பாடம் 1 : மனப்பாடம்
📚📚📚📚📚📚📚📚📚
மனப்பாடம் என்பது ஒரு சொல் நீர்மைத்தாக -ஒற்றைச் சொல் போல - வழங்குகிறது.
ஆனால் அது மனம், பாடம் என்னும் இருசொற்களால் அமைந்த தொடர் என்பது வெளிப்படை.
தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா) பாடம் என்பதற்குத் தரும் பொருள் :
பாடம்1 பெ. 1: (மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்) குறிப்பிட்ட ஒரு துறையின் அறிவைத் தருவதாக அமையும் பிரிவு/மேற்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த நூலின் பகுதி; subject/lesson (in a subject).
2: (காவியம், நாடகம், செய்யுள் போன்றவற்றின்) மூலத்தின் தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம்; (written) text (of a literary composition).
3: குறிப்பிட்ட ஒன்றை உணர்த்துவதாக அமையும் அனுபவம் அல்லது உண்மை; படிப்பினை; lesson (that one learns by experience or by observation).
4: மனப்பாடம்; text committed to memory.
பாடம்2 பெ. 1: (மனித உடல், விலங்கின் தோல், புகையிலை முதலியவை) கெட்டுப் போகாமல் நீண்ட நாள் நிலைக்கும்படி மேற்கொள்ளப்படும் முறை; (of body) embalming; (of leather, tobacco, etc.) tanning, curing, etc.
கற்பிக்கப்படும்/ நடத்தப்படும் பாடம் (1.1) என்பதே பரவலான வழக்கு.
தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் (1.2) என்பது நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிற - புலமையுலகம் சார்ந்த வழக்கு .
ஒன்றை உணர்த்தும் அனுபவம் (1.3) என்னும் பொருள் நடத்தப்படும் பாடத்தோடு (1.1) தொடர்புடையது.மனப்பாடம் என்பதன் சுருக்க வடிவமாகவும் (1.4) பாடம் என்னும் சொல் வழங்கிவருகிறது.
ஒன்றை நிலைத்திருக்குமாறு பொதிந்துவைத்தலாகிய பாடம் செய்தல் (2)என்பது சற்று வேறுபட்டது ; எனினும் ஏட்டிலோ மனத்திலோ ஒன்றைப் பதிந்துவைப்பதோடு தொடர்புடையது.
புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்தல் என்பதும் கல்வியோடு தொடர்புடையதுதான். சொல் வரலாற்று நோக்கில் அது
" தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் (1.2)" என்பதோடு தொடர்புடையது.
காகிதமும் அச்சும் பரவுவதற்கு முந்தைய காலத் தமிழகத்தில் நூல்களும் ஆவணங்களும் கடிதங்களும் மிகப்பெரும்பாலும் பனையோலைச் சுவடிகளில்தான் எழுதிப் பேணப்பட்டன. அவற்றைப் படியெடுத்துப் பரவலாக்குவது எளிதன்று.
திண்ணைப் பள்ளிகளில் தொடக்க நிலையில் மணற்பரப்பில் விரலால் எழுதச் செய்து எழுத்தறிவித்தார்கள். காகிதக் காலத்தில் கூட, சடங்காக மணலில் எழுதச் செய்வது தொடர்ந்தது. தொடக்க நிலையில் மாணவர்கள் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் முதலிய எளிய அறநூல்களை மனப்பாடமாக்கிக்கொள்வார்கள் ; உடன் பொருளையும் பயில்வார்கள்.
அடுத்த கட்டத்தில் நிகண்டுகள் நன்னூல் முதலியவற்றை மனப்பாடமாக்கிக்கொள்வார்கள்.
அதாவது அந்நூற் பாடங்களை (1.2) மனத்தில் ஏற்றிக்கொள்வார்கள். மனம் இங்கு சுவடி போல் இயங்கும்.
சுவடியில் எழுதப்படும் பாடம் சுவடிப்பாடமெனில், மனத்தில் 'எழுத'ப்படும் பாடம் மனப்பாடம்.
கட்புலன் குன்றி மனப்பாடத்தாலேயே புலமை பெற்ற வீரராகவ முதலியார் தம்மை
'ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத் தெழுதிப்படித்த விரகன்' என்று குறிப்பிட்டுக்கொண்டார்.
மனப்பாடமாக்கிக் கொண்ட பின்னர் அவ்வந் நூல் வல்ல ஆசிரியர்களிடம் பொருளறிந்து நூலை உள்வாங்குவார்கள். நிகண்டுகளை மனப்பாடம் செய்வது அகராதிகளை மனப்பாடம் செய்வதுபோல்தான்.
பொருளுணராமல் சொல்வதை நாப்பாடம் என்கிறது நாலடியார்.
நாப்பாடம் சொல்லி நயமுணர்வார் போல்செறிக்கும்
தீப்புலவர் சேரார் செறிவுடையார் தீப்புலவன்
கோட்டியுள் குன்றக் குடிபழிக்கும் அல்லாக்கால்
தோள்புடைக் கொள்ளா எழும்(நாலடியார் 32, அவையறிதல்: 2)
பாடம், உரை, நூல் தொகுத்தல் ஆகிய பலவற்றையும் பற்றித் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் விரிவாகக் கூறும் நூல் நாலடியார்தான். பாடம் பற்றியவற்றை மட்டும் இங்குத் தருகிறேன். இவற்றின் பொருளையும் உரை முதலியன பற்றியும் படித்துணர்ந்துகொள்க.
கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதைஓர் சூத்திரம் மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்(நாலடியார் 32, அவையறிதல்: 4)
பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால் கேடரும்சீர்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து(நாலடியார் 32, அவையறிதல்: 6)
தொடர்பு கருதி நன்னூல் பொதுப் பாயிரம் கூறும் செய்திகளையும் பார்த்துவிடுவோம். இப்பொதுப்பாயிரம் ஒரு கல்வி மரபின் பதிவு ; முற்றும் பவணந்தியார் இயற்றியதல்ல. இம்மரபின் காலத்தால் முந்தைய பதிவை இறையனார் களவியலுரை தொட்டுக் காண்பது வழக்கம்; ஆராய வேண்டும்.
பாடம் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவதிகாரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனமென்(று) ஈரேழ் உரையே (நன்னூல், பொதுப் பாயிரம், 21)
நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்(து)அவை அமைவரக் கேட்டல்
அம்மாண் (பு) உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்(நன்னூல், பொதுப் பாயிரம், 41)
பழந்தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் தோன்றியதற்கு இம்மனப்பாடக் கல்வியும் காரணம். நூலைப் பயிற்றும் ஆசிரியர் தக்க பாடத்தைத் தேர்ந்து உரைக்க வேண்டும்.
எனவே பாடம் என்பது உரையின் இலக்கணத்தில் முதலிடம் பிடித்துக்கொண்டது.
தொல்காப்பியம் உரையிலக்கணத்தில் பாடம் பற்றிக் கூறாமை அதன் காலப்பழமை காட்டும். விரிப்பிற் பெருகும்.மற்றொன்று விரித்தலை நிறுத்திக்கொள்கிறேன்.
பண்டைக் கல்விசார்ந்த மனப்பாடம் இன்று தேவையில்லை . ஆனால் வலிந்து முயலாமல் பொருளுணர்ந்து இயல்பாக அமையும் மனப்பாடம் நல்லது ; மேன்மேலும் ஆராயவும் நயங்காணவும் துணை செய்வது.
பாடம் 2 : மூலபாடத் திறனாய்வு திறனாய்வாகுமா ?
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
நான் மூலபாடத் திறனாய்வியல் பயின்றவனல்லன்.
எஸ்.எம்.கத்ரே என்னும் பெயர் தெரியும். பாடவேறுபாடுகளுடன் கூடிய தமிழ்ப் பதிப்புகளின் அறிமுகமுண்டு. தமிழறிஞர் சிலரின் மூலபாடத் திறனாய்வியல் நூல்களைப் படித்திருக்கிறேன். பாடவேறுபாடுகள் பற்றி எழுதியுமிருக்கிறேன் (தமிழ்கூறு நல்லுலகம் எதையும் தாங்கும்😃).அவ்வளவுதான்.
கண்ணுறும் அன்பர்கள் கருத்துக்கூறும் பொருட்டு இதனை எழுதுகிறேன்.
திறனாய்வு பற்றிய ஒரு நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தேன். அதில் மூல பாடத்திறனாய்வும் திறனாய்வு வகைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அது Textual Criticism என்பதன் தமிழாக்கப் புழக்கம். இதில் குற்றமில்லை ; இயல்புதான்.
மூலபாடத் திறனாய்வைத் திறனாய்வு வகையில் சேர்க்கலாமா? (ஆங்கிலம் பற்றி அம்மொழி வல்லார்வாய்க் கேட்டுணர்க).
சொற்றொடரின் மூலத்தைப் பிடித்துத் தொங்கவேண்டியதில்லை. தமிழில் புழக்கம் குறிக்கும் பொருளே பொருள். தமிழுக்கு இயையுமா என்பதுதான் வினா.
" Textual Criticismஐ பாடவிமர்சனம் / பாடத் திறனாய்வு/பாட ஆய்வியல் எனக் கொள்ளலாம்"¹ என்கிறார் சிவத்தம்பி.கலைச் சொற்களில் மிக (மிகை?)த் துல்லியும் நாடும் அவர் சாய்கோடுகளிட்டு மூன்று வாய்ப்புகளைத் தருகிறார்.
சரி!
தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா, 2020) திறனாய்வு , திறனாய்வாளர் ஆகியவற்றுக்குத் தரும் பொருள்களைப் பார்ப்போம் :
திறனாய்வு பெ.(புத்தகங்கள், கட்டுரை போன்றவற்றின்)
குறைநிறைகளை
ஆராய்ந்து செய்யும் மதிப்பீடு; evaluation.
திறனாய்வாளர் பெ. திறனாய்வு செய்பவர்; (literary) critic.
'குணம் குற்றம் நாடி மிக்கது கொண்டு' மதிப்பிடுதல் என்று (வள்ளுவர் துணை! ) செறிவாகச் சொல்லலாம்.
இன்னும் செறிவாகச் சொல்வதானால் , மதிப்பீடு!
மூலபாடத் திறனாய்வில் மதிப்பீடு இல்லை என்றே சொல்லிவிடலாம் ; தேர்ந்தெடுப்பு உண்டு.
உயர்வு /இனிது - அழகியல் அலசல்
பாரதி பாடல்களின் பாடவேறுபாடுகள் சிலவற்றை எடுத்துக்காட்டி ,அச்சில் வந்த ,அண்மைக்கால இலக்கியங்களும் மூலபாடத் திறனாய்வுக்குரியவை என்பதைச் சற்று விளக்கி முதன்முதலில் விவாதித்தவர் புதுமைப்பித்தன். அவற்றுள் ஒன்று :
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா (பரலி சு.நெல்லையப்பர் , 1917)
சொல்லில் இனிது தமிழ்ச்சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் — அதைத்
தெய்வமென்று கொண்டாடு பாப்பா!(ஞானபானு, 1915)
'சொல்லில் இனிது தமிழ்ச் சொல்லே' ... 'உயர்வு' என்று பா. பி. பிரசுரத்தில் காணப்படும் வார்த்தையைவிட நயமானதும் அந்தரங்க பாவமானதுமாகும் இனிது என்ற பதம். என்னதான் விதேசி இலக்கியத்தின் அழகுகள் நம்மைப் பிரமிக்க வைத்தாலும், நம் வீட்டுக் குத்துவிளக்கு, நாம் பேசும் பேச்சு இவற்றின் குழைவை நாம் மறக்க முடியாது. இது ஓர் இயற்கையான மனோபாவம். இதைத்தான் கவி கூற முயலுகிறார்.²
புதுமைப் பித்தன் இதைத்-தான் என்று அழுத்தமாகக் கூறிமுடிக்கிறார்.
இரண்டு பாடங்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க ஓர் அழகியல் அலசலை -திறனாய்வு அமிசத்தை - மேற்கொள்கிறார் புதுமைப்பித்தன்.
ஆராய்ச்சி
1.'இனிது ' எனில் உணர்ந்து / விழைந்து ... படிக்கலாம் ; தொழுது படிக்க
வேண்டியதில்லை . பு.பி.யின் தருக்கம் இடிக்கிறது. உயர்வு எனில் தொழுது
படிக்கலாம் .
2. இனிது என்பது காலத்தால் முந்தைய பாடம். உயர்வு என்பது பிந்தைய பாடம். இது
பாரதி வாழ்ந்த காலத்திலேயே நேர்ந்திருக்கிறது.
3. பாரதி நோக்கில் தமிழ்ச் சொல் உயர்வு என்தற்கு அகச்சான்றும் காட்டலாம்.
The Occult Element in Tamil Speech³ என்னும் கட்டுரையொன்றை எழுதியுள்ளார் பாரதியார். அதனை,
Among few typical languages with which I am acquainted, the Tamil language seems to to be unique in possessing an extraordinary number of words that have more occult suggestion in them than secular significance
என்று தொடங்குகிறார். தொடர்ந்து,
உட்கார்- உட்கு+ஆர்' within thyself rest'/' be self composed ஒக்கார் (in.common speech) ஒக்க + ஆர் " Get into harmony, Set thy spirit in unison with mine " , அகம் இல்லம் / உள்ளம் ; துணி - " cloth ", " courage " என்றெல்லாம் உள்ளுறை பொருள்கள் பற்றி விவரிக்கிறார்; Symbolic speech, psychological and metaphysical expression பற்றியெல்லாம் பேசுகிறார்; தம் குருவிடம் விவாதித்ததாக விளக்குகிறார்.
இவற்றின் வன்மை மென்மைகள் ஒருபுறமிருக்க , பாரதி தமிழ்ச் சொற்கள் குறித்துக் கொண்டிருந்த உயர்மதிப்பே இங்குக் கருதத்தக்கது. எனவே,
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
என்னும் ' நிறைவேறியபாடமே '⁴பொருந்தும்.
ஆக, பாடத்திறனாய்வு ( மூலபாடத் திறனாய்வன்று) என்பது திறனாய்வு ஆய்வு இரண்டாலும் இயல்வது என்ற முடிவுக்கு வரலாம்; ஆனாலும் மற்ற திறனாய்வு வகைகளில் சேர்க்க இயலாது.
___________________________________
1. கார்த்திகேசு சிவத்தம்பி, ' தமிழில் இலக்கியப் பாட மீட்பு ' , உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம் ( தொகுப்பு : பெருமாள் முருகன்), காலச்சுவடு, நாகர்கோவில் ,2007 , ப.138.
2. மணிக்கொடி,15.11.1937 &01.12.1937(ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பு, புதுமைப்பித்தன் கட்டுரைகள், காலச்சுவடு, நாகர்கோவில் ,2007 , ப.153)
3. 'The Occult Element in Tamil Speech ' , The Commonweal, 27-02-1920, pp. 121-122
- சீனி.விசுவதாதன் (பதி.), கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், பதினொன்றாந் தொகுதி, சீனி.விசுவநாதன் (வெளியீடு), சென்னை 2010, பக்.30-34.
4. மூலபாடமென்பது original textஐயே கருதும். அதனால் ஒரு பாடம் பற்றிய முதல் வடிவமே மூலபாடம் எனும் நிலையைப் பெறலாம். ஆனால் ஒரு textஇல் வழங்கும் நிலையில் சாதார ணமான அதன் பாடமாகக் கொள்ளப்படுவது எல்லா வேளைகளிலும் முதலில் அல்லது முதற்தடவையில் எழுதப்பட்டவையல்ல. ஆசிரியரே தான் கொண்ட 'நிறைவேறிய பாட'த்தில் தனது முதற்பாடத்தைக் கைவிடலாம் ...
இக்கட்டுரைக்கான சிற்றாய்வினை மேற்கொண்டபொழுது பாடமூலம் எனும் தொடர் பற்றியும் சிந்திக்க வேண்டியதாயிற்று 'பாடமூலம்' என்பது பாடத்தின் மூலமாகும். மூல பாடமென்பதும் பாடமூலமென்பதும் ஒரே பொருள்தரா- கார்த்திகேசு சிவத்தம்பி, ௸, பக். 137 - 38.