எதிர்வினைகள் எள்ளலுக்குரியவை அல்ல!
----------------------------------------------------------------------------------
தோழர் ப.ஜீவானந்தம் [ஜீவா] தனித்தமிழ் ஈடுபாடு கொண்டிருந்த காலத்தில் தம் பெயரை உயிரின்பன் என்று மாற்றிக்கொண்டாராம். ஒரு முறை தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரைக் காண அவரது இல்லம் சென்று, "ஐயா !" என்று குரல் கொடுத்தாராம்.
"யாரு போஸ்ட்மேனா?" என்று அடிகள் வினவிய குரல் கேட்டதாம்.
ஜீவாவுக்குத் தனித்தமிழ்ப் பிரமை தகர்ந்ததாம்.
தோழர் சிலர் எள்ளல் நகை தோன்ற இதனைச் சொல்வதுண்டு.
துணுக்குகளிலிருந்து கொள்கை!
இதில் நாடகச் சிறு (மைச்)சுவையன்றி வேறில்லை. எழுத்தாளர்கள், தலைவர்கள் முதலியோர் குறித்து இப்படிப்பட்ட வழக்காற்றுத் துணுக்குகள் பலவுள. போகிறபோக்கில் அவர்களே சொல்லியிருக்கலாம். இவற்றுள் சில, தொடர்புடையோரின் ஆளுமைக்கு இழுக்கு என்று தெரியாமலே சுவை சொட்டச்சொட்டப் பரப்புகிறார்கள் சீடர்கள். போகட்டும்.
நான் கொள்கையளவிலோ நடைமுறையிலோ தனித்தமிழ் இயக்கப் பிரிவு எதனையும் சாராதவன். என் எழுத்திலும் வலிந்து தனித்தமிழ் ஆளும் வழக்கமில்லை. எனக்குத் தனித் தமிழியக்க நண்பர்கள் உண்டு.
ஒரு கருத்தரங்கில் தனித் தமிழியக்கம் பற்றி உரையாற்ற எனக்கு வாய்ப்பு வந்தபோது 'இவனுக்கென்ன தகுதி இருக்கிறது' என்று தனித்தமிழ் நண்பர் சிலர் வினவியதாகக் கேள்வி. உரிய காலத்தில் போதிய தரவுகள் கிடைக்காததால் அக்கருத்தரங்கில் நான் உரையாற்றவில்லை.நிற்க.
இந்திய அளவில் மொழிப் பிரச்சினையிலும் தமிழக அளவில் தமிழ்ப் பிரச்சினையிலும் அதிகாரப்பூர்வமார்க்சியர் , மார்க்சிய அறிஞர்களின் பார்வை குறைபாடுடையது.
இந்தித் திணிப்பு எதிர்ப்பின் ஒட்டுமொத்த உரிமையும் எங்களுக்குத்தான் என்கிற திராவிடக் கட்சிகளும் வெறும் பள்ளிப்பாட இந்தி எதிர்ப்புச் சடுகுடு நடத்துகிறார்களேயன்றிக் கணிசமாகத் தமிழ்நாட்டில் இந்தியும் 'இந்தி'யரும் திணிக்கப்பட்டு அரசு, அரசு சார் பணிகளில் தமிழும் தமிழரும் புறக்கணிக்கப்படுவது பற்றிக் கண்டுகொள்ளவில்லை.
இந்திய அளவில் இந்தி என்பது இந்து அடிப்படைவாத நிரல்களில் ஒன்று என்பது ஏறத்தாழ நிறுவப்பட்ட பிறகும் - வெள்ளம் தலைக்கு மேல் போகிற காலத்திலும் - பொதுவுடைமையர் வெறும் நடைமுறை உத்தியாக இந்தித் 'திணிப்பை' மட்டும் எதிர்த்துக் குரல்கொடுத்து வருகிறார்கள்.
இந்தித் திணிப்பு மட்டுமில்லை அனைத்தையும் சங்கதம் என்னும் ஒற்றை அடையாளக் தின்கீழ் - ஒற்றை அடையாளத்திற்குள் அன்று அடையாளத்தின் கீழ் - கொணர்வதுதான் வைதிக வருணாசிரம இந்துத்துவத் திட்டம்.
தனித்தமிழியக்கத்தின் தோற்றத்திற்கும் தொடர்ச்சிக்கும் இன்றளவும் ஒரு தற்காப்பு நியாயம் உள்ளது.
செயற்கையானதொரு நடையாக மாறிவிட வாய்ப்பு மிகுதி என்றாலும்,மொழி அடிப்படைவாதக் கூறுகள் இல்லாமலில்லை என்றாலும், தனித்தமிழ் வன்மையான ஓர் எதிர்வினையே. இந்த வன்மை வரலாறு வழங்கியது. தமிழ் இலக்கண மரபில் தனித் தமிழின் உணர்வார்ந்த இழையோட்டத்தைக் காண முடிகிறது.
எதிர்வினைகள் எள்ளலுக்குரியவை அல்ல.
தென்னிந்திய மொழிகள் , வட மொழிகளை- குறிப்பாகச் சங்கதத்தை - சாராத தனித்தன்மையுடையன என இனங்காண ஃபிரான்சிஸ் வைட் எல்லிசுக்கு முதன்மையான தூண்டுகோலாயமைந்தது அவற்றின் செய்யுட் சொல் வகைகளே. தமிழில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வட சொல் ; பிற தென்னிந்திய மொழி இலக்கணங்களில் தற்சமம், தற்பவம், தேசியம், கிராமியம் (இவ்வரிசையில் சிற்சில
மேலோட்டமான வேறுபாடு உண்டு).
தற்சமம், தற்பவம் என்பவை வடசொல் வடிவ வகைகள். பிற திராவிட மொழி இலக்கணங்களில் இவையே முன்னின்றன. தமிழில் வட சொல்லுக்குக் கடைசி இடம்தான். வட மொழி இலக்கணங்களின் சில மொழி விளக்க மாதிரிகள் தமிழில் தொல்காப்பியம் தொட்டே காணப்படலாம்.
வடமொழியின் ( குறிப்பாகச் சங்கதத்தின்) வரலாற்றுப் பின்னணி, மாறுதல்கள், இருக்கு வேத உள்ளடக்கம் , இருக்கு வேத மொழி ஆகியன பற்றிய ஆய்வுகள் இல்லாமலில்லை. வேதச் சங்கதத்திற்கும் செவ்வியல் சங்கதத்திற்குமிடையிலான வேறுபாட்டை எவரும் மறுக்க இயலாது.
தமிழை 'அறிவியல்' அடிப்படையில் ஆராய்ந்து எல்லாம் வடமொழி, வேதோபடிநிடத வழிப்பட்டவை என்று நிறுவ முயலும் நாசசாமி வகையறாக்கள் , சங்கதத்துக்கும் இருக்கு முதலிய வேதங்களுக்கும் முந்தைய வரலாறு உண்டு என்பதையோ அவை மக்கள் உருவாக்கியவை என்பதையோ பார்ப்பதில்லை. அதுமட்டுமன்று பிற இந்திய மொழிகளும் சங்கதத்தின் மீது ஒலி, சொல்லளவிலும் செவ்வியல் சங்கதத்தில் கணிசமாகத் தொடரளவிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பதையும் கருதவேண்டும்.
அது தெய்வ மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று புரட்டுவது மொழி-அறிவியலாகிய மொழியியலுக்குப் புறம்பானது. அது மட்டுமே இந்தியப் பண்பாட்டின் ஊற்றுக் கண் என்பதற்கு இன்றளவும் இடையூறாயிருப்பது - சில ஆய்வுப் புரட்டர்களின் அரைவேக்காட்டுத் திரிபுகள் தவிர - குதிரையின் சுவடற்ற பண்டைச் சிந்துவெளி.
ஈனியல் (Genetics) வழி ஆய்வுகளும் சிந்துவெளி நாகரிகக் காலத்திற்குப் பின்பே இருக்கு வேத ஆரியர் வந்தனர் என்பதை நிறுவும் பாதையில் முன்னேறிவிட்டது.
மொழிக்குடும்ப நோக்கில் திராவிட மொழிகள் அமைப்பால் சங்கதத்தினின்றும் வேறுபட்டவை; அடிப்படை இனச் சொற்களாலும் வேறுபட்டவை. வெறும் சொற்கலப்பு மட்டுமே கருதி மொழிகளை இனவுறவுடையவை எனக் கொள்ள இயலாது.
இந்தியாவின் எந்த மொழி, இலக்கியம் பயில்வோராயினும் ஒரு பிரிவினர், பண்டை இந்தியாவின் - ஏன் தெற்காசிய நாடுகளின் - வளமான பொது/ தொடர்பு மொழியாக மதிப்புடன் திகழ்ந்த சங்கத மொழி பயில வேண்டும் என்பது என் கருத்து.
சமண, பெளத்த சமய ஆய்வுக்கும் சங்கத அறிவு தேவை. அது வெறும் வைதிக மொழியன்று.
பத்தி இயக்கம், சமண, பெளத்த சமயங்கள் முதலியவற்றின் ஆய்வுக்குத் தமிழறிவும் தேவை.
திராவிட மொழிகள் எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் குறைந்தவையாயினும், தம்மளவில் தனித்தன்மை பேணி, இந்தியப் பண்பாட்டிற்குப் பங்களித்துள்ளன.
மேலும் மக்களாட்சி ஊழியில் வழங்குமொழிகள் வளர்க்கப்படவும், பண்பாட்டு மொழிகள் பேணப்படவும் வேண்டும்.
பழந்தமிழ், சங்கதம், பாலி, முதலியன ஆய்ந்து பேணப்பட வேண்டுமேயன்றி, பயன்படுத்தி வளர்க்கப்பட வேண்டியதில்லை.
ஆனால் வழங்குமொழிகளை ஓரங்கட்டி , ஒற்றை இந்தியைத் திணித்து, எல்லாவற்றையும் வைதிகச் சங்கதத்தின் கீழ்க்கொணர வெறிகொண்டலைவது பண்பாட்டு ஒடுக்குமுறையேயன்றி வேறில்லை.
மாறாக, இந்தியாவின் பன்முகப் பண்பாட்டைப் புதைக்கும் சவப்பெட்டிமீதுஅறையப்படும் அடுத்த ஆணியாக சங்கதத் துறையினரும் உலக பிராமணக் கூட்டமைப்புத் தலைவருமாக முற்றிலும் மேட்டுக்குடி வடவரைக் கொண்டு பன்னிரண்டாயிரமாண்டு இந்தியப் பண்பாட்டை ஆராயும் குழு (Expert Committee for Conducting Holistic Study of Origin and Evolution of Indian Culture) அமைக்கப்பட்டிருக்கிறது.
இது, ஏற்கெனவே எழுதிய முடிவுகளை முன்வைத்து - சில துக்கடாக்கள் இணைக்கப்படலாம் - ஆராய்ச்சி என்னும் பெயரிலான நாடகத்தை நடத்திக் காட்டப் போகிறது.
அருமை ஐயா... இனி உங்கள் படைப்புகளைத் தேடி எடுப்பதில் சிரமம் இருக்காது.
ReplyDeleteஎழுதியச்சாக்கும் வசதிக்கு முன் ஒரு வலைப்பூ இருந்தது. தட்டச்சுச்சோம்பலாலும் அடையாளக் குழப்பத்தாலும் விட்டுவிட்டேன்.
Deleteபழைய முகநூல் பதிவுகளை இதில் மீண்டும் இடலாம் என்று கருதுகிறேன். பார்ப்போம்.
ReplyDeleteவலை உலகிற்குத் தங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் ஐயா
நன்றி!
Deleteதனித்தமிழ் இயக்கவாதிகள் மீது தாங்கள் கொண்டுள்ள பார்வை புரிகின்றது அய்யா... இன்றைய கால சூழ்நிலையில்
ReplyDeleteதங்களின் பதிவு மிகவும் தேவையானவையே மற்றும் வரவேற்கத்தக்கது.
சிறப்பு ஐயா
ReplyDeleteசிறப்பு ஐயா
ReplyDeleteசிறப்பு ஐயா
ReplyDeleteநன்றி!
Deleteமகிழ்ச்சி ஐயா
ReplyDelete