Monday, December 23, 2024

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

 



எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்கு இலக்கணம் உருவாக்க வல்லது. விளக்கட்டும் ; இலக்கணம் வகுக்கட்டும். பிரச்சினையில்லை.


தமிழ்நாட்டில் மொழியியல் அறிமுகமானபின் அறிஞர் சிலர்   தற்காலத் தமிழில் தீட்டிக் கூர் பார்க்கத் தொடங்கியது இயல்புதானே ! தமிழின்  ஐ , ஒள- களை நீக்கலம் ழ  ற க்களை  நீக்கலாம்  க, ச, ட , த, ப  ஆகியவற்றுக்கு இனமான ஒலிப்புடைத் தடையொலிகளைச் சேர்க்கலாம் என்றெல்லாம்  பரிந்துரைக்கத் தொடங்கினார்கள்.

(மரபிலக்கணம் விதிக்கிறது . நாங்கள் விளக்குகிறோம் என்றவர்கள் விளக்கி  விதிக்கத் தொடங்கியது நகை முரண்.)


சோ ராமசாமி சில காலம்   ை Fல்  F̊ , F  , Fா , Fி (ஃப் , ஃப ,ஃபா , ஃபி ...) என்று அச்சிட்டார்(  இதுகளுக்குத் தமிழ் என்றால்  கிள்ளுக் கீரை. அது சரி! தமிழுக்குத் தகும் உயர்வளிக்கத் தோன்றிய பாரதியே தடுமாறியபோது,      இந்தத் தொகளக் அறிவுச் சீவி வகையறா பற்றிச் சொல்லவேண்டியதில்லை)


கிரந்த வரிவடிவங்கள் தமிழுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் (விவாதத்திற்குரியது); தற்காலத்தமிழில் பரவலாகக் கையாளப்படலாம்; கற்பிக்கவும் படலாம். ஆனால் அவை தமிழல்ல என்ற தெளிவு வேண்டும். 


' வட சொற் கிளவி ' பற்றிய தொல்காப்பிய விதியைக் கம்பன் போன்ற மேதைகள் - கிரந்தம் புகுந்ததற்குப் பின்னும் , வீரசோழியத்திற்குப் பின்னும் - கடைப்பிடித்தார்களே !    [கம்பன் ' என்றுமுள தென்றமிழ் ' என்றானே ! ] அவர்கள் மொழி மாற்றங்களை அறியாத மூடர்களா என்ன ?


    

                                                               ***


மொழி மாறவில்லை என்று யாரும் சொல்ல முடியாது . மாற்றம் வெளிப்படை . வட்டார வழக்குகளுக்குத் தமிழ் மரபிலேயே இடமிருக்கிறது. அவற்றின் உயிரோட்டத்திலும் எனக்குக் கருத்துவேறுபாடில்லை. வட்டார வழக்கை எழுத்தில் ஆள்வதையும் நான் மறுக்கவில்லை; ஏற்கிறேன். மொழியியல் அடிப்படையில் விளக்கமுறை இலக்கணம் வரைந்து அவற்றைக் காலந்தோறும்ஆவணப் படுத்தவேண்டும். ஆனால், இக்கால வழக்குத் தமிழ் மட்டுமே தமிழ் என்று சொல்ல முடியாது.


வரலாறும் மரபு வழி இலக்கிய இலக்கணமும் உடைய மொழிகளின் இக்கால வழக்கில்

மரபுக்கும்  கணிசமான இடம் உண்டு. மரபும் சேர்ந்ததுதான் தற்காலத் தமிழ் ; எழுத்துத் தமிழ். மரபே ஒருங்கிணைக்கும் ஆற்றலாக இயங்குகிறது; இதில் வரி வடிவ மரபுக்கும் கணிசமான பங்குண்டு . இந்த  ஒருங்கிணைப்பாற்றலைச் சீர் திருத்த, சேர்திருத்தங்களால் சிதைப்பது மொழி என்னும் பண்பாட்டுத் தொடர்ச்சியைத் துண்டித்து அடையாளமழித்துவிடும் .


தமிழின் தகுமொழி நிலை பற்றி எழுதப்போவதாக எனது வேறோர் இடுகையில் எழுதியிருந்தேன்.தொடர்பு கருதி அதனையும்  இங்குப் பார்த்துவிடலாம்.  எனது பாமர மொழியியல் அறிவிலிருந்து ஓர் ஊகத்தை முன்வைக்கிறேன். மொழியியல் வல்லுநர்களின் தெளிவுறுத்தலைக் கோருகிறேன் .


Standard dialect: That dialect of a language which has gained literary cultural supremacy over other dialects and is accepted by the speakers of other dialects as the most proper form of that language[ Dictionary of Linguistics, M.A. Pei & B. Gaynor (Ed.) ] 


என்பதைக் காட்டி, அறிஞர்  செ.வை. சண்முகம் அவர்கள் ,


" தகுமொழி என்பது ஒரு மொழியில் வழங்கும் பல கிளை மொழிகளில் அரசியல் முக்கியத்துவம், வணிகச்சிறப்பு, கலாச்சார நடவடிக்கைகளின் மையம் போன்ற காரணங்களினால் சிறப்பு வாய்ந்த ஒரு கிளைமொழியே. அந்தக் கிளைமொழி பிற கிளை மொழி மக்களாலும் அறிந்து பயன்படுத்தப்படும் என்று மொழியியலார் தகுமொழிக்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள் " என உடன்பட்டுத் தமிழாக்கித் தந்துள்ளார்.(சொல்லிலக்கணக் கோட்பாடு - தொல்காப்பியம் - முதல் பகுதி , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை , 2008, பக். 60 - 61)


ஆனால் இக்காலத் தமிழின்  எந்தக் கிளைமொழியும் பொது எழுத்துமொழியாகவில்லை; அதாவது, தகுமொழியாகவில்லை. மரபு வழித் தமிழ்   இக்காலத்தில் எய்திய ஒரு கட்டமைப்பே தமிழின் தகுமொழி. 


எந்தக் கிளை மொழியிலிருந்தும்  உருவாகாததால் தமிழ் இரு நிலை வழக்கு மொழியாக - பேச்சுத் தமிழிலிருந்து எழுத்துத் தமிழ் வேறுபட்டு - காணப்படுகிறது.


ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரையில் செல்லும் நிலைதான் .  சமநிலை தடுமாறும்தான் . தடுமாறினாலும்  இரண்டையும் பேணியாக வேண்டும் . இது தமிழின் இயல்பு.ஒன்றைக் கொன்று மற்றொன்றைக் கொள்வது வசதியானதென்று  தமிழை ஊனப்படுத்தக்கூடாது.


மொழி பண்பாட்டுப் பொறுப்போடு கையாளவேண்டிய கருவி.

- முகநூல் இடுகை, 22 டிசம்பர் 2013

____ ____ ____ ____ ____ ____ ____ ____ 

* மொழியியலறிஞர் தெய்வ சுந்தரம் நயினார்   அவர்களின் ' கிரந்த எழுத்துக்களும் மொழியியலும்' என்னும் இடுகை பற்றிய என் கருத்தாக இதனை எழுதினேன். ஆனால் எழுத்தெண்ணிக்கை வரம்பு காரணமாக முகநூல் ஏற்க மறுத்துவிட்டது. தனி இடுகையாகத் தந்துள்ளேன்.

வேரில் வெந்நீர் விடவேண்டாம்!*

  எனது மொழியியல் அறிவு பாமர அளவினது . நான் அறிந்தவரை விளக்க மொழியியல் என்பது சமகால/ஒருகால மொழியமைப்பை விளக்குவது. எழுத்து வழக்கற்ற மொழிகளுக்...