1. தற்காலத் தமிழுக்கான ஒரு தரவுத்தளம் வேண்டும்.
2. தமிழ் மரபிலக்கணத்தோடு மொழியியலிலும் போதிய திறம் வேண்டும்.
இவை என் வரம்புக்கு அப்பாற்பட்டவை.
3. இத்துறையில் ஏற்கெனவே நல்லறிஞர்தம் நூல்கள் சில வெளிவந்துள்ளன.
4. சிலர் தொடர்ந்து நுட்பமாகப் பணியாற்றியும் வருகின்றனர்.
இதற்கு மேல் என்னளவில் ஏதும் செய்ய இயலாது. ஆனாலும்
தொல்காப்பிய - நன்னூல் மரபு (அவ்விலக்கணங்களல்ல அவற்றின்மரபு)
1.புதிய இலக்கண அமைப்புகளை உள்வாங்கத்தக்கது என்பது பற்றியும்
2.அம்மரபைப் புதிப்பித்துப் பயன்கொள்ள வேண்டிய தேவை பற்றியும்
3.ஏற்கெனவே அவற்றின் செல்வாக்குப் புதிய இலக்கண நூல்களில் உள்ளத என்பது பற்றியும், சில எடுத்துக்காட்டுகள் வழியாகக் கருத்தளவில் விவாதித்து அம்மரபு தொடரவேண்டும் என வலியுறுத்த முயல்கிறது இவ்வுரை.
தொல்காப்பியமும் மரபும்
தொல்காப்பியரே மொழி கால இட மாறுதலுக்குட்பட்டது என்பதை உணர்த்து ஆங்காங்குப் புறனடை புகல்வார்.
கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே" (வே.ம.,35 & இடை. 48)
என ஈரிடங்களில் கூறுவார். பிறிதோரிடத்தில்,
கிளந்தவற்று இயலான்/ பாங்குற உணர்தல்" (உரி.98)
என்பார். இந்தக் 'கிளந்தவற்று இயல்' என்பதே மரபு.
இலக்கண மரபுகள்
இலக்கண மரபு பற்றிப் பல்வேறு சிந்தனைகள், கட்டுரைகள், நூல்கள் வெளிவந்துள்ளன. என்னளவில் ஐந்து நூல்களைச் சுட்டலாம் என்று கருதுகிறேன்.
1.இலக்கண உருவாக்கம் - செ. வை. சண்முகம்
2. தொல்காப்பிய உருவாக்கம் - ச. அகத்தியலிங்கம்
3. தமிழ் இலக்கண மரபுகள்:
கி.பி. 800 - 1400
இலக்கண நூல்களும் உரைகளும் - இரா. சீனிவாசன்
4. இலக்கணவியல் : மீக்கோட்பாடும் கோட்பாடும் - சு.இராசாராம்
5. பிற்கால இலக்கண மாற்றங்கள்[எழுத்து] - க. வீரகத்தி
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்கொள்ளும் என்ப குறியறிந் தோரே (தொல்.பொருள்.50)
பிண்டந் தொகைவகை குறியே செய்கைகொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம்
உயிர், மெய், உயிர்மெய், குற்றெழுத்து/குறில், நெட்டெழுத்து/நெடில் , வல்-எழுத்து, மெல்-எழுத்து, இடை-எழுத்து (வல் -, மெல்-, இடை-) , குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் , அளபெடை முதலியன மரபுவழிக் கலைச்சொற்கள்.
எழுத்துகளை வகைப்படுத்தும்போது , குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் மூன்றை மட்டும் 'சார்ந்து வரல் மரபின் மூன்று' என்பார்தொல்காப்பியர்.
பிறப்பியலில் 'சார்ந்து வரினல்லது தமக்கியல் பிலஎனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்று ' எனச் சுட்டுவார்.
பின்னர், சார்பெழுத்து என்னும் கலைச்சொல் உருவாயிற்று. தொல்காப்பியர் கலைச்சொல் கொள்ளாமைக்குக் காரணம் அவை பற்றிய அவரது கொள்கையே.
மேலும், நன்னூல் அவிநய வழி நின்று உயிர்மெய் முதலிய பத்து எழுத்துகளைச்சார்பெழுத்து என்றது(எண்ணிக்கை மிகுதியை வளர்ச்சியாகக் கொள்ள வேண்டியதில்லை)
மொழி முதல், கடை எழுத்துகளிலும் மெய்ம்மயக்கத்திலும் மாறுதல்கள் நேர்ந்துள்ளன.
கலைச்சொற்களை மாற்ற வேண்டியதில்லை.
போலி எழுத்திலக்கணம் நீட்டப்படலாம். கேரளம், கேரளா (அம்/ஆ - போலி)
இரண்டும் சரி. மரபு பேண விரும்புவோர் - அம் இறுதியைத் தொடரலாம். - ஆ இறுதி வழுவோ பிழையோ அன்று. புணர்ச்சியில் இயல்பாகவே இச்சொற்கள் மரபு பேணிக்கொள்கின்றன(கேரளம் + இல் = கேரளத்தில்; கேரளா + இல் = கேரளாவில் - என அத்துச் சாரியையோ உடம்படுமெய்யோ செய்கை பிழையின்றி நிகழ்கிறது)
தொல்காப்பியம் கூறும் நிறுத்த சொல், குறித்துவரு கிளவி என்பன நிலைமொழி, வருமொழி என்று நிலைப்பட்டன (தொல்காப்பியத்தில் நிலைமொழி என்பதும் ஓரிடத்தில் ஆளப்பட்டுள்ளது).
புணர்- ச்சி என்னும் எழுத்திலக்கணக் கலைச் சொல் தொடர்கிறது.
எழுத்துச் சீர்திருத்த அணியினரும் மொழியியல் ஆய்வாளரும் ஐ, ஒள தேவையில்லை என்கின்றனர்.
அறிவார்ந்த நிலைநின்று மொழியியலார் கருத்தில் உடன்படலாம். மொழி வெறும் எந்திரமன்று. 'மரபு நிலைதிரியின் பிறிது பிறிதாகும்' என்று தொல்காப்பியம்பிறிதொன்று கருதிச் சொன்னதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். சுமைதான் . மரபு கருதிச் சுமப்பதே நல்லது.
மரபிலக்கணமும் மொழியியலும் பயின்றோர் இதில் நிதானம் கடைப்பிடித்துள்ளனர்.
'12 உயிர் ஒலியன்களில் ஐகார ஒளகாரங்களை மரபிலக்கணங்கள் நெட்டுயிர்களாகவே கொண்டுள்ளன.இருந்தாலும் இன்றைய வழக்கில் ஐகாரம் அகர யகரச் சேர்க்கையாகவும், ஒளகாரம் அகர வகரச் சேர்க்கையாகவும் அமைந்துள்ளன ' (பொற்கோ, ப.3)
" ஐகாரத்தை அ+ய் என்றும் ஒளகாரத்தை அ+வ் என்றும் இரு இரு ஒலியன்களின் சேர்க்கையாகக் கருதலாம்" (அகத்தியலிங்கம், தமிழ் மொழி அமைப்பியல், ப34)
ஐகார ஒளகாரங்களை நீக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லவில்லை.
உயிர்மெய் புழக்கத்தில் உள்ளது. இதனைச் சார்பெழுத்தாகக் கொள்ள வேண்டியதில்லை.
குற்றியலுகரம் இன்றும் தேவை. ஆய்தம் அரிதாகப் புழங்குகிறது. அஃறிணை என்னும் கலைச்சொல்லுக்காகவே ஆய்தம் பேணப்பட வேண்டும்.
எஃகு முதலிய சொற்களில் ஓரளவு பயன் படுகிறது.
F இல் தொடங்கும் ஆங்கிலச் சொற்கள், பெயர்கள் (எ.கா. ஃபைல், ஃபிர்தௌசு) ஆகியவற்றில் ஆய்தப் பயன்பாடு புதுவரவு. மரபிலக்கண நோக்கில் இவை பிழையானவை.
புத்திலக்கண நோக்கில் இதற்கும் ஓர் இடம் தரலாம்.
தற்காலத் தமிழ் எழுத்தில் ஓசை நீட்டம் காட்ட அளபெடைகள் அரிதாகப் பயன்படுகின்றன. நெடிலை அடுத்து நெட்டுயிரையே போட்டுக் காட்டும் வழக்கமொன்றும் உள்ளது (எ.கா. நேஏஏஏஏ... ராக).
உயிர், மெய், உயிர்மெய், குற்றியலுகரம், ஆய்தம், அளபெடை ஆகியவற்றை மரபுவழிப் பெயர்கள் சுட்டிப் புத்திலக்கணத்திலும் பேணலாம்; பேணுகின்றனர்.
இருபத்தாறு என்பது இருபத்தியாறு [இருபத்த் (உ) + இ + (ய்) ஆறு] என வழக்கில் பெருகியிருப்பதை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டி, " இருபத்தியாறில் இடம்பெற்ற இகரத்தை இனி ஒரு புதிய சாரியையாகப் புதிய தமிழ் இலக்கணம் இனங்காண வேண்டும் " என்கிறார் இரா.கோதண்டராமன் (ப.124) .
சாரியை என்னும் கலைச்சொல் பழசு; 'இ'கரம் என்னும் சாரியை புதுசு. இது மரபின் தொடர்ச்சி.
சொல், தொடரிலக்கணம்
உயர்திணை, அஃறிணை - மாறாமல் தொடரும் கலைச்சொற்கள். ஆடூஉ அறி சொல் முதலியனவாகத் தொல்காப்பியர் சொல்வன ஆண்பால் விகுதி முதலியனவாக மாறியுள்ளன. இம்மாற்றம் கையாள எளிதானது.
இலக்கண விளக்கத்தில் சற்றே வேறுபடினும் பெயர், வினை , இடை, உரி மாறவில்லை. தொழிற்பெயர், ஆகுபெயர் முதலியனவும் இன்றளவும் பயனுடையவை.
தொல்காப்பியம் தொழிற்பெயர் என ஒன்றை மட்டும் சொல்கிறது. காலங் காட்டும் பெயரைத் 'தொழில்நிலை ஒட்டும் பெயர்' (வேற்.9) என ஓரிடத்தில் குறிக்கிறது.
நன்னூல் தொழில்நிலை ஒட்டும் பெயரை ,வினையாலணையும் பெயர் என ஆளுகிறது. இதுவே இலக்கணப் பயில்வில் பெருவழக்காகியுள்ளது.
1.தமிழ்ப் பயிற்சி
2.தமிழ் பயில்தல்
நிலை மொழி தமிழ் - பெயர்ச்சொல்; வருமொழி - பயிற்சி, பயில்தல் இரண்டும் மரபிலக்கணப்படி தொழிற்பெயர்கள். இரண்டுமே வேற்றுமைத்தொகைகள்தாம்.
1. தமிழ்மொழியில் பயிற்சி என ஏழாம் வேற்றுமைப் பொருளில் விரிக்கலாம்.
2. தமிழைப் பயில்தல் என இரண்டாம் வேற்றுமைப் பொருளில் விரியும்.
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வருமொழி வல்லெழுத்தாயினும் வலி மிகாது.
மரபிலக்கணப்படி வருமொழி இரண்டும் தொழிற்பெயர்கள். ஆனால் தொடரியல் இலக்கண உறவில் வேறுபடுகின்றன.
பயிற்சி- தொழிலின் பெயர்
பயில்தல்- தொழில் நிகழ் பெயர்
எனப் பெயரிட்டு ஆளலாம். வேறு வகையில் பெயர் சுட்டவும் வாய்ப்புள்ளது.
ஆனால், தொழிற்பெயர் என்னும் மரபான கலைச்சொல்லின் சாயல் குன்றாமல் ஆக்குவது நல்லது.
தொழில், பெயர் என்னும் இரு சொற்களையும் தக்கவைத்துக்கொண்டு
தொழிலின் பெயர் (ஆறாம் வேற்றுமைத்தொகை)
தொழில் நிகழ் பெயர் (வினைத் தொகை) - என்றால், மரபான 'தொழிற்பெயர்' என்பதன் உள்வகைகளாக இவற்றைக் கொண்டுவிடலாம்.
தொடரியல் நிலைநின்று தொல்காப்பியத்தைப் பார்க்கலாம். மொழி இலக்கணம் என்னும் நிலையில் , தொல்காப்பியர் தொடரிலக்கணத்திற்கு முதன்மையளித்துள்ளார் .
தொல்காப்பியப் பயிற்சி மீள் எழுச்சியுற்றபோது சொல்லிலக்கண உரைகளே மிகுதியாகத் தோன்றின. இதற்கு வடமொழி இலக்கணச் செல்வாக்குக் காரணமெனக் கூறப்படுவதை (சீனிவாசன், ப.91) நான் மறுக்க விரும்பவில்லை. அதுமட்டுமே காரணமன்று என்று கருதுகிறேன்.
தொல்காப்பியர் இடையியலில் வினை செயல் மருங்கின் காலமொடு வரும் கால இடைநிலைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவற்றை அவர் அறிந்திருக்கிறார்.
எழுத்ததிகாரத்தின் ஆறு இயல்கள் - மூன்றில் இரண்டு பங்கு - புணர்ச்சி பற்றிப் பேசுகின்றன. இவை தாமும் தொடரிலக்கணம் நோக்கியவை என்று தென்படுகிறது.
தொல்காப்பியர் சொல்லின் அகப்பகுதிகளான பகுபத உறுப்பிலக்கணமும், அகப் புணர்ச்சியும் கருதாமைக்குரிய காரணங்களுள் ஒன்று தொடரிலக்கண நோக்கில் அவை பொருட்படுத்தத் தக்கதனவல்ல என்பது.
பால் காட்டும் விகுதிகளும் சாரியைகளும் தொடரியல் சார்ந்தவையாதலின் அவற்றை விளக்கியிருக்கிறார் தொல்காப்பியர்.
பவணந்தியாரும் பகுபத இலக்கணத்தை எழுத்ததிகாரத்தின் பதவியலிலேயே வைத்துள்ளார்.
பகுபத உறுப்புகளாதலின் பால் காட்டும் விகுதிகளையும் அவர் பதவியலில் சொல்ல நேர்ந்தது.
எழுத்ததிகாரத்தை 'எழுத்தெனப்படுப' என்று தொடங்கிய தொல்காப்பியர் சொல்லதிகாரத்தைச் ' சொல்லெனப்படுப' என்று தொடங்குவதுதானே சீர்மை!.
திணை, பால் பகுப்புகள் தமிழுக்கேயுரியன என ஓர்ந்துணர்ந்து அவற்றை முதற்கண் வைத்த திறத்தை அகத்தியலிங்கம் விளக்கியுள்ளார் (தொல்காப்பிய உருவாக்கம், பக்.108 - 118)
உயர்திணை, அஃறிணை, ஆடூஉ , மகடூஉ, பல்லோர், ஒன்று, பலவறி சொற்கள் , அவற்றின் ஈற்றில் நின்று இசைக்கும் பதினோர் எழுத்துகள் (அவையாவன பால் காட்டும் விகுதிகள்) ஆகியவற்றைக் கூறிப் பத்தாவது நூற்பாவில் தொல்காப்பியர்
இரு திணை மருங்கின் ஐம்பால் அறிய
ஈற்றின் நின்றிசைக்கும் பதினோர் எழுத்தும்
தோற்றம் தாமே வினையொடு வருமே
என்கிறார்; அடுத்து, அந்தாதியாக ,
வினையில் தோன்றும் பாலறி கிளவியும்
பெயரில் தோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா; தம்மரபினவே
என மரபைக் காரணம் காட்டி இயைபை(Concord) விதிக்கிறார்.
பெயரிலக்கணமோ வினையிலக்கணமோ கூறும் முன்பே
பெயர், வினை என ஆள நேர்கிறது. உண்மையில் பெயர், வினை, இடை, உரி யாவும் தொடரை விளங்கிக்கொள்வதோடு தொடர்புடையவை.
தொல்காப்பியர் சொன்ன தமிழ்த் தொடரிலக்கண இயைபு மரபு இன்றளவும் தொடர்கிறது. இது தமிழின் மொழி அடையாளங்களுள் முதன்மையான ஒன்றாகும்.
ஐம்பால் என்பது தொல்காப்பிய மரபு. வீரசோழிய வேற்றுமைப் படலம் " ஒருவன் ஒருத்தி ஒன்றாம் சிறப்போடு பல்லோர் பல "(30) என்கிறது, கிரியாபதப் படலம், "ஒருவன் ஒருத்தி சிறப்புப் பலர் ஒன்றொடு பல "(71)என்கிறது.
சிறப்பு என்பது தொல்காப்பியர் சொல்லாததன்று.
வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கின் சொல்லாறு அல்ல" (கிளவி. 27)
என்பார், அவர் கால வழக்குக் கருதி.
காலப்போக்கில் செய்யுள் வழக்கிலும் பெருகி விட்டதால் வீரசோழியம் சிறப்பு என ஒன்றை 'இலக்கண மருங்கிற்' சேர்த்துக்கொண்டது.இதனைத் தம் இக்காலத் தமிழ் இலக்கணத்தில் உயர்பாற் பெயர் என்பார் பொற்கோ (ப.39)
அகத்தியலிங்கம் உயர்திணை ஒருமையில் ஆண், பெண், உயர்வு ஒருமை என மூன்றைக்கொள்வதோடு உயர்வு ஒருமையில் சாதாரண உயர்வு ஒருமை, சிறப்பு உயர்வு ஒருமை என்னும் உள்வகைகளையும் கொள்கிறார் ( 'தமிழ்மொழி அமைப்பியல்' ப.81)
பொற்கோவும் அகத்தியலிங்கமும் , 'உயர்சொற் கிளவி' என்னும் தொல்காப்பியத் தொடரிலிருந்து புதிய கலைச்சொல்லை உருவாக்கியுள்ளனர் எனலாம்.
தொல்காப்பியம் கூறும் இயைபு மரபே அடிப்படை.
இயைபு மரபினின்றும் வேறுபடும் சூழல்கள் மொழிப் புழக்கத்தில் நிலவுவது இயல்புதான். அவற்றை எவ்வாறு ஆள்வது என்று வரையறுக்கிறார் தொல்காப்பியர் .
உரையாசிரியர்கள் வழு, வழுவமைதி எனச் சுட்டும் தொடரிலக்கணப் பகுதிகளில் கணிசமானவை இந்த இயைபுமரபு சார்ந்தவை.
கிளவியாக்கமும் வேற்றுமை இயல்களும் எச்சவியலும் நான்கு சொற்கும் பொது இலக்கணம் கூறுவன, பெயர் வினை இடை உரி இயல்கள் சிறப்பிலக்கணம் கூறுவன என்னும் சேனாவரையர் கருத்தினூடாகப் பொது இலக்கணம் கூறும் ஐந்தியல்கள் தொடரியல் பற்றியன என உய்த்தறியலாம். செ.வை.சண்முகம் இவற்றுள் நான்கு இயல்கள் தொடரியல் செய்தி கூறுவன ; விளிமரபு பெரும்பாலும் சொல்லிலக்கணச் செய்தி கூறுவது என்கிறார்[ தொல்காப்பியத் தொடரியல், ப.1]
வினை முற்று - பெயர் இயைபு, பண்பு கொள் பெயர், அடை சினை முதல் , இயற்பெயர் சுட்டுப் பெயர் , இரட்டைக் கிளவி, வேற்றுமை இயல்களின் இலக்கணம், எச்சவியலின் மொழிபுணர் இயல்பு (= செய்யுளின் தொடரமைப்புகள்) ஒரு சொல் அடுக்கு , தொகைகள், தொகைகளின் பொருள் சிறக்குமிடம் (= தொடர் அழுத்தம்), ஒரு சொல் நீர்மை , உரையசைக்கிளவிகள், எச்சங்கள் முதலிய பலவும் தொடரிலக்கணம் சார்ந்தவை.
பெயரெஞ்சு கிளவி, வினையெஞ்சு கிளவி ஆகியன ஆள வசதியாகப் பெயரெச்சம், வினையெச்சம் என்றாயின. இவை போல்வன பிறவும் இன்றும் பயனுடையவை.குறிப்புப் பெயரெச்சம் இன்று பெயரடை எனப்படுகிறது.
பெயரெச்ச வினையெச்ச வடிவங்களை மரபிலக்கணங்கள் வாய்பாடுகளால் சுட்டும். இந்த வாய்பாட்டு மரபு தற்காலத் தேவைகருதிப் புதிய இலக்கணங்களில் வேறு பலவற்றுக்கும் விரிக்கப்பட்டுள்ளது.
இக்கால இலக்கணங்களின் கலைச்சொல் உருவாக்கத்திற்கு மாதிரிக்காட்டுகளாக மூன்று தங்களின் உள்ளடக்கப் பக்கங்கள் சிலவற்றை இறுதியில் இணைத்துள்ளேன்.
' இன்றைய இலக்கியத் தமிழுக்கு நன்னூலும் தொல்காப்பியமும் போதுமானதாக அமையவில்லை' (ப.2) என்று கருதும் பொற்கோ முகவுரையில், " இந்த இலக்கண நூல் தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட இலக்கண நூல். தேவையான பழமைகளைப் போற்றிக் காப்பதோடு புதுமைக்கூறுகளுக்கு இடம் தந்து வாழ்வளிப்பதையும் இந்த இலக்கண நூல் ஒரு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மரபில் கால் ஊன்றிப் புதுமையில் அடியெடுத்து வைக்க வழிகாட்டுகிறது " (ப. v ) என்று கூறியதைத்தான் என் நோக்கில் விரிவாக வழிமொழிந்திருக்கிறேன்.
கு.பரமசிவம் தம் நூலுக்கு 1983 இல் எழுதிய முன்னுரையில், " தமிழ் அமைப்புப் பற்றிய முழுமையான நூல் இதுவரை வந்ததில்லை. இந்த நூலே முதல் முயற்சி" (ப. xii) என்றார். அவர் மறைவிற்குப் பின் 2011 இல் வந்த பதிப்புக்கு இ அண்ணாமலை எழுதிய முன்னுரையில் , " இது தோன்றி கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் , வேறுசில இக்காலத் தமிழ் இலக்கணங்கள் எழுதப்பட்டிருந்தாலும் , இன்னும் புதிய இலக்கண மரபு உருவாகவில்லை" (ப. x) என்கிறார்.
ஏறத்தாழ 400 பக்க அளவில் புத்திலக்கணம் வகுத்த பொற்கோ, " இந்த நூல் மேலும் செம்மை பெற வேண்டும், செழுமை பெற வேண்டும் " (ப. vii)என்கிறார் . சற்றுப்பொடி எழுத்தில் 350 பக்க அளவில் எழுதிய அகத்தியலிங்கம், " பெரிய அளவில் உருவாக வேண்டிய ஒரு இலக்கணத்தை உள்ளத்தில் கொண்டு சிறிய அளவில்... உருவாக்கப்பட்டுள்ளது இந்த இலக்கண நூல். " (ப. 6) என்கிறார்(இரு நூல்களும் 2002
இந்த வழியில் ஆய்வைத் தூண்டுவதே என் நோக்கம்.
பனம்பாரனார் தொல்காப்பியரையே , ' புலந்தொகுத்தோன்' என்றுதானே போற்றுகிறார்.
இக்கால இலக்கணக் கலைச்சொற்களையும் தொகுத்து , தொல்காப்பிய - நன்னூல் மரபு எனப்படும் தமிழ்வழித் தமிழாசிரியர் மரபுக்கேற்பத் தகுநிலைப்படுத்த வேண்டும்.
1.1. மரபான கலைச்சொல்லை மரபான பொருளிலேயே ஆளுதல்
1. 2.மரபான கலைச்சொல்லையே விரிந்த பொருளில் ஆளுதல்
2. மரபான கலைச்சொல்லுடன் புதுச்சொல்லைச் சேர்த்துத் தொகையாகப் பயன்படுத்துதல்
3. முற்றிலும் புதிய கலைச்சொல்லை ஆக்கிப் பயன்படுத்துதல்(பிந்தைய இரண்டிலும் மொழிபெயர்ப்பின் செல்வாக்குக்கு இடமுண்டு) - என்று புத்திலக்கணக் கலைச் சொற்களை வகைப்படுத்த முடியும்.
இக்காலத் தமிழுக்கான குறிப்பிடத்தக்க நூல்களாக நான் கண்ட , ஏற்கெனவே ஆங்காங்குச் சுட்டிய , மூன்றினை முன்மாதிரிகளாகச் சொல்லி நிறைவு செய்கிறேன்.
1. கு.பரமசிவம் - இக்காலத் தமிழ் மரபு
2. இக்காலத் தமிழ் இலக்கணம் - பொற்கோ
3. தமிழ்மொழி அமைப்பியல் - ச. அகத்தியலிங்கம்
---------------------------------------------------------------------------------------
துணை நூல்கள்:
அகத்திய லிங்கம், ச. ,
தொல்காப்பிய உருவாக்கம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2002.
இராசாராம், சு.,
இலக்கணவியல் : மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், காலச்சுவடு, நாகர்கோவில், 2010.
கோதண்டராமன், இரா. ,
தமிழெனப் படுவது , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004.
கோபாலையர், தி.வே.,
தமிழ் இலக்கணப் பேரகராதி (17 தொகுதிகள்), தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2005.
சண்முகம், செ.வை.
இலக்கண ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004 .
தொல்காப்பியத் தொடரியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004.
இலக்கண உருவாக்கம், அடையாளம், புத்தாநத்தம், 2012.
சீனிவாசன், இரா.,
தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800- 1400 இலக்கண நூல்களும் உரைகளும், தி பார்க்கர், 2000
திண்ணப்பன், சுப.
'தொல்காப்பியத்தில் இலக்கணக் குறியீட்டுச் சொற்கள்' , தொல்காப்பிய மொழியியல் (பதிப்பர்: ச.அகத்தியலிங்கம் & க.முருகையன்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1972.
பரமசிவம், கு.,
இக்காலத் தமிழ் மரபு - தற்காலத் தமிழின் இலக்கணம், அடையாளம், புத்தாநத்தம், 2011.
பொற்கோ,
இக்காலத் தமிழ் இலக்கணம், பூம்பொழில் வெளியீடு, சென்னை, 2002.
மதுகேஸ்வரன், பா.,
'தொல்காப்பியப் பதிப்பு வரலாறு (1847- 2006)' தொல்காப்பியம் பன்முக வாசிப்பு ( பதிப்பாசிரியர்: பா.இளமாறன்), மாற்று, சென்னை, 2008.
வரதராசன் , மு.,
மொழி நூல் , பாரி நிலையம் , சென்னை, 2015
வீரகத்தி, க,
பிற்கால இலக்கண மாற்றங்கள் [எழுத்து] , குமரன் புத்தக இல்லம், கொழும்பு/சென்னை, 2011.
வெள்ளைவாரணர், க.,
தொல்காப்பியம் - நன்னூல் - சொல்லதிகாரம், தமிழ்ப்பல்கலைககழகம், தஞ்சாவூர், 2010.
வேலுப்பிள்ளை, ஆ.
தமிழ் வரலாற்று இலக்கணம், பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1979
வையாபுரிப்பிள்ளை, ச.,
தமிழ்ச் சுடர் மணிகள், பாரி நிலையம், சென்னை, 1968.
Lehman , T.,
'A Survey of Classical Tamil Commentary Literature ' Between Preservation and Recreation : Tamil Traditions of Commentary ( edited by Eva Wilden), French Institute of Pondicherry, 2009.
அகராதிகள்
நாகராசன், ப.வே.& விஷ்ணுகுமாரன், த.(தொகுத்தோர்)
தொல்காப்பியச் சிறப்பகராதி, பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம், திருவனந்தபுரம், 2000.
பாலசுப்பிரமணியன் , க.,
தொல்காப்பியச் சொற்பொருளடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2016.
(தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலம், வீரசோழியம் ஆகிய மரபிலக்கண நூல், உரைப் பதிப்புகள் சேர்க்கப்படவில்லை)
------------------------நன்றி!---------------------
↓
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் சார்பில் நிகழ்ந்த இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கில்
' தொல்காப்பிய - நன்னூல் மரபும் புதிய தொடரிலக்கண உருவாக்கமும் '
(24.08.2020) என்னும் பொருளில்உரையாற்ற வாய்ப்பளித்த, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சி.சித்திரா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ஆனந்தவேல் ஆகியோர்க்கு நன்றி.