச்சிவாயர் குறிப்பிடுவது வெறும் பொறையன்று; பிற மொழிகளை அவரவர் நிலை நின்று ஏற்கும் மொழிச் சனநாயகம்.

__________________________________________

1.   தமிழிணைய மின்னூலகத்தில் (tamildigitallibrary.in) கிடைக்கிறது

2.  குறி என்பதற்கு இலக்கணம் என்னும் பொருளும் உண்டு. அது கொண்டு 'குறிப்பின ' என்றதற்கு இலக்கணத்தன என்று பொருள் காணலாம். வண்ணனை இலக்கணத்தின் வித்து இதில் கிடப்பது வியப்பு! இதுவே தொல்காப்பியக் கருத்தும் என்பது பொருந்தும்.  இதனை உளங்கொண்டே இளம்பூரணரும் உரைவரைந்துள்ளார்



No comments:

Post a Comment

இலக்கண மறுப்பு என்னும் பொறுப்பின்மை

வட்டார வழக்குதான் மக்கள் மொழி .அதுதான் உயிருள்ளது என்று மிகையழுத்தம் தரும் குழு ஒன்று விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்படித்தான் எழுத...